Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 4

ஸ்பேய்ன் மண்ணை மிதித்தோம்

 முத்தங்களால் நிறைந்த தேசம் என்ற தலைப்பிட்டு, மூன்று அத்தியாயங்கள் முடிந்தும், முத்தங்களைக் காணாமல் பதற்றமாகியிருக்கிறார்கள் இந்தப் பயணக் கட்டுரையை வாசிப்பவர்களில் சிலர். முத்தங்கள் தேசத்துக்குள்ளேயே இன்னும் நுழையவில்லையே. எப்படி நீங்கள் எதிர்பார்த்தது நடக்கும்? அரபு மண்ணிலிருந்து இப்போதுதானே ஐரோப்பிய மண்ணுக்கு நுழைந்திருக்கிறோம். ஐரோப்பாவில்தானே இச் இச்சு கேட்கும். உங்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக அரபு தேசத்திலா இச் இச்சை உண்டாக்கமுடியும். ஷரியா சட்டப்படி என் மேல் கல்லெரிந்தே கொன்றுவிடுவார்கள். நான் முத்தக் காட்சிகளை எழுதாமல் இழுத்தடிக்கிறேன் என்ற கோபத்தில் நீங்களும் உங்கள் பங்குக்குக் கல்லெறிவீர்கள். அதில் உங்களுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். எலிகப்டரில் போற சனியனை ஏணி கொடுத்து இறக்கிய கதையாகிவிடும்.

கொஞ்சம் பொறுமையாய் இருங்கள் ஐயா. முத்தக் காட்சியை நெருங்கிவிட்டோம். இங்கிலிஷ் படத்தை அதிகம் 'ரசிக்கும்' மக்களிடம் போய் முத்தங்களால் நிறைந்த தேசம் என்று தலைப்பிட்டுவிட்டு முத்தக் காட்சிகளைக் காட்டாமல் கட்டுரையை இழுத்துக் கொண்டு போகிறேன் என்று
தவறாக நினைக்கவேண்டாம்.. பொறுத்தருள்க. உங்கள் விருப்பத்தை ஏமாற்றமாட்டேன். முத்தக் காட்சிகளை நெருங்கிவிட்டோம்.(என்னைக் காப்பாற்று என் குல தெய்வமே)
ரோம் விமான நிலையப் பேருந்து

ரோம் விமான நிலையத்தை எத்திஹாட் விமானம் சேர்ந்தபோது விடிகாலை ஐந்து இருக்கும். ஒரே இரவில் இப்பூமிப்பந்தின் கடிகார நேரம் வெவ்வேறாவதும்,   அந்த நேரத்தை நாம் அந்த ஒரு இரவில் கடந்து வருவதும் அதிசயம்தான். கதிரவனின் சுழற்சி இந்த மந்திரத்தைச் செய்தாலும் சாதாரண மனித மனம் ஒரே இரவில் சந்திக்க நேரும் நேர மாறுதல்கள் விநோதம் நிறைந்தவையே.

விமானம் தரையிறங்கியதும் பார்சிலோனாவுக்குப் போகும் விமானத்தைப்பிடிக்க வெறும் நாற்பத்தைந்து நிமிடங்களே இருந்தன. அடுத்த விமானங்களுக்குக் காத்திருக்கும் கூட்ட நெரிசல் அபுடாபியைவிட இருமடங்கு அதிகம். உலகச் சுற்றுலா தளங்களில் ரோம் நகரம் மிகப் பிரசித்த பெற்றது என்பதை ரோமில் இரண்டு நாட்கள் கழித்தபிறகே புரிந்துகொண்டேன்.

விமானத்தை விட்டு இறங்கிய போது நாற்பத்தைந்து நிமிடங்களுக்குக் குறைவாகவே இருந்தது. புது இடம். நுழைவு அனுமதி,(போர்டிங் டிக்கெட்டில்) 9 சி என்ற நுழைவா யிலைத் தேடி ஒடினோம். பதினைந்து நிமிடங்கள் விடாமல் பைகளை இழுத்துக்கொண்டு ஓடுவது சிரமமாக இருந்தது. இழுக்கும் வேகத்தில் பைகள்  சமயங்களில் தவளைகள் போல தலைகீழாகிவிடும்.போய்ச்சேர்ந்தபோது நேரம் ஓடிவீட்டிருந்தது. நுழைவாயில் மூடி இருந்தது. ஒரு குஞ்சு குலுவானைக்கூடக் காணமுடியவில்லை. விமானம் பறந்துவிட்டதா? நுழைவாயிலை மூடிவிட்டார்களா? மிரண்டு விழி பிதுங்கி நின்றோம். ஆனாலும் கோலாலம்பூரிலிருந்து பார்சிலோனாவரை மூன்று தொடர்விமானப் பயணமும் ஒரே நிறுவன விமானக் கம்பெனியைச் சேர்ந்தது. ஐந்து பத்து நிமிடங்கள் காத்திருந்தே ஏற்றிச்செல்லும் என் சிறு துளி நம்பிக்கை இருந்தது.
பார்சிலோனாவில் ஒரு பேரங்காடி

