Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11

முத்தம் 11- அனுபவித்தறியாத அந்தக் கால சக்ரவர்த்திகள்.

மூன்று நாட்களாக இந்தப் பயணம் பற்றி எழுத நேரமில்லை. தொலைகாட்சிப் பேட்டி, வானொலிப் பேட்டி என் அலைந்ததால் எழுத நேரம் கிடைக்கவில்லை.(பிசியாயிட்டம்ல) எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் போய்வர முழுதாய் இரண்டு நாட்களை விழுங்கிவிடும். இப்போது தொடர்ந்து வாசிக்கலாம்.

நதிக்கரையோரம் நடந்தே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, கொலிசியம் வந்து சேர்ந்தோம்.  சுற்றிப்பார்க்கும் நேரங்களில் நடந்தே காட்சியைப் பார்த்து வருவது இனிமையான அனுபவம். நாங்கள் அலைந்து திரியவில்லையென்றால் இந்த நதியைப் பார்த்து லயித்திருக்க முடியாது.
மக்கள் கூடுமிடம் (கொலிசியத்தைச் சுற்றியுள்ள புராதன இடங்கள்.)

ஐரோப்பிய நாடுகளில் ,குறிப்பாக நாங்கள் பார்த்த இந்த தேசங்களில் நீரின் தூய்மை பற்றிச்சொன்னேன். பயணிகளுக்கு அல்லது மக்கள் தாகத்துக்கு குடிக்க ஆங்காங்கே குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய் நீர் நேராக நதிகளிலிருந்தே  வருகிறது. நதி நீர் மலையிலிருந்து உற்பத்தியாவதால் இதன் தூய்மை பற்றி சந்தேகிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். நாங்கள் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் புட்டி காலியாகும் நேரங்களிலெல்லாம் குழாய் நீரால்தான் நிரப்பிக்கொண்டோம். எந்த அச்சமுமில்லாமல் குடித்தோம். நீ குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததுப்போல சில்லென்றே இருக்கிறது. ஒருகால் இதனை சில்லிட்டு அனுப்புகிறார்களோ என்று சந்தேகம் வந்தது. இல்லை என்கிறார்கள் அங்கே வசிப்பவர்கள். அது குளிர் நாடாயிற்றே. நதி நீர் குளிர்ச்சியாகத்தானே இருக்கும் என்கிறார்கள். எந்தப் பாதிப்பும் தரவில்லை. குழாயில் நீர் வருவதற்கு முன் அதனை தூய்மைபடுத்திய பிறகே அனுப்புகிறார்கள் என்பதே என் எண்ணம்.
இந்தியாவில் , குறிப்பாகத் தமிழ்நாட்டில் குழாய் நீரைக் குடித்தால்.. மவனே மூனு நாளைக்கு ஒனக்கு 'பின்னாடி' பிரச்னையாகிவிடும். சுற்றுலா போனவர்கள் இப்படி ஒரு சுற்று இளைத்துப்போய்தான் வீடு வந்து சேர்வார்கள்.
சரி செய்யப்பட்ட சிதைந்த பாகம்.

கொலீசியம் இத்தாலியின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று ஆயிரக்கணக்கானோரைப் பகல் முழுதும் பார்க்கலாம்.
இதன் கட்டுமானம் கிருஸ்த்துவுக்குப் பின் அதாவது 70 ஆம் நூற்றாண்டில் துவங்கி 80ஆம் நூற்றாண்டில் முடித்திருக்கிறார்கள். இது ரோமின் மிகப் பிரபலமான  சக்ரவர்த்திகளான வெஸ்பியன் தொடங்கி, நீரோ காலத்தில் நீண்டு பின்னர் டைட்டஸ் காலத்திதான் பூர்த்தியாகி இருக்கிறது. கிருஸ்த்துவுக்குப் பின் 70 ஆம் நூற்றாண்டு என்று சொல்லும்போதே அதன் வரலாறு எவ்வளவு புராதனமானது என்று புரிந்துகொள்கிறோம். 70ஆம் நூற்றாண்டில் கல் கட்டடங்களை கட்டிய உலகின் முதல் நாடு ரோம் அல்லது இத்தாலி. ரோம் என்பதை ஒரு நாடு  என்றே வரலாறு குறிப்பிடுகிறது. நான் ஆரம்பப்பள்ளியிலும் இடைநிலைப்பள்ளியிலும் படிக்கும்போது ரோம் வரலாற்றில் ஒரு பாடமாக இருந்தது. நீரோ சக்கரவர்த்தியைப் பற்றிய ஒரு வரலாற்றுச் சம்பவம் மிகப் பிரபலமானது. தன் அரசாட்சியின்போது ஏதறொரு அரசு கட்டடம்  தீப்பற்றி எரிந்தபோது  நீரோ சர்வாதிகாரி பிடில் வாசித்து பரவசத்திலிருந்ததாகச் சொல்வார்கள். அத்தனை கொழுப்பு அவனுக்கு.

