Wednesday, March 23, 2016

அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம் ரெ.காவின் கதைகள்

       அரை நூற்றாண்டு கால வாழ்வனுபவச் சித்திரம்                                                    ரெ.காவின் கதைகள்.

                   
     
            அரை நூற்றாண்டு காலமாக வாசித்துக்கொண்டிருந்த ஒரு குறிப்பிட்ட படைப்பாளியின் புனைவிலக்கியம் தொடர்த்து படைக்கப்படாத  போதுதான் அது எவ்வளவு பெரிய வெற்றிடத்தை விட்டுச் சென்ற ஏக்கத்தை உண்டுபண்ணுகிறது என்று உணரமுடிகிறது. ரெ.கா சிறுகதைகள் சற்றே தனித்துவம் வாய்ந்ததவை.அவற்றை வாசிப்பது தனி சுகம். சற்று முன்னர் துளிர்விட்ட இலைபோல வெளிர் மஞ்சலிலும் மென்மையிலும் ஈர்க்கும் மொழி. அவரின் சிறுகதை நடை சட்டென அடையாளம் காணக்கூடியது. குறிப்பாக வாக்கியங்கள் எளிமையான சொற்களாலானதாக இருக்கும். அவரின் சொற்களின் தேர்வு வசீகரமானது. கடினமானவற்றையும் எளிமையாக்கும் ரசவாதம் நிகழ்த்திக் காட்டியிருப்பார்.  கடையக் கடைய வெண்ணெய் திரண்டு வருவதுபோன்ற கதை மெல்ல மெல்ல வளரும்..  பின்னர் சாட்டையைச் சொடுக்கியதும் அசுரமாய்ப் பாய்ந்து ஓடும் குதிரையைப் போல முடிவை நோக்கி இழுத்துச் செல்வார். புரிதல் சிக்கலற்ற சின்னச் சின்ன வாக்கியங்கள். வாசகனை தன்வயப்படுத்தும் மந்திரங்களால் நிறைந்தவை. ரெ.காவின் சிறுகதைகளில் அதன் மொழிநடை காற்று போல மென்மையாக இருக்கும். முதல் வரி உள்ளிழுக்கத் தொடங்கி கடைசி வரி வரை அதன் காந்த ஈர்ப்பு குறையாது. சிறுகதையின் எல்லா அம்சங்களும் கச்சிதமாக வடிவம் கொண்டிருக்கும். இவற்றில் அவரின் கதைக் களத்துக்கு முதலிடம் தருவேன். கதைகளின் முடிவும் வாசக பங்களிப்பைக் கோருபவை. நல்ல கதைகள் முடிந்தவுடன் தொடங்க வேண்டும் என்பார்கள். பிற அம்சங்களும் நிறைவாய் இருக்கும். அவற்றைத் தனிதனியே கவனப்படுத்துவதே என் கட்டுரையின் சாரம்.
ரெ. கா கதைகளில் பிற அம்சங்களைவிட காட்சிப் படுத்துதல் தூக்கலாக இருக்கும்.. மையக் கதை தனியாகவும் காட்சிகள் வலிந்த செருகலாகவும் பார்க்க முடியவில்லை. மையக் கதைக்கு வலிமை சேர்க்கும் மிகப் பொருத்தமான காட்சிகள் அவை. குறிப்பாக ஊசி இலை மரம் தொகுதியில் ஒரு கதையைச் சொல்லலாம். எல்லாப் பிறப்பும், சிவபுராணப் பாடலின் ஒரு சொற்றொடரை தலைப்பாக வைக்கிறார். அதற்குப் பொருத்தமாகக் கதைக் களத்தை நகர்த்துகிறார். ஹசிம் ஒரு வார காலமே அறிமுகமான நடைப் பயிற்சி நண்பர். எதேச்சையாக அறிமுகமாகிப் பழகுகிறார். அந்தப் பழக்கத்தில் அந்நியோன்யம் இல்லைதான். நடையின் போது மட்டும் நடக்கும் உரையாடலுக்குப் பின்னர் நட்பு தொடர்வதில்லை. நடைப்பயிற்சி முடிந்ததும் ஆளாளுக்கு வெவ்வேறு உலகம் இருக்கிறது. வெவ்வேறு இனம், பண்பாடு அவர்களின் அந்நியோன்யத்துக்குத் தடையாக இருக்கிறது. ஒருநாள் நடையின் போது ஹசிமின் நண்பர் டாவுட் கதை சொல்லிக்காகக் காத்திருந்து ஹசிமின் மரணசெய்தியைச் சொல்கிறார். ஒரு வார கால நட்புதான். அதற்கு ஏன் டாவுட் அக்கறையோடு காத்திருந்து சொல்கிறார். காலையிலேயே மரணவீட்டுக்குப் போய் வருகிறார் கதை சொல்லி.
கதையின் இறுதி வாக்கியமாக வருவதுதான் கதை சொல்ல வந்த செய்தியைப் பதிவுசெய்து விடுகிறது. ஹஷிம் சும்மா தெரிந்தவரா உறவா? இங்கே ஏன் காட்சிப் படுத்தலும் கதைக்கு கனம் சேர்க்கிறது என்று சொல்கிறேன். பினாங்கு கடற்கரைக் காட்சி வனப்பு மிகுந்ததாக இருக்கிறது என்று கதையை நிரப்பிச் செல்வதானது வாழ்க்கையும் அது போல அழகானதுதான் என்று வலியுறுத்தவே!
ஊ.இ.ம நூலில் இன்னொரு கதையை மேற்சொன்ன காட்சி அழகியலை கதையாடலுக்குள் இயல்பாக நுழைவதை எடுத்துக் காட்ட முடியும் ‘உனக்குக் கிடைத்தது’ கதையில்.
கேசவன் மனைவியின் பிடுங்கல் தாள முடியாமல் பினாங்கில் இருக்கும் மாமாவிடம் வருகிறான். புகார் சொல்கிறான். மாமா மறுநாள் காலையிலேயே கேசவனை நடைப்பயிற்சிக்கு வலிந்து இழுத்துச் செல்கிறார். அத்தருணம் கடற்கரை காட்சியை வர்ணித்துச் செல்கிறார் கதாசிரியர்.
