Skip to main content

அறிவுக்கு எட்டா ஆழிக்கூத்து

அக்டோபஸ் கவிதைகளும் ஆழ்ந்த கவித்துவமும்.




           2004 டிசம்பர் 26ஆம் நாள் யாரும் எளிதில் மறந்துவிட முடியாத ஒருநாள். ஆழிக்கூத்து அரங்கேறி ஆயிராமாயிரம் உயிரைக் காவு கொண்ட கருப்புநாள். நான் மயிரிழையில் தப்பிப்பிழைத்த நாள். அன்று நானும் மனைவியும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சுற்றுலா நண்பர்கள் 38 பேரும் சென்னையிலிருந்து ஊர் திரும்ப ஆயத்திமாகிக்கொண்டிருக்கிறோம். டிசம்பர் 25ஆம் நாளை முடிவுக்குக் கொண்டுவரும் முன்னர் கடைசி கடைசி என்று பொருட்கள் வாங்க பாண்டி பஜாரில் இருக்கும்போதே மறுநாள் நிகழவிருக்கும் ஊழிக்கூத்து அசம்பவிதத்துக்கான அறிகுறிகள் அப்பொழுது  நிகழ்ந்தது. என் மனைவி சேலை துணிமணிகள் வாங்க வேறு திசைக்கு போய்விட்டிருந்தாள். நானும் சில நண்பர்களும் நூல்கள் வாங்கக் கிளம்பிவிட்டிருந்தோம். இப்படி ஆளாளுக்கு ஒரு திசையில் பிரிந்து கிடக்கிறோம். கடையைத் தேடி அலைந்த நேரத்தில் நாங்கள் அலைந்து திரிந்துகொண்டிருக்கும் சாலையில் ஆயிரக்கணக்கான  மனிதக்கூட்டம் திமு திமுவென்று எங்களை நோக்கி ஓடிவருகிறது. பேரலை புரண்டு வருவது போன்ற ஆரவாரம். மனிதக்கூச்சல் மரணக்கூச்சலுக்கு ஈடாக ஒலிக்கிறது. ஓடமுடியாதவர்கள் கூட்டத்தில் சிக்கி மிதிபடும் ஆபத்தான நெரிசல். அப்போது கடைகளின் இரும்புக்கதவுகள் இழுத்து அடைக்கபடுகின்றன. அதனை மேலிருந்து இழுக்கும்போதும் , அது சிமிந்துத்தரையை தடார் என்று தரை தட்டும் போதும் அதன் சப்தம் பீதியை உண்டுபண்ணுகிறது. கடையொன்றில் பொருட்களைப் பார்த்துக்கொண்டிருந்த போது கரிசனமின்றி  வெளியே விரட்டிவிட்டு கதவுகளை இழுத்து மூடுகிறார்கள். என்ன ஏதென்று விசாரித்தாலும் பதிலிறுக்க யாரும் தயாராக இல்லை. அவரவர் தங்கள் உயிரைக் காப்பாறுவதற்கான அவசர ஏற்பாட்டில் பதற்றம் நிறைந்து காணப்படுகிறார்கள்.  எங்களை நெருங்கி வரும் மனிதக்கூட்டமும் , அறிவிப்பில்லாமல் அடைக்கப்படும் கதவுகளும் , மரணக்கூச்சலும், பீதி நிறைந்த முகங்களும் , குழந்தைகளை அணைத்துக்கொண்டு ஒதுங்கும் மனிதர்களும் திடீரென்று ஒரு இயற்கைப்பேரிடர் நடந்து விட்டதான சூழலை நினைவு படுத்தியது. பெருமழையில்லை,  பேய்க்காற்றில்லை, திகு திகுவென எரியும் தீயின் அறிகுறிகூட இல்லை, பூகம்பம் இல்லை, ஆனால் மக்களின் மகிழ்ச்சி சூழல் திடீரெனத் தலைகீழான தோற்றம் காண்கிறது! எல்லாம் கடந்து போகும் என்று கீதை சொல்கிறது ஆனால் கடந்து போவதற்கு முன்பான தருணம்தான் சொல்லொணா துயரத்துக்குள்ளாக்குகிறது. வதைப்படுத்திவிட்டுத்தான் கடக்கிறது.
     ஆளுக்கொரு பக்கமாய் மக்கள் நெரிசலில் சிதறிக்கிடக்கிறோம். யாருக்கு என்ன நடந்திருக்கிறதோ என்ற தீராத பதை பதைப்பு மிகுந்த தருணத்தை எதிர்கொண்டு நிற்கிறோம் !
    “என்னையா நடக்கிறது இங்கே? சொல்லித்தொலையுங்களேன்?” என்று உரக்கக் கத்திவிட்டேன், பொறுமை இழந்து!
    “ முடிஞ்சா உயிர காப்பாத்திக்குங்க , கடைய ஒடைப்பானுங்க, கல்லடியில் மண்டை ஒடையும், எங்கேயாவது ஓடி ஒளிஞ்சிடுங்க” என்றார் ஒருவர். எது பதுங்குவதற்கு உகந்த இடம் என்பது பழக்கமில்லா இடத்தில் எப்படிக் கண்டுபிடிப்பது?
    “ ஏன்? ஏன்? எதுக்கு?” என்ற அவசர்கால வினாக்களுக்கு விடைகாணும் கேட்டுக்கொண்டிருந்த போது சொன்னவர் உயிரை காப்பாற்ற ஓடலானார். அப்போது  அந்தப் பெருங்கூட்டம் எங்களை நெருங்கிக்கொண்டிருந்தது.
    “ கலைஞர் எறந்துட்டாராம், அதான் கலவரம் வரப்போவுது,” என்றார் ஒருவர்.
    “அதுக்கு ஏன்யா கலவரம் வரணும்?” என்ற வெள்ளந்தியான எங்கள் கேள்விக்கு விடை சொல்லும் அளவுக்கு அப்போது யாருக்கும் பொறுமையில்லை.’ஒடினான் ஓடினான் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினான்’ என்ற கலைஞரின் பராசக்தி வசனம் எவ்வளவு அழகாய்ப் பொருந்துகிறது இங்கே!
  அச்செய்தி வெறும் புரளிதான் என்றாலும்  அது மறுநாளின் நிகழவிருக்கும் ஆழித் தாண்டவத்தின் அறிகுறி என்று யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
  26ஆம் நாள் அதிகாலையிலேயே நாங்கள் நான்கைந்து பேர் மெரினா கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்குச் செல்வதாய் இருந்தது. ஆனால் எங்கள் நல்ல நேர ஆழ்ந்த களைப்பில் ஆழ்ந்து தூங்கிவிட்டிருந்தோம்!
  அதிகாலை மணி ஏழுக்கு என் மனைவி மிகுந்த மனக்கலவரத்தோடு என்னை எழுப்புகிறாள். அவள் குரல் கலவரத்தோடு ஒலித்தது. நான் எழ மறுக்கிறேன்.

