( பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்)
மலேசியாவில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்
படலாம். ஐந்து ஆண்டுக்கால ஆட்சி காலக்கட்டம் நிறைவுறும் தருணம் நெருங்கிவிட்டது. நாடாளுமன்றம்
கலைக்கப் பட்டு தேர்தல் அறிவிப்புக்கு மக்கள் ஆர்வத்தோடு காத்துக்கிடக்கிறார்கள். தேசிய முன்னணி ஆளுங்கட்சியே அந்த அறிவிப்பைச் செய்யும்.
அதிலும் பிரதமரிடம்தான் அந்த ‘வெட்டோ’ அதிகாரம் உள்ளது. அவர் சரியான தருணத்துக்கு காத்திருக்கிறார்
அல்லது சரியான தருணத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
கடந்துவிட்ட ஐம்பது ஆண்டுகளைப் போலல்லாமல்
இம்முறை கடும் போட்டியை எதிர்கொண்டு நிற்கிறது தேசிய முன்னணி. இது சோதனை மிகுந்த காலக்
கட்டம் அதற்கு. நாடு பிரிட்டிசாரிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட நாள் தொடங்கி இன்றைய
தேதிவரை அக்கட்சியே ஆட்சியைப் பிடித்து அசைக்க முடியாத அரசாங்கமாக தன்னை நிறுவிக்கொண்டு
வந்தது இந்த ஐம்பது ஆண்டு காலமாக. அது ஒரு சாதனைதான். ஆனாலும் அது ஒரு வரலாறாகிவிடும்
வாய்ப்பும் மிக அண்மையில் உள்ளது என அரசியல் பார்வைகள் அழுத்தமாகவே பதிவு செய்து வருகிறது.
ஆனால் இன்றைக்கு நிலைமை தலை கீழ். தேசிய முன்னணி
ஆட்சி ஊழல் மலிந்துகிடக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டிருக்கிறது எதிர்க்கட்சிகள்.
இதுநாள்வரைச் சற்று பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள்,
ஆளுங்கட்சியில் துணைப் பிரதமாராய் இருந்த அன்வர் இப்ராஹிம் குதப் புணர்ச்சி குற்றச்சாட்டில்
ஆறாண்டுகள் சிறைக்குள் தள்ளப்பட்டு வெளியே வந்தார். சிறையில்
இருக்கும் போதே நீதிக் கட்சி என்ற புதிய கட்சியைத்
தொடங்கினார். அதற்கு தன் மனிவியையும் தன் ஆதர்ஸ தோழர்களையும் முன்னிலை வக்கிக்கச் செய்தார்.
முன்னர் அவர் பக்கம் இருந்த ஆதரவாளர்களின் அரசியல் பலத்தோடும் தான் விட்டுச் சென்ற
செல்வாக்கை மீட்டு சக்திவாய்ந்த எதிர்கட்சியாக பரிணமிக்கச் செய்தார். அவரின் கட்சியின் தோற்றத்துக்குப் பிறகு, பலவீனமாகக் கிடந்த
எதிர்க் கட்சிக்குப் புதிய ரத்தம் பாய்ச்சி, புதிய ஊக்கியாக அமைந்தது அதன் தோற்றமும்
குறுகிய கால வளர்ச்சியும்.
இஸ்லாமிய
கோட்பாட்டோடு இயங்கி வந்த ‘பாஸ்’ அரசியல் கட்சியும் (முழுக்க முழுக்க மலாய்க்காரர்களை
அங்கத்தினர்களாகக் கொண்டது) பெரும்பாலும் சீனர்களை அங்கத்தினர்களாகக் கொண்ட ஜனனாயக செயல் கட்சியும் (DAP) அன்வரின் கட்சியோடு கை கோர்த்துக் கொண்டது. அதற்குப் பிறகு
எதிர்க் கட்சி ஆளுங் கட்சிக்கு ஈடான பலத்தோடு இயங்க ஆரம்பித்தது. 2008ல் நடந்த 12வது
பொதுத் தேர்தலில் ஆளுங்கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் ஒரு பங்கு பலத்தைத் தற்காத்துக்
கொள்ளத் தவறியதற்கு இந்தப் புதிய கூட்டணியும் ஒரு முக்கியக் காரணம்தான். ( இந்திய இளைஞர்கள்
சிலர் முன்னெடுத்த ஹிண்ட்ராப் போராட்டம் இதற்கு முக்கிய முன்னோடி என்றும் கொள்ளலாம்).
மலேசிய அரசியல் கட்டமைப்பை உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு
இங்கு இயங்கும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் இனரீதியானது என்று புலப் பட்டுவிடும்.
