Skip to main content

நினைவெழுத்துகள்



இக்கட்டுரை மலேசிய நவீன இலக்கியத்தை
முன்னெடுத்துச்சென்ற
எம்.ஏ. இளஞ்செல்வனுடனான என் பகிர்வுகளாகும்

க.இளமணி, கோ.புண்ணியவான்,அப்பாவிச் சோழன்,சை.பீர்,இளஞ்செல்வன்


நினைவெழுத்துகள்
1.      என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியாகிறது. நிஜம் என்று அதற்குத்தலைப்பிட்டதும் , தனித்தமிழில் ஆர்வலர்களிடமிருந்து கண்டனக்கடிதங்கள் வந்தன. உண்மை என்று தலைப்பிட வேண்டியதுதானே என்று நேரடியாகவும் முறையிட்டார்கள். இதைப்பற்றி  வேறொரு தருணத்தில் கதைக்கலாம். நிஜம் வெளியீடு கூலிம் தியான ஆஸ்ரமத்தில் சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி தலைமையில் நடந்தேறியது. எம். ஏ இளஞ்செல்வன் நூலாய்வு செய்தார்.  நிகழ்ச்சிக்கு நான் அழைக்காமலிருந்தாலும் சை. பீர்முகம்மதுவும், அப்பாவிச்சோழனும் , இன்னொரு நண்பருடன் நட்பின் காரணமாக கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தனர் . பாலு மணிமாறன்தான் அப்பாவிச்சோழனாக மலேசியாவில் இலக்கியமுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர். நூலாய்வு செய்த இளஞ்செல்வன் , நான் எழுதிய பதினாறு கதைகளில் நான்குதான் தேறும் என்று சபையில் கூறினார். அதில் ஒரு கதை ‘குப்புச்சியும் கோழிகளும்’ உலகத்தரத்தில் இருப்பதாகச் சொன்னார். பதினாறு கதைகளில் நான்கு கதைகள்தான் தேறும் என்று சொல்லி மற்ற கதைகளைப் பற்றி கருத்துக் கூறாதது  எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால் என் கதைகளில் ஒன்று உலகத்தரத்தில் இருக்கிறது என்று சொன்னதும் நான் வருத்தத்திலிருந்து என்னை மீட்டுக்கொண்டேன்.        பாராபட்சமின்றி  மக்கள் மத்தியில் கதைகளை விமர்சிப்பதை இளஞ்செல்வன் வழக்கமாகவே கொண்டிருந்தார். சபைக்கு முன்னால் வானாளாவ புகழ்வதும் முதுக்குக்குப் பின்னால் ‘இவன் என்னா கத எழுதிருக்கான்’ என்று குத்தும் விமர்சகர் மத்தியில்,  முகமன் சொற்களால் அலங்கரிக்கத் தெரியாதவர் அவர். அன்றைக்கே தீவிர இலக்கியத்தை முன்னெடுத்தவர்களில் முக்கியமானவர் அவர். மலேசியாவில் தீவிர இலக்கியம் அவரிடமிருந்தே தொடங்கியது என்று சொல்வதுதான் பொய்யுரைக்காததாக இருக்கும்.       நிகழ்ச்சி முடிந்து அன்றிரவு , இரவுச்சாப்பாட்டுக்கு ஒரு சீனர் கடையைத் தேர்வு செய்திருந்தோம்.       உணவைச் சுவைத்துக்கொண்டிருந்தபோது அன்று மதியம் நடந்த என் நூலாய்வு பற்றி பேச்சு எழுந்தது. இளஞ்செல்வன் மீண்டும் தான் கூறியதையே அங்கேயும் நிறுவினார். “ஒங்கதையில் நாலுதான் தேறும்” என்றார். நான் அவர் கிண்ணத்தை நிரப்பிக்கொண்டே,” இன்னும் மூன்று கதைகளையாவது உங்கள் வாயால் தேறும் என்று சொல்லுங்கள்” என்று நகைச்சுவைக்காக முன்வைத்தேன். நான் கிண்ணத்தை நிரப்பியது அவருக்கு ஐஸ் வைக்கத்தான் என்று புரிந்துகொண்டவர், “இதுல இருக்கிற ஐஸே போதுமே.” அப்போது