Skip to main content

குறையொன்றுமில்லை-சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

            சிக்கல்களைப் புரிந்து விடுபடுவதே வாழ்க்கை.

                குறையொன்றுமில்லை நூல் மதிப்புரை   
                      
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி என்  இளமை காலந்தொட்டு நண்பர். அவர் காவிக்கு மெல்ல மாறும் ஞானப் பரிமாணத்தை நான் உள்வாங்கி ரசித்தபடி இருந்தேன். ஒரு சராசரி நண்பனின் வாழ்க்கை மாற்றங்களைப் பார்ப்பதைவிடவும், சுவாமி போன்றவர்களின் வாழ்க்கை நகர்தல் மிகப்பெரிய சுவாரஸ்யத்தை அளித்தபடியே இருந்தது. சக நண்பர்கள் போலல்லாமல் அவரின் குறிக்கொள் அல்லது எல்லை அசாதாரணமானதாக, சராசரியற்றதாக, சக மனிதனைப்  போலல்லாத ஒன்றாக இருந்ததுஇவர் ஏன் இப்படித் திசை மாறிப்போகிறார் என்ற எண்ணம் தோன்றியதும் உண்டுதான். வெகுஜன வாழ்வு போலல்லாமல் தனித்துவ பாதை எப்போதுமே நம் கவனத்தை கோருபவை! அதனைத் திசைமாறல் என்பது தவறான சொல்லாடல்தான். மாறாக அதுவே சரியான திசை என்று அவர் போகும் பாதை பார்த்துணர்ந்து  தெரிந்துகொண்டேன். பொது மனிதனின் வாழ்வுப்பாதை போலல்லாமல், அவர் தேர்வு செய்தது ஞானப் பாதை. தர்க்கத்தில் ஈடுபட்டு தத்துவத்தை நோக்கிய பாதை. அவருடையதிசை மாறலைஅவரோடு இருந்து பயணிக்கும் போதுதான் அதன் பயன்மதிப்பு  எனக்குப் புரியத் துவங்கியது.
லட்சத்தில் ஒருவர் இவ்வாறு அபூர்வமான துறவு வாழ்வை நோக்கி நகர்வது சமூகம் கொஞ்சம் விநோதமாகவே பார்க்கிறது. பயபக்தியோடும் நோக்குகிறது. அவர் அமானுட சக்திகளை கையில் வைத்திருகிறார் என்ற முன் அபிப்பிராயத்தையும் வளர்த்துக்கொண்டு அவரை அணுகி வருபவரும் உண்டு. அவர் தன் மந்திரங்களால் மாயங்கள் செய்ய வல்லவர் என்ற கற்பிதம் அவர்களிடம் இருப்பதை நம்முடைய சாமி பார்க்கும்பொதுபுத்திக்குப் புறம்பானதல்ல. சித்து விளையாட்டுகள் காட்டும் மாந்திரிக சாமியாரும் அல்ல அவர். அதெல்லாவற்றுக்கும் அவர் அப்பாற்பட்டவர்.
.
 அவர் வேதாந்தம் கற்றவர். அதனால் வாழ்க்கையை இன்பமயமாக வாழ்வது எப்படி? அதனை தத்துவம் சார்ந்த நோக்கி நகர்த்துவது எப்படி என்ற சித்தாந்ததைக் கற்றுக்கொடுப்பவர். சமூகப் பிரக்ஞையோடு இயங்கும் சுவாமி. நான் அவருடைய வேதாந்த வகுப்புகளில் கடந்த 20 ஆண்டுகளாய் கற்று வருகிறேன். அவர் தன் வகுப்புகளில் சொல்லிவரும் கருத்துகளை நூல்களாக எழுதி வெளியிட்டும் வருகிறார். அந்த வரிசையில்குறையொன்றுமில்லைஎன்ற நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. அந்த வரிசையில் மூன்றவது நூல் இது.
வாழ்க்கையில் நாம் நோக்கும் சிக்கல்கள்,சோதனைகள், பின்னடைவுகளை எல்லாவற்றையும் தீர்வுகாண எளிய வழிகளைக் காட்டும் நூல்தான்குறையொன்றுமில்லை’. நாம் எதிர்நோக்கும் சிக்கல்களை அதன் மூல முடிச்சவிழ்க்காமல் அப்படியே அணுகுவதால் அதனின்றும் விடுபட முடிவதில்லை. மேலும் சிக்கலின் ஆழத்தில் புதையுண்டு அவதியுறுகிறோம். இதனை கொஞ்சம் தத்துவம் சார்ந்து நோக்கவேண்டும் என்கிறார்.
இங்கே தத்துவம் என்றால் என்ன என்ற வினா எதிர்கொள்கிறது. பிரச்னையை கொஞ்சம் உள்நோக்கிப் பார்ப்பது. எது சரி எங்கே தவறு என்பதை ஆய்ந்து ஆராய்ந்து பார்ப்பது . அப்படிப் பார்க்கும்போது நமக்கு அந்தச் சிக்கலின் மூலம் புரிபடும். அங்கிருந்து அதனிலிருந்து விடுபடும் பயணத்தை துவங்கலாம். ‘நோய் நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்என்று வள்ளுவர் தத்துவ பயிற்சி அளித்தவர்தானே நமக்கு. அதே வழிதான் இதுவும்! சிந்தனைகள் எல்லாமே வாழ்க்கைச் சூழலிலிருந்து கிடைக்கப்பெறுவது. அந்த அனுபவங்களின் ஊடாக புதிய தரிசனங்களைக் கண்டடைவது. அவற்றை தத்துவமாக நோக்கும்போது எதிர்நோக்கும் வாழ்க்கைச் சிக்கல்களில் 'சிக்கல்' இல்லாத நிதர்சனத்தை அடையமுடியும்.
வாழ்க்கையில் வலி இருக்கிறது என்று புலம்புவது எனக்குப்புரிகின்றது. நாம் கடந்து வந்த பாதையில் நாம் எத்தனை பேருக்கு மனவலி கொடுத்திருக்கிறோம். நாம் மட்டும் எந்த வலியும் இல்லாமல் வாழ விரும்புவது எந்த விதத்தில் நியாயம்என்று ஒரு நியாயமான குரலில் நம்மைக் கேட்கிறார் .

