Skip to main content

ரெ.கா கதைகளின் அழகியல்- கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை

ரெ.கா கதைகளின் அழகியல்

கடலில் விழுந்த துளி காணாமல் போவதில்லை



பின்னால் எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவர்.

ஒரு படைப்பாளரை  அவருடைய மெய்யியல் சிந்தனை வெளிப்பாட்டு அளவுகோல் கொண்டும் நிறுத்துப் பார்க்கலாம். அதிகமாக வாசிக்கின்ற ஒருவனுக்கும் தர்க்கரீதியாகச்  சிந்தித்து முடிவெடுக்க முடியும். பழுத்த வாழ்க்கை அனுபவமுள்ளவர்கள் தங்கள் பேசும்போது தத்துவமாக கொட்டுவதைப் பார்த்திருக்கிறோம். காதலில் தோல்வியுற்ற இளசுகளின் வாயில் தத்துவ வெளிப்பாடு இருக்கும். காதலித்த அதே பெண்ணைத் திருமணம் முடித்தவர்கூட தாடி வளர்த்து சலித்துப் போய் தத்துவத்தில் வந்து நிற்பார் . நவீன அரசியலைக் கட்டமைக்கும் இடது சாரிகளுக்கும், ஆன்மிக ரீதியாக வாசித்து முதிர்ச்சி பெற்றவர்களுக்கும் மெய்யியல் சிந்தனை வரும். பேச்சாளர்களின் பேச்சை செவிமடுப்பவன் மூலமும் தர்க்க ரீதியாகச் சிந்தித்து  முடிவெடுக்க முடியும்.
மெய்யியல் என்ற சொல்லின் பொருளை எளிமையாகச் சொல்வதென்றால் தெளிவான சிந்தனைக்கு வருதல் எனலாம். எது சரி எது தவறு? எது சரியான பாதை எது தவறான பாதை என்று தெரிந்து கொள்வதுதான் மெய்யியல். ஒரு தேர்ந்த படைப்பாளனின் நாவலில், கதையில், கட்டுரையில் தத்துவப் பார்வை வரும். அது அவனின் வாசிப்பின் நீட்சியாகச் சிந்திக்கும் போது பிறக்கும். பிர்சித்திபெற்ற  உளவியலாளர் நீட்சே தொடங்கி பெரியார் வரை மெய்யியல் மிக அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதை நாம் பார்க்கிறோம் .
 ஐரோப்பிய நாடுகளில் பதினெட்டாம்  பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் மக்கள் புரட்சி வெடிக்கிறது. ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி படாடோபமாக வாழ்ந்த அரசர்கள், நில உடமையாளர்கள், முதலாளிகளின் மேல் ஒரு புதிய வேள்வி தொடங்கப்படுகிறது. பராரி ஏழைகளின் சிந்தனை மாற்றத்துக்குக் கல்வி அறிவு புகுத்தப்படும் கட்டாயம் நிகழ்ந்தவுடன்தான் தங்களைச் ஒரு சக்தி வெகுகாலம் சுரண்டிப்பிழைப்பதை உணர்கிறார்கள். அப்போது பிறப்பதுதான் தனி மனித சுதந்திர தாகம் . அந்தத் தனி மனித விடுதலைக்கு வித்திட்டதின் நீட்சியாகத்தான்  தத்துவ சிந்தனை தெறிப்பு. அவ்வாறான சிந்தனையின் தாக்கமாகத்தான் படைப்பாளர்கள் உருவாகிறார்கள். படைப்பாளன் சமுகத்துக்கு எதனையோ சொல்ல வருபவன். வாசகனைப் போய்ச்சேர்ந்து அவனுக்குள் பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றால் மெய்யியல் சிந்தனை நல்ல ஆயுதம். ஜெயகாந்தன் நல்ல எடுத்துக்காட்டு. புதுமைப்பித்தன் தன்னுடைய பொன்னகரம் கதையில் சொல்வான் கற்பு கற்பு ன்னு கதைக்கிறிங்கள் இதுதாண்டா கற்பு என்று. கற்பு சார்ந்த நம்முடைய மரபார்ந்த கற்பிதம் அங்கே உடைந்து நொறுங்குவதை பார்க்கிறோம். டாகடர் ரெ.கார்த்திகேசுவின்  ‘ஊசி இலை மரம்’ தொகுப்பில் வரும் ஒரு கதையில் அவரின் மெய்யியல் வெளிப்பாடு துல்லிதமாக வந்து சேர்கிறது. ரெ.காவின் எனக்கும் அப்படித்தான் கதையிலொரு எடுத்துக்காட்டு:
