அவள் முகத்தைக் கண்ட மாத்திரத்திலேயே என் இயல்பு சரிந்துவிட்டிருந்தது. சோகம் ஒட்டுண்ணியோ? நாற்பதாண்டுகால தாம்பத்யம்.
அறுபதைக்கடந்து விட்டிருந்த முகம் .அவளுக்கு மூப்பேறிக் கொண்டிருக்கிறது என்பது சோகசெய்திகளின் கிடங்கான இதயத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் உண்டாவது ! இதயம் எவ்வளவுதான் தாங்கும்? அதனை இடம் பெயர்த்த வேண்டாமா? அதற்காகத்தான் முகம் என்றாகிப்போனதோ!.காரை பெயர்ந்து வாட்டத்தில் மேலுமொரு சோகத்தைதப் புதிதாய் பதிவேற்றம் செய்து வைத்திருந்தது. அதனை வெளியேற்ற என் வருகைக்காகக் காத்திருந்தாள் போலும்!
“என்னாச்சு?’
சற்று நேர மௌனத்துக்குப் பிறகு- “அவனுக்கு கொழந்த பொறந்திருக்கு.” நான் எதிர்பார்த்த செய்திகளில் ஒன்று என்பதால் மனம் துணுக்குறாமல் நின்றது.
“சொன்னா கேக்குற ஜன்மமில்லையே அவன்.”
“அவளுக்கு வேணுமே.... பொண்ணில்லியா?”
“அதெல்லாம் இல்ல. அவன நிரந்தரமா புடிச்ச வச்சிக்கிற தந்திரம். தொல்லைய இல்ல, தேடிக்கிறான். இப்பியே மறைச்சி மறைச்சி வச்சிருக்கான். அவளுக்குப் பட்டும் படாம இருக்கு. நமக்கும் சேத்துல்ல வில்லங்கம்”
“ஆம்புல பையனாம்”
“போய்ப் பாக்கணும்னு தோணுதோ? அப்படி ஒரு ஆசை இருந்தா விட்டுடு, ஒட்டுறவே வேணாம்னு தொலச்சாச்சு. கொழந்த பொறக்கலன்னு நெனச்சுக்கோ .”
அப்படி நினைக்க முடியுமா என்ன? இருப்பை இல்லையென்று நிராகரிக்க இயலுமா? என்ன அறிவுரை இது? மறக்க மறக்க தளிர் விட்டு இலை விட்டு கிளைக்குமில்லையா? மனசு கடலைவிட ஆழமாகி அகண்டு அலை பாயுமே!
மகன் வழி பிறப்பு! மகிழ்ச்சியான விஷயம் என்று மனிதன் நினைக்கும் கருதுகோள் உள்ளபடியே துயரங்களைத் தூண்டிவிடும் , பெரிதாக்கும் ஊற்றுக்கண்ணாகவே அமைந்துவிடுகிறது. இந்தப் பிறப்பும்......
அவள் மீதும். அந்த அந்தரங்க வாழ்க்கையின் மீதும் ... வெறுப்பையே தரித்துக்கொண்ட மனம் ,சற்று திசை மாறி குழந்தையைப் பார்க்கத் தாவுகிறது. என்ன மனம் இது? ஒரு கணம் அப்புறப்படுத்தியதையே , மறுகணம் அரவணைக்கத் துடிக்கிறது! மனம் இயல்பிலேயே இரட்டை நிலை கொண்டதா? அல்லது நம்முடைய இருப்பை உணர்வுகள்தான் சதா நினைவுறுத்திக்கொண்டே இருக்கிறதா?
