முதல் முறை குடும்பத்தோடு தமிழ்நாட்டுப் பயணம் மேற்கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டிருந்த போது நெஞ்சில் இனமறியா பதற்றம் ஏறியிருந்தது. அந்நிய நாட்டுப் பயணம் என்பதால் புது இடத்தை, புதிய மனிதர்களை, புதிய கலாச்சாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தப் பதற்றம் அது. சென்னையில் யாரும் தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களை துணைக்கு அழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தபோது தமிழ் நாட்டிலிருந்து மலேசியாவுக்கு வந்த ஒரு நடனக் கலைஞர்தான் நினைவுக்கு வந்தார். நடனமாட வந்தவர் எப்படியோ எங்களுக்குப் பழக்கமாகிப் போனார். அவர் கொடுத்த முகவரி அட்டையைத் தேடி எடுத்து அவரோடு தொடர்பு கொண்டோம். தொடர்பில் கிடைத்தார். நாங்கள் தமிழ்நாட்டுக்கு வருவது பற்றியும் அவர் உதவி தேவைப்படுவது பற்றியும் சொன்னபோது அவர் மகிழ்வோடு வரவேற்றார். கொஞ்சம் பதற்றம் குறைந்திருந்தது.
உறுதியளித்ததுபோலவே விமானத் தளத்தில் காத்திருந்தார். விடுதிவரை வந்தார். பயணம் செய்யும் வழியில் இன்ன இடத்தையெல்லாம் சென்னயில் பார்க்கலாம் என்று சதா பேசிக்கொண்டே இருந்தார். வெளியில் எங்கோ தங்கியிருந்து ஒவ்வொரு நாள் காலையில் விடுதி லோபியில் காத்திருப்பார். சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்வார், காலை நேர உணவு, மதிய உணவு நேரத்திலும் இருப்பார், இரவு உணவை எங்களோடு சாப்பிட்டுவிட்டுத்தான் அன்றைய பணியை முடித்துக் கொள்வார். வேறு வேலை ஏதும் செய்யாமல் பிரதி தினமும் காலை முதல் இரவுவரை எங்களுடன் இருப்பதை உணர்ந்த மூன்றாவது நாள் நீங்கள் வேலையில் விடுப்பெடுத்துக் கொண்டீர்களா? நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்? என்று கேட்டேன். அவரின் பதில் எங்களை வியப்படையச் செய்தது. தான் வேலை ஏதும் செய்யவில்லையென்றும் , தனக்கு ஒரு சினிமாவில் நடிக்க வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன் என்றும் பதிலுரைத்தார். சினிமா என்றதும் அந்தக் கனவுத் தொழிற்சாலை எங்களை வியப்புறச் செய்தது. எவ்வளவு காலமாக காத்திருக்கிறீர்கள் என்று விசாரித்தோம். மூன்று நான்கு வருடங்கள் என்றார். வருமானமே இல்லாமல் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று வினவினேன். ஏதோ வாழ்க்கை ஓடுது என்றார். வருமானமில்லாமல் குறைந்தபட்சம் பசியை எப்படிப் போக்கி கொள்கிறார் என்று தெரியவில்லை! அதுபற்றிக் கேட்டால் புண்படக்கூடும் என் உணர்ந்து தொடர்ந்து விசாரிப்பதை நிறுத்திக் கொண்டேன். அவர் தினசரி எங்களோடு ‘ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மூன்று வேளை உணவுக்காத்தான் என்பதை மெல்லப் புரிந்துகொண்டோம். அவர் மேல் பரிதாபம் உண்டானது. உள்ளபடியே இரண்டு நாளில் அந்த ஊரின் மண்ணும் மனமும் பண்பாடும் புலப்படத் துவங்கியிருந்தது. பதற்றம் குறைந்து அவரின் உதவியில்லாமல் சுயமாகத் தேடி அடையும் பிடி கிடைத்திருந்தது. அவர் இல்லாமல் எங்களால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டான பின்னரும் ஒவ்வொரு நாளும் அவர் எங்களோடு இணைந்து கொள்வதை தவிர்க்கமுடியவில்லை. பரவாயில்லை நீங்கள் போய் உங்கள் வேலையைப் பாருங்கள் வீணாக உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறோம் என்று சொல்லியும் அவர் வருவதை தடுக்க முடியவில்லை. பாவம் ஏதும் விதியற்றுதான் எங்கலை அண்டி இருக்கிறார் என்பதை மெல்ல மெல்ல புரிந்துகொண்டோம். அவர் கையில் செலவுக்குப் பணம் இருக்க வாய்ப்பில்லை என்பதை அவர் உடல் மொழியே கூறியது.
