Skip to main content

கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும்

கோ.புண்ணியவான்





என் காரின் டெஷ்போர்ட் காபினெட்டின் பழைய குப்பைகளை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்த போதுதான் கோபாலின் நினைவு மீண்டும் வந்தது. இரண்டு அங்குல அகலமும் ஐந்து அங்குல நீளமும் கொண்டு, பின் செய்யப்பட்டு இணைக்கப்பட்ட வண்ண வண்ண தாளில் அவன் கைப்பட எழுதி என்னிடம் கொடுத்த பொன்மொழிகளைப் பார்த்தபோதுதான் கோபாலை நினவுகூரும் சந்தர்ப்பம் உண்டானது. அந்தத்தாட்கள் அவன் வேலைசெய்யும் இடத்தில் வெட்டி வீசப்பட்டதாக இருக்கவேண்டுமென்ற எண்ணம் அதனைப்பார்த்தபோதே தேவையில்லாமல் தோன்றி மறைந்தது. கோபாலைக் கடைசியாகச் சந்தித்து இரண்டாண்டுகளிருக்கும். அவனை அருதியாய் மறந்துவிட்டிருந்தேன். நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு அவன் பெரிய மனிதர் ஒன்றும் இல்லையென்றாலும் அவனைப்பற்றிச் பிறரிடம் சொல்வதற்குச் சுவாரஸ்சியமான சம்பவங்கள் நிறையவே இருந்தன.

அவன் புத்தகங்களில் படித்த பொன்மொழிக¨ள் எழுதி அதற்கு விளக்கமும் எழுதியிருந்தான். முத்து முத்தான கையெழுத்தில் நீல மைகொண்டு எழுதி அதன் பொருளைச் சிவப்பு மையால் எழுதியிருந்தான். முதல் பார்வையில் திருக்குறள் எழுதப்பட்டிருக்கின்றன்னவோ என்றுதான் நினைக்கத்தோன்றும். எல்லாம் எனக்குத்தெரிந்த புளித்துப்போன பொன்மொழிகள். அழகான கையெழுத்துதான் அதனைப்படிக்க என்னை ஈர்த்தது. அவனைப்பற்றி ஞாபகம்கொள்ளவும் செய்தது. கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து சரியாக இருக்காது என்று எப்போதோ யாரோ சொன்னதை நம்பத்தகுந்ததாக இல்லை என்று புறக்கணித்து வந்தேன் . டாக்டர்களின் கையெழுத்தே அவர்களின் தலையெழுத்தை நிர்நயிக்கவில்லையா? ஆனால் கோபால் விஷயத்தில் கையெழுத்தை தலையெழுத்தோடு சம்பந்தப்படுத்துவது நம்பும்படியாகவே இருந்தது.

நான் பார்த்த இந்தப் பத்து வருடங்களில் கோபால் பட்டணத்தின் பல சுப்பர் மார்க்கெட்களில் ஸ்டேசனரி விற்கும் மையத்தில்தான் வேலை செய்து வருகிறான். கதை எழுத தாட்கள், பேனா, உறை வாங்கப்போகும்போது கோபால் எந்த மூளையில் வேலை செய்தாலும் முன்னால் திடீரெனப் பிரசன்னமாகி “சார் சௌரியாமா இருக்கீங்களா?” என்று கேட்டு என்னைச் சற்றே திகைக்கவைத்துவிடுவான். நான் அவனை சற்றும் எதிர்ப்பாராத நேரத்தில் என் முன் தோன்றி என் நலத்தை விசாரிப்பான். ஆனால் நான் பல சந்தர்ப்பங்களில் அவனிடம் அதே கரிசனத்தைக்காட்டியதில்லை. அப்போதெல்லாம் எனக்கு என்மேலேயே வெறுப்பு ஏற்பட்டதுண்டு. நலம் விசாரித்து அவனைப்புண்படுத்த விரும்பாததுதான் காரணம்.

கடைசியாகச் சந்தித்தபோதுதான் நான் தைரியமாகக்கேட்டேன். இந்தப் பத்து ஆண்டுகளில் அவன் குணமடைந்திருக்ககூடும் என்ற எண்ணத்தில் இந்த முறை அப்படிக்கேட்கும் துணிவு வந்தது.

