புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது.
அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது.
அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில்.
யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்..
இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது.
அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண்டிருந்தார். கிளந்தானில் இருந்து பாரதி விழாவில் கலந்துகொள்ள வந்த அவர் பெயர் மணிவண்ணன். எனக்குக் கிளந்தான் என்றவுடன் நான் முதன் முதலில் படித்த கென்னத் தோட்டம் நினைவுக்கு வர, நான் குறுக்கிட்டுச் சொன்னேன் நான் கிளந்தானில் கோத்தா பாருவில் பிறந்து கெந்நத் தோட்டத்தில் தொடக்கக் கல்வியைக் கற்றேன் என்று. கெந்நத் தோட்டமா எந்த ஆண்டு? என்று கேட்டார் வியப்புடன். 1956ல் இரண்டாம் வகுப்பு மாணவன் என்றேன் குத்துமதிப்பாக.
அப்போது எங்க அப்பாதான் அங்கே அசிரியர் என்றார். பேரு ஆறுமுகம் என்றார். பெயர் எனக்கு நினைவில்லை. பெயரை கேட்டு வைக்கும் வயதும் அல்ல எனக்கு!
சமீப காலமாகவே எனக்கு கிளந்தானில் கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் நினைவுக்கு வந்துகொண்டே இருந்தார். என் நாக்கில் சரஸ்வதியின் நாமத்தை எழுதிய ஆசிரியர். அவர் வேட்டி கட்டியிருப்பார். வெள்ளை நீள் கை சட்டை போட்டிருப்பார். காலில் செருப்பு இருக்காது. லயக்காட்டிலிருந்து பள்ளிக்கு நடந்தே வருவார். முகம் முற்றாக மறந்துவிட்டிருந்தது
என்ன ஒரு தற்செயல்!
ஐம்பதுகளுக்கு முன்னர் நடெங்கும் குடிசைப்பள்ளிகள் இயங்கி வந்தன. தோட்டப்புற பள்ளிகளை காலனித்தவ ஆட்சி காலக்கட்டங்களில் தோட்ட நிர்வாகமே ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் பள்ளி நிர்வாகத்துக்கான நிதி கொடுத்தும் வந்தது. கள்ளுக்கடை, கோயில், பள்ளிக்கூடம் ஆகிய வசதிகள் செய்து தரப்படும் என்று காலனித்துவ ஆட்சியாளர்கள் ஒப்பந்தம் செய்துதான் தமிழக மக்களைச் சஞ்சிக்கூலிகளாகக் கூட்டங் கூட்டமாக மலாயாவுக்கு அழைத்து(ஓட்டி) வந்தனர். 1957க்குப் பிறகுதான் அரசாங்கம் முழுமையாக பள்ளிகளின் நிர்வாகத்தை தன் அதிரகாரத்தின் கீழ் கொண்டுவந்தது.
அவ்வறான குடிசைப் பள்ளியில்தான் நான் என் தொடக்ககாலக் கல்வியைக் கற்றிருக்கிறேன். அப்பள்ளி அத்தாப்புக் கூரை வேய்ந்தது. சுற்றிப் பலகைகளாலானது. நீள நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். எல்லா வயது மாணவர்களுக்கும் ஒரு வகுப்பறை, ஒரே ஒரு ஆசிரியர். இந்த ஆசிரியர் பயிற்சிபெற்ற ஆசிரியராக இருக்க வாய்ப்பில்லை என்றே நான் நினைக்கிறேன். தோட்டத்தில் எழுதப்படிக்கத் தெரிந்த ஒருவரையே ஆசிரியர்களாக தோட்ட நிர்வாகம் நியமிக்கும். என் தந்தையைக் கூட ஆசிரியராக நியமிக்க தோட்ட நிர்வாகம் கேட்டபோது மறுத்திருக்கிறார். நான் ஏன் என்று கேட்டேன் 'கித்தா மரம் வெட்னா இன்னும் கூட சம்பள்ம்டா' என்றார். பள்ளிகளில் முறையான பாடத்திட்டங்கள் வகுக்காத காலம். பிரம்பைத் தவிர வேறு உபகரணங்கள் இருக்காது. கரும்பலகை இருந்த ஞாபகம் எனக்கில்லை!இருந்திருக்கலாம்!. ஆசிரியரே வயதுக்கேற்றவாறு பாடம் நடத்துவார். அ ன்னா ஆவன்னா இன்னா ஈயன்னா என்ற ராகத்தோடு பாடம் சொல்லித் தருவார். சிலேட்டுகள் சிலேட்டுக் குச்சிகள் தான் எழுது கருவிகள். அந்த வசதியும் இல்லையென்றால் சிறிய மணற்பரப்பில்தான் சுட்டுவிரல்கொண்டு எழுதிப் பழகவேண்டும். எழுதவாரதவர்களுக்கு கைமுட்டியிலியே குச்சியால் அடி விழும். வீடு போவதற்குள் முட்டி ரத்தச் சிவப்பாகி வீங்கிக்கிடக்கும். பெற்றோர் 'வாத்தியார் இன்னும் அடிக்கணும் அடிக்கணும்' என்றே திட்டுவார்கள். குற்றம் என்னவென்றே விசாரிக்க மாட்டார்கள். வாத்தியார்கள் எல்லாம் நல்லதுக்குத்தான் செய்வார்கள் என்ற முன் எண்ணம். "நான் நாளைக்கு பள்ளிக்கு போகல" என்று அடம் பிடித்தால் ஆசிரியர் அடிப்பதைவிட இங்கே பலத்த காயங்கள் உண்டாகும்.தர தரவென இழுத்துப்போய் பள்ளியில் விட்டு விட்டுத்தான் ரப்பர் காட்டுக்குச் செல்வார்கள்.ஆசிரியரே வீடுவரை வந்து மாணவனைப்பற்றிப் புகாரளித்துவிட்டு உணவு சாப்பிட்டுவிட்டுப் போவார்கள். காய்கறி பயிரிட்டாலும் ஆசிரியருக்குக் கையோடு கொடுத்தனுப்பவும் செய்வார்கள். பள்ளிகளில் இப்போது ziara laknah என்ற ஒரு திட்டம் இருக்கிறதாம். மாணவர் நல ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் பிரச்னையான மாணவர்களைப் பற்றிப் பெற்றோருக்கு ஆலோசனகள் கூற வீடுவரை சென்று சந்திக்கிற திட்டம் அது. இத்திட்டம் அக்கறையின் பொருட்டு வந்தது. இப்போது திட்டமிட்டு செய்வதெல்லாம் அப்போது அந்தச் செயல் தந்த உதாரணங்கள்தாம்.