எங்களோடு உடனிருந்த ஒவ்வொரு நாளும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை யாரிடமாவது தொலைபேசியில் உரையாடியபடி இருந்தார். சினிமா இயக்குனரோடும் சினிமா ஏஜெண்டுகளோடும் அவர் பேசுவதாகப் பட்டது. அவ்வுரையாடலை நாங்களும் செவிமடுக்க வேண்டும் என்றே ஒளிவு மறைவின்றியே பேசினார். அவ்வுரையாடலின் வழி அவரிந் ‘ஆளுமையை’ எங்களிடம் நிறுவும் முயற்சி அது. சாதாரணமாகப் பேசிக்கொண்டிருப்பவர் திடீரென எங்கள் இருப்பைத் தவிர்க்க சற்று விலகிப்போய் பேசிவிட்டு வருவார். ஒரு புதிய படம் எடுக்கும் இயக்குனர் படப்பிடிப்புக்கு என்னை அழைக்கவிருக்கிறார்.அது பற்றிப் பேச என்னை நாளைக்குக் கூப்பிடுவதாகச் சொன்னார் என்பார். ஆனால் மறுநாள் எங்களோடு இணைந்து கொள்வார்? படப்பிடிப்பைத் தள்ளிப் போட்டாங்களாம் என்பார். மீண்டும் பேசுவார், வாய்ப்பு வருகிறது என்பார். ஆனால் எங்களோடுதான் எந்நேரமும் இருப்பார். துணைக் கதாநாயகனாகிற வாய்ப்பு உண்டு என்பார். இந்த நாயக நடிகருடன் முக்கிய வில்லன் பாத்திரத்துக்கு என்னைத்தான் நியமித்திருப்பதாக உறிதியளித்திருக்கிறார்கள் என்பார். கமல் படத்தில் சின்ன வேஷம் வரும்போல இருக்கு என்பார். ஆனால் நாங்கள் அங்கிருந்து இரண்டு வாரங்களில் அவருக்கு எந்த வாய்ப்பும் கிட்டியதாகத் தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்காமைக்கு ஏதாவது காரணங்கள் சொல்லியபடியே இருந்தார். இந்த மூன்று நான்கு வருடத்தில் ஏதாவது சந்தர்ப்பம் வாய்த்தாதா என்று கேட்டேன். இரண்டொரு வாய்ப்பு கிடைத்து என்று இரண்டொரு படத்தைச் சொன்னார். அப்படங்களில் அவர் தோன்றிய காட்சிகளை எங்களால் நினைவு கூர முடியவில்லை. சின்ன வேஷமாக இருக்கலாம். அல்லது எங்களின் நம்பிக்கையைப் பெற இப்படிச் சின்னச் சின்னப் பொய்களையும் சொல்லியிருக்கலாம். அதனை நாங்கள் பெரிதுபடுத்தவில்லை! நாங்கள் விடைபெற்றுக் கொண்ட பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என்று யோசித்தோம்! மூன்று நான்கு ஆண்டுகளாக அவர் பல வேளை சாப்பிடாலாமல், பசிக்குப் பழகியிருக்கக் கூடும் என்ற எண்ணம் எங்களைப் பாதிக்காமல் இல்லை. கடந்து வந்த காலங்களில் வாய்ப்புகள் வராத போதும் அவர் சற்றும் சோர்வடையாமல் அலைவதிலிருந்து பின்வாங்கியதில்லை. என்றாவது ஒருநாள் தானும் சினிமாவில் பெரிய ஆளாக வரக்கூடிய கனவைலிருந்து தன்னை மீட்டுக்கொள்ளும் சிறிய சமிக்ஞைகூட அவரிடம் தெரியவில்லை . இன்றைக்கிருக்கிற நடிகர்கள் பலர் தொடக்கத்தில் பல ஆண்டுகள் சிரமப் பட்டவர்கள்தான் என்று எடுத்துக் காட்டுகள் சொல்லி தன்முயற்சியைக் கைவிடப் போவதாக இல்லை என்று திட்டவட்டமாகவே இருந்தார். கலை ஆர்வமும், அதனால் கிடைக்கப் போகும் பேரும் புகழும் ஒரு கலைஞனை எப்படியெல்லாம் சிதைக்க