அந்தக் காலத்திலேயே இந்த கொலிசியத்தில் எத்தனை பேர் அமரலாம் என்று படித்தபோது, பிரமித்துப் போனேன். 50000 லிருந்து 80000 என்கிறது விக்கிப்பீடியா.
இங்கே என்னவெல்லாம் செய்வார்கள் இந்த சர்வாதிகாரிகள் என்று படித்தபோதும் கொடூரமாகவே இருந்தது. ஒரு குற்றவாளியை சிறையில் வைத்திருந்து பின்னர் சிங்கத்திடமோ, சிறுத்தையிடமோ மோதவிடுவார்களாம். குற்றவாளி எத்தனையோ  நாள் சரியாகச் சாப்பிட்டிருக்கமாட்டான், இருந்தாலும் மிருகத்திடம் பலியாகிப்போகும் நிலைக்கு ஆளாக்கப் படுவானாம்.  புலி, சிங்கள், காண்டாமிருகம், முதலை போன்ற வற்றை இதற்காகவே ஆப்பிரிக்கக் காடுகளிலிருந்து பிடித்து வந்து வைத்திருப்பார்களாம். மிருகம் அவனை எலும்பு வேறு சதை வேறாகப் பிய்த்து உண்பதை மக்கள் பார்த்துக் கைதட்டிக் குதூகளித்திருக்கிறார்கள்.
ஒரு சுரங்கம் வழியே மிருகங்கள் வெளியாகும் காட்சியும் இரையாகப் போகும் மனிதர்களும்.

நீங்கள் சினிமாவில் பார்த்திருக்கலாம் இந்தக் காட்சிகளையெல்லாம். முக்கால் வாசி சினிமா இந்த கொலிசியத்தில் படமாக்கப் பட்டதுதான். இரண்டு வீரர்களை மோதவிட்டு ஒருவர் இறக்கும் வரை அடித்துகொல்லப்படுவதை பார்த்து ரசித்த மக்கள், மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது?  என்ற வசனம் அந்த நேரத்தில் பிறந்திருக்கலாமோ? அதுதான் கொடுமையென்றால் குற்றவாளியை இழுத்துவந்து மக்கள் மன்னர் முன்னிலையில் தீயிட்டும் கொலுத்திச் சாகடிக்கும் தண்டனையும் நிறைவேறுமாம். நம் இதிகாசங்களில் ஷத்திரியர் என்வன் போருக்குத் தன்னைத் தயார் செய்துகொண்டவனாக இருக்கவேண்டும் என்று சொல்கிறது . பழங்கால நாகரிகத்தில்  சண்டை ஒன்றே தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழியாக இருந்திருக்கிறது. ரோம் வரலாறைப் படிக்கும்போதும் போரே வாழ்க்கையாக இருந்திருக்கிறது. ரத்தத்தமும் சதையுமாக மனிதர்கள் கொல்லப்படுவதைப் பார்த்துப் பார்த்துப் அவர்களுக்குப் பழகிப்போயிருக்கலாம். இதைத்தான் நாம்  survaival of the fittest என்கிறோம்.
இப்படியான காட்சிகள் மன்னர் மக்கள் கொண்டாட்டத்துக்காவே செய்திருக்கிறார்கள். ஏனெனில் குட்டி புட்டியைத் தவிர அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. சன் தொலைகாட்சியில் நாடகங்களையோ, விஜய் டிவியில் சுப்பர் சிங்கரையோ, ஜெயா தொலைக் காட்சியில் அம்மா எம் ஜி ஆர் பாடல் காட்சிகளையோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. என்ன பெரிதாய் அனுபவித்துவிட்டார்கள் இந்த ராஜாதி ராஜாக்கள்? ஒரு கார் ஏறியிருப்பார்களா? குளிர்சாதன அறையில் உறங்கியிருப்பார்களா? விமானத்தில் பறந்திருப்பார்கள்? அட குறைந்தபட்சம் கே.எப்.சி, பிசா ஹட் போயிருப்பார்களா?  ஒன்னும் கிடையாது. இன்றைக்கு நம் நிலை இந்த ராஜாக்களைவிட எவ்வளவோ மேல்.
கொலீசியத்தின் முகப்பு

நாம் இன்றைக்கு ரசிக்கும் காற்பந்து பூப்பந்து போன்ற விளையாட்டுகள் ரோம் நகரம் நடத்திய இதுபோன்ற ரத்த விளையாட்டுகளிலிருந்தேதான் மெல்ல மெல்ல பரிமாணம் அடைந்து இந்த நாகரிக  நிலைக்கு மாறியிருக்கிறது.


