(மலேசியத் தோட்டப்புற சூழல் சிறுகதை)
ஆயக்கொட்டாயில நஞ்சானும் குஞ்சானுமா கெடக்கிற புள்ளங்கில கருக்கல்லியே வுட்டுட்டு போற தோட்டத்துச் சனங்க வேல வுட்டு வந்த , கடசி ஆளு புள்ளய தூக்கும்போது லயத்துக் காட்ல ‘மினுக்கிட்டான் பூச்சி கணக்கா, மினுக் மினுக்குன்னு மண்ணெண்ண வெளக்கு அமிஞ்சிரட்டுமா அமிஞ்சிரட்டுமான்னு கேக்குற மாறி எரியும். கித்தா மரம் வெட்டப் போறதுங்க மணி ஒன்னரைக்கெல்லாம் வந்திடுங்க -ஒத்த வெட்டுன்னா. வெயில் காயுறு நாள்ளயும் வெல்லென வந்துடுங்க. பாதி நேரத்துல மல பிடிச்சிருசின்னா சுருக்கா வந்திடுங்க. கித்தா மரம் வெட்றதிலியும் சிலது இருக்குங்க , சந்தடி இல்லாம் வேல முடிஞ்சி வூட்டுக்குப் போயி , சமச்சி, தொவச்சி , ஏறக்கட்டி வச்சிட்டு , குளிச்சி முழுவி மூஞ்சில திப்பி திப்பியா பகுடர பூசிக்கிட்டுத்தான் புள்ளய தூக்க வருங்க. அன்னிக்கி டபுல் வெட்டுன்னாதான் ஆயா பொலப்பு நாறிப்போயிடும். டபுல் வெட்டு முடிஞ்சி ஸ்டோர்ல பால் ஊத்திட்டு வந்து புள்ளய தூக்கறப்ப மேக்க சூரியன் பழுத்த கொய்யாப் பலமாட்டும் செவந்து எறங்கும். கித்தா பால் நாத்தத்தோட புள்ளைங்கள தூக்கும்போது ஆயாக்கொட்டா நாத்தம் தேவலாம். மொத நாளு மழபெஞ்சி, மறு நா வேலக்கி போற சனங்க மேல, ரெண்டு பங்கு கூட வீச்சம் வரும், மல தண்ணியில நேழ நொழன்னு ஊறுன மங்குப்பாலு லயத்து குலி ஜாமாங்கொட்டா நாத்தம் தோத்துறும். அதுங்க வர வரைக்கும் பொதயல காக்குற பூதமாட்டம், புள்ளைங்கள காத்திட்டு கெடக்கணும். வெளிக்காட்டுக்கு வேலக்குப் போற சனங்க தோள்ள மமுட்டியும் , தாசாகத்தியும் கையில கேட்பானையுமா , வந்து சேரதுக்கு மணி மூனோ நாளோ. வேல என்னமோ ரெண்டுக்கு முடிஞ்சிடும். வேலக் காட்லேர்ந்து தார் சடக்குல ஏறி, வேகாத வெயில்ல வெறுங்கால்ல நடந்து வந்து சேர்ரப்ப அதுங்க காணாங்குரிவி மாறி கருத்து, வேத்து விறுவிறுத்து , உருக்கொலஞ்சி வந்து புள்ளங்கில தூக்கும்போது, இந்த வக்கத்த பொழப்ப பொழக்கவா ஊரை நாட்ட வுட்டுட்டு வந்திச்சிங்கன்னு இருக்கும். வெந்து சாகறதுக்குன்னே பொறப்பெடுத்ததுங்க! வேலக்காட்ல அட்டையும் ,கொசுவும், ராக்காச்சியும் குடிச்சு மிஞ்சுற ரத்தத கங்காணிங்களூம் கெராணிங்களும் பங்கு போட்டுக்குவாங்க. இதுங்க மரம் வெட்ட லாயக்கில்லேன்னுதான் வெளிக்காட்டு வேலக்கி அனுபிடுவாங்க கெராணிங்க. இதுங்கல வெளிக்காட்டு வேலக்கி அனுப்புற வேலயெல்லாம் கங்காணிங்க பிராது கொடுக்கிறதுனால வர்ர