Skip to main content

தொடர் 6. பனிப்பொழிவில் 10 நாட்கள்























        சண்டிகார் ஜாஹிர் ஹுசின் ரோஜா நந்தவனத்தில்

 6.       மறுநாள் காலையில் சண்டிகாரில் பிரசித்திபெற்ற ரோஜா நந்தவனத்துக்கு அழைத்துச்சென்றார். அது ஒரு உல்லாசப் பூங்கா. முன்னால் இந்திய அதிபர் சாஹிர் உசேன் நினைவாக எழுப்பப்பட்ட பூந்தோட்டம் அது. மலர்களில் ரோஜாவுக்கு எப்போதுமே மாறாத மௌசு உண்டு. ரோஜாத்தோட்டம் தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட எனக்கு ஒரு பிரமிப்பு காத்திருந்தது. ஏறத்தாழ நாற்பத்திரண்டு ஏக்கர் நிலத்தில் வெறும் ரோஜா வகைகளே நடப்பட்டிருந்தன. 1700 வகை ரோஜாப்பூக்கள் என்று விளக்கப்பலகையில் எழுதியிருந்தது. 1700 வகையில் நான் ஒரு மூன்று வகை ரோஜாவைக்கூட என் வாழ்நாளில்  பார்த்திருக்கமாட்டேன். பல வண்ணங்களில் பூத்துக்கிடந்தன. சிவப்பில் , இளஞ்சிவப்பில், ரத்தச்சிவப்பில். ஊதாவில் மஞ்சளில் வெள்ளையில், பழுப்பில் என் சொல்லி விளக்க முடியாத பல வண்ணத்தில் பல வடிவத்திலும் நம்மை ஈர்த்தன. சில நம் இரண்டு கைகளையும் விரித்தால் வரும் அளவில் பூக்கள் விரிந்து சிரித்தன. அதனைக் காவல்காக்க பராமறிக்க சில பணியாட்கள் என்னேரமும் கடமையில் இருந்தார்கள். காலை நடை பிரியர்கள் ரோஜாவை ரசித்துக்கொண்டே நடக்கும் பரவசம் வேறெங்கும் கிடைக்குமா என்று தெரியவில்லை.1700 வகையில் உலக்கத்தில் வேறெங்கும் கிடைக்காத சில அரிய வகை ரோஜாக்களைப் பார்க்க முடிந்தது. எல்லா வகையயையும் எங்கள் கேமராவுக்குள் கொண்டு வர இயலாது. அதன் நுண் நினைவு ‘சிப்’பின் கொள்ளளவு அங்கேயே தீர்ந்துவிடும். இன்னும் நிறைய இடம் போகவேண்டியிருந்தது. நான் வீட்டில் பாட்டரியை சார்ஜ் செய்ததோடு வந்துவிட்டேன். சார்ஜரைக் கொண்டு வரவில்லை. கேமராவுக்கு உயிருருந்தால் இதனைப்பார்ர்த்தவுடன் சார்ஜாகியிருக்கும்!
      இந்த ரோஜாக்கூட்டத்தைப் பார்த்தவுடன் எனக்கு மிக பிரசித்திபெற்ற கவிதை நினைவுக்குள் மலர்ந்தது.
       ஒரு ரோஜா என்பது
       ஒரு ரோஜா என்பது
       ஒரு ரோஜாதான்.
       முதலில் வாசிக்கும்போது ஒன்றையுமே உள்வாங்கிக்கொள்ள முடியாது. புரிந்துகொண்டால் அதன் படிம வியாபகம் வியப்பபை உண்டு பண்ணும்.
       கவிஞர்கள் ரோஜாவை எப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள். பெண்ணின் முகத்தோடு உவமை கொள்கிறார்கள். குழந்தையின் உள்ளங்கை நிறத்தோடு ஒப்புவமை கூறுகிறார்கள். கோபத்தின் கனலாக அடையாளப்படுத்துகிறார்கள். ரோஜாவை தன் கவித்துவத்துக்குள் கொண்டு வராத கவிஞர்கள் மிகக்குறைவாகத்தான் இருப்பார்கள். காதலிக்கும் தருணங்களில் ரோஜா படும் பாடிருக்கிறதே? அடேயப்பா! ரோஜாவை அழகுச் சாதனமாக ஆக்கிக்கொள்ளும் பெண்கள் உள்ளபடியே மேலும் அழகாகக் காட்சி தருவார்கள். நான் கவிதை எழுதிய தொடக்க காலத்தில் ரோஜாவைப்பற்றி சிலாகித்த கவிதை இன்னும் மனதில் பதிந்து கிடக்கிறது.
      ரோஜாவே
      யார் மீது
      உனக்கு இத்தனை கோபம் ?
      முட்களை ஏந்தி
      முகம் சிவந்து நிற்கிறாயே ?

இன்னொன்று:
    
      ரோஜாவே பெண்கள்
      பாதுகாப்பாக
      இருக்க வேண்டுமென்பதற்காவா
      இந்த முள்கவசம்?