கிழக்குப் பார்த்த மண்சிலை அது. அவருக்கு முன்னால்தான் சூரியன் உதிக்கிறது. அவருக்கு முன்னால்தான் கடல் பரந்து கிடக்கிறது. அவருக்கு முன்னால்தான் புதர்கள் பற்றி எரிகின்றன. எல்லாவற்றையும் அவர் பார்த்து அதே மாதிரிதான் சிரிகிறார். அனைத்து அபயஹஸ்தமும் அருளியவாறிருக்கிறது. இவர் இங்கு இருந்தாலும் இல்லையானாலும் இவை அனைத்தும் நடக்கும். இவர் இங்கே இருப்பதால் எல்லாம் நல்லவையாக நடக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இயற்கையின் இரக்கமற்ற நியதிகளை அவர் மாற்றப் போகிறாரா என்ன? மாற்றுவார் என் நம்பி சிலை வைத்திருப்பவர்களைப் பார்த்துத்தான் இந்தச் சிரிப்பு போலும்’
புத்தருக்குச் சிலை வைப்பது புத்த சமய விழுமியங்களுக்கு எதிரானது. அதனை அடிப்படையாக வைத்து ஒரு தத்துவ தரிசனத்தைக் காண்கிறார். இதனுள் செருகியிருக்கும் அங்கதம் அவருடைய தத்துவ வெளிப்பாட்டின் ஆளுமையை ரசிக்கவைக்கிறது.
எளிய எழுத்துநடை அவருடையது. ஆனால் கனத்த கதைப்பொருளைக் கொண்டிருக்கும். அதற்குள் அவர் கொண்டுவரும் உவமைகள் வேர் வளர்ந்த மரத்தின் தடயம் போல கதையோடு ஒட்டிக்கொள்ளும் வகைமையைக் கொண்டது. மேற்சொன்ன அதே கதையில் பாரம் தூக்கியை ராட்ச்சக் கொக்கு என் உவமிப்பார். கொம்தார் கட்ட்டத்தை வீங்கிய விரல் என்றும் சொல்வார்.
கவித்துவம்..
சிறுகதைகளில் கருவோ நடையோ கதைச் சிக்கலோ, பாத்திரப் படைப்போ முடிவோ மட்டுமே நல்ல கலைத் தன்மையைத் தந்துவிடாது. எங்காவது ஓரிடத்தில் கவித்துவம் தெறிக்குமாயின் அதுவே கதையைத் தூக்கி நிறுத்துகிறது. கவித்துவம் என்பது உணர்வு ரீதியானது. அதனைச் சொல்லி அடக்க முடியாது. சிறந்த சொற்கூட்டு  கவித்துவ உணர்வை தரலாம். அதற்கு      ஒரு உதாரணம் சொல்கிறேன். நீண்ட காலமாக ஒரு ஒன்றித்தே வாழ்ந்து வருகிறார்கள் ஒரு தம்பதியினர் . மனைவி ஒருநாள் திடீரென இறந்துவிட்ட செய்தி அவனுக்கு  எட்டுகிறது. கணப்பொழுதில் வாழ்க்கைக் கனவு சிதைந்துவிடுகிறது. எல்லாம் முடிந்துஒரு நாள் அவன் எண்ணிப்பார்க்கிறான். மனைவி இறந்து இரண்டு மணி நேரம் கழித்தே  அவனுக்கு அந்த துக்கச்செய்தி எட்டியிருக்கிறது. அந்தச் செய்தி எட்டும் நொடி வரைக்கும் அவனுக்கு அவன் மனைவி உயிரோடுதான் இருக்கிறாள் என்றுதானே பொருள். எனவே அவன் இரண்டு மணி நேரம் கூடுதலாக வாழ்ந்த மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறான்.. இப்படி நுணுக்கமாகச் சொல்லப்படுவதைத்தான் நாம் கவித்துவம் என்கிறோம். இந்த உணர்வு அலாதியானது .
