Tuesday, August 12, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் .முத்தம் 5

ஸ்பேய்னின் பிரசித்திபெற்ற பட்டணம் பார்சிலோனா


விமானப்பயண டிக்கட் முன் பதிவு செய்துகொண்டதைத் தவிர மற்றெல்லா வேலைகளும் முன் ஏற்பாடு செய்யவில்லை என்று சொன்னேன். இனிதான் பிற ஏற்பாடுகள் செய்யவேண்டும். அதில்தான் சூவரஸ்யம் இருக்கும். விடுத் அறையே கிடைக்கவில்லையென்றாலும் பார்க்கில் படுத்துக்கொள்ளலாம். பார்க் அங்கே படுத்துறங்கும்படி வசைதியாகதான் இருக்கும்.

நான் ஐரொப்பா பயணத்துக்கு முன் படிப்பினையாக எதனையுமே தேடிப்படிக்கவில்லை. எதுவும் தெரிந்து கொள்ளாமல் போனால்தான் விநோதமும் அதிர்வும் இருக்கும் என்பதால்.

விமான நிலையத்திலேயே இன்போர்மேசன் கௌண்டரில் என்ன செய்யலாம் என்று மருமகன் கேட்டறிந்து வந்தார். பலர் ஸ்பேய்ன் காரர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும், சில சர்வதேச மனிதர்கள்/பயணிகள் புழங்கும் பணியிடங்களில் ஆங்கிலம் நன்கு பேசுபவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மலேசியாவில் அப்படியில்லை தத்துபித்தென்று ஆங்கிலம் அரைகுறையாய்ப் பேசுபவர்களை முக்கிய இடங்களில் பணிக்கு அமர்த்தியிருப்பார்கள். இனவாதத்தால் வந்த வினை வாதம். சமீபத்தில் எம் எச் 370  காணாமல் போனபிறகு..(காணாமலா போயிற்று?  ஆட்டுவித்தால் ஆருருவர் ஆடாதாரே கண்ணா) சந்திப்புக்கூட்டங்களில் ஆங்கிலத்தில், அப்படின்னு வச்சிக்கலாம்- பேசி பதிலளித்தாரே பார்த்திருப்பீர்கள். என்னே சமாளிப்பு ! என்னே மொழி மேலாண்மை!
ஸ்டேடிய அமைப்பு
 விமான நிலையத்தில் விற்கப்படும் சீசன் டிக்கட் எடுத்துக்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். ஒரே டிக்கட் இரண்டு நாளைக்கு எடுத்துக்கொண்டோம். பேருந்து , மெட்ரோ ரயில் இரண்டுவகையான போக்குவரத்துக்கும் ஒரே டிக்கட்தான்.அங்கிருந்தே விடுதி அறை புக் செய்துகொண்டும் பேருந்தில் பயணமானோம். ஆ சி டிமெரியோட் ஹோட்டல். உலகெங்கும் உள்ள விடுதி. சீனாவிலும் இருந்தது.பேருந்து விட்டு இறங்கி பார்சிலோனா வரைப்படத்தைப் பார்த்தபடியே விடுதியை அடைந்தாயிற்று. எங்கும் வழி மாறவில்லை. பேருந்தில் படி ஏறும்போதும் இறங்கும்போதும் தாழ்ந்து கொடுத்து இறங்கி ஏறவும் இறங்கவும் எளிதாக்குகிறது.

 குளித்துவிட்டு உடனே கிளம்புங்கள் என்றார் மருமகன். வரைப்படத்தில் உள்ள முக்கிய இடங்களைப் பார்த்தாகவேண்டும். இன்னொரு இரவு முடிந்ததும் மீண்டும் ரோமுக்குப் பறக்கவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் பார்சிலோனாவை முடித்துவிடவேண்டும் என்றார். ஒரே இரவிலேயே விடுபட்ட தூக்கத்தை தூங்கி எழுந்துவிடமுடியும்.  உடல் அதற்குத் தயாராகவே உள்ளது.
இங்குதான் ஒலிம்பிக்ஸ் துவக்கவிழா நடந்தது.(நாளை எழுதுகிறேன்)