“பூமியைப் பாரேன் சுத்துற கதியிலிருந்து மாறக் கூடாது. சுத்துற வேகத்திலிருந்து மாறக்கூடாது. சுத்துற திசையையும் மாத்திக்கக் கூடாது. அப்பத்தான் உயிர் அதனதன் போக்கில் நடக்கும்.எல்லாத்துக்கும் ஒரு கடமை இருக்கு. எல்லாம் முன்னோக்கிப் போகணும். தயக்கம், மயக்கம் எல்லாம் இருந்தா இயற்கை நாசமாப் போகும். உயிர்கள் நாசமாப் போகும், மாறக் கூடாது”.
கேசவன், சுதாரித்துக் கொண்டவனாய், “என்ன மாமா சொல்றீங்க?” என்கிறான். அவனுக்குப் புரிந்து விடுகிறது. தன் கடமையை நிறைவாகச் செய்தல். புரிந்துணர்வோடு செய்தல்தான் வாழ்க்கை நலம் என்று இயற்கையின் ஒழுங்கான ஏற்பாட்டின் அழகியலைக் கதைக்குப் பொருத்தமாகச் சேர்வதை இங்கே நாம் கவனிக்கவேண்டும்.

உவமைகள்

கதைக்கான அடர்த்தியைக் கொடுப்பது கதாசிரியரின் தத்துவ தரிசனமும், உவமைகளும்தான். கதாசிரியரின் ஆளுமை முழுமையாக வெளிப்படும் அம்சங்கள் இவை. ஒரு சூழலை அல்லது பொருளை அல்லது உணர்வை கோடிட்டுக் காட்டுவது உவமை. அவை மரத்தை சுற்றி வளர்ந்து வேரின் தடயங்கள் போல கதையோடு இயைந்திருக்க வேண்டும். தடயங்கள் மரத்தின் இன்னொரு பாகம் போல மிகப் பொருத்தமாக அமைந்து சொல்லவரும் செய்திக்கு வலிமை சேர்க்கவேண்டும். அப்போதுதான் கதை வாசகனைச் சென்றடையும்.
‘எல்லாப் பிறப்பும்’ (ஊ.இ.ம) சிறுகதையில் பினாங்கு கடற்கறையிலிருந்து கிட்டும் ஒரு காட்சி. பட்டர்வர்த்த் துறைமுகத்தில் இருக்கும் பாரம் தூக்கிகளை ராட்சக் கொக்குகள் என்பார். கொம்தார் உயரமான கட்டடத்தை நீட்டிய வீங்கிய விரல் என்பார்.
‘இன்னொரு தடவை’ தொகுப்பில் அதே தலைப்பு கொண்ட கதையில் ’பிளந்த தேங்காய் மட்டைபோல மேகங்களுக்கிடையில் ஓரம் பிரிந்த நிலாக் கீற்று’ என்று நிலா தோன்றிய இரவைச் சொல்லியிருப்பார். அப்போது நிஜமாகவே அக்காட்சி கண்முன் விரிவதை உணரமுடிகிறது.
தத்துவ வெளிப்பாடு
இக்கிய படைப்புகளில் நாவல்களிலும், சிறுகதைகளிலும், கட்டுரைகளிலும் மெய்யியல் வெளிப்பாடு படைபாளனின் ஆளுமையை நிரூபிக்கும் தருணங்களாகும். படைப்பாளன் தன் வாசகனைத் தெளிவான சிந்தனைப் போக்குக்கு வழி சொல்பவன். நவீன இலக்கியம் என்பதே மெய்யியலைத்தான் ஆதாரமாகக் கொண்டது. தகர்க்க முடியாது கெட்டிதட்டிப் போன, கடவுள் நம்பிக்கைகளை மத விழுமியங்களின் எதிர் அரசியல் மூலம் மக்களை விடுவித்தவை. நவீன இலக்கிய தோன்றிய பதினெட்டாம் பத்தொன்பாதாம் நூற்றாண்டுகள் தொட்டு இன்றைய தேதிவரை படைபாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் தாங்கள் கண்டடைந்த தத்துவங்களை மக்கள் மனங்களில் ஆழ வேர்பிடித்தக் கசடுகளைக் களையெடுக்க பயன்படுத்தி வருகிறார்கள்.
ரெ.கா வும் சிறுகதைகளில் இதன் தெறிப்புகள் கதையின் ஊடாக வெளிப்படுத்துகிறது. அவை வலிந்து நுழைத்தவை அல்ல. கதை புனைதல் தருணத்தில் தன்னிச்சையாக விழுந்தவை.
ஊ.இ.ம ‘எனக்கும் அப்படித்தான்’ கதையில் பினாங்கின் ஒரு நடைப் பயிற்சியின் போது மலை உச்சியில் சிரித்தவண்ணம் இருக்கும் ஒரு சிரித்த புத்தர் சிலையை நிறுவியிருப்பதை இப்படிச் சொல்லுகிறார்.
கிழக்குப் பார்த்த மண்சிலை அது. அவருக்கு முன்னால்தான் சூரியன் உதிக்கிறது. அவருக்கு முன்னால்தான் கடல் பரந்து கிடக்கிறது. அவருக்கு முன்னால்தான் புதர்கள் பற்றி எரிகின்றன. எல்லாவற்றையும் அவர் பார்த்து அதே மாதிரிதான் சிரிகிறார். அனைத்து அபயஹஸ்தமும் அருளியவாறிருக்கிறது. இவர் இங்கு இருந்தாலும் இல்லையானாலும் இவை அனைத்தும் நடக்கும். இவர் இங்கே இருப்பதால் எல்லாம் நல்லவையாக நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இயற்கையின் இரக்கமற்ற நியதிகளை அவர் மாற்றப் போகிறாரா என்ன? மாற்றுவார் என் நம்பி சிலை வைத்திருப்பவர்களைப் பார்த்துத்தான் இந்தச் சிரிப்பு போலும்’
புத்தருக்குச் சிலை வைப்பது புத்த சமய விழுமியங்களுக்கு எதிரானது. அதனை அடிப்படையாக வைத்து ஒரு தத்துவ தரிசனத்தைக் காண்கிறார். இதனுள் செருகியிருக்கும் அங்கதம் அவருடைய தத்துவ வெளிப்பாட்டின் ஆளுமையை ரசிக்கவைக்கிறது.
