Skip to main content

14. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?









பிணங்கள் எரிக்கப்பட்டகாட்சி.வேட்டி கட்டிய பையனும் நாயும் எலும்பைத்தேடும் படம்.







கங்கை எல்லா பாவங்களயும் கை ஏந்தி வாங்கிக் கொள்கிறாள்.

என் பயணத்தில் நான் அதிகமாக வெறுத்த நாள் இன்று. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா என்று எழுதிவிட்டு சப்ஜெக்டுக்கு வரவில்லையே என்று  வாசகர்கள் சிலர் கேட்டார்கள் . நீங்கள் பெரிதும் எதிர்பார்த்த விவரணைக்குள் நுழைகிறேன். முந்தைய அத்தியாயத்தில் நான் எழுதியது வெறும் தொடக்கம்தான்.

அதிகாலையிலேயே கங்கைக்குக் கிளம்பவேண்டும் என்று சொன்னார் சரத். ஏழெட்டு பேர் திதி செய்ய வேண்டி இருக்கிறது. அதனை முடித்துக்கொண்டு காலபைரவன் கோயிலிலும், காசி விஸ்வாதன் கோயிலில் வழிபடவும் வேண்டும். நெருக்கடியும் பரபரப்பும் மிகுந்த இடம் என்றார். நாம் பார்க்காத நெருக்கடியா என்று சாதாரணமாய் எடுத்துக் கொண்டேன். ஆனால் அது எவ்வளவு அசாதரணமானது என்று இதோ சொல்கிறேன்.

காலையில் கங்கைக்கு ரிக்‌ஷாவில் கிளம்பினோம். மணி 430க்கே எழுந்தாயிற்று. விடுதியில் காலை உணவு தயார் இல்லை. அதிகமானோர் நீரிழிவு நோய்க்கார்கள். என்னாகுமோ என்று பயந்தபடியே பயணமானோம்.வயிற்றுக்கு ஆகாரம் போட்டுக்கொண்டால் தப்பிக்கலாம். இல்லையென்றால் இந்த நோயாளிகளுக்கு ஆபத்துதான். ஆனால் கங்கையும், கால பைரவனும், காசி விஸ்வநாதரும் அந்த பயத்தை ஆர்வமாக மடை மாற்றி இருந்தார்கள். விரதத்தோடு கங்கையைவழிபடுவதுதான் நல்லது என்றார்கள்.

காலையில் கங்கையில் இரண்டு படகுகள் தயாராக இருந்தன. கலங்கிய கங்கையில்  குப்பைகள் மிதந்து ஓடின. பால் கலந்த தேனீர்போல கங்கை நீர். இரண்டு படகுகளும் ஒன்றையடுத்து ஒன்று பயணமானது. இன்னொரு படகில் ஒருவன் பூசைக்குத் தேவையான வெள்ளி, தங்க முலாம் பூசிய பொருட்களை விற்பனைக்கு ஏந்தி படகுக்குப் பக்கத்தில் உரசியபடை வாங்கச்சொல்லி வற்புறுத்தினான். பெண்களைக் கேட்கவா வேண்டும் ஆர்வத்தோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அவன் இன்னும் நெருங்கி வெகு நேரம் கூடவே வந்தான். ஆனால் யாரும் வாங்கவில்லை. அவன் பின்னர் வேறு படகை நோக்கி துடுப்பைத் தள்ளினான்.

கங்கை நெடுக்க நிறைய வீடுகள் (பங்கலாக்கள்), விடுதிகள், கோயில்கள் என வளர்ந்து கிடந்தன. சில பணக்காரர்கள் கட்டிய பங்கலாக்கள் இவை. வயதான காலத்தில் இங்கே வந்து தங்கி கடைசி யாத்திரக்குக் காத்திருக்கவாம்.எப்படி? பணக்காரன் எவ்வளவு பாவம் செய்தாலும் கங்கைத்தாய் விமோசனம் கொடுத்துவிடுவாளாம். கங்கையில் அவர்கள் அவர்களின் அஸ்தி

கறையவேண்டும் என்பதே இறுதி ஆசை. அந்திம வயதையடைந்து  இறக்கும் நேரத்திலும் இங்கே வந்து விட்டுவிடுகிறார்கள். பாவம் யாருக்கும் செத்துவிடவேண்டுமென்ற ஆவல் வருவதில்லை. இந்த உலகப்பற்று அவர்களை இறுக்கமாகவே பற்றிக்கொள்கிறது. ஆனால் இப்படி கொண்டு வந்து விட்டுவிடுவது," நீ இறந்துபோகும் தருணத்தை நினைத்துக் கொண்டே இரு" என்ற அவஸ்தைக்கு உள்ளாக்கவா? என்ற விநோத வினா நம்மை நோக்கி வந்தடைகிறது. மரணம் பல விதம். இது அதில் ஒன்று!