முற்படுகிறது! அதெல்லாம் இவர் போன்றவர்களுக்கு பெரிய விடயமே இல்லை. தேடலின் தொடர்ச்சிலும், கலை மீதுள்ள ஆர்வத்திலும் அவர்கள் திருப்தி கொள்கிறார்கள். இப்பொது இல்லையென்றாலும் என்றாவது ஒருநாள் சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கனி கையில் பிடித்தபடியே விடாப்பிடியாய்த் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடி அடைகிறது. சினிமாவில் கூட்டத்தில் ஒருவராய் நின்று கறைந்து காணாமற்போகும் எத்தனைக் கலைஞர்களை நாம் கடந்து வந்திருக்கிறோம்! அந்த அல்ப வாய்ப்புக்காவே பல காலம் காத்திருந்தவர்கள் அவர்கள் என்ற பின்புலத்தைத் தெரிந்து கொள்ளும்போது காலம் எத்துணை கருணையற்றது என்று புலனாகிறது? அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் அலிபாபாவை மட்டும்தான் நினைவில் வைத்திருக்கிறோம். நாற்பது திருடர்களில் ஒருவனையாவது நமக்கு அறிமுகமானானா? கலைக்காகத் தன்னை அர்ப்பணித்த நாற்பது பேரில் ஒருவனாய் நின்றிருக்கும் கலைஞர்களில் ஒருவன் கூட புகழின் எல்லையைத் தொடுவதில்லை. ஆனால் கலை என்ற காந்தம் அவர்களை விடுவதாகவும் இல்லை! ஒரே ஒரு மேடைக் காட்சிக்காக, பாடலுக்காக, நடனத்துக்காக, மிமிக்கிரிக்காக பல நூறு மைல்கள் தாண்டி வந்து தன் ஆற்றலைக் காட்டிக் ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கிடவேண்டும் என்ற நோக்கமே தலையாயது அவர்களுக்கு. நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீடு திரும்ப பணமில்லாமல் அலைக்கழிந்த பல கலைஞர்களைப் பொருட்படுத்தாத வக்கிர உலகத்தில் வாழ்கிறவர்தாம் நாம். கலை எந்த அளவுக்கு ஒருவனை பைத்தியமாக்கிவிடுகிறது என்பது சராசரி மனிதர்களுக்குப் புரிவதே இல்லை. கலைஞனைப் பொறுத்தவரை பொதுப்புத்திக்குப் அவர்களின் போக்கு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு வாழ்க்கையின் பரவசத் தருணம் ரசிகர்கள் வழங்கும் அந்தக் கைத்தட்டல்தான்! கலை ஈடுபாட்டின் மூலம் தங்கள் தேடலில் இன்பம் துய்த்து வாழ்வின் நிறைவை அடையும் அல்ப ஜீவிகள்தான் கலைஞர்கள்! பசியோ பணமோ முதன்மை நோக்கம் கொண்டவர்கள் அல்லர்.
இந்த சம்பவத்தை நினைக்கும்தோறும் அசோக மித்திரனின் புலிக்கலைஞன் சிறுகதை ஞாபகக் கதவைத் தட்டும். எஸ் ராவும், ஜெயமோகனும் தேர்ந்தெடுத்த நூறு சிறந்த சிறுகதைகளில் இந்த புலிக்கலைஞன் சிறுகதையும் ஒன்று. தமிழில் மிகச்சிறந்த பத்து கதைகளில் ஒன்றாக இதை நான் கண்டிப்பாய்ப் பரிந்துரைப்பேன்.
கதை இதுதான்.
சினிமா வாய்ப்புத் தேடி ஒரு புலி ஆட்டக் கலைஞன் ஒரு சினிமா ஸ்டுடியோயோவுக்கு வாய்ப்புக் கேட்டு வருகிறான். ஒரு காலத்தில் தேகப்பயிற்சி செய்த நல்ல உடற்கட்டோடு இருந்தவன் போலக் காட்சி தருகிறான். ஆனால் வறுமையின் காரணமாக அந்த அடையாளம் மட்டுமே எஞ்சியிருந்தது அவனிடம்.
