நகரமயமாதலில் பலியாகும் எலிகள்
(அ.பாண்டியனின்
கரிப்புத் துளிகள் நாவலை முன்வைத்து.
கோ.புண்ணியவான்
முன்னால் தமிழக முதல்வர் சி என்
அண்ணாதுரை ஒருமுறை (1965ல்) மலேசியா வந்த போது ‘பிற நாட்டில் தமிழர்கள் வசிக்கிறார்கள், ஆனால் மலேசியாவில் மட்டும்தான்
வாழ்கிறார்கள்’ என்று
சொன்னார். அப்போது மக்கள் கைதட்டி மகிழ்ந்தார்கள். ‘அண்ணாதுரை சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும்,. நாம் நல்லாத்தான் இருக்கோம்போல ‘என்று கற்பிதத்தை விதைத்துவிட்டுச்
சென்றவை அவ்வரிகள். ஏனெனில் அதைச் சொன்னவர் ஒரு பேரறிஞர்..தமிழ் கூறு நல்லுலகின்
மதிக்கத்தக்க ஆளுமை. இன்றைக்கும் அண்ணா சொன்ன அந்த வரிகள் பொன்மொழிபோல மேடைகளில்
கட்டுரைகளில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வார்த்தைகள் மக்கள் திரளை குஷிப்படுத்தவும்
கைதட்டல் வாங்கவும் சொல்லப்பட்டவை என்று எளிய மக்கள் அறிந்திருக்கவில்லை.
மலேசியத்
தமிழர்களின் உண்மை நிலை அதுவல்ல என்று அண்ணாவுக்கே தெரியும், ஆனாலும் அவர் நெஞ்சரிய சொன்ன பாவனை சொற்கள் அவை.
அவர் சொன்ன
காலக்கட்டத்தில் மக்கள் தோட்டப் புறத்தில் கொத்தடிமைகளாக இருந்தார்கள், தோட்டத் துண்டாடல் நடைபெற்ற
இக்கட்டான காலமும் அதுவே,
குடியுரிமை இல்லாமல்,
சிவப்பு அடையாளக் கார்டால் அவதிப்பட்ட காலமும் அதுவே. அனைத்துல சந்தையில் ரப்பரின் விலை
வீழ்ச்சியால் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்ட
கலக்கட்டமும் அதுவே. அவர் மலேசிய வருகைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா நம்
மண் அல்ல ,
தமிழகமே நம் தாய்மண் என்று முடிவெடுத்து மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு திரும்பிப்போன
காலமும் அதுவே. துண்டாடால் அல்லலில் பிழைப்புத் தேடி புறநகர்ப்பகுதிக்குக்
கள்ளக்குடியேறிகள் போல புலம்பெயர்ந்த இக்கட்டு நிறைந்த தருணமும் அதுவே. நகரமயமாக்கலுக்கும் கோல்ப் திடல் கட்டப்படுவதற்குமாக
தோட்டப்புறங்கள் அழிக்கப்பட்ட காலமும் கிட்டதட்ட அதுவே. இவ்வாறு தமிழர்கள்
வாழ்வின் அல்லாட்டங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் அண்ணா அவ்வாறு
விதந்தோதினார்.
அ.பாண்டியன் எழுதித் தந்திருக்கும் இந்த
நாவலும் அண்ணாவின் கூற்று சரியானது அல்ல என்று சொல்லாமல் சொல்லிவிடுகிறது.
பல்வேறு பிரச்னைகளால் ரப்பர்த் தோட்ட மக்கள்
புலம்பெயர்ந்து புறம்போக்கு நிலத்துக்கு குடியேறுகிறார்கள், தங்கள் மீதும் நகரத்தின் வண்ணங்கள் விழும் என்று
நம்பி வருகிறார்கள். ஆனால் தோட்டத்தில் எதிர்கொண்ட இன்னல்களைவிடவும், தாங்கள் நம்பி வந்த புது இடம்
முன்னர் இருந்த இடத்தைவிடவும் பன்மடங்கு அவதியுற்றதைச் சொல்கிறது ‘கரிப்புத் துளிகள்’.
.
பிறை என்ற கடற்கரை ஒட்டிய பகுதி பெரும்
கதைக்களத்தைக் கொண்டது என்று அவருடைய புனைவு மனம் கண்டடைந்திருக்கிறது. நாவல் எழுத
கதையைத் தேடிய பாண்டியனுக்கு அது தன் கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கிறது என்று
கண்டறிந்திருப்பதுவும் ஒருவகை தீர்க்க தீர்க்கதரிசனம்தான். பிறையின் ஒரு சிறிய
நிலப்பகுதியாக இருக்கும் புறம்போக்கு நிலமும் அதன் மக்களும் கனத்த கதையைத் தரும்
என அவரை ஊக்கியிருக்கிறது. ரப்பர் காட்டிலேயே கதையைத் தேடி எழுதி எழுதித்
தேய்ந்துபோன மலேசிய படைப்புலகத்துக்குப் பிறை ஒரு மாற்றுக் கதைக்குரிய நிலப்பரப்பு
என்று வித்தியாசமாகச் சிந்தித்த பாண்டியனுக்கு முதலில் மலேசிய எழுத்துலகம் நன்றி
சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. மலேசியாவில் இப்படி எத்தனை நிலப்பகுதியும் அதன்
மனிதர்களும் கதையாக்கப் படாமல் இருக்கிறார்கள் என்று ஆராயப்புகுந்தால் நிறைய புதிய கதைக்களம் கொண்ட
நாவல்கள் நாம் கிடைக்கப்பெறுவோம்.