அவர் தன் அனுபவடங்களைத்தான் நமக்குக் கட்டுரைகளாக இந்நூலில்  எழுதிக்காட்டுகிறார். அதன் ஞானப் பரிமணத்தை திறந்து காட்டுகிறார். அனுபவங்களால்  ஏற்படுகின்ற தேடலும், அலைக்கழிப்பும் நம்மைச் செம்மைப்படுத்தும். வாழ்க்கையை தான் கற்ற ஆன்மிகக் கல்வியோடு ஒப்பிட்டு நோக்கி அவற்றை தத்துவப் பார்வையாக சொல்லும்போது, நம் உள்மனம் ஆமாம் வாழ்க்கையை இப்பட்டித்தானே அவதானிக்க வேண்டும்என்ற நிதர்சனத்தைத் தெரிவு செய்கிறோம்.
நமக்கு துனபங்கள் தருபவரும் சரி, நம்மை மகிழ்ச்சிபடுத்துபரும் சரி, இதனை அவர்கள்  திட்டம் போட்டு செய்வதில்லை. இவையெல்லாம் எதேட்சையாக நடப்பவை. நாம் உயிரோடு இருக்கும் வரை இன்பம் துய்த்தலும், துன்பம் அனுபவித்தலும் தவிர்க்கமுடியாமல் நடந்தேறும். ஏனெனில் உறவுகளால் பின்னப்பட்ட  வாழ்க்கையில் இவையெல்லாவற்றையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும் என்ற யதார்தத்தை  சொல்லும் போது பாகற்காயாய் கசக்கத்தான் செய்கிறது..
இதற்கு ஒரு முதிர்ச்சியான தீர்வை வைக்கிறார். நம் இன்புறுதலையும் துன்புறுதலையும் நாம்தான் நமக்குள் நிர்ணயிக்கவேண்டும். பிறர்க்கு அந்த உரிமை இல்லை. பிறர் நம்மை காயப்படுத்த அனுமதிக்ககூடாது! சில சமயம் நாம் பிறரை நோகடிக்கிறோம். அங்கிருந்துதான் தொடங்குகிறது நாம் நோகடிக்கப்படுவதும்.  

