Saturday, December 7, 2013

13. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

13. நதி செய்த பிழை என்ன?

அன்று சாயங்காலமே கங்கை நதிக்கரையில் தீப ஆராதனை. பிரதி தினமும் நடக்கும் ஆராதனை. விடுதியிலிருந்து ரிக்‌ஷா வண்டியில் கிளம்பினோம். ஏனெனில் கங்கை நதிக்கு இரண்டு கிலோமீட்டருக்கு அப்பாலேயே வாகனக்களுக்குத் தடை.மக்கள் நெரிசல்.

நதிக்கரையில் படகுகள் குவிக்கப் பட்டிருந்ததன. மீனவ கிராமம் மாதிரியான காட்சி. ஆனால் மீனெல்லாம் பிடிப்பதில்லை. காசியிலும், ரிசிகேசிலும்  மட்டுமே அசைவம் கிடைக்காது.லெக் பீஸ் எல்லாம் கேட்கக்கூடாது. சுத்த சைவம். எல்லா விடுதியிலும். கரையை அடைத்து நின்ற படகுகள் பக்தர்களுக்கானது. தீபாரதனையைப் பார்க்க அலை மோதுகிறது கூட்டம். வெளியூர் பயணிகளே அதிகம். கண்கொள்ளாக் காட்சியாக் இருக்கும் என்றெல்லாம் சொன்னார்கள். கரையில் இருந்த படகுக்கு ஏறி நன்றாகப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஒவ்வொரு படகாகத் தாண்டி  அண்ணாந்து பார்க்க வாட்டமாய் ஒரு படகைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம். மண்ணால் செய்த அகல் விளக்குகள் பூக்களையும் வேண்டி வேண்டி விற்கிறார்கள். நீங்கள் ஆகக் கடைசி படகுக்குப் போனாலும் பின்னாலேயே கெஞ்சியபடி வருவார்கள். கையிலும் அகலும் பூவும் இருந்தால் தொந்தரவு இருக்காது.

அகல் விளக்கேற்றி கங்கையில் மிதக்க விடுகிறார்கள். நான் என்ன நினைத்தேன் என்றால் நதி முழுக்க அகல் விளக்குகள் மினுக்கி மிதந்து கண்களைப் பறிக்கப் போகிறது என்று. அப்படியெதுவும் நடக்கவில்லை. அகல் விளக்குகள் கங்கையில் மிதக்க விட்டுச் சில நிமிடங்களிலேயே அணைந்து விடுகிறது.

மக்கள் கால் பட்டு சேரும் சகதியுமாய் இருக்கிறது நதிக்கரை. நதியே குப்பைக் கூளமாய் காட்சி தருகிறது. அத்தனை அகல் விளக்கும், பூவும், தேங்காயும், பழமும், இத்யாதி இத்யாதி எல்லாம் நதிக்கே சமர்ப்பணமாகிற தென்றால் அது தாங்குமா? மக்கள் கூட்டம் போடும் இன்னபிற குப்பைகள் நதியில்தான் சங்கமம் ஆகின்றன.
மெல்ல இருளத் தொடங்கியவுடன், அங்குள்ள கோயில்களில் பஜனையும் பூசைகளும் நடக்கிறது. அங்கே எத்தனை ஆலயங்கள்  உண்டோ அத்தனையிலும் பூசை நடக்கிறது. எந்த ஆலயத்தைப் பார்ப்பது என்ற குழப்பம். நான் பார்த்துக் கொண்டிருப்பது முக்கிய ஆலயமாக இருக்கலாம் என்றே நம்பிக்கொண்டேன்.நம்பிக்கைதானே வாழ்க்கை.

பூசையின் உச்சத்தில் கங்கையைக்கு தீபாரதனை காட்டுகிறார்கள். அந்தக் கூட்டத்தில் நெருக்கியடித்து தீர்த்ததைப் பெற்றுக்கொள்ளவேண்டும். கொஞ்சம் வெளிச்சமாக இருக்கும்போதே கங்கையைப் பார்த்தேன். நீர் பயங்கரமாகக் கலங்கித்தான் இருந்தது. கரை நெடுக்கு தினமும் நீராடுவதாலும் சேறு சேகரமாகி கலங்கலுக்கு காரணமாகிறது. தீபாரதனை நடக்கும் போதே பக்தர்கள் நீரில் முங்கிஎழுந்தார்கள். அந்தக் கூட்டத்தில் இதெல்லாம் எப்படி சாத்தியம் என்றே விளங்க வில்லை. கங்கயில் பிண்மெல்லாம் மிதந்து வருமென்று சொன்னார்கள். எனக்குப் பார்க்கக் கொடுத்துவைக்கவில்லை!
தீபாரதனை முடிந்து வெளியே வந்தவுடன் சாமியார்கள், பிச்சைக் காரகள் கூட்டம் கூட்டமாய் சாலையோரத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். பசியோடுதான் காத்திருக்கிறார்கள் என்று நினைத்தேன். அதெல்லாம் இல்லை. அதன் காரணம் மறுநாள்தான் புரிந்தது.

உணவுக்கு அங்கே பஞ்சமில்லை. சாலை நெடுக்க சில அண்டாக்கலில் சமையல் நடக்கிறது. பொதும் போது என்றவரை உணவு பரிமாறுகிறார்கள். பக்தர்களும்  பொட்டலம் பொட்டலமாய் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். என்வே உணவுக்கு குறையே இல்லை. எங்களோடு வந்த சிலரும் மறைந்தவர்களுக்குத் திதி செய்து ஏழைகளுக்கு பொட்டலம் கட்டி உணவு கொடுத்தார்கள். எங்கள் பொட்டலங்கள் எல்லாம் கொடுத்து முடிக்கப் படாமல் மீந்து இருந்தன.என்ன செய்வதென்று தெரியவில்லை. வழி நெடுக்க உள்ளவர்களிடம்  தேடிப்போய் கொடுக்க வேண்டியதாயிற்று. பலர் வேண்டாமென்றே மறுத்தார்கள். இங்கே வயிறார உணவு கிடைக்கிறது. இதெல்லாம் வேண்டாம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கிறார்கள்.காசிதான் என்றாலும் தமிழர்களும்  காணப்படுகிறார்கள். அவர்கள் வாய்மொழிந்த விஷயம்தான் இது.  இடுப்பிலும் கையிலும் குழந்தையோடும் பிச்சையெடுக்கும் பெண்கள் கூட உணவு வேண்டாம் ரூபாய் கொடு என்றே கேட்கிறார்கள். இவர்களை எப்படி பிச்சைக்காரகள் என்பது? கங்கை யாரையும் பசிக்கச் செய்யவில்லை போலும்.

தொடரும்.......


No comments: