Thursday, December 5, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

12. காசிக்குப் போறேன்.( என் முந்தைய பயணக் கட்டுரையில் ஆக்ரா, ஜெய்ப்புர் பற்றி நிறைய எழுதியுள்ளேன்)

கங்கை நதியின் படகில் மிதக்கும் எங்கள் பயணக்குழு
ஆசிர்வாதம்செய்யும்  ஆயிரம் சாமியார்களில் ஒருவர்

கங்கையில் நதியோரத்தில் மொட்டை, சவரம்  போடும் காட்சி
சின்ன வயசில் நான் சந்நியாசியாகப் போகிறேன் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறேனாம்.என் அக்காள் இதை அவ்வப்போது நினைவு படுத்துவாள். என் திருமணத்திபோதும் சொல்லிச் சிரித்தாள். அதன் உட்பொருள் பிடி படாத வயதில் எனக்குள் கிளர்ந்த 'ஞானத் தேடலுக்கான'  அமானுடத்தை எப்படிச் சொல்வது? ஏன் சொன்னேன்? அப்போது கண்டிப்பாய் காரணம் தெரிந்திருக்காது. யாரோ சாமியாரை நான் பார்த்திருக்கக்கூடும். அவருக்குக் கிடைக்கும் சமூக மரியாதை என்னையும் பாதித்திருக்கக் கூடும். அதனால் எனக்கும் காவியைக் கவ்விக்கொள்ள ஆசை பிறந்திருக்கக் கூடும். அல்லது அந்த மஞ்சள் நிறம் என்ன ஈர்த்திருக்கக் கூடும். சின்ன வயசில் பலர் போலிஸ்காரனாக, விமான ஓட்டுனராக, பாதுகாவலாராக ஆகவேண்டுமென்றெல்லாம் ஆவல் கொள்வார்கள். அவை  சீருடை மிடுக்கு கொடுத்த கவர்ச்சியினால்தானே. நான் சந்நியாசியாகவேண்டும் என்று  அறியா வயசில் நான் எடுத்த முடிவு எவ்வளவு சரியென்று திருமணத்துக்குப் பிறகே தெரிந்துகொண்டேன். அப்போதே அப்படியே ஆகியிருக்கலாம். இப்போது too late.  அப்படியும் இப்போது  சாமியாராகவும் பயமாக இருக்கிறது.  அறைக்குள் ரகசிய வீடியோ பொருத்தி விடுவார்கள் என்று.  ஆனால் நடிகைகள் பக்தர்களாகும் போதும்., படுக்கையறை வரை வந்து சேவகம் செய்யும்போதும்  சாமியாராவதில் உள்ள  advantages  மறு பரிசீலனை செய்ய வைக்கிறது. சாமான்யனுக்குக் கிட்டாத சௌகர்யங்கள். சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம்  இருக்கவே  இருக்கிறார் பிரபல பாலியல், ஆழ்மன  உளவியலாளர் சிக்மன் பிரைட்- உதவிக்கு இழுத்துக்கொள்ள.


நான் காசிக்கு பயணம் செய்ய நேர்ந்ததும்கூட சின்ன வயசின் நான் எடுத்த முடிவின் கொசுறுத் திட்டமாகக் கூட இருக்கலாம். ஜெய்ப்பூரிலிருந்து  டில்லிக்குத் திரும்பிய மறுநாள்  மீண்டும் ரயில் வழி  காசிக்கும் ரிசி கேசுக்கும் பயணம். காசியைத்தான் வாரனாசி என்றழைக்கிறார்கள் என்று அங்கு போனவுடன்தான் தெரிந்தது.
இம்முறை இரவில்தான் பயணம். மீண்டும் ரயில் நிலையத்தின் பரபரப்பு. மனித நெருக்கடி. சுமைக் கூலிகளின் அன்புத் தொல்லை.  பயணிகளின் பொருட்களை பத்திரமாக ரயில் பெட்டியில் பாதுகாப்பாக வைக்கும் வரை நம்முடனேயே இருக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒருஅமைப்பு. விதிகள். கட்டுப்பாடு. சில சமயம் இவற்றையும் மீறி கூடுதலாக 'பாத்து போட்டுக் கொடுங்க" பேரமும் நடக்கத் தான் செய்கிறது. அவர்கள் மேல் உண்டாகும் கரிசனத்தைத் தவிர்க்க முடியவில்லை.  நம் பொருட்களையும் நம்மையும் கடமையுணர்ச்சியோடு பார்த்துக் கொள்கிறார்கள்.  "போட்டுக் கொடுத்தால்' என்ன?
ரயிலில் மூன்று அடுக்கு படுக்கை வசதி உண்டு. எனக்கு மூன்றாவது அடுக்கில். இரண்டு உடல்கள் கீழ்த் தளத்தில் . என்ன செய்வது மூன்றாவது அடுக்குக்கு ஏற கொஞ்சம் வலிமை வேண்டும் . இரும்புப் படியின் மேல் கால்வைத்து ஏறி மூன்றாவது அடுக்குக்கு ஏற எனக்கு இளமை போதாதுதான். ஆனால் என் கேபினுள் அனைவரும் பெண்கள். கூட வந்தவர்கள். இளமை துள்ளலைக் கேட்கவே வேண்டும். அது எப்படின்னுதான் தெரியல! ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலேயும் ஒரு பெண் இருக்கிறார் என்கிறார்கள். பல பெண்கள் இருந்தால் கேட்கவே வேண்டாம். தவறி கீழே விழுந்தால் கேட்க ஆள் இருக்கிறார்கள் என்பதற்காக கீழே வேண்டுமா என்ன?
அதிகாலை கங்கை சூரிய உதயம்
கங்கை நதி தீரத்தில்

