Skip to main content

தீக்குள் விரலை வைத்தால் (சிறுகதை)

                                                 தீக்குள் விரலை வைத்தால்
                                                                (சிறுகதை)
                                             
                                           கோ.புண்ணியவான், மலேசியா
   

                                  கடைசியில் காவல் நிலையம் வரை போக வைத்துவிட்டது. மனம் ஒப்பவில்லைதான். ஆனாலும் இதனை விட வேறு விதியற்றுதான்  கால்கள் மிகுந்த கூச்சத்தோடும் தயக்கத்தோடும் வந்தடைந்தன. காவல் நிலையம் சமூகப் பாதுகாப்பு அரண் என்பதையும் மீறி  குற்றமுள்ளவர்களைப் தேடிப்பிடித்து அடைக்கும் இடம் என்ற ஆகிப்போனதுதான் காரணம். யார் மனதில் குற்றமில்லை?

                              என் மகனைப் பார்க்குந்தோறும் மனம் துணுக்குற்றது. அவனின் வாடிய முகத்தை சாதரணமாகக் கடந்துவிட முடியவில்லை. கொண்டாட்டக் கலை நிறைந்த முகம் அவனுடையது. சதா பேச்சில் துள்ளலும், உடல்மொழியில் களிப்பும் வெளிப்படும். இந்த இரண்டாண்டு காலமாக அந்தக் களிப்பு மண்ணில் மெல்ல மெல்ல சாய்ந்து வீழ்ந்துகொண்டிருக்கும் வாழைமரம் போல வாடிக் களைத்துக் கிடந்தது.
முன்பு போலல்லாமல், அவன் வீட்டுக்குப் போனால் அதன் சூன்யம், இருள் கவிந்து நிற்கும் அறைகள், மழலைச் சப்தமற்ற சூழல், ஒரு கணம் எங்களையும் அதன் ஆழத்துக்கு இழுத்துச் சென்று புதைத்துவிடும். அவன் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து ‘வாங்கப்பா’ என்று தேய்ந்த் குரலில் வரவேற்பான். அவனிடம் எதுவும் கேட்கத்தோணாது. புதிர்கள் நிறைந்து கிடக்கும் வாழ்வில் வார்த்தைகள் சேதங்களைக் கொணரலாம் என்பதால் பெரும்பாலும் மௌனத்தாலேயே எங்கள் உரையாடல் நிகழ்ந்தன. மகனின் துயரம் எங்களுக்குள்ளும் தன்னிச்சையாய்ப் புகுந்து அவன் சுமையைவிட இருமடங்காக்கி விடுவதென்னவோ வாழ்வின் விநோதம்தான்.
விலாசினி நடை பயின்ற வீட்டுத்தரை, அவள் சிரித்து அழுததை உள்வாங்கிப் பதிவு செய்து கொண்ட சூழல், அவளைத் அவன் தூக்கிக் கொஞ்சி உருண்டு புரண்டு விளையாடிய படுக்கையறை, அவள் தள்ளாடி ஓடி விழுந்து எழுந்த தூக்கி அணைத்து ஆறுதல் மொழி பகன்றது என எல்லாமே,  பறவையற்ற , இரவு கவிழும், சாயுங்கால வானம்போல வெறிச்சோடிப் போனது. விலாசினியற்ற வெற்று வீடு அவளின் சுவாசக்காற்று மட்டுமே வீடெங்கும் மிதந்துகொண்டிருப்பதாகப் பட்டது. விலாவின் களி நடனத்தை மீட்கும் வரை அவனிடமிருந்து மறைந்துபோன பழைய கொண்டாட்டக் கலையை உயிர்த்தெழுப்ப முடியாது.
                                 