மேலுமொன்று:
   
    உன்னை நீயே
    ஏன் சிலுவையில்
    ஏற்றிக்கொள்கிறாய்?
இப்படி ரோஜாவை பாடி , விமர்சித்து, ஒப்புவமை கூறி எத்தனை படைப்புகள் வந்தாலும், அதன் இயல்பான தன்மை மாறவே மாறாது. அது ரோஜாவாகவே இருக்கும். என்ற பொருளைத்தான் முதலில் சொன்ன கவிதை சொல்கிறது. எப்படித்தான் ரோஜாவைப்பாடினாலும் ரோஜா ரோஜாவாகவே பரிமளிப்பதாகச் சொல்வது வியப்புறச்செய்கிறது.
     எனக்கு இன்னொரு பொருள் கூறவேண்டும் போல இருக்கிறது. என்னதான் கவிஞர்கள் ரோஜாவை தன் கவிதைக்கு மெருகேற்றப் பாடினாலும், அதன் உண்மை அழகுக்கு அவர்கள் கவிதை ஈடாகாது என்பதாகும். அதாவது அதன் இயற்கை அழகைப்பாடி ஜெயிக்கமுடியவில்லை என்பதாக நினைக்கிறேன்.
     மூன்று மணி நேரம் ரோஜாவோடே கழிந்தது. அது ஒரு மோன நிலை. அகம் முழுதும் மலர்ந்த உன்மத்த தருணம். நாம் வாழும் காலத்தில் பிழைக்கிறோமா வாழ்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுப்பார்த்தால் நாம் 99.9 விகிதம் பிழைக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் வாழ்தல் என்று குறிப்பிடுவது நம் பரவசப்படும் நேரம். நான் ரோஜா மலர்களோடு இருந்த தருணம் பரவசத் தருணம். நல்ல கவிதைகளை உள்வாங்கி அதன் படிமத்தில் முகிழ்ந்து இருப்பது பரவசத்தருணம். நமக்கு மிகப்பிடித்த விஷயங்களில் மறந்திருப்பது பரவசத் தருணம். நாம் இதற்கெல்லாம் நேரம் ஒதுக்குவதில்லை. பிழைப்பதற்கே நமக்கு நேரம் போதவில்லையே? ஓடிக்கொண்டே இருக்கிறோம். எதையோ விடாது தேடிக்கொண்டே இருக்கிறோம். சாகும் வரை!
கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் , வாழும்போது  ஆயிரம் ரோஜாக்கள் மலரும்.
     
      அங்கிருந்து நகர்வதற்கு மனம் வரவில்லை.
      ஒருமுறை திரும்பிப்பார்த்தேன். ரோஜாக்கள் புன்னகைத்து என்னை அழைத்தது! இன்னொரு முறை வாய்க்குமா இந்தச் சந்தர்ப்பம்?
      ரோஜா மலர்தோட்டம் அருகிலேயே இன்னொரு அதிசயம். கற்பனை கலை ஆக்கத்துக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்ட அருங்காட்சியகம். உடைந்த பிங்கான் தட்டுகள், குடங்கள், மின்சாரப் பிலக்குகள், கலை நுட்பத்தோடு இருக்கும் பாறைகள், தேவையற்றது என் குப்பைக்குப் போகும் பொருட்கள், இவறையெல்லாம் வீணாக்காமல் கண்களைக் கவரும் படியான காட்சியாக மாற்றியிருகிறார்கள். ‘நெக் சாண்ட்’ என்பவர் முன்னோடியாக இருந்து இவற்றை வடிவமைத்திருக்கிறார். பஞ்சாபிகள் உழைப்பாளிகள் மட்டுமல்ல நல்ல கலை ஆர்வம் கொண்டவர்கள். நம் நாட்டுக்கு நம்மைப்போலவேதான் பஞ்சாபிகளும் வந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைத்தரம் நம் தரத்தோடு ஒப்பிடும்போது அவர்கள் எங்கேயோ நிற்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் உண்மையான கடுமையான உழைப்பு. தொடக்கத்தில் மாடு வளர்த்த சமூகமாக , ஜாகா சமுகமாக  இருந்தவர்கள் , இந்த ஐம்பது ஆண்டுகளில், தன் சந்ததியை வேறு ஒரு பரிமாணத்துக்கு இட்டுச்சென்றவர்கள். அதிகமான வழக்கறிஞர்களை டாக்டர்களை, உயர் அதிகாரிகளை, தொழிலதிபர்களைக் கொண்ட சமூகமாக எழுந்து நிற்கிறது.
    
     சண்டிகாரை விட்டு கிளம்பிக்கொண்டிருக்கும்போது, ஓரிடத்தில் நிறைய கார்கள் நிறுத்தப்பட்டு கூட்டம் கூட்டமாய் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
                                                      ........பயணிப்போம்.....

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...