“ஆறு பேரப்புள்ளைங்களாச்சு. அதோடு இன்னும் ஒன்னு. ஏழாச்சு”
“நமக்கு ஆறுதான். ஏழுன்னு கணக்கு வைக்காத. கணக்குக்கு அது சரியா இருக்கலாம். வாழ்க்கைக் கணக்குக்குச் சரியா வராது. இவளுக்குத் தெரிஞ்சா சிருப்பா சிரிச்சு போய்டும் பொழப்பு. இவ சந்தேகப் பட்டு .........சாடையும் மாடையுமா குத்துறது நெனைக்கும் போதெல்லாம் வலிக்குது. என்னமோ நாமதான் சேத்து வச்சிட்டது மாதிரியும், கூடிக் கொலாவுறது மாதிரியும், கற்பன பண்ணிக்கிறா. நமக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு எப்படி நிரூபிக்கிறது. அப்படி நிரூபிப்பதுகூட பெரிய பொய்யாக முடிந்துவிடும்! வெளிப்படையா அவளும் கேட்கும்போதும். நமக்குத்தெரிந்த ஒன்றை அவளுக்குத் தெரியாமல் மறைத்து வைப்பது குற்றம்தான். என்ன தர்ம சங்கடம்? இன்னொரு கல்யாணம் வேண்டாண்டான்னு தலப்பாட அடிச்சிக்கிட்டாச்சு.கேட்டானா? ரகசியமா கட்டிக்கிட்டு கால்ல விழுந்தான். பிள்ளையா போய்ட்டான்; மன்னிச்சாச்சு.
கொழந்த வேணாண்டா. அப்புறம் வில்லங்கமெல்லாம் கூடையே கூட்டிக்கிட்டு வந்திடும்னு தலப்பாட அடிச்சிக்கிட்டோம்.. கேட்டானா? தோ பொறந்திடுச்சு. “கவச குண்டல மாதிரி ” வில்லங்கத்தோட.
எல்லாவற்றையும் அவன் அம்மாவோடுதான் பகிர்ந்து கொள்வான். பிறகுதான் என் காதுக்கு வரும். என் மேல் அவனுக்கிருக்கும் பயமா? மரியாதையா ? இதெல்லாம் அப்பா தாங்க மாட்டார் என்ற கரிசனையா? அந்த மூன்றும்கூட இருக்கலாம். இதிலெல்லாம் கண்டுங்காணாமல் இருந்துவிடலாமே, என்று விட்டொழிக்கவும் முடியவில்லை. ரத்த உறவு தொடர்பறுந்து போனதுண்டா? நம்மையும் இழுத்துவைத்துக்கொண்டு சதுரங்கம் ஆடுவதுதானே உறவின் இயல்பு!
வாரத்தில் இரண்டு நாட்கள் அவள் வீட்டிலும், மற்ற ஐந்து நாட்கள் இவள் வீட்டிலும் வாழ்க்கை. இப்படித்தான் இவளிடம் ஒப்பந்தம். இவளிடம் ஐந்து நாட்கள் என ஒப்பந்தம் செய்தால் என்னாவது? திரைக்குப்பின்னால் எதுவுமே நடக்காதது போன்ற பாவனை. முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒப்பனையை எப்படி நீக்குவது? மனைவி என்றாலே கணவனின் செயல்பாடுகளை ரகசியமாய் உளவு பார்க்கும் உளவு பேதா பணியையும் அல்லாவா கூடுதலாக சுமக்கத் தயாராகி விடுகிறார்கள்! அந்த இரண்டு நாட்கள் கழித்து வீடு திரும்பும்போதெல்லாம் இவள் தொடுக்கும் வினாக்களுக்கு விதம் விதமாய் பதில் சொல்வது சந்தேகங்களை வலுபடுத்தவே என்று ஆகிக்கொண்டிருந்தது. அந்த விதம் விதமான பதில்கள் விவாதங்களில் பொய்களாக உருமாற்றம் அடைந்துவிடுகின்றன. முற்றி முற்றி சுவர்களிலும் கூரைகளிலும் பதிவாகி வீடு இரண்டாகப் பிளந்து சரிவதற்கான சாத்தியங்களாக , கீறல்கள் வெடிப்புக்ளாவதற்குக் காத்துக்கொண்டிருக்கலாம்.
சந்தேகங்கள் வலுக்கும்போது. ஆதாரங்கள் கையில் கிட்டும்போது!
மகனுக்கும் முதலாமவளுக்குமான உறவு யூகங்களால் உருவாகும் விரிசல்களைப் பெரிதாக்கி விடக்கூடாது என்பதில் நாங்கள் இருவருமே மிகக் கவனமாக காய்களை நகர்த்தும் கட்டாயத்துக்கு ஆளாகியிருந்தோம். அவனின் ரகசிய வாழ்க்கையில் ஒட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளாது ஒதுங்கியே இருந்தோம். இவனை அவள் வளைத்துப்போட்ட கோபம். வாழ்க்கையைமேலும் இடியப்பச் சிக்கல்களாக்கிவிட்ட அவலம்.
ஆனால் குழந்தை பிறந்தவுடன் அந்த கொள்கை கெட்டிப்பு உடையத் துவங்கியிருந்தது.
ஏழாவது என்று மனைவி குறிப்பிட்டதுதான் அதன் அடிநாதம். குழந்தை பிறப்பதற்கு முன்னர் எந்தச் சலனமும் இல்லை. மகன் இரண்டாவது ஒன்றைத் தலையில் கட்டிக்கொண்டான் என்ற நிஜம் உருத்திக்கொண்டிருந்தாலும், அதனை பொருட்படுத்தாது வாழ்க்கை அதன் போக்கில் பயணித்துக்கொண்டுதான் இருந்தது. நீரோட்டத்தில் எதிர்ப்பாரா தடைகளால் சுழிப்பு உண்டாகுமல்லாவா?
ஆனால்.......குழந்தை ! அதன் மென்மையான நகக்கண்களை ஸ்பரிசிக்கவும், அதன் உடலில் புதிய உயிர் தவழ்ந்து கொண்டிருப்பதை உணரவும், அதன் ரத்த வாடையை முகர்ந்து இன்புறவும், எந்தப்பாவமும் அறியா முகத்தில் முத்தமிடவும், முடியாமல் ஒதுங்கியே இருப்பது எவ்வளவு கொடுமையானது! அதனிலிருந்து பாயும் மின்சாரம் தாத்தா பாட்டிகளை துவம்சம் செய்துவிடுமே! மகனைப் பிரசவித்தபோது அனுபவித்த அதே உணர்வு இப்போதும் உரசிச்செல்கிறது. சில சமயம் அதைவிட மேலாய்! இப்போது தொட முடியாத தவிப்பில் துன்பியல் நாடகம் ரகசியமாக அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
இந்த ரகசிய வாழ்க்கையை அங்கீகரிக்காது அவனோடு மல்லுக்கு நின்றதும், அவளிடம் சாம தான பேத தண்ட வழிமுறைகளைக் கையாண்டு தோல்வியில் முடிந்தது மட்டுமின்றி, இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று வெறுத்து விலகி நின்றதும், இன்றைய தேதி வரை அந்தப் பிடிவாதத்தைத் தளர விடாமல் இறுகியே இருந்திருக்கிறது.
ஆனால்... குழந்தை என்ற ஜீவன்.............எப்படி உலுக்குகிறது ! தளரத் தளர...... பிடி உதிர உதிர...........எல்லா பிடிவாதங்களையும் தூள் தூளாக்கியவாறு .
அவர்களுடைய ரகசிய வாழ்க்கையை அங்கீகரிக்காதபோது, குழந்தையை மட்டும் பார்க்கவேண்டுமென்று நினைப்பது எவ்வளவு அபத்தம்!
அவள் அந்நியம்தான். அவன் சேர்த்துக்கொண்டபோதும். அந்நியம் என்ற சொல் அந்நியமாகவே நிலைக்காது .காலம் அதனை எத்துணை சாமார்த்தியாமாகத் தள்ளுபடி செய்துவிடுகிறது. காலத்தின் மேல் பழியைப் போடுவதுகூட பச்சைப் பாசாங்கு. மனித மாயை....... மன ஆசை........ அதிலும் உறவு ............ரத்த உறவு இப்போது எங்கே போனது அந்த அந்நியம்?. உறவு என்ற வித்துக்குள் கண்கள் அறியாமல் மறைந்து கண்ணா மூச்சி ஆடியதோ? ஆனால் உறவு மீண்டும் அந்நியாமாவதைத் தடுக்கமுடியுமா? உறவும் அந்நியமும் நிச்சயமில்லாததுதானே? அப்படியானால் எது நிஜம்?
குழந்தையைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதல் குமிழியாக குதித்து கொப்பளித்தாலும் -கணவனை முதலாமவளிடம் போகவிடாமல் தடுக்க முயலும் அவளின் வியூகமும், சாதுர்யமும் அவளின் மேல், மேலும் வெறுப்பை உமிழச் செய்கிறது. அவன் திருமண வாழ்வில் இரண்டு குழந்தைகளும் குடும்பமும் அவள் நினைவைப் பாதிக்காதோ? குடும்பம் இருப்பது தெரிந்துதானே சேர்த்துக்கொண்டாள்.