                                    குழந்தையைப் பார்க்க மனைவியின் பெற்றோர் வீட்டுக்குப் பலமுறை போயும் தன்மானம் சரிந்துபோய்தான் தோல்வி முகம் கொண்டு வீடு திரும்பினான். அவமானப்பட்டு வந்த மகனுக்காக எங்களுக்குக் கோபம் வந்தென்ன செய்ய? எல்லாம் நல்லபடி  முடியவேண்டுமென்றால் சினத்தை மனக்கூட்டுக்குள் சிறை வைத்துவிட வேண்டுமே!. இந்த இரண்டாண்டு காலமாக மகளையும் மனைவியையும் அவனிடம் காட்டக்கூடாது என்பதில் அவர்களின் பிடிவாதம் தளர்ந்தபாடில்லை. மனைவியோடுகூட தொடர்பு வைத்துக்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்கும் பிடிவாதமாகத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. உரையாடலின் மூலம் சமரசங்கள் சாத்தியமாகலாம். ஆனால் பல சமயங்களில் வன்முறை எல்லையைக்கூட தொட்டிருக்கிறது. அவமானம் பூசப்பட்ட முகத்தோடு  உரையாடல், முறையாடலாகி மாறி முறிந்து தோல்வி முகத்தோடு திரும்பவேன்டியதாயிற்று.  குழந்தையைப் பெற்ற தந்தையிடம் காட்டக்கூடாத வன்முறையை எல்லா நேரத்திலும் கொள்கையாகக் கொண்டிருந்த்து சம்பந்தி வீடு.  அவனைத் தண்டிக்கும் மிகப்பெரிய ஆயுதமாக அதனைக் கையாண்டார்கள்.
                         
                                  பிற குழந்தைகளின் துள்ளலையும் மழலையையும் பார்க்கும்போது விலாசினியின் பிரிவு அவனை அனற்புழுவென வாட்டி உருக்கியது. அவன் மாயக்கைகள் அவர்களை நோக்கி நீள்வதை நான் அவன் கண்களின் ஏக்கத்தில் பார்த்திருக்கிறேன்.

                                 கணவன் மனைவிக்கான புரிந்துணர்வின்மை அவர்களின் பிரிவுக்குக் காரணமானது.  மகள்மேல் கை நீளும்  மருமகனை யாருக்கும் பிடிக்கும்? செல்லமாக வளர்ந்தவள் மேல் கைப்படுவதை அவர்கள் பாசமனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அடிக்கடி புகார்கள் இறக்குமதி செய்யும் மகள்மேல் பச்சாதாபம் நிறைந்து அவளை வேறுவழியின்றி, ஒரு தருணத்தில் அரவணைத்துக் கொண்டவர்கள்தான். பெற்றோரின் அரவணைப்பு சூட்டை அவள் நிரந்தரத் தீர்வாக ஏற்றுக்கொண்டாள் போலும். அன்றிலிருந்து அவள் கூட்டுக்குத் திரும்பவில்லை. எல்லாம் பழக்கத்துக்கு வர கொஞ்சம் விட்டுப்பார்த்திருக்கலாம்.
                     
                                  இடையில் சமரசத்துக்கான எவ்வளவு பேச்சுவார்த்தை. எவ்வளவு தூது. எவ்வளவு மன்னிப்பு. எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்.
 துயர் மிகுந்த  உலகத்திலிருந்து அவனை மீட்டாக வேண்டும். அதோ இதோ என்று காத்திருந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. பிடிவாதம் தளரவில்லை. காவல் நிலைய வாசலைத் தொட வேண்டிய நிர்ப்பந்தததைத் தவிர்க்கமுடியவில்லை..
நான் இன்ஸ்பெக்டரிடம் சொன்னேன். “எனக்கு வன்முறை வழி பிடிக்காது. எங்களால் ஆள்வைத்து குழந்தையைக் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் குழப்பம்தான் மிஞ்சும். உங்கள் தரப்புக்கும் அது பிடிக்காது. எனவேதான் நான் உங்களை நாடிவந்தேன்.”
                                     
                                “சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டதா?” என்று கேட்டார் இன்ஸ்பக்டர்.
                             
