Skip to main content

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                          

                     

                நான் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாராக இருக்கும் ஒருவர் என்னிடம் சொன்னார். ஆனால் அவரின் வாழ்க்கையை அந்நோய் அடியாழத்துக்கு வீழ்த்திவிட்டிருந்தது.  இன்றைக்கு அவருடைய நோய் முத்தி  மருந்தில்லாமல் உயிர்வாழ முடியாத நிலைக்கு ஆளாகிப் போயிருக்கிறார். நடைப்பயிசி தளத்தில் அவரை நான் எப்போதுபோலவே சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

  அமைதியும் பணிவும் காணப்படும். நெற்றியில் விபூதிப் பட்டையுடன் இருப்பார். என்னைச் பார்த்துவிட்டால் ஓடிவந்து மிக அன்புடன் நலம் விசாரிப்பார்.  அவரின் அபரிமிதமான மரியாதையில் நான் உடல் கூசியும் போயிருக்கிறேன்.

ஒருமுறை பல வண்ணத்திலான துண்டுத் துண்டுத் தாள்களில் அழகான கையெழுத்தில் அவரே  எழுதிய  பொன்மொழிகளை என்னிடம் காட்டி நான் இதனை நூலாக்கப் போகிறேன் சார். இதற்கு  உங்களின் அணிந்துரை வேண்டுமென்று கேட்டார். அவர் பணிவோடுதான் அணுகினார். ஆனால் நான் கொஞ்சம் மிரண்டு போனேன். நான் அசாத்தியமான பொறுமையோடு அவரை கையாள ஆரம்பித்தேன். இவை பெருந் தலைவர்கள்/ மகான்கள் சொன்ன பொன்மொழிகள். பலரும் அறிந்து வைத்திருப்பவை. இதனை மீண்டும் உங்கள் பேரில் கொண்டுவருவது சரியில்லை. நீங்கள் சுயமாக எழுதிக்கொண்டு வாருங்கள் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்றேன் அப்போதைக்கு அவரிடமிருந்து தப்பிக்க்கும் முயற்சியில். என் பதிலில் அவருக்குத் திருப்தியில்லை. பின்னர் அவற்றை   பைண்ட் செய்து பள்ளிக்கூடங்களில் கொண்டுபோய் விற்க முயன்றிருக்கிறார். சிலர் அவரின் நிலையை ஊகித்தறிந்து விரைவில் திருப்பி அனுப்பிவிடும் முகமாக சொந்தப் பணம் கொடுத்து வாங்கி விடைகொடுத்திருக்கிறார்கள்.

நம்மில் பலருக்கு நம் தரம் பற்றித் தெரிவதில்லை. நம் புனைவை சுயமதிப்பீடு செய்யத் தெரியவில்லை. வாசிக்கும் பழக்கம் இருந்திருந்தால் ஒப்பீட்டளவில் நம் படைப்பு எங்கே நிற்கிறது என்று நம்மால் அளவிடமுடியும். ஆனால் வாசிப்புப் பழக்கமே இல்லாமல் இருக்கின்ற மொழியை வைத்துக்கொண்டு எழுத வந்துவிடுகிறோம். பள்ளியில் படித்த சொற்ப மொழி புனைவுக்கு உதவவே உதவாது. இது முற்றிலும் வேறு தளம். பள்ளியில் கற்ற  மொழியை அடிப்படையாக வைத்துக்கொண்டு தீவிர வாசிப்பை மெற்கொள்ளவேண்டும். நல்ல நாவல்களையோ சிறுகதைகளையோ, கவிதைகளையோ வாசிக்க வாசிக்கத்தான் நமக்குப் புனைவுத் தருணங்கள் கூடிவரும். எது தரமான எழுத்து எது தரமற்றது என்று பகுத்துப் பார்த்து , தரமான எழுத்தைத் தரும் எழுத்தாளர்களைத் தேடிப்போவோம்.   இல்லையெனில் நாம் நன்றாக எழுதிவிட்ட  சுய மிதப்பில் பல தருணங்களில் நம்மை நாமே நம் முதுகைத் தட்டி மெய்சிலிர்த்துக் கொள்வோம். ஆர்வக் கோளாறினால அவசரப்பட்டுவிடுகிறோம்.

