Skip to main content

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது.

மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று வரவேற்கிறார்கள்.  முன்பு இருந்தவர்கள் டியூட்டி முடிந்து கோல்ட் கோஸ்ட்டில்  இறங்கிவிட்டார்கள். நாங்களோ விடிந்தும் கசங்கிய மனிதர்களாய் களைத்துக் கிடக்கிறோம்.
அங்கிருந்து மூன்று மணி நேரப் பயணம் நியூ சிலாந்துக்கு. ஆக்லாந்தில் தரை இறங்கியபோது மாலை மணி நான்கு. புதிய நிலம், புதிய வானம், புதிய காற்று கைவிரித்து எங்களை அணைத்துக் கொள்கிறது.
என் மருமகன்தான் எல்லா ஏற்பாடுகளையும் இணையம் வழி செய்து முடித்திருந்தார். வாகன வாடகை, விடுதி (அப்பார்ட்மெண்ட்) வாடகை  இதில் அடங்கும். விமான நிலையத்திலேயே வேன் காத்திருந்தது. விமான நிலையத்தில் உள்ள லூசி கம்பனி கிளை அலுவலகத்தில் வேன் சாவியைப் பெற்றுக்கொண்டு கார் நிறுத்தகம் சென்று வேனைக் கண்டுபிடித்து விடுதியை நோக்கிப் பயணமானோம்.

வேனை எடுக்குமுன் அதன் எல்லாப் பகுதிகளையும் தன் கைப்பேசி வழி படம் எடுத்துக் கொண்டார். ஏனெனில் நாங்கள்  அதனை உபயோகிக்கும் இந்த பதினோரு நாட்களில் ஏதும் புதிய பழுதுகள் இருக்கக் கூடாது. இருந்தால்  அதற்கான நஷ்ட ஈடைக் கொடுத்தாக வேண்டும். எனவே நாங்கள் வேனை எடுக்கும் போது எப்படி இருந்தது என்பதை உறுதி செய்யவே இந்த முன்னேற்பாடு. எங்களுக்கு முன்னர் இதனை உபயோகப் படுத்தியவர்கள் பழுதாக்கி அது, உரிமையாலர் கண்ணுக்குப் படாமல் இருந்தால் ஆப்பு எங்களுக்குத்தான்.
விடுதியைக் கண்டுபிடிக்க பெரிய சிரமம் ஏதுமில்லை. இருக்கவே இருக்கிறது இடம் தேடித் தரும் மேஜிக் கருவி ஜி.பி.எஸ். அந்தக் கருவிக்கும் தனி வாடகைப் பணம் செலுத்தியாக வேண்டும். Wifi வசதி கொண்ட ஜிபிஸ் கருவி அது.. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவை மீறினால்  கூடுதல்   கட்டணம் உண்டு..
 விடுதியில் மூன்று இரண்டிரண்டு படுக்கை கொண்ட அறைகள். நாங்கள் மொத்தம் ஏழு பேர். என் மகள் மருமகன், அவர்களின்கடைசி பையன் சூர்யா, என் மருமகனின் நண்பர் சேது அவர் மனைவி செல்வி, என் மனைவி, நான்.  குளித்து முடித்துவிட்டு ஆக்லாந்து பட்டணத்தில் உணவுக் கடையை தேட ஆரம்பித்தோம். எங்கள் கெட்ட நேரம் ஒரு இந்தியர் உணவுக் கடை தென்பட்டது. சோறு கண்டால்தான் நமக்கு சொர்க்கம் ஆயிற்றே. சரி ஒரு தட்டு கோழிச்சோறு கேட்டு பசியோடு உட்கார்ந்தால் சாப்பிட முடியவில்லை. என் மகள் அதனைப் பார்த்துவிட்டு வேறு உணவுக் கடையைத் தேடிப் போய்விட்டாள். பயணக் களைப்பு இரவில் நெடு நேரம் சுற்றும் ஆவல் இல்லை. உணவுக் கடை தேடி அலைந்தார்கள். என் மருமகன் ஒரு பக்கம் தேட நானும் என் மனைவியும் பரிமாறப்பட்ட உணவில் வசமாய் மாட்டிக் கொண்டோம். இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டோம். நான் வலிந்து வாயில் போட்டுக் கொண்டிருந்தேன். அவளை எப்படியாவது சப்பிட வைத்துவிட வேண்டுமென்று.
 இரண்டு வாய் சாப்பிட்டதும் என் மனைவி எனக்கு வேண்டாம் பிடிக்கவில்லை என்றாள். அவளுக்குப் பிடிக்கவில்லை என்றால் கொடும் பசியாக இருந்தாலும் அமுதம் கூட அருந்த மாட்டாள்! எனக்குக் கோபம் வர ஆரம்பித்தது.