அவளைத் குடும்பத்தில் ஒருத்தியாக அங்கீகரிப்பதில் புறக்கணித்தது எவ்வளவு பெரிய தப்பு? குழந்தையிடம் நெருங்கவிடாமல் தடுப்பது அதுதானே!
ஓய்ந்த நேரங்களிலெல்லாம் நினைவுக்கொடி குழந்தையையே சுற்றிக்கொண்டு ஏறுகிறது. மனம் மந்திரிக்கப்பட்டதுபோல அவனைக்காணத் துடிக்கிறது.
குழந்தையோடு குதூகளிக்கும் தருணகங்களைத் தாமாகவே மனம் சுவீகரித்துக்கொள்கிறது. ஓய்ந்த நேரங்களிலெல்லாம் காலி இடங்களை இட்டு நிரப்பியவண்ணம் இருக்கிறது. அது நிகழ்த்திக்காட்டும் அரிய தருணங்கள் சொற்களுக்குள் அடக்கிவிட முடியாதவை. அது பட்டென்று முடிவுக்கு வந்ததும்...... கொண்டாடிய இடத்தில் திடீரென துயரம் இடம் பெயர்ந்து நெஞ்சுக்கூட்டின் மேல் வந்தமர்ந்து கனத்து அழுத்துகிறது. ஒரு ரிஷியின் நெடு நாள் மோனம் கலைந்துவிட்டது போல.
வாழ்நாளில் மிக உன்மத்த தருணங்கள் தரிசிக்கும் வாய்ப்பு கூடிவராமல் இப்படியே கடந்து போய்விடுமோ?
இது கூடாமல் போனால் அந்திம காலத்து நாட்களின் கொடுமை படிமமாகவே நிலைத்துவிடுமோ? கைக்குக் கிட்டாத துர்ரதிஸ்டத்தை எதனைக்கொண்டு நிரப்ப முடியும்?
மூன்று வீடு தள்ளியிருக்கும் பார்வதி தன் பேரனைத் தூக்கிக்கொண்டு கதைக்க வரும்போதெல்லாம் தன் மகனின் குழந்தயையே அவள் பார்க்கிறாள். பார்வதி பேசும் வார்த்தைகளுக்குள் அவள் முழுதாய் கவனம் செலுத்த முடியவில்லை. குழ்ந்தையின் அசைவு அவளை அலைக்கழிக்கிறது. மென்விரல்களை ஸ்பரிசித்துப் பார்க்கிறாள். அவன் அதரங்களில் இழையோடும் புன்னகையால் ஒரு கணம் தன்னை இழந்துவிடுகிறாள். குழந்தையோடு தன் இருக்கும் அந்த உன்னத உணர்வுகளுக்காக அவளின் ஏங்குவது எப்போது நிவர்த்தியாகும் என்று அவளுக்குத் தெரியவில்லை. சில அபூர்வத் தருணங்களில் பார்வதியின் பேரன் தன் மகனின் ரத்தமாக – தன்னில் ஒருவனாக ஐக்கியமாகத் துடிக்கும் பிரம்மை தாக்கிவிட்டுச் சென்றுவிடுகிறது. ஆம் சென்ஊவிடுறது!
“குழந்தையைத் தூக்கிட்டு வரட்டா ,”என்று அவனும் கேட்டுத்தொலைக்கவில்லை. “குழந்தைய பெத்துக்காத” என்ற எச்சரிக்கை அறிவுரை எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டவன் குழந்தையைக் கொண்டு வந்து காட்டத் துணிவானா? குழந்தயைக் காட்டுவது மிகப்பெரிய பிரளயத்தை உண்டுபண்ணிவிடும். குழந்தயைச் சாக்கிட்டு பழகும் சந்தர்ப்பத்தில் இன்னொரு குடும்பம் இருப்பது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லும் கோமாளித்தனமாகிவிடும்.. அவர்களுக்கிருக்கும் ஈகோவில் ‘குழந்தையைக் கொண்டு வாடா பாக்கலாம்’ என்று கேட்கவுமில்லை. குழந்தையைக் கொண்டு வந்து காட்டாமல் இருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவனுக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. அவளின் கெடுபிடியாலும் குழந்தையைக் காட்டாமலிருக்கலாம். குழந்தைக்காக கிழங்கள் தன்னை நத்தி வரவேண்டும் என்ற வன்மக் கொள்கையுடையவளாக இருக்கலாம். ஏதோ ஒரு முடிச்சில் இதற்கான பதில் சிக்கிக்கொண்டிருக்கலாம். முடிச்சை அவிழ்ப்பத்துதான் பிரச்னை. மனிதக் குறைகளை வெறும் பலகீனக்களாகப் பார்க்கக் கற்றுக்கொள்ளும் வரை குரோதங்களும், காழ்ப்புகளும் கிளைவிடத்தான் செய்யும்.