. கனியன் பூங்குன்றன் கவிதை உங்களுக்கு நினைவுக்கு வரும். யாதும் ஊரே யாவரும் கேளீர், தீதும் நன்று பிறர் தர வாரா என்று போகும். எத்தனை மகான்கள் வாழ்க்கையைத் தத்துவமாக பார்க்கச் சொல்லி நமக்கு போதித்திருக்கிறார்கள். அதனை அடியொற்றி வந்தவர்தான் சுவாமி பிரம்மானந்தா. கவலையையும் மகிழ்ச்சியையும் நாமேதான் தேர்ந்தெடுத்துக்கொள்கிறோம் என்பதை எத்துனை பெரிய உண்மை.
தோல்வி அடையும் போது நாம் ஏன் துவண்டு விடுகிறோம். தோல்விகளை ஏன் தோளில் சுமந்த வண்ணம் திரிகிறோம். இவை ஏன் நம்மை பின்னோக்கி இழுத்தவண்ணம் இருக்கின்றன? இந்தப் பின்னடைவுகளுக்கெல்லாம் அடிப்படை காரணியத்தைக் காட்டி, அதற்கு ஒரு தீர்வையும் காட்டுகிறார்.
பள்ளிகளில். வீடுகளில். தன்முனைப்பு பேச்சுகளில் நாம் வெற்றியடையவேண்டும் என்றே நமக்குள் வலிந்து ஏற்றப்படுகிறது. வெற்றியை நோக்கிக் கனவு காணுங்கள் என்றும், காட்சிப்படுத்துங்கள் என்றெல்லாம்   வலியுறுத்தப்படுகிறது. எனவெ உள்மனம் அதனை நோக்கியே நகரும் தருணத்தில் தோல்வி தீ எதிப்பாராத தருணத்தில் வந்து முகத்தில் மோதுகிறது. அதனை எதிர்கொள்ளமுடியாமல் இடிந்துபோய் உட்கார்ந்துவிடுகிறோம்.
     இதற்கான மருந்தையும் தன் சொற்கள் வழி சொல்கிறார். தோல்வியும் வெற்றியும் ஒரு செயலின் இணைந்த இரு கூறுகள். இரவும் பகலும் மாதிரி மாறி மாறி வருபவை. பகலை ரசிக்கும் நாம் இரவை ஏன் வெறுக்கிறோம்? இது அறிவீனம்தானே? இரவும் வந்துவிட்டுப்போகும் பகல்போல! வெற்றியை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளும் நாம் தோல்வியயையும் அதே போன்ற மனநிலையில் ஏற்றுக்கொள்ள மனதைப் பழக்கவேண்டும்தோல்வியைச் சவாலாக ஏற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் அவற்றின் பாதிப்பு பெரிதாய் இருக்காது என்பது உண்மை.
     அறிவு சார்ந்து இயங்காத சமூகத்தைச் சுரண்டுவது மிக எளிது. இது இன்று நேற்று நடக்கும் விஷயமல்ல. காலம் காலமாய் கால்கோள் கொண்ட ஒன்று. சிந்திக்காத, அல்லது சிந்திக்கப் பழகாத சமூகத்தைஅறிவு சார்ந்து இயங்கும் சாரார்தங்கள் விரித்த வலைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவர்கள் அள்ளிவிடும் பொய்களால் ஏமாறும் சராசரி மக்கள் தங்கள் பொருளை இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்குப் பக்கபலமாக ஊடக விளம்பரங்களை பயன்படுத்துகிறார்கள். இந்த