விமானத்திலிருந்து டில்லி, தாஜ் மஹால், மனைவி, மகள், மருமகன், நான்
கோ.புண்ணியவான்
1. டிசம்பர் 17ம் தேதி டில்லியில் போய் இறங்கியபோது குளிர் எங்களை வரவேற்றது. தமிழ் பேய்ப்படங்களில் உருண்டு திப்பித்திப்பியாய் வரும் மேகக்கூட்டங்கள் போல பனி மூட்டம் சுருண்டு எங்களைக்கடந்த வண்ணமிருந்தது. முன் எச்சரிக்கையாகக் குளிர் ஆடையைப் போர்த்தியிருந்ததால் குளிர் என்னை நெருங்கத் துணியவில்லை. விமானத்தளத்தில் வரவேற்பு வாசலில் புது டில்லியின் பிரசித்தி பெற்ற பனிக்கர் டிரவல்ஸை சேர்ந்த கார் ஓட்டுனர் தோமஸ் நான்கே பேர் கொண்ட எங்கள் குழுத் தலைவர் பெயர் பலகையை ஏந்திய வண்ணம் எங்களை வரவேற்றபோது குளிரின் உக்கிரம் தெரியவில்லை. விமான நிலையத்தில் ஹீட்டர் (சூடூட்டி) பொருத்தப்பட்டிருக்கலாம். காருக்குள் ஏற வெளியே வந்தபோதுதான் குளிர் காற்று முகத்தில் வீசி எங்களுக்கு முதல் எச்சரிக்கையைப் பிறப்பித்தது. முகத்தில் முக்கால் பகுதியை மூடி கையில் தடித்த கம்பலி உரை போட்டிருந்ததால் குளிர் கருணையோடு என்னுடுடன் தோழமை பூண்டிருந்தது. கையில் உரை அணியாத மனைவியைப்பார்த்தேன் அவள் குளிர் அதிகாரத்துக்கு அடி பணிந்த சேவகன் போல தன் இரு கைகளையும் இணைத்து கைகட்டி வாய்ப்பொத்தி நடுங்கிக்கொண்டிருந்தாள். கிளம்பும்போதே கைக்கு உரையையும் எடுத்துக்கொள் என்ற என் அறிவுறுத்தலை எப்போதும் போலவே புறக்கணித்திருந்தாள். தடித்த குளிராடையே பையை நிறைமாத கற்பினியாகி அவளை எரிச்சலூட்டி உறையை உதாசினப்படுத்த விட்டிருந்தது. தோமஸை விசாரித்தபோது டில்லிக் குளிர் 10 செல்சியஸ்ஸைத் தொட்டிருக்கிறது என்றார். டில்லிக்குப் போகு முன்பே தமிழகத்தின் கொடைக்கானலுக்குச் சென்று வந்த உறவினர், எப்போதும் போலல்லாமல் குளிர் உக்கிரமாக இருந்ததாகக் குறிப்பிட்ட போது நான் எச்சரிக்கையானேன். இன்றைய வானிலையில் உண்டாகும் திடீர் மாற்றங்கள் இயல்பை மீறிய பின் நவீன போக்கு நம்மை நடுங்குறச்செய்து வருகிறது. குளிர் எனக்கு ஒத்துவராது. அதற்காக தடுப்புசியையும் போட்டுக்கொண்டு தயாரானேன். மனைவியையும் போட்டுக்கொள்ள அழைத்தபோது சின்னக் குழந்தையைப்போல ஊசிக்கு பயந்து தயங்கிக் கடைசியில் குத்திக்கொள்ளாமலேயே பயணிக்கத்தொடங்கினாள். இந்தியாவில் H1N1 அச்சுறுத்தல் தகவல்கள் காலந்தவறாமல் விட்டு விட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் அறிவுறுத்தலைக் காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பது மனைவிக்கு பழக்கமாகிவிட்டது. சரி விடு , கிளம்பும் நேரத்தில் ஏன் வம்பு? நம்ம சண்டை வெளிநாட்டுக்கு வேறு ஏற்றுமதியாக வேண்டுமா என்ன?
2002ல் நான் முதன் முதலாக டில்லிக்கு வந்தபோது இந்திரா காந்தி விமான நிலையம் பினாங்கு விமான நிலையத்தின் அளவே இருந்தது. என்னடா இது, உலகின் மிகப்பெரிய ஜனனாயக நாடான இந்தியாவின் தலை நகரின் விமான நிலையமே இத்துனூண்டுதானா நான் நினைத்து வருத்தப்பட்டேன். (என்ன இருந்தாலும் நம் மூதாதையரின் தாய் நாடாச்சே என்ற ஆதங்கத்தில்) ஆனால் இன்றைக்கு அந்த நிலை பெரிதும் மாறி இருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது.