அன்றைக்கு......
குழந்தையும் கையுமாய் அவளை மார்க்கெட்டில் சந்திக்க நேரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
குழந்தையை தோளில் சுமந்தவாறு வாங்கிய பொருளுக்கு பணம் கட்டுகிறாள். குழந்தை மலங்க மலங்க பார்க்கிறது. இதழ் விரித்த ரோஜாவை மலர்கிறது. கையெட்டும் தூரத்தில் இருக்கும்போது மின்சாரம் யவ்வனம் கொண்டு பாய்கிறது. முகத்தை பார்க்க வாய்ப்பில்லாதவரை குழந்தையைத் தொட்டுணர்ந்து சுவாசிக்கும் தருணம் மாயையாகவே இருக்க, கையெட்டும் தூரத்தில் இருக்கும்போது அதன் மேல் உண்டாகும் உணர்வு அதனை உச்சி முகரும் வரை தீராது போலும்.
ஒரு கனம் அவளிடமிருந்து கைகள் மட்டும் தனியாக விலகி நீண்டு அதனைத் தூக்கி உச்சி முகர்கிறாள். கைக்குள் குழந்தை வந்த தருணம் இருதயத்தில் கனத்துக்கொண்டிருந்த பெருஞ்சுமை கண நேரத்தில் உதிர்ந்து மனம் காற்றில் மிதக்கும் பஞ்சாகிவிடுகிறது. உடலின் மூப்பு மறந்து துடிப்பு சேர்ந்துகொள்கிறது. உடலுக்குள் ஒரு ஊக்கச் சக்தி நுழைந்துகொள்கிறது.பார்வையில் பளிச்சென்ற மின்னல் பாய்கிறது. ஒரு மாய ஸ்பரிசம் உடலுக்குள் இழை இழையாய் நுழைகிறது. மகனின் உதிரம் ஓடும் கன்னங்களில் எச்சில் படரப் படர முத்தாடுகிறாள். இரு கைகளிலும் வந்துதித்த குழந்தை யாரோ எவரோவென்று உற்று உற்றுப் பார்க்கிறது. சற்று அசைந்து தன்னைப் புதிய சூட்டுக்குள் ஐக்கியமாக்கிக்கொள்கிறது. ஏகாந்தம் என்பதில் உணர்வு ரீதியான பொருள் இப்போது அவளுக்குப் புலனாகிறது. ஒரு உயிர் துடிப்புள்ள புதிய ஜீவன் கைக்கு வந்ததும் ஒரு இனம்புரியா மகத்தான உணர்வு உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை பாய்ந்து பரவசமூட்டிய வண்ணம் இருக்கிறது.
குழந்தையின் உதட்டில் குறும் புன்னகையொன்று விகசித்து விகசித்து மறைகின்றது.குழந்தையின் உடற்சூடு அவளை கோடி ஆனந்தச் சுகானுபவத்தில் நுழைக்கும், அந்த நேரத்தில் குழந்தையை மீண்டும் தாய் வெடுக்கெனப் பறித்துக்கொள்கிறாள். திரும்பிப்பார்க்காமல் அந்த இடத்தை விட்டே விரைந்து போய்விடுகிறாள்.
சற்று முன்பு குழந்தை தவழ்ந்த கைகளைப் பார்க்கிறாள், எப்போதும் போலவே கைகள் ஏங்கித் தவிக்கின்றன. குழந்தையின் உடற்சூடு தணிய இன்னும் சில நொடிகளாகலாம்.
சற்று நேரத்தில் அதுவும்கூட தீர்ந்துவிடும்.
Comments
ஐயா
கதையை படித்து முடித்ததே தெரிய வில்லை அவ்வளவு சுவைபட சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-