ஊடகங்களில் ஒலிபரப்பப்படும் அவர்களின் பேச்சுகளால் நம் புத்தி கட்டமைக்கப்படுகிறதும. நம்மை சிந்திக்கவிடாமல் ஒரு வரையரைக்குள் நிறுவுகிறது இந்த ஊடாக பலம். ஒரு வகையில் இவை நம்மை சுருக்கி , இதுதான் உண்மை என்ற எல்லைக்குள்ளேயெ வைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய சாதகமாகிறது அவர்களுக்கு. நம்மிடம் பொய்களை நிரப்பை அவர்கள் பைகளை நிறைத்துக்கொள்கிறார்கள். சமூகத்துக்கு உண்டாகும் மிகப்பெரிய ஆபத்து இது.
தங்கள் பொய்களை விற்பவர்கள் பின்னர் பெரும் பணக்காரர்களாக ஆகிறார்கள்.ரசவாத டாக்டர்கள், அதிர்ஸ்டக் கல் விஞ்ஞானிகள், வாஸ்து நிபுனர்கள், எண் கணித மேதைகள்  சராசரி சமூகத்தை சுரண்டும் விதத்தை தினந்தோறும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நம் முன்னோர்கள் சொல்லிச்சென்ற ஆன்மீகம் சார்ந்த விஷயத்தை ஆழ்ந்து படித்திருந்தால் இந்த பித்தலாட்டக்காரகளிடமிருந்து தப்பிக்க முடியும். அல்லது தர்க்கப்பூர்வமாக சிந்தித்தால் இவர்கள் விரித்த வலையில் சிக்காமல் இருக்கமுடியும். நாம் இரண்டையுமே செய்வதில்லை. ஏனெனில் சிந்தனைக்கு வேலை கொடுப்பதை ஒரு பாவமாகக் கருதுகிறோம். இது ஏன் நடக்கிறது. நம்மை கட்டமைக்க ஊடகத்தை நம்பியதால் உண்டான அவலம்.
.
நாம் மிகப்பெரிய , மிக அரிய ஞான மரபின் தோன்றல்கள். மெய்யியல், தத்துவம், புராணம் என்ற மூன்று அரும்பெரும் சொத்துக்குச் சொந்தக்காரகள். மேலை நாட்டு தத்துவங்களை வாழ்க்கை தரிசனக்களை போற்று நாம், கீழை நாட்டின் மகத்துவத்தை அறியாதவர்கள். பூக்கோ பற்றியும், பிராய்டு பற்றியும் தலையில் தூக்கிவைத்தாடும் நாம் வள்ளுவன் எழுதிய விழுமியத்தை பேசுவதோடு விட்டுவிடுகிறாம். வாழ்க்கைக்கான தர்க்க சிந்தனையையும்,தத்துவத்தையும் அதனூடாக ஞானத்தையும் தரவல்லது இவை. இவற்றை ஓரளவு தெரிந்துகொண்டாலே சிந்திக்கும் சமூகமாக உருவாகமுடியும். ‘ஆதித்யாவிலும்’, ‘அது இது எதுவிலும்’ , ‘சன் மியூசிக்கிலும்கவனத்தை இழந்திருந்தால், முன்கதவு வழியேகூட வீட்டினுள் நுழையும் திருடனைக்கூட அறிய முடியாது.
இந்நூலில் இவாறான் கட்டுரைகள் நிறைய உள்ளன. நம்மை நம் வாழ்க்கைக்குள் கவனப்படுத்தும் இந்நூல் வாசித்துணர வேண்டிய ஒன்று.

நூலின் விலை ரி.ம.10. தொடர்புக்கு 044843013

Comments

வணக்கம்
ஐயா
புத்தகம் பற்றி சொல்லிய போது படிக்க வேண்டும் என்ற ஆசைதான் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...