Skip to main content

வரலாற்றுப் பிழையும் வருங்கால இடரும்

மலேசியாவில் ஒரு சில மலாய் இலக்கிய ஆசிரியர்கள் நாட்டு வரலாற்றை மெத்தப்படித்தவர்கள். மூன்றும் நான்கும் எத்தனை என்று கேட்டால் எட்டு என்று பட்டென்று சொல்லிவிடுவார்கள். உங்கள் விடையில் ஒன்று கூடிவிட்டதே என்று கேட்டால்; ஒன்று தானே கூடிவிட்டது பெரிய வித்தியாசமில்லையே என்று புத்திசாலித்தனமாகப் பேசிவிடுவார்கள். வரலாற்றுப் பேராசிரியர்களிடம் போய் கூட்டல் கழித்தல் கேட்பது நம்முடைய தவறுதானே.

ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு 2011 ஆண்டு புதிய வரலா¡ற்றுப் பாடத்திட்டத்தில் interlok என்ற நாவலை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பதினேழு பதினெட்டு வயது மாணவர்க்கான கல்விபோதனையில் வரும் பாடத்தின் ஒரு பகுதியாக இந்த தகவல்கள் சிதைக்கப்பட்டு , ‘அரிய பெரிய’ வரலாற்றைத் தகவல்கள் நுழைக்கப்பட்டிருக்கிறது. இடைநிலைக்கல்வியில் நுழையப்போகும் மாணவர்க்குக் கொடுக்கக்கூடிய செய்தியா இது? பல்லின மாணவர்கள் பயிலப்போகும் இந்த இலக்கியப்பாடத்தில் இன சமய கலாச்சரிப் புரிதல்/ புரியாமை எந்த அளவுக்குப் போய்ச்சேரும் என்பதில் இப்போதே ஐயம் ஏற்படத்துவங்கியுள்ளது. அதன் பாதிப்பு பேராபத்தை விளைவிக்கும் தன்மையுடையது. இளைய சமூகத்தைத் தவறான கற்பிதங்களுடன் உருவாக்கும் இலக்கிய ஆசிரியர்களின் முயற்சி பெருங்கண்டணத்துக்கு ஆளாகியிருக்கிறது.

2011 ஆண்டுக்கான பள்ளி நாட்கள் ஜனவரி 3/ 4 தேதிகளில் தொடக்கப்பட்டு இந்நாவல் மணவர் கைகளுக்கு வந்தவுடன்தான் அதில் அடங்கியுள்ள சில தவறான தரவுகள் இந்திய சமூகத்தைக் கலவரத்துக்குள்ளாக்கியது.

இதில் இடம்பெற்ற பறையர் என்ற சாதி அடிபடியிலான வார்த்தை மிக முக்கியமானது. சர்ச்சையை குடைந்து விட்டிருக்கிறது. இந்தியர்களின் சமூக அமைப்பு சாதிப்பிரிவால் கட்டமைக்கப்பட்டது. தாழ்ந்த சாதியினர் பறையர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள் என்ற வரி அரசு சார்பற்ற சமுக இயக்கங்களை எழுச்சிபெறச்செய்து கூச்சலிடச்செய்துவிட்டது. இயல்பாகவே இங்கு வசிக்கும் பிற சாதியினர் இந்தியர்கள்மேல் கோபம் உண்டாகும் போதெல்லாம் ஒட்டு மித்த இந்தியர்களையும் கூச்சமில்லாமல் “பறையா” என்று விளித்து மகிழ்வார்கள். மலாய் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களை இவ்வார்த்தை கொண்டழைத்து கேவலபடுத்தும் நிகழ்வு கண்டிப்புக்களுக்குப்பிறகும் விட்டு விட்டு நடந்தவண்ணமிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இனத்தின்மேல் , திட்டமிட்டே தாழ்வு மனப்பான்மையை புகுத்தி மேலும் அவர்களை சரிந்து விழச்செய்யும் பாட நூல் கண்டிப்பாய் தூக்கி எறியப்படவேண்டிய ஒன்று. எங்கேயிருந்து இந்தத்தப்பு உருண்டு அவர்கள் வாய்க்குள் புகுந்தது ? நாம் இன்னமும் சாதி வாரியாக நம்மை உயர்த்திக்கொள்வதும் தாழ்த்திக்கொள்வதுமான போக்கு கால வரையறையின்றி நடந்த வண்ணம் இருக்க இவர்களைக்குறை சொல்லி என்ன பயன் ?( தன்னைப்பற்றி உயர்வாகப்பேசிக்கொள்வதற்கும், பிறரைப்

