Skip to main content

ரெ.காவின் ‘கொப்புளங்கள்’- சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்

ரெ.கா கதை மூன்று
20.3.16ல் மலாயா பல்கலையில் ரே.கார்த்திகேசு இலக்கிய அரங்கம் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு அவரின் சிறுகதைகளின் ஊடாக
ஒரு பயணம்

                                                     ரெ.காவின் ‘கொப்புளங்கள்’- 
                      சிறு தவறுகளை ஊதிப் பெரிதாக்கி ஊழித் தீயில் விழுதல்

ஒருநாள் பள்ளி மாணவி ஒருவரை அழைத்துக்கொண்டு என் அறைக்குள் நுழைந்தாள் ஒரு வகுப்பாசிரியை. மாணவியின் வலது கையைப் பிடித்து என்னிடம் காட்டினாள். அவள் வலது உள்ளங்கை முழுதும் கொப்பளித்துப் புண்ணாக இருந்தது. பிஞ்சுக் கையின் வெள்ளைச் சதை வெடித்து நீர் வடிந்து கொண்டிருந்தது. என் கண்கள் காயத்தின் மேல் நிலைக்க மறுத்தன. நான் ஆசிரியை முகத்தைப் பார்த்தேன். “அவளால எதுவும் எழுத முடியாம இருந்தத கவனிச்சப்போ தான் இந்தக் காயத்தப் பாத்து, துடிச்சுப் போய்ட்டேன் சார் !” என்றாள். நான் மாணவியை என்ன நடந்தது என்று கேட்டேன். ஒன்பது வயது மாணவி அவள்.கண்களில் நடுக்கம் மிச்சம் இருந்தது. அடி நெஞ்சில் அச்சம் ஊறிக் கொண்டிருந்தது. வாயே திறக்க திராணியில்லை. ஆசிரியர் நடந்ததைச் சொன்னபோது பதறிவிட்டேன். “வீட்டு சாமி தட்டுல இருந்த அஞ்சி வெள்ளிய எடுத்திட்டிருக்கா. அவங்கப்பாவும் அம்மாவும் இரும்ப காய்ச்சி ‘திருடுவியா திருடுவியா’ இப்படி சூடு வச்சிருக்காங்க சார்,” என்றார். எனக்கு மாணவி மேலிருந்த கரிசனத்தைவிட அவர்கள் பெற்றோர் மேல்தான் ரௌத்திரம் பொங்கியது. மாணவியிடம் பெற்றோரை என்னைச் சந்திக்க வரும்படி சொல்லி அனுப்பினேன். முதல் நாள் அவர்கள் வரவில்லை. அவள் கைப்புண் தணல் அனுதாபத்தையும் சினத்தையும் என் மீது திணித்துக் கொண்டிருந்தது. மறுநாள்,” அவர்கள் நாளை என்னைச் சந்திக்க வரவில்லையென்றால் நான் போலிசுக்குப் போக வேண்டியிருக்கும்,” எனறு மிரட்டி வைத்தேன். மறுநாள் காலையிலேயே பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள்.  “ஐந்து வெள்ளிக்காக பிஞ்சுக் குழந்தையின் உள்ளங்கை,யில்  கனன்று கொண்டிருக்கும் இரும்பில இப்படியா பழுக்கப் பழுக்கச் சுடுவீங்க?  . வீட்டில் பிள்ளைகளின் கண்ணில் படும்படி பணத்தை வைத்தது யார் தவறு?” என்று கேட்டேன். “அவ பணத்தைத் திருடியிருக்கக் கூடாது, அது கெட்ட பழக்கம்,” என்று வாதிட்டார்கள். “சாலையில் யாரோ ஒருவர் தவறவிட்டிருந்த பணம் உங்கள் கண்ணில் பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டேன். அவர்கள் திணறினார்கள். “நீங்கள் கண்டிப்பாய் எடுத்திருப்பீர்கள் இல்லையா? என்றேன். தலையை அசைத்து ஆமோதித்தார்கள். பணத்தைப் பார்த்தா யார்க்குத்தான் ஆசை வராது? அதுவும் திருட்டுதான்!” என்றேன். அவர்கள் முகம் மேலும் சுருங்கியது. “குழந்தை மிட்டாய் ரொட்டி வாங்க ஆசைப்பட்டிருக்கும். அதற்கு நீங்கள்தான் பொறுப்பற்ற தனமாய் நடந்திருக்கிறீர்கள்,” என்றேன். “போலிசில் புகார் செய்தால் உங்கள் கதை என்னாகும் தெரியுமா? என்றேன். அவர்கள் செய்த குற்றம் சட்டத்துக்கு உட்பட்டது என்று தெரிந்ததும்  முகத்தில் பயம் கவ்விக்கொண்டது. மிரண்டு போனார்கள். கண்கள் பனித்து மின்னின. அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டேன். போலிஸ் என்றதும் நடுங்கிவிட்டார்கள்.
