1. பழைய கோட்டை 1000 ஆண்டு பழமை வாய்ந்தது
2. மிதக்கும் அரண்மனை
3. பழைய கோட்டை நுழை வாயில்
13. அறிவார்ந்த மன்னர்
அதனை அடுத்து ஜந்தர் மந்தர் என்ற இடத்துக்கு கொண்டு சென்றார் மனோஜ்.
ஜந்தர் மந்தர் என்பதன் பொருள் formula calculation என்பதாகும். கால அளவை, வானிலை கணிப்பை, கிரக அமைப்பை கண்க்கிடும் இடத்தையே ஜந்தர் மந்தர் என்று அழைக்கிறார்கள். 1727ல் ஜெய் சிங் என்ற மன்னரால் நிறுவப்பட்ட இடம் இது. நக ஓவியம் வரைந்த மன்னர் ஜெய் சிங்தான் இவர். அவர் வானவியல் துறையிலும் கணக்கியல் துறையிலும் , வான சாஸ்திரத்திலும் ஆர்வம் உள்ளவராக இருந்திருக்கிறார் . அவர் மேல் நாட்டில் கற்ற படிப்பை வைத்து கள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். நேர கணக்கை கடிகாரம் வரும் முன்னரே எப்படிக் கணக்கிடுவது என்பதற்கான முறையான அளவீட்டுக்கருவி அங்கே அமைக்கப்பட்டிருந்தது. சூரியன் உதித்து சாயும் நேரத்தில் நிழல் விழும் கருவியைக்கொண்டு நேரம் அறியலாம். நாங்கள் புரிந்துகொள்வதற்குச் சிரமமில்லாமல் இருந்தது. அப்போது கடிகாரத்தில் நேரம் பார்த்தேன் துல்லிதமாக இல்லையென்றாலும் நேரத்தை நிமிடக் கணக்கு குறையாமல் காட்டியது. சூரிய சந்திர கிரகணங்களை கண்டறிவதற்காக கருவிகளும் என்பதற்கான அங்கே நிறுவப்பட்டிருந்தது. கிரகங்கள் எங்கே உலவுகின்றன என்பதை அறியவும் ஒரு கருவியும் இருந்தது. வானவியல் சாஸ்திரத்தில் அளப்பரிய சாதனைகள் செய்த ஜெய் சிங் ஏதோ இன்னொரு கருவியைச் செய்யவிருந்த தருணத்தில் மரணமுற்றிருக்கிறார். நான் பார்த்த மன்னர்களில் ஜெ சிங்கின் சாதனை மெச்சத்தக்கதாக இருந்தது. தன் ராஜபோக வாழ்க்கையின் ஊடே வானவியலையும் கறைத்துக்குடித்து செயலளவிலும் முனைப்பு காட்டியிருக்கிறார்.
ராஜஸ்தானின் மிகப்பிரசித்திபெற்ற நினைவிடமாக இருக்கிறது இந்த ஜந்தர் மந்தர்.
இந்த இடம் மினியேச்சர் ஓவியங்களுக்குப் புகழ்பெற்றது.
மயிரிழை அளவே கொண்ட தூரிகையைக் கொண்டு ராஜஸ்தான் கலை பண்பாட்டுக் கூறுகளை வரைகிறார்கள். யானைகள் , ஒட்டகங்கள், கோட்டைகள் என தம் நாட்டு பின்புலங்கள் கருவாக தீட்டப்படுகிறது.
கண்களை இடுக்கி , கூர்ந்து நோக்கி , முன்னால் யார் நிற்கிறார்கள் என்று பார்க்கக்கூட முடியாமல் ஒவ்வியம் வரைவதிலேயே கவனமாகச் செய்கிறார்கள். A4 தாளில் ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க ஒரு மாதம் வரை ஆகிறது என்கிறார்கள். அதன் விலை அதிகமாகத்தான் இருக்கிறது. பணக்கார நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான கலைப் படைப்புகள் அவை.