 இந்தக் கொலிசீயத்தை எழுபதாம் நூற்றாண்டிலிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இயற்கை சும்மா இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டில் நில நடுக்கம் உண்டானபோது இதன் ஒரு பகுதியைக் காவு வாங்கி விட்டிருக்கிறது. அதனால்தான் இந்தக் கொலீசியத்தில் ஒரு பகுதி யைச் சீர் செய்திருக்கிறார்கள்..
நீரோ சக்கரவர்த்திதான் மன்னர்களில் மிகப் பிரபலமானவன்.அவன் இறந்தபிறகு  அவன் சிலையில் தலையை மட்டும் நீக்கிவிட்டு புது சர்வாதிகாரியின் சிலைத்தலையை பொருத்திவிடுவார்களாம்.டைட்டஸ் போன்ற மன்னர்களின் கதைகளெல்லாம் திரைப்படமாக பலமுறை வந்திருக்கின்றன.இன்றைக்கும் அகழ்வாராய்ச்சிகள் நடந்தபடியே இருக்கிறது இந்த நிலப்பகுதிகளில். மலேசியாவில் கெடாவில் எங்கள் மாண்புமிகு மந்திரிபுசார் லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சி நிலம் வீடமைப்புக்கு சீர் செய்யப்ட்ட அவலத்தைப் பொருட்படுத்தவே இல்லை. உடைந்த அகழ்வாராய்ச்சி வரலாற்று அடையாளங்களைப் போல  செய்துதருவதாக வாக்களித்தார், என்பதே அவரின் அறிவாற்றலை புலப்படுத்துகிறது. அவங்கப்பா அவனுக்கு இதெல்லாம் சொல்லித் தரவில்லை போலும்.

ரோம் முழுவதும் புராதன கட்டடங்களைப் பார்க்கமுடிகிறது.
ரோமாபுரி மன்னர்களில் ஒருவர்.

இன்றைக்கும் இந்தப் புராதனக் கட்டடம் அதன் கட்டுமான வேலைப்பாடுகளாலும் அதனுள் நடந்தேறிய செயல்பாடுகளாலுமே விரும்பப்பட்டு கண்காட்சியாக சுற்றுப்பயணிகளை ஈர்த்தபடி இருக்கிறது.
கொலிச்சியத்தின் கதை இன்னும் நீளும் . பின்னொருமுறை சொல்கிறேன்.
கொலிசியம் சுற்றியுள்ள மேலும் அரண் மனைகள், கூட்டம் கட்டங்கள், மக்கள் கூடுமிடம் என அதன் வளாகம் விரிந்து கிடக்கிறது. உண்மையிலேயே அதனைப் பார்க்க இரண்டு நாட்கள் வேண்டும். மேட்டிலும் பள்ளத்திலும் எங்களுக்கு நடந்து நடந்து கால்கள் வலிக்க ஆரம்பித்துவிட்டன. நடக்க முடியாமலே பல இடங்களைப் பார்க்கமுடியவில்லை. ஒரு பருந்துப் பார்வை மட்டுமே காணக்கிடைத்தது. பிரம்மாண்டத் தூண்கள், அரண்மனைகள், கோயில்கள் என கட்டுமானக் காட்சி பிரம்மிக்க வைக்கிறது. நாம் 80 ஆம் நூற்றாண்டில் இருப்பது போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
இன்றைக்கு இத்தாலியின் டைல்ஸ் மர வேலைப்பாடுகள் என்றாலே வசதி உள்ளவர்களைக் கவரும் சாதனகங்களாகின்றன. இங்கே உள்ளவர்கள் அங்கிருந்து அவற்றை வரவழைத்து வீட்டை அலங்கரிக்கிறார்கள் என்றால் அதன் நீண்ட வரலாறும் வடிவமைப்பும்தான் காரணம்.
கொலீசியத்துக்கு வெளியே
கொலிசீயத்தி உள்ளே

ரோம் பட்டணத்தில் உள்ள கட்டடங்கள் வீடுகள் பழங்கால வடிவமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், மற்ற பெரும் பெரும் நகரங்களிலிருந்து தன்னை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.

ஒவ்வொரு முறையும் விடுதி வந்து சேரும்போது  அக்கடா என்று படுக்கையில் விழவேண்டும் போலிருக்கும்.
ஆனால் அன்று விடுதிக்குப் போகும் முன்னர் கீழ்த்தளத்திலேயே பிரியாணி கடையைப் பார்த்துவிட்டோம் , களைப்பெல்லாம் அக்கணமே தீர்ந்துபோய்விட்டது.

 மறுநாள் காலையில் சாய்ந்த கோபுரமான பிசாவைக் பார்க்கத் தயாரானோம்.
சுற்றுப்பயணிகளுக்கு உதவ வரும் ஒற்றை சக்கர வண்டிக்காரன்

பழங்கட்டடக் கூரையின் வடிவ நேர்த்தி

இதுதான் வெட்டிக்கன் முதலில் பார்த்த சிட்டி.போப்பின் இருப்பிடம்.



தொடரும்.......

Comments

வணக்கம்
ஐயா.

இரசித்தேன் தங்களின் பதிவை பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...