Skip to main content

மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சமீபத்திய பயிலரங்கும் ,அதன் தூர நோக்கும்



படத்தில் எஸ்ரா, கோ.புண்ணியவான், முனைவர் முல்லை, சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன்

          ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி தொடங்கி 21ம் தேதிவரை மலேசிய எழுத்தாளர் சங்கம் மீண்டும் ஒரு சிறுகதைப் பயிலரங்கை முன்னெடுத்தது. முனைவர் முல்லை ராமையாவிடம் இதன் பொறுப்பு ஒப்படைக்கப் பட்டிருந்ததானது இது வழக்கத்துக்கு மாறான  பயிலரங்காகத்தான் இருக்கப்போகிறது என்ற எண்ணத்தோன்றியது. மனிதர்கள் எப்போதுமே ஒரே மாதிரியாகச் சிந்திப்பவர்கள் அல்ல. ஒரு நடவடிக்கையை ஒரே மனிதரிடம் ஒப்படைக்கும்போது அதன் நடவடிக்கைகளின் ,திட்ட வரையறை பெரும்பாலும் முன்னது போலவே பின்னதும் இருக்கும். இம்முறை மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் கருத்தரங்கின் சிந்தனையாளராகப் பேராசிரியர் முல்லையிடம் ஒப்படைத்ததன் வழி அதன் போக்கு வேறு மாதிரிதான் இருக்கவேண்டும் என்று யூகித்தது, தடம் மாறாமல் இருந்தது. எனக்கான பொறுப்பை விளக்கும்போதே அவரின் நோக்கம் நான் நினைத்தது போலவே அமந்திருந்தது.



நீங்கள் சிறுகதை துவக்கம் பற்றி மட்டும் பேசுங்கள். நீங்கள் பேச வேண்டிய தலைப்பு ‘வாசிப்போரின் கருத்தைக் கவரும் சிறுகதை ஆரம்பங்கள்’ என்று சொன்னார். சிறுகதையின் மற்ற எல்லைகளுக்குத் தாவாதீர்கள் என்று வலிந்து கூறிக்கொண்டிருந்தார். நான் எப்போதுமே அரை மணி நேரத்துக்கு மேல் பேச விரும்பாதவன். அவரிடம் நான்  என்ன செய்யவேண்டும் என்பது புரிகிறது  என்று சொன்னேன்.
சிலருக்குத் தலைப்பைக் கொடுத்தால் அவர்கள்  மற்ற பேச்சாளர்களின் பிரதேசங்களுக்குள் அத்து மீறி நுழைந்து விடுகிறார்கள். மற்றவர் கூற வேண்டியதையும் முன்னவர் கூறிவிட்டால் அடுத்து வருபவர்  தடுமாற்ற நிலையை அடையக் கூடும். ஒரு தொய்வுத்தன்மை வந்துவிடும் . இரண்டு  நாள் கருத்தரங்கு. ஒவ்வொரு நாளும் பத்து மணிநேர அமர்வு. பங்கெடுப்பர்கள் சோர்ந்துவிடக்கூடும். நமக்கு நேரம் போதாது. மற்ற பேச்சாளர்களின் நேரம் அடிபட்டுப் போகிறது. இது கருத்தரங்கின் ஒழுங்கமையைத் பாதிக்கும் என்றார். அதனால்தான் எல்லாரிடமும் அவர்கள் செய்யவேண்டியதை திரும்பத் திரும்பச் சொல்கிறேன் என்றார்.
       சிறுகதையின் கூறுகளைச் சரியாக வகுத்து நால்வரிடம் ஒப்படைத்து இருந்தார். அனைவருக்குமே அதனதன் பகுதிக்குத் தகுந்தார் போனற நேர வரையறைகூட பொருந்துவதாகத்தான் இருந்தது.
