3
மதியம் 12.30 மணிக்குக் தேக்காவின் அப்போலோ கடையருகில் காத்திருப்பதாகச் சொல்லியிருந்தாரபொன்சுந்தரராசு. அதற்கான இட வரைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். நான் ஊட்லண்ஸ் ரைசிலிருந்து கிராப் எடுத்து அரை மணி நேரத்தில் அப்போலோவை கடையை அடைந்திருந்தேன். அவர் வெளியே நின்றிருந்தார்.
"டீ சாப்பிட்டுவிட்டு போலாம்" என்று அழைத்தார். நான் பசியாறிய பின்னரும் சாப்பிட்ட பின்னரும் டீ அருந்துவதில்லை என்றேன்.(இதெல்லாம் எதற்கு என்று கேட்பவர்க்கு. என் வரலாறை எழுத நேர்ந்தால் அதில் சேர்த்துக்கொள்ளத்தான். வேறதற்கு?)
அங்கிருந்து ஷானாவாஸ் கடைக்கு அவர் காரில் பயணப்பட்டோம். தேக்காவில் இறங்கவில்லை. கடைத்தெருவில் எதுவும் வாங்குகிற சக்தியை என் மலேசிய ரிங்கிட் இழந்திருந்தது.
சரியாக மணி 1.00க்கு ஷானவாஸ் கடையை அடைந்தோம். அது நாசி கண்டார் கடை. ஷானாநாஸ் வரவேற்று சிராங்கூன் டைம்ஸ் பொன்விழா இதழைக் கொடுத்தார்.ஆண்டடிதழ் என்றதால் தடினமாக இருந்தது. வழவழப்பான தாளின் தெளிவான எழுத்தில் வெளியாகும் இதழ். தரமான படைப்புகள் வாசிக்கக் கிடைக்கின்றன. சிங்கப்பூர் திணையின் வரலாற்றை, பண்பாட்டை, அதன் பின்புலத்தில எழுதப்பட்ட புனைவுகளைத் தாங்கி வரும் இதழ். சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அரக்கட்டளை இதழியல் செலவுகளைக் ஏற்றுக்கொள்கிறது. எம் ஏ முஸ்தபா மிகுந்த தமிழ்ப்பற்றாளர். அனைத்துலக ரீதியில் கல்விக்காகவும் மொழி இலக்கியத்துக்காகவும் அவருடைய பங்களிப்பு அளப்பரியது.
பொன் சுந்தரராசு, கோ.புண்ணியவான், ஷானாநாஸ்சற்று நேரத்தில் லதா வந்து சேர்ந்தார். கடையின் உள்ளே போய் அமர்ந்து சிங்கை மலேசிய இலக்கிய வளர்ச்சிபற்றி நிறைய பேசினோம். லதா மலேசிய சிங்கை இலக்கிய வளர்சிதை மாற்றங்களை விரல் நுணியில் வைத்திருப்பவர். எனக்கு மலைப்பாய் இருந்த விடயம் சிங்கப்பூர் பழம்பெரும் எழுதாளர்கள் பற்றிய குறிப்பை அவர் சொன்னது. மா.இளங்கண்ணன் இன்றைக்கு 80 வயதுக்கு மேல் ஆனவர். அவர் எழுதி, சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு பிரத்தியேகமாக குமுதத்தால் நடத்தப்பட்ட போட்டி யில், கொடுக்கப்பட்ட ஒரே பரிசு பெற்ற ஒரு சிறுகதையைப் பற்றி பேசினார்.அதனை நானும் வாசித்திருந்தேன். கதை சிங்கை தைப்பூசத்தை மையமிட்டதாக நினைவு என்றேன். அவர் இன்னும் துல்லிதமாகச் சொன்னார். சிங்கை தைப்பூசத்தில் சீனர் நேர்த்திக் கடன் செலுத்த காவடி எடுத்த கதை என்றார். பிற விடயங்களும் பேசினார். என் கையறு நாவல் பற்றி சிலாகித்துப் பேசினார். அங்கேயே சாப்பாடு. சுவையாகவும் சுத்தமாகவும் இருந்தது. தன் படம் எதிலும் வரக் கூடாது என்று முன் எச்சரிக்கை விடுத்தார் லதா.
ஒரு இரண்டு மணி நேரம் இலக்கியக் கலந்துரையாடல் நடந்தது. ஷானாவஸ் கடை வேலையில் பரபரப்பாக இருந்தார். கடையையும் பார்த்துக்கொண்டு சிராங்கூன் டைம்ஸையும் கொண்டு வந்து விடுகிறார். அவருக்குப் பக்கபலமாக இருக்கும் படையும் பாராட்டுக்குரியது. கடைசியில் வந்து கலந்துகொண்டு உரையாடினார். கையறு நாவலைப் பற்றி வாசகர் வட்டம் சார்பாக கலந்துரையாடல் நடந்த முடியவில்லையென்றாலும் எங்கள் நால்வர் நிகழ்ச்சி அதனை ஈடு செய்தது.
அதனை அடுத்து மாயா இலக்கிய வட்ட நிகழ்ச்சி ஒன்று நடக்கவிருந்தது. முடிந்தால் அதில் கலந்து கொள்ளுங்கள் என்று லதா அழைத்தார். ஆனால் என் பயண நேரத்துக்கு அது இடையூறாக அமைந்ததால் அந்த நல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது.