ஒரு புறநகர்ப்பகுதி எவ்வாறு உருவாகிறது, எப்படிப்பட்ட சமூக அமைப்பை அது
தகவமைத்துக்கொள்கிறது, அங்கு
வாழும் மக்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள், காற்றின் திசைக்கு பறக்கும் பஞ்சைப்போல் அதன்
திசையை நோக்கிப் போக விதிக்கப்பட்டிருக்கிறார்கள், என்பதைக் கதையினூடே காட்சிப்படுதிக்கொண்டே
போகிறார் கதாசிரியர்.
நாவலை நிகழ்த்திச்செல்லும் முதன்மை பாத்திரமாக துரைசாமி வருகிறான்.
மற்றெல்லா கதை மாந்தர்களைவிடவும் துரைசாமி பிற முக்கிய பாத்திரங்களுடனான
தொடர்புறுத்தல் நிகழ்ந்தவண்ணம் இருக்கிறது. ஆனாலும் எக்காரணம் கொண்டும் அவன் மீது
முழுமுற்றான நாயக பிம்பம் விழுந்துவிடக்கூடாது என்று கவனமுடன் எழுதிச் செல்கிறார். அவன் ஒரு பேதை மனிதனாகவே
கடைசிவரை சித்தரிக்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அத்தியாயத்திலும் துரைசாமி பின்னிப் பிணைந்து வந்தாலும்
நாவலில் அவனுக்கான இடம் ஒரு சராசரி பாத்திரத்துக்கான இடமாகவே பகிர்ந்து
தரப்பட்டுள்ளது. அவன் பராக்குப் பார்க்கும் பையனாக இருந்து குடும்பச்சுமையை
ஏற்கும் கணவனாக, பிறர்
துயரத்தில் பங்குகொள்ளும் பரிவு மிக்க மனிதனாக, விபத்தில் சிக்கிய பின்னர் அங்கவீனனாக, தன் ஒரே மகனை இழந்து தவிக்கும்
தந்தையாக, வாழ்வின்
எல்லா விதத் துன்பத்தில் உழன்று பேதலிக்கும் சமூக மனிதனாக, தன் மனத்துயரகளைச் சமன் செய்யும் வண்ணம்
மதுவுக்கு அடியான குடியனாக,
வாழ்நாளில் அவனுக்கு நிகழந்துவிட்ட அவலங்களால்
எண்ணித் துயருறும் பாத்திரமாக, கடைசியில் பித்துப் பிடித்தவன் போல கடலில் குதித்து தன்னை
மாய்த்துக்கொள்பவனாக காட்டப்படுகிறார்.
துரைசாமி பல இடங்களில் தலையாட்டி பொம்மையாக பிறர் கட்டளைகளை கண்டிப்பாய்
நிறைவேற்றவேண்டும் என்ற சுய சிந்தனையற்றவனாகவும்
வடிவமைக்கப்பட்டிருக்கிறார். மாந்திரீகம் தன்னை மீட்கும் என்ற மயக்கத்தில் டானு
பின்னால் போவதும், மூட
நம்பிக்கையை நம்புவதும், டானு
இறந்துபோன பின்னர்,
அய்யாவுவை நத்தி, அவன்
கட்டளையையும் நிறைவேற்றவேண்டி ஆட்டுவிக்கப்படுபவனாவும் நாவலில் வருகிறார். துரைசாமியின்
முகம் பெரும்பாலான அத்தியாயங்களை நிறைக்கும் முகமாக சித்தரிக்கப்படுகிறதே ஒழிய ஒரு
மிகைச் சித்திரமாக வரையபட்டுவிடக்கூடாது என்பதில் அவனைக் கவனமாக
கையாண்டிருக்கிறார் பாண்டியன்.
துரைசாமி
சாந்தி இருவரும் தன் ஒரே பிள்ளையை இழந்து மனநோயாளிகள் போல அலைக்கழிவது நன்றாக
வெளிப்பட்டிருக்கிறது. பினாங்கு துறைமுகக் கட்டுமானம் இடிந்து விழுந்த
விபத்தில் தன் ஒரு காலை இழந்த துரைசாமி தன் வேலையையும் இழக்கிறான். அதோடு மகன்
இறப்புக்கு தானும் ஒரு காரணம் என்ற குற்றமனப்பான்மையில் உருக்குலைவதும், அதனால் மனைவியை எதிர்கொள்ளமுடியாமல்
ஒரு தெருநாயைப்போல அங்கிங்கெனாதபடி அலைக்கழிதலும் நாவலில் நிறைவாக வந்திருக்கிறது.
கடலோர
மரமொன்றில் பீர் அருந்திக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் நாயொன்று பன்றி எலும்பை
ருசிபார்க்க அலைமோதிக்கொண்டிருப்பதைக் காணச் சகியாமல் அதனை விரட்டுகிறான். ‘செத்தொழிஞ்சி போ’ என்று வசைகிறான். உள்ளபடியே அவன்
நிம்மதியற்று அலையும் தருணங்களில் தன்னிலை
உணர்ந்து சினங்கொண்டு வெறுத்து தனக்கே சொல்லிக்கொண்ட வார்த்தையாகச் ‘செத்தொழிஞ்சி போவை’ப் படிமமாகிவிடுகிறது.