அதனை விடவும் அந்த ஊரின் பிம்பம் மறவாமல் இருக்கிறது. கிளந்தான் ஆற்றின் இரு கரைகளிலும் சிறு சிறு கிராமங்கள் ரப்பர் தோட்டங்கள் இருக்கும். நானிருந்த கெந்நத் ரப்பர் தோட்டத்தில் ஒரு பத்து இந்தியக் குடும்பங்களே இருந்தன. எல்லாரும் ஒரே ஊரிலிருந்து வந்தவர்கள். வெள்ளைக்காரகள் மலாயாவுக்குக் சஞ்சிக்கூலிகளாக இறக்குமதி செய்தபோது அந்தந்த ஊர் மக்களை ஒரே இடத்தில் கொண்டுபோய் விட்டிருக்கிறார்கள். வேலூர் சாம்பசிவ புரத்திலிருந்து, எல்லாரும் தாய் பிள்ளைகளை விட்டுவிட்டு தூர தேசம் வந்திருக்கிறார்கள் எனவே ஒரே இடத்திலாவது குடியிருக்கட்டுமே, என்ற பச்சாதாபம் துக்குநூண்டு இருந்திருக்கலாம் வெள்ளைக் காரர்களுக்கு. அல்லது எழுதப்படாத சஞ்சிக்கூலி ஒப்பந்தமாக இருந்திருக்கலாம்.ஆற்றங்கரையின் ஒரு பக்கம் கெந்நத்தைச் ஒட்டிய தக்கோ சொக்கோ கிர்லா ஊர்கள் இருந்ததாக நினைவு. ஆற்றின் அந்தப்பக்கம் தெமங்கான், கோல கிராய், கோத்தாபாரு ஊர்கள் இருந்தன. கோடைகாலத்தில் ஆற்றைக் கடந்தே அந்தப்பக்கம் நடந்து சென்றுவிடலாம். ஆனால் வெள்ளம் கரைபுரண்டால் ஊர்களை விழுங்கி ஏப்பமிட்டுவிடும்.
இந்த பழைய நினைவுகள் ஏன் நிகழ்கின்றன என்ற புதிருக்கு மணிவண்ணனை சந்தித்ததும்தான் பதில் கிடைத்தது..
மணிவண்ணன் மீண்டும் கோலாலப்பூரிலிருந்து பேசினார். நான் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை. மிக உற்சாகமான மனநிலையில் இருந்தார். நான் அவர் அப்பாவிடம் படித்திருக்கிறேன். என் முதல் ஆசிரியரின் மகனை நான் சந்திக்கிறேன் என்பதில் இருவருக்குமே வியப்புகள் இருந்தன. இருவருக்குமே அந்த வரலாற்றுப் புல்லியைத் தொட்ட அதிர்வுகள் உண்டாகியிருந்தன. அவரிடம் என்னைச் சந்தித்ததிலிருந்து உண்டான மகிழ்ச்சி அவரில் பேச்சில் முகிழ்ந்தெழுந்துகொண்டிருப்பதை உணர்ந்தேன்.
![]() |
"சார், உங்க வாட்சாப்புக்கு என் அப்பாவின் படத்தை இணைத்துள்ளேன்" என்றார்.
நான் அப்போதே காரை ஓர் ஓரமாக நிறுத்தி புலனத்தைத் திறந்தேன்.கருப்பு வெள்ளை படத்தில் மூவர் இருந்தனர். கிட்டதட்ட ஒரு வயதினர்.
அவரை அழைத்து இவர்களில் யார் அப்பா என்றேன்.
இடது பக்கம் நின்றிருப்பவர் என்றார்.
எனக்கு அவர் முகத்தை நினைவுகூர முடியவில்லை. இருப்பினும் படத்தில் இருப்பவர் தளர்ந்த உடை, கிராப்புத் தலைமுடி இடுப்புக்கு மேல் பாதுகாப்பாக இறுக்கப்பட்ட கால்சட்டை. மூவரும் கொடுக்கும் போஸ் கண்டிப்பாய் ஐம்பதில் பின்பற்றப்பட்ட டிரெண்ட். கோத்தாபாரு ஸ்டோடியோவுக்குப் போய் கனத்த கட்டணம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் அப்போதுதான் நிழற்படம் எடுக்கும் தொழில்நுட்பம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது.
![]() |
| நட்ட நடுவில் கிளந்தான் மணிவண்ணன். |
இப்படம் பால்ய கால நினைவுகளை அகழ்ந்து எடுக்கிறது. நான் என் தன்வரலாறு எழுதினால் இப்படமும் தொடக்ககால கல்வி போதித்த ஆசிரியர் ஆறுமுகமும் படமும் கண்டிப்பாய் பதிவு செய்யப்படும்.


Comments
பொன் அண்ணாமலை