பருவ வயதில் எல்லாருக்குமே கவிதை எழுத வரும். எதிர்பாலினக் கவர்ச்சியாலும் பருவக் கிளர்ச்சியினாலும் கவிதைகள் வந்து கொட்டும். நண்பர்களிடம் வாசிக்கக் கொடுத்து அவர்களின் முகமனான பாராட்டுதலில் ஒரு கணம்  வைரமுத்துவாகிட்ட கனவும் தோன்றும்.  ஆனால் பின்னாளில் எழுதியவரே அதனைப் படிக்க நேரிடும்போது இது என்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறதே என்று நொந்துகொள்ள வாய்ப்புண்டு. மிகத் தாமதமாக உணரும் இவ்வாறான புரிதலால் ஒரு பயனும் நடந்துவிடப் போவதில்லை! நல்ல வேளையாக அதனை எங்கேயும் வெளியிடாமல் நாம் பாதுகாத்து வைத்திருந்ததால் தப்பித்துவிட்டோம். நம் எழுத்து நமுக்குள்ளேயே அமுங்கிப்போகும். பிறரிடம் போய்ச்சேராது. 

சமீபத்தில் வெளியீடுகண்ட ஒரு நூல் என் பார்வைக்கு அனுப்பப்பட்டது. எழுதியவர் முன்பின்  கேள்விப்படாத பெயராக இருந்தார். உள்ளடக்கத்தின் தரம் பற்றி நூலைத் திறக்கும் முன்னரே என்னால் யூகிக்க முடிந்தது. நான் எதிர்பார்த்ததுபோலவே கவிதைகளின் தரமும் இருந்தன. நல்ல வேளையாக எழுதியவரே அதனைக் கவிதை நூல் என்று எங்கேயும் குறிப்பிடவில்லை. ஆனால் அதற்குச் சிறு அணிந்துரை வழங்கிய முருகன் மந்திரம், (பாடலாசிரியர், வசனகர்த்தா , இயக்குனர் என்று அவரே விளித்திருக்கிறார்) அவை அபாரமான கவிதைகள் என்று அங்கீகாரம் வழங்கியுள்ளார். முருகன் மந்திரம் என்ற பெயர்கூட நான் அறிந்தராத பெயர்.நான் அடிக்கடி சினிமா பார்க்காதது என் தவறுதான். இந்நூலில் சில கவிதைகளைப் படித்த பின்னர் முருகன் மந்திரம் ஒரு தரமான 'பாடலாசியர்'தான் என்று 'நம்ப' பகீரதப் பிரயத்தனத்தை' மேற்கொண்டேன்

'அன்பின் ஊற்று'  என்ற தொகுப்பில் உள்ள கவிதைகளை சிலவற்றைப் பார்ப்போம். 

எனக்காக

மல்லிகை

சூடுகிறாய்

வாசத்திற்காக

அல்ல


என்

மேல்

உள்ள

பாசத்திற்காக

சுபகாரியங்கள் நடக்கும் வீட்டில் தென்னை இலை தோரணம் போல எழுத்துக்களைத் தொங்கப்போட்டிருகிறார். முன்னரெல்லாம் தீவாவளி வாழ்த்து அட்டைகளை வீட்டுசுவரில் இப்படித்தான் கோர்த்து கோர்த்து உலரப்போட்டுவிடுவார்கள். அவ்வாறே வார்த்தைகளை அடுக்கினாலாவது அது கவிதை அந்தஸ்த்தைப் பெற்றுவிடும் என்ற நப்பாசை மலேசியாவில் பலரைப் பல காலமாக சோதித்துக்கொண்டிருக்கிறது. இன்னும் மலேசியப் பத்திரிகைகள் இவ்வாறன கட்டித் தொங்கப்போடும் உத்தியை மங்கிப்போகாமல் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. ஆனால் அவை கவிதைகள் அல்ல வெறும் தகவல்கள் அல்லது வெற்று வார்த்தைகள் என்று இவர்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை. 

காதலைக் கவிதையாக எழுத முயன்றிருக்கிறார் இவர். வாசத்திற்காக/ பாசத்திற்காக என்று எதுகை மோனை சொற்கள் அவரைப் புல்லரிக்கச் செய்திருக்கிறது. இவை கவிதையாவதற்குப் பொருத்தப்பாடு உள்ளது என்று நம்பியிருக்கிறார். எனவே கவிதை பிறந்துவிட்டிருக்கிறது. 

நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு எளிமையான காதல் கவிதையை உதாரணத்துக்குச் சொல்கிறேன்.

சுற்றுவதை நிறுத்து

சுற்றுவதை நிறுத்து

என்று அப்பா சொன்னார்

பையனிடம்


பக்கத்து வீட்டுக்

காரிகையின் 

பார்வையில்

சாட்டை இருக்கிறது

பம்பரம் என்ன 

செய்யும் பாவம்.

