Skip to main content

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை



சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகளின் கீச்சொலிகள்

பயணக்கட்டுரை


2.

நான் தேசிய நூலக வாசலை அடைந்தபோது சுந்தரராசு அங்கில்லை. சற்று நேரம் காத்திருந்துவிட்டு நூலகத்தின் 5 வது மாடிக்கு போய்விட்டேன். இன்பா என்னை அடையளம் கண்டுகொண்டு வரவேற்றார். மாலை 5.30க்கெல்லாம் பாதி மண்டபம் நிறைந்துவிட்டிருந்தது. நண்பர் அலைக்கழிவாரே என்று நினைத்து மீண்டும் கீழ் தளத்துக்கு ஓடிவந்தேன்.இரண்டாவது மாடியிலிருந்து பார்க்கும்போதே அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டிருப்பது தெரிந்தது. என்னிடம் சிங்கப்பூர் எண் இல்லை என்று அவருக்குத் தெரியாது. கீழே இறங்கி சந்தித்தேன். "நா ரெண்டு வாசல்லியும் போய் பாத்துக்கிட்டெ இருந்தேன் " என்றார் படபடப்போடு. எதிர்ப்புறம் இன்னொரு நுழைவாயில் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். 

சிங்கப்பூர், சிறிய ஊராக இருந்தாலும் நூலகங்களின் எண்ணிக்கை  20 க்கு மேல். ஒவ்வொரு நூலகத்துக்கும் தமிழ் நூல்கள் தலா இரண்டு வாங்கப்படுகின்றன. என் 'செலாஞ்சார் அம்பாட் ' நாவலும் 'கையறு'வும் அங்கே வாசிக்கக்கிடைக்கும். மலேசியாவில் எப்படி என்று கேட்கிறீர்களா? வேண்டாம் எதற்கு வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டும்.இங்கே மலாயாப் பல்கலை மட்டும் 2 நூல்கள் வாங்கிக்கொள்ளும் . நூலகங்கள் திறக்கப்படும்போது சிறைச்சாலைகளை மூடப்படுகின்றன என்பது ஒரு பிரசித்திபெற்ற வாசகம். நூலகம் நவீன குருகுலம் மாதிரி. வாசிப்பவர்கள் ஆளுமைகளாக உருவாகிறார்கள். ஆளுமைகளால் கருத்துப் பகிர்வு நடக்கிறது. கருத்தியல் ரீதியான விவாதங்கள் நாட்டை மென்மேலும் முன்னேற்றக் கூடிய தேர்ந்த கருத்துகளாக உருவாகின்றன. இன்றைக்கு சிங்கப்பூர் முதல் உலக நாடுகள் பட்டியலில் சேருவதற்கான் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன, அதற்கெல்லாம் முக்கிய காரணிகளில் ஒன்று நூலகங்கள் மூலம் ஆளுமைகள் உருவாக்கமே.

  இந்தத் தேசிய நூலகம்தான் மிகப்பெரியது.ஒரு 5 நட்சத்திர விடுதி போன்ற அமைப்பு கொண்டது. இன்பா நூல் வெளியீடு நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தில் 300 பேருக்குமேல் உட்காரலாம்.கட்டடத்தில் பலவேறு தளங்கள் எல்லாவித கலை வளர்வதற்கான அமைப்பைக் கொண்டது.

இருவரும் மேல் தளத்துக்குச் சென்றோம். பேராசிரியர் சுப. தின்னப்பன், புதுக்கவிதைத் தேனீ அன்பழகன் , முனைவர் ஶ்ரீ லெச்சுமி  என எனக்கு முன்னரே அறிமுகமான ஆளுமைகள் அமர்ந்திருந்தனர். 

என் கண்கள் இளங்கோ கிருஷ்ணனையும், பிச்சினிக்காடு இளங்கோவையும் அலசியது. கண்களில் படவில்லை. இன்பாவைக்கேட்டேன். இருவரும் வர முடியவில்லை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். சித்ரா பிரதிநிதியை அனுப்பி தன் கருத்தை வாசிக்க வைத்தார். அப்படியானால் நானும் சித்துராஜ் பொன்ராஜ் மட்டுமே பேசப்போகிறோம் என்றாகிவிட்டது.

நிகழ்ச்சி தொடக்கமாக சில மாணவிகள் இன்பாவின் கவிதையை ஒப்புவித்து அதற்கான புரிதலைப் பகிர்ந்துகொண்டார்கள். கவிதைகளை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அவர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சியை மனதுக்குள் பாராட்டினேன். ஒப்புவித்த கவிதைகளை அவர்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பதையும் சொன்னார்கள்.   இலக்கிய நுழைவுக்கு அது ஒரு நல்ல  தொடக்கம்.