அவர் கொஞ்சம் தன்னிலை மறந்து இருந்தார். நான்தான் பில்லுக்குப் பணம் கொடுக்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தோடுதான் கடைக்குக் கொண்டு போனேன். அதனைக்கூட பொருட்படுத்தாமல் ‘உங்கதையில் நாலுதான் தேறும்’ என்று நிதானமற்ற தருணத்திலும் அவர் தன் கருத்தை வலியச் சொன்னது இலக்கியத்தில் அவர் நிலை தடுமாறாமல் இருந்தார் என்பதைச் சொல்லவே இந்தச்சம்பவம். நம் பையில் பணமிருப்பது தெரிந்தால் குப்பையைக்கூட குண்டு மணி என்று சொல்பவர் உலகத்தில் இளஞ்செல்வன் போன்றவர்களும் இருந்தார்கள் என்பது வியப்புதானே!.
2.    அதே உணவுக்கடையில்  எங்கள் பேச்சு சுவாரஸ்யத்துக்கிடையே இன்னொரு சம்பவம் நடந்தது.  அவர் புகைக்கும் பழக்கம் உள்ளவர். ஒரு சிகெரெட்டை எடுத்து உதட்டுக்கிடையில் வைத்து தீப்பெட்டியைத் தேடினார். என் கைக்கு எட்டும் தூரத்திலிருந்த தீப்பெட்டியை எடுத்து,” நானே கொல்லி வக்கிறேனே,” என்றேன். என்னை உன்னிப்பாகப் பார்த்து சிரித்தார். “நகைச்சுவை உமக்கு நல்லா வருதியா,” என்றார். நான் வீட்டுக்கு வந்த பிறகு அந்தச் சொல்லின் உள்ளார்ந்த பொருள் என்னைச் சுடத் தொடங்கியிருந்தது. அந்தத் தருணத்தில் அது நகைச்சுவையாக பிரஸ்தாபிக்கப்பட்டாலும் கொல்லி வைக்கிறேன் என்ற மோசமான சொல்லாடல் அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று நினைத்து மனம் வருந்தியது. அந்த அவலச் சொற்களைப் பாவித்திருக்கக்கூடாது என்று உள்மனம் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தது.     2000 த்தாம் ஆண்டு என்று நினைக்கிறேன். நான் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையினர் நடத்திய சிறுகதைபோட்டிக்குப் பரிசு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னால் இணைப்பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் என்னைக் கண்டதும் நெருங்கி வந்து, “செய்தி தெரியுமா?” என்றார். நான் வியப்புடன் அவர் கண்களைப் பார்த்தேன். அவர் கண்களில் கொஞ்சம் இருள் கவ்வியிருந்தது.    “என்ன செய்தி?” ஒரு சுரத்தில்லாமல் எழுந்த கேள்வி அது. அப்போது என் நினைவெல்லாம் எனக்கு என்ன பரிசாக இருக்கும் என்ற உத்தேசத் தேடலில் சிக்கியிருந்ததுதான் காரணம்.    “ உங்களுக்குத் தெரியாத? சுங்கைப் பட்டாணியிலிருந்து தான் வர்ரீங்க என்றார்?” நான் பதிலேதும் சொல்லாமல் அவர் சொல்லவந்த விஷயம் தீவரமானதா இருக்குமோ எனச் சுதாரித்து , இந்த முறை மிகவும் முனைப்புடன் நோக்க ஆரம்பித்தேன்.    “ இப்பதான் ரேடியோவில செய்தியில் சொன்னாங்க,  இளஞ்செலவன் தவறிட்டாருன்னு” என்று சொன்னபோது , அவரின் பீடிகை இவ்வளவு கொடூரமான தகவலைத் தருமென்று எதிர்பார்த்திராத என் முகத்தில் தீக்கனல் அறைந்து விட்டிருந்தது.    “ நானே கொல்லி வக்கிறேன்” என்று எப்போதோ சொன்ன வார்த்தைகள்  என் காதுக்குள் அப்போது கொதிக்கும் மெழுகாய் பாய்ந்து ஓடியது.