முதலில் போய்ச் பசியாற வேண்டும். விடுதிக்குப் பக்கத்திலேயே ஒரு பேரங்காடி இருந்தது. அங்கே காப்பி ரொட்டி கடைகள் கிடைக்கும் என்று போய்ப்பார்த்தோம் . இருந்தது. ஒரு நபருக்கு  ஒரு வேலை சாப்பாடு  உணவின் விலை மலேசிய ரிங்கிட்டுக்கு 50 வருகிறது. ரொட்டி பர்கரும் ஒரு காப்பியும் மட்டுமே. தொடர்ந்து தேடினோம். ஒரு சீன உணவுக்கடை. அங்கே எல்லா வகை உணவும் இருந்தது. பலகாரம்,உணவு, காப்பி, பழங்கள் இப்படி. ஒரு நபர் என்ன வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஒரு ஆளுக்குக் கட்டணம் 30 ரி.ம வருகிறது. ஆனால் ஒரே வேளையில் மூன்று நாள் உணவா உண்டுவிடமுடியும்? சாப்பிட்டோம். நம்ம ஊர் சீன உணவுபோல இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பனியாட்களுக்கு ஆங்கிலம் வரவில்லை. சீன மொழியும் ஸ்பேய்ன் மொழியும் பேசுகிறார்கள். இது என்ன உணவு என்று கேட்டால் ஏதோ ஸ்பேய்ன் மொழியில் சொல்கிறார்கள். என் மகள் நாய் உணவு இருக்கிறதா என்று முன்கவனத்துடன் 'வாலை' ஆட்டிக்கேட்டால் .அவன் ஏதோ சொன்னான். உண்டுவிட்டு வெளியே வந்தோம். மாட்டிறைச்சி  சமாசாரங்கள் இருக்குமோ என்ற அச்சமிருக்கத்தான் செய்தது.
அங்கே உணவின் விலை அதிகமாக இருக்கிறது. அரிசிச்சோறுக்கு வாயும் வயிறும் வேண்டியது. இத்தனைக்கும் சோறு சாப்பிட்டு ஒருநாள்தான் ஆகிறது. ஐரோப்பா நாடுகளில் பிரியாணி கண்டிப்பாய் கிடைக்கும் என்று அங்கே பணியாற்றிய என் மகன் சொல்வான். ஆனால் எங்கே. என் மருமகன் கூகலில் வலம் வர ஆரம்பித்தார். அலாவுதின் அற்புத விளக்கைத் தேய்த்ததும் வேண்டியதைக் கொண்டுவந்தது பூதம். வரைப்படத்தைத்தேய்த்தால் கூகல் பூதமும் கேட்டதைக்கொடுக்கிறது. அலாவிதினின் அற்புத விளக்குதான் பின்னாளில் கூகலாக பரிமாணம் கொண்டிருக்கவேண்டும். இந்த அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள். அலாவிதின் இப்போது இல்லை, அதனால் வழக்குத் தொடரமாட்டார் என்ற தைரியம்தான்.கார்போர் பேரங்காடி
பேரங்காடியில் நுழைந்தபோது அது பிரம்மாண்டமாக இருந்தது. ஒரு அரண்மனை போன்ற வடிவத்தில். உடனடி உணவுகள் நிறைந்திருந்தன. கோழி ரோஸ்ட் செய்ததை வாங்கிக்கொண்டோம். உள்ளூர்ப் பழங்கள். ஆரஞ்சுச்சாறு. தயார் உணவை  நாமே அங்கிருக்கும் ஆவனில் சுடவைத்து எடுத்துக்கொள்ளலாம். கோழி ஆயாமாஸ் சுட்ட கோழிமாதிரிதான் இருந்தது. மனைவி சாப்பிட மறுத்தால். கவிச்சி வாசனை அடித்ததாம். ஆரஞ்சுசாறு அசல் சாறு. சீனி வர்ணம் கலப்பெல்லாம் கிடையாது. குடிக்கும்போதே நம்மூர் போலி வகையறா தெரியும். பேரங்காடியில் விலை மலிவுதான்.