இந்தப் படிமம் நாவல் நெடுக்க அழகியலை தன்வயப்படுத்திக்கொள்கிறது. கடைசி அத்தியாயத்தில் அவன் கடலில் குதிக்க
ஓடும் கட்டம் இந்தச் ‘செத்தழிஞ்சிபோ’ சொற்றொடரின் உண்மை அர்த்தம் புலனாகிறது.
மனைவி தனக்குதானே பேசிக்கொள்வது கணவன் மனைவியை அந்த நிலையில் பார்க்க சகியாமல், வீட்டில் தங்காமல் அலைந்து திரிவதை
அவன் தன்னையே இழந்து தவிக்கிறான் என்று வரையறுத்துக்கொள்ளலாம்.
குறிப்பிட்டுச் சொல்லத்தகுந்த
வித்தியாசமான பாத்திரமாக டானு வருகிறான். அவன் தன்னை ஒரு மாந்திரீகனாகத்
தகவமைத்துக்கொள்கிறான். தன்னையே அதற்கு ஒப்புக்கொடுத்து அதன் திசையில் செல்கிறான்.
தன்னிடம் அளப்பரிய அபூர்வ சக்தி இருப்பதாக நம்புகிறான். அதனால் பிறரிடமிருந்து
தனித்தே காணப்படுகிறான். அவன் தோற்றமும் மெய்ப்பாடும் அவனுக்கான கூடுதல் ஆளுமையாகத்
திகழ்கிறது. “ஏன் இவன் இப்படி இருக்கான்” என்று சக நண்பர்கள் சந்தேகிக்கிறார்கள்.
அவன் கொடுத்த லாட்டிரி நம்பர் அதிர்ஸ்டவசமாக பரிசுபெற அவனை நம்பத் துவங்கி, அவன் உளறும் வார்த்தைகளை துரைசாமி
அய்யாவு போன்ற ஒரு ஈடு வயது நண்பர்கள தெய்வீகமானதாக ஏற்றுக்கொள்கிறார்கள். தன்
மிகைச்செயலை பிறர் மதிக்கிறார்கள் என்று டானு எண்ணும்போது அவன் தன் மாந்திரீகச்
செய்கைகளை மேலும் உக்கிரமாகக் ஆக்கிக்கொள்கிறான். டானுவின் பாத்திரம் மனதில்
நிலைகொள்கிறது.
அந்த
நட்பு வட்டத்தில் கிருஷ்ணனைச் சிறிதளவு
முற்போக்குச் சிந்தனையாளராகக் காட்டுகிறார் பாண்டியன். ஆனால் டானு அவரின்
பகுத்தறிவை தன் அறிவீனச் சொற்கள் கொண்டும், தன் சிற்றறிவுக்குட்பட்ட
ஆதாரங்கள் கொண்டும் பிடிவாதமாகத் தகர்த்துவிட்டு தன் பாதைவிட்டு விலகாமல்
பயணிப்பதைப் பார்க்கிறோம். ஐயாவும் துரைசாமியும். அவனை முழுமையாக நம்பி டானு இழுக்கும்
திசைக்கு ஈர்க்கப்படுகிறார்கள். தாங்கள் தவறான வழிக்கு இழுக்கப்படுகிறோம்
என்பதை கடைசிவரை அவர்கள் உணாராமல் இருக்கிறார்கள்.
நிஜ வாழ்க்கையில் நாம் இதுபோன்ற
பாத்திரங்களைக் கடந்து வந்திருக்கிறோம். எனவே இந்த வகை மனிதர்கள் நம்பகத்தன்மைக்கு
அப்பாற்பட்டவர்களல்ல. டானு போன்ற மாறுபட்ட பாத்திரஙகள் புறம்போக்கு குடியிருப்புப்
பகுதியிலிருந்தோ விளிம்பு நிலை மக்கள் கூட்டத்திலிருந்தோதான் புறப்பட்டு
வருவார்கள். படித்த சமூகத்திலிருந்து இந்த மாதிரி மனிதர்கள் தோன்றுவது மிக அரிது.
படிப்பறிவு குறைவாக உள்ளவர்கள் பகுத்தறிந்து செயலாற்றமாட்டார்கள். உடனடியாக பணம்
சம்பாதிக்க,
வாழ்க்கைப் பிரச்னையைத் தீர்க்க குறுக்கு வழியையும், மாந்திரீக வழியையும் பின்பற்றி குழியில் போய்
விழுவதை நாவலில் சொல்லிவிடுகிறார் நாவலாசிரியர். கம்போங் டிலோ மக்கள் திரளின்
இதற்கு நல்ல அடையாளமாக டானு உருக்கொண்டு எழுந்து வருகிறான்.
ஒரு பெருநாவலுக்கான கலவையான பாத்திர
வார்ப்புக்களை நிறைவோடு செய்திருப்பதாகவே ‘கரிப்புத் துளிகளை’ச்
சொல்லலாம்.
