Skip to main content

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை

எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது.

கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம்.

1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக வாழும் புறநகர்ப்பகுதியை ஒட்டிய கிந்தா ஆசிரியர் பயிற்சி கல்லூரியின், டொமெட்ரியின் மூன்றாவது மாடியில், நள்ளிரவைத்தாண்டிய மூன்றாவது ஜாமத்தின் ஒரு அந்தகாரப்பொழுதில் உறக்கம் என்னை அரக்கத்தனமாக இறுக்கமாக அணைக்கத்தொடங்கிய நேரம். குளோர் என்ற சத்தத்துடன் ஏழெட்டு பயிற்சி ஆசிரியர்கள் பொறுக்கிகளாக பரிமாணம் கண்டு அந்த டோமெற்றிக்குள் மிகுந்த ஆரவாரத்துடன் நுழைகிறார்கள்.வெண்கல

கடைக்குள் கட்டுமீறிய காட்டு யானைகளைப்போல பிளிரளும் பீதியும் கிளப்பியவண்ணம் அவர்களின் நுழைவு தூக்கத்தைக் கீறிக் களைத்துவிடுகிறது.டோமில் இருக்கும் எல்லா டியூப் லைட்களையும் சுவிச் ஆன் செய்ததால் வேறு, ஒவ்வொன்றும் கேமரா பளீச்சென வீரிய வெளிச்சத்துடன் உயிர்த்துக்கொள்கின்றன.’சற்று முன்வரை இருளில் தோய்ந்திருந்த இடம் வேஷம் கலைந்து வெளிச்சப்பிரவாகம் கண்களை கூசச்செய்து உறக்கத்தைக் கலைத்துவிடுகிறது. பின்னிரவு மணி 1.46 வரை மறுநாள் ஒப்படைக்கவேண்டிய நன்னெறி, பயிற்றியல் அசைன்மென்ஸ் முடித்துவிட்டு போய் அக்கடா என்று சாய்ந்த நேரம் பார்த்து , இரவு முழுதும் எங்கேயோ குடித்துக் கும்மாளம் போட்டுவிட்டு டோமுக்குள் நுழைகிறது இந்தக்கும்பல்.மருத்துவனை படுக்கை மாதிரி மூன்றடி தள்ளித்தள்ளிப் வரிசையாகப் போடப்பட்ட

கட்டில்களில் என்னோடு இன்னும் எழெட்டுப்பேர் பேர் அவர்களின் ஆரவாரத்தில் கண்டிப்பாக விழித்துக்கொண்டிருக்கலாம்.ஆனால் அவர்களை ஏதும் கேட்க துணிவில்லாமல் புரண்டு புரண்டு படுத்தவண்ணம் இருந்தார்கள்.(ஆசிரியர் பயிற்சி கல்லூரி படிப்புக்கே வர லாயக்கற்றவர்கள்.இவர்கள் சில சமயம் மோட்டார் சைக்கிளில் பெரும் கூட்டமாக கல்லூரி வளாகத்துக்குள் நுழைவார்கள்.அப்போது மோட்டார் சைகள் எக்சிலரேட்டை திருகி அசுர சத்தத்தை கிளப்பி தங்கள் இருப்பை பிரகடணப்படுத்திக்கொள்வார்கள்.இன்னும் சிலர் முன்னங்கால்களைத்தூக்கி கணைக்கும் குதிரையைப்போல எஞ்ஜின் சத்தத்தை கிளப்பி சாகசமும் செய்வார்கள்.அவர்கள் கூட்டமாக வரும் நேரம் கல்லூரியில் ஏதாவது மாணவர் நிகழ்வு நடந்து முடிந்த வேளையாக இருக்கும்.அவர்களை யாரும் முறைத்துப்பார்க்கும் பட்சத்திலோ, அல்லது அவர்கள் உண்டாக்கிய அனாவசியமற்ற அல்லோலகல்லோலம் பற்றியோ புகார் கொடுக்கும் பட்சத்தில் இ£ந்த கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் தொல்லை அவர்கள் நிம்மதியை குலைத்துவிடும். அதனால் அவர்களைச் சீண்டும் துணிச்சல் அனேகமாக பலருக்கு வருவதில்லை.இந்த கூட்டத்தை MRP (mat rempit pelatih) அதாவது பயிற்சி ஆசிரியர்கள் மோட்டார் சைக்கில் ரௌடிக்கும்பல்.) வெளியில் போட்ட கூச்சலின் எச்சமாக அதனை உள்ளேயும் இழுத்துக்கொண்டு வந்ததுமல்லாமல் உறங்கிக்கொண்டிருப்பவர்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட தராமல் அவர்களின் களியாட்டம் நீள்வதைப் பொருத்துக்கொள்ளாதவனாய்,

“தோலோங் பாடாம் லாம்புலா, கித்தா தெஙா திடுர் நீ” (தயவு செய்து விளக்கை அணைக்கவும், உறக்கத்தில் இருக்கிறோமே) என்றேன்.