பற்றி தாழ்வாகப் பேசுவதற்கும் தம்மிடம் சாதியைத்தவிர வேறேதும் இல்லாதபோது என்னதான் செய்வார்கள் பாவம்) நாமே வழிகாட்டிவிட்டு இப்போது குத்துதே குடையுதே என்றால் என்ன அர்த்தம்? இந்த வார்த்தை தேவயற்றது. பல்லின மக்கள் வாழும் இடத்தில் மிகத்தாழவான கருத்தாக்கம் பின் விளைவுகளை உண்டுபண்ணுமே என்ற சாதாரண அறிவுகூட இதைத் தவிர்த்திருக்க வாய்ப்புண்டு. சாதிப்பிரிவு கொண்ட சமூகம் எப்படி உருவானது என்ற உண்மையான சரித்திரத்தையாவது சொல்லி விளக்கியிருந்தால் சாதிப்பேரைச்சொல்லி இழிவு செய்யும் போக்கு குறைந்திருக்கும். இச்சமூகத்தின் சாதி சார்ந்த பிரிவினைகள் உண்டான அடிப்படை காரணிகள் என்ன என்று ஆய்ந்தாரயப்படாமலேயே நூலாக்கி , மாணவர் வாசிப்புக்கும்- பல சமயங்களில் ஆசிரியர்களின் கட்டுப்பாடற்ற விளக்கத்துக்கும், பின்னர் கேலிக்கூத்தான வினாக்கனைகள் தொடுத்து கருத்துப்பிறழ வைப்பதற்குமான படிம விசாரங்கள் கட்டற்று நடக்க ஏதுவாகிவிடும். இதனை பரிசோதிக்காமல் பள்ளிகளில் வீசி எறிந்து பாடம் போதிக்க அனுமதித்தது கல்வி அமைச்சின் ஏனோதானோ போக்கை வெளிக்காட்டுகிறது.

அரசியல் லாபம் தேடிக்கொளபவர்கள் இந்த வரியை உடனே நீக்கு இல்லையென்றால் வரும் இடைத்தேர்தலில் தமிழர்கள் ஆளுங்கட்சிக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என்று தற்காலிக அச்சுறுத்தலை முன்வைத்திருக்கிறது. இதற்கு அரசு கொஞ்சம் அஞ்சும்- தற்காலிமாகவே. வெற்றி பெற்றவுடன் நடப்பது வேறு.

இந்த நாவலில் இன்னும் சில தகவல்கள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இந்திய சமூகத்தின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. இந்தியர்கள் மனைவியை வாழ்நாள் முழுதும் பேணிக்காக்காமல் இடையிலேயே கைவிடுபவர்கள் என்ற தகவல் பதிவாகி ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபார்ந்த கொள்கையைப் பின்பற்றி வரும் சமூக ஒழுங்கை கேலி செய்து மகிழ்வடைந்திருக்கிறது. இந்நாவலின் ஒரிடத்தில் மணியனின் மனைவி இன்னொருத்தனோடு ஓடிப்போய்விடுவதாக எழுதப்பட்டுள்ளது. ஆடவர்கள் தன் மனைவிமார்களை கைவிடுபவர்கள் என்ற தடித்த வரி இந்திய இனப்பெண்களைக் வேண்டுமென்றே கேலி செய்வதற்காகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சமய வேறுபாடு மட்டும் முட்டுக்கட்டையாக இல்லையென்றால் வேற்றினப்பெண்கள் இந்திய ஆடவரைச் சுணங்காமல் மணம் புரிந்து கொள்வார்கள் என்ற செய்தி பரவலாகப் பேசப்பட்ட ஒன்று. §ஒரு குறிப்பிட்ட சமயத்தில் காணப்படாத கட்டிய, மனைவியை கடைசி வரை பேணிக்காக்கும் இந்த இந்தியப்பண்புக்காகவே வேற்றினப் பெண்கள் கொடுத்த சான்றிதழ்தான் இந்திய ஆடவரைச் சுணங்காமல் மணக்கலாம் என்பது. தட்டிக்கேட்க ஆளில்லை என்றால் தடி எடுத்தவன் தண்டல்காரனாகிறான்.