வென! ஒன்னுக்கு ரெண்டா சொல்லி கங்காணி வேலய கரெக்டா செஞ்சிட்ட மாறி போட்டுக்கொடுத்தே பொழப்ப நடத்துற ஜாதிங்க! செலதுங்க வெட்டுல காயம் போட்டுடுங்கிறது உம்மதான். ஆனா செலதுங்க கங்காணி இழுப்புக்கோ , கிராணிங்க ஏக்கத்த தீக்கற இழுக்கிற இழுப்புக்கு எணங்கலேன்னா, பால் மர சீவுற வேலையிலேர்ந்து தூக்கிட்டு, வெளிக்காட்டுக்கு அனுப்பிடுவானுங்க. காயமெல்லாம் வெறும் காரணந்தான்.மானங்கெட்ட பொழப்பு பொழக்கிறதவிட பாரக்குவாட் குடிச்சு செத்துடலாம்னு மம்மட்டி வேலக்கே போற பொம்பலைங்களும் உண்டு. வீணா பெரச்ன எதுக்குன்னு செவனேன்னு வெளிக்காட்டு வேலக்கி மம்மட்டிய தூக்கிட்டு போயிடுங்க. சிலதுங்க மசிஞ்சி போறதும் உண்டு.
அதுனால் அதுங்களுக்கு நல்ல பால் வடியுற வெட்டா கெடச்சிறதும் உண்டுதான். பொழக்க தெரிஞ்சதுங்கணு எஸ்டேட்டுல ‘நல்ல பேர்’ உண்டு அதுங்களுக்கு! இப்படியெல்லாம் ஒரு பொழப்பு பொழைங்கன்னு யாரடிச்சா?
ஆயா, ஆயான்னே பேரு அமஞ்சிபோச்சி ஆராயிக்கு. ஊர்ல அவ உம்மப்பேரு ரொம்பப் பேருக்குத் தெரியாது. சம்பளம் பிலாஞ்சா வாங்கிறப்ப மட்டும்
செக் ரோல்லேர்ந்து, ஆராயின்னு கூப்பிடுவாங்க. தோட்டத்து சனங்களுக்கெல்லாம் அவ ஆயாதான். பாஸ்போட்ட யாரு பாக்குறா? அதுல அவ பேர என்னமோ செரியா எலுதிட்டான். ஆராயி அனாக் பெரெம்ப்புவான் மூக்கன்னு.
காத்தல்லேர்ந்து பொலுது சாய்ற வரைக்கும் அவளுக்கு பேத்தி ஞாவகம் வராது. ஒய்வொழிச்ச இல்லாத வேல ஆயக்கொட்டாயில. வூட்டுக்குப்போயி ரவ சோற பொங்கி துன்னுட்டு அக்கடான்னு படுக்கப்போறப்பத்தான் பேத்தி பத்தி நெனச்சு நெக்குறுகிப் போவா! மவனுக்குப் பேத்தி பொறந்துருக்கான்னு அவன ஆஸ்பித்திரியில பாத்தவங்க தகவல் சொன்னதும் மனசு கெடந்து பாடா படுத்திடுச்சு. மவனே தகவல் சொல்லுவான்னு எதிர்பாத்து ஏமாந்துபோனா பாவம். மானத்த வுட்டு ஓடிப்போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்தாள். அப்படியே ஆயாவ உரிச்சு பொறந்திருந்துச்சு கொழந்த. மவன் ‘வாம்மா’ன்னு ஒரு வார்த்த சொன்னதோட சரி. எங்கெடா அம்மா இத சாக்கா வச்சி நெரந்தரமா அவன் வூட்ல தங்கிடு வாளோன்னு பயந்துட்டான் போல! மவராசி ஒரு வார்த்த பேசுல. ஒரு கண்ணசைவு கூட இல்ல. மருவாதி கொறவா இருந்துச்சு. வந்த வேகத்துலியே பொறப்பட்டுப்பட்டுட்டா ஆயா. தோ...தோன்னு ஒரு வருஷம் ஆவப்போது. மவனத்தான் புண்ணியவதி கண்ணுல காட்டுல , பேரப்புள்ளையாவது ஒருகா கொண்ணாந்து காட்டிட்டு போவாளா? புண்ணியமாபோவுமே !