“ ஓ நாக் திடுர் யா? ......கமி தாக் திடுர்புன்.....” (ஓ தூங்கணுமா .....நாங்க தூங்களியே)

என்று அஸிஸ் சொன்னவுடன் அவன் சகாக்கள் குபீரென சிரித்தார்கள்.

“ பெசொக் அடா கூலியா, சயா பாரு திடுர்” (நாளைக்கு வகுப்பு இருக்கு .......நான் ‘

சற்று முன்புதான் படுத்தேன்) என்றேன்.

“அனிஹ் கமு சஜா அடா கூலியா,யு இஙாட் கமி நீ காக்கி போத்தொல்கா?” (உனக்கு மட்டுந்தான் வகுப்பு இருக்கா, நான்களெல்லாம் குடிகாரன்ங்கிறியா?என்றான் அசிஸ் மீண்டும்.

“அக்கு நாக் திடுர், தோலோங் ஜாஙான் காங்கு “ (நான் தூங்கணும்,தயவு செய்து தொந்தரவு பண்ணாதே) என்றேன்.

“ லெபிஹ் நீ, எஹ் ஜிக்கா கமு நீ பெத்துல் பெத்துல் அனாக் ஜந்தான், மாய் துருன் கமி லவான் சத்து சமா சத்து” (ரொம்பத்தான் துள்ளுற நீ....... நீ உண்மையிலேயே ஆண் மகன்னா வா இறங்கு ஒண்டிக்கு ஒண்டி போட்டுப்பாத்துக்கலாம் )என்றான்.

அதற்கு மேல் அவனிடம் பேசிப் பயனில்லை என்றபடியால் போர்வையை இழுத்து மூடிக்கொண்டேன்.அப்போதைக்கு அதுதான் உத்தமமானது.

“ ஏ போண்டான் ” (ஆண்மையில்லாதவனே)என்று டோமே அதிரும்படி எக்களித்தான். .எல்லோரும் பலவந்தமாக சிரித்துக்களித்தார்கள்.

என் காதுகளில் எதுவும் விழக்கூடாது என்பதில் மரத்துப்போய்க்கிடந்தேன்.(ஆண்மையில்லாதவனே என்ற உக்கிரத்தைக்கிளரும் சொல் மனதைக் கூர்முனை கொண்ட கத்தியைப்போல் கீறிக்காயப்படுத்திக்கொண்டிருந்தாலும் அவர்களின் எண்ணிக்கையும் அப்போதைய நிலையையும் எண்ணி நான் அடங்கிகிடந்தேன்.



எங்களின் பயிற்சி வகுப்பு பள்ளி விடுமுறையில்தான் துவங்கும்.நாங்கள் தற்காலிக ஆசிரியர்கள்.பள்ளிகளில் தற்காலிகமாக போதித்துக்கொண்டே விடுமுறை காலங்களில் பயிற்சி வகுப்புக்கு ஆஜராகிவிடுவோம். இப்படி ஒருமுறை பயிற்சிக்கு வந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்தது.பள்ளி நாட்கள் முடிந்து மீண்டும் பயிற்சிக்கு ஆஜரானபோது முதல்நாள் சபையில் அந்த அறிவிப்பு வந்தது.

ஒரு வாரத்துக்கு முன்னால் நள்ள்¢ரவு வேளையில் அசிஸ் மோட்டார் சைக்கில் விபத்தில் அகால மரணமடைந்தார். அவருக்காக நாம் ஒரு நிமிடம் மௌனாஞ்சலி செய்வோம்.