இந்த ஒரு தட்டு உணவின் விலை நம்மூர் பணத்துக்கு அறுபது ரிங்கிட். இப்படியா அனாமத்தாய் கொட்டுவது? என்றேன் .
நீங்களே சாப்பிடுங்கள் என்றாள்.
அவ்வளவையும் சாப்பிட்டு முடிப்பதற்கு நான் என்ன பீமனா? நீதானே வேண்டுமென்றாய் உட்கார்ந்து சாப்பிடு என்றேன்.
எனக்கு வேண்டாமென்று பிடிவாதம் செய்தால்.
சரி எனக்கும் வேண்டாம். நான் சாப்பிடும்    மனநிலையைக் கெடுத்துவிட்டாய், வேண்டாம் வா கிளம்பலாம் என்றேன்.
 இப்படி அவிச்சி கொட்டுனா எப்படி திங்கிறது? என்றாள்.
நீதானே வேண்டும் என்று கேட்டாய்? என்றேன்.
இந்த ஊர் மாடுதான் இதைத் தின்னும் என்றாள்.
மாட்டைப் பழிக்காதே. மாட்டுக்கு பிரத்தியேக புல் வைக்கோல் தருவார்கள் என்றேன்.
அப்ப்டின்னா நீங்க சாப்பிடுங்க என்றாள்.
ஒருநாள் முடியப் போகிறது இன்னும் சண்டைவரவில்லையே. சண்டை போடவில்லையென்றால் அந்த நாள் எங்களுக்கு முழுமையடைவதில்லையே! இது புதிய மண்ணில் முதல் அத்தியாயம்!
சரி இன்னொரு அறுபது ரிங்கிட்டுக்கு செலவு வரப் போகிறது, என்று நினைத்துக் கொண்டே உணவை பார்சல் செய்துகொண்டு வெளியே வந்தோம்.. கடைக்கு வெளியே வந்து என் குழுவைத் தேடினோம். என் மகள் மெக்டானல்டு கடைக்குள் இருந்தார். என் மருமகனும் சேதுவும் சீன உணவுக் கடையைத் தேடிப்போய் சீன உணவை வாங்கி வந்தனர். எல்லாரும் மெக்டானல்டு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்டோம்.
 இனிமே இந்த இந்தியக் கடைப் பக்கமே வரக்கூடாது என்று சொன்னாள் மனைவி. எதற்கும் கடைப் பெயரை நினைவு வைத்துக் கொள்ளவேண்டும் என்று பெயர்ப் பலகையப் பார்த்தோம். ‘அவிச்சி’ என்று எழுதியிருந்தது. தப்பு நம் மீதுதான். அவன் அவிச்சிப் போடப் போவதை   குறியீட்டு மொழியில் நம்மை எச்சரிக்கை  செய்தும் நாம் உஷாராய் இருக்கவில்லையே என்றேன்.
உணவின் பொருட்டு சிக்கல் உண்டானதும், அதனை  எங்கள் பயண நாட்களுக்கான   ஒரு மோசமான சமிக்ஞையாகக் கருதினோம்.  எப்படியாவது சமாளித்தாக வேண்டும்.
தொடரும்.....

Comments

Popular posts from this blog

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும்காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம்.

ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர்
ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான் வந்திருப்பதைக…

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …