Skip to main content
நாள் : 8/13/2005 9:41:48 PM, -வெங்கடேஷ்


பிரிவுகள்

தமிழ்க் கவிதையில் வித்தியாசமான முயற்சிகள் சாதனைகள் எப்போதும் உண்டு. முற்றிலும் முரண்பட்ட ஒன்றைச் சொல்லி, அதன் மூலம் மூலப்பொருளை உணர்த்தும் வல்லமை தமிழ்க் கவிகளுக்கு உண்டு. இன்று நாம் பார்க்கப் போகும் கவிதை, கவிஞர் கலாப்ரியா எழுதிய பிரிவுகள் என்ற கவிதை:





பிரிவுகள்



நாளை இந்தக் குளத்தில்

நீர் வந்து விடும்

இதன் ஊடே

ஊர்ந்து நடந்து

ஓடிச் செல்லும்

வண்டித் தடங்களை

இனி காண முடியாது

இன்று புல்லைத்

தின்று கொண்டிருக்கும்

ஆடு, நாளை

அந்த இடத்தை

வெறுமையுடன்

சந்திக்கும்

மேலே பறக்கும்

கழுகின் நிழல்

கீழே

கட்டாந்தரையில்

பறப்பதை

நாளை பார்க்க முடியாது

இந்தக் குளத்தில் நாளை

நீர் வந்து விடும்



மிக அழகான கவிதை. குளத்தில் நீர் வருவது என்பது கிராமம் முழுவதற்குமே மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. குளத்தில் நீர் வந்து நிறையுமானால், குடிநீர், விவசாயம், அதன் மூலம் கிராம வளம் எல்லாம் பெருகும். உற்சாகம் பெருகும். செயல்பாடுகள் கூடும். வேலைகள் கூடும். உற்பத்தி கூடும்.



ஆனால், கலாப்ரியா கண்ணில் வேறொன்று படுகிறது. இது நாள் வரை நீர் வராமல் இருந்தபோது, அதே குளம் எதெதற்கெல்லாம் பயன்பட்டதோ, அவையெல்லாம் இனி நடைபெற முடியாமல் போய்விடுமே என்ற வருத்தம் அவருக்குத் தென்படுகிறது. என்ன சொல்கிறார் பாருங்கள் : வண்டித் தடங்களை இனி காண முடியாது, புல் மேய்ந்த ஆடு இனி வெறுமையைச் சந்திக்கும், மேலே பறக்கும் கழுகின் நிழலைப் பார்க்க முடியாது. இது ஒரு வகை வலிந்து உருவாக்கப்படும் முரண் அணி.



உண்மையில் கவிக்கு அந்தக் குளத்தில் நீர் வருவதில் மகிழ்ச்சி இல்லையா? அதெப்படி இல்லாமல் இருக்கும். நிச்சயம் உண்டுதான். அதுதான் வளர்ச்சி தரப்போவது. அதனால்தான், கவிதையின் முதலிலும் கடைசியிலும் குளத்தில் நீர் வரப்போவதை அழுத்தமாகச் சொல்கிறார். ஆனால், இன்றுவரை, அதே குளத்தைப் பயன்படுத்திக்கொண்டிக்கும் பிறர் அதனால் பாதிக்கப்படுவார்களே என்பது ஒரு சின்ன கரிசனம்.



இதை வேறு மாதிரியாகவும் வாசிக்கலாம். அதுநாள் வரை மழையே இல்லாமல், நீர் வரத்தே இல்லாமல் பல ஆண்டுகளாக, இப்படிப்பட்ட வண்டித்தடம் உருவாதல், ஆடு புல் மேய்தல், கழுகின் நிழல் படிதல் போன்ற விஷயங்கள் ஏற்பட்டுவிட்டன. அதுவே இயல்பு என்று நினைக்கும் அளவுக்கு, நீர் பஞ்சம் அங்கே இருந்திருக்கவேண்டும். சட்டென, நாளை இக்குளத்தில் நீர் வருமானால், அதுவரை இருந்த இயல்பு பாதிக்கப்படுமே என்ற கரிசனத்தைக் இக்கவிதை சொல்வதாகவும் கொள்ளலாம். நீர் பெருகி பல ஆண்டுகள் ஆயிற்று என்பதற்கு கவி தரும் ஒரு முக்கிய ஆதாரம், வண்டித்தடம் உருவாதல். அவ்வளவு சீக்கிரத்தில் வண்டித்தடம் உருவாகிட முடியாது. பல ஆண்டுகள் பயன்பாட்டிலேயே வண்டித்தடம் உருவாக முடியும்.



இக்கவிதையை நீர் வரத்தின் மகிழ்ச்சியாகவும், இருப்பவைகள் இழக்கப் போகும் இயல்பைச் சொல்வதாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு கவிதை இப்படி பல அடுக்கு அர்த்ததைத் தன்னுள் கொண்டிருப்பது அபூர்வமானது. இக்கவிதை அப்படிப்பட்ட ஒரு அபூர்வம்.

Comments

ko.punniavan said…
வணக்கம். தங்கள் அகப்பக்கம் கண்டேன். மிகச் சிறப்பு. தாங்கள் எழுதியிருக்கும் கவிதைகள் மிகவும் அருமையாக இருந்தன. தொடரட்டும் தங்கள்ச் சேவை.



நன்றி.


அன்புடன்,
முனியாண்டி ராஜ்.
ko.punniavan said…
உங்களை என் அகப்பக்கத்துக்கு வரவேற்கிறேன்.பாராட்டுக்கு நன்றி.கவிதைகளை உள்முகமாப்பார்த்து விமர்சித்தால் மகிழ்வேன்.
ko.punniavan said…
The write up "Valvodu Kaikorthu varum valigal" was very touching. The story is similar to an incident that happened in my family. It brought tears to my eyes.

Wish you all the best and looking forward for more of your writings...

Regards,
Yogita Kanesin

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...