2. காற்று கவிதை பேசும் அழகிய தீவு லங்காவி.காடுகளடர்ந்த சின்னச்சின்னத்தீவுக்கூட்டங்களில் நடுவே அலைகளின் தாலாட்டில் மிதந்து கிடந்த தீவு.மஹாதீர் பிரதமராக வந்த பிறகு அதனைப் பினாங்கு தீவுபோல சுற்றுலாத்தளமாக்க நினைத்து அதனை ஐந்தே ஆண்டில் நிரூபித்துக்காட்டினார்.அங்கேதான் பதவி உயர்வு பெற்று அனுப்பப்பட்டேன்.மொத்தம் பதினோரு ஆசிரியர்கள்.அவர்களின் தீபா பயிற்சி முடிந்து வேலையில் அமர்த்தப்பட்ட இளம் ஆசிரியை.லங்காவியிலேயே ஒரு பையனைப்பார்த்து திருமணம் முடித்துக்கொண்டு குடியேறிவிட்டவர். எப்போதுமே உடல் வாகு தெரியும்படி இறுக்கமாக ஆடை அணிவதில் ஆர்வம் உள்ளவர்.மார்பகங்கள் விம்மி நிமிர்ந்திருக்கும்.பிட்டங்கள் மார்பளவுக்கு ஏற்றவாறு கணக்காய்ப்புடைத்திருக்கும்.முட்டிக்குமேல் தொடை தெரிய ஸ்கெர்ட் அணிந்துவருவாள்.ஸ்கிர்ட் மறத்தும் மறைக்காமல் காட்டும் தொடைப்பாகம் கால்களின் நிறத்தைவிட சற்றே பால் வெள்ளையில் மினுமினுக்கும்.அவருடைய பாடம் முடியும் முன்பே மற்ற பாட ஆசிரியர்கள் அவளின் வகுப்பறைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டினர்.அவளோடு பேசிக்கொண்டிருப்பதில் அலாதி பிரியத்தைக்கொண்டிருப்பர்.அவர்களிடம் பேசும்போது அவள் தன் கால்களில் ஒன்றை மாணவர் அமர்ந்திருக்கும் நாற்காலியின் மேல் வைத்து சாவாகாசமாய்ப் பேசிக்கொண்டிருப்பாள்.

பாட ஓய்வு வேளையின்போதும் அவள் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில்தான்தான் ஆண் ஆசிரியர்கள் மொய்த்திருப்பர்.

காலையின் சபை கூடலின்போதும் அவளிடம்தான் பேசிக்கொண்டிருப்பர்.அவளிடம் பேசிக்கொண்டிருக்கும்போது திமிறி நிற்கும் அவளின் தனங்களை¨யும்,ஒடுங்கி இருக்கும் இடையையும்,கனிந்திருக்கும் அவளின் தொடையையும் அவதானித்தவண்ணம் இருப்பர்.அவள் அவர்களின் பார்வையைப் பொருட்படுத்துகிறாளா இல்லையா என்பது தெரியவில்லை.கூச்சப்பட்டிருந்தால் ஆடை அணிவதில் மாற்றம் இருந்திருக்கும்.

ஒரு முறை ஆசிரியர் அறைக்குச் சென்றிருந்தபோது சில ஆண் ஆசிரியர்கள் ஏதோ ஒரு புத்தகத்தில் காந்தமாய் பதிந்துவிட்டது தெரிந்தது.அவர்களின் பின்னால் என் பிம்பம் விழுந்ததை உணராமல் இருந்தனர்.”இந்த புக்குல உள்ள நாலு வகை பெண்களில் தீபா எந்த வகையைச் சேர்ந்தவளா இருப்பாள்” என்ற விவாதம் காதில் விழுந்தது.”கண்டிப்பா பதுமினியா(பத்தினி) இருக்கமாட்டா “ என்றான் ஒருவன்.

நான் அவர்களுக்குத்தெரியாமலேயே அங்கிருந்து நழுவிவிட்டேன்.(பின்னர் அந்தப்புத்தகத்தை எங்கெங்கோ தேடி அலைந்தும் படிக்கக்கிடைக்காமல் போனது என் வாழ்நாள் துர்ரதிஸ்ட்டம்.)

அதற்குப்பிறகு தீபாயை அழைத்து அவள் அணியும் ஆடை பற்றியும் அதனால் உண்டாகும் பாதிப்பு பற்றியும் பேசவேண்டும் என்று முடிவெடுத்தேன்.அவளின் மனம் புண் படாமல் எடுத்துச்சொல்லவேண்டும் என்பதற்கான வார்த்தைகளைத் தேடி தேடி வைத்திருந்தேன்..