எனக்கு இரண்டரை மணி நேரம். பதினைந்து இருபது நிமிடங்களின் power point மூலம் விளக்கிவிட்டு இடுபணிக்குச்சென்று விடுங்கள் என்று சொன்னார். இது எனக்கு உவப்பானத் திட்டமாகப் பட்டது. செய்முறை கொடுத்தாலன்றி பயிலரங்கின் பயனை அடைய முடியாது என்பது அவரின் நோக்கமாக இருந்தது. இந்த இடுபணி கூட ஒரு அரை மணி நேரத்தில் செய்து முடிக்கப்படும் ஒன்றாக இருந்தது. என்வே முப்பது நிமிட நேரத்துக்குள் என்ன செய்ய முடியுமோ அந்த அளவுக்கே பங்கெடுப்பளருக்கு தோள் தாளாத சுமையான ஒன்றாக அமைந்திருந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக என்னிடம் மின்னஞ்சலில் தொடர்பு கொண்ட போது சொன்ன ஒரு விஷயம் என் நினைவு கோடிட்டு வைத்துக் கொண்டது.
“பயிலரங்கைத் திருவிழாவாக்காமல் academic காக நடத்தவேண்டும்” என்பதுதான் அது. நம் நாட்டில்  நடக்கும் நூல் வெளியீடு , சிறுகதைப் பயிலரங்குகளின் சித்து விளையாட்டின்  மரபான அரசியல் நாடியைப் பிடித்துப் பார்த்தபின்னர் கூடுதல் கவனமாக இருகிறார் என்று பட்டது.
டாக்டர் ரெ.கார்த்திகேசு சிறுகதை நடையைப் பற்றி விளக்கினார்.
முனைவர் நாகப்பன் ஒரு சம்பவத்தை எப்படி கதையாக்குவது என்பதைப் பற்றி பேசினார். அவருக்குக் கொடுக்கப் பட்ட தலைப்பு கருவும் கதைப் பின்னலும்.
டாக்டர் சபாபதி சிறுகதைகளின் பல்வேறு உத்தி முறைகளையும் சில எடுத்துக் காட்டு கதைகளையும் சார்ந்த பார்வை வைத்தார் .
எஸ் ராமகிருஷ்ணன்  உலக சிறுகதைகளின் தன்மையும் ,வடிவ நேர்த்தியையும் , நேர்க்கோட்டுத்தன்மை.,  நேர்கோடற்ற தன்மை , நவீன , பின்நவீன போக்கு பற்றிய எல்லையற்று அலைந்து கொண்டிருந்தார். 2 நாள் கருத்தரங்கில் எங்கள் நால்வரின் பேச்சுக்கு இடையில் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டு 80 விகித ஆக்ரமிப்பில் பங்கெடுப்பவர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொண்டார் எஸ்ரா.

டாக்டர் முல்லை நிகழ்ச்சி ஒருங்கிணைவு முறையாக இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருந்தார். அதிக நேரம் நிகழ்ச்சி நடக்குமிடத்தில் இருந்தவர் அவர்தான். ஒரு பேச்சாளருக்குக் கொடுக்கப் பட்ட நேரத்தைப் பிறர் களவாடிவிடக் கூடாது என்பதில் மென்மையுடனும் மிகுந்த கவனமுடனும் கண்கானித்தார். டாக்டர் ரெ.கார்த்திகேசு நேர நிர்வாகத்தில் கறாராக இருப்பவர். உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்று நேரடியாகவே பேச்சாளரிடம், நேர எல்லையைக் கடக்கும் அந்த கணத்திலேயே சொல்லிவிடுவார்.டாக்டர் முல்லையின் கண்டிப்பு வெளியே தெரியாத  மென்மை வழியைத் தனி வழியாகக் கொண்டவர். எல்லாம் குறையற நடந்தது.



கருத்தரங்கை முன்னெடுத்த நோக்கமே கலந்து கொண்டவர்களைச் சிறுகதை எழுத வைக்கவேண்டுமென்பதுதான். இது கொஞ்சம் பேராசைதான். இரண்டே நாள் பயிலரங்கில்  இந்த அமானுடம் (miracle) நடந்து விடாது. இது ஒரு தொடர் ஓட்டம். ஓட ஓடத்தான் இலக்கு தென்படும். ஆனாலும் நல்ல தொடக்கம்.  அல்லது குறைந்தபட்சம் சிறுகதை இலக்கணம் பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்தவேண்டுமென்பதுதான் அதன் முதல் நோக்கம். கொஞ்சம் தூரநோக்கிச் சிந்தித்தால் இப்பயிலரங்கின் வழி எதிர்காலத்தில்(in the near  future) அவர்கள் எழுதுவதற்கானப் படைப்பூக்கத்தை தந்துவிட்டோமே என்ற திருப்திதான். இடுபணியின் பலனைப் பார்த்தபோது பெரும்பாலானவர்கள் சரியாகப் புரிந்து கொண்டார்கள் என்பது நிரூபனமானது.