ஒத்த மவனத்தவர, ஆயாவுக்கு வேற ஒறவு மொற கிடையாது. மவன் மெனெஙா உஸ்கோல்ல படிக்கும்போதே அவன் அப்பன் ஆஸ்துமா சீக்குல, கொற ஆயுள்ள போய் சேந்துட்டான் . மவன கட்டிக்குடுத்ததோட மந்திரிச்சிட்ட மாரி ,மவராசி முந்தாணிய பிடிச்சவந்தான். அதுக்கப்புறம் அந்தச் சீம சிறுக்கியே சதம்னு ஆயிட்டான். இங்க ஒத்த மரமா கெடந்து சாகனும்னு தலையில எழுதி வச்சிருக்குப் போல!
பேத்திய பாக்க போவனும் போவனும்னு , மனசு கெடந்து தவிக்குமே தவிர போவ முடியல. ஞாயத்துக்கெலமையான கூட மல திட்டிக்கு கெந்தி கொடுத்து சனங்கள வேலக்கி அனுப்பிடுறான். அதனால் அன்னிக்கும் ஆயக்கொட்டாய்க்கு வேலக்கிப் போயிடனும்.
மவன் படிச்சி , டௌன்ல நல்ல வேலயில இருக்கான். இன்ச்பெட்டரோ, கின்ச்பெட்றோ வேல செய்யிறான். போலிஸ் இன்ச்பெட்று இல்ல! கொசு வராம ,சீக்கு வராம, ஊர சுத்தமா இருக்கான்னு மேம்பார்வ பாக்குற வேல. என்னிக்கி அவன் காதல் பண்ணி கலியாணம் பண்ணிக்கிட்டானோ, அன்னிக்கே அம்மான்னு ஒரு சீவன் இருக்கிறது அவனுக்கு அருதியா மறந்து போச்சு. மவராசி, எம்புள்ளயவே கண்ணுல காட்டாம இருக்கிறவ பேத்திய காட்டுவாளா? அவ மாறி ஆயா என்னா டஸ் புஸ¤ன்னு இங்கிலிபிஸ் பேசறவாளா? லவுக்கய பிட்டா தச்சி , கொசுவத்த கணக்கா மடிச்சு கட்டிக்கிட்டு , முஞ்சில பகுடர பூசி பொட்டு வச்சி , நல்ல தெரியுற பார்வைக்கு நல்லா தெரியாத கண்ணாடி போட்டு, கால்ல மினுக்கிற செருப்ப மாட்டிக்கிட்டு கையில பேக்கு வச்சிக்கிட்டு , அந்திசா இருந்தா மருவாதி இருக்கும். ஆயா அப்டி இல்லியே . லவுக்க கையி கழுத காதாட்டம் லொங்கு லொங்குனு தொங்கும். கொசுவம்னுல்லா இல்ல அதுபாட்டுக்கு இஷ்டத்துக்கு சுருங்கி கணுக்காலுக்கு மேல நிக்கும், காலேதான் செருப்பு , பகுடர இந்த ஜன்மத்துல பூசுனது இல்ல! இடுப்புல சொருவுன வெத்தல பையுமா , பங்கரயா இருந்த வூட்ல சேப்பாளா, புண்ணியவதி ? அப்பிடியே மினுக்கிக்கிட்டு போனாமட்டும் சேத்துடுவாளாக்கும்? மாமியாக்காரிய எத்தன மருமவதான் சேத்துக்கிட்டா?
பேத்தி நெனப்பும் , மவன பாக்கனும்ங்கிற நெனப்பும் மனசுக்குள்ளாற கெடந்து அல்லாடுது . குறுக்கால மருமவ நெனப்பு , சிம்ம சொப்பனமா வந்துடுது!