சுத்தமான படுக்கை விரிப்பு, தலையணை, போர்வை கொடுக்கிறார்கள். ஒருவர் பயன்படுத்தியதை இன்னொரு பயணிக்குக் கொடுப்பதில்லை என்றே நம்பவேண்டும் என்பதற்காக இந்த 'நேர்த்தி' என்று நினைகிறேன். என்னால் கைலி கட்டாமல் படுக்கு முடியாது. புரண்டு படுக்கும்போது போட்டுக்கொண்ட ஆடைகள் உறுத்தக் கூடாது எனக்கு. சுற்றி பெண்கள் எப்படி மாற்றுவது? அவர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்று துணிச்சலாகவும் பாதுகாப்பாகவும்  துகில் உரிந்து கைலிக்கு மாறினேன். "அவர் மாத்திக்கணும் திரையை மூடுங்கள்" என்று கூட வந்த ஒரு பெண்மணி பிற பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்ததும் கொடுத்த தைரியம்.
நம்மைப் படுக்கவிடாமல் பண்ணுகிறார்கள் தேநீர் , காப்பி, பானிபூரி. பன் விற்கும் ரயில் சிறு வியாபாரிகள். சரியாக நம் தலைமாட்டுக்கு வந்தவுடன், காப்பி என்ற கதறலில் நம்மை திடுக்கிட்டு கண்விழிக்க வைத்துவிடுகிறார்கள். பத்து முறைக்கு மேல் இந்த விற்பனை முகவர்கள் வந்து வந்து போகிறார்கள்.
ஆனால் நள்ளிரவு 12,30க்கு மேல் அவர்கள் தொல்லை தருவதில்லை. எனக்கு வீட்டில் மணி 2.00க்கு மேல்தான் மெல்ல தூக்கம் வரும் ஆனால் புது இடத்தில் துக்கம் துள்ளிக்கொண்டு வரும். நான் நினைக்கிறேன் பயண மூடில் இருப்பதனாலும், களைப்பினாலும் உண்டாகும் சலுகை இது என்று. அதுமட்டுமல்ல ரயில் தடதடப்பு கேட்காது. குளிர்சாதன கேபின். தொட்டிலாய் ஆடும் படுக்கை.

காலை எட்டறைக்கு வாரனாசியைப் பிடித்தது ரயில். காசியின் முதல் காட்சியே என்னை நிலைகுலைய வைத்தது. காசி புனித ஸ்தலம் என்ற நம் முன் முடிவை நாறு நாறாய் கிழித்தெறிகிறது காசி. கங்கை நதி பாய்ந்தோடும் காசியா இப்படி? நான் சென்னைக்குப்போனபோது , சென்னையை விட அசிங்கமான ஊர் இருக்காது என்று நினைத்தேன். டில்லிக்குப் போனபோது சென்னையே தேவலாம் என்றிருந்தது. கல்கத்தா போனபோது டில்லி பல மடங்கு சுத்தம் என்றிருந்தது. அமிர்த சரஸ் (பஞ்சாப்) கல்கத்தா பரவாயில்லை என்று பட்டது. ஆனால் காசி இந்த எல்லா ஊரின் பேரிலும் நான் கொண்ட அபிப்பிராயத்தை கலைத்துப் போட்டது. மக்கள் கூட்டம் நடமாடும் இடங்களிலெல்லாம் ஆரோகியமற்ற சூழலை உருவாக்கிக் கொள்கிறார்கள் இந்தியர்கள்.

(தொடர்வோம்)


3 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஒரு சில நாட்களுக்கு முன் ஒரு சீன பயணி இந்தியாவின் அசுத்தச் சூழலை படங்களாக போட்டு அவமானபடுத்திவிட்டார் என ஏதோ ஒரு வலை தளத்தில் கிழிகிழியென கிழித்தார்கள். சுற்றுலாதளங்களின் சுத்த சுகாதார நிலையை அரசு மட்டுமின்றி அங்குள்ள மக்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

துளசி கோபால் said...

முதல்முறையாக உங்கள் பதிவுக்கு வந்துள்ளேன்.

இனிய வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

ko.punniavan said...

நன்றி விக்னேஸ், துளசி,
இடுகைக்கும் வாழ்த்துக்கும்.