அந்தக்கேள்வியைச் மிகச்சாதாரணமாக அவன் எடுத்துக்கொண்டது எனக்கு வியப்பை ஊட்டியது. அவனுடைய வியாதியை அவன் புரிந்து ஏற்றுக்கொண்டான் என்பதே பெரிய விஷயமாக எனக்குப்பட்டது. என் கேள்விக்கு எதிராக அவன் தன் பலவீனத்தையோ, தாழ்வு மனப்பான்மையையோ காட்டாதது எனக்குக் கொஞ்சம் ஆறுதலை உண்டு பண்ணியது. அதற்கு அவன் கொடுத்த பதிலிலிருந்து , நான் காட்டிய கரிசனத்தை அவன் உள்ளுணர்ந்து கொண்டான் என்பதே எனக்கு உவப்பாகவும் இருந்தது.

ஏதோ இரண்டொரு மருந்து மாத்திரைகளை என்னிடம் காட்டி அவற்றின் பேரைச்சொல்லி அதைச் சாகும் வரை தான் தொடர்ந்து சாப்பிட்டே ஆகவேண்டும் என்று கோபால் கூறியபோது அவன் மீதான கழிவிரக்கம் சுரந்தது. பத்தாண்டுக்கும் மேலாக பல்வேறு சூப்பர் மார்க்கெட்டுகளில் வேலை செய்கிறானே என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் எனக்கேட்டேன். “சேல்ஸ் செக்ஷென்ல என்ன சார் பெருசா கொடுத்திரப்போறான்? நானூத்து அம்பது வெள்ளிதான் சார்,” என்றான். “வாழ்க்க எப்படியோ ஓடிக்கிட்டிருக்கு சார்” கிட்டதட்ட 30 ஐ தாண்டிவிட்ட கோபாலின் சம்பளம் வெறும் நானூற்று ஐம்பதுதான் என்றால் தன் நிலை கருதி கொடுக்கிற சம்பளத்தில் தெரிந்த வேலையில் இருப்பதுதான் புத்திசாலித்தனம் என் முடிவெடுத்திருக்கக்கூடும்.

அந்த உரையாடலின்போதுதான் பொன்மொழிகளை எழுதிய அந்தத் துண்டுத்தாட்களை என்னிடம் கொடுத்து அதற்குப்பொருளைத் தானே எழுதியதாகவும் அவற்றின் சில பொன்மொழிகள் தன் சுய கற்பனையில் உருவானது என்று கூறிய போதுதான் அவன் முன்னாலேயே அதனைப்புரட்டிப் படிப்பதுபோல பாவனை செய்துவிட்டு, அதற்குப்பிறகுப்பிறகு அதனைப்படிக்க வேண்டும் என்ற எண்ணமே வராமல் போய்விட்டது. அவனைக்கடைசியாக சந்தித்தபோதுதான் என்னிடம் தனக்கு நல்ல நாவல்களைப் படிக்கக்கொடுக்கவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான். தனக்குள் ஒரு படைப்பாளன் உருவாகிறான் என்ற நினைப்பு அவனுக்குள் வளர்ந்திருக்கக்கூடுமென எண்ணியவாறு இருந்தேன். நாவல்களைக் கேட்டதற்கு நான் அப்போதைக்குச் சரியென்று தலையாட்டிவிட்டு பின்னர் அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் மறந்தேபோனேன்.



ஆசிரியர்களும் கோபாலும்



கோபால் எனக்கு அறிமுகமானது நான் விவேகானந்தத்தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப்பணிபுரிந்த போதுதான். பள்ளிக்கு ஆசிரியர் தேவைப்படும் பட்சத்தில் தலைமை ஆசிரியரே தகுதியான ஒருவரை நியமித்துக்கொள்ளலாம் என்ற வசதியைக் கொடுத்திருந்தது கல்வி அமைச்சு. பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லி எஸ்.பி.எம் சோதனையில் மலேசிய மொழியோடு நான்கு கிரடிட் வாங்கித் தேர்ச்சி பெற்ற ஒரு பையனைப்பார்த்துக்கொண்டு வாருங்கள், நம் பள்ளிக்கு உடனடியாக ஒரு ஆசிரியர் தேவை என்றதும், மறுநாளே முருகேசன் ஆசிரியர் கோபாலை என் முன் கொண்டு வந்து நிறுத்தினார். “நீங்க இண்டர்வியூ பண்ணிட்டு தேர்ந்தெடுத்துக்குங்க சார்,” என்று சொல்லிவிட்டு கைகழுவிக்கொண்டார்.