இருந்தாலும் பேத்தியையும் புள்ளயையும் பாக்கனும்ங்கிற நெனப்பு என்னமோ ராத்திரி பெய்யுற மலைக்கி பொறவு மொளைக்கிற கித்தா காட்டு காளான் மாரி பூத்துக்கிட்டே கெடக்கு.
ஒரு எட்டு போயி பாத்திட்டு வந்திடணும். அவ கெடக்குறா. என்னா, போனா வெறசா திரும்ப முடியாது. மறு நா தான் பஸ் ஏறணும். கெராணி அய்யாக்கிட்ட ரெண்டு நா திட்டி கேக்கணும்.
மணி பத்தாயிடுச்சு. இப்பியே கச்சேரி வைக்க ஆரம்பிச்சிடுச்ச்¢ங்க! நொய் நொய்ன்னு. ஒன்னு வுட்டு ஒன்னு பசியில கத்த ஆரம்பிச்சிடும்.
சாமாக்காருக்கு அப்புறம் ஆயாதான் கருகல்லியே எழுஞ்சி ஆயக்கொட்டாய்ல இருப்பா. பெரட்டுக்கு போறதுக்கு முன்னயே அப்பனோ அம்மாவோ அக்காவோ அண்ணனோ , புள்ளைங்கள ஆயக்கொட்டாயில கொண்ணாந்து உட்டுடுங்க. கொழந்தைங்கள வுடுறப்பியே ஒன்னு புள்ளைக்கு ஜொரம் கண்டுருக்குன்னு சொல்லும், ஒன்னு புள்ளைக்கு வவுத்தால போது சாக்கிறதையா பாத்துக்கோ ஆயான்னு சொல்லும். சீக்கு செவாப்புன்னாலும் ஆயாதான் பாத்துக்கனும். ஒன்னு.... இன்னிக்கி பாலில்ல , வெறக்கோப்பி போத்தல்ல ஊத்திருக்கேன் பாத்து கொடுங்க ஆயான்னும், அதுங்க பால் போத்தல, சுடுதண்ணி போத்தல, துணி வக்குல , ஒவ்வொன்னா வாங்கி வைக்கிறப்போ தொடங்குற வேல சாயங்காலம் வரைக்கும் ஓயாது! செத்த வெத்தல போட அக்கடான்னு ஒக்கர்லான்னாகூட முடியாது. குனிஞ்சி நிமுந்து குனிஞ்சி நிமுந்தே கூனும் விழுந்திடுச்சி.
காத்தலயே காண்டா வாலி ஒரு தோள்ளயும், தூக்கத்தோட இருக்கிற கொழந்தைய மறு தோள்ளயும் போட்டு கொண்ணாந்து ஆயக்கொட்டயில விடரப்போ கொழந்தைங்க உஷாராயி கத்துற கத்து இருக்கே. வீல் வீல்னு கதறி ஊரக்கூட்டிடுங்க! அம்மாவ பிரிஞ்சி இருக்கப்போற அழுக அந்த விடிகால நேரத்துல ஊர் பூராவும் சோக ராகமா கசிஞ்சி நெறையும். அதுங்க அம்மா பிடிய வுடாம அழறப்போ ‘என்ன வுட்டுட்டு போவதாம்மா’ன்னு சொல்றது போல இருக்கும். வாயிருந்தா வேற என்னா சொல்லப்போதுங்க! அதுங்கல தேத்தறதுக்கு பால் போத்தலையோ , முட்டாயவோ வாயல வச்சாலும் நடக்காது. அம்மா ஏக்கத்துல முட்டாயும் கசந்திரும்போல! அதுங்களே தெம்பித் தேம்பி , விசும்பி விசும்பி அழுதே ஓஞ்சாத்தான் ஆச்சு. அப்பிடியே தூங்கியும் போயிடுங்க! தூக்கத்திலேயும் செருமி செருமி நெஞ்சு ஏறி எறங்கும்போது தோட்டத்து ஜென்மங்க பாவப் பட்டதுங்க தான்னு தோணும்.
ஒன்னு வெளிக்குப்போயி சுத்தம் பண்றதுக்குள்ள இன்னோன்னு ஆய்க்குப்போயிடும்.