பாஸ் மலாய்க் காரர்களாலும், மக்கள் முற்போக்குக் கட்சி சீன இனத்தாலும், நீதிக் கட்சி
மலாய்க் காரர்களாலும், ம.இ.கா இந்தியர்களாலுமாக இனரீதியான அமைப்பைக் கொண்டே இயங்கி
வருகிறது. ஆளுங்கட்சி கூட்டணி மட்டுமல்ல எதிர்கட்சி கூட்டணியில் இயங்கும் கட்சிகள்கூட
உள்ளபடியே இனரீதியான அமைப்பைக் கொண்டதுதான். மலேசியாவில் இதனைத் தவிர்க்க முடியாது.
தன் இனமும் மற்ற இனத்துக்கு ஈடாக மேம்படவேண்டும் என்ற நோக்கமே இனக் கட்சியாக தகவமைப்புக்கான
முக்கியக் காரணி என்பதை சுட்டாமல் சுட்டுகிறது அரசியல் கட்சிகளின் கட்டமைப்பு. இந்தப்
போக்கு அரசியல் சாசன வரையரைக்கு முற்றிலும் முரணானது. தேசிய பொருளாதாரக் கொள்கையின்
முக்கிய நோக்கம் இனங்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் பேணுதல். அரசியல் கட்சிகளின்
உள் கட்டமைப்பே இனம் சார்ந்து இருப்பதால் இனப் புரிந்துணர்வை கொண்டு வருவது எங்ஙனம்?
நாடு சுதந்திரம் அடைந்த நாள் தொட்டே அரசியல் இயக்கங்கள் இப்படித்தான் இயங்கி வருகின்றன.
இது ஒரு மரபாகிவிட்டது என்றும் சொல்லலாம். என்னதான் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சி கூட்டணி
கட்சிகள் போல முழுக்க முழுக்க இன ரீதியாக அமைந்தது அல்ல என்று சொல்லி வந்தாலும், அதன்
உள் கட்டமைப்பு , அதிகாரம் எல்லாம் ஒரு அந்தந்த இனத்தின் பிடியிலேதான் உள்ளது.
சீனர்களைக் கொண்டு இயங்கி வரும் ஜனனாயக செயல்
கட்சிக்கு (DAP), ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் மலேசிய சீனர் கட்சியை
விட கூடுதல் பலம்வாய்ந்து திகழ்கிறது என்பது மறைக்க முடியாத உண்மை. ஆளுங்கட்சிக்குள்
இருந்துகொண்டு சீன இனத்தின் அடிப்படைத் தேவைகளை அதனால் நிவர்த்தி செய்ய முடியாத நிலை
இருந்துகொண்டே இருந்ததை மிகப் பெரிய பின்னடைவாகவே சீனர்கள் அவதானித்து வந்தனர். மலாய்க்கார
இனத்தைப் பொருளாதாரத்திலும் கல்வியிலும் நாட்டின் பலம் வாய்ந்த இனமாகக் ஆளாக்கவேண்டும்
என்ற கோட்பாட்டோடு இயங்கி வந்த ஆளூங்கட்சி குறிப்பாக அம்னோ( UNITED MALAYAN
NATIONAL ORGANISATION- முழுக்க முழுக்க மலாய்க் காரர்களை அங்கத்தினர்களாகக் கொண்டது)
பிற இனத்தின் தேவைகளைப் புறந்தள்ளவேண்டிய நிர்பந்தத்துக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டது.
(உயர கல்விக்கூட இடங்களையும், வனிகத்துக்கான வாய்ப்புகளையும் பெருவாரியாக தன் இனத்துக்கே
கொடுத்து உதவியது.) மறைமுகமாக பிற இனத்தின்- சீன இந்திய இனத்தின் ‘இடங்களை’ கபலீகரம்
செய்து அவற்றை தன் இனத்துக்கு தாரை வார்த்து தான் திட்டமிட்டபடி மலாய் இனத்தை இன்றைக்கு
மேல்நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இந்த ஐம்பது ஆண்டுகளில் மலாய் இனம் அடைந்த முன்னேற்றம்
ஒரு சாதனையென்றே வர்ணிக்கிறார்கள். ஆளுங்கட்சிக்குள் கூட்டணிக் கட்சியாக இருந்த சீன
இந்திய இன அடிப்படையிலான கட்சிகள் நடப்பதை கண்கூடாகப் பார்த்துக் கொண்டே ‘சும்மா’ இருந்துவிட்டது.