சுந்தர ராசு சொன்னார் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சி தொடங்கிவிடும் என்று.சிங்கப்பூர் நேர நிர்வாகத்தில் கண்டிப்பாக இருக்கும் காரணத்தாலும் அதன் பொருளாதார வளர்ச்சி பிரமிக்கும் வகையில் முன்னேறிக்கொண்டிருக்கிறது. நம்ம போலெஹ் நாடு இதையெல்லாம் எப்போது கற்றுக்கொள்ளப்போகிறதோ? இன்றைக்குள்ள அந்நியசெலாவணிக்கு நம் ரிங்கிட் 3.20 கொடுத்தால்தான் சிங்கப்பூரின் ஒரு டாலர் மதிப்பை அடையும். நாளுக்கு நாள் இங்கே இறக்கமும் அங்கே ஏற்றமும்.  ஏன்? அரசியல்வாதிகளிடம் அவ்வளவு ஊழல் இங்கே.

இளங்கோ கிருஷ்ணன் திரையில் தோன்றி இன்பா தன் கவிதைகளில் காட்டும் நவீன திணைகள் பற்றிப் பேசினார். பீச்சினிக்காடு இளங்கோவும் பிச்சினிக் காட்டிலிருந்தே


இன்பாவின் இலக்கிய சேவை பற்றியும் கவிதைகள் பற்றியும் பேசினார். பிச்சினிக் காட்டில் அவர் புல்லட் மோட்டார் சைக்களில் கையூன்றியபடியே பேசியது எனக்குப் பிடித்திருந்தது. பின்னால் பச்சைக் காடு செழிப்பாய் விரிந்திருந்தது.

பொன் கோகிலம் அறிவிப்பாளராக இருந்தார். நான் அரை மணி நேரம் இன்பா கவிதைகளைப் பற்றிப் பேசினேன். அடுத்து சித்துராஜ் பொன்ராஜ் பேசினார். பின்னர் இருவர் மட்டுமே கலந்துரையாடினோம். பொன் கோகிலம் சில வினாக்கள் தொடுக்க அதற்கான பதிலாகவே கலந்துரையாடல் நடந்தது. இதில் மிகப் புராதனமானது  மரபுக் கவிதைகளா நவீனக் கவிதைகளா என்ற வினா. ப்திலும் புராதனமானதாகவே தந்தோம்.

நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மலேசியாவில் நடப்பது போல அமைச்சர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ அழைக்கப்படவில்லை. மலேசியாவைப்போல நூல் எழுதியவர் ஓரங்கட்டப்பட்டு  பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கும் பண்பாடு அங்கில்லை. கூனிக் குறுகள்/ தேவையற்ற அரசில ஆலாபனைகள்/அதனால் உண்டாகும் நேர விரையம், பொன்னாடை மாலை என எதுவும் கிடையாது. எழுத்தாளர்களுக்கே முதன்மை பீடம் வழங்கப்படுவதை ஒரு பண்பாடாகக் கொண்டிருக்கிறார்கள். நான் முன்னர் கலந்துகொண்ட சில நிகழ்ச்சிகளிலும் இதுதான் நடந்தது. அங்கே அருதியாக அப்படி நடப்பதில்லை என்று சொல்லிவிட முடியாது.

நிகழ்ச்சியின் முக்கிய வரவாக திணைகள் இணைய இதழ் தொடக்க விழா கண்டது. கவிதைக்கான சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புத்தம் புதிய இதழ். கவிஞர் பெருந்தேவி அதிகாரப் பூர்வமாகத் திறந்து வைத்தார். மலேசிய கவிஞர்கள், பூங்குழலி, முனியாண்டி ராஜ், ம.கனகராஜன் கவிதைகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன, மலேசியக் கவிதைகள் பற்றிய என் கட்டுரையும் பதிவாகியிருக்கிறது. பலரிடம் புலன கவிதை கேட்டேன் தரவில்லை. பட்டர்வர்த்திலிருந்து ஒரு அறி ஜீவி கேட்டார், ஏன் புண்ணியவான் பத்திரிகை படிக்க மாட்டாரொ என்று. அவர் பத்திரிகை மட்டுமே படிக்கும் ஈடுஇணையற்ற வாசகர் என்று சொல்ல வேன்டியதில்லை! நான் தயார் செய்து சென்றதில் 70 விகிதம் பேசினேன். ஐந்தாறு எழுத்தாளர்கள் என் பேச்சு சிறப்பாய் இருந்தது என்று சொன்னார்கள். நான் நம்பினேன். அவர்களில் சிலரை அபோதுதான் எனக்கு அறிமுகம் என்பதால். 


வல்லினத்தில் எழுதும் கே. முகம்மது ரியாஸ் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவரின் அத்தர் கதையை வாசித்திருந்தேன் . கதையை நகர்த்திச் செல்லும் வீச்சு வித்தியாசமாக இருந்தது. தமிழ்ச் சிறுகதை உலககுக்கு ஒரு பாய்ச்சலான வரவாக இருப்பார் என்று மதிப்பிடலாம். மதிக்குமார் தாயுமானவரைச் சந்தித்தேன். முகநூலில் அவர் கவிதைகளை ரசித்து வாசிப்பவனாக இருந்தேன். அழகுநிலா, ஹேமாவையும் நிகழ்ச்சியில் சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசினேன். 'அம்பரம்' நாவல் எழுதிய ரமா பிரபா ஒரு புன்னகையோடு கடந்துவிட்டார். மற்ற எழுத்தாளர்கள் முகங்களைப் பார்த்ததாக நினைவு.