‘சூரியனைக் கொன்றுவிட்டார்கள்’ அறிவியல் புனைகதையில்  ஒரு வரி வருகிறது. ‘உண்மைகள் மறைக்கப்படும் போது வதந்திகள்தான் செய்திகளாக வருகின்றன. (ப.110) அமெரிக்க செயற்கை சூரியனைக் கண்டுபிடித்து , செயற்கை சூரிய ஒளியை எல்லா நாடுகளுக்கும் விற்கிறது. எனவே திட்டமிட்டு இயற்கை சூரியனை மறைத்துவிடுகிறது. இயற்கை சூரியனை மறைக்க அது சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாய் இல்லை. ஆகவேதான் மேற்சொன்ன தத்துவம் வெளிப்படுகிறது. இன்றைக்கு நம் நாட்டு அரசியல் சூழலுக்கு  இத்தத்துவம் மெத்தப் பொருந்துவதைப் பார்க்கிறோம்.
‘ஆனால் இந்த உறவை அனுதாபத்தின் அடிப்படையில் அமைக்க முடியாது. காதலின் அடைப்படையிலும் புரிந்துணர்வின் அடிப்படையிலும்தான் அமைக்க வேண்டும்’ (நீ. மே. எ) தொகுப்பில் ‘சேர்ந்து வாழலாம் வா’ என்ற சிறுகதையில் அவர் எழுதும் தத்துவம் இது .உமா ஏற்கனவே கயவர்களால் கற்பழிக்கப்பட்டவள், அதனை உமாவே மறைக்காமல் சொல்லியும், அவளை ஆனந்தன் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறான். ஆனால் திருமண வாழ்க்கை  பின்னாளில் கசந்து போகக்கூடிய பின்புலம் உமாவுடையது. அதனால் உமா ஆனந்தனைக் கணவனாக ஏற்க மறுக்கிறாள். ஆனந்தன் இந்த நிதர்சனமான உமாவின் அபிப்பிராயத்தைத் தகர்க்க முயலும்போதுதான் இந்த மெய்யியல் சிந்தனையைக் கதாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
காலங் காலமாய் நம்மிடையே வேரோடிக்கிடக்கும் மூட நம்பிக்கைகளை அங்கத வார்ப்பு கொண்டு தகர்க்கும் கதைகள் ‘ஐயரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்’ கதையும் ‘எந்தச் சாமி’ கதையும். இவ்விரு கதைகளுமே வாசகனை மெய்யியல் சிந்தனையை நோக்கி நகர்த்தும் எழுத்து வகை.
ரெ.கா.இலக்கியம்  மீதான கருத்தரங்கில்  வெளியிடப்பட்ட சிறப்பு நூல்


முடிவுகள்
ரெ.கா பெரும்பாலும் கதை முடிவுகளைச் சொல்வதில்லை. கதைக்குள் மறைத்து வைத்திருப்பார். வாசகன்தான் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அவனுடைய அனுமான அறிவு முடிவை தேடிக்கொள்ளட்டும் என்று நழுவி விடுகிறார்.  ஒரு புதிரைச் சொல்லிவிட்டு விடைகாணுங்கள் என்பது போல. இங்கேதான் வாசகன் பங்களிப்பு உள்ளது. வாசகனுக்கு இடைவெளி விடாத கதை வாசகனுக்கு விரைவில் அந்நியமாகிவிடும். திருமண விழா முடிந்த வீடுபோல ஓ வென்று வெறிச்சோடி இருக்கக் கூடாது கதை முடிவுகள். திருவிழா கோலம் தொடங்கிய கோயில்போல கதை முடிந்தும் கலகலப்பு கூடவேண்டும் . கதையை வாசித்து முடிந்ததும் அவனுக்கும் கதைக்குமான தொடர்பு அறுந்துவிடக்கூடாது. கதையின் மையத்தையும் அதன் நகர்தலையும் அடிப்படையாக வைத்து முடிவைத் தெரிந்துகொள்வதில் ஒரு பரவசம் உண்டு. அதனை அவன் உய்த்துணரும்போது அக்கலை தந்த ஆனந்தத்தை அடைகிறான். படைப்பாளர் முடிவு சொல்லப்படாத கதையோடு வாசகன் ஊடாடிக்கொண்டிருப்பான். என்ன முடிவு? இதுவா? அதுவா? இல்லை வேறெதுவோவா? என்ற தலை சொரிதல்தான் வாசக நுகர்வு. உண்ட சுவையால் நாவில் உமிழ்நீர் ஊறவேண்டும் சற்று நேரமாவது. அந்தச் சுவையே பிறிதொரு நாளில் அதனைத் தேடி வரவைக்கவேண்டும். வாசகனுக்கு இடைவெளி விடுதல் இதற்கு ஒப்பானதே. ரெ.கா முடிவுகள் திருவிழா கொண்டாட்டத்தின் தொடக்க நாள் போல. இனிமேல் வாசகனுக்குத் திருவிழா.