கால அட்டவணைப்பிரகாரம் உடனடியாக ஆசிரியர் நிரப்பப்படவேண்டும். இல்லையென்றால் ஆசிரியர் கிடைக்கும்வரை நான்காம் வகுப்பில் பாடமே நடக்காமல் போய்விடும். பாடம் நடக்காமல் போனாலும் பரவாயில்லை. கண்காணிக்க ஆள் இல்லையென்றால் வகுப்பே ரெண்டுபட்டுப்போகும். அந்த வகுப்புக்குப் பிற ஆசிரியர் போடுவதும் உசிதமில்லை. அதை அவர்களின் வேலை பலுவை அதிகமாக்கி விடுவதோடல்லாமல், பலர் வகுப்புக்கு முனகிக்கொண்டே போய்வந்து கொண்டிருப்பார்கள். பாடங்கள் சரிவர நடக்காது. தனக்குப்பாடங்கள் அதிகம் கொடுத்துவிட்டீர்கள் ஓய்வெடுக்கூட அவகாசமில்லையென அழுது தொலைப்பார்கள் சில ஆசிரியைகள். இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாமென்றுதான் கோபலை அன்றைக்கே வேலையில் அமரும்படி உத்தரவிட்டிருந்தேன்.

அவன் சான்றிதழில் தற்காலிக ஆசிரியருக்கானத் பொருத்தமான கல்வித்தகுதியைகொண்டிருந்தது. எஸ்.பி.எம்மில் இரண்டாவது கிரேடில் தேர்ச்சிபெற்று ஆறு கிரடிட்டுகளைப்பெற்றிருந்தான். நேர்முகத்தேர்வின்போது மிகுந்த பணிவோடு பேசினான். உடல் மொழிகூட எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆள் ஐந்தடி ஆறங்குலத்துக்கு வளர்ந்திருந்தான். கொஞ்சம் கருப்பாய் புன்சிரிப்பு வரைந்த முகத்தோடே காணப்பட்டான்.வயது 21 ஐத்தொட்டிருந்தது.

“மாணவர்களுக்கு எப்படி முறையா பாடம் நடத்தனும்னு எனக்கு ஓய்வா உள்ள நேரமெல்லலாம் சொல்லிக்கொடுப்பேன். ராகவன் ஆசிரியரப்பாத்து உன் ரெக்கொட் புக்கையும் பாட அட்டவணையும் வாங்கிக்கோ. மத்தது அவர் சொல்லுவார்,” என்று கூறி அனுப்பிவைத்துவிட்டு அவசரமாக ஒரு கல்வி இலாகா கூட்டத்துக்குப் போய்விட்டேன்.



ஒரு மாதம் சொன்னதெல்லாம் செய்துகொண்டிருந்தான். யாரோடும் அதிகம் சேராமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பான். மாணவர்களுடனான அவன் நெருக்கம் ஒரு நல்லாசிரியருக்கு இருக்க வேண்டிய பண்பை பறைசாற்றியது. எனக்கு அதில் பரம திருப்தி.

இரண்டாண்டு கண்ட்ரெக்ட் ஒப்பந்தத்தில் வடிவேல் ஆசிரியர் கோபால் வருவதற்கு ஒராண்டுக்கு முன்பிருந்தே வேலை செய்து வந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகவும் 20 ஆண்டுக்கும் மேலாக தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்தவர் பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய வேலையில் அமர்த்தப்பட்டவர். அவரின் அனுபவம் பிற ஆசிரியருக்கு அறிவுறை , வழிகாட்டுதல் சொல்லும் பொருட்டு மூக்கை நுழைக்கும் அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருந்ததுபோலும். பிறரின் தர்ம சங்கடத்தைப் புரிந்துகொள்ளும் சுயபரிசோதனை செய்யும் திறன் அவரிடம் இல்லாமல் இருந்ததுதான் வியப்பு.