ஆனால் பயிலரங்கில்    கலந்துகொண்டவர்கள் அதே பெரும்பாலோர் ஆர்வக்கோளாறின் காரணமாக   வந்ததாக யூகிக்க முடிந்தது. இருப்பினும்  கோளாறான ஆர்வத்தை சரி செய்துவிட்ட  முயற்சி இது என எதிர்பார்க்கலாம். தப்பில்லை.
ஒரு இடைநிலைப்பள்ளி ஆசிரியர் ஒப்புதல் வாக்குமூலத்தின் வழி ஆர்வக் கோளாறு தெரிந்தது என்று நான் மேற்சொன்ன கருத்தை மெய்ப்பிக்கிறார் என்று நினைக்கிறேன்.
“நான் அடிக்கடி எழுதுபவன்தான். என் பாடத் திட்டத்தையும் எக்கோர் நம்பரையும் ( அதிர்ஸ்டக் குலுக்கு)எழுதுவேன்” என்றார். ஆனால் இவர் இரண்டு முழு நாளும் பயிலரங்கில் கலந்துகொண்டார் . எனவே அவர் இல்லம் திரும்பும்போது வெறுங் கையோடு திரும்பவில்லை என்று தெரிகிறது. குறைந்த பட்சம் தன் மாணவர்களிட\ம் தான் கற்றதை மறு நடவு செய்வார் என்ற வெளிச்சம் தெரிகிறது. அதற்கான களம் பல ஆசிரியர்களுக்குத் திறந்தே கிடக்கிறது. இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் படைப்பூக்கம் இல்லாதவர்களாக இருந்தாலும் தன் பிடிக்குள் இருக்கும் மாணவர்களை எழுத்துப் பக்கம் திருப்பிவிடும் நல்ல காரியத்தைச் செய்து வருகிறார்கள்.
பலர் தனக்குச் சிறுகதை படைப்பதில் ஆர்வம் உண்டு அதை எப்படி எழுத்தில் வடிப்பது என்று புரியவில்லை இக்கருத்தரங்கின் வழி பாதை தெரிகிறது என்று குறிப்பிட்டது ஏற்பாட்டாளர்கள் கொஞ்சம் மனநிறைவடையலாம்.
தன் 2 நாள் தொடர் உரையில் வாசிப்பு உலகத்தைத் திறந்து காட்டிய எஸ்ரா கலந்துகொண்டவர்களின் வாசிப்புத் தளத்தையும் தரத்தையும் மாற்றிவிட்டிருக்கிறார் என்று நம்பலாம். அவரின் வாழ்வனுபவம் , தேசாந்திரியாகத் திரிந்து பெற்ற அனுபவம், உலக இலக்கியத்தில் தனக்குள்ள பிடிப்பும் படிப்பும் பற்றிய ஆழமான தரிசனத்தை முன்வைத்தபோது, அனைவரும் ஹிப்நோட்டிசத்தில் மந்திரிக்கப்பட்டது போல  கவனம் சிதறாமல் நிகழ்ச்சியில் ஊன்றி இருந்தனர்.
      இது நாடகியமான மேடைப்பேச்சு மரபு அல்ல. கைத்தட்டலுக்கும், மேடைதோறும் முழங்கிய கிளிப்பிள்ளை நகைச்சுவைக்கும், பார்வையாளரின் குபீர் சிரிப்பையும் எதிர்பார்த்தே வீசப்படும் வார்த்தை கூட்டமுமல்ல. அறிவார்ந்த தளத்தில் , எழுத்து வேள்வியை , வாசக தரத்தை மேம்படுத்தும் குறிக்கோல் கொண்டது. எனவே எஸ்ரா மையச் சிந்தனையை   விட்டு விலகாத சித்திரமாக , நேர்த்தியாக செய்து முடித்தார்.