சமீபத்தில் நடந்து முடிந்த காமன் வெல்த் போட்டிகள் அந்த விமான நிலையத்தின் புறத்தோற்றத்தைப் புரட்டிப்போட்டிருந்தது. 2002 ல் நான் பார்த்ததற்கும் 2010ல் பார்ப்பதற்கும் என்னுள் பெரிய வியப்பைப் பூசிவிட்டிருந்தது. வெறி நாய் விரட்டினால் நம் இயல்பான ஓட்டம் பன் மடங்கு வேகம் பிடிப்பதில்லையா? அது போலத்தான். பல நாடுகளிலிருந்து வரும் போட்டியாளர்கள், அதிகாரிகள், பார்வையாளர்கள், எல்லாருக்கும் மேலாக தலைவர்களின் வருகை விமான நிலையத்தோற்றத்தை தலை கீழான முன்னேற்றத்தைக்காட்டியது. இது மட்டுமல்ல பின்னர் நாங்கள் போய்ப் பார்த்த விளையாட்டுப்போட்டி நடக்கும் இடம் கூட நூதனமாக, சுத்தமாகக் காட்சி அளித்தது. எல்லாம் விளையாட்டு தேவதையின் தரிசனம்தான் காரணம்.
தோமஸ் ஓட்டி வந்த டொயோட்டா இன்னோவா வசதியாகத்தான் இருந்தது. ஆனால் காருக்குள் புகுந்தவுடன்தான் ஒரு குழப்பமும் எங்களுக்கு முன்னாலேயே புகுந்திருந்தது தெரிந்தது. பயணத்திட்டத்தின்படி அன்றிரவே சிம்லா போவதற்கான திட்டம் போட்டிருந்தார் என் மருமகன் (குழுத்தலைவர்). இணையத்தில் பயண டில்லியிலிருந்து நேரத்தைக் கணக்கிட்டபோது இரண்டு மணி நேரம் என்று தப்புக்கணக்கு போட்டிருந்தார் மருமகன். ஆனால் தோமஸ் பயண நேரத்தைச் சொன்னபோது எனக்கும் மருமகனுக்கும் சிறு வாக்கு வாதம் வந்துவிட்டது. டில்லியிருந்து சிம்லாவுக்கு எட்டு மணி நேரப்பயணம் என்றவுடன் எங்களுக்கு விடுமுறை மகிழ்ச்சியே கறைந்தோடிவிட்டது. சுங்கைப்பட்டாணியிருந்து கோலாலம்பூருக்குக் காலையிலேயே கிளம்பிவிட்டிருந்தோம். எங்கள் விமானம் 4.30 மணிக்கு எல் சி சி டியை விட்டு கிளம்புவதால் சாலை போக்குவரத்து நெரிசலுக்குப் பயந்து காலையிலேயே கிளம்பி விட்டிருந்தோம். ஏற்கனவே விமானத்தைப் பறக்கவிட்டு வானத்தை அன்னாந்து வேடிக்கை பார்த்த சம்பவம் இரண்டொரு முறை நடந்திருக்கிறது. எனவே தான் இந்த முன் கவனம்! எங்கள் கார் பயணம் ஆறு மணி நேரம். விமான நிலையத்தில் காத்திருந்தது இரண்டு மணி நேரம். விமானத்தில் பறந்த நேரம் ஆறு மணி நேரம். இப்போது காரில் சிம்லாவுக்கு போகும் நேரம் எட்டு மணி நேரம். மருமகனின் பயணத்திட்டத்தில் எனக்கு கேரலா மிளகாயைக் கடித்தது போல சுரீரென்று கோபம் வர ஆரம்பித்தது. மனுஷன் இருபத்து மணி நேரமுமா பயணம் பண்ணுவான்.?
“ நான் தான் சொன்ன இல்ல? டில்லியில் மொத நாள் தங்கிட்டு மறு நாள் சிம்லாவுக்கு போலாம்னு.”
“ நமக்கு 10 நாள்தான் இருக்கு அங்கில். டில்லியில டைம் வேஸ்ட் பண்ண முடியாது. அங்க ஹோட்டல் புக் பண்ணியாச்சு அங்கில்”
“ புக் பண்ணி என்னா பண்ணுறது ? செக் அவுட் பண்ற நேரத்தில இல்ல போய்ச்சேருவோம்.”