ஓரிரு முறை கோபால் வகுப்பில் போதித்ததைப்பார்த்தவர் , அவனின் போதனா முறைமேல் அதிருப்தியடைந்து என்னிடம் புகார்கள் கொடுத்தவண்ணம் இருந்தார். “நான் பாத்துக்கிறேன் சார் வேலக்கி புதுசில்ல, பயிற்சி ஆசிரியரே முறையா போதிக்கமாட்டாங்க, இப்பதான வந்திருக்கான். போகப்போக சரியாயிடும்,” என்று கூறி அவரை அனுப்பிவைத்துவிடுவேன். ஒரு முறை நான்காம் வகுப்பைக்கடந்து நடந்துகொண்டிருந்தவர் கோபால் திருக்குறளுக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருந்தத்தைப் பொறுத்துகொள்ளாமல் உள்ளே நுழைந்துவிட்டார்- சிவ பூஜையில் கரடி நுழைந்ததைப்போல. பேசாமல் இருந்திருக்கலாம். இவரின் போதாத காலம் அவன்தான் கரடியாக மாறிவிட்டிருந்தான். மாணவர் முன்னிலையில் இதுக்கு விளக்கம் இது இல்லப்பா, இப்படி போதிக்கவும் கூடாதுப்பா என்று கூறியவர் வகுப்பில் கோபாலின் செய்யவேண்டியதை இவர் செய்ய முனைந்துவிட்டார். பையன் கரடியாக மாறி இவர் மேல் பாய்ந்து பிராண்டி எடுத்துவிட்டான். “ இது என் வகுப்பு சார், என் அனுமதியில்லாம நீங்க அத்துமீறி நொழஞ்சதே தப்பு. அதுவுமில்லாம என் மாணவர் முன்னுக்கு எனக்குப்பாடம் போதிக்க தெரியலன்னு சொல்லாம சொல்லிக்காட்டுறது என்னா பண்பு. பல வருஷம் ஆசிரியரா இருந்திருக்கீங்க இதுகூடவா தெரில? போங்க சார் வெளிய!” என்று கூச்சல்போட்டு விட்டான். அப்போது அவன் இயல்பாகப் பார்க்கும் கோபாலாக இல்லாமல் மிகுந்த ஊணர்ச்சிக்கு உள்ளானதாகவும், அவன் கண்கள் சிவந்து உதடுகள் துடித்து, கைகளை இறுகப்பிசைந்தவாறு காணப்பட்டதாகவும், அவனின் கூச்சலால் மாணவர்களை மிரண்டுபோய்விட்டதாகவும் வடிவேல் ஆசிரியர் மட்டுமல்ல அக்கம் பக்க வகுப்பறை ஆசிரியர்களும் என்னிடம் புகார் கொடுத்திருந்தனர். எனக்கு முதலில் அவர்கள் பேச்சின்மேல் நம்பிக்கை பிறக்கவில்லை. வடிவேல் ஆசிரியர்தான் அத்துமீறி நடந்திருக்கவேண்டும் எனச்சந்தேகம் மண்புழுபோல ஊர்ந்துகொண்டிருந்தது. என்னிடம் அவன் மிகுந்த மரியாதையாக நடந்துகொள்பவன். மாணவர்களிடமும் அன்பாகப்பழகிவந்தவன். இந்தச்சாதாரண விஷயத்துக்கு ஏன் விஸ்வ ரூபம் எடுத்திருந்தான் என்று புரியவில்லை. அடுத்தடுத்து நடந்த சில அசாதாரணச் சம்பவங்களப்பார்த்தபிறகு பயந்துபோய், முருகேசன் ஆசியரை என் அறைக்கு அழைத்திருந்தேன்.

“ என்ன முருகேசன் கோபால் பத்தி முழுசா உங்களுக்குத்தெரியுமா.....? ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கிறான்?” முருகேசன் குற்ற உணர்வோடு அமர்ந்திருந்ததிலிருந்து கோபாலைப்பற்றி, நான் ஏறத்தாழ யூகித்துவிட்டிருந்தேன்.

“ எனக்கு அவன் தூரத்துச்சொந்தம் சார்..... அவங்கம்மா என்கிட்ட அவனுக்கு ஏதாவது வேலபாத்து தரமுடியுமான்னு அடிக்கடி தொல்ல கொடுத்திட்டுருந்தாங்க. அப்பத்தான் நீங்க வேலைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்க”

“ அத கேக்குல, அவன் வேற மாதிரி நடந்துக்கிறானே..... அவனுக்கு என்னா கொறைன்னு கேக்குறேன்?”

“ எனக்கு அவ்வளவா தெரியாது சார்.....ஆனா சொந்தக்காரங்க மூலியமா கேள்விப்பட்டதிலிருந்து அவன் கொஞ்சம் லூசுன்னு சொன்னாங்க. நான் பழகன வரைக்கும் இதெல்லாம் இல்ல. பள்ளிக்கு வேலைக்கு வந்ததிலிருந்துதான் நானும் நெருக்கமா பாத்து பயந்துட்டேன். இப்பொ நானும் அவங்கிட்டேர்ந்து வெலகிட்டேன் சார்”

:” என்ன முருகேசன் இப்படியா ஒருத்தன என் தலயில கொண்டாந்து கட்டுவிங்க? கொஞ்சமாவது ஹிண்ட் கொடுத்திருக்கக்கூடாதா? அப்பியே எடுத்திருக்க மாட்டனே. இப்பொ எப்படி அவன நீக்குறது. வேலய விட்டு நின்னுக்கோன்னு சொன்னா எம்மேல பாஞ்சிரமாட்டானா ?”

