Monday, July 21, 2014

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் தரத் தயாரகிக்கொண்டிருந்தது. அத்தருணம் மரபு அரியணையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த புலவர்கள் தன் கால்களை மெல்லத் தளர்த்திக்கொள்ள வைத்தது இந்தப் புது சட்டாம்பிள்ளை. ஆங்கிலத்தில் பிரீ வெர்ஸ் என்றும், லிப்ரே என்றும் இயங்கிய கவிதை இலக்கியத்தையே தமிழ் தத்தெடுத்துக்கொண்டது. நாவல் சிறுகதை வடிவங்கள் கூட ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குத் தாவிவந்து அமர்ந்தவை.

தொடக்ககால வராலாறு பதித்த கவிஞர்களில் வைரமுத்து சற்று பின்னர் வந்தாலும் தன் கவிதைகளால் தன்னை முன்னுக்கு நகர்த்தி முன்வரிசையில் வந்து நின்றார். அவரின் எளிமையான சொற்பிரயோகம், வார்த்தை அலங்காரம், தன் கவிதைகளில் ஊடுபாவாக அவர் நுழைத்திருந்த இசைத்தன்மை அவரைத் தனித்து அடையாளம் காட்ட ஆரம்பித்தது. பின்னர் தனக்கென தனி சாம்ராஜ்யத்தை நிறுவிக்கொண்டார். என்னதான் சினிமா அவரை அரவணைத்துக்கொண்டாலும், பாடல்களிலும் கவித்துவத்தை மிளரச்செய்தார். சினிமா என்ற மிகச் சக்திவாய்ந்த ஊடகத்தைப் பயன்படுத்தி கவிதையை சிம்மாசனத்தில் அமர வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் வைரமுத்து. அதற்காக அவரை வியந்தோதப் படுவதை நாம் பார்க்கிறோம்.
அவருக்குக் கிடைத்த  பெரும்  வெற்றி  கவிதைகளால் அவர்பால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான  கவிதா  ரசிகர்கள். இப்படிப்பட்ட  எண்ணிக்கையை எந்த தமிழ்க்கவிஞனும் தொடமுடியவில்லை. அவரைக் கடந்து வராத புதுக்கவிஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். இன்றைக்கும் அவர் எழுதும் கவிதையைப்போலவே  எழுதக்கூடிய  கவிஞர்கள்  இருக்கிறார்கள் என்பது பெருவியப்பாக  இருக்கிறது. தங்களுடைய  சுய பாணியினாலான  கவிதைக்கு வரமுடியாதவர்களைக்   கட்டிப்போடும்  நடை அவருடையது என்பதை இவர்கள்  நிரூபித்த  வண்ணம்  இருக்கிறார்கள்.

பூவுக்குள் மறைந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப்பூச்சி  உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளை செல்லும் காற்றே மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
என்று  அதிசயங்களை அடுக்கிக்கொண்டேபோய்   அழகியலைக் காட்டிச் சிலகணம் மெய்மறக்கச் செய்கிறார் இசைவிரும்பிகளை. இப்படி எழுதும் அவரே ஒரு அதிசயம் தோன்றினார் .

சினிமாவுக்கு அவர் எழுதிய முதல் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. விதை மண்ணிலிருந்து வெடித்துக் கிளம்புவதுபோல எடுத்த எடுப்பிலேயே அவர் எழுதிய பாடல் தமிழ்த்தெருவெங்கும் ஒலித்தபோது அவரின் ஆற்றலின் அடிமுதலைக் அடையாளம் காட்டியது. அந்தப்பாடல் உள்வாங்கிய் மனங்கள் பாடலின் இசைத் துள்ளலைப் போலவே களிகொண்டு குதித்தனர். இசையை வென்று நிற்கும் அந்தப்பாடல் வரிகள் ஆடும் சந்தம் இன்றும் ஈர்க்கும் காந்தம்.