இதுவும் கட்டித் தொங்கப்போட்ட கவிதைதான் ஆனால் கடைசி வரியில் இருக்கும் கவித்துவமே இதனை கவிதையாக்குகிறது.சாட்டையும் பம்பரமும் குறியீடுகளாக  இயங்கி வாசிப்பின்பத்தைக் கொடுக்கிறது. ஒரு நல்ல கவிதையின் குறைந்தபட்ச அம்சம் இது.

நீங்கள் வாசிக்க இன்னொரு எளிமையான காதல் கவிதை.

இதென்ன

இந்த விழிக்குளம்

மீனையும் காட்டுகிறது

தூண்டிலையும் காட்டுகிறது?

மீன் எதற்குக் குறியீடாகிறது? தூண்டில் எதற்குக் குறியீடாகிறது என்று இப்போது உங்களுக்குப் புரியும்.

இப்போது உங்களின் இன்னொரு கவிதையைப் பார்ப்போம்.

கண்கள் இரண்டும் 

பேசிக்கொண்டன

ஏனோ இன்னும்  இவள் கண்களில்

தீப்பொறியின் அனல்கள்

அணைந்த பாடில்லை.

நான் கோபத்தில் திட்டிய வார்த்தைகள்

சுவற்றில் விட்டெறிந்த பந்தைப்போல

என் நெஞ்சாங்கூட்டில் பாரத்தை தாங்கி ஓய்ந்தபாடில்லை. (இக்கவிதை இப்படியே  இன்னும் நீள்கிறது.)

ஏன் இத்தனை சொற்களை வீணடிக்கிறீர்கள்? கவிதை ஒரு சில சத்தான சொற்களுக்குள் உறையும் மௌனத்தில் மறைந்திருக்கிறது. நீங்களே விலாவாரியாக பொழிப்புரை எழுதினால் அது கட்டுரையாகிவிடும். ஒரு சிறுகதைக்கு வேண்டுமானால் கொஞ்சம் நீட்டி முழக்கலாம். ஆனால் கவிதை சொற்சிக்கனத்திலிருந்துதான் வாசக மனதுக்குள் பேரோசையை எழுப்பவேண்டும்.


உங்களின் இன்னொரு கவிதை

கொஞ்சம் 

கிள்ளிக்கொள்கிறேன்

என்று 

நான் சொல்ல

எனை

அள்ளிக்கொள் என

அவள்

 சமிக்ஞை காட்டுகிறாள்.

 சினிமா பாடல்களில், வெகுசன வகை இலக்கியப் புனைவுகளில் இவ்வாறான தேய்வழக்குச் சொற்களை வாசித்து வாசித்து நமக்குள் அவையே எஞ்சிவிடுகின்றன. அவைச் சப்பித் துப்பப்பட்டுச்  சக்கையாகிவிட்டவை. கிள்ளிக்கொள்கிறேன்/அள்ளிக் கொள்கிறேன் என்ற வார்த்தைகளெல்லாம் சொல்லிச் சொல்லித் தேய்ந்துபோனவை மட்டுமல்ல பெரும் சலிப்பூட்டக் கூடியவை. உங்களுக்கு ஒவ்வொருநாளும் சாம்பாரை வைத்தால் சாப்பிடுவீர்களா? " ஐயோ ஏம்மா தெனைக்கும் சாம்பாரையே ஊத்தி ஊத்தி இப்படி கொல்ற?' என்று முறையிட்டுவிட்டு , கிரேப் மூலம் பிட்சாவுக்கு ஆர்டர் கொடுப்பீர்கள்தானே? ஏன்? ஏனெனில் உங்கள் சுவை உணர்வு சாம்பாரை வெறுத்துவிட்டது அதனால். நீங்களும் என்ன செய்கிறீர்கள் கவிதை ஆக்கத்துக்குப் புதுப் பொருண்மையைத் தேடாமல், புதுச் சொற்களை எழுதாமல் பிறர் ஆயிரம் முறை சொன்னதையே மீண்டும் சொல்கிறீர்கள். இது வாசகனுக்குப் போரடிக்கும் என்று ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை.

ஏனெனில் உங்கள் வாசிப்புப் பழக்கம் விரிவானதல்ல. நீங்கள் இடைநிலைப் பள்ளியிலோ கல்லூரியிலோ பல்கலையிலோ கற்ற சொற்பமான சொற்களை வைத்துக்கொண்டு கவிதை எழுத வந்துவிடுகிறீர்கள். வாசிக்க வாசிக்கத்தான் வார்த்தைகளின் எண்ணிக்கை கூடும். வாழ்க்கையை அகக் கண்களால் பார்க்கப் பார்க்கத்தான் நுட்பங்கள் கிட்டும். வித்தியாசமான தரிசனம் கிடைக்கும். தரமான கவிதைகளைத் தேடித் தேடி வாசிக்கும்போது கவிதை வடிவமும் கவித்துவமும் பிடிபடும். 