“என்னப்பா வேணும்?” என்று கேட்கிறார் சர்மா. சர்மா சினிமாவுக்குக் கதை எழுதும் இலாகாவின் முக்கியஸ்தர். அவன் கடந்த வாரம் வெள்ளை சொல்லி சர்மாவைத் தேடி வீட்டுக்கு வந்ததாகச் சொல்கிறான். சர்மாவுக்குப் பிடிபடுகிறது. வெள்ளை சினிமாவில் கூட்டமாக நடிக்க உதிரிக் கலைஞர்களைத் தேடி ஆள்பிடித்துத்தரும் சினிமா ஏஜண்ட்.
நான் காதர், டகர் பைட் காதர் என்கிறான் அவன். முதலில் அவன் பேசுவது அவர்களுக்குப் புரியவில்லை. பின்னர் டகர் என்பதை குறிப்பறிந்து டைகர் என்று புரிந்துகொள்கிறார்கள்.
சினிமாவில் அதற்கெல்லாம் வாய்ப்பில்லியே, அப்படியே தேவைப்பட்டாலும் நிஜ புலியை வைத்து எடுத்துவிடுவோம் என்கிறார் சர்மா.
நான் நிஜப்புலிபோலவே நடித்துக் காட்டுவேன் என்கிறான் டகர் காதர்.
அது போன்ற காட்சி எடுக்கப்படுவதில்லையே, அதோ காஸ்டியும் அஸிஸ்டன் இருக்காரு, அவருகிட்ட உன் விபரத்த கொடுத்திட்டுப்போ, வாய்ப்பு வந்தா நாங்க கூப்பிடுறோம் என்று அவனை நிராகரிக்கப் பார்க்கிறார் சர்மா. ஆனால் அவன் விடுவதாய் இல்லை. சர்மா அங்கிருப்பவர்களில் முக்கியமானவர் என்று உணர்ந்து,” நீங்க சொன்னாதான் நடக்கும், சின்ன ரோல் இருந்தால் கூட போதும்,” என்று கெஞ்சுகிறான் காதர். சர்மா அவன் தொல்லையிலிருந்து விடுபடும் பொருட்டு, “உனக்கு நீந்த தெரியுமா?” என்று கேட்கிறார். அவன் கொஞ்சம் தெரியும் என்கிறான். “மேலேர்ந்து பாஞ்சி, நீஞ்சிப் போற மாதிரி ஒரு சீன்..அதற்கு நீ போறாது,” என்கிறார். அவன் கெஞ்சிக் கூத்தாடி தான் வந்த காரியத்தைச் சாதிக்க எண்ணி, எனக்கு டகர் பைட் நல்லா வரும் என்று விடாகண்டனாய் நிற்கிறான்.
அதென்ன டகர் பைட் என்று கேட்க புலி பைட்டுங்க என்று சொல்லிக் கொண்டே தான் கொண்டு வந்த பையிலிருந்து எங்கிருந்தோ ஒரு புலித்தலையை எடுத்து மாட்டிக்கொண்டு சற்று நேரத்தில் நிஜப்புலி போலவே காட்சியளிக்கிறான். நான்கு கால்களில் நின்று சிறுத்தைப்போல உறுமி சிலிர்த்தான். பாய்ந்து குதறுவது போன்ற சீற்றம், அசைவு. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அவன் உறுமலையும் சிலிர்ப்பையும் கண்டு அதிர்ந்து போகிறார்கள். காட்டில் பதுங்கி பாயக் காத்திருக்கும் சிறுத்தைப் போல தலையை அங்கும் மிங்கும் ஆட்டி பாய்ந்து மேலே இருக்கும் வெண்டிலேட்டர் கம்பியை எகிறிப் பிடித்து, மீண்டும் மேசை மேல் பாய்ந்து நான்கு கால்களில் நின்று சிறுத்தை போலவே உறுமி கூர்ந்து பார்த்து பாயக் காத்திருப்பது பாவனைக் காட்டி நின்றான். அவன் செய்கை வியப்பையும் அச்சத்தையும் வரவழைத்துவிடுகிறது. ஒரு அலுவலகத்துக்குள் நிஜப் புலி ஒன்று புகுந்து ரணகளப் படுத்தியதைப் போல ஒரு சில நிமிடங்களிலேயே செய்து காட்டிவிடுகிறான் காதர். நிஜத்தில் புலி அலுவலகத்துக்குள் நுழைந்தது போல அலுவலகம் ஒழுங்கு கலைந்து சிதறிக் காட்சி