“எழுந்திருங்க ஹோட்டல் ஆடுது,” என்றாள். கண் விழித்தவன் அதனை அப்போது உணர்கிறேன். கண்ணுக்குத் தெரியாதவர் யாரோ  ஆட்டிவிட்டது போல ஆடுகிறது கட்டிலும். கிரீச்சிட்டு மேசை நகர்கிறது. மேசை மேலிருந்த கண்ணாடிக் கோப்பைகள், புத்தகங்கள் சரிந்து விழுகின்றன. தொலைகாட்சியைத் திறந்து பார்க்கிறேன், மெரினாவின் ஆழிப்பேரலையில் அடித்துச்சென்று மறைந்துபோன சடலங்களின் எண்ணிக்கையை அறிவித்த வண்ணமிருக்கிறது. அந்த எண்ணிக்கை வினாடிக்கு வினாடி விஷம் போல எகிருகிறது. இனி விடுதிக்குள் இருப்பது ஆபத்து என்று எண்ணி கட்டிய துணியோடு பரபரப்போடு கீழே வருகிறோம். அங்கே விடுதியில் தங்கியிருந்த முக்கால்வாசிப்பேர் ஏற்கனவே தப்பித்து இறங்கிவிட்டிருந்தார்கள்.
 கீழே நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நகர்ந்து வேறு திசைக்குத் திரும்பி நிற்கின்றன. ஆட்டோக்கள் புரண்டு கிடக்கின்றன. மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. பேயறைந்த முகங்களில் பதற்றம் குடிகொண்டுவிட்டிருந்தது. சாலையில் வாகன நடமாட்டம் குறைந்திருந்தது. காப்பிக்கும் டீக்கும் அலையும் மனிதர்கள் அடுத்த தகவலுக்காக ஒருவர் மற்றவரை எதிர்பார்த்தபடி இருந்தனர். மரண வாடையை மனித முகத்திலும், உதறலைப் பேச்சிலும் உணரமுடிந்தது. அந்தக் காலை பிரம்ம முகூர்த்தமாக இல்லை. கூற்றுவனின் ‘முகூர்த்த’மாகவே விடிந்துகொண்டிருந்தது. ஒரு பிரளயத்தின் நிழலை மட்டுமே பார்த்த எங்களுக்குள் பதைபதைப்பு கூடிக்கொண்டிருந்தத்து. பிரளயத்தின் அகன்ற கூரிய நகங்கொண்ட பேய்க்கரங்கள் கடலோர மனிதர்களை கடலுக்குள் கவ்விச்சென்று கொன்றுவிட்டிருந்தது. யார் யார் இறந்தார்கள் என்ற மர்மத்தை கடலலை தனக்குள் புதைத்து ரகசியமாய் வைத்துக்கொண்டது. ஒரு துன்பியல் நாடகத்தை வெற்றிகரமாய் அரங்கேற்றிவிட்டு பழையபடி தாலாட்டுக்கு ஆடும் தூளியைப்போல அலைகள் தன் ஆட்டத்தை ஆடத்தைத் துவங்கிவிட்டிருந்தது.
உலகில் இயற்கைப் பேரிடர்கள் மனிதனைப் பழிவாங்கியபடி இருக்கிறது. அவனைத் தின்று தீர்ப்பதற்கு மிகுந்த வேட்கையோடு தன் அரக்க சுபாவவத்தை அரங்கேற்றியவண்ணமிருக்கிறது . 2004 காட்டாறு வேகத்தில் தொடங்கிய அதன் ஆர்ப்பாட்டம் விட்டு விட்டு விரட்டிக்கொண்டே இருக்கிறது மனிதர்களையும், அவன் உடமைகளையும். சமீபத்தில் ஆயிரமாயிரம் ஜப்பானியர்களை உயிரோடு கடலுக்குள் இழுத்துக்கொண்டுபோய் வீசிவிட்டு திரும்பிய பேரலைகள் எப்போதும் போலவே குற்றமற்ற பாவனையில் கரையில் களிநடம் புரிவதைப் பார்க்கிறோம். மனித அறிவும் அறிவியலும் அறிந்துகொள்ள முடியாத புதிரை மனித மூளையின் சவாலுக்கு விட்டுச்சென்ற சமுத்திரத்தை எப்படிச் சகிப்பது?. மரணம் ஒரு நள்ளிரவின் மனித கவனமிழந்த பொழுதில், ஒரு கைதேர்ந்த கள்வனைப்போல சந்தடியின்றி மனித உயிரை அபகரிக்க காத்துக்கொண்டே இருக்கிறது.
    எத்தனை மரணங்கள் அவன் கண் முன்னே நிகழ்ந்தால் என்ன! தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்க அவன் தான் உயிர்வாழும் பூமிக்கே தீராத கேடு  விளைவித்தபடியே இருக்கிறான். தன் சொந்தச் சந்ததிக்குக் கூட எதையும் விட்டு வைப்பதாயில்லை. ஆம் மனிதன் ஒரு சுயநல மிருகம்!  பின் விளைவுகள் பற்றி துளியேனும் சிந்திப்பதில்லை!
ந. பச்சைபாலன் சொல்கிறார் ஆழி ஆடிமுடித்துவிட்ட ஆர்ப்பாட்டத்தை இப்படி,