யாரையும் விபரம் கேட்கலாமென்றால் ஒரு அதிகாரிகூட கண்ணில் தென்படவில்லை. பிற பயணிகளும் அலைமோதிக்கொண்டிருந்தனர். காணடித்த ஒன்றைத் தேடுவதுபோல மருமகன் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார் .இந்த மாதிரி நேரங்களில் அவர் எண்ணெயில் பொறியும் அப்பளம் மாதிரி 'படபட'த்து  இருப்பார். கடைசியில் ஒரு நுழைவாயில் கண்ணில்பட்டது. ஓடி அந்த அதிகாரியிடம் டிக்கட்டைக் காண்பித்து விசாரித்தோம். அவர் நுழைவாயிலை மாற்றிவிட்டார்களென்று சொல்லி அதன் திசையைக் காட்டினார். மருமகன் இரண்டு பைகளை இழுத்துக்கொண்டு ஓட, நாங்கள் பின்னால் ஓடினோம். மனைவியின் பையை அவரே சுமந்து ஓடினார். ஆனாலும் சுமையற்று ஒட்டிவந்த மனைவி கடைசி இடம்தான் எப்போதும். ஒரு பத்து நிமிடம் ஓடிய பின்னர் மருமகன் காணாமற்போய்விட்டார். எந்தத் திசையில் ஓடினார் என்று தெரியவில்லை. நாங்கள் ஒரு புள்ளியில் வந்து தேங்கிநின்று மூச்சு வாங்கினோம். விமானம் பறந்துவிட்டது இனி பணம் கட்டி வேறொன்றைப் பிடிக்கவேண்டும் போல என்ற முடிவுக்கு வந்திருந்தேன். செலவுக்கு வைத்திருக்கும் பணத்தில் இன்னொரு டிக்கட் வாங்கினால் வீடுபோய்ச் சேரமுடியாது.

இரண்டொரு நிமிடம் கழித்து மீண்டும் தோன்றினார். பின்னர் கையசைத்து அழைத்தார். விமானத்துக்கு ஏற்றிச்செல்லக்கூடிய பேருந்து விமானத் தளத்தில் காத்திருந்தது.
              ( இது அரெனாஸ் டி பார்சிலோனா பேரங்காடி - பட்டண மையத்தில். லிப்டில் ஏறி உயரத்திலிருந்து பார்சிலோனாவைப் பார்க்கலாம்).

மருமகனுக்கு மனைவி புதிய புனைப்பெயர் இட்டிருந்தாள். 'புல்லட் டிரேய்ன்' என்பது அந்தப் புதுப்பெயர். அவர் முன்னால் ஓடி, ஒரு கட்டத்தில் மறைந்துவிடுவார். நாங்கள் தேடுவோம். அவர் காணாமற்போய்விட்டால் எங்கள் கதி அதோகதிதான். டிக்கெட்டுகள், எங்கெல்லாம் பயணம்செய்கிறோம் என்பது தொடர்பான முக்கிய ஆவனங்கள் அவர் மடிக்கணினி பையில்தான் இருக்கிறது. அவரைத் தொலைத்தால் நாங்கள் தொலைந்தோம். நானும் அவருக்கு ஒரு பெயரை வைத்திருந்தேன். கூட்ஸ் வண்டி. எங்கே போனாலும் இருவர் சுமையை, சில சமயம் மூவர் சுமையை அவரே சுமந்து ஓடினார். ஐரோப்பா நெடுக்க ஒரு ரயிலிலிருந்து இன்னொரு ரயிலுக்கு மாற நேர்ந்தது. ஒரு பதினைந்து வினாடி தாமதமானாலும் டிரேய்ன் போய்விடும். வேறொன்று விரைவில் வரும் என்றாலும் டிக்கெட்டைப் பணம் கொடுத்தல்லவா பெறவேண்டும். யுரோ, பிராங்கஸ், பவுன் ஸ்டெர்லிங் என்ன இநதிய ரூபாய் போல  மெலிந்ததா என்ன?


ஒருவழியாக விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. இன்னும் 2மணி நேரத்தில் பார்சிலோனாவைத் தொட்டுவிடுவோம். வானம் வெளிறிச் சிரிக்க தொடங்கியிருந்தது.  கதிரவன் மெல்ல கண்களைத் திறந்து சிறகுகள் போன்ற கதிர்களை கீழ் வானத்திலிருந்து நீட்ட முயன்று கொண்டிருந்தான். ஒரு மாற்றத்தை விமானத்தில் பார்த்தோம். பணிப்பெண்கள் இல்லை. பணி ஆடவர்தான் இருந்தார்கள். கொஞ்சம் ஏமாற்றம்தான். ஒரு காப்பியும் பிஸ்கட்டும் கொடுத்தார்கள். பெண்கையால் கொடுத்திருந்தால் களைப்பு போயிருக்கும்.