தருகிறது! சர்மாவும் பிற அலுவலக பணியாட்களும் பேஷ் பேஷ் என்று ஆரவாரம் செய்கிறார்கள். அவன் அங்குமிங்கும் தாவிப் பாயும் சாகசத்தைப் பார்த்துப் “பாத்துப்பா.. பாத்துப்பா” என்று மிரண்டும் போகிறார்கள். அவன் கண்களில் கூர்மையும் உடல் மொழியில் சீற்றமும் சற்றும் குறையவில்லை. அவர்களின் கண்களில் திரண்ட மிரட்சி இவன் ஒரு நிஜப் புலியாகவே மாறிவிட்டிருந்த பாதிப்பைக் காட்டியது. . தான் ஒரு புலிக் கலைஞன் என்பதை நிரூபித்துக் காட்டியவன் தன் ஒப்பனைக் கலைத்து மீண்டும் சாதுவான காதராக மாறுகிறான். காதரின் ‘ஆட்டத்தைப் பார்த்த சர்மா சரிப்பா வாய்ப்பு வந்தா கூப்பிடுறோம் என்று சொல்ல, காதர் தடாரென அவர் காலில் விழுகிறான். அவனைத் தேற்றியபடி
“சாப்பிட்டியா..” அவன் நலிந்த தோற்றத்தைப் பார்த்த சர்மா கேட்கிறார். இன்னும் இல்லை என்கிறான். “ந்தா மொதல்ல போய்ச் சாப்பிடு,” என்று பணம் தருகிறார். “வேண்டாம் சார் வாய்ப்புதான் வேணும்,” என்று ஒற்றைக் காலில் நிற்கிறான். “மொதல்ல போய்ச் சாப்பிடு , ந்தா வேணாம்னு சொல்லாதே , கொடுத்த பணத்த வேண்டாம்னு சொன்னா எப்படி லெட்சுமி நிக்கும் ஒங்கிட்ட” என்கிறார் சர்மா. “சார் என் பொஞ்சாதி என்ன விட்டுட்டு போய் வீட்டுப் பக்கமே வர்ரதில்ல சார், நாலு கொழந்தைங்க சார் எனக்கு, எனக்கு இதான் பொழப்பு பாத்து கொடுங்க சார்,” என்று கெஞ்சியபடி அழுகிறான் காதர். அவனை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை அவருக்கு. கொஞ்சம் இரங்கி “வாய்ப்பு வந்தா கண்டிப்பாச் சொல்றேன். பேரயும் விலாசத்தையும் கொடுத்திட்டுப் போ,” என்று உறுதியாய் சொல்ல காதர் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்கிறான். பணத்தை வாங்கிக்கொள்கிறான் காதர். காதரின் கலை ஆர்வமும் பதட்டமும் அவனின் இருத்தலியல் சார்ந்த மனச்சிக்கலை அழுத்தமாக காட்டும் வாழ்க்கைச் சித்திரத்தை அவரின் சுபாவம் வழி நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருந்தார் அசோக மித்திரன்.
அவன் போய்ச் சில மாதங்கள் கழித்து ஒரு படத்தில் புலி ஆட்டக் காட்சி வருகிறது. அதற்காகக் காதரை அவன் கொடுத்த முகவரியில் தேடுகிறார்கள். கிடைக்கவில்லை. எங்கெங்கோ விசாரித்தும் பார்த்து கிடைகாத பட்சத்தில் அவனைத் தேடுவதைக் கைவிடுகிறார்கள்.
காதர் நிரந்தர வருமானமில்லாதவன். பிழைப்பித் தேடி அலைபவன். புலி ஆட்டம் ஒன்றுதான் அவனுக்குத் தெரியும். எனவே முகவரி மாறியிருப்பதில் வியப்பில்லை. காதருக்கும் பணமெல்லாம் பெரிய விஷயமல்ல! தனக்குத் தெரிந்த கலையின் மூலம் அவன் புகழ்பெறவேண்டும். குறைந்தபட்சம் கைத்தட்டல் பெறவேண்டும். அதில்தான் அவனின் ஆன்மா நிறைவுகொள்ளும். ஆனால் வாய்ப்பு வரும்போது அதனைக் கூட பெறமுடியாத அலைக்கழியும் வாழ்க்கை அவனுடையது. பொதுவாக கலைஞரகள் வாழ்க்கையே லோல் படும் வாழ்க்கைதான்!