   ரெ.கா மல்லியை என்ற பேத்தியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைகளில் கவித்துவம் மிளிர்வதைப் பார்க்கிறோம் .மல்லியும் மழையும் சிறுகதையில் , கதை சொல்லி மல்லியைப் பார்த்துக்கொள்ளும் தாத்தாவாக வருகிறார். மல்லி ஒருநாள் மழை என்ன வண்ணம் என்று தாத்தாவைக் கேட்கிறாள்.” தாத்தா மழைக்கு கலர் இல்லை,” என்கிறார். ஒருநாள் மல்லி மழையை வரைந்து அதற்கு ஒரு வண்ணத்தைக் கொடுக்கிறாள். “என்னாம்மா மழை இந்த கலர்ல இருக்கு. மழைக்கு கலர் இல்லியே என்கிறார். தாத்தா உங்களுக்கு ஒன்னும் தெரியாது வாங்க நான் காட்றேன்,” என்று அழைத்துக்கொண்டு போகிறாள்.
 அங்கே மொசைக் தரையில் மழை நீர் மிதக்கிறது. “தோ பாத்திங்களா மழை இளஞ்சிவப்பு என்று காட்டுகிறார். மொசைக் இளம் சிவப்பு நிறம்தான் நீரில் பிரதிபலிக்கிறது. குழந்தை கண்டுபிடிப்பில் எவ்வளவு கவித்துவம் பாருங்கள். குழந்தையின் பார்வையில் தவறு இருக்கலாம். அந்த வெள்ளந்தியான சிந்தனைதான் கவித்துவமாக நமக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பேச்சிலும்  அரிய கலையைத் தந்து பிரமிக்க வைக்கிறார்கள். அவர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் கலையின் மூலம் நாம் பரவசமடைகிறோம். நாமும் அக்கணத்தில் குழந்தையாகி விடுகிறோம் . கவித்துவம் என்பது மிக நுணுக்கமானது. உணர்வுத்தளத்தை அசைப்பது. “ஒங்களுக்கு ஒன்னும் தெரியாது தாத்தா’ என்று  நல்ல படித்தவரை, அனுபவ சாலியைக் கேட்கும்போது நாம் அவர்களைப் போலவே குழந்தைப் பருவம் எய்துகிறோம். குழந்தைகளின் இந்த கவித்துவ இயல்பை நமக்குக் கிடைத்த ஒரு அரிய  கலை. அவர்களை அப்போது நம் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு இன்புறுகிறோம்.