‘தீக்காற்று’ (ஊ.இ.ம) கதையை எடுத்துக்கொள்வோம்.. மகள் பிரேமாவுக்கும் தாய்க்குமான விவாதத்தில் மகள் ஆஸ்ரமத்திலேயே பிடிவாதமாய்த் தங்கிவிடுகிறாள். இது தாய்க்குப் பிடிக்கவில்லை. சாமிதான் மகளை தன்வசப் படுத்திக் கொண்டார் என்று எண்ணி சண்டைக்கு வருகிறார் தாய்க்காரி. பிரேமா ஆஸ்ரமத்தில தங்குவதும்  சாமியின் முதல் நிலை பக்தரான குருநாதனுக்கும் பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில் குருநாதன் சாமிக்கு ஆற்றிய பணிவிடைகளைப் பிரேமா செய்ய ஆரம்பிக்கிறாள். சாமியாரையும் பிரேமாவை தொடர்புபடுத்தி மொட்டைகடிதங்கள் வந்திருப்பதாக ஆஸ்ரம நிறுவனர், புரவலர் சாமியிடம் கடிந்து கொள்கிறார் ஒரு நாள். இங்கே அந்த மொட்டைக் கடிதத்தை எழுதியது யார் என்று கடைசி வரையில் சொல்லப்படவில்லை. வாசகன் ரகுநாதனோ , பிரேமாவின் அம்மாவோ செய்திருக்கலாம் என்று யூகிக்க வழி கொடுக்கிறார். ஆனால் அருதியான முடிவுக்கு வரமுடியாத ஒரு முடிச்சை போட்டு விட்டு நழுவி விடுகிறார். வாசகன் தன் யூக புத்தியை முடுக்கிவிடுவதற்கான மனவிரிவை உண்டாக்கிறார்.  இங்கே. படைப்பாளர் முடிவைச் சொல்லியிருப்பின் ஒரு முடிவுதான் கிடைத்திருக்கும். இரு முடிவுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட முடிவுகள் வாசகனுக்கு அளிக்கப்பட்ட இரட்டைப் பரவசம்.
ஆனால் சில கதைகளில் மட்டும் எதிர்ப்பாரா திருப்பங்களையும் வைக்கிறார். ‘கொஞ்சம் மனிதன்’ (நீ.மே.எ) வீரப்பன் சிறைக்குப் போகும்போது தன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளும்படி கந்தசாமியிடம் சொல்கிறான். ஆனால் வீரப்பனின் மனைவி நீ ஆம்பிலையா என்று ஒரு கட்டத்தில் கேட்டு விடுகிறாள். ஒரு பெண்ணிடமிடருந்த வரும் சவால்களில் ஆண் மகனைக் கேலிக்குள்ளாக்கும் மிகக் கூர்மையான மொழியாடல் இது. இந்த ஆண்மையைக் கிளர்த்தும்  வினாதான் வீரப்பனின் மனைவி கந்தசாமியிடம் சோரம் போக வைக்கிறது. கந்தசாமிக்கும் தன் மனைவிக்குமான கள்ள உறவு காரணமாக உக்கிரம் கொண்ட வீரப்பன் கந்தசாமியைத் தாக்க வருகிறான். தன் நண்பன் வேலப்பனைச் சாட்சி வைத்துக்கொண்டு இந்தத் தாக்குதலை நிகழ்த்துகிறான். வேலப்பன் முன்னால் கந்தசாமியை அடித்து துவைத்த பின்னர், வேலப்பனை வெளியே போகச் சொல்லி, கந்தசாமியிடம் இப்படிச் சொல்கிறான். ‘கந்தசாமி நான் சிறையில் இருக்கும்போது என் குடும்பத்த பாத்துகிட்டமைக்கு நன்றி. என் மனைவிதான் உன்ன நீ ஆம்பிலையான்னு கேட்டுடான்னு எனக்குத் தெரியும். இவ்ளோ நடந்த பிறகு நான் என் குடுமபத்தோட வாழ முடியாது. நான் வேலப்பன் சாட்சி வச்சு அடிச்சதுக்கு காரணம் ஊர் உலகம் என்னை மதிக்கணும்ங்கிறதுக்காகத்தான். அதனால  என் குடுமபத்த நீயே பாத்துக்கோ என்று கிளம்பிவிடுவான்’.
‘சேர்ந்து வழலாம் வா’ (நீ.மே.எ) சிறுகதையில் முடிவைச் சொல்லாமல் சொல்லி விடுகிறார். முடிவைச் சொல்லாமல் விடுவதில் இருக்கும் வழக்கத்திலிருந்து தடம் மாறி இங்கே முடிவை வைக்கிறார். உண்மையில் முடிவை கதாசிரியன் நிர்ணயிப்பதில்லை. பெரும்பாலும் சிறுகதைகளே அதனை தன் கைக்குள் வைத்திருக்கின்றன. கதையோட்டத்தில் நடக்கும் தன்னிச்சையான நிகழ்வு அது. ‘சேர்ந்து வாழலாம் வா’ கதையில் மாரியம்மாள் கொக்கேய்ன் வழக்கில் அவளுக்கு எதிராகவே தீர்ப்பளிக்கப்படுகிறது. இந்த எதிர்மறை தீர்ப்பே அவள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் உமாவின் காதல் நிறைவேறாமைக்குக் குறியீடாக வைக்கப்படுறது. மாரியாம்மாள் குற்றவாளி என்று சொல்லும் தீர்ப்பிலிருந்து , உமாவின் கறைபடிந்த வாழ்வே காதல் கல்யாணம் வரை நீடிக்க விடாது என்ற பூடாமாக முடித்துவிடுகிறார். எல்லா வகை முடிவுகளும் வாசிப்புக்கு விருந்தாகவே இருக்கின்றன.
கவித்துவம்
 குழந்தைகள் எவ்வளவு பெரிய வரப்பிரசாதம் நமக்கு! அவர்களில் குழந்தைமைகளிலிருந்து நமக்கு ஒருவித விநோதக் கலை கிடைக்கின்றது. அவர்களுக்குக் கைகூடியிருக்கும் குறைந்தபட்ச அறிவின் வழி, குறைந்தபட்ச சொற்களின் வழி, மழலையின் வழி நமக்கு அரிய கலையை உருவாக்கித் தருகிறார்கள். அவை நம்மை பரவசத்தில் வீழ்த்தக் கூடியவை. எதெல்லாம் பரவசம் தருமோ அதெல்லாம் கலைதானே! நீர் மேல் எழுத்து தொகுப்பில் நான்கு கதைகள் மல்லியைப் பற்றியது. ஆக்கலும் அழித்தலும்,மல்லியும் மழையும், என் வயிற்றில் ஓர் எலி, அமீருக்கு இரண்டு பங்கு கேக், ஆகியவை அவை. கதை சொல்லியின் பேரப்பிள்ளை மல்லி. மல்லி கிரயோன் வண்ணப் பென்சிலில் மழையை வரைகிறாள். அதற்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறாள். மழைக்கு நிறமே இல்லையே நீயேன் நிறம் தருகிறாய் என்ற தாத்தாவின் கேள்விக்கு அக்குழந்தை ரசிக்கும்படியான பதலைத் தருகிறது. தாத்தாவைக் அழைத்து போய்த் தரையைக் காட்டுகிறாள். மழை விழுந்த தரை இளஞ்சிவப்பு மொசைக்கால் ஆனது. அதில் விழுந்த மழைத்துளி இளஞ்சிவப்பில் மின்னுகிறது. நம் கண்களுக்குக் கிடைக்காத அழகியல் குழந்தைக் கண்களுக்குக் கிட்டுகிறது. அது எவ்வளவு கவித்துவமானது!. நமக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவெடுத்துக் கொண்டு குழந்தை நமக்குச் சொல்லித்தரும்போது அதன் வெள்ளந்தியை நாம் நெஞ்சோடு அணைத்துக் குதூகளிகொள்கிறோம். அந்த அபூர்வக் கலை குழந்தைகளிடமிருந்து நமக்குக் கிடைக்கும் வரப்பிரசாதம்.