அரை மணி நேர பயணத்துக்குப் பின் கங்கையின் கரையை அடைந்தது. கரையை அடைந்தவுடன், எங்களை ஏற்றி வந்த படகுக்காரன் கரையிலேயே எல்லார் முன்னிலையிலேயும் சிறுநீர் கழித்தான். அவனுக்குக் கூச்சமில்லை. கூச்சமெல்லாம் எங்களுக்குத்தான்.
எங்கள் படகை ஒட்டி ஒருவன் துணி குமுக்கித்துவைத்த போது சவர்க்கார நுரைகள் கங்கைக்குள் ஒழுகின. நெடுக்க பலர் இப்படிச் செய்தனர்.  பலர் நீராடினர். பல்துலக்கி எச்சில் நுரைகளை கங்கையில் துப்பினர் சிலர். மொட்டை யடித்தலும் சவரம் செயதலும் கணக்கற்றவர் ஈடுபட்டனர்.எல்லாம் கங்கைக்கே சமர்ப்பணம்.

ஓரிடத்தில் நான்கைந்து பிணம் எரிக்கப்பட்ட சாம்பல் எஞ்சியிருந்தது. எரித்ததில் எஞ்சி இருந்த எலும்புகளை பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒரு பையன். மீண்டும் எரிக்க. நாய்கள் சிலவும் அவனுக்குப் போட்டி. நாய்களுக்கு எதற்கு எலும்புத் துண்டு? சாம்பல் மழைக் காலத்தில் கண்டிப்பாய் கங்கைக்குள் சங்கமம்.
சற்று தள்ளி ஒருவன் 'கால் கழுவி'க்கொண்டிருந்தான். மாடுகள் நடமாட்டம் வேறு . எப்படி என்றுதான் தெரியவில்லை. பச்சைச் சாணமும், காய்ந்ததும்  கங்கைக்குள் வாசம்.
பெண்கள் துணி மாற்றுவது சாதரணமாய் நடக்கிறது. மறைப்பு ஏதுமில்லை. நாம்தான் கண்டும்காணாமல் நகர்ந்துவிடவேண்டும். 
உலகத்தின் பல நாடுகளிலிருந்து வந்த பக்தர்கள்  இங்கே நீராடுகிறார்கள். நீரை அருந்துகிறார்கள்.
துணி துவைப்பதும் காயவைப்பதும்  நடக்கிறது. கோயில் அல்லது விடுதித் துணியாக இருக்கலாம்.

திதி செய்தவர்கள் சிலருக்குத் திருப்தி இல்லை. பலருக்கு எட்டு தர்ப்பம் எனக்கு ஐயர் ஐந்துதான் வைத்தார் என்றாள் எங்கள் குழுப்பெண். உங்கள் வீட்டில் எத்தனை பேருக்குத் திதி செய்தாய் என்று கேட்டார் ஐயர். ஐந்து பேர் என்றாள். ஏன் உயிராய் உள்ளவர்க்கும் திதி செய்யவேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. என்ன செய்வது பக்திக் கோளாறு.
சிலர் கங்கை நீரில் கால் படாமல் பார்த்துக் கொண்டார்கள் எங்கள் குழுவிலும். சிலர் குளித்தார்கள்.
படகில் பயணம் பண்ணும் போதே பசி எடுத்தது. திதி முடிய இரணடரை மணி நேரமாயிற்று. பசி உயிரை மென்றது. கங்கை நீரைக் குடித்தால் ஒன்றும் ஆகாது என்ற நம்பிக்கை பலமாகவே இருக்கிறது.நான் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை.

தொடரும்....

Comments

படிக்கும் போதே குமட்டுகிறது...ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் (நன்றி சாரு)

13-ஆம் பாகத்தில் பிச்சை எடுப்பவர்களை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். பிச்சை என்பது இந்நாளைய பிசினஸ் ஆகிவிட்டது. ஏழாம் உலகத்தில் ஜெயமோகனின் எழுத்துகள் நினைவை தட்டுகின்றன.
ko.punniavan said…
இனி காசிக்குக் போகக்கூடாது என்றே முடிவெடுக்கவைத்தது விக்கி. தொடர்ந்து வாசியுங்கள் கங்கையை எப்படிப் பார்கிறார்கள் என்று தெரியும்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...