வயித்தால போற புள்ளைங்க சதா சொத சொதன்னு கழிஞ்சு நாறிக்கிட்டு இருக்குங்க! சிமிண்டு தரையெல்லாம் பீ பேண்டு நாற அடிச்சிடுங்க. அதுஙக கட்டியிருக்கிற குண்டித் துணி பிழியாத துணியாட்டம் மூத்திரத்துல நனைஞ்சி நாறிக்கிட்டு கெடக்கும். சிலதுங்க அன்னாக்கயிறுலேர்ந்து சிமிண்டு வரைக்கும் தொங்குற குண்டித்துணிய இழுத்துக்கிட்டெ திரியுங்க! சிலதுங்க குண்டித்துணி போடற பழக்கமே இல்லாம சதா அம்மண மேனியா கெடக்கும். அப்படியே பழகிப்போச்சு. பயிரு பச்சைக்கு தண்ணி ஊத்துற மாரி தர பூராத்தையும் ஈரமாக்கிட்டே இருக்குங்க ! மூக்கும் சளியுமா உறிஞ்சித் திரியும் கொழந்தைகளுக்கு குருப் ஆஸ்பீத்திரி மருந்து எப்பத்தான் கேட்டிருக்கு? பெத்ததுங்க செரியா கவனிக்காம ஒன்னு ரெண்டு மண்ணத் துன்னு வவுறு ,பொங்க பானையாட்டம் பெருத்து ஒடம்புல சத்தில்லாம, ரத்த சோவையா ஒக்காந்திருக்குங்க! நச நசன்னு பிள்ளைங்க இருக்கிற எடம் மூத்திர நாத்தமும் பீ நாத்தமும் சதா வீசிக்கிட்டே கெடக்கும்.
கொழந்தைங்களுக்கு போட்டு அனுப்புற உடுப்பு அதுங்க மூத்ததுங்கலோடதா இருக்கும். தொல தொலன்னு தொங்குறத இழுத்துக்கிட்டு கூத்துல கோமாளியாட்டம் திரியுங்க! விட்டத்து தியான்ல கட்டியிருக்கிற அஞ்சாறு கைலித் தொட்டிலேர்ந்து, மாட்டுத் தொழுவம் கணக்கா தர தரன்னு, ஒன்னு வுட்டா ஒன்னு கரந்துகிட்டே இருக்குங்க. காஞ்சிபோன தரைய பாக்குறதுதானா மறுநா காத்தாலதான் முடியும். ஆயா எத்தனையோ தடவ அதுல வழுக்கி விழுந்துருக்கு! செலதுங்க போத்தல போட்டு ஒடச்சி யாராவது அடிச்சிடுவாங்களோன்னு ஒப்பேரி வைக்க ஆரம்பிச்சிடுங்க ! போத்த சில்லுங்க ஒடைஞ்ச ஐஸ் கட்டி கணக்கா செதறிக்கெடக்கும். ஒரு போத்தலோடுகூட இல்லாம வல்லுசா கூட்டிப் பெருக்கி எடுக்கிறதுக்குள்ள இன்னொன்னு எதையாவது தள்ளி உட்டுடும். பிலாஸ்டிக் போத்த வாங்கிக் கொடுங்கன்னு தலப்பாட அடிச்சிக்கிட்டாலும் எது கேக்குது? அப்பன் குடிச்சிப்போட்ட பீர் போத்தல பாலையோ வெறகோப்பியோ ஊத்தி அனுப்புனா சுக்கு நூறா ஒடையாம என்ன செய்யும்? கொழந்தைங்களுக்குத் தெரியுமா இது ஒடையுற சாமான்னு ? கொழந்தைங்க ஓடி ஆடுற தரையுல அப்படியே உட்டுட முடியுமா!