“ கொஞ்ச நேரம் கார்லியே தூங்குங்க”
“ எனக்கு கார்ல தூங்குற பழக்கமில்ல. அதுவும் இந்திய ரோட்ல கார் ஒடும்போது முடியாத காரியம். நனவுலியே பயங்கரக் கனவு வரும் சாலை இது. இதுல தூக்கமா?
“எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. இப்போ டில்லியில தங்கனும்னா ஹோட்டல் சார்ஜஸ் எக்ஸ்ட்றா வரும். சிம்லா ஹோட்டல் புக் பண்ண காசு burn. ஒரு ரூம் 230 வெள்ளி. காசு இணையம் வழியா கட்டியாச்சு.”
“இவ்ளோ காசு தண்டத்துக்குக் கொடுத்திட்டமா?”
“ உல்லாசப்பயணத்துல இதெல்லாம் பாத்தா உல்லாசம் உபத்திரவமாயிடும்”
“இப்ப மட்டும் என்ன ஹோட்டல் பணம் burn தான்! நல்ல உல்லாசப்பயணம் போ” என்று சொல்லிக்கொண்டே சீட்டில் சாய்த்தேன். பசி வயிற்றுக்குள் புயலைக்கிளப்பியது. மனுஷனுக்கு கோபமும் பசியும் கலந்து வரலாமா? வந்து விட்டதே!
டில்லியில் தமிழ் சாப்பாடு விற்கும் கடையில் நிற்கச்சொன்னோம்.
டில்லியை விட்டுக்கிளம்ப இரவு மணி பத்தாயிற்று. குளிர் ஏறியிருந்தது.பனி மூட்டம் கனத்திருந்தது. அதில் தூசும் புகையும் கலந்து பார்க்கும் தூரத்தை குறைத்திருந்தது. சாலையில் பார்த்த அனைவரும் ஒசாமா பின் லேடன் மாதிரியே தெரிந்தார்கள். போலிஸ் காரர்கள், சாலை கட்டணச் சாவடி பணியாட்கள், ஓட்டுனர்கள் அனைவருமே தலையில் தடித்த முண்டாசு அணிந்து முகத்தை மூக்கு வரை மூடி மறைத்து பயங்கரமாகக் காட்சி அளித்தார்கள். தூங்கி எழுந்து பார்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம் தோன்றி மறையும்.
டில்லியை தாண்டவே மூன்று மணி நேரமாயிற்று. இரவு நேரத்தில் சாலையில் லாரிகள்தான் அதிகம் ஓடின. கார்களை அதிகம் பார்க்க முடியவில்லை. ஏனென்று தோமஸை கேட்டபோது விபரம் புரிந்தது. லாரிகள் இரவில்தான் சாலையைப் பயன் படுத்த வேண்டும் என்பது சாலை போக்குவரத்து விதி என்றார். லாரிகள் ஓடிவிட்டுப்போகட்டும்; கார்கள் சில சமயம் லாரிகளின் இடுக்கில் மாட்டிக்கொள்ளும்போதெல்லாம் என்ன தலை விதியோ என்று தோணியது.
ஒரு சாலை டோல் சாவடி வந்ததும் ஹிமாச்சல் பிரதேசத்தைத் தொட்டுவிட்டோம் என்றார். ஆனால் சிம்லாவை அடைய இன்னும் ஐந்து மணி நேரம் பிடிக்குமென்றார். அதுவும் ஒரு கணிப்புதான் என்றார். பனிப் பொழிவும், போக்கு வரத்து நெரிசலும் அதிகம் உள்ளபடியால் இன்னும் தாமதமாகுமென்றார்.
தோமஸ் அவ்வப்போது இறங்கி தேனீர் அருந்தி முகத்தை கழுவிக்கொண்டார். நேற்றுதான் அக்ராவிலிருந்து வேறு சில சுற்றுப்பயணிகளை இறக்கிவிட்டு உடனே கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை என்று சொன்னார். வந்தவுடனேயே உங்களை வரவேற்க அனுப்பிவிட்டார்கள் என்றார்.
“தூங்கலியா?” என்று கரிசனத்தோடு கேட்டேன்.
“என்னங்க விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு என்னமோ கேட்டானாமே “ என்றார். நான் வெள்ளந்தியாய் கேட்டது அவருக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும். தூங்காமல் வாகனத்தை ஓட்டுவது ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கு கொண்டது போல்தான்.
Comments
அன்புடன்,
வாசுதேவன் இலட்சுமணன்
"விவேகம்" வலைப்பதிவாளர்
மலேசியாவின் 'முதல்' தமிழ் வலைப்பதிவாளர்.
வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.