ஒட்டக உரோமத்தாலான கம்பளிகளுக்கு ஜெய்ப்பூர் நல்ல இடம். காற்றைப் போல கனமற்று இருக்கிறது. மேலே எடுத்துப் போட்டுக்கொள்ளூம்போதே அதன் மென்மை நம்மை ஈர்க்கிறது. விலை - பயங்கரம்.
மறுநாள் பழைய கோட்டைக்குப் புறப்பட்டோம். ஜெய்ப்பூர் பட்டணத்திலிருந்து ஒரு அரை மணிநேரப் பயணம். தோமஸ் வண்டி இதற்கு மேல் போகாது 400 ரூபாய் கொடுத்து மலை ஏறும் பிரத்தியேக வண்டியில்தான் போக முடியும் என்றார்.
மனோஜ் இந்தியில் சொல்ல தோமஸ் மறு பேச்சில்லாமல் வண்டியைக் கோட்டைக்கு விட்டார்.
தோமஸ் , “சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் நான் இல்லையென்றால் உங்களுக்கு 400 ரூபாய் செலவுதானே,” என்றார். நடந்து கூட போயிருக்கலாம்.
வெளியில் இருந்து பார்க்கும் போதே அதன் பிரம்மாண்டம் தெரிந்தது. 1000 ஆண்டுகால பழமை வாய்ந்த கோட்டை அது. ஒரு ஐந்தடி அகலத்தில் எட்டடி உயரத்திற்குக் கோட்டைச்சுவர் எத்தனையோ கீலோமீட்டர் தூரம் மலையைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கிறது. அரண்மனையை எதிரிகள் தாக்காமல் இருக்க இந்த நீண்ட பெருஞ்சுவர்.
அவ்வளவு நீண்ட சுவரின் அருகில் கூட போக நேரமில்லை.
அரண்மனையைப் பார்க்கவே நேரம் போதாது.
சுவாரஸ்யமான பல கதைகள் புதைந்துள்ள இடம் இந்த பழைய கோட்டை.
மக்கள் தொகை, ராணுவத்தொகை அதிகரிப்பே புதிய கோட்டை நிறுவுவதற்கான காரணமாக இருந்திருக்கிறது.
ஒரு மன்னரைப்பற்றிய கதையை முதலில் பார்ப்போம்.
மன்னருக்குத் தனியாக ஒரு அறை. ஜெய்ப்பூர் எந்நேரமும் வெப்பம் கக்கும் ஊர். எனவே மன்னர் குடியிருக்கு அறை அகன்ற சுவரைக்கொண்டது. அகன்ற சுவர் குளிரை பாதுகாத்து வைக்கிறது. அவருடைய கணக்கற்ற மனைவிகளின் அறைகளுக்கு அவர் செல்வதென்றால் அதற்கென்று சுரங்கப் பாதை உண்டு. ஒவ்வொரு அறைக்கும் ஒவ்வொரு சுரங்கப் பாதை. நான் ஒரு சுரங்கப்பாதையில் போய்ப்பார்த்தேன். என் துர் அதிர்ஸ்டம் எந்த அரசியாரும் அங்கில்லை.
எந்த மனைவியிடம் அன்று இரவைக் கழிக்கப்போகிறார் என்பதை அவரே முடிவெடுப்பார். மனைவி மார்கள் மன்னரை வரச்சொல்ல முடியாது. தேர்வு அவருடையது. அரசிமார்கள்கூட ஆணாதிக்கப் பிடியில்தான் சிக்கியிருந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு அரசிக்கும் அரவாணிகளே பணிப்பெண்களாக இருந்திருக்கிறார்கள். ஏடாகூடமாய் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே பெண்களைத் தோழிகளாய்ப் போடவில்லையாம்.