சாந்தி பிள்ளை பேறு அற்று, சுந்தரை, நீண்ட
காத்திருக்குப்பின் பெற்றெடெத்தவள். ஆனால்
ஒரு துர்சந்தர்ப்பத்தில் அவனை இழக்க நேரிடுகிறது. அந்தச் சோகத்தைக் கடக்க
முடியாமல் நிலைகுலைகிறாள். அவ்வப்பொது தன் மகன் நினைவில் புத்தி பேதலிப்பும்
உண்டாகிறது. பிள்ளையை இழந்த தாயின் பரிதவிப்பு செறிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது
நாவலில்.
பெண் பாத்திரங்கள் குறைவாக நுழைக்கப்பட்டாலும் அவர்களின் பங்களிப்பும்
நாவலை கனம் மிகுந்ததாக ஆக்கியிருக்கிறது.
தாழ்வுணர்ச்சியின் காரணத்தால் தனலெச்சுமி தன்னை இழப்பதும், அதனால் தாய் வள்ளி எதிர்கொள்ளும்
கையறு நிலையும் நாவலில் விட்டு விட்டு சொல்லப்பட்டாலும் ஒரு வகையில் வாசகனையும் பாதிக்கவே
செய்கிறது,
இப்படி எண்ணற்ற திரட்சியான பாத்திரங்கள்
நாவலின் வாசிப்பினூடே நம்மையும் நாவிலின் உப்புக்கரிப்பை உணரவைக்கிறார்.
நாவல் நிகழ்த்தப்படும் நிலச் சூழலுக்கேற்பவே கதைமாந்தர்கள் நிஜத்தன்மையோடு
படைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் இயல்பாகவே ஒத்த
கருத்துடையவர்கள் அல்ல. அவர்களின் வெவ்வேறான வாழ்க்கை பின்புலன்களும், அனுபவங்களும் அவர்களின் கருத்து
நிலைகளை நிர்ணயிக்கின்றன. அந்தக் காரணத்தால் கருத்தியல் ரீதியான மோதல்கள்
நிகழ்வதும் இயல்பான ஒன்றாகவே அமைந்துவிடுகின்றது. கதைக்காக வாழ்க்கையிலிருந்துதான்
மனிதர்களைச் உருவி எடுக்கிறோம். இந்த நாவலில் சில இடங்களில் பாத்திரங்களுக்கிடையே
நடக்கும் மோதல்கள் நாவல் செறிவுக்கான கூடுதல் அம்சமாகப் பார்க்கிறேன். துரைசாமி சாந்தி தம்பதிகள் தங்கள் ஒரே மகனை
இழந்துவிடுகிறார்கள். அந்தப் பேரிழப்புக்கு துரைசாமிதான் காரணம் என்று சாந்தி
திட்ட்டவட்டமாக நம்பும்போது அவர்களுக்கிடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன.
தலைமுறை இடைவெளிகொண்ட தன்லெட்சுமிக்கும் தாய் வள்ளிக்கும் நிகழும் சூடான விவாதமும்
கதையோட்டத்துக்கு ஒத்துப் போகிறது. டானுக்கும் கிருஷ்ணனுக்குமான கருத்தியல்
ரீதியான வாய்ச்சண்டையும் நாவலின் முக்கிய பகுதிகளில் ஒன்று. உரையாடல்கள் வழி
கலையம்சம் நாவலின் கூடிவந்திருக்கிறது. இவை நாவலை மேலும் சுவாரஸ்யமாக்குகின்றன.
துரைசாமி
வாழ்க்கையில் சந்தித்த துர்ச்சம்பவங்கள் அவன் நோய்மையில் இருக்கும் போது நினைவை
மோதுகின்றன. தானும் இறந்துவிடுவோமோ என்ற பீதி அவன் ஆழ்மனதில் பதிவானவை அவனை
அலைக்ழிக்கிறது. மரணத்தைக் கண்டு
அஞ்சுகிறவர்களுக்கு தன்னிச்சையாக இந்த அவலச் சம்பவங்களை நினைத்துக்கொள்வது இயல்பாக
நடக்கும் ஒன்று.. இவாறான காட்சிகள் கலையமைதியோடு
எழுதப்பட்டிருக்கிறது.
‘சொல்லாதே, காட்டு’ என்ற
வரி, புனைவாளனுக்கு
சொல்லப்பட்ட பொதுவான அறிவுரையாகும். இந்தச்
சவாலை ஏற்றுப் படைக்க வருபவன் காட்சிப்படுத்தலில் மிகுந்த கவனத்தை செலுத்த
முற்படுகிறான். இது நிறைவேற புனைவில் நுண்
விவரணைகள் முக்கியமான பங்கை ஆற்றுகின்றன. இந்த நாவலின் ஏடுகளில் பெரும்பகுதி நுண்
விவரணைகள் நிறைந்திருக்கின்றன.
கம்போங் டிலோ நிலக்காட்சியும், ரேடியோ சாமி பற்றியும்,
குடியிருப்புப்பகுதியின் நெரிசல் நிறைந்த சூழலும்,
முனீஸ்வரர் கோயில் வளாகமும், , டானுவின் மாந்திரீக வைத்திய முறையும்,. பெர்ரி பயணக் காட்சியும், அடகுக்கடையும், கடலின் அலைமோதலும், பினாங்கு பாலமும், அகுகூராவும் பிரசான்னமும், வேலை இடங்களும், மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டு இம்மி பிசகாமல்
எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றின்
அழகியல் துலங்கித் துலங்கி மேலெழுந்து வருகின்றன. அக்காட்சிகளை கேமராவில் பதிவு செய்தவைபோல கண்
முன் விரிகின்றன.