எனக்கு அவர் எழுதி வெளியிட்ட 'சீனலெட்சுமி' சிறுகதைத் தொகுப்பை கொடுக்க ஒரு பிரதி ஷானவாஸிடம் இருக்குமா என்று கேட்டார். ஷா தேடிப்பார்த்து இல்லை என்றார். சுந்தரராசு காரிலிலேயே அவரை வீட்டுக்கு கொண்டு சென்று சீனலெட்சுமி நாவலைக் கையில் கொடுத்தார். என் கையறு நாவலில் கையொப்பம் வாங்கிக்கொண்டார். அங்கிருந்து நேராக நான் தங்கியிருந்த ஊட்லண்ட்ஸ் ரைசுக்கு புறப்பட்டுச் சென்றோம்.
இந்த இரண்டு நாட்களும் பொன் சுந்தரராசு என்னை அன்பு மாறாமல் கவனித்துக்கொண்டார். முருகு சுப்ரமணியம் ஆசிரியராக இருந்த காலத்தில் தமிழ் நேசன் (1970 கடைசிகளில் பவுன் பரிசுத் திட்டம் ஆரம்பித்தபோது அவர் கதை ஒன்று பவுன் பரிசு பெற்றிருக்கிறது. சமீபத்தில் அவர் எழுதிய நூலைப் பற்றி சிங்கப்பூர் எழுத்தாளர்கள் விதந்தோதுவதைக் கேட்க முடிந்தது. இரண்டாம் உலக யுத்த காலத்தில் சிங்கை மக்கள் மாநுடவதைக்கு ஆளானதை மையமிட்ட நாவல். நிறைய சம்பவங்கள் நடந்த இடத்தையும். சம்பவங்களையும் சொல்கிறது.
. சிங்கப்பூரில் பொதுப் போக்கு வரத்து மிக நேர்த்தியான கட்டமைப்பைக் கொண்டது. எல் ஆர் டி, பேருந்து பணம் மலிவானது. அவர் பொதுப் போக்குவரத்தைத்தான் அதிகம் பயன்படுத்துவதாகத்தான் சொன்னார். சிங்கப்பூரில் கார் வைத்திருப்பது மிகுந்த செலவீ னம் தரக் கூடியது என்றார். பொதுப் போக்கு வரத்து குறையில்லாமல் இருப்பதனாலேயே சொந்தக் கார் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று பலர் கருதுகிறார்கள்.
மலேசியாவின் நிலை அப்படியல்ல . உள்ளூர் கார் விற்பனையாகவேண்டும் என்ற காரணத்தால் வாகனக் கடன் கொடுப்பதை அதிகரித்தார் மகாதிர். அரசு, அரசாங்க அதிகாரிகளுக்கும், வங்கிகள் தனியார் வேலையாட்களுக்கும் வாகனக் கடனை வாரி வழங்கின. அதனால் நடுத்தர பட்டணங்களில் கூட காலையிலும், மதிய உணவு நேரத்திலும் வாகன நெரிசலில் சிக்கி விழிபிதுங்க நேரிடுகிறது.
நான் இரவு எட்டு மணிக்குள் சாங்கி விமான நிலையத்தில் இருக்க வேண்டும். இம்முறை பேருந்தில் பணம் செய்யலாம் என்று முடிவெடுத்தேன். சிங்கைப் பணம் இரண்டரை டாலர் கட்டணம்தான். ஒரு மணி நேரத்தில் விமான நிலையத்தில் அலுங்காமல் குலுங்காமல் கொண்டு போய் விட்டு விடுகிறது. இடையில் பத்து பதினைந்து பஸ் நிறுத்தங்களில் நின்று பயணிகளை ஏற்றிக்கொள்கிறது. பேர்ந்து சாங்கி விமான நிலையத்திஅ அடையுமுன்னர் 2 இடங்களில் தீவிர பரிசோதனை நடக்கிறது. அதனால்தான் ஒரு மணி நேரம் பிடிக்கிறது.
சாங்கியில் என் மைசெஜாஹ்த்ரா இணைய படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்யாததால் 15 நிமிடம் வீணானது.சுங்கப் பரிசோதனை கௌண்டரில் தவறுதலாக திறந்த வாக்கில் நுழைக்கவேண்டிய பாஸ்போர்ட்டை மூடிய வாக்கிலேயே திணித்துவிட்டேன். அது முழு பாஸ்போர்ட்டையும் உள்வாங்கிக்கொண்டது. எளிதில் எடுக்க முடியவில்லை.finish lah you என்று அச்சுறுத்திவிட்டான் ஒரு அதிகாரி. இரண்டு பெண்களிடம் கொண்டை ஊசி கேட்டுப்பார்த்தேன். இல்லை என்று தலையாட்டிவிட்டுச் சென்றுவிட்டனர். என்ன தமிழ்ப் பெண்கள் இவர்கள்!. கொண்டை ஊசியோ ஊக்கு இல்லாமல் பயணம் செய்யும் பொறுப்பற்றவர்கள்! கடைசியில் ஒர் ஆடவர் சிம் கார்ட் மாற்றும் பின்னைக் கொடுத்து எடுக்க வைத்தார். எளிதில் எடுக்க முடியவில்லை. மற்றபடி வேறெங்கும் தடங்கள் இல்லை. சரியாகப் 10.20க்கு ஏர் ஆசியா விமானம் பினாங்கை நோக்கிப் புறப்பட்டது.
நள்ளிரவு12.00க்குள் பினாங்கின் தரை தட்டியது. என்ன! நான் வரும்போது விமான வரிவிலக்குக் கடைகள் அடைத்துக்கிடந்தன. தேவர்களை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும் திரவ வகைகளை வாங்க முடியவில்லை. ஒரு வருத்தம்தான்!
முதல் நாள் ஒத்தாசையாய் இருந்த சம்பந்தி இன்றும் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
முற்றும்.
Comments