பெருந்தேவியிடம் இரண்டொரு வார்த்தை பேச முடிந்தது. "உங்களை நான் அய்யா நொய்யா என்றெல்லாம் அழைக்கமாட்டேன்" என்றார். அய்யா என்று அழைக்கும்போது எனக்கு வயதாகிவிட்டது என்று சொல்வதாகவும் படும் என்றேன். நிகழ்ச்சி முடிந்து இன்பா பிற எழுத்தாளர்களோடு கடையில் விருந்துக்கு அழைத்தார். நான் மண்டபத்திலேயே பலகாரங்கள் சாப்பிட்டுவிட்டேன் என்று சொன்னேன். அதுவே இரவு உணவாகிவிடும்.

அது முடிந்து சுந்தர ராசு  அவர் காரிலேயே நேராக என்னை வூட்லண்ஸ் ரைசுக்கு அழைத்துச் சென்றார். அவருடைய காரின் இடம்காட்டி (வேஸ்) வேலை செய்யவில்லை. பின்னர் கைப்பேசியை இயக்கி  கொண்டு போய்ச் சேர்த்தார். அப்படியும் சில தடமாற்றங்கள் நிகழத்தான் செய்தது. அவர் இறக்கிவிட்டுப் போனவுடன் நான் வேறொரு அடுக்கு மாடியில் ஏறிவிட்டு அலைய வேண்டியதாயிற்று. என்னிடம் சிங்கை தொடர்பு எண் இல்லாததால் மருமகனை தொடர்புகொள்ள முடியவில்லை. எதிர்பட்டவரை கேட்ட பின்னர் எதிரே உள்ள கட்டடம் என்றனர். நவீன உலகில் தொடர்பு சாதனமில்லாமல் வாழ முடியாது என்ற நிலை பரிதாபகரமானதுதான்.

மறுநாள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பர் சுந்தர ராசு மதிய உணவுக்கு அப்போலோ போகலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார். அது தவிர முழுநாளும் ஓய்வு. இரவு 10 மணிக்கே திரும்பப் பயணம். ஷாநவாஸ் தலைமையில் நடக்கும் வாசக சாலை அமைப்பில் என் கையறு நாவல் கலந்துரையாடல் நடத்த இயலுமா எனக் கிளம்புவதற்கு முன்னர் கேட்டு வைத்தேன். ஆனால் குறுகிய கால அவகாசமாக இருந்ததால் அது நடத்த முடியாமல் போயிற்று என்று சொன்னார்.


நான் ம. நவீனுக்கு மேசேஜ் செய்தேன். நவீன்தான் நான் சிங்கை நுழைவதற்கான புதிய விதிமுறைகளைச் சொன்னார். அதற்காக சில படிவங்களை பூர்த்திசெய்து முன்னமேயே பதிவேற்றிவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.அவர் ஒரு வாரத்துக்கு முன்னமேயே ரமா பிரபாவின் அம்பரம் நூல் அறிமுகம் செய்யச் சிங்கப்பூர் சென்று வந்தார். அவர் சிங்கப்பூர் தமிழ் முரசு ஆசிரியர் லதாவைத் தொடர்பு கொண்டு என்னோடு பேசும்படி பணித்தார் போல. அவரிடமிருந்து ஒரு தகவல் கைப்பேசியில் மின்னியது. லதா சிங்கப்பூரின் மிக முக்கியமான எழுத்தாளர். சின்ன வயசிலேயே ஶ்ரீலங்காவிலிருந்து குடியேறியவர். இப்போது சிங்கையின் நிரந்தர குடிமகள். ஆகக் கடைசியாக 'சீன் லெச்சுமி" கதை தோகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். எனக்கு சப்பானிய ஆதைக்க காலத்தில் கெம்பித்தாய்களுக்கு பயந்த சீனர்கள் தங்கள் கைக் குழந்தைகளைக் காப்பாற்றும் பொருட்டு பதுகாப்பாக இந்தியர்களிடம் ஒப்படைத்த எண்ணற்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்தன். எத்தனை சீன லெட்சுமிகள். சீன லெச்சுமனன்கள்?  அவர் ஷாநவாஸ் கடைக்கு மதிய உணவுக்கு அழைத்தார்.நான் சுந்தர ராசுவோடு விருந்துக்குப்போகிறேன் என்று சொன்னேன். நான் அவரோடு பேசிக்கொள்கிறேன் நீங்களும் அவரும் அங்கே வந்துவிடுங்கள் என்று அன்புநிறைய  அழைத்திருந்தார்.

மறுநாள் அங்கே சந்திப்பு ஏற்பாடாகியது.


குருவி தொடர்ந்து தலைக்கு மேல் பறக்கும்.....


Comments

Unknown said…
தங்கள் பயணமும் படைப்பும் படித்தேன். தொடரட்டும் இலக்கியம். ஒப்பீடு உண்டு. அதில் உண்மையும் உண்டு.
ma.kana said…
இலகுவாகச் செல்கிறது கட்டுரை. பயணம் முழுதும் இலக்கியப்பூக்களின் வாசம்

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...