UMNO அதிகார பலமே இதற்குச் சான்று. அரசின் இந்த இனவாதப் போக்கால் ஒரு இனம் விரைந்து
முன்னேற்ற மடையவும், பிற இனங்கள் பின் தள்ளப்படவும் முக்கியக் காரணமாக இருந்துவிட்டது.
இது சீனர்களிடையே நீரு பூத்த நெருப்பாகவே கனன்று கொண்டிருந்தது. அதனால் வெகுகாலமாகவே
தங்கள் வாக்கை எதிர்கட்சியாக இருக்கும் DAPக்கு ஆதரவாகவே அளித்து வந்தது. இப்படித்தான்
ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருக்கும் MCA மெல்ல தன் பலத்தை இழந்துகொண்டிருந்தது.
சீன இனம் மலேசியாவில் வனிகத்தில் ஈடுபட்டு தன்னை
வலுப் படுத்திக் கொண்ட இனம். கல்வியிலும் மற்ற இனத்தைக் காட்டிலும் பல படிகள் சிறந்தே
விளங்கியது. இதற்கு அவர்களிடமிருந்து பணபலம் ஒரு காரணம். மாலாய்க் காரர்களை வாழ்வு
நிலையை மேபம்படுத்த சீன இனத்துக்கு கிடைக்கவேண்டிய பொருளாதார கல்வி வாய்ப்புகளை மலாய்
இனத்துக்கு தாரை வார்த்து சீனச்சமுக முன்னேற்றத்தைக் கட்டுப் படுத்த காரணமாக அமைந்துவிட்டது.
இன்னி ஒரு மாற்று அரசு மட்டுமே இனத்தை மேம்படுத்த முடியும் என்ற எண்ணம் சீனர்களிடம்
‘ரகசியமாகவே’ இருந்து வந்தது. இந்த எண்ணம் மிகத் தெளிவாக பதிவானது 2008ல்நடந்த தேர்தல்
முடிவுகளில். DAP அரசியல் எதிர்கட்சி சட்ட மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பல இடங்களில்
வென்றது மட்டுமல்லாமல், ஆளுங்கட்சியின் பிடியிலிருந்த பொருளாதார பலம்மிக்க பினாங்கு
மாநிலத்தை தன் கட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியை அமைத்துக் கொண்டது. அம்மாநிலம் இப்போது
முன்பைவிட சிறப்பாக ஆட்சி செய்யப்பட்டு வருவதாக சமீபத்தில் வெளியான தேசிய கணக்காய்வுக்
கழகம் அறிவித்துள்ளது.
மலேசியக்
மக்கள் தொகையில் சீன இனம் வெறும் முப்பது விகிதமே.
அதில் எதிர்கட்சி பினாங்கில் ஆட்சி அமைத்துக்கொள்ள ஆளுங்கட்சியை புறக்கணித்த சீனர்களின்
எண்ணிக்கையை நம்மால் ஊகிக்கமுடிகிறது. DAP
யின் இந்த முன்னேற்றத்துக்கு அன்வர் தலைமையில்
இயங்கும் கட்சியோடு கூட்டணி சேர்ந்ததும் ஒரு முக்கியக் காரணம்தான் எனலாம். கண்டிப்பாக
மலாய்க்கார சீன இனமும் வாக்களிக்காமல் எதிர்க்கட்சி இந்த இடத்தைப் பிடித்திருக்க முடியாதுதான்.
இந்த வெற்றி இனவாத அரசுக்கு எதிரான வெற்றி என்று எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில்.. மற்ற
எல்லா மாநிலத்தையும் மலாய்க்காரகளே தலைமைத்துவம் ஏற்றிருந்தார்கள். ஆளுங்கட்சியின்
அபிலாசையும் அதுதான். எதிர்க் கட்சி பினாங்கைக் கைப்பற்றுவதற்கு முன்னர் ஆளுங்கட்சி
கூட்டணியைச் சேர்ந்த இன்னொரு (GERAKAN) கட்சிதான்
பினாங்கில் ஆட்சியை அமைத்து ஆண்டு வந்தது. ஆனால் ஆளுங்கட்சியின் அதிகாரக் கட்டுப் பாட்டில்
அதன் இயக்கம் அமைந்ததால் பெரும்பாலான சீனர்களுக்கு அந்த வகை அதிகாரத் தோரணை பிடிக்கவில்லை.