நம்மிடமிருந்தே சொற்களை இரவல் வாங்கி, அவற்றை மந்திரச் சொற்களாக மடைமாற்றம் செய்யும் மழலைகளின் சிற்றறிவும் வியக்கத்தக்கது. என் வயிற்றில் ஓர் எலி கதையில் , மல்லியின் வயிற்றில் எலி உருவான கதையும் அது சார்ந்து  சொற்களும் ஒரு விநோத கற்பனாவாத சித்திரத்தை உருவாக்கிவிட்டுச் செல்கிறார் கதாசிரியர். குழந்தைகளின் ஏன் எப்படி என்ற கேள்விகளைப் பெற்றோர்கள் தவிர்க்காமல் பதிலளித்திருந்தால் பல குழந்தைகள் மேதைகளாக வளர்ந்திருப்பார்கள் என்ற அறிவுறுத்தலும் கதையின் ஊடுபாவாக வரைந்து காட்டிவிடுகிறார்.
லட்சியவாதக் கதைகள்
1974 ல் வெளியான அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான புதிய தொடக்கங்களில் லட்சியவாத எழுத்தே மேலெம்பி நிற்கின்றன. எழுதத் தொடங்கியபோது மொட்டவிழ்ந்த படைப்புகள், சமூகப் பின்னடைவால் உண்டான அறச் சீற்றத்தைக் கையில் எடுக்கின்றன. ரெ.கா விதி விலக்கல்ல. சமூகப் பிரக்ஞை இந்த வகை எழுத்துகள் பிரவாகமெடுக்கக் காரணிகளாகின்றன. அது படைப்பாளனின் கடமை. புதிய தொடக்கத்தில் பொது நல நோக்குள்ள இளைஞர்கள் குரல்கள் பல கதைகளில் ஓங்கி ஒளிக்கின்றன. தன் மகனை டாக்ராக்கி தன்னைப் போல பெரிய தொழிலதிபராக உருவாக்கவேண்டும் என்ற தந்தையின் முதலாளித்துவ கனவுக்கு நேரெதிர் குணங்கொண்ட பாத்திரமாக வருகிறார் ஆனந்தன். ஆனந்தன் மருத்துவப் பணி ஏழைகளின் பால் திரும்புகிறது புதிய தொடக்கங்கள் கதையில். பல்கலைக் கழகத்தில் பயிலும் சங்கரநாராயணன் தீய நடவைக்கை பெற்றோரின் கனவைக் களவாடும் கதையாக ‘சங்கர நாராயணன் தோற்றுவிட்டான்’ கதையின் மையச் சரடாக வருகிறது. பிரஜா உரிமை பிரச்னை, பொருளாதார விழிப்புணர்வு, சமூகச் சீர்திருத்தம் போன்றவற்றை  சங்கம் அமைத்து தீர்க்கும் லட்சியப் புருஷனாக முருகையாவைப் புனைகிறார்.  . ’ஒருதொண்டன் தலைவனாகிறான்’ கதையில். இதில் ‘பிள்ளையார் பந்து’ குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கதை. தோட்டப்புற தமிழ்ப்பள்ளிகளின் மாணவர்கள் கல்வியில் அடிமட்டத்தில் வீழ்ந்து கிடப்பாதாக அபிப்பிராயம் கொண்டுள்ள ஆசிரயர் கண்ணனுக்குப் புதிய நம்பிக்கையை விதைக்கும் லட்சியவாதியாக கதை சொல்லியைப் படைக்கிறார்.
அடித்தட்டு வாழ்வின் அவலம்
ரெ.கா சிறுகதைகளில் அடித்தட்டு மக்களின் கதைகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. இன்னொரு தடவை’ கதைத்தொகுப்பில்  ‘வெள்ளைப்பூனைகளும் கருப்புக்குட்டிகளும்’ கதை அடித்தட்டு வர்க்கத்தில்  ஆணாதிக்கம் உருவாக்கும் ஓர் அபலையின்  கதையைச் செறிவாகச் சொல்கிறார். சிறுகதைகள் டாட் காம் இணைய தளத்தில் எனக்குக் கிடைத்த மேலுமொரு கதை ‘செல்வி இனி திரும்ப மாட்டாள்’ பெண்களின் உடலிச்சையைக் கிளர்த்தி சோரம் போகவைக்கும் ஆண்வர்க்க ஆதிக்கம் வெளிப்படுகிறது. ‘மனசுக்குள்’ தொகுதி 1995ல் வெளியாகிறது. இதில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கதை ‘கொப்புளங்கள்’. அடித்தட்டு வர்க்கச் சமூகம் சீர்தூக்கிச் சிந்திக்கத் தவறி, சாதாரணக் குற்றத்தை ஊதிபெரிதாக்கி ஊழிக்குள் விழும் அவலத்தைச் சொல்கிறது. இவாறான விளிம்பு நிலை மனிதர்கள் அவர் கவனப்படுத்தும்போது ஒரு படைப்பாளனின் கரிசனப் பிரக்ஞையை நாம் புரிந்து கொள்கிறோம்.