ஒன்னு வுட்டு ஒன்னு பசியில கதறுங்க. அதுங்களுக்கு கொடுத்தனுப்புன பாலு பத்தாம, வெற புள்ளைங்களோட பால கலக்கி கொடுக்க வேண்டியிருக்கும். ஏன் ஆயா பாலு கொறஞ்சி கெடக்குன்னு கேட்டா சமாளிக்கப் பொய், சொல்லவேண்டியிருக்கும். இது எல்லாத்தியும் ஆயா ஓயாம செஞ்சிக்கிட்டெ இருக்கும். அதுங்கள சுத்தம் செஞ்சி செஞ்சி ஆயாவும் ஒன்னுக்குப்போன மாறி கட்ன கைலியும் எப்பியும் ஈரமாவே இருக்கும். புள்ளைங்க ஜாஸ்தியாயிடுச்சு, வுன்னோரு ஆள அனுப்புங்கோன்னு, எத்தனையோ தடவ கெராணிய கேட்டுப் பாத்தாச்சு. தோ தற்றேன் , தோ தறேன்னு சொன்னாரே தவுற , ஆள அனுப்புன பாட்ட காணோம். தான் வூட்டுக்குன்னா வெளிகாட்டு வேலைக்குப் போறவுங்கள ரெண்டு பேர தொரைக்கு தெரியாம அனுப்பி வச்சிடுவாறு. பொண்டாட்டி புட்டம் தேஞ்சி போயிட்டா? சம்பளம் எஸ்டேட்டுல்ல கொடுக்கப்போவுது! ஒதவிக்கு ஆயக்கொட்டாய்க்கு அனுப்பி வச்சா அவளுக்கு தனியா ‘பொம்பல சம்பளம்’ தரணுமே, அதான்!
இதுல குச்சிக்காட்ட பாக்குற கிராணி கங்காணிங்க வந்தாங்கன்னா “ என்ன ஆராயி அல்லூர் பூரா பீயும் மூத்தரமுமா கெடக்கு? சுத்தம் பண்ண மாட்டியோன்னு” வல்லுன்னு வுலுவுங்க.
“ நான் ஒண்டிக்கட்ட எவ்ளோ நாள்தான் லோல் படுவேன்? கூட மாட ஒத்தாசிக்கு ஆளு அனுப்புங்கன்னு கேட்டா , கேக்காத மாறி போயிற்றீங்க.” என்று ஆயா பதுலுக்கு கொடுத்தா, சால்ஜாப்பு சொல்லிட்டு நவுந்திடுவாங்க. ஆராய வுட்டா ஆயக்கொட்டாய பாக்க எஸ்டேட்டுல ஆளுல்லன்னு தெகிரியந்தான்.! இந்த நாத்ததுக்கு பயந்து வராதுங்க! ஆயாவுக்கு பழகிப்போச்சி. அம்பத்தஞ்சி வயசுக்கு அப்புறம் வேலையிலேர்ந்து நோட்டிஸ் கொடுத்தப்புறமும் ஆயா இந்த வேலையில வச்சிருக்காங்கன்னா பாத்துக்கங்க! ஆயா மேல பிராதும் அதிகம் வர்ரதில்ல. சனங்க புளைங்கள ஆயா, தான் புள்ளமாரி பாத்துக்கிறதுதான் காரணம்.
பேத்திமேல உள்ள பாசம் கொழுந்தா எரிஞ்சிக்கிட்டே இருக்கு. நெஞ்சி நெறஞ்சி வடியுது. கெராணி அய்யாக்கிட்ட போயி ரெண்டு நாளு லீவு கேட்டா ஆயா.” கெராணி அதெல்லாம் முடியாது , உன்ன வுட்டா வேற ஆளு இல்லன்னு ,ஒனுக்கு தெரிஞ்சும் கேக்குறியா ஆயா,”ன்னிட்டாரு. கெழவி ,” என் பேத்திய பாத்துட்டு மறு பஸ்ஸ பிடிச்சு ஒடியாந்துற்றேன் ஐயா, கண்ணுலியே நிக்கிறா”ன்னு கெஞ்சினா.
திட்டி போடாம வேல செய்ற ,சரி போ வேற ஆளு யார போடறது? . வேற ஆள போட்டா நாந்தான் ஜவாப் சொல்லியாவனும்.
ஆள வுட்டா போதும்னு ,ஆயா ஒடனே கெளம்புடுச்சி.