அதற்குப்பிறகு அவனை வேலை வீட்டு தூக்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். இடையில் பள்ளியில் எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாதுன்னு வேண்டிக்கொண்டிருந்தேன். என் வேண்டுதல் கூடிய விரைவிலேயே பலித்துவிட்டிருந்தது.

அந்தச்சம்பவம் நடந்து மறுநாள் முருகேசன் என் அறைக்கு ஓடிவந்தார்.

“சார், நேத்து கோபால் வீட்டுக்குள்ளியே தூக்கு மாட்டிக்கிட்டானாம் சார். அவன் துடிச்சு கத்துற சத்தம் கேட்டு ரூம் கதவ ஒடச்சி அக்கம் பக்கம் உள்ளவங்க ஓடிவந்து காப்பத்திட்டிருக்காங்க. இல்லன்ன உசிறு போயிருக்கும் சார்.”

“ ஏன் என்ன ஆச்சு?”

“ அவங்கம்மாவுக்கும் அவனுக்கும் ஏதோ சண்டையாம்.... நீ இருக்கிறத விட செத்துத் தொலைஞ்சிபோன்னு சொல்லிட்டாங்களாம்......ராத்திரி அவங்கம்மா ஹால்ல டி.வி பாத்திட்டிக்காப்போ அவன் ரூம சாத்திட்டு......தூக்கு மாட்டிக்க முயற்சி பண்ணிருக்கான்..... சத்தம் கேட்டுத்தான் அக்கம் பக்க உள்ளவங்க ஓடி வந்து காப்பத்திருக்காங்க”

“இப்ப எங்க இருக்கான்? “

“மறுபடியும் ஆஸ்பீத்திரிக்கு அனுப்பிட்டாங்க”

“ அப்படின்னா அடிக்கடி இப்படி வந்திடுமோ?

“ எனக்கு அவ்வளவா தெரியாது சார்”

இப்படியே அவனை வேலைக்கு வரவேண்டாம்னு முருகேசனிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். முருகேசன்தானே என் தலையில் கட்டினார். அவனை வேலையிலிருந்து நீக்கப்பட்ட செய்தியையும் அவரேதான் சொல்லவேண்டும் என்று சொல்லிவிட்டேன்.

அதற்கப்புறம் கோபாலை நான் பார்க்கவில்லை.



அவள் ஒரு நடமாடும் அழகு நிலையம்

கோபாலின் அம்மாவை நான் சந்தித்தது மீன் மார்க்கெட்டில்தான். அவரேதான் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

கோபாலின் அம்மா என்று அவர் சொன்னவுடன்தான் நான் அவள் தோற்றத்தின் முதல் பார்வையில் அனுமானித்தது சிதறிப்போயிருந்தது.

மார்க்கெட்டுக்கு இவ்வளவு சிரத்தையெடுத்து ஒப்பனை செய்துகொண்டு வந்து யாரையும் நான் பார்த்ததில்லை. ஒப்பனைக்காகக் குறைந்தது ஒரு மணிநேரமாவது செலவிட்டிருக்கவேண்டும். மிக நேர்த்தியாக சீவப்பட்டு தூக்கிக்கட்டிய கொண்டை. கற்றை முடியிலிருந்த ஒரு இழைகூட விலகவில்லை. மிக உயர் தர பௌடரில் பளிச்சிடும் முகம். நெற்றியில் அழகிய மச்சம்போல பச்சைப்பொட்டு. இடுப்பிக்குக் கீழ் இறக்கி கட்டப்பட்ட, இன்னும் புதிதாகவே காட்சிதரும்- இளம்பச்சை பூ போர்டர் போட்ட சேலை. நடக்கும்போது குடையைப்போல விரிந்துகொடுக்கும் கொசுவம். கட்டு மாறாது உடல். சேலை வண்ணத்துக்கு ஏற்ற இளம்பச்சை நிறத்தில் செருப்பு. கிரங்கடிக்கும் கட்டுடல்.