முடிவாகஸஸ.
ரெகாவின் கதைகள் அரை நூற்றாண்டு கால அனுபவப் பகிர்வு. அடித்தட்டு வாழ்விலிருந்து நடுத்தர வாழ்வுக்கான பாய்ச்சல் நிகழ்ந்த இந்த ஐம்பது ஆண்டுகளில் இடைவிடாமல் எழுதிவந்த வரலாறு அவருடையது. ‘புதிய தொடக்கங்களில்’ தொடங்கி’ ‘நீர் மேல் எழுத்து’ வரையிலானது அவருடைய சிறுகதை உலகம். எழுத்திலக்கியத்தின் வழி அவர் கடந்து வந்த காலத்தின் கதைகள். 1974ல் வெளிவந்த புதிய தொடக்கங்கள் 60 களிலும் 70களிலும் சமகால வாழ்வின் இன்னல்கள் தெளிவாகப் புலனாகின்றன. ‘வாழ்க்கைக் கதை’யில் சஞ்சிக் கூலியாக பெண்டு பிள்ளைகளை விட்டு மலாயாவுக்கு வந்த ராமசாமியின் கதையும்,  தமிழகத்தில் வாழும் குடும்பத்துக்கு உண்டியல் முறையில் பணம் அனுப்பி ஏமாறும் ‘மனக்கணக்கு’ கதையும் சஞ்சிக் கூலிகளான புலம்பெயர்ந்தவர்கள் சோகக் கதைகள். தோட்டபுறங்களின் வாழ்வாதரத்துக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்த சிவப்பு ஐ.சி, வேலை பெரிமிட் போன்ற அவல வாழ்வு ‘முனுசாமி தலை குனிந்து’ நிற்கிறான்’ கதைவழி கிடைக்கின்றன. இவையெல்லாம் அறுபதுகளின் இருண்ட வரலாறு. ‘நீர் மேல் எழுத்து’ தொகுப்பில் தான் தாத்தாவாகி தன் பேரப் பிள்ளைகளோடான பதிவுகள் 2011களின் கதைகள். மலேசியாவில் சிறுகதைக்கலை தோன்றிய / தொடக்க கால வடிவப் பிரக்ஞையை அவர் கதைகள் மெல்லத் தகர்த்து அடுத்தக் கட்ட பரிமணத்துக்குச் சென்றன. ஆரம்பத்தில இலட்சியவாதக் கதைகள் கொடுத்தாலும் பின்னர் பன்முகங்கொண்ட கதைகள் வாசிக்கக் கிடைக்கின்றன. ‘புழுத் துளை’ போன்ற அறிவியல் புனைகதைகளை மலேசியவில் முதன் முதலாக முன்னெடுத்தவர் அவர்.
     அவரைத் தொடர்ந்து வரும் அடுத்தடுத்த எழுத்துச் சந்ததியினருக்கு அவர் கையளித்துள்ள கதைகள் வரலாறாக மட்டுமல்ல வழிகாட்டியாகவும் இருந்து வரும். கதை படைப்புலகுக்கு அறிமுகமாகும் ஒரு தொடக்க எழத்தாளனுக்கு அவருடைய கதைகள் வடிவ ரீதியிலான அடிக்கட்டுமானங்களை எளிய முறையில் காட்டவல்லது.
  கலைஞன் தானும் ‘வாழ்ந்து’ சுவைஞனையும் வாழ வைப்பவன். இங்கே வாழ்தல் என்பதை பிழைத்தல் என்று பொருள் கொள்ளலாகாது. கதை உலகத்தில் அவர் வாழ்ந்த பரவசத் தருணங்களைச் சுவைஞனுக்கும் கொடையளித்து வாழ வைத்திருக்கிறார். என் மறு வாசிப்பில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.
   

Sunday, March 20, 2016

ரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை

ரெ.கா கதைகளின் அழகியல்

கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லைபின்னால் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவர்.

ஒரு படைப்பாளரை  அவருடைய மெய்யியல் சிந்தனை வெளிப்பாட்டு அளவுகோல் கொண்டும் நிறுத்துப் பார்க்கலாம். அதிகமாக வாசிக்கின்ற ஒருவனுக்கும் தர்க்கரீதியாகச்  சிந்தித்து முடிவெடுக்க முடியும். பழுத்த வாழ்க்கை அனுபவமுள்ளவர்கள் தங்கள் பேசும்போது தத்துவமாக கொட்டுவதைப் பார்த்திருக்கிறோம். காதலில் தோல்வியுற்ற இளசுகளின் வாயில் தத்துவ வெளிப்பாடு இருக்கும். காதலித்த அதே பெண்ணைத் திருமணம் முடித்தவர்கூட தாடி வளர்த்து சலித்துப் போய் தத்துவத்தில் வந்து நிற்பார் . நவீன அரசியலைக் கட்டமைக்கும் இடது சாரிகளுக்கும், ஆன்மிக ரீதியாக வாசித்து முதிர்ச்சி பெற்றவர்களுக்கும் மெய்யியல் சிந்தனை வரும். பேச்சாளர்களின் பேச்சை செவிமடுப்பவன் மூலமும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து  முடிவெடுக்க முடியும்.
மெய்யியல் என்ற சொல்லின் பொருளை எளிமையாகச் சொல்வதென்றால் தெளிவான சிந்தனைக்கு வருதல் எனலாம். எது சரி எது தவறு? எது சரியான பாதை எது தவறான பாதை என்று தெரிந்து கொள்வதுதான் மெய்யியல். ஒரு தேர்ந்த படைப்பாளனின் நாவலில், கதையில், கட்டுரையில் தத்துவப் பார்வை வரும். அது அவனின் வாசிப்பின் நீட்சியாகச் சிந்திக்கும் போது பிறக்கும். பிர்சித்திபெற்ற  உளவியலாளர் நீட்சே தொடங்கி பெரியார் வரை மெய்யியல் மிக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம் .