லட்சிய வாத எழுத்துகள்
டாக்டர் ரெ.கா வின் முதல் சிறுகதைத் தொகுதி 40 ஆண்டுகளுக்கு முன்னால் வெளி வருகிறது. சராசரி மனிதனாக இருந்த ஒருவன் ஏன் எழுத்தாளனாகிறான் என்பதற்கான காரணம் அந்நூல் எனக்குத் துல்லிதமாகக் காட்டியது. பொதுவாகவே எழுத வருபவர்கள் அறச் சீற்றத்தோடுதான் வருகிறார்கள். இந்தச் சமூதாயத்தைச் சீர் திருத்தவேண்டும் என்ற வேட்கையோடுதான் பேனாவை ஏந்துகிறார்கள். தன்னால் அரசியல் வாதியாக முடியாது, பொது இயக்கங்களில் இருக்கவும் வாய்ப்பில்லாதபோது பேனாவை கையிலெடுக்கிறான். பொது இயக்கங்களிலும் அரசியல் கட்சிகளிலும் காலூன்றிய நாற்காலிப் பித்து அரசியல் நவீன எழுத்தாளனை எட்டிப்போக வைக்கிறது. எனவே அவனே ஒரு இயக்கமாக மாறுகிறான். தனி மனித இயக்கமாக. எழுதி இச்சமூகச் சீர்கேட்டைக் கலைத்துவிடவேண்டும் என்ற வெறி. பெரும்பாலும் எழுத்தாளர்கள் இப்படித்தான் எழுத வருகிறார்கள். இதைத்தான் நாம் லட்சியவாத எழுத்து என்கிறோம்.( பல சமயம் என்னை எழுத்தான் என்று அடையாளம் கண்டவர்கள் கூட சார் ‘இந்த அந்நியாயத்தையெல்லாம் எழுதுங்க சார், மக்கள் படிச்சி திருந்தட்டும்; எனபார்கள். படைப்பாளனை லட்சியவாதம் நோக்கித் தள்ளும் வாசகனின் லட்சியவாதம் இது) பத்திரிகையில் முதல் படைப்பு வெளியானதும் ‘இந்தச் சமூகம் திருந்தப் போகிறது பார்’ என்ற போதை தலைக்கேறும் . ஆனால் எழுதி எழுதிச் சலித்த பின்னர் ‘ஒன்னும் கடைதேறாது போல இருக்கே’ என்ற முடிவுக்கு வருகிறான். நான் அப்படித்தான் வந்தேன். நான் பார்த்த பிறரும் அப்படியான எழுத்தைத்தான் கொடுத்தார்கள். ஆனால் ஒன்றும் நடக்காத போது.. படைப்பிலக்கியம் என்பது கலை வடிவம். கலையின் எல்லை மிக பரந்து விரிந்த ஒன்று. அது நின்றுதான் கொல்லும் தெய்வம் மாதிரி என்று ஒரு முடிவுக்கு வருகிறான். கதையுக் கவிதையும் நாவலும் கட்டுரைகளும்  அதைத்தான் செய்யும். கடலில் விழுந்த ஒர் துளிபோல அது காணாமற்போகலாம்  ஆனால் அந்தத் துளி கடல் நீருக்குள்தான் சங்கமித்திருக்கிறது என்று மெல்ல புரிந்து கொள்கிறான். டாக்டர் ரெ.காவின் புதிய தொடக்கம் தலைப்புக்கு ஏற்ற மாதிரி லட்சிய வாத எழுத்தாகவே நான் பார்க்கிறேன். குறிப்பாக, சஞ்சிக் கூலி, மனக்கணக்கு,, வாழ்க்கைக் கதை’ போன்ற கதைகளில் லட்சியவாத நோக்கு தெளிவாகத் தெரிகிறது. அடுத்து வந்த நான்கு தொகுப்புகளில் அந்த எழுத்து வகை மாறி யிருக்கிறது. கதைகள் கலை அம்சங்களாக மாறும் ரசவாதம் நிகழ்ந்திருக்கிறது.
ரெ.கா கதைகளை மீள் வாசிப்புக்கு உள்ளக்கப்பட வேண்டும். அவர்  வாசகர்களால் கொண்டாடப்பட வேண்டியவர். அதனைக் கருத்தில் கொண்டே 20.3.16 ஞாயிற்றுக்கிழமை, மலாயா பல்கலையில் காலை 9.00 துவங்கி ஒரு நாள் கருத்தரங்கை முன்னெடுத்திருக்கிறது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...