இது ஒரு பொன்மாலைப்பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

இரண்டு தொடக்க வரிகளின் வார்த்தைகளின் சந்தமும் நெடுக்க ஒலிக்கும் பாடலின் அழகியலில் நம்மை இழுத்து லயிக்கச் செய்து விடுகிறது.

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
வாழும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ

இப்பாடல் வரிகளை பார்த்தவுடன் இளயராஜாவின் இசைமனம் துள்ளத் துவங்கியிருக்கும். இசை ஓடிவந்து வரிகளோடு கைகோர்த்திருக்கும். அப்படியான சந்தச் சதிராடும் சொற்பிரயோகம் . இரவின் அழகை அள்ளித்தெளிக்கும் அற்புதம். நம் நனவுலகுக்குள் ரம்மிய இரவைக் கொண்டு வந்து காட்டும்  வார்த்தை ஜாலம். இப்பாடல் ஒவ்வொரு முறையும் வானொலியில் கேட்கும்போது காரை நிறுத்திவிட்டு பாடலோடு இரண்டறக் கலந்துவிடுவது என் வழக்கமாகிவிட்டது. எத்தனை முறை என்று எண்ணிவைக்கவில்லை. இனியும் எண்ணப்போவதில்லை. ஏனெனில் அது எண்ணத்திலிருந்து எளிதில் விலகிவிடாத மாயஜாலத்தை தன்னுள்ளே பதுக்கிவைத்துள்ளது.

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதிபெறும்
திருநாள் நிகழும் சேதி வரும்

இதில் எதுகையும் மோனையும் கடைசி  சந்தமும் பாடலை வேறு ஒரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. சுவைஞன் பாடலைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் தன்னை மோன நிலைக்கு கொண்டு சென்றுவிடுகிறான். அவரின் இசைப்பாடல்களில் தொனிக்கும் கவித்துவச் செறிவு பிரம்மிக்கத் தக்கது. அவரின் வரிகளில் சந்தம் பட்டுக்கோட்டையை நினைவுறுத்திகிறது என்றால் கவித்துவ, தத்துவ மரபுக்கு கண்ணதாசனை மீட்டுத் தருகிறது.  கண்ணதாசன் பாடல்கள்தான் தனக்குப் பாதையைக் காட்டின என்று அவரே ஒத்துக்கொள்கிறார்.

கவிஞர் மேடையில் பேசும்போது தன்னை மறந்து உணர்ச்சிக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவராகவே இருப்பார். பாடல் வரிகள் புனையும்போது தன்னை மறந்த முழு புனையாளாரகவே அவதாரம் கண்டிருப்பார் போலும். தன் உடல் இருப்பை முற்றிலும் மறந்து வார்த்தைச் சந்நதமாடும் மந்திரவாதியாகி இருப்பார். அதனாதான் அவரின் பாடல் வரிகள உயிர்ப்போடு இயங்குகின்றன. சுவைஞனின் முழு கவனத்தையும் களவாடிவிட்டவையாக ஆகியிருக்கும் பாடல்கள் அவை.

அதிகாரத்துக்குக் குனிந்து  பணிந்து நயந்து நடந்த புலவர் மரபை அவர் உடைத்தெறிவதை நேரில் பார்த்தவன் நான். அவரின் வளர்ச்சியை முகாந்திரமாகக்கொண்டு அவர் தன் கம்பீரத்தை வளர்த்தார்.கவிஞனை அதிகாரத்துக்குப் பணிய வைத்த நிலையை தலைகீழாகப் புரட்டி,  தனக்கு முன்னால்  அதிகாரத்தைப் பணியவைத்த வைரமுத்துவின் ஆளுமையை நான் பல நிகழ்வுகளில் நேரில் பார்த்தேன். அவரின்  தமிழ் அவருக்கு அந்த அதிகார பீடத்தைத் தாரை வார்த்திருந்தது.
 ……………………………………… ………………………………………………………………………………