நம் குழந்தைகள் தவறு செய்வதற்கு நாம்தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறோம்.நாம்தான் முன்னோடியாகவும் இருக்கிறோம்.
ரெ.காவின்’ மனசுக்குள்’ சிறுகதைத் தொகுப்பில்,’ கொப்புளங்கள்’ கதை இதுபோன்ற சம்பவம் ஒன்றைச் சொல்கிறது. அதில் மையப் பாத்திரமாக வரும் ஆனந்தன் பள்ளியில் பணம் திருடிக் கையும் களவுமாகப் பிடிபடுகிறான். ஒரு வகையில் அவன் இப்படி செய்ததற்கு அப்பா ரந்திரன்தான் அடிப்படையில் காரணியாக இருந்திருக்கிறார். ரவீந்திரன் ஒரு லாரி டிரைவர். நாலு நம்பர் விளையாட்டில் பணத்தை இழப்பவர். சிகெரெட் புகைப்பவர். நண்பர்களோடு  மதுவில் விழுந்து கிரங்கி நள்ளிரவுக்குப் பின்னர் வீடு திரும்புபவர். இதெல்லாம் ஆனந்தன் அகக் கண்களால் உள்வாங்கிக் கொண்டே வளர்ந்திருக்கிறான். ஆங்கிலத்தில் ‘ஹீரோவர்சிப்’ என்ற ஒரு வார்த்தை உண்டு. தனக்கு நெருங்கிய மூத்தவர்களைத் தங்களுடைய வாழ்க்கை நாயகர்களாக சிறுவர்கள் தரிசித்துக் கொள்வார்கள். தன்னையறியாமல் அவர்களை பின்பற்றவும் செய்வார்கள். அவர் அப்பாவாக இருக்கலாம். ஆசிரியராக இருக்கலாம். அண்ணனாக இருக்கலாம், சினிமா நடிகர்களாகவும் இருக்கலாம். அவர் செய்யும் தவறுகளையெல்லாம் சரியென்றே  எடுத்துக்கொள்ளும் பருவம் அவர்களுடையது. அவற்றைப்  பொதுவில் செய்வதால் அவை சமூகக் குற்றமே இல்லை என்று அர்த்தமாகிவிடுகிறது குழந்தைகளுக்கு. அப்பாவை இப்படிப் பார்த்தவனுக்கு மற்றவர் பையிலிருந்து பணம் எடுப்பதற்கும் உந்தியிருக்கிறது. அப்பாவின் தவறுகள் ஆனந்தன் செய்ததைவிட மோசமானவை. அவருக்கு எந்தத் தண்டனை இல்லை. அதையும் கண்கூடாகப் பார்த்தவன்தான் ஆனந்தன். அப்பாவின் கூடாத செயல்களே அவனுக்கு மறைமுகமான உந்துதலை வழங்கியிருக்கிறது. அடிப்படை தவறுகள் எங்கிருந்து முளைக்கின்றன? அதற்கு வித்திட்டவர் யார்? என்று இப்போது புரிகிறது.
ஆனந்தன் அப்பா வீடு திரும்பியதும் தகவல் அறிந்து, கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுகிறான். பெருந்தவறு செய்தவர் சிறு தவறு செய்தவை தண்டிக்கும் அதிகாரச் சக்தியை இங்கே பார்க்கிறோம். பெருந்தவறுகள் தண்டனைக்கு உள்ளாகாமல் சிறு தவறுகள் பெருந்தண்டனைக்கு ஆளாகிற முரண்நகை இது. தாங்கள் செய்வது தவறு என்று சிந்திக்காத குடும்ப மனிதர்கள்தான் சிறு தவறுகளை சொல்லித் திருத்த முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் அனுசரனையான வார்த்தைகள் மிகக் கம்மி. அன்பு அதனினும் குறைவு. அடித்தே திருத்திவிடுவேன் என்று கங்கணம் கட்டுபவர்கள். இப்படிப்பட்ட வன்ம மனிதர்கள்தான் குற்றவாளிகளை உற்பத்தி செய்து சிறைகளுக்கு அனுப்புபவர்கள். ரவீந்திரன் அதைத்தான் செய்கிறார்.