.”டௌனுக்கு
போலாம்னு கூட்டிட்டு வந்து இந்த வெறும் காட்ல வுட்டுட்டாரே மனுஷன்’ என்று புலம்பும் பாக்கியத்தின்
சொற்களிலிருந்து” அந்த புது குடியிருப்பின் அவலச் சூழல் புலனாகிறது.
நுண்விவரணைகளில் மிக வியப்பை ஏற்படுத்தக்
கூடிய இடங்களும் உண்டு, கம்போங் டிலோவில் கிணறு ஒன்றைத் தோண்ட வேண்டிய கட்டாயம்
ஏற்படுகிறது. அந்த நிலத்தில் எந்த இடத்தில் நீர் சுரக்கும் என்று கண்டுபிடிக்க
இரவு வேளைகளில் , பல
இடங்களில் கொட்டாங்கச்சிகளைக் கவிழ்த்து
பரிசோதிக்கிறார்கள். மறுநாள் காலையில் அவற்றுள் எந்தக் கொட்டாங்கச்சியில் நல்ல
ஈரப்பசை இருக்கிறதோ அந்த இடத்தில் நீர் வற்றாமல் ஊறும் என்று எழுதும் இடத்தைக்
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
கம்போங் டிலோ புறம்போக்கு குடியிருப்பில், கடை உருவாவது, ரகசியமாக பீர் சாராயம் விற்கப்படுவது, அந்தரங்கமாக நம்பர் விற்பது, அதற்கு சீன நம்பர் கையேட்டை நம்பிப்
பயன்படுத்துவது, புதிய
கோயில்கள் எழுப்புவது, போன்ற
இடங்களுக்கான வர்ணனைகள் நேர்த்தியாக வந்திருக்கின்றன.
ஆனால் எழுபதுகளின் ஜாலான்பாரு முனீஸ்வரன் கோயில்
சண்டியர்கள் ஆக்ரமித்த இடமாக இருந்தது. அது பிறைக்கான அழுத்தமான அடையாளமாகவே
விளங்கியது. அங்கே வாரத்துக்கு மூன்று நான்கு முறையாவது ஆடு வெட்டி சாமி
கும்பிடுவார்கள். அப்போது பிறையைச் சுற்றிலும் இருந்த புறநகர்ப்பகுதி இளைஞர்கள், நேர்த்திக்கடன் செய்தவர்களுக்கே
உணவில்லாமல் போகும் அளவுக்கு முதல் பந்தியிலும், இரண்டாவது பந்தியிலும் முந்திக்கொண்டு
உட்கார்ந்து சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். அவர்கள் சண்டியர்கள் என்பதால் இந்த
அழிச்சாட்டியம் நடக்கும். இந்த வம்படியான செயல்களை நான் சிலமுறை நேரில்
பார்த்திருக்கிறேன். இதனால் கைகலப்பும் நேர்ந்ததுண்டு. இதனை நாவலில் சொல்வார் என
எதிர்ப்பார்த்தேன்,
எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முனீஸ்வரர் கோயில்வரை வந்து, இந்தச் சண்டித்தனத்தைச் சொல்லாமல்
விட்டுவிட்டார்.
அதற்கான இடம் நாவலின் கதைநகர்வில் இருந்தது.
நுண்விவரனைகளில் நம்பகத்தன்மை இருந்தது. அதனாலே
அவை காட்சிகளாக கண் முன் விரிந்து நின்றன.
நாவலின் உரையாடலோடும் சம்பவங்களோடும் ஆசிரியரின் விவரிப்பு மொழியோடும் அதன்
அழகியலோடும் ஒத்திசைந்து நகர்ந்தது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.
ஆனால் நுண்விவரணைகளின் திரட்சிதான் கதையோ
என்ற சந்தேகம் கூட எழுந்தது. அவை பாத்திரங்களாக ஆக்கப்பட்டது போன்ற முக்கியத்துவம்
எண்ணற்ற இடங்களில் நிறைந்து வழிந்தோடியது...
.
நாவலில் கதை ஓட்டத்தைவிடவும், பாத்திர வடிவமைப்பைவிடவும், தத்துவ வெளிப்பாட்டைவிடவும் நுண்
சித்தரிப்புகள்தான் மேலெழுந்து நின்றன..நாவலின் கதையோட்டம் மேலெழவிடாமல் நுண்
சித்தரிப்புகள் அதை அமுக்கி இரண்டாம் இடத்துக்குத் தள்ளின என்றே நான் கருதுகிறேன்.
ஒரு படைப்பின் உரையாடல்களில், மனித சுபாவங்களை , நாவல் நிகழும் நிலப் பின்புலங்களைச்
சொல்லிச்செல்லும் இடங்களில் நாவலாசிரியர் தனித்துவமான ஆளுமை பறசாற்றப்படவேண்டும். ஒரு
தீவிர படைப்பாளன் தன் வாழ்வனுபவங்களிலிருந்து சேகரம் செய்தவற்றுள் எது அறம், எது அறமற்றது என்று பிரித்தறிந்து
கொள்கிறான். அதில் அறமானவற்றையே தன் படைப்பில் முன்வைப்பான்.. தான் எழுதிச்
செல்லும் கதையோட்டத்தின் ஊடே புனைவாளன்
சொல்லக்கூடிய கருத்தைத் தத்துவம் என்கிறோம். அந்த நிலைப்பாடு அவன்
வாழ்வனுபவத்திலிருந்து கற்றறிந்த அறத்திலிருந்து பிறக்கிறது.
