Saturday, June 17, 2017

கமிட்டட்


கமிட்டட்.


இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள்.
அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி.

“அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள்.

"அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன்.

“எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள்.

“உன் வயது அப்படி!” என்றேன்.

“அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது காதல் சந்தேகம் ஏதுமில்லை.

“எனக்குச் சந்தேகம் இல்லை!  நான் சந்தேகப் படுவதாக நீ ஏன் நினைக்கிறாய்?” என்றேன். புற உலக மனிதர்களை நீ தூய்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணாதே என்றேன்.

"சரி அவனுக்கு கேல் பிரண்டு இருக்கின்னியே .. கெட்டிக்கார மாணவர்களுக்குக் கூட காதல் எண்ணம் வருகிறதே,” என்றேன். எனக்குப் பள்ளிக் காலத்தில் காதல் துளிர்ந்தபோது நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை. ஆனால் கெட்டிக்கார மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவாரகள் என்றது என் முன்னபிப்பிராயமும் அனுபவமும். .

“தாத்தா அத நீங்க காதல்னு நினைக்கக் கூடாது. அவங்க ரெண்டு பேரும் கமிட்டட் ஆயிருக்காங்க,”என்றாள்.

“கமிட்டடுக்கு நீங்க எப்படி பொருள் சொல்லுவீங்க?” என்று எதிர்க் கேள்வி கேட்டேன்.

“அதாவது தாத்தா ரெண்டு பேரும் பேசுவாங்க பழகுவாங்க..ஆனால் காதல்ங்கிற உணர்வோட இல்லை!”  என்று சொன்னாள்`

கமிட்டட்னா என்னான்னு கேட்டேன்.

“ ரெண்டு பேருக்கு ஒருத்தர் மேல ஒருத்தருக்கு அபெக்சன் உண்டு. ஆனால் நெருக்கமில்ல. உடல் நெருக்கமில்ல. மொதல்ல படிப்பு அப்புறம் பல்கலைக்  கழகம் அப்புறமாத்தான் காதல் என்றாள். ரெண்டு பேரும் நல்லா படிக்கிறவங்க   அதனால்  நல்லா படிச்சி, அச்சீவ் பண்ணிய பிறகுதான் எல்லாம்,  அதில  ரெண்டு பேரும் உறுதியா இருக்காங்க,” என்றாள்

சரி நல்ல முதிர்ச்சியான சிந்தனைதான்.” ஆமாம் அதெப்படி அப்புறம் காதல் பண்ணிக்கலாம் என்று சொல்ல முடியும்? இப்போதைக்கு அந்த எண்ணம் மனசுல இருக்கிறனாலதானே?”  என்றேன்.  “அது அவர்களை சும்மா விடாதே?”

தாத்தா.. கமிட்டுக்கும் காதலுக்கும்  வித்தியாசம் இருக்கு.

அதாம்மா காதல் எண்ணம் மனசுல  இருந்தவாசிதான கமிட்மண்ட் உண்டாயிருக்கு.

தாத்தா நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். பிரண்சிப் காதலா?

“பெரும்பாலும் இல்ல. ஆனால் பதின் வயதுல அது காதலா மாறலாம். யாராவது ஒருத்தருக்கு இந்த எண்ணம் வர வாய்ப்பிருக்கு,  அப்புறம் அது பேஷனா (passion) மாறலாம்.”

“அப்படியில்ல . பிரண்ட்சிப்பும் காதலும் வேற   வேற”.

“இருக்கலாம்.  எனக்கு ஒன்னு புரியல. அபெக்சன்னு சொல்றே, காதலுக்கான வலிமையான புள்ளி அபெக்சன் தானே.

“பிரண்சிப், நெருக்கமான பிரண்சிப், கமிட்டட் அபெக்சன் எல்லாம் காதலாகாது. அபெக்சனுக்கும் காதலுக்கும் இடையில் ஒரு தின் லைன் இருக்கு. அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும்  என்றாள். அந்த மெல்லிய கோட்டைத் தாண்ட மாட்டாங்க!” என்றாள்.

“அந்த மெல்லிய கோடு கொஞ்சம் அழிஞ்சாலும் ஆபத்துதான்!” என்றேன்.

ஆமாம், அப்படித்தான்.


“இபோ எனக்குப் புரிஞ்சிடுச்சு,” என்றேன்.

என்னா புரிஞ்சிடுச்சு?

“எனக்குக் காதல் என்பது குழப்பமானதுன்னு.”


4 comments:

bryan isaac said...

nice short story saab

Suthan Tiran said...

தானே எழுதி, பின் வேண்டுமென்றால் திருத்தி, அல்லது அழித்து அல்லது வேண்டுமென்றால் மீண்டும் இடப்படும் கோட்டிற்கு என்ன பெயர் வைத்தால் தான் என்ன?

ko.punniavan said...

நன்றி சுதன், பிரான்சிஸ்.

Marutha Meenachy said...


ஏற்கெனவே படித்த கதை ஆனால் முடிவில் மாற்றம். எழுத்தாளரை ஏசாமல் இருக்க முடியவில்லை.பள்ளி விடுமுறையில் மகிழ்ச்சியாகத்தான் எழுத்தாளரின் வலைப்பதிவைத் திறந்தேன். 'விசில்' சிறுகதையின் முடிவில் அவர் மேல் பழைய கோபம் இருந்தது.இருந்தாலும் என்ன செய்வது .உண்மைதானே.பெற்றோரை கவனிக்காமல் தவறவிட்ட,தவறவிடும் மானுடனுக்கு இக்கதை ஒரு சூடு.இரண்டு மணி நேரம் தன்னம்பிக்கை பயிற்சிக்கு சென்று வந்தவன் பெறாத அனுபவத்தை ஒரு சிறுகதையில் பெற முடியும் என்பதற்கு விசில் ஓரு மாதிரியே.மன்னிக்கவும் தொடர்ந்து எழுத நேரமில்லை.போகவேண்டும்........என் அப்பாவைப் பார்த்து ஒரு வாரமாகிவிட்டது.