கோபாலை வைத்துப்பார்க்கும்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதை யூகிக்கலாம். கோபாலை மறந்துவிட்டு எடைபோட்டால் முப்பத்தைந்துதான் சொல்ல முடியும். கோபால்தான் தன் அம்மாவின் வயதை வீணாக ஏற்றிவிட்டிருந்தான்.

கோபால் எப்படி இருக்கிறான் என்று கேட்டேன். சுருக்கம் காணாத அவர் முகத்தில் அப்போது மின்னலென சுருக்கம் விழுந்து ஓடியது. பொறந்ததிலேர்ந்து தொல்லதான் சார். நீங்க கொஞ்சந்தான் பாத்திங்க. இந்த 21 வருஷத்துல எவ்ளோ பட்டிருப்பேன். கொணமாகாதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. கட்டி மேச்சுக்கிட்டிருக்கேன்.

“ நீங்கதான் அனுசரிச்சி போணும் “.

“ எவ்ளோதான் அனுசரிக்கிறது. தெனைக்கும் வச்சிப் பாக்குறவங்களுக்குத்தான் தெரியும்” மிகுந்த சலிப்போடு பேசினார்.

இடை இடையே கொண்டையைச் சரி செய்து கொள்வதுபோல விரல்களால் நீவி விட்டாள். கொசுவ மடிப்புகளைப் பார்த்தாள். சரியாகத்தான் படிந்திருந்தது.

அதற்குப்பிறகு கோபாலின் அம்மாவை நான் அடிக்கடி மார்க்கெட்டில் சந்திப்பதுண்டு. நான் அவள் பார்வையில் படும் சந்தர்ப்பத்தில் அவளின் உடல் மொழி வித்தியாசமாகிப்போகும். தன் ஒப்பனை வீட்டிலிருந்து வெளியான போது இருந்த மாதிரியே இருக்கிறதே அல்லது கலைந்து விட்டதா என்பதைப்பிரதிபலிக்கும் உடல்மொழி வெளிப்படும்.



கோபாலும் அவன் உடன் பிறந்த சகோதரனும்



பள்ளிக்கு அவன் வருவது நின்றுபோனது. முருகேசன் சொல்லியிருப்பாரோ அல்லது அவன் உண்மை நிலை எல்லாருக்கும் தெரிந்துவிட்டதே என்ற தாழ்வு மனப்பான்மையில் பள்ளிக்கு வருவதைத்தவிர்த்திருக்ககூடும். எப்படியோ அவன் இல்லாமல் போனது நல்லதாகப்பட்டது. அவன் இடத்தில் வேறு பையனை நியமித்துவிட்டிருந்தேன்.

முருகேசன் ஆசிரியரை அவ்வப்போது கோபாலின் நிலையைக்கேட்டறிந்தேன்.

அவனுக்கு மனநோய் என்று சொன்னார். டாக்டர்கள் இது மூளை நரம்பு சம்பந்தமானது. அவன் உணர்ச்சி வயப்படும் அளவுக்கு அவனிடம் பழகுபவர்கள் நடந்துகொள்ளக்கூடாது. முடிந்தவரை சுமூகமான நிலையில் பழகுவதே அவனுக்கு நல்லது என்று சொன்னதை இவன் ஒரே வார்த்தையில் மனநோய் என்று மொழிபெயர்த்துவிட்டான். குரூரமான வார்த்தைகள் தயவு தாட்சண்யமில்லாமல் வந்து விழுந்துவிடுகின்றது. மருந்தால் இதனைத் தற்காலிகமாகவே குணப்படுத்தமுடியும் . நாம்தான் பார்த்து நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

ஒருமுறை கோபாலுக்கு உடன் பிறந்த சகோரதன் ஒருவன் இருப்பதாக முருகேசன்தான் என்னிடம் சொன்னார். அவர் செரம்பானில் கணக்காய்வாளராக வேலையில் இருப்பதாகவும் விடுமுறை நாட்களில் வீட்டுக்கு வருவதாகவும் சொன்னார். அப்படி வந்து போகும் தருணங்களிலெல்லாம் கோபாலின் நிலை படுமோசமாகிவிடுவதுண்டாம்.