                             “விவாகரத்துவரை போகவேண்டாம் என்பதற்காகவே பொறுமையாக இருக்கிறோம்,” என்றேன்.
                             
                               கொஞ்சம் பொறுங்கள் என்று கூறிவிட்டு, அவர்கள் முகவரி கேட்டு போலிஸ் வாகனத்தை ஓட்டிக்கொண்டு வீடுதேடி போனார். நாங்கள் எங்கள் தரப்பில் என்னவெல்லாம் பேசவேண்டுமென்று திட்டமிட்டுக்கொண்டிருந்தோம்.
                           
                            “ விலாசினி என்ன நெனவு வச்சிருப்பாள? என்று கேட்டான் மகன். என்னால் அவன் எதிர்பார்ப்புக்கு ஒத்திசைவாகப் பதிலுரைக்க முடியவில்லை என்பது கூடுதல் மனச்சுமையானது. அவன் முன்னிலும் மிகுந்த பதற்றத்தோடு காணப்பட்டான். ஓரிடத்தில் அமராமல் அங்கும் மிங்கும் நடந்து வாசலைப் பார்த்தபடி இருந்தான். எண்ணமும் மனதும் ஒரே திக்கில் சிக்கிக்கொண்டிருந்தன.
பதினைந்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் காரைப் பின்தொடர்ந்து  அவன் மனைவியின் பெற்றோர் விலாசினியைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்தனர். அவர்கள் கண்களில் மிரட்சி வெளிச்சம் போட்டுக்காட்டியது. எதிர்பாராத ஒன்று திடுமென நிகழ்ந்துவிட்ட அச்சத்தை அவர்கள் உடல்மொழி ஏந்திவந்தது. முகத்தில் அவமானத் துணுக்குகளைக் மறைக்கமுடியவில்லை. அதனூடே எங்களின் மீது ஒரு உக்கிரப் பார்வை பாய்ந்து தொட்டு விலகியது
 மகள் வருகிறாளா என்று உன்னித்து பார்த்துக்கொண்டிருந்தான் மகன். என் மகன் முகத்தில் சற்றே மலர்ந்து இருந்தது. அவன் விலாசினியைப் பார்த்தவண்ணம்  இருந்தான். தூர வரும்போதே நாங்கள் விலாசினியை முதல் முறையாகப் பார்ப்பதுபோல நிலைத்த பார்வைகொண்டு பார்த்தோம். அவள் வளர்ந்திருந்தாள். எங்களை மறந்திருந்தாள். அவளை தூக்கக் கையேந்திய மகனைப் பார்த்து திரும்ப முகத்தைத் திருப்பிக்கொண்டது. நீண்ட அவன் கைகள் நீண்டு வெறுமனே தொங்கியபோது  எங்களுக்கும் வலித்தது..அவளைக் கண்ணில் காட்டாமல் அவர்கள் ஆடிய ஆட்டத்தின் நோக்கம்  வெற்றிபெற்றிருக்கிறது-  கண்களுக்கு எட்டியது கைக்குள் வரவில்லை.
எங்களை ஒரு அறைக்கு அழைத்துச் சென்று அமரவைத்துவிட்டு சற்று நேரம் கழித்து இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார்.
அதற்குள் அவனின் மாமியார் “போலிஸ் ஸ்டேசன் வரைக்குமா வருவாங்க? என்று பாய்ந்தாள்.
“எங்கள வரவச்சது நீங்கதானே,” என்று பதலடி கொடுத்தேன்.
அதற்குமேல அந்த உரையாடல் இடம் கருதி நின்றுபோனது.
