(எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு
இக்கவிதையைக் சமர்ப்பிக்கிறேன். )

  -63

எனக்கின்று -63
நீங்கள் வாழ்த்துக்கூறி
என்னை மீட்டுருவாக்கியதால்

என்னைச்சுற்றி
ஆனந்த ஒளிவட்டம்
என்னாளும் மிதந்திருப்பதால்

என் வெற்றி இன்னதென்று
என் பிரிய எதிரிகள்
இனங்காட்டுவதால்

என்னைச் சூழ்ந்த காற்று
தீபத்தை வேண்டுமானால்
தீர்த்துக் கட்டலாம்
தீயை அல்லவே... என்பதால்

என் நரை
என் வரையறை
இதுவென்று வழி சொல்வதால்
அது என்னை மென்மேலும்
வெள்ளையாக்குவதால்

என் முதுமை
என் இளமையிலிருந்தே
பிறந்ததால்
என் அனுபவம்
கடவுளாகி
என்னைக் கைப்பிடித்து
இட்டுச்செல்வதால்

தட்டுகின்ற கதவுகள்
இன்றில்லையென்றாலும்
என்றாவது திறந்தே
தீரும் என்பதால்

கர்ணன் தொடையைத்
துளைத்த
கவலை வண்டு
என் கவனத்துக்கு அப்பால்
இருப்பதால்

இந்தக் கவிதைக்கான
கரு
இன்று என்னிலிருந்து
வித்தானதால்

மரணம்
மறுபிறப்புக்கான
வாசலைத் திறந்துவிட்டதால்
இன்று எனக்கு
மைனஸ் 63 தானே?.

Comments

KAVIN said…
தங்கள் கவிதை மிக அருமையாக இருக்கிறது......காலம் கிழித்துப்போடும் வயது, கவிதையாய் மிளிரும்போது தனி அழகுதான்.
KAVIN said…
ாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான்....அதில் வெற்றிகரமாக நீந்தி வருபவனே வாழ்வை வெல்கிறான்...மற்றவன் மூழ்கிச் சாகிறான்..
KAVIN said…
தங்கள் கவிதை மிக அழகாக, அருமையாக உள்ளது. காலம் கிழித்துப் போடும் வயது, கவிதையாய் உருவாகும்போத், அதன் அழகே தனிதான்..
உண்மையில் கழித்தல் 63'றேதான்.