உன் மௌனம் பேசும் வேகத்தில் உறைகின்றேன்

உன் விழி விழையும் நளினத்தில் கரைகின்றேன்

உன் மொழி வீசும் வாசத்தில் சுவாசிக்கின்றேன்

உன் இதழ் தொடும் கூச்சத்தில் நேசிக்கின்றேன்.

சினிமாவில் வரும் பாடல்கள்போலவே இருக்கின்றது இந்த வரிகள். பல கவிதைகளை இதே பாணியில் எழுதியிருக்கிறார்.  சினிமாப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு அதன் பாதிப்பே கவிதையாக வடிக்கத் தோன்றியிருக்கிறது இவருக்கு. சினிமா பாடல்கள் இசையோடு இனிமையான குரலில் பாடப்படும்போது அது மதுரகானமாக இருக்கும். அதனால் அது கவிதைபோன்ற மாயத்தோற்றத்தை உண்டுபண்ணும்.ஆனால் அதற்குள் கவித்துவம் இருக்கிறதா என்று பார்த்தால் ஏமேற்றமே மிஞ்சும். பெரும்பாலான சினிமா பாடல்கள் கவிதைகளாக ஆகிவிடுவதில்லை. கவித்துவமான பல பாடல்களைக் கண்ணதாசன், வைரமுத்து போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்தான். ஆனால் காட்சிகளுக்குப் பாடல்கள் எழுதும்போது பாடல்கள் ஒரு வரையறைக்குள் அடங்கிவிடும். அவை கவித்துவ சிறகுகளை விரிக்கவியலாமால் போகும்.

கவித்துவம என்றால் என்ன? அதற்கு இரண்டு கவிதைகளைத் தருகிறேன்.

அந்திக் கருக்கலில்

இந்தத் திசை தவறிய

பெண் பறவை

தன் கூட்டுக்காய்

தன் குஞ்சுக்காய்

அலைமோதிக் கரைகிறது

எனக்கதன் கூடும் தெரியும் 

குஞ்சும் தெரியும்

இருந்தும்

எனக்கதன் 

பாஷை புரியவில்லை.

இதனை வாசித்தவுடன் உங்களின் பச்சாதாப உணர்வுகளை இக்கவிதை மீட்டிவிடுகிறது. அந்த அலைபாயும் பறவையின் மீது உங்களுக்கு இரக்கம் வருகிறது. ஒரு கணம் அந்தப் பறவையே நீங்களாகிவிடுகிறீர்கள். அந்தி சாயும் வேளையில் அது அலைக்கழிவது உங்களையும் பாதிக்கிறது அந்தக்கூடு எங்கிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும் ஆனால் அதனிடம் சொல்வதற்கான மொழியில்லாத தவிப்பு உண்டாகிறது. 'ரொம்ப பாவம்' அந்தப் பெண் பறவை என்று கருதுகிறீர்கள். அடடா எப்பேற்பட்ட கவிதை இது என்று பரவசம் கொள்கிறீர்கள். இதைத்தான் கவித்துவம் என்கிறோம். 


இன்னொரு எளிமையான காதல் கவிதை.

இருவரின் ஊடலும்

நெருங்கிக் குலவிக்கொண்டிருக்கின்றன

திரும்பிப் படுத்திருக்கும்

இருவரிடையே

விரிந்த இடைவெளியில்.

                     -கலாப்பிரியா.

இதற்கு விளக்கமெல்லாம் தேவையே இல்லை. எளிமையாக எழுதப்பட்ட உன்னதமான கவிதை.  உங்கள் புரிதல்  உணர்த்தும் பொருளே கவித்துவம். 

கவித்துவம் என்பது சாக்லேட்டுக்குள் பதுங்கியிருக்கும் பாதாம் பருப்பைப்போல. மெல்ல சுவைத்துச் சுவைத்துதான் பாதாம் பருப்பை எட்டவேண்டும்.  சொற்கள் சொக்லேட்டைப் போல சுவையானதாக இருக்கவேண்டும். கடைசியாகப் பாதாம் பருப்பைக் கடிக்கும்போது அது இனிப்போடு கலந்த அபாரமான சுவையைக் கொடுக்கவேண்டும்.தேர்ந்த சொற்களால் கவிதை வடிக்கும்போது இனிப்புடன் பாதாம்பருப்பையும் லாவகமாக உள்ளே வைத்துவிடவேண்டும். 




Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...