என் அருகில் கிழக்காசிவைச் சுற்றித்திரிந்து வந்த ஒரு வெள்ளையன் அமர்ந்திருந்தான். கையில் மலேசிய ரிங்கிட்டை வைத்துக்கொண்டதிலிருந்தே இந்த முடிவுக்கு வந்தேன். அவனோடு அளவளாவ ஆரம்பித்தபோது அவன் ஒரு திடுக்கிடும் செய்தியைச் சொன்னான். அல்ஜீரியா விமான ஒன்று விபத்துக்குள்ளாகி இரண்டு மணி நேரம்தான் ஆயிற்று என்றான். எனக்கு பகீர் என்றது. இன்னும் 4 முறை பறந்தாக வேண்டும். இந்த இரண்டு மணி நேரம் சீக்கிரம் முடிந்துவிடவேண்டும். நாம் பறக்கிற நேரத்திலா கெட்ட கெட்ட செய்தியெல்லாம் காதில் விழவேண்டும்? இதனை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் தெஹ்ரான் விமான நிலையத்திலேயே ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 45 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

பார்சிலோனாவை அடைந்தபோது ஐரோப்பிய மண்ணை மிதித்துவிட்ட திருப்தி உண்டானது. எத்தனைத் தேக்கி வைத்தக் கனவுகள். நிறைவேறும் இந்தத் தருணம் எத்தனைப் பரவசமானது.

காலை மணி எட்டிருக்கும். சுங்க, குடிநுழைவு பிரச்னையில்லாமல் வெளியேறினோம். தூக்கம் கண்களில் எஞ்சியிருந்து உடலில் எரிச்சலை உண்டுபண்ணாலும், ஐரோப்பா காற்றும் சூழலும் தெம்பை உண்டாக்கியிருந்தது. ஸ்பேய்ன் 'வாவ்' என்று மகிழ்ச்சியில் கத்தவேண்டும் போலிருந்தது. 1992 ல் ஒலிம்பிக்கை ஏற்று நடத்திய நாடு. ஒலிம்பிக்ஸ் நடந்தாலே அந்த நாடு உலக வரைப்படத்தில் ஒரு முத்திரையோடு மிளிர ஆரம்பித்துவிடுகிறது. பெய்ஜிங்கில் நடந்தபோதும் அது முக்கிய நகரமாகி, இன்றைக்கு அதனை ஆசியாவின் நியூ யோர்க் என்கிறார்கள்.

உள்ளபடியே 1927ல் ஸ்பேய்னுக்கு அந்த கௌரவம் கிடைத்திருக்கவேண்டும். அதற்காகப் போட்டியிட்ட பெர்லினிடம்  தோல்விகண்டது. ஆனால் அதிசயம் என்னவென்றால் அதே ஸ்டேடியத்தில்தான் 1992 ஒலிம்பிக்ஸ் நடந்திருக்கிறது .இன்றைக்கு காணப்படும் ஸ்டேடியம் உண்மையில் பெரும் கட்டுமானப் புனரமைப்பு  மாற்றதோடுதான் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. ஒலிம்பிக்ஸ் நடத்தவேண்டும் என்ற வேட்கையில் 56 ஆண்டுகள் கழித்து தன் கனவை ஸ்பேய்ன் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
பார்சிலோனா ஒலிம்பிக் ஸ்டேடியம் வாசல்


(விமான நிலையத்தில் முத்தக் காட்சிகள் நிகழ்ந்தனவா என்று தெரியவில்லை. தெருப்பக்கம் போய்ப் பார்ப்போம்.உங்களால் நான் வேவு பார்க்கவேண்டியுள்ளது. என்னை இப்படியான இக்கட்டில் கொண்டுபோய்விட்டீர்களே. நியாயமா?)

தொடரும்.


Comments

வணக்கம்
ஐயா.
தங்களின் தொடர் கட்டுரையை படிக்கும் போது நாங்களும் அந்த தேசத்தில் நுழைந்தது போல ஒரு உணர்வு மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ko.punniavan said…
நன்றி ரூபன்,
இக்கட்டுரை மிக நீளமாகும் போல் இருக்கிறது. நீங்கள் ஶ்ரீவிஜி ஆகியோர் தொடர்ந்து தட்டிக்கொடுகிறீர்கள்.
தொடர்ந்து பயணியுங்கள்.
பார்சிலோனா விமானத்தை விட்டு விட்டீர்களோ என்றே திக் திக் என்று இருந்தது. கடைசியில் ஏறிவிட்டீர்கள்.தொடர்ச்சியாக செல்லும் போது இது ஒரு டென்ஷன் தான். தொடருகிறேன்.
ko.punniavan said…
அமுதா கிருஷ்ணன்,
தொடர்ந்து வருவதற்கு நன்றி. ஊக்கமூட்டுவது ஒன்றே படைப்பாளனை உய்விக்கும்.
நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...