பினாங்கை சீனர்களின் கையிலிருந்து மலாய்க்கார ஆட்சிக்குக் கொண்டுவந்துவிடவேண்டும் என்ற
ஆளுங்கட்சியின் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் சீன சமூகத்தை விழிப்புறச்செய்தது. அதன் காரணத்தாலேயே
GERAKKAN தொடர்ந்து ஆட்சி அமைத்தால் அது சீன தலைமைத்துவத்தை வேரறுத்துவிடும் என்ற அச்சம்
காரணமாகவும் DAP க்கு வாய்ப்பைத் திறந்துவிட எண்ணம் கொண்டது ஒட்டுமொத்த சீன சமூகமும்..
பினாங்கு மாநில முதலமைச்சரின் அபாரமான ஆட்சித்
திறன் இனி பினாங்கு ஒருபோதும் ஆளுங்கட்சின் கைக்கு நழுவ முடியாத சக்தியோடு பெற்றுத்
திகழ்கிறது. ஆளுங்கட்சியால் கொண்டுவரத் தவறிய முன்னேற்றங்களை எதிர்க் கட்சிக் கூட்டணி
கொண்டு வந்து காட்டியதால் எதிர்க் கட்சியின் திறமை மேலான நம்பிக்கை இன்றைக்கு வலுவடைந்து
வருகிறது. சீன இனத்தைச் சேர்ந்த லிம் குவான்
எங் முதல்வாரய் இருந்து இந்தச் சாதனையை நிகழ்த்தி காட்டிய பின்னர் இதனைப் பெருமையாகவே
கருதி மெய் சிலிர்த்துப் போயிருக்கிறது சீனச் சமூகம். இதனை எளிதில் விட்டுக்கொடுத்துவிடும்
மன நிலையில் இப்போது சீன இனம் இல்லை!
மற்ற இனத்தைக் காட்டிலும் இன்றைக்கு சீன இனம் பொருளாதாரத்திலும்
கல்வியிலும் மேம்பட்டுத் திகழ்ந்தாலும் அது தன் இடத்தைத் தற்காத்துக் கொள்ளவும், மேலும்
முன்னேற்றம் அடையவும் லிம் குவான் எங் போன்ற தலைவர்களைப் பெரிதும் ஆதரிக்கவே செய்யும்.
அவர் போன்ற தலைவர்கள் அவர்களுக்கு இப்போது அதிகம் தேவை. சட்டமன்ற நாடாளுமன்ற இடங்களில்
தன் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை வெற்றியடையச் செய்ய சீன இனம் முனைப்போடு இயங்கவே
செய்யும்.
ஆளுங்கட்சியாக இருக்கும் தேசிய முன்னணியினால்
இழந்த பலவற்றை , மீட்க எதிர்க் கட்சியினால் மட்டுமே முடியும் என்று அவர்கள் நம்பிக்கை
சரியானதே என நாமும் நம்பலாம். இந்த முறை DAP கைப்பற்றப் போகும் இடங்களின் எண்ணிக்கையை
வைத்தே ஆட்சியை அமைக்கப் போவது ஆளும் தேசிய முன்னணியா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியாக
பரிணமிக்கும் PAKATAN RAKYAT என்று சொல்லக் கூடிய மக்கள் கூட்டணியா என்பதை உறுதி செய்ய
முடியும்.
Comments
டத்தோ சாமிவேலு இன்னும் அமைச்சராக இருக்கிறாரா?
ஹிண்ட் ராஃப் என்ற அமைப்பு என்ன ஆனது?
சரவணன்
உங்கள் வருகைக்கு நன்றி. இபராஹிம் என்று நீங்கள் குறிப்பிடுபவரைத்தான் நான் அன்வர் என்கிறேநன்வர் இப்ராஹிம். ஆறாண்டு சிறைவாசத்துப்பிறகு வெளியே வந்து எதிர்கட்சி ஆரம்பித்து மக்களிடையே பெரிய செல்வாக்கோடு இருக்கிறார். அவர் எதிர்கட்சி தொடங்கியதற்குப் பிறகே ஆளுங்கட்சி ஆட்டம் கண்டது. 2008 ல் கிட்டதட்ட ஆளுங்கட்சி தோல்வியைக் காண இருந்தது. அரசின் இந்தச் சரிவுக்கு ஹிண்ட்ராப் இந்தியர் புரட்சியும் துணை நின்றது. என்னுடைய முந்தைய கட்டுரை ஹிண்ட்ராப்பின் இன்றைய நிலையைச் சொல்கிறது.சாமிவேலுவும் 2008 தேர்தலில் தோல்வி கண்டு அரசியலிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார். இன்றைக்கு இந்தியாவுக்கான சிறப்பு தொடர்பாளராகப் பொறுப்பேற்றுறிக்கிறார். அரசியல் செல்வாக்கையும் இழந்துவிட்டார்.