புலிக் கலைஞனை நினைவு கூரும் போதே கலை சம்பந்தமான பல கதைகள் இந்த வட்டத்திற்குள் நுழைந்து விடுகிறது. பாலகுமாரனின் கதை ஒன்று, ஒரு உண்மையான பயிற்சிபெற்ற குத்துச் சண்டை வீரன் சினிமா வாய்ப்பு கேட்டு வந்து ஒரு காட்சியில் நாயக நடிகனிடம் அடிவாங்குவான். அவன் நினைத்தால் அந்நடிகனை புரட்டி எடுத்திருக்க முடியும். ஆனால் சினிமாவில் தோன்ற வேண்டும் என்பதற்காக தன் திறமையைக் காட்ட முடியாமல் கேவலப் படுவான்.
எஸ், ராமகிருஷ்ணனின் கர்ண மோட்சம் குறும்படம் பார்த்தபோது நான் கண்ணீர் சிந்தினேன். நாடகக் கலை நலிந்து விட கர்ணனாக வேஷம் கட்டியவன் வாழ்க்கை கேள்விக்குரியாகிறது. நாடகக் கம்பனி நொடித்துப்போய் கலைத்துவிடுகிறார்கள். நடிகர்கள் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்கள். கர்ணன் மட்டுமல்ல பஞ்சபாண்டவர்கள், கௌரவர்கள் துணைப் பாத்திரங்கள் எல்லாருமே நாதியற்றுக் கிடக்கிறார்கள். இதில் நாடக வாழ்க்கைக்குப் பிந்திய கர்ணனனின் நிலையை சொல்லும் குற்ம்படம்தான் கர்ண மோட்சம். தனக்குத் தெரிந்த கலையை வைத்து பசியைப் போக்கலாம் என்று முடிவெடுக்கிறார் கர்ணன். நாடகக் கலையில் நெடுங்காலம் இருந்தவர்களுக்கு பிழைக்க அதை விட்டால் வேறு ஒன்றும் தெரியாது! ஒரு பள்ளியில் மாணவர் முன்னிலையில் நடித்துக் காட்டி கொஞ்சம் சில்லரை பார்க்கலாம் என்று தலைமை ஆசிரியரை அணுகுகிறான் கர்ணன். முதலில் அதற்கு வாய்ப்பு குறைவு என்று தலைமை ஆசிரியர் சொல்லியதும் தன் வறுமையை நிலையை விவரித்துச் சொல்லிக் கெஞ்சுகிறார். அதனால் கொஞ்சம் மனம் இரங்கிய தலைமை ஆசிரியர் ஒரு தேதியில் வரச் சொல்கிறார். குறிப்பிட்ட நாளில் வீட்டிலேயே வேஷம் போட்டு ஒப்பனை செய்துகொண்டு தெருவில் நடந்தே பள்ளிக்கு வருகிறார். கூடவே அவன் மகளும் அவனோடு விடாப்பிடியாய் ஒட்டிக்கொள்கிறாள். அவள் ஒரு நிபந்தனையை வைக்கிறாள் தன் தந்தையிடம். தனக்கு இன்னின்ன உணவுப் பண்டமும் விளையாட்டுப் பொருட்களும் வாங்கித் தரவேண்டும் என்ற நிபந்தனை. கர்ணன் ஒப்புகிறான். பள்ளியை அடைந்தவனுக்கு துரதிர்ஸ்ட்ட வசமாக ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பள்ளிக்கு அன்று விடுமுறை. மூடிக்கிடக்கிறது! பள்ளி நிர்வாகத் தலைவர் இறப்பின் காரணமாக. கர்ணன் பதறிப்போய் தலைமை ஆசிரியர் வீடு தேடிப் போய்க் கேட்கிறார். தலைமை ஆசிரியரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம் என்கிறார். கர்ணம் மனம் உடைந்து வெளியேறுகிறான். கர்ணனின் இக்கட்டான நிலைமை புரியாத மகள் தன் கோரிக்கையைச் சொல்லி அடம்பிடிக்கிறாள். அவளிடம் என்ன காரணம் சொல்லியும் புரிய