அற்றை நாளில் வள்ளுவரும்
நற்றிணைப் பாடலில்
கபிலரும் மொழிந்தனர்
நீரின்றி அமையா உலகு
இற்றை நாளில்
கடல்பொங்கி மொழிந்தது
நீரின்றி அழியா வாழ்வு

ஆவதும் பெண்ணால்
அழிவதும் பெண்ணால்
பொய்யாய்ப் போனது முதுமொழி
ஆவதும் நீரால்
அழிவதும் நீரால்
மெய்யாய் ஆனது நிகழ்மொழி

நீலிக்கண்ணீர் முதலைக்கண்ணீர்
எல்லாம் காய்ந்து போய்விடும்
இது ஆழியில் எழுந்த
ஊழிக்கண்ணீர்
உயிர்களைத் தின்றும்
உறுபொருள் சிதைத்தும்
அசுரப்பசியைத் தீர்க்கும்

வாழ்வோ விளையாட்டோ
எல்லை கடந்தால் என்றும்
தீராத தொல்லைதான்
நீர் கரை உடைத்து
எல்லை கடந்தால்
தீராத இடும்பைதான்

உதிரத்தைப் பாலாக்கி
உழைப்பையே எருவாக்கி
ஊனுருக்கி சேய் வளர்ப்பாள்
அந்தத் தாயைப் பழிக்கவில்லை

எண்ணிமாளா உயிர்களை
தன்னிலே புதைத்துவிட்டு
எஞ்சிய உயிர்களை
கண்ணீரில் நனையவிட்ட
தண்ணீரைப் பழிக்கின்றேன்

பச்சைபாலனின் கவிதைமொழியில் இருள் இல்லை. சாதாரண வாசகனுக்கும் செய்தி போய்ச்சேரவேண்டும் என்ற கரிசனம் மிகுந்த மொழி பச்சைபாலனுடையது. வாசகனின் தோள்மேல் கைபோட்டு  காதுக்கறுகே போய் கவிதை சொல்லும் பண்பாடு அவருடையது. புரியும் மொழியில் எழுதுவதால் அதன் பயணம் வாசகனை நோக்கிய நீண்ட நெடும் பயணமாக இருக்கிறது. இருண்மை மொழிக்கவிதை இன்றைக்கு நிறைய எழுதப்படுகின்றன. அதுனுள் முக்குளித்து முத்தெடுக்க வேண்டி அவை தீவிர வாசகனுக்காக படைக்கப்படுபவை. இப்படியான மொழிக்குள் தன்னை ஒப்புக்கொடுத்துவிடாமல்  இறங்கி வருபவர் நம்ம பச்சை.