1838ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டு வரை மலாயாவுக்கு சஞ்சிக்கூலிகளாவும் குடி வந்த இந்தியரின் எண்ணிக்கை 1.75 மில்லியன் என்று ஒரு கணக்கு சொல்கிறது. காடுகளை அழித்து ரப்பர் மரங்களை நட்டு நாடு வளர்த்து , அன்றைய ஐரோப்பிய தொழில் புரட்சிக்கு ரப்பரைக் கொடுத்து உதவி மலாயாவின் பொருளாதார வளத்துக்கு அடிகோல் நாட்டியவர்கள் இந்தியர்கள். காடுகளை நாடாக்கும் தருணங்களில் மலேரியாவுக்கும், வெள்ளைக்காரனிடம் அடிமைப்பட்டும், இரண்டாம் உலக யுத்தத்தின் போதும் , சியாம் மரண ரயில் பாதையை நிறுவ ஜப்பானியரிடம் செத்து மாண்டவர்கள் எண்ணிக்கை கிட்டதட்ட 9 லட்சம் பேர். சீனாவிலிருந்து வணிக நோக்கோடும், ஈய வயல்களில் வேலை செய்யவும் வந்த சீனர்கள் அதை விட அதிகம். மலாயாவின் பொருளாதார வளத்துக்கு இவர்கள் ஆற்றிய பங்கு இன்றைக்கும் நாம் காணும் நவீன மலேசியா சாட்சியாக அமைகிறது . இவர்களிடம் எப்படி நன்றி பாராட்டுகிறார்கள் சரித்திர ஆசிரியர்கள் தெரியுமா? தங்கள் நாட்டில் அதிகாரத்துக்கும் ஒடுக்கு முறைக்கும் ஆளானவர்கள் மலாயாவுக்கு குடி பெயர்ந்தபோது மலாய்க்காரர்கள் ஆதரவு கரம் நீட்டி கைதூக்கி விட்டார்கள் என்று ‘கரிசன’ இலக்கியம் படைத்திருக்கிறது. இந்தத்தவறான தகவலை மாணவர் புத்திக்குள் நுழைத்து குறிப்பிட்ட இனத்துக்கு கலங்கத்தைப் போதிக்கும் போக்கு வருங்கால சந்ததியின் ஒற்றுமையின்மையை உருவாக்கத் தவறாது. அதிகாரமும் பணபலமும் கையில் கிடைத்துவிட்டால் எல்லாவற்றையும் புரட்டிப்போடும் தைரியம் வந்துவிடுமோ என்னவோ?

ஒரே இனத்தைச்சேர்ந்தவர்கள் பாடக்குழுவில் இருந்து வடிவமைக்கப்படும் பாடத்திட்டத்தில் இப்படிப்பட்ட ஓட்டைகள் இல்லாமல் போகுமா என்ன?