இதுவரை இலக்கிய சார்ந்த வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள், வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள், கட்டுரைகள் சின்னச் சின்ன சிறுகதைகள் எழுதியவர்கள், சில கதைகள் வழி தன் படைப்பாற்றலைக் நிரூபித்தவர்கள், தேர்ந்த கதாசிரியர்கள் என் பல வகை ஆற்றல் கொண்டவர்களில் என எல்லாத் தரப்புக்குமே இக்கருத்தரங்கு அந்தந்தத் தரப்பினர்க்கேற்ப திறப்புகளை காட்டி இருக்கிறது.
     ஆனால் இன்னமும் ஒரு குறை சங்கம் வரைந்த சித்திரத்துக்குள்  தேவையற்ற புள்ளியாய் எட்டிப் பார்க்கிறது.
     ஏழுட்டு தேர்ந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து பங்கெடுப்பவர்களுக்குச் சிறுகதை எழுதுவதற்கு வழிகாட்ட வேண்டும் என்று பணித்தார்கள். வழிகாட்டிகள் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, பங்கெடுத்தவர்கள் கதைகள் வந்து சேரவில்லை. 2 வாரங்கள் ஆகப் போகிறது. நிகழ்ச்சியின்போது அவர்களிடம் கொந்தளித்த படைப்புணர்வு என்ன ஆயிற்று? என்னைச் சந்தித்து "நீங்கள் எனக்கு வழிகாட்டியாக வரவேண்டும்", என்று சொன்னவர்களிடம் , "பராவாயில்லை எனக்கே அனுப்புங்கள்," என்ற பதிலை வாங்கிக்கொண்டவர்கள் கூட வாலாவிருந்துவிட்டார்கள். தமிழர்கள் ஒரே மாதிரி குணாதிசயம் உள்ளவர்கள் என்பதை நான் இப்போது நம்பத் தயாராகி விட்டேன். cococola syndrome உங்களுக்கு ஞாபகம் வரவேண்டுமே!(இக்கட்டுரையை எழுத வைத்ததே காத்திருப்பில் வந்த 'பரவசத்தில்'தான்)
          எழுத்தாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் பல எழுத்தாளர்களால் விரும்பும் மனிதராகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்வதில் தோல்வி அடைந்ததில்லை. எனக்கு அவர் ஆதிகுமணன் காலத்திலிருந்தே அறிமுகம். ஆதி சங்கத் தலைவராக இருந்த போதே ராஜேந்திரனின் பக்க பலத்தில்தான் சங்கம் தீவிரமான இயக்கம் கண்டது. எழுத்தாளர் சங்கம், அதன் செயல்பாடு குறித்து எனக்கு எப்போதுமே இரண்டுவித கருத்து கிடையாது. செயற் திட்டங்கள் முறையாக நேர்த்தியாக இருக்கவேண்டுமென்பதில் கறாராக இருப்பவர். திட்டமிட்டபடியே செய்து முடிப்பதில் மிகுந்த முனைப்பும் அக்கறையும் காட்டுபவர். அவரிடமிருந்து நேர நிர்வாகத்தைப் பல இயக்கங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் குறிப்பிட்ட நிகழ்வு நடந்துவிடவேண்டும் என்பதில் கவனம் பிசகாமல் இருப்பார். இளம் எழுத்தாளர்கள் தோன்ற வேண்டும் , இப்போது எழுதிக்கொண்டிருப்பவர்கள் மேலும் காத்திரமான படைப்புலகுக்குள் நுழையவேண்டும் என்பதில் அவர் காட்டும் அக்கறை பாசாங்கில்லாதது. அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் பாதகமில்லை யாரிடம் பணத்துக்காக யாசகம் செய்தாலும் கேவலமானதல்ல என்று எண்ணுபவர். அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் எண்ணிக்கையும் எழுத்தின் தரமும் உயரவேண்டும் மென்பதில் முனைப்பாக இருக்கிறார். ஆகஸ்ட் 19,20, 21 ஆகிய தேதிகளில் நடந்த பயிலரங்கிலும் இதனையே வலியுறுத்தி செயலாக்கினார்.
      வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்நிகழ்வின் சிந்தனையாளருக்கும் , அழகுற வடிமைத்து நடத்திய முனைவர் முல்லைக்கும் நம் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...