ஒவ்வொரு தரப்பாக உங்கள் புகாரைச் சொல்லுங்கள் என்றார் இன்ஸ்பெக்டர். நாங்கள் சொல்லும் போது அவர்களும் , அவர்கள் சொல்லும்போது நாங்களும் குறுக்கிட்டு அவரவர் நியாயத்தை நிறுவ முயன்றுகொண்டிருந்தோம். மெல்ல மெல்ல குரல் உயர்ந்து அங்கேயே ஒரு களேபரம் நிகழ்ந்துகொண்டிருந்தது.
“குழந்தையைத் தந்தையிடம் காட்டாமல் மறைப்பது சட்டப்படி குற்றம். இதனால் பல குற்றங்கள் நேர்வதையும் தடுக்கமுடியாது. நீதிமன்றதுக்குப் போகவும் நீங்கள் தயாராக இல்லை. நீங்களே ஒரு பரஸ்பர முடிவுக்கு வரவேண்டும்,” என்று தற்காலிகமாக ஒரு தீர்ப்பை வைத்தார் இன்ஸ்பெக்டர். குழந்தையை அவன் தந்தையிடம் கொடுங்கள் என்று கரிசனத்தோடு சொன்னார் . விலாசினியை தூக்கி அணைத்துக்கொண்டான் மகன். இம்முறை விலாசினி எதிர்ப்புக் காட்டவில்லை. பழைய உறவு மரபின் மிச்சமாக இருக்கலாம்.
ஒருவர் மீதான இன்னொருவர் குற்றப்பட்டியல் நிறைந்துகொண்டே இருந்தது.
மகன் அவளோடு கழித்த பழைய நினைவுகளை கொண்டு வர முயன்றுகொண்டிருந்தான். அவளுடன் அவன் பேசிய மழலை, விளையாட்டின் மொழி, சைகை என விலாசினியிடம் நினைவுபடுத்த முயற்சி எடுத்துக்கொண்டிருந்தான். அவள் மலங்க மலங்க பார்த்தாளே ஒழிய அவனின் எண்ணம் ஈடேறுவதாகத் தெரியவில்லை. அவன் முகம் வாடத் துவங்கியிருந்தது. அவள் பிஞ்சு விரல்களைத் தொட்டு ஸ்பரிசித்தான். அவள் முகத்தில் முத்தங்களைப் பொழிந்தான். தோளில் சுமந்து அறைக்கு வெளியே சுற்றிவந்தான். இரண்டாண்டு விடுபட்ட தொடுதலை, முத்தமிடுதலை, தழுவலை, அணைத்தலை மீட்டெடுக்கும் முனைப்பில் அவனிருந்தான். அவளின் உடற்சூடு அவன் தகிப்பை சற்றே இறக்கியிருக்கலாம். அவன் கண்களின் பொங்கிய பனிப்படலத்தை துடைத்தவாறு இருந்தான்.
அவளை முத்தமிடும்போதெல்லாம் என் மகனின் வேதனையை தீர்த்த பெருமை என்னுள் நிறைந்தது. இது தற்காலிகம்தான். இன்ஸ்பெக்டர் அறிவுரைதான் சொல்லமுடியும். அதற்கு மேலும் நீதிமன்றம் என்ற ஒன்று இருக்கிறது, அதுவே தங்களைக் கட்டுப்படுத்தும் என்று தெளிந்திருந்தார்கள். போலிஸ் இன்ஸ்பெக்டருக்குக் கட்டுப்படவேண்டிய அவசியமில்லை அவர்கள் திட மனதுக்குப் புரியும்தான். அதிகார அழைப்பின் நிமித்தம் இங்கே வந்திருக்கிறார்கள். ஆனால் என் மகன்மேல் உள்ள கோபத்தில் அவர்கள் தணித்துக்கொள்ளத் தயாராக இல்லை.
பத்து நிமிடம் மட்டுமே விலாசினியை அவனோடு இருக்கச் சம்மதித்தார்கள். பின்னர் ஒரு நொடிகூட இருக்கவிடாமல் குழந்தையைப் பிடுங்கி, கையோடு கொண்டு போய்விட்டார்கள்.
“என்னால் இவ்வளவுதான் செய்யமுடியும்,” என்றார் இன்ஸ்பெக்டர்.
விலாசினியை ஏந்திய சூடு தணியவில்லை. அந்த அணைப்பும் முத்தமும் கொஞ்சலும் யுகம் யுகமாய் எஞ்சி இருந்தது. குழந்தையைத் தொட முடியாத தந்தையின் ஏக்கம் அவனுள் மீண்டும் புகுந்துகொண்டது. கண நேரத்து மகிழ்ச்சி அவிழ்ந்து சிதறி பள்ளத்தாக்கில் உருண்டோடிக்கொண்டிருந்தது.