இந்தக் கரிபுத்துள்கள் நாவலில் பல இடங்களில்
தத்துவ வெளிப்பாடு தன்னிச்சையாகவே கூடிவந்திருக்க வேண்டும், அதனை அரிதாகவே நாவலுக்குள் காணமுடிகிறது. வாசிக்கும்போதே எண்ணற்ற இடங்களில் அந்த வாய்ப்பைக் கண்டறிய
முடிகிறது. ஆனால் நாவலாசிரியர் அவற்றைத் தவறவிட்டிருக்கிறார் என்று கருதுகிறேன்.
இருப்பினும், சொற்ப இடங்களில் தத்தவ வெளிபாடு வந்தாலும் அவை
இடத்துக்கேற்ப பொருந்தி வந்திருக்கின்றன..
“கடந்துபோனவை எல்லாம் மறைந்து போய்விடுவதில்ல.
அருவமாக அவர் மனதில் சுருண்டு கிடக்கின்றனவோ என்று அவருக்கே வியப்பாகத்தான்
இருக்கிறது. துளி நீரில் துளிர்ந்துவிடும் மகரந்தத் துகள்போல அவை துளி
சந்தர்ப்பத்தில் விரிக்க விரிக்கப் படர்ந்துகொண்டே சென்று நிகழ்காலத்தை
மூடிவிடுகின்றன.’ என்று
கூறுகையில் பாத்திரத்தின் மனசாட்சி உயிர்கொண்டு எழுவதை அவதானிப்பாக வைக்கிறார்.
கிருஷ்ணன் சொன்னதாக இன்னொரு
கட்டத்தில் உண்மையியல் வெளிப்படுகிறது.
கிருஷ்ணன் அந்த நட்பு வட்டத்திலேயே சற்று தெளிவானவர் என்ற பிம்பத்தை நாவலாசிரியர் உருவாக்கிவிட்டதால்
அந்தப் பாத்திரம் அவ்வாறு சொல்வதை நம் தர்க்க மனம் ஏற்றுக்கொள்கிறது. “தொர நல்லா
ஞாபகம் வச்சுக்கோ,
பிராணிங்களும் செடிகொடிங்களும் எப்பவும் நம்மள கவனிச்சிக்கிட்டேதான் இருக்குங்க
ஒரு எடத்துல என்னிக்கி மனித நடமாட்டம் ஓஞ்சி போகுதோ அப்ப அதுங்க வேக வேகமா வந்து
அந்த எடத்துல ஒக்காதுக்கோங்க, ஏன்னா
அதுங்கதான் பூமியில மூத்ததுங்க. இது அதுங்க பூர்வீக சொத்து இல்லியா?” என்று சொல்வது சூழியல் சார்ந்த விழிப்புணர்ச்சியை
வாசக மனதில் விதைக்கக்கூடியதாகும்.
விளிம்பு நிலை மக்கள்
எவ்வாறு மூட நம்பிக்கைகளில் உழல்கின்றனர் என்று நாவல் கோடிட்டுக்காட்டத்
தவறவில்லை. இதனைக் கலையும் வழியையும் தன் தலையீடில்லாமல் நாவலுக்குள்
வைத்தும்விடுகிறார்.
தன் ‘கரிப்புத் துளிகள்’ நாவலில் ஒரு மந்தை மனநிலை கொண்ட சமூகத்தை வரைந்து
காட்டுகிறார் பாண்டியன். ஆனாலும்
கிருஷ்ணன் என்ற பாத்திரத்தின் வழி தன் வாழ்வனுபவங்களிலிருந்து கிடைக்கப்பெற்றவற்ற
முற்போக்குச் சிந்தனையை ஆங்காங்கே தூவிவிட்டும் செல்கிறார்.
டானுவின் பிற்போக்குத்
தனத்தை சாடும் முகமாக,
கிருஷ்ணன் சொலவார், “ :”வாயில
அடிச்சா சூத்துல பல்லு போச்சின்னு சொல்ற மாதிரி, சம்பான் கவுந்தா பேயி கவுத்துடிசின்னு சொல்லக்
கூடாது, விசிறி
காத்துல ஒக்காந்திருக்கிற ஆபீசருங்க, ஒழுங்கா கவனிச்சி வேல பாத்திருந்தா, ஏன்யா கேபில் அறுந்து போகுது? அப்பாவிங்க ஏன்யா சாவனும்?” என்று ஜின்னு பேய் போமோக்களை நம்பி
மோசம் போகும் மக்களுக்கான விழிப்புணர்வை உண்டாக்கும் சொற்களை நாவல் போக்கினூடே
விதைத்துச் செந்றுவிடுகிறார்.
: ’பேய் ஜின்னல்லாம் உலாவுவதாக நம்பினால் கொரியா
காரன் இங்க பாலம் கட்ட வருவானா’
என்றும் லாட்டிரி சீட்டில் நம்பர் ஏறுவது
அதிர்ஸ்டத்தைப் பொறுத்தது என்றும்,
உண்மைநிலையை நாவலின் உரையாடல் வழி தெளிவுபடுத்துவது, நாவல் எழுத்தின் வழியே பகுத்தறிவை ஊட்டும் செயலன்றி வேறென்ன?