Comments

. said…
எதை விதைக்கிறமோ, அதைத்தானே அறுவடை செய்ய இயலும் ஐயா..
ஆமாம்..ஐயா இயற்கையை எதற்கும் குற்றம் சொல்லமுடியாது..!!.
சுயநல மனிதர்களின் நடவடிக்கைகள்தான் இயற்கையின் சீற்றங்களுக்குக் காரணமாக இருக்கிறது.
இயற்கை தன் எதிர்ப்பை பல விதங்களில் காட்டிக் கொண்டு தான் இருக்கிறது.
நாம்தான் உணர மறுக்கிறோம்
. said…
((சிந்திக்க சில வரிகள்))
கால்நடைகள் நடக்கும் பாதையில் புல் பூண்டுகள் வளர்வதையும் நாம் தடம் பதித்த பாதையில் புல் பூண்டு ஒழிவதையும் நான் கண்டிருக்கிறேன்.....இயற்கை என்கின்ற பொக்கிஷத்தை அழிக்கும் இப்பிறவி ஓர் அரிய பிறவியா? காற்றும் நீரும் மாசுபடுத்தி ஓசோன் படலத்தில் ஓட்டை உண்டாக்கிய இப்பிறவி ஓர் அரிய பிறவியா?:'( :'(

இயற்கையை அழித்து பத்து தலைமுறைக்குச் சொத்து சேர்க்க துடிக்கும் மனிதனே! உன் ஆயுட்காலத்தை உன்னால் கணிக்க முடியுமா? உன் சந்ததி வசதியாக வாழ இயற்கையை அழிக்க நீ யார்? நீயும் ஒரு இயற்கை பிறவி என்பதை ஏன் மறந்தாய்? ஆறாவது அறிவை கட்டவிழ்த்து விட்டு அது செல்லும் வழிக்கெல்லாம் நாம் செயலை செய்ய முற்படுவதன் விளைவுதானோ இதுபோன்ற இயற்கை சீற்றங்கள் விளைவிக்கும் காரணிகளாக போனது. இதைத்தான் பேராசை பேரழிவு என்கின்றனறோ?

இயற்கைக்கு மனிதன் நண்பனாக வாழ வேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை வைப்போம் என்று எத்தனையோ காட்டுக் கத்தல் கத்தினாலும் மனிதன் அவைகளை அழித்து விற்கத்தான் தலைப்படுகிறானே தவிர இயற்கையை காப்பாற்றுவதாக தெரியவில்லை.....விளைவு இயற்கை சீற்றங்கள்

மரத்தை மரிக்க செய்து
மனையை அழகுபடுத்தி
கொண்டிருக்கும் மனிதா.!

நீ அழித்து கொண்டிருப்பது
மரவளத்தை அல்ல
நம் மனிதவளத்தை.!!!

நச்சுப்புகையால்
வானில் துளைஇட்டு
கொண்டிருக்கும் மனிதா.!

நீ மாசு படுத்தி கொண்டிருப்பது
காற்றை அல்ல
நம் சுவாசத்தை..!!

வீடு கட்ட ஆசை பட்டு
விளை நிலங்களை வீணாக்கி
கொண்டிருக்கும் மனிதா!

நீ குறைத்து கொண்டிருப்பது
விளை நிலங்களை அல்ல
நம் பசியை.!!


இதர வசதிகளோடு வாழ
இயற்கையை அழித்து
கொண்டிருக்கும் மனிதா

நீ அழித்து கொண்டிருப்பது
இயற்கையை அல்ல..???????
ko.punniavan said…
வணக்கம் தமிழன்,
தீதும் நன்றும் பிறர் தர வாரா. எவ்வளவு சத்தியமான மொழி இது. நம் குழந்தைகளுக்கு, பேரப்பிள்ளைகளுக்கு விட்டுச்செல்லக்கூடிய அரிய செல்வம் இம்மண். இதனை மாசு படுத்தோவோர் எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு உளை வைக்கிறோம் என்றாகிவிடுகிறது. நன்றி இடுகைக்கு.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...