டௌனுக்குப்போயி அரை பவுன்ல ஒரு சங்கிலி வாங்குனிச்சி. பிஞ்சுக்காலுக்குப் பதமா வெள்ளியில கொலுசு வாங்கிக்கிச்சு. நல்ல பட்டுல , அகலமான பவுன் ஜரிகையா தேடிப் பாத்து , பாவாட சட்ட ரெண்டு சோடி வாங்கிக்கிச்சு. பையனுக்குப் பிடிக்குமேன்னு பலகாரம் வாங்கிக்கிச்சு , மருமவளுக்கு ஒரு பொடவய வாங்கிக்கிச்சு. என்னா இருந்தாலும் பேத்திய பெத்தவ இல்லியா? ஒண்டிக்கட்ட சம்பாரிச்சு எல்லாத்தியும் கட்டையோடயா பொங்ஸ் கட்டிக்கினு போவப்போது?
மவன் வீட்ட நெருங்க நெருங்க மனசுல இருந்த சந்தோஷம் மலையில நனைஞ்ச கித்தாபாலா கரையிது. மவராசி வரவேக்க மாட்டாங்கிற பயம் அவளுக்கு. மவன் அப்படி செய்யமாட்டான். என்னா இருந்தாலும் பெத்த பாசம் இருக்கும். ஒரு அடி எடுத்து முன்ன வய்க்கும்போது இன்னோரு அடி பின்னாலேர்ந்து இழுக்கிற மாறி இருக்கு. மனசுல துள்ளாடுற மகிழ்ச்சிய, புத்திய மலுங்கடிச்சிகிட்டே இருக்கு. பேத்திய பாக்கனும்ங்கிற ஆசதான் அவள கோட்டுப்பாலு கணக்கா இழுத்துக்கிட்டு போவுது.
வாசல சேந்தவொடனே கதவ தட்டவே பலதடவ யோச்சிச்சா. காலுக்கு கீல திகு திகுன்னு நெருப்பு எரியமாரி இருக்கு. திரும்பிப் போயிர்லாமன்னுகூட ஒரு எண்ணம் வந்துச்சி. ச்சே இவ்ளோ தூரம் வந்துட்டு பேத்திய பாக்காம போறதான்னு கதவ தட்டுனா. வாசல்ல நின்னு அஞ்சாறு தடவ தட்டுன அப்புறமே கதவ தெறந்தா மகராசி. ஆயாவ பாத்ததுமே வேம்பத்தின்னமாறி ஒரு மூஞ்சி. ‘‘அவரு வேல வுட்டு வர லேட்டாவும் ‘’ திரும்பிப் பாக்காம சொல்லிட்டு போயிட்டெ இருந்தா. “வா” ன்னு ஒரு வாத்த கூப்பிட்டிருக்கலாம். அப்பியே ஆயாவோட தம்மானம் தரையில கவுந்திடுச்சி.
இருந்தாலும் ஆயா கண்ணு பேத்தியதான் தேடிச்சி. பேத்தி தூங்கிட்டு இருந்தாபோல.
சரி எழட்டும்னு, வாசல்லியே கெதியா குதிக்காலு போட்டு குந்திகிட்டா கெழவி. மருமவ குசினிக்கி போனவதான். தாகத்துக்கு குடிக்கத் தண்ணி கூட கொடுக்கல.
புள்ள எழிஞ்சதும் அவ கால்ல கொலுச மாட்டி பாவாட சட்ட போட்டு சங்கிலிய மாட்டி, அலகு பாக்கணும்னு ஆசப்பட்டா. புள்ள நடக்க தொடங்கியிருந்துச்சி. ஆயா வான்னு பேத்திய சைகை செஞ்சி கூப்பிட்டா. யாரோ பெறத்தி மனுஷால பாக்குற மாரி, ஒரு பார்வ பாத்துட்டு, அதுவும் திரும்பிப் பாக்காம அம்மாவைதேடிப் போயிடுச்சி.