 ஐரோப்பிய நாடுகளில் பதினெட்டாம்  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி படாடோபமாக வாழ்ந்த அரசர்கள், நில உடமையாளர்கள், முதலாளிகளின் மேல் ஒரு புதிய வேள்வி தொடங்கப்படுகிறது. பராரி ஏழைகளின் சிந்தனை மாற்றத்துக்குக் கல்வி அறிவு புகுத்தப்படும் கட்டாயம் நிகழ்ந்தவுடன்தான் தங்களைச் ஒரு சக்தி வெகுகாலம் சுரண்டிப்பிழைப்பதை உணர்கிறார்கள். அப்போது பிறப்பதுதான் தனி மனித சுதந்திர தாகம் . அந்தத் தனி மனித விடுதலைக்கு வித்திட்டதின் நீட்சியாகத்தான்  தத்துவ சிந்தனை தெறிப்பு. அவ்வாறான சிந்தனையின் தாக்கமாகத்தான் படைப்பாளர்கள் உருவாகிறார்கள். படைப்பாளன் சமுகத்துக்கு எதனையோ சொல்ல வருபவன். வாசகனைப் போய்ச்சேர்ந்து அவனுக்குள் பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றால் மெய்யியல் சிந்தனை நல்ல ஆயுதம். ஜெயகாந்தன் நல்ல எடுத்துக்காட்டு. புதுமைப்பித்தன் தன்னுடைய பொன்னகரம் கதையில் சொல்வான் கற்பு கற்பு ன்னு கதைக்கிறிங்கள் இதுதாண்டா கற்பு என்று. கற்பு சார்ந்த நம்முடைய மரபார்ந்த கற்பிதம் அங்கே உடைந்து நொறுங்குவதை பார்க்கிறோம். டாகடர் ரெ.கார்த்திகேசுவின்  ‘ஊசி இலை மரம்’ தொகுப்பில் வரும் ஒரு கதையில் அவரின் மெய்யியல் வெளிப்பாடு துல்லிதமாக வந்து சேர்கிறது. ரெ.காவின் எனக்கும் அப்படித்தான் கதையிலொரு எடுத்துக்காட்டு:
கிழக்குப் பார்த்த மண்சிலை அது. அவருக்கு முன்னால்தான் சூரியன் உதிக்கிறது. அவருக்கு முன்னால்தான் கடல் பரந்து கிடக்கிறது. அவருக்கு முன்னால்தான் புதர்கள் பற்றி எரிகின்றன. எல்லாவற்றையும் அவர் பார்த்து அதே மாதிரிதான் சிரிகிறார். அனைத்து அபயஹஸ்தமும் அருளியவாறிருக்கிறது. இவர் இங்கு இருந்தாலும் இல்லையானாலும் இவை அனைத்தும் நடக்கும். இவர் இங்கே இருப்பதால் எல்லாம் நல்லவையாக நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இயற்கையின் இரக்கமற்ற நியதிகளை அவர் மாற்றப் போகிறாரா என்ன? மாற்றுவார் என் நம்பி சிலை வைத்திருப்பவர்களைப் பார்த்துத்தான் இந்தச் சிரிப்பு போலும்’
புத்தருக்குச் சிலை வைப்பது புத்த சமய விழுமியங்களுக்கு எதிரானது. அதனை அடிப்படையாக வைத்து ஒரு தத்துவ தரிசனத்தைக் காண்கிறார். இதனுள் செருகியிருக்கும் அங்கதம் அவருடைய தத்துவ வெளிப்பாட்டின் ஆளுமையை ரசிக்கவைக்கிறது.
எளிய எழுத்துநடை அவருடையது. ஆனால் கனத்த கதைப்பொருளைக் கொண்டிருக்கும். அதற்குள் அவர் கொண்டுவரும் உவமைகள் வேர் வளர்ந்த மரத்தின் தடயம் போல கதையோடு ஒட்டிக்கொள்ளும் வகைமையைக் கொண்டது. மேற்சொன்ன அதே கதையில் பாரம் தூக்கியை ராட்ச்சக் கொக்கு என் உவமிப்பார். கொம்தார் கட்ட்டத்தை வீங்கிய விரல் என்றும் சொல்வார்.
கவித்துவம்..
சிறுகதைகளில் கருவோ நடையோ கதைச் சிக்கலோ, பாத்திரப் படைப்போ முடிவோ மட்டுமே நல்ல கலைத் தன்மையைத் தந்துவிடாது. எங்காவது ஓரிடத்தில் கவித்துவம் தெறிக்குமாயின் அதுவே கதையைத் தூக்கி நிறுத்துகிறது. கவித்துவம் என்பது உணர்வு ரீதியானது. அதனைச் சொல்லி அடக்க முடியாது. சிறந்த சொற்கூட்டு  கவித்துவ உணர்வை தரலாம். அதற்கு      ஒரு உதாரணம் சொல்கிறேன். நீண்ட காலமாக ஒரு ஒன்றித்தே வாழ்ந்து வருகிறார்கள் ஒரு தம்பதியினர் . மனைவி ஒருநாள் திடீரென இறந்துவிட்ட செய்தி அவனுக்கு  எட்டுகிறது. கணப்பொழுதில் வாழ்க்கைக் கனவு சிதைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்துஒரு நாள் அவன் எண்ணிப்பார்க்கிறான். மனைவி இறந்து இரண்டு மணி நேரம் கழித்தே  அவனுக்கு அந்த துக்கச்செய்தி எட்டியிருக்கிறது. அந்தச் செய்தி எட்டும் நொடி வரைக்கும் அவனுக்கு அவன் மனைவி உயிரோடுதான் இருக்கிறாள் என்றுதானே பொருள். எனவே அவன் இரண்டு மணி நேரம் கூடுதலாக வாழ்ந்த மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறான்.. இப்படி நுணுக்கமாகச் சொல்லப்படுவதைத்தான் நாம் கவித்துவம் என்கிறோம். இந்த உணர்வு அலாதியானது .