இதே இலக்கிய நூலில் இந்தியர்களும் சீனர்களும் ‘வந்தேறிகள்’ என்ற கீழான வார்த்தை பிரயோகத்தை மீண்டும் வலியுறுத்தி இருக்கிறது. வந்தேறிகள் என்ற சொல் சினமூட்டும் கீழான வார்த்தை. மண்ணின் மைந்தர்கள் என்ற அடையாளத்தோடு பெருமைப்படுத்தப்படும் மலாய்க்காரர்கள்கூட வந்தேறிகள்தான். மங்கோலியாவிருந்தும், யுனான் பெருநிலத்திலிருந்தும் (மெக்கொங் நதி வழியாக) , தைவானிலிருந்தும், சில தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் , இந்தியர்களும் சீனர்களும் குடியேறும் முன்னரே குடியேறியவர்கள் மலாய்க்காரர்கள். பின்னர் வந்தவர்களை வந்தேறிகளென்றும் , முன்னர் வந்தவர்களை மண்ணின் மைந்தர்கள் என்றும் அடையாளப்படுத்துவது ஒரு நாட்டின் இன ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் இழி செயலாகும். 2008 பொதுத்தேர்தலில் பெரும்பான்மை மாலாய்க்காரகளைக்கொண்ட ஆளுங்கட்சி வரலாறு காணாத வகையில் கிட்டதட்ட தோல்வியை தழுவியது. முன்னெப்போதும் போலல்லாமல் பெருவாரியான சீனர்களும் இந்தியர்களும் எதிர்க்கட்சிக்கு வாக்களித்ததே இந்த எதிர்பராத சரிவுக்கு காரணமாய் அமைந்தது. திசை மாறிய சீன இந்திய ஓட்டை மீட்டெடுக்க புதிய பிரதமர் நஜிப் ஒரு மலேசிய கொள்கையை முன்னெடுத்து அதன் அமலாக்கத்தில் சீரிய கவனம் செலுத்தி வருகிறார். பல்லின ஒற்றுமையே ஆளுங்கட்சிக்கு வலிமையைக்கொண்டு வரும் என்பதால் ஒன்றுபட்ட மலேசிக்கொள்கையைப் பரவலாக்கி இன வேற்றுமையை வேரறுக்கும் ஈடுபாட்டில் மும்முறமாகும் தருணத்தில், இவ்வாறான இனத்தை பிரித்தாளும் நூல்கள் பாடமாக்கப்பட்ட முரண் வேதனைக்குரியது. ஒன்றுபட்ட மலேசியத்தை உருவாக்க இந்த அத்து மீறிய தகவல்கள் கண்டிப்பாய் வழி வகுக்காது. நாட்டு முன்னேற்றத்துக்கு தன் ரத்தத்தை வார்த்த இனத்தை வந்தேறிகள் என்று கூசாமல் எழுதுவதால்தான் இன்றைய தலைமுறை என்ன இனிவரும் தலைமுறையும் அதே இழி சொல்லால் ஒரு இனத்தை அழைக்கும்-அழிக்கும்! சரித்திர ஆசிரியர்களின் தவறான பதிவும் போதனையும் இளைய சமுகத்தின் வேற்றுமையை வழிகோலிடும்.



இதுதான் உண்மையான சரித்திரம், என்று மலாய் அரசியல் சமுகமும் எழுத்தாளர், இயக்கமும் எதிர் போர்க்கொடி தூக்கியிருக்கிறது. நாவல் புத்தகமாக வந்து நாற்பது வருடமாகிவிட்டது. நாற்பது வருடமாய் வராத எதிர்ப்புக்குரல் இப்போது மட்டும் ஏன் புதிதாய்க்கிளம்பியிருக்க வேண்டும் என்று கப்பேனா என்ற எழுத்தாளர் சங்கத்தலைவர் கேட்கிறார். இதுவரை அது இந்திய சீன இனத்தின் பரவலான வாசிப்புக்கு வராத காரணம் ஒரு புறமிருக்க இந்த ஆண்டுதான் பல்லின மாணவர் வாசிப்புக்குக் கொண்டு வரப்பட்டு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்பதை கப்பேனா தலைவர் அறியாததுபோல அறிக்கை விடுக்கிறார்.