கொப்புளங்கள் கதையில் நேரெதிர் பாத்திரங்களாக வரும் அப்பா ரவீந்திரன் பாத்திரம் செம்மையாக வெளிப்பட்டிருக்கிறது. அவன் நடவடிக்கைகளில் பொறுப்பற்ற தகப்பன் தெரிகிறான். பொறுப்பற்ற தகப்பனுக்குப் பொறுப்பற்ற பிள்ளை உருவாவத்தைத் தவிர்க்க முடியாத அல்லவா? அம்மா பிரேமாவதி பிள்ளையை நன்முறையில் வளர்க்கத் தகுதியற்றவளாக படைக்கப்பட்டிருக்கிறாள். அவளும் மையக் கதையாடலுக்குள் வரும் நல்ல முரண் பாத்திரம்தான். பிரேமாவதியின் கோபத்தை கணவனுக்குக் கடத்துவதிலிருந்து அவளும் பொறுப்பற்றவள்தான். அவள் தன் மகனைத் தானே கையாண்டிருக்க வேண்டும். பெற்ற தாய்க்கு இல்லாத சக்தியா? கதையில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கு முகாந்திரக் காரணமாக வெளிப்பட்டிருப்பவள் பிரேமாவதி. கதை முடியும் இடம் கீழ்த்தட்டு வர்க்க மனிதர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்று நிறுவுகிறது. ஏனெனில், அவர்கள் சிந்திக்கத் தவறிய மனிதர்கள்.ஆனந்தனை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கிய குற்றத்துக்காக அவன் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். குடும்பம் நிர்க்கதியாகிறது.
எல்லாம் நடந்து முடிந்த பின்னர்தான்  எல்லாருக்கும் புத்தி வருகிறது. இப்படி நடந்திருக்கக் கூடாது எனறு . தவறுகள் சிறியதாய் இருக்கும்போதே சொல்லித் திருத்தியிருக்கவேண்டும். நல்லது எது தீயது எது என்ற தர்க்க அறிவு மனிதர்க்கு வாய்த்திருக்கிறது. சில சமயம் ஐந்தறிவு குரங்குகள் கூடத் தெரியும் கீழே விழுந்தால் அடிபடும் என்று. அதனால் பாதுகாப்பாக தாய்க்குரங்கின் இடுப்பைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் சேய்க்குரங்கு. அடங்கா அதீத சினம் நம் அறிவுப் புலனை ஊனமாக்கி விடுகிறது. பல தருணங்களில் எல்லாவற்றையும் கெடுத்துக் குட்டிசுவராக்கி விடுகிறது கோபம். சினம் சேர்ந்தாரையும் கொல்லும் என்பதை தாமதமாகவே புரிந்துகொள்வதானது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதற்கு ஒப்பானது. சினம்தான் குடும்பம் என்ற நிறுவனத்தை உடைத்து சிதறச் செய்திருக்கிறது.
ரவீந்தரன் சிறைக்குள் அடைபட்ட பிறகு அக்குடும்பம் என்ன கதிக்கு ஆளாகப் போகிறதோ என்ற அச்சம் நம்மைக் கவ்வுகிறது.  பொறுப்பைச் சுமக்க வேண்டிய கட்டாயத்துக்குப் பிரேமாவதி உள்ளாக்கப் படும் நிலைக்கு ஆளாகும்போது அவள் மீது நமக்கு பரிதாபம் ஏற்படுகிறது. குடும்பப் பொறுப்பில் தலைமை வகிக்க வேண்டியவன்  கைதியாக மாறியதற்கான பின்புலங்கள் மிகச் சாதாரணமானவை. சிந்திக்காத மனிதர்களுக்கு நிகழும் அவலம் கதையினூடாக நன்கு வெளிப்பட்டிருக்கிறது. அவற்றை வாசகனுக்குக் கடத்தியிருப்பதில் ரெ.காவின் ஆளுமை புலனாகிறது.
ரெ.கா வின் கதைமொழி சலசலத்து ஓடும் ஓடைபோல மென்மையானது. இருப்பினும் ரசவாதம் நிகழ்த்தும் மந்திரத் தன்மை கொண்டது. எல்லா வகையான வாசகத் தரப்பினரையும் சென்றடையும் தன்மை கொண்ட சொல்முறை அவருடையது. கரடுமுரடாகக் கதைசொல்லி வாசகனைத் திணறடிக்க மாட்டார். கதையோட்டத்தோடு வாசகன் ஒன்றித்து கதையின் இன்னொரு பாத்திரமாகவே பரிணமிப்பான். அப்படிப்பட்ட கதை தான் ‘கொப்புளங்கள்’.
தலைப்பைக் கூட கவனத்தோடு வைப்பதில்தான் கதை வாசகனுக்கான திறப்பை நிகழ்த்த முடியும். சமூகத்தில் இவ்வாறான கொப்புளங்கள் வெடித்துச் சீழ் வடிந்துகொண்டுதான் இருக்கிறது. ‘கொப்புளங்கள்’ கதை அதன் பிரதிபிம்பம்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...