3.    இளஞ்செல்வனும் நானும் அடிக்கடி சந்திக்கும் இடம் தலைமை ஆசிரியர் கூட்டங்களில்தான். ஒருமுறை கோலாலம்பூரில் நடந்த கூட்டத்தில் மலேசியா முழுவதிலுமிருந்து தலைமை ஆசிரியர்கள் வந்திருந்தனர். ஓய்வான நேரங்களில் எங்களுக்கிடையேயான உரையாடல்களில் இலக்கியம்தான் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும். எங்களோடு இருந்த இன்னொரு தலைமை ஆசிரியர் என்னை தன் நண்பருக்கு அறிமுகம் செய்யும் போது , இவர் பெரிய எழுத்தாளர் கோ.புண்ணியவான் என்றார். அவர் எந்தச் சலனமும் இல்லாமல் என்னைப்பற்றிய அறிமுகத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் , என் நண்பரிடம் நலம் விசாரித்துக்கொண்டிருந்தார். இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்களிடம் நாம் இலக்கியவாதி என்ற பிம்பத்தை முன் வைப்பது ஏளனமான ஒன்றாகவே எதிர்வினையாற்றும் என்பது இப்படியான பல சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன. அவரிடமிருந்து விலகியவுடன் நான் என் நண்பரிடம் சொன்னேன். என்னை இனி என் பெயர் சொல்லி அறிமுகம் செய்தால் போதும். எழுத்தாளர் என்றெல்லாம் பந்தா காட்டவேண்டாம் , அதனால் நான் பொசுங்கிப்போகிறேன் என்றேன். அப்போது இளஞ்செல்வன் அருகில் இருந்தார். “ஆமாம் , நீங்கள் அப்படியென்ன பெருசா எழுதிட்டீங்க?  ‘இவன் நட்ட மரங்கள் நிமிர்ந்துவிட்டன இவன் நடும்போது குனிந்தவன்தான் இன்னும் நிமிரவே இல்லை,  என்ற கவிதையைத் தவிர!” என்றார். அவர் அதனை அங்கதமாகக் கூடச் சொல்லியிருக்கலாம். எனக்கு வெட்கம் பிடுங்க ,  மண்டை நரம்புகளுக்குள் சூடேற ஆரம்பித்தது. ஆனால் ஒரு நண்பர் என்பதைவிடவும் குரு ஸ்தானத்தில் அவரை வைத்துப் போற்றியிருந்ததால் கோபம் ஒரு சிஷ்யனுக்கு உண்டானது போன்று கணத்தில் கறைந்து விட்டது. அந்தச் சம்பவத்தை  நினைக்கும்போதெல்லாம் கொஞ்சம் வருத்தம் உண்டாகும். ரொம்ப நாளைக்கு இந்தப் புண் ஆறாமல் இருந்தது.  அவர் இறந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் அவர் வாழ்ந்த ஊரான லுனாஸ¤க்குச் சென்றிருந்தேன்.  அங்கே ஒரு கூட்டதத்¢ல் கலந்து கொள்ள வேண்டிய சூழல்.  அந்த ஊரிலேயே நீண்ட காலம் பொதுத் தொண்டில் ஈடுபட்டிருந்த ஒருவர் பக்கத்தில் எனக்கு இருக்கை. அவர் வயது ஓடியிருந்தது. என்னை யாரென்று கேட்டார். நான் என் பெயரைச் சொன்னேன். “ ஓ எழுத்தாளரா?”  என்றார் வியப்போடு. ஆமாம் என்றேன். “இளஞ்செல்வன் உங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நன்றாக எழுதக் கூடியவர் நீங்கள் , எழுத்துலகில் பிரகாசிப்பீர்கள் என்று சொல்லுவார்,” என்றார்.  ‘ எனக்கும் இவன் நட்ட மரங்கள் மட்டும்தான் என் படைப்பிலக்கிய முத்திரையா?’ என்ற சந்தேகம் நீண்ட நாட்கள் இருந்தது. இளஞ்செல்வனுடைய காரமான விமர்சனத்துக்குப்பிறகு நான் நிறைய வாசிக்க ஆரம்பித்ததன் பலனாக , என் படைப்பில் மாற்றங்கள் கண்டிருக்கிறார் என்று கருதுகிறேன். நான் வாசிப்பிலும் எழுத்திலும் முனைப்பு காட்ட வேண்டும் என்பதற்காக அந்த காத்திரமான விமர்சனம் போலும் !    அவர் அந்த முதியவரிடம் என்னைப்பற்றி சொன்ன வார்த்தைகள் , முன்பொருமுறை  சொன்ன காத்திரமான விமர்சனத்துக்கு ஒத்தடமாகியது.      .

Comments

உங்களின் நினைவுப் பகர்வுகளில் மூழ்கியப் பின் எனக்குள்ளும் சில இலக்கயத் தாக்கங்களை ஏற்படுத்தியவரின் நினைவுகள் என்னையும் தாலாட்ட ஆரம்பித்துவிட்டது. வானம்பாடி காலம் தொட்டு அவரின் படைப்புகளை வாசித்துச் சுவைத்தவன். பசித்திருக்கும் இளம் கொசுக்கள் இன்னமும் நினைவுச் சுவடுகளில். ஓரிரு முறையே அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. என் இருபது வயதுகளில் அவரைச் சந்தித்தப் பொழுது, 'நீங்க தானா பூச்சோங் சேகர்? ரொம்ப இளமையா இருக்கிங்களே, எழுத்தப் பாத்துட்டு முதியவரா இருக்குமோனு நினைச்சுட்டேன்' என்றார். நாட்டின் பிரபலமான ஓர் ஏழுத்தாளரின் நினைவில் நானும் பதிந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது மனசு மகிழ்ந்தது.
ko.punniavan said…
நன்றி நண்பரே,
அவரைபற்றி எழுத நிறைய இருக்கிறது.இதனை அடுத்து இன்னும் நிறைய சம்பவங்களை எழுதுவேன்.மலேசியாவில் நவீன இலக்கியத்துக்கு பதியமிட்டவர். மிகத்தந்திரமாய் சிலர் அதனை மறைத்து தங்கள் பெயரை முன்னிறுத்துகிறார்கள். போலிகள்.
நீங்கள் சொல்வது சரிதான். போலிகள்தான் இன்று அனைத்து நிலைகளிலும் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.
நிஜங்களை யாரும் மதிப்பதும் இல்லை.
அங்கீகரிப்பதும் இல்லை.முகமூடிகளைத்தான் மக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அன்பு நண்பரே, ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு நிகழ்ச்சி. இன்னும் என் நெஞ்சின் அலைகளில் நிழல் ஆடுகின்றன. எனக்கும் அந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. அடுத்த வாரம் சுங்கைப் பட்டாணி வருகிறேன். என்னுடைய பாதுகாப்பிற்கு ருக்குமணியும் வருகிறார்.நிறைய பேசுவோம். தங்களின் நல்ல எழுத்துகள் நலம் பெறும். சாகா வரம் பெற்றவை. வெற்றிப் பெற்றவை. வாழ்த்துகள்.
ko.punniavan said…
நண்பரே,
தாராளமாக வாருங்கள். நாட்டுப் பாதுகாப்புக்குப் போலிஸ் ராணுவம் என்பதெல்லாம் வெறும் வேஸ்ட் என்பதைத் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...