கோபாலின் அண்ணன் தம்பி வேலையில்லாமல் தண்டத்துக்கு வீட்டில் இருப்பதாகவும் தன்னைப்போல ஒரு வேலையைத்தேடிக்கொண்டு வாழ வக்கில்லை என்றும் சொல்லித்திட்டுவதுண்டு. அவன் வார்த்தைகளெல்லாம் தடிப்பாகவும் அம்புபோல கூர்மையாகவும் பாயுமாம். அப்போது கோபால் தலையைப்பிடித்துக்கொண்டு ஓவென்று கதற ஆரம்பித்துவிடுவானாம். அறையைச் சாத்திக்கொண்டு ஒரு நாள் முழுதும் வெளியே வரமாட்டானாம். தட்டினால்கூடத் திறக்கமாட்டானாம். அறைக்குள்ளிருந்து ஒரு சத்தமும் வராதாம். அவனோடு அறையும் ஒருநாள் முழுதும் சூன்யப்பட்டுப்போகுமாம். நொடிக்கொருதரம் சாவித்துவாரம் வழியே அவன் நிலையைப் பார்த்துகொண்டு சமாதானம் அடைவார்களாம்.

ஒருமுறை இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியபோது, “அன்னைக்கு என்னமோ தூக்குமாட்டிக்க போனியாம். யாருக்கிட்ட நாடகம் ஆடுர. யாராவது இலிச்ச வாய் இருந்தா ஒன் கைவரிசைய காட்டுவியா? யாரும் இல்லாதப்ப தூக்கு மாட்டிக்க. ஏன் எல்லாருக்கும் தொந்தரவா இருக்க? செத்துப்போ எங்க நிம்மதிய கெடுக்கவே இந்த குடும்பத்தில வந்து பொறந்தியா? ஏண்டா தண்டச்சோறு. யாராவது எவன் கால்லயாவது விழுந்து வேல வாங்கிக்கொடுத்த அதையும் உருப்படியா செய்யிரதில்ல! வயசு வித்தியாசமில்லாம சண்டைக்கு நிக்குறது. எல்லாருக்கும் பாரமா இருக்கிறது போதாதுன்னு......தற்கொல பண்ணிக்கு வேன்னு பயமுறுத்திறியா..? இந்தா தூக்கு மாட்டிக்கிட்டு செத்துப்போ....யாருக்கிட்ட பூச்சாண்டி காட்டுற.” என்று கூறிய வாறே வீட்டின் பின்பக்கம் இருக்கும் நைலான் கயிறு ஒன்றை எடுத்து வந்து அவனை நோக்கி வீசியிருக்கிறான். கயிறு அவன்மேல் பட்டு ஒரு பாம்பைப்போல அவன் காலடியில் நழுவி விழுந்து நெளிந்தது. பிறந்ததிலிருந்தே கூட இருக்கும் அண்ணனும் அவனைப் புரிந்துகொள்ளவில்லை. தொலைபேசி வழியாகவும் அவனைப்பற்றிய புகார்களை அவன் அம்மா அடுக்கியதாலும் வீட்டுக்கு வரும்போதே ஆத்திரமாகத்தான் வருவானாம். வீட்டுக்கு வந்ததும் ,”இவனோட நிம்மதியா இருக்க முடில எப்போ என்னா நடக்கும்னு சொல்ல முடில. இவனால தொல்லயா இருக்கு” என அம்மாக்காரி ஊதிவிட்டு விடுவாளாம். அவனுக்குப் பற்றிக்கொள்ளும். வந்ததவுடன் அர்ச்சனையை ஆரம்பித்து விடுவானாம். அவனுக்கு நரம்பு நோய் இருப்பதை காதில் வாங்கிக்கொள்ளாத அண்ணன்காரன். வேலையிடத்தில் உண்டான அழுத்தமும் வேலை பலுவும்கூட காரணமாக இருக்கலாம். கோபத்தைத் தீர்த்துக்கொள்ள வடிகாலாகவே கோபால் தேவைப்பட்டான் போலும். என்ன அண்ணனோ? கூடப்பிறந்தவன்தானே! கோபாலுக்குள்ளது கொஞ்சமாவது இவனுக்கு இல்லாமல் போய்விடுமா என்ன?