அதனை எழுதிய எழுத்தாளருக்கு வக்காளத்து வாங்கப்போய் ஒரு சமுக்கத்தின் எரிச்சலுக்கு ஆளாவது இன ஒற்றுமைக்கு உலைவைக்கும் செயலாகும். இந்நாவலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட வேண்டும் என்று சிறு பான்மை இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் கூச்சலிட, பெரும்பானமை மலாய்க்காரர்கள் அந்நாவலுக்கான தங்கள் ஆதரவை பெருங்குரலெடுத்து எதிர்த்து வருகிறார்கள். சிறுபான்மையினரின் குரல் அந்தப்பெருங்கூச்சலில் அமுங்கிவிடும் அபாயம் உண்டு, ஆனால் இன்னும் சில தினங்களில் நடக்கவிருக்கும் ஒரு இடைத்தேர்தலில் இந்தியர்கள் தங்களின் ஒருமித்த குரலை நிரூபித்து பெருங்கூச்சல் காரர்களுக்குப் பாடம் போதித்துக் காட்டலாம். இந்த ஒரே வழிதான் உண்டு இப்போதைக்கு.

Comments

முனியாண்டி ராஜ். said…
சரியான கருத்து. இந்த நாவலுக்குச் சில தமிழர்களும் நற்சான்றிதழ் வழங்கியிருப்பது வேதனையான ஒன்று. மாதிரிக்கு, ஸ்டார் நாளிதழிலில் பரதன் என்ற பத்திரிக்கையாளர், இந்த நாவலில் இந்திய சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய கருத்துகள் எதுவும் இல்லை எனவும் மிகச் சிறந்த நாவலாக இதை அங்கீகரித்திருப்பதும் வேதனையான ஒன்று. இதை, உத்துசான் மலேசியா ( மிலாயு என்றிருக்க வேண்டும்) மிகப் பெரிய அளவில் வெளியிட்டிருப்பது எந்த அளவுக்கு நம்மை எடை போட்டிருக்கிறார்கள் என்பதற்குப் பெரும் ஆதாரமாக அமைகிறது. மேலும், இண்டர்லோக் நாவல் ஆசிரியரைக் கல்வி அமைச்சைச் சார்ந்த சில அதிகாரிகள் சென்று ஆறுதல் கூறியிருப்பதும் வேடிக்கையான ஒன்று.
நிற்க, இதைக் குறித்து சில ஜால்ரா கட்சியினரும் வாயைத் திறக்காமல் இருப்பது நகைப்புக்குறியதாகும். எடுத்துக்காட்டு,மக்கள் சக்தி கட்சித் தலைவர் 'தன்மானத் தமிழன்' தனேந்திரன். நமது பிரதமரைத் தைப்பூசத்திற்காக சுங்கை பட்டாணி கொண்டு வரவிருக்கும் மாபெரும் தலைவர்.
நிற்க,
முதலில் நம் நாட்டில் உள்ள ஜாதி சங்கங்களை முதலில் கலைக்க வேண்டும். நம்மிடையே இன்னும் ஜாதி தொடர்பான சங்கங்களை வைத்துக் கொண்டு, சத்தம் போட்டுக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றே நான் கருதுகிறேன். முதலில், நம் சமூகத்தின் மொத்த எதிர்ப்பையும் இந்த இண்டர்லோக் நாவலுக்குக் காண்பிப்போம். பிறகு, ... மற்றயவை....
ko.punniavan said…
கருத்துரைத்தமைக்கு நன்றி. ம.இ.க கல்வி அமைச்சிடம் பேச ஒரு குழு அமைத்திருக்கிறது. ம.இ.க என்றவுடன் முடிவு எப்போதும் போல ஆகிவிடுமோ என அஞ்ச வேண்டியுள்ளது. கடந்த காலங்கள் நமக்கு பாடம் போதித்திருக்கிறதே! அரசு சார்பற்ற இயக்கம் கிடைக்கவில்லையா இவர்களுக்கு?

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...