சாந்தியும் துரைசாமியும் தன் ஒரே மகன்
சுந்தரை சந்தனமாதா கோயில் திருவிழாவுக்கு
அழைத்துப்போய்,
மெழுகுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு வந்த மறுநாளில், சுந்தர் டிங்கி காய்ச்சலில் விழுகிறான். பின்னர்
இறந்தும் போகிறான் என்று பொடி போட்டுச் சொல்வதும் பகுத்தறிவற்ற சமூக மனிதர்களின்
பிற்போக்குத்தனத்தைக் காட்டுவதற்ககத்தான் என்று புரிந்துகொள்ள முடிகிறது,
நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கவில்லை. பிறை என்ற கடலோர பட்டினத்தை களமாகக்
கொண்டிருக்கிறது. 1970களின் காலப்பகுதியில் நடந்த விளிம்புநிலை
மக்களுக்கு நடந்த சம்பவங்களை ஒரு கதையாக கோர்க்க முயற்சி செய்திருக்கிறது.
எழுபதுகளுக்கு முன்னும் பின்னுமான அந்தக்
குறிப்பிட்ட கால வட்டத்துக்குள்ளேயே நிகழ்கிறது, வரலாற்றுச் சிறப்புமிக்க பினாங்கு பாலம்
கட்டப்படுவதற்கு முன்னரும் அதற்கு பின்னருமான நடந்த சம்பவங்களால் கதை
பின்னப்படாலும் அது நாவலின் நிகழ்காலத்தில் நடப்பதைச் சொல்லிவிட்டு அதற்குப்
முன்னர் என்ன நடந்தது என்பதையும் விவரிதித்துக்கொண்டு போகிறது. அவை ஒன்றுக்கொன்று
தொடர்பானவையாக இருப்பதால் புனைவுத்தர்க்கத்துக்கு எவ்வகையிலும் ஊறு
விளைவிக்கவில்லை. இருபத்தாறு அத்தியாயஙகள் வரை நீளும் இக்கதையாடல் இதே கதியில்தான் நகர்கிறது. ஆனால் எளிய
வாசகனுக்குக்கூட எந்தக் குழப்பமும் நேர வாய்ப்பில்லாத ஒரு கலவையான அடுக்கு முறையை
வைத்துப் பார்க்கிறார். அகூபாரா வரும் இடங்கள் மிகுபுனைவாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது, அது ஒரு நம்பகத்தன்மை என்ற
எல்லையைவிட்டு விலகியே நிற்கிறது. டானு போன்ற பாத்திரங்களை நாம் அன்றாட வாழ்வில்
பார்க்கத்தான் செய்கிறோம். டானுவைப் பாவித்து இந்த மிகுபுனைவைப் பின்னுவது
பொருந்தி வருகிறது. டானு பாத்திரத்தை சராசரிக்குள் நிறுத்தாமல், சற்றே விலகி மாந்திரீகத்தை நம்பி
அதற்குள் உழலும் வித்தியாசமான பிறவியாகக் கட்டமைக்கப்படுகிறார். அவனால்
ஈர்க்கப்பட்ட துரைசாமி ஐயாவு போன்றவர்கள் டானு பின்னால் போக கதை மாந்திரீகக் கட்டத்தைத்
தொட்டுப் பார்த்துவிட்டு,
இயல்பு நிலைக்கே திரும்புவதாகக் கதையை நிகழ்த்துகிறார். அகூபாராவைக் காட்டும்
மந்திரவாதி கொடுத்த மணல் தங்கக்கசாக ரசவாதம் நடக்கும் கட்டம் யதார்த்தத்தில் நிகழ
வாய்ப்பில்லாமல் போனாலும் அதே தங்கக்காசு ஜெகாவின் உயிரை தடுப்புக் காவலில்
பறிக்கும் அளவில் போய் நிற்கும்போது கதை மீண்டும் யதார்த்த கதிக்குத்
திரும்பிவிடுகிறது,
கனவுபோல நிகழும் அந்த சொற்பக் காட்சியை மட்டும் மாந்திரீத் தன்மை வந்துவிடுகிறது.
ஒரு நீள் யதார்த்தக் கதையில் ஒரு துளி மாந்த்ரீகத் திணிப்பு கதை ஓட்டத்தை
பாதித்துவிடவில்லை. பாத்திரங்கள்
இடைவிடாமல் எதிர்கொள்ளும் துன்பியல் சம்பவங்களுக்கு வலு சேர்க்க இந்த மிகை யதார்த்தம் கையாளப்படுவதை நான் சில
நாவல்களில் வாசித்திருக்கிறேன். ஜெயமோகனின் காடு நாவலிலும் அவரின் சில
சிறுகதைகளிலும் வரும் நீலி மிகை யதார்த்த கதையாடலே. இந்த வகைமை கதையாடல் நாவல்
என்ற புனைவுச் செழுமைக்கு மேலும் வலிமைக் கூட்டும் என்றே கொள்வோம்..
ஒரு நாவலின் மையக்கதைப் பொருளுக்கு வலிமை
சேர்க்கும் விதமாக சில காட்சிகளை அமைக்கிறார் நூலாசிரியர். அவை மிகப்பொருத்தமான குறியீடுகளாக
நிலைகொள்கின்றன.
‘தோய்
தொழிற்சாலையில் பழுதாக அச்சாகி ஒதுக்கப்படும் பொம்மைக்கார்களைப்போலத்தான் அவளும்
இருந்தாள். ஆனால் அவளோ மீண்டும் மீண்டும் உருக்கி சீரமைக்க முடியாத படைப்பு. அவள்
எல்லாகுறைகளுடன்தான் வாழ்ந்தாக வேண்டிய நிலை. தனலெட்சுமியின் அழகற்ற தோற்றத்துக்கு
அவளுக்கு காதலன் கிடைப்பதோ மாப்பிள்ளை அமைவதோ வாய்ப்பு குறைந்த ஒன்று. நாவலில்
வரும் இந்தப்பகுதியைப் புறம்போக்கு குடியிருப்பில் வாழும் மனிதர்களின் வசதி
குறைந்த, அவதிபவதியான
வாழ்க்கைநிலைக்கு ஒப்பானதாக குறியிட்டுச்
சொல்கிறது.
அவசியம் உண்டாகும்போது
பட்டண ஒதுக்குப் புறங்களில் எழும் புறம்போக்குக் குடியிருப்புபோல பாலம்
கட்டும்போதும் அவசியமாய் வேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டார்கள். பாலம் கட்டி
முடித்தவுடன் அந்த அவசியம் இல்லாமல்போவதுபோல அவசரமாய் எழுந்த புறம்போக்கு
வீடுகளும் அவசரமாய் அழிக்கப்பட்டு இல்லாமல் போய்விடுகிறது இந்த ஒப்பீடும் வலிமையாக
நிற்கிறது.
தனலெச்சுமி
கருக்கலைப்பதைப் புறம்போக்கு குடியிருப்புப் பகுதி நீக்கப்படும் சம்பவத்தோடு
ஒப்பிட்டுக்காட்டுகிறது.. பீட்டர் எவ்வாறு தன் தேவைக்குத் தனத்தை
பாவித்துக்கொண்டானோ,
அதேபோல பாலக் கட்டுமான வேலைக்கு புறம்போக்கு வீடுகள் கட்டப்பட்டு, பாலக் கட்டுமானம் பூர்த்தியான
கையோடு அங்குள்ள வீடுகள் நீக்கப்படுகின்றன. அதன் பின்னர் அங்கு வாழ்ந்த மக்கள்
அடுக்குமாடி வீட்டுக் கனவில் காணாமபோகிறார்கள். குறைந்தபட்சம் கொண்டேய்னர்களாவது
கிடைக்காத என்று அவர்கள் ஏங்குவதாக முடிவது விளிம்பு நிலை மக்களின் அவல நிலைமையை
வாசகனுக்கும் கடத்திவிடுவாதாக புனையப்பட்டுள்ளது. .
நாவலை
வாசித்துமுடித்தவுடன் நாவல் உள்ளடக்கத்தின் நெடி நெருட நம்மையும் ஆரம்பிக்கிறது.
புறம்போக்கு குடியிருப்பின் விடிய விடிய ஓடும் விடியோ ஓசை, சாலையில் நெரிசலாக ஓடும் வாகனத்தின் கந்தக நெடி, விடலைப்பையன்கள் மோட்டார்
சைக்கில்களை முறுக்கும்போது உண்டாகும் செவிகளைப் பிளக்கும் ஓசை, சிறு சிறு ஆலைகளில் இரும்பை
வெட்டும்போது உண்டாகும் தீப்பொறியின் கனல், வேலையிடத்தில் வெப்பத்தில் உருகித் தெறிக்கும் ..... புறம்போக்கு
குடியிருப்பின் மழைக்காலங்களில் மிதிபடும் சகதியின் நசநசப்பு,
கருக்கலைப்பு கிளினிக்கில் கசிந்தோடும் குருதியின் வாடை, மனித உடலிலிருந்து கசியும் ரத்தத்தை
உள்வாங்கிச் சிவக்கும் பஞ்சுகளின் அச்சுறுத்தலும், என எண்ணற்ற சம்பவங்கள் வாசகனை நிம்மதி இழக்கச் செய்கின்றன. இதில் மையமான சோகம், மக்கள் நம்பி வாழவந்த இடமே
அவர்களைக் காவுகொண்டுவிடுவதுதான். இந்த நாவலுக்கான களத்துக்கு ஏற்ற
பாத்திரங்களையும்,
தகுந்த கதைமாந்தர்களையும்,
சம்பவங்களையும், நுண்
விவரணைகளையும், அதன்
உரையாடல்களையும் தொகுத்துக் காட்டி அந்தக் குறிப்பிட்ட சமூகத்தின் முழு
வாழ்க்கையைச் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
அ.பாண்டியன் புனைவைவிட
அபுனைவின் மீது கவனம் செலுத்துபவர். அதனால் நாவலில் கட்டுரைத்தன்மை வந்துவிடுமோ
என்று நினைத்தேன். ஆனால் நாவல் முழுக்க முழுக்க கதை நடைக்கு பரிமாணம்
கண்டிருக்கிறது. அவரின் குறுநாவல் ரிங்கிட்டும் சில சிறுகதைகளும் புனையப்பட்டுள்ளன
என்றாலும். இந்தக் கரிப்புத் துளிகள் அவர் புனைவின் மேம்பட்ட நிலையை
நிறுவியிருக்கிறது என்று நம்பலாம்.
...............................
Comments