பேத்திய அனுப்புவான்னு வாசல்லியே காத்திருந்தா கெழவி. கடசி வரைக்கும் வெளிய வரல. வெக்கத்துக்கு ஆத்தாம மவனுக்கு காத்திருந்தா. வெத்தல பாக்கு போடலான்னா எங்க துப்புறது? ஒன்னுக்கு முட்டிக்கிட்டு கெடக்கு.
வேல மெனக்கட்டு இதுக்கா சின்னப் பட்டு சீரழிஞ்சி இவ்ளொ தூரம் வரணும்?
எதுக்கும் மவன் வரட்டுமேன்னு காத்திருந்தா. வந்தான். வேண்டா வெறுப்பா “வா....ன்னா.” நீ ஏன் இங்க வந்தேன்னு கேக்குற மாறி இருஞ்ச்சி அவன் ‘வா’ன்னது! “பேத்திய கண்ணால பாத்திட்டு போயிரண்டா ஐயா”ன்னா.
பேத்திய தூக்கிட்டு வந்தான். ஆயாக்கிட்ட தூக்கிக் கொடுத்தான். பெத்த தாய ஒடனே திரும்ப அனுப்பிடனும்ங்கிற நோக்கம் இருக்கும்போல! கெழவி கைய ஆசையா நீட்டிட்டு இருந்தாலே தவிர , பேத்தி மூஞ்சிய திருப்பி அப்பன் தோள்ள கித்தாப்பாலா ஒட்டிக்கிட்டி திரும்பி கூட பாக்குல. கெழவிக்கு ஆத்தாம தாங்குல. “அத்தான்னு” வாய் நெறையா கூப்பிட மாட்டாளான்னு ஏங்குனதுதான் மிச்சம். மவன் தோள்ளேர்ந்து தூக்கனுதும் வீல்னு கத்த ஆரம்பிச்சிடுச்சி. மருமவ காரி உர்ருன்னு பாத்துக்கிட்டே இருக்கா. அவ மூஞ்சி கோணி , கண்ணுலேர்ந்து கன கனன்னு நெருப்பு கொட்ற மாரி இருந்திச்சி. கடசியா இவ வரமாட்டான்னிட்டு முடிவெடுத்துட்டா. சங்கிலி ,கொலுசு, பாவாட சட்டையெல்லாத்தியும் மவன் கையில் கொடுத்துட்டு
“வரண்டாப்பா ன்னு.” பொறப்பட்டுட்டா கெழவி.
வர வழியெல்லாம் கண்ண ரகசியமா தொடச்சிக்கிட்டதுதான் மிச்சம். மறு நா காத்தாலியே ஆயக்கொட்டாய்க்கு போய்ட்டா.
புள்ளய கொண்ணாந்து விட்ட சனங்க, “எங்க ஆயா போன? தோ பாரு ஒனக்கு கெந்திக்கு வந்த கெப்புறு பிடிச்சவ, புள்ள தொடைய எப்படி நிமிட்டி வச்சிருக்கான்னு.” தொட உதரச்செவப்பா இருந்திச்சி. சில கொழந்தைங்க கண்ணத்திலுயும் அறஞ்சிருக்கா. அஞ்சி வெரலு அப்படியே பதிஞ்சிருக்கு. பிஞ்சு மண்டையிலியும் கொட்டியிருக்கா.“ராத்திரியெல்லாம் மெரண்டு மெரண்டு எழுந்து அழுவுதுங்க! தாயா புள்ளையா வளத்திட்டு எங்க ஆயா போன. நீ ரெண்டு நாளா இல்லாம இங்க என்னென்னமோ ஆயிப்போச்சு, ”
“அதான் வந்துட்டேன்லே”
ஆராய ரெண்டு நாளா பாக்காத கொழந்தைங்க திரும்பப் பாத்ததும் “ஆயான்னு” ஒடியாந்து கட்டிபிட்டிச்சுக்குச்சிங்க! ஆயாவுந்தான்.
Comments
Life in the estate was really miserable.People like us had experienced that sort of life. More has to be written about it.Todays generation,not only from our race but other races in this country should be taught the sufferings went through by the Idians. They are unaware of it, since they are very much involved in upgrading the life of their own community.