அந்த அரண்மனையில்தான் முதல் குளிர்சாதன வசதியை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
அகன்ற சுவர் கொண்ட அறை அரசியின் அறை. நான்கடி அகலத்துக்கு இரண்டு திறந்த பகுதி. அறையின் கட்டடத்துக்கு மேலே தண்ணீர்த்தொட்டி. திறந்த கதவுக்கு மேல் தொட்டியிலிருந்து ஒழுகும் குழாய் உண்டு. அந்தக் குழாயில் தண்ணீர் சன்னஞ் சன்னமாய் ஒழுக சிறு சிறு துவாரங்கள். அந்தக்குழாயோடு திரைச்சீலை போன்ற மெல்லிய துணி இணைப்பு. குழாயிலிருந்து வடியும் நீர் துணியை நனைக்கிறது. நனைந்து துணியில் காற்று வீச குளிர் காற்று அரசியை அடைகிறது. தண்ணீரில் நனைந்த ஈரத்துணி காயக் காய தண்ணீர் ஒழுகி அதனை நனைத்துக் கொண்டே இருக்கிறது. எப்படி இருக்கிறது ஐடியா?
தொட்டி நீர் தீராமல் இருப்பதற்கும் துணியில் ஈரப்பதம் இருந்துகொண்டே இருக்கவேண்டும் என்பதற்கும் பணியாட்கள் பக்கத்திலேயே இருக்கவேண்டுமல்லவா?
ஆனால் இன்றைக்கு நாம் வாழும் வாழ்க்கை அன்றைய அரச வாழ்வை விட மேலானது. அன்றைக்கு அரசர்கள் குளிர்சாதன வசதியை கண்டிருக்கமாட்டார்கள்.கார் பயணம் சாத்தியப்பட்டிருக்காது. மின்சார ரயில் பயணம்? விமானப் பறத்தல்..?.... ம்ஹ¤ம். இதெல்லாம் இப்போது நமக்குச்சாத்தியம் தானே. நாம் இப்போது அரசராய் இல்லையென்றாலும் ராஜவாழ்வு அனுபவிக்கிறோமா இல்லையா?
சரி பழைய கோட்டைக்கு வருவோம்.
முதன் முதலில் கட்டப்பட்ட கழிவறையைப் பார்த்தோம். அரசி பயன்படுத்தியதாம். சிமிண்டால்தான் ஆனதுதான். அரசி சௌகர்யமாக உட்கார்ந்திருப்பாளா என்று சந்தேகமாக இருந்தது. தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தவேண்டிய அறிமுகக் கழிப்பறைதானே. அப்படித்தான் இருக்கும்.
இஸ்லாம் முகலாய மன்னர் அக்பர், இந்து சந்திரகுப்த் வம்சத்து பெண்ணான ஜோடாவைக் காதலித்து மணந்தார் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா ? அக்பர் காதலில் விழுந்து கட்டிய முதல் கண்ணாடி மாளிகையை ஜெய்ப்பூரில் பார்த்து வியந்து போனேன். சுற்றிலும் வண்ண வண்ணக் கண்ணாடி, பளபளக்கும் கற்களால் ஆன கண்ணாடி மாளிகை அது. விட்டம் முதற்கொண்டு கண்ணாடியால் பளபளத்தது. மாளிகைக்கு வெளியிலிருந்து கிட்டிய காட்சியே மெய்சிலிர்க்க வைத்தது. உள்ளே போக அனுமதி இல்லை. பார்வையாளர்கள் தொட்டுத்தொட்டு கண்ணாடியை பாழ்படுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் அக்பர் ஜொடாமேல் கொண்ட காதல் எப்படிப்பட்டது என்று அழுத்தந்திருத்தமாய் சொல்ல முடியாத அளவுக்கு கண்ணாடி மாளிகையே சாட்சியாகி இருந்தது.