பள்ளி நேரம் முடிந்தவுடன் அவளிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்று என் அறைக்கு வரச்சொன்னேன்.அவளும் வந்திருந்தாள்.

நாற்காலியில் அமரச்சொன்னேன்.வெளியே மாணவர்களின் விளையாட்டும் கூச்சலும் கேட்டுக்கொண்டிருந்தது.பெற்றோர் வந்து அழைத்துச்செல்ல காத்திருக்கும் மாணவர்கள். ஆசிரியர் அறையில் சில ஆசிரியர்கள் இருக்கலாம்.சன்னல் வழியாகஅவர்களின் மோட்டார் சைக்கிளைப்பார்க்க முடிந்தது.

“பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் கட்டொழுங்கு விதிகள் இருக்கிறது.இதனை ஆசிரியர்கள் பயிற்சி கல்லூரியிலும் நீங்கள் படித்திருக்கலாம்”

அவள் கண்களைச் சுருக்கிப் புருவத்தை உயர்த்தினாள்.

“நீங்க தவறா எடுத்துக்கக்கூடாது”

.........................

“நீங்கள் உடுத்தும் விதத்தை கொஞ்சம் மாற்றிக்கொள்ளணும்.........இங்கே ஆண் ஆசிரியர்களும் இருக்காங்க....விவரம் தெரிந்த மாணவர்களும் இருக்காங்க....பெற்றோரும் அடிக்கடி பள்ளிக்கு வராங்க.....”

“என்னோட மகிழ்ச்சிக்கு நான் உடுத்திறேன்......இதுக்குக்கூடமா எனக்கு சுதந்திரம் இல்ல.....”

“ஒங்க மகிழ்ச்சிக்கு நீ வெளியில உடுத்திக்கலாம்.........ஒங்க சுதந்திரம் மத்தவங்க கவனத்த திருப்பக்கூடாது.....”

“மத்தவங்க பாத்து ரசிக்கணும்னு நா உடுத்தல.....அவங்க பாக்கறது அவங்க சுதந்திரம்......இந்த மாதிரி உடை எனக்கு திருப்தியும் நம்பிக்கையும் கொடுக்கிறத.....என்னால விட முடியாது.....”

‘தீபா.... நான் சொல்றது கல்வி அமைச்சோட கட்டளை......நமக்கான விதிகள்.....”

“அதான் சார் அந்த விதிகள் என் சுதந்திரத்த பாதிக்குதுன்னா அதை நான் ஏன் மதிக்கணும்.”

(இந்த மாதிரி ஆசிரியரையெல்லாம் அனுப்பி என் தாலிய அறுக்கிறானுங்க.)

“நான் டிப்பார்ட்மென் ஹெட் ங்கிற முறையில சொல்றேன்..சொல்றது என் கடமை..தயவு செய்து இந்த மாதிரி உடைய உடுத்தாதிங்க .இது நம்ம பண்பாடும் இல்ல”

“காலத்துக்கு தகுந்த மாதிரி பண்பாடும் மாறிகிட்டுதான் இருக்கு.என்கிட்ட இந்த மாதிரி உடைதான் நெறைய இருக்கு..இப்போதைக்கு இதுதான் பண்பாடு.....”

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்......மேல் அதிகாரி வந்தா நான் என்னா பதில் சொல்வேன்”

“நான் சொல்லிக்கிறேன்.....என்கிட்ட கேக்க சொல்லுங்க....”

“இப்பத்தான் பயிற்சி முடிஞ்சி வந்திருக்கீங்க....இப்படி விதண்டா வாதம் பேசாதீங்க.....”

“என் ஹஸ்பண்டே நான் இப்படி உடுத்திறத பத்தி கொமென் சொல்றதில்லே....”என்றாள். (நீ யாரு இதக்கேக்கிறதுக்கு?) என்று சொல்வதுபோல் இருந்தது.

“ஒங்க ஹஸ்பண்ட் திருப்திக்கு வீட்ல இஷ்டம்போல உடுத்திக்கீங்க....இங்கே கட்டுப்பாடுன்னு....ஒன்னு இருக்கு.அதற்கு நாமெல்லாம் கட்டுப்பட்டே ஆகணும்”

“பரவால்ல சார் நான் எடுகேசன் டிப்பார்ட்மெண்ட்டுலியