Skip to main content

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை

சிங்கப்பூரில் லாயாங் லாயாங் குருவிகள். பயணக் கட்டுரை

பயணக் கட்டுரை





            21.5.2022 காலை 4.30 மணிக்கு சிங்கப்பூர் பயணத்துக்கான் டிக்கட் கையில் கிடைத்தபோது  மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.  இலக்கியம் சார்ந்தது அந்தப் பயணம் என்பதால் உண்டான பரவசம் அது. கோவிட் காலத்தில் அனைத்துலகக் கதவுகள் மூடப்பட்டு பயணம் தடைபட்டது பயண விரும்பிகளுக்கு ஒரு பெரிய பின்னடைவு, பயணம் மீண்டும் சாத்தியமானபோது ஆர்வம் கொப்பளித்தது.

 ஆனால் அந்தப்பயணத்துக்கான நாள் நெருங்க நெருங்க எனக்கு பதட்டம் அதிகரித்தது. ஏனெனில் 4.30 மணி பறத்தலுக்கு காலை 2.30 மணிக்கே விமானத் தளத்தில் போய் நின்றுவிடவேண்டும். அத்தனை கருக்கலில் எழுவது என்பது என் வழக்கத்துக்குச் சாத்தியப்படாத ஒன்று. எனக்கு ஒவ்வோரிரவும் காலை 4.00 மணி தொடங்கிய பிறகுதான் உறக்கமே வரும். நான் சியாட்டிகா என்ற முதுகெலும்பு நகர்ச்சி நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். இந்த நோய் வலி பகலெல்லாம் வந்து தொலைந்தால் பாரவாயில்லை. ஆனால் நள்ளிரவுக்குப் பிறகு தன் நாட்டியத்தைத் தொடங்கி 4.00 மணி வரை இழு பறியில் இருக்கும். எங்கே தூங்குவது. நான்கு மணிக்கு மேல் என்னைப்பீடித்த அந்தப் பேய் "சே , இந்த வயசானவனைப் பாத்தா பாவமா இருக்கு," என்று விட்டு விலகிவிடும். அதன் பின என் விழிப்பே சூரியன் சூடேறிய 9.30 மணிக்குத்தான். இந்த நிலையில் நான் எப்படி கருக்கல் 2.30 மணிக்கு டான் என்று போய் அங்கு நிற்பது? ஆனால் தூக்கம் தள்ளிப்போவதை உடல் பழகிக்கொண்டது.நான் பழகிக்கொள்ளவில்லை.

 

இலக்கியத்துக்காக விடிய விடிய விழித்திருப்பது சுகமானதுதான்.ஆனால் மறுநாள் முழுதும் உடல் சோர்வில் விழுந்துவிடும். 

சிங்கப்பூரில் வசிக்கும் கவிஞர் இன்பா ஒரு முறை என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

அவர் தலைமை ஏற்றிருக்கும், கவிமாலை நிகழ்ச்சியில் என்னைப் பேச அழைத்தார் ,சிங்கப்பூர் கவிதைகள் பற்றி முக்கால் மணி நேரம் நடக்கும் ஒரு மெய்நிகர் நிகழ்ச்சி அது. திங்கள் தோறும் கடைசி சனிக்கிழமை நடைபெறும். அந்த அழைப்பே இந்தப் பயணத்துக்கான தொடக்கப் புள்ளியாக அமைந்துவிட்டிருந்தது. இலக்கியம் ஏதோ ஒரு வகையில் அறிமுகமே இல்லாத நபரோடு தொடர்புறுத்தும் மாயத்தைச் செய்துவிடுகிறது. அன்று கலந்து கொண்டு பீச்சினிக்காடு இளங்கோவின் ஒரு கவிதையையும் இன்பாவின் ஒரு கவிதையையும் தொட்டு ஒரு 35 நிமிடங்கள் பேசினேன். நல்ல ஆதரவும் பாராட்டும் கிடைத்தது. அந்த நிகழ்ச்சி நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் மீண்டும் சிங்கப்பூருக்கு அழைத்தார் இன்பா. அவர் எழுதிய லாயாங் லாயாங் குருவிகளின் கீச்சொலிகள் கவிதை நூல் கலந்துரையாடலில் என்னையும் ஒரு கருத்துரையாளராக கலந்துகொள்ளும்படி அழைத்தார். நிகழ்ச்சி தள்ளித் தள்ளிப்போய் கடைச்யாக 21.5.22ல் உறுதியானது. உள்ளபடியே அந்நிகழ்ச்சி சிங்கை தமிழ் மொழி மாதத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. தமிழ் மொழி மாதத்தில் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு சிங்கப்பூர் அரசு எல்லாச் செல்வ்களுக்கும் மான்யம் வழங்கிவிடும். இலக்கிய அமைப்புகளுக்கான் செல்வீனங்களை அரசு பொறுப்பேற்கும். நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படும் இலக்கியவாதிகளின் பயணச் செலவையும், தங்கும் விடுதி செலவையும் அரசு கொடுத்துவிடும். ஆனால் இந்நிகழ்ச்சி தள்ளிப்போடப்பட்டுக்கொண்டே இருந்தது. எனக்கான விமான டிக்கட் செலவை இன்பா சொந்தக் காசில் ஏற்பாடு செய்தார் என நினைக்கிறேன். 

முதல் நாளே என் மகன் வீட்டுக்குச் செல்வதாக திட்டம். அவன் வீடு விமானத் தளத்துக்கு அருகே இருந்தது. பதிமூன்றாவது மாடியிலிருந்து விமானங்கள் ஏறி இறங்குவதைப் பார்க்கமுடியும். அவை பட்டாம்பூச்சிகள் போல சத்தமில்லாமல் பறப்பது இறங்குவதை பார்ப்பது சுகமான அனுபவம்.13வது மாடியிலிருந்து மழை பெய்வதையோ விமானத்தையோ பார்ப்பது தரையிலிருந்து பார்ப்பதுபோலல்லாமல் ஒரு கனவின் தரிசனம்போல அமையும்.   

அந்த இடத்திலிருந்து எளிதில் விமான நிலையத்தை அடைந்துவிடலாம். என் சம்பந்தி என்னை நிலையத்தில் கொண்டுபோய் விடுகிறேன் ஒற்றைக்காலில் நின்றார்.எனக்கு அவரைச் சிரமத்துக்குள்ளாக்குவது பிடிக்கவில்லை. அவரின் பிடிவாதத்தால் நான் உடன்பட்டேன்.

அவரும் தூங்கவில்லை. என்னாலும் முடியவில்லை. காலை 2.000மணிக்குக் கிளம்பிவிட்டோம். விமான நிலையம் உறக்கத்தில் இருந்தது. ஏர் ஆசியா கௌண்டர் மட்டும் திறந்திருந்தது. செக் இன் டிக்கட் கொடுத்துவிட்டு பணியாள் சொன்னாள். சிங்கைக்கான விமானம் காலை 7.30க்கு தள்ளிப்போடப்பட்டுவிட்டது என்று. எனக்கு இதனை மேசேஜ் வழி தெரியபடுத்தியிருக்கலாமே என்றேன். எப்போதுமே ஏர் ஆசியா இந்த வழிமுறையைத்தான் பின்பற்றும். ஆனால் இம்முறை பயணிகளை அலையவிடுகிறது. அந்தப்பயண்த்துக்கு போதுமான எண்ணிக்கையில் பயணிகள் சேரவில்லை என்பதை பின்னர் புரிந்துகொண்டேன். 3 மணி நேர இடைவெளியில் என்ன செய்வது?உடனே சம்பந்தியை அழைத்தேன். அவர் சமயோசிதமாக யோசித்து சற்று நேரம் அங்கேயே காத்திருந்திருக்கிறார். உடனே வந்து ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டோம்.  பயண இடையூறால் காலை 4.00 வரும் தூக்கமும் இமையை மூடவிடாமல் செய்தது.

ஒருவழியாக  6.30க்கு  அனைத்துலக நுழைவாயிலை அடைந்தேன் 7.30க்கு விமானம் சிங்கையை நோக்கிப் பறந்தது. 