கோபாலுக்கு அண்ணன் விட்டது ஒரு சவால் போலவே படிமமாக மனதில் அலைந்துகொண்டிருந்தது.. மனது அடங்க மறுத்துக் கொண்டிருந்ததுபோலும். எப்போதும் போலவே சமாதானமாகாமல் மல்லுக்கட்டிக்கொண்டிருந்திருக்கிறது.. நேரம் ஓட ஓட அவனுக்குள் கொப்பளித்த கோபம் ஆவேசமாக உருவெடுத்திருக்கக்கூடும். அன்று நள்ளிரவைத் தாண்டிய அகால வேளையில், எல்லாம் ஓய்ந்த தருணம் பார்த்து, வீட்டிலிருந்து 20 மீட்டர் தள்ளி , ஒரு நிழல் மரத்தில், அண்ணன் கொடுத்த அதே கயிறால் தனக்கான நிம்மதியை அடைய பிரயத்தனம் செய்துகொண்டிருந்தான். கயிற்றை கிளையில் மாட்டிக்கொண்டிருந்த வேளையில் இரவு டூட்டி முடிந்து வீடு திரும்பிய ஒருவர் வீட்டைத்தட்டி எல்லாரையும் எழூப்பி உசார் படுத்திவிட்டுச்சென்றிருக்கிறார். ஓடிப்போய் பார்த்தால் கயிறு கழுத்தை இறுக்கிவிட்டிருந்தது. கால்கள் அந்தரத்தில் தவித்துக்கொண்டிருந்தன. இரண்டு பேர் கயிறு மேலும் இறுகாமல் உடலைத் தூக்கிப்பிடித்துக்கொள்ள, ஆளை மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றிவிட்டார்கள். அல்லது மரணத்தைதொட்டுப்பார்த்துவிட்டு திரும்பியிருந்தான் என்றும் சொல்லலாம். சில நொடிப்பொழுதுகள் தாமதித்திருந்தாலும் அண்ணன் வாக்கு பலித்திருக்கும்.

நண்பர்கள் நிறைய இருந்திருக்கவேண்டிய வயதுதில் அவனுக்கு நண்பன் என்று சொல்லிக்கொள்ள யாருமில்லாமல் போனது அவனது துரதிர்ஸ்டம்.. உறவினர்கள் கூட அவனிடம் சரியாக வைத்துகொள்வதில்லை. ஒரு பார்வையோடு சரி. அத்து வானத்தில் பறக்கும் ஒற்றைப்பறவையாய் அவன் தனித்தே விடப்பட்டிருந்தான்.அவன் சுபாவத்திலிருந்து அவனை மன்னித்து ஏற்கும் கரிசனம் யாருக்கும் இருந்ததில்ல. தன்னையாரும் புரிந்துகொள்ளவில்லை என்று புலம்பக்கூட அவனுக்குத்துணையில்லாமல் போனது.



நேருக்கு மாறான மீண்டும் ஒரு சந்திப்பு



அன்றைக்கு மீண்டும் கோபாலின் அம்மாவை நேருக்கு நேர் சந்திக்கும்படி அமைந்து விட்டது. கைத்தொடும் தூரத்திலான சந்திப்பு. தவிர்க்க முடியவில்லை. பேசியே ஆகவேண்டிய கட்டாயம்.

“கோபால் எப்படி இருக்கான்?” ஒரு பேச்சுக்கு கேட்டுவைத்தேன்.

“அப்படித்தான் இருக்கான்...... எந்த முன்னேற்றமமும் இல்ல. எங்கிட்ட அவன் பேசுறதுமில்ல. அவன்கிட்ட நான் மொகங் கொடுக்கிறதுமில்ல. பேசானாலே ஏதாவௌ பிரச்ன வந்திடுது. பேசாம இருக்கிறதே நல்லதுன்னு படுது. காலையில சூப்பர் மார்க்கெட்டுக்கு வேலைக்குப்போவான், ராவ்வுலதான் வீட்டுக்கு வருவான். வந்தானா ரூமுக்குள்ளாரயே கெடப்பான். என்னைக்காவது ஏதாவது பேசப்போவ வம்பு வந்திடும்.எனக்கு வெறுத்துப்போச்சு. அதான் அவனுக்கொரு கல்யாணம் பண்ணிவச்சா சரியாயிடும்னு ஒரு சாமியாரு சொன்னாரு.. நாலு எடத்துல சொல்லிவச்சிருக்கேன். பொன்னு கெடச்சா தள்ளி விட்டுருவேன் .”

“ ....... “

“ ஒங்களுக்குத் தெரிஞ்சவங்க பொண்ணு யாரும் இருந்தா சொல்லுங்கா சார். அப்படி இப்படின்னு இருந்தாலும் பரவால்ல கட்டி வச்சிடலாம்,” என்றார்.

பாக்கலாம் என்று ஒப்புக்குத் தலையாட்டிவிட்டு உரையாடலைச் சீக்கிரம் முடித்துக்கொண்டேன்.



Ko.punniavan@gmail.com

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...