   ரெ.கா மல்லியை என்ற பேத்தியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளில் கவித்துவம் மிளிர்வதைப் பார்க்கிறோம் .மல்லியும் மழையும் சிறுகதையில் , கதை சொல்லி மல்லியைப் பார்த்துக்கொள்ளும் தாத்தாவாக வருகிறார். மல்லி ஒருநாள் மழை என்ன வண்ணம் என்று தாத்தாவைக் கேட்கிறாள்.” தாத்தா மழைக்கு கலர் இல்லை,” என்கிறார். ஒருநாள் மல்லி மழையை வரைந்து அதற்கு ஒரு வண்ணத்தைக் கொடுக்கிறாள். “என்னாம்மா மழை இந்த கலர்ல இருக்கு. மழைக்கு கலர் இல்லியே என்கிறார். தாத்தா உங்களுக்கு ஒன்னும் தெரியாது வாங்க நான் காட்றேன்,” என்று அழைத்துக்கொண்டு போகிறாள்.
 அங்கே மொசைக் தரையில் மழை நீர் மிதக்கிறது. “தோ பாத்திங்களா மழை இளஞ்சிவப்பு என்று காட்டுகிறார். மொசைக் இளம் சிவப்பு நிறம்தான் நீரில் பிரதிபலிக்கிறது. குழந்தை கண்டுபிடிப்பில் எவ்வளவு கவித்துவம் பாருங்கள். குழந்தையின் பார்வையில் தவறு இருக்கலாம். அந்த வெள்ளந்தியான சிந்தனைதான் கவித்துவமாக நமக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பேச்சிலும்  அரிய கலையைத் தந்து பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கலையின் மூலம் நாம் பரவசமடைகிறோம். நாமும் அக்கணத்தில் குழந்தையாகி விடுகிறோம் . கவித்துவம் என்பது மிக நுணுக்கமானது. உணர்வுத்தளத்தை அசைப்பது. “ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது தாத்தா’ என்று  நல்ல படித்தவரை, அனுபவ சாலியைக் கேட்கும்போது நாம் அவர்களைப் போலவே குழந்தைப் பருவம் எய்துகிறோம். குழந்தைகளின் இந்த கவித்துவ இயல்பை நமக்குக் கிடைத்த ஒரு அரிய  கலை. அவர்களை அப்போது நம் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இன்புறுகிறோம்.
லட்சிய வாத எழுத்துகள்
டாக்டர் ரெ.கா வின் முதல் சிறுகதைத் தொகுதி 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வருகிறது. சராசரி மனிதனாக இருந்த ஒருவன் ஏன் எழுத்தாளனாகிறான் என்பதற்கான காரணம் அந்நூல் எனக்குத் துல்லிதமாகக் காட்டியது. பொதுவாகவே எழுத வருபவர்கள் அறச் சீற்றத்தோடுதான் வருகிறார்கள். இந்தச் சமூதாயத்தைச் சீர் திருத்தவேண்டும் என்ற வேட்கையோடுதான் பேனாவை ஏந்துகிறார்கள். தன்னால் அரசியல் வாதியாக முடியாது, பொது இயக்கங்களில் இருக்கவும் வாய்ப்பில்லாதபோது பேனாவை கையிலெடுக்கிறான். பொது இயக்கங்களிலும் அரசியல் கட்சிகளிலும் காலூன்றிய நாற்காலிப் பித்து அரசியல் நவீன எழுத்தாளனை எட்டிப்போக வைக்கிறது. எனவே அவனே ஒரு இயக்கமாக மாறுகிறான். தனி மனித இயக்கமாக. எழுதி இச்சமூகச் சீர்கேட்டைக் கலைத்துவிடவேண்டும் என்ற வெறி. பெரும்பாலும் எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுத வருகிறார்கள். இதைத்தான் நாம் லட்சியவாத எழுத்து என்கிறோம்.( பல சமயம் என்னை எழுத்தான் என்று அடையாளம் கண்டவர்கள் கூட சார் ‘இந்த அந்நியாயத்தையெல்லாம் எழுதுங்க சார், மக்கள் படிச்சி திருந்தட்டும்; எனபார்கள். படைப்பாளனை லட்சியவாதம் நோக்கித் தள்ளும் வாசகனின் லட்சியவாதம் இது) பத்திரிகையில் முதல் படைப்பு வெளியானதும் ‘இந்தச் சமூகம் திருந்தப் போகிறது பார்’ என்ற போதை தலைக்கேறும் . ஆனால் எழுதி எழுதிச் சலித்த பின்னர் ‘ஒன்னும் கடைதேறாது போல இருக்கே’ என்ற முடிவுக்கு வருகிறான். நான் அப்படித்தான் வந்தேன். நான் பார்த்த பிறரும் அப்படியான எழுத்தைத்தான் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்காத போது.. படைப்பிலக்கியம் என்பது கலை வடிவம். கலையின் எல்லை மிக பரந்து விரிந்த ஒன்று. அது நின்றுதான் கொல்லும் தெய்வம் மாதிரி என்று ஒரு முடிவுக்கு வருகிறான். கதையுக் கவிதையும் நாவலும் கட்டுரைகளும்  அதைத்தான் செய்யும். கடலில் விழுந்த ஒர் துளிபோல அது காணாமற்போகலாம்  ஆனால் அந்தத் துளி கடல் நீருக்குள்தான் சங்கமித்திருக்கிறது என்று மெல்ல புரிந்து கொள்கிறான். டாக்டர் ரெ.காவின் புதிய தொடக்கம் தலைப்புக்கு ஏற்ற மாதிரி லட்சிய வாத எழுத்தாகவே நான் பார்க்கிறேன். குறிப்பாக, சஞ்சிக் கூலி, மனக்கணக்கு,, வாழ்க்கைக் கதை’ போன்ற கதைகளில் லட்சியவாத நோக்கு தெளிவாகத் தெரிகிறது. அடுத்து வந்த நான்கு தொகுப்புகளில் அந்த எழுத்து வகை மாறி யிருக்கிறது. கதைகள் கலை அம்சங்களாக மாறும் ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது.
ரெ.கா கதைகளை மீள் வாசிப்புக்கு உள்ளக்கப்பட வேண்டும். அவர்  வாசகர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். அதனைக் கருத்தில் கொண்டே 20.3.16 ஞாயிற்றுக்கிழமை, மலாயா பல்கலையில் காலை 9.00 துவங்கி ஒரு நாள் கருத்தரங்கை முன்னெடுத்திருக்கிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.