காட்டர் நாடு இந்த ஸ்டேடியத்தை குத்தகைக்கு எடுத்து விற்பனை மையங்களை அமைத்திருக்கிறது.
அங்கிருந்து நேராக 1992 ஒலிம்பிக்ஸ் நடந்த ஸ்டேடியத்துக்குச் சென்றோம். சுற்றுப்பயணிகள் அவ்வளவாக இல்லை. நுழைவாயிலில் ஒரு காவலாளியிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டோம். அவன் மலேசிய ரிங்கிட் 100 க்கு டிக்கட் எடுக்கவேண்டும் என்றான். கண்டிப்பாக உள்ளே ஆள் அரவம் இருக்காது. திடல், இருக்கைகளைப் பார்க்கவா உள்ளே செல்லவேண்டும். தவிர்த்துவிட்டோம். ஆனால் வெளியே இருந்து சில வாசல் வழியால் உள்ளே தெரிந்தது. ஏதோ சிறார்களுக்கான காற்பந்து லீக் நடப்பதாகத் தெரிந்தது. விடுமுறை காலம் அங்கே. வெளியே  விளையாட்டுச் சீருடை அணிந்திருந்த மாணவர்கள் கூட்டம் இருந்தது.
உற்சாக மனநிலையில் இருந்தார்கள்.

லீக் ஆடிய பொடியன்களோடு நான்
இவன்தான் எனக்கு ஆசையை மூட்டியவன்.
பார்வையாளர்கள் கைகளில் பீர் கிண்ணங்கள் இருந்தன. ஸ்பேய்ன் பீர் எப்படி இருக்கிறது என்று வாங்கி அருந்திப்பார்த்தேன். ஒன்றுமே இல்லை. பீர் மலிவு என்பதால் என்னுள் மாற்றம் நிகழவில்லை.

ஸ்டேடியத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட களைப்பில்
உலகில் பல பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கின்றன. ஆனால் அங்கேயெல்லாம் போக முடிவதில்லை. ஒலிம்பிக்ஸ் நடந்த இந்த இடத்தில் கால்வைத்தது, அந்தக் காற்றை சுவாசித்தது அரிய அனுவமாகும். தங்க பதக்கங்கள் வாங்கிய சாதனையாளர்கள் கால்கள் பட்ட இடமாயிற்றே. வரலாற்றை பதித்தவர்கள் நிழல் இன்னும் அங்கே நகர்ந்துகொண்டிருக்குமல்லவா?
 
தொடரும்....8 comments:

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
தங்களின் எழுத்துச்சுவையை கண்டேன் படிக்க படிக்க திகட்டவில்லை. தங்களின் ஒவ்வொரு பயண அனுபவங்களையும் மிக அருமையாக அழகிய புகைப்படத்துடன் விளக்கம்கொடுத்துள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
எவ்வளவு இடங்களை சுற்றிப்பார்த்த களைப்பில் இருப்பீர்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பதிவாக எழுதி பதிவதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ko.punniavan said...
This comment has been removed by the author.
ko.punniavan said...

நன்றி ரூபன்,

இந்தோனேசியாவின் பாலி, தாய்லாந்தின் கிராபி,வட தென் இந்தியா
சிலமுறை போனதை எழுதவில்லை.பயணம் நம் அனுபவத்தையும், ஆற்றலையும் விரிவடையச் செய்கிறது. பின் தொடர்வதற்கு நன்றி ரூபன்.

annamalai surendranath said...

தமிழர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய இணையத்தளம்
http://omtamil.tv/patriyam/

KAVIN said...

கட்டுரை போன்று அல்லாமல் சிறுகதை பாணியில் கொண்டு செல்லப்படுவதால் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது... அருமையான நடை..அற்புதமான சொல் பயன்பாடு

thanimaram nesan said...

பயணக்கட்டுரை அழகாய் தொடர்கின்றது தொடர்கின்றேன்.

jasmin prera said...

வணக்கம் ஐயா..தங்களின் பயனத்தை கட்டுரை வடிவில், படைத்தது மிக அருமையாக உள்ளது.

Sebastian Stansilas said...

கதைச் சொல்லியின் "லொல்லு" தான் கட்டுரையை படிக்க படிக்க சுவை குன்றாமல் பயணம் போகச் செய்கிறது

செபஸ்டியன்