இனி எப்போது பார்க்கமுடியும்? போலிஸ் நிலைய உதவியை அடிக்கடி நாட முடியுமா?
அவர்கள் எச்சரிக்கையாகி விவாகரத்துவரை போக வைப்பார்கள். குழந்தை இதுநாள் வரை தாயிடம்தான் இருந்தது இனியும் தாயிடமேதான் இருக்கவேண்டும் என்ற நீதிமன்றத்தில் கட்டளை பிறப்பிக்கப் பட்டால்.. வளரும் குழந்தைக்கு வீட்டிலிருக்கும்  தாய்தான் முழுப் பாதுகாப்பு அளிக்கமுடியும் என்று முடிவெடுத்தால்ஸ.தந்தைக்கு அவ்வப்போது குழந்தையைப் பார்க்கும் வாய்ப்பைக் கிள்ளி வழங்கப்பட்டால்ஸ..குழந்தை இங்குமில்லாமல் அங்குமில்லாமல் அல்லலுறுமேஸ இருவரின் அன்பும் அணைப்பும் ஒருசேர கிடைக்கப் பெறாத குழந்தையின் வளர்ச்சியில் இடையூறு உண்டாகுமேஸ!
சூன்யம் நிறைந்த வீட்டுக்குத் திரும்ப மனமில்லை. குழந்தையோடான கண நேர உறவு மனச்சோகத்தை இரட்டிப்பாக்கியிருந்தது . யாருமற்ற வீடு, கடலாழத்தில் போடபட்ட பாறையாய் அமுங்கி இருண்டு கிடந்தது. இருள் முழுமாய் வீட்டைக் கைப்பற்றி அறையெங்கும் சுருண்டு கிடந்தது.
இரண்டு நாட்கள் ஆழ யோசிக்கவைத்தது.
இந்தப்பிரிவுக்குத் தான்தான் காரணம் என்று உள்மனம் உரக்க ஒலித்துச் சொல்லியது. இரண்டு ஆண்டுகள் பிரிவினை மன இறுக்கம் தளர்ந்திருந்தது. மனைவிக்கும் அது கண்டிப்பாய் நேர்ந்திருக்கும். எக்கு மனம் அப்போது பஞ்சாய் லேசானது. விலாசினியை தொட்டுணர்ந்து முகர்ந்து உச்சிகுளிர்ந்த அந்தக்கணம் முதலே அவன் பிடிவாதம் நொருங்கி சில்லு சில்லானது.
அவளின் தொலைபேசி எண்ணை அங்கு மிங்கும் அலசித்தேடி விசாரித்து அழைத்தான்.
“சந்தியா நான் குமார் பேசுறேன். பழையதை மறந்திடு. என்னையும் மன்னிச்சிடு “
“......................................................................”
“ அதேபோல உன்னை மன்னிச்சி ஏத்துக்கிறேன்.”

".............................................................................."
“ என்னோடு வந்து இன்னொரு தடவ வாழ்ந்து பார்..புது வாழத் துவங்கலாம் சந்தியா..”
“ வாழ முயற்சியாவது செய்யலாம் வா..விலா ரெண்டு பேருக்குந்தான் அவள் பிள்ள இல்லியா?”
அந்த முனையிலிருந்து மீண்டும் மௌனமே பதிலாய் இருந்ததால் “சந்தியா” என்றான் மீண்டும்

அந்த முனையிலிருந்து  கேவிக் கேவி அழும் ஒலிமட்டுமே கேட்டது.
                                                                                                                           
                                                                                               நன்றி-            கல்கி 3.5.15



Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...