சரியாக 8.45க்கு தரை இறங்கியது. சிங்கப்பூர் பளிச்சென்று தோன்றியது. நிலம் வானம் எல்லாம். சிங்கை ஏதும் பிரத்தியேக சூரியனைச் செய்து, வானத்தில் நிறுத்தியிருக்கிறார்களோ எனத் தோன்றியது. பொன்னொளிர் படர்ந்து உலவியது. செங்குத்தான கட்டடங்கள் வளர்ந்து வளர்ந்து மேகத்தை முட்டிக்கொண்டிருந்தன. சாலைகள் சலவை செய்யப்பட்டதுபோல இருந்தன. வாகனங்கள்  மிதமான வேகத்தில் ஊர்ந்தன. பார்க்குமிடமெங்கும் சுறுசுறுப்பான பொலிவு நிறைந்த முகங்கள்.சாலைகளின் இரு மருங்கும் பச்சை செடிகள், செறிவான மரங்கள், மண்ணின் தரையில் மலர்ப் படுக்கைகள். 

என் மருமகன் வீட்டுக்கு டேக்சி பிடித்து வூட்லண்ட் ரைஸ் மாடி கட்டடத்தை அடைந்தேன்.அரை மணி நேர ஓட்டத்துக்கு 32 சிங் டாலர் வாங்கிவிட்டான். நம்ம ஊரு காசுக்கு கிட்டதட்ட 100 ரிங்கிட். சிங்கையில் பேருந்திலும் எல் ஆர் டியிலும் பயணம் செய்வது புத்திசாலித்தனமானது. ஐரோப்பியர்கள் பயணம் செய்யுமுன்னர் நல்ல முன் தயாராரிப்போடுதான் வருவார்கள். நாமெல்லாம் அப்படியல்ல...நாம் ராஜவம்சம். 

காப்பியும் பரோட்டவுவையும் சாப்பிட்டுவிட்டு போய் படுத்தவன்தான் மதியம் 12.30க்குதான் எழுந்தேன். அன்றைக்குக் காலையில் இருந்த பரபரப்பில் உடல் தானாக சோர்வுற்றிருந்ததுதான் காரணம்.

நான் வந்தடைந்துவிட்ட தகவலை இன்பாவுக்கும், என் எழுத்து நண்பர் பொன் சுந்தரராசுவுக்கும், முனைவர் ஜெகதீசனுக்கும் தெரியப்டுத்தினேன். முனைவர் ஜெகதீசன் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கல்லூரி ஆசிரியர்களுக்காக அகிலனின் பால்மரக்கட்டினிலே நாவலின் உள்ளீடு தோட்டப்புற பின்னணி பற்றிப் பேச அழைத்ததிலிருந்தே நல்ல நண்பராகிப் போனார், ( இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் அகிலனின் 100 ஆண்டு விழா தொடங்குகிறது . பால் மரக் காட்டினிலே தந்த அவரை மலேசியா நினைவு கூரும் முகமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எழுத்தளர் மாலன் நினவு படுத்தினார். என் பருவ வயதில் அந்நாவல் மிகப்பெரிய எழுத்துச் சாதனையாகக் கருதினேன். மலேசியத் தமிழ்  எழுத்தாளர் சங்கம் செய்யலாம் ). சிங்கை வருகை பற்றிச் சொன்னபோது என்னைச் சந்திக்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார் ஜெகா. ஆனால் திடீரென காய்ச்சல் கண்டிருப்பதாகச் சொல்லி வருந்தினார்.

மாலை ஆறு மணிக்கு விக்டோரியா தெருவில் உள்ள சிங்கப்பூர் தேசிய நூலகத்துக்குச் செல்லவேண்டும். லாயாங் லாயாங் குருவிகளின் கீச்சொலிகள் கலந்துரையாடல் அங்கே நடப்பதாக விளம்பரப் பதாகை சொன்னது. நான் எழுதிவைத்திருந்த என் உரையை சிலமுறை வாசித்து வைத்துக்கொண்டேன்.

பொன் சுந்தரராசு எனக்காகத் தேசிய நூலக வாசலில் காத்திருப்பதாகச் சொன்னார்.5.30க்குள் நான் வந்துவிடுவதாக உறுதியளித்தேன்.

குருவி மேலும் நாளை தலைக்கு மேல் பறக்கும்.....


Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...