அக்பர் தொடங்கி ஓரங்கசிப் வரை காதலுக்காகக் கோட்டை கட்டுவதிலேயே கவனமாய் இருந்திருக்கிறார்கள். மக்களைக் கவனிப்பதில்தான் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
அங்கிருந்து வெளியாகி தண்ணீரில் மிதக்கும் மாளிகைக்குக் கொண்டு சென்றார். உள்ளே போய்ப் பார்க்க அனுமதியில்லை , கரையிலிருந்தே பார்த்தோம். அந்தக் காலத்தில் இது போன்ற மாளிகை கட்டுவது எப்படி சாத்தியமானது என்று தெரியவில்லை. 5வது மன்னர் காலத்தில் இம்மாளிகை கட்டப்பட்டிருக்கிறது. நீரில் மிதப்பது போன்று காட்சி அளிக்கிறது. ஆனால் நீருக்குள்ளும் மாளிகையின் பாதிப்பகுதி கட்டப்பட்டிருப்பதாகச் சொன்னார் மனோஜ். நீருக்கு அடியில் இருக்கும் மாளிகையில் பல அறைகள் இருப்பதாகச் சொன்னர். இன்றைக்கு அது காட்சிப்பொருளாகவே இருக்கிறது.
அன்று இரவே அங்கிருந்து புறப்பட்டோம்.
ஜெய்ப்பூரிலிருந்து டில்லிக்குப் போகும் சாலை நெரிசலாக இருந்தது. கணக்கற்ற லாரிகளைக் கடந்து செல்வது சிம்ம சொப்பனமாகவே இருந்தது.
டில்லியை நெருங்க நெருங்க நெரிசல் கூடியது. நின்று நின்று மெதுவாகவே நகர முடிந்தது. நல்ல வேளையாக ஒரு முக்கியஸ்தரின் வாகன் சைரன் அடித்துக்கொண்டே விரைந்து கொண்டிருந்தது. அதனைப் பின் தொடர்ந்து வகனத்தைச் செலுத்தினார் தோமஸ். இப்படிப் பல கிலோமீட்டர் கடந்திருப்போம். ஆனாலும் ஓரிடத்தில் அதனித் தொடர முடியவில்லை. நெரிசல் மிகுதிதான் காரணம்.
டில்லியில் ஏற்கனெவே ஒரு நல்ல விடுதிக்கு முன்பணம் கட்டிவிட்டுத்தான் வந்தோம், என்று சொன்னேனல்லவா? நல்ல நிம்மதியாகத் தூங்கலாம் என்று நினைத்த எங்களுக்கு அது கனவாகவே முடிந்தது. அந்தக் குறிப்பிட்ட விடுதியை அடைந்ததும் விடுதி நிர்வாகி எங்களை வேறொரு விடுதிக்கு அழைத்துச் சென்றார்.
நாங்கள் இந்த விடுதிக்கு முன் பணம் செலுத்தி விட்டோமே என்று சொன்னோம்.
தெரியும் விடுதியில் இடமில்லை என்று சொன்னார்.
நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. கோபம் அதையும் தாண்டிவிட்டிருந்தது எங்களுக்கு.
ஏற்கனவே புக் செய்தாயிற்று. எப்படி காலி இல்லாமல் போகும் என்று கேட்டேன்.
உங்களுக்கு அதை விட நல்ல விடுதி இது என்றார்.
இல்லை எங்களுக்கு நாங்கள் புக் செய்தத்துதான் வேண்டும் என்றேன்.
இடமில்லை. இந்த விடுதியிலெயே தங்குங்கள் என்றார்.
அரைத் தூக்கத்தில் இருந்த மனைவி சரி விடுங்கள். தூங்கத்தானே இடம் .நாளை மதியம் நமக்கு பிலைட். இங்கேயே தங்கிடுவோம் என்றாள்.
எனக்குத்தெரியும் நிர்வாகி ஏதோ வில்லங்கம் செய்கிறார் என்று.
நடு ராத்திரியில் வம்பு செய்ய வேண்டாம் என்று நினைத்து அவர் கொண்டு சென்ற விடுதிக்குச் சென்றோம்.
நாங்கள் நினைத்தது போலவே புக் செய்த விடுதியைவிட இது வசதி குறைவற்றது என்று தெரிந்தது.
சண்டை போட நேரம் இல்லை இது. மறு நாள் மலேசியாவுக்கும் பயணம் படுத்துறங்கி விட்டு பயணத்துக்குத் தயாராக வேண்டும்.
முற்றும்.
Comments
என் கட்டுரையை தொடர்ந்து வாசித்துக் கருத்து கூறியமைக்கு நன்றி.