வைக்க முடியவில்லை. கையில் ஒற்றைக் காசுகூட இல்லாத கர்ணன் மனதுக்குள்ளே கண்ணீர் வடிக்கிறான். ஒரு பக்கம் தொல்லை தரும் மகள் இன்னொரு பக்கம் அவன் கற்ற கலை அங்கீகரிக்கப் படாத இக்கட்டு. தான் கசடற கற்ற கலையைத் தூக்கித் தெருவில் வீசப்பட்ட அவலம். தோல்வியின் விரக்தியோடும் வெறுங்கையோடும் கர்ணன் வீட்டுக்குத் திரும்பும் காட்சியில்தான் வாசகனும் கர்ணன் போலவே நிலைகுலைந்து போகிறான். கர்ணன் தான் கட்டியிருந்த வேஷத்தால் இனி தனக்கு வாழ்வில்லை என்று வ்ரக்தி கொண்டு தன் அங்க வஸ்த்திரம் முதற்கொண்டு ஒவ்வொரு உடையையும் கழட்டிக் கழட்டி தெருவிலேயே வீசியபடி நடந்து போய்க்கொண்டே இருக்கிறான். இந்தக் கட்டத்தில்தான் நான் என்னையறியாமல் குமுறி அழுதுவிட்டேன்.
பொதுவாகவே கலைஞன் எதிர்கொள்ளும் பிரச்னை அவன் கற்ற கலைக்குச் சமூக அங்கீகாரம் இல்லாமையே. எல்லா வகைக் கலைக்கும் நம் சமூகம் கொடுக்கும் மரியாதை மிகச் சொற்பமே. சினிமா மட்டும் இதற்கு விதிவிலக்கு. எல்லாக் கலைக்கும் கிடைக்க வேண்டிய பணம் பொருள் மரியாதை அங்கீகாரம் பாராட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவே குவித்துக் கொள்கிறது. ஆனால் சினிமா ஒரு பொய்த்தோற்றம் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்வதில்லை. கண் பார்க்கும் கலர் மயக்கத்தில் அந்தப் போலியை மறைத்துவிடுகிறது.
அசோக மித்திரனின் காதர் காட்டிய நிஜப் புலியை சினிமாவில் ஜெயிக்க முடியாது. அப்படியே காதரைத் தேடிக் கண்டுபிடித்திருந்தாலும் புலி வேஷம் கிடைக்கவிருந்த அரிய வாய்ப்பு நழுவித்தான் போயிருக்கும். ஏனெனில் அந்தக் காட்சியை கடைசி நேரத்தில் நீக்கி அப்போதைக்குப் பரபரப்பாகப் பார்க்கப்பட்ட வேறு ஒரு படத்தின் காட்சி ஒன்றை நகல் எடுத்து நிரப்பி இருந்ததுதான் காரணம்.
அழிந்து வரும் உதிரிக்கலைகளுக்குச் சமூக மரியாதை கிடைப்பதில்லை. பெரும்பாலும் மேல்தட்டு சமூகப் பிடியில் இருக்கும் பரதம் சங்கீதம் போன்ற கலைகள் நீடித்த ஆயுளைப் பெறுகின்றன. ஆனால் அடித்தட்டு மக்களின் நாட்டுபப்புறக் கலை பொருளாதார பலமற்று அழிவின் விளிம்பில் இருக்கின்றன. சொந்த உறவுகள் கூட மதிப்பிழந்த, பொருளாதாரம் ஈட்டுத் தரமுடியாத கலையை உதாசினப் படுத்துகிறார்கள். காதரின் மனைவி வீட்டுக்குத் திரும்ப வராமைக்குக் காரணம் காதரின் நாட்டுப்புற கலை வருமானம் ஈட்ட முடியாத கலை என்பதாலன்றி பிறிதொரு காரணம் இருக்க வாய்ப்பில்லை. மதிப்பிழந்த கலையில் ஈடுபாடு கொண்ட உதிரி மனிதர்கள் படும் அவஸ்தையை மிக அழகுற காட்சிப்படுத்திய கதை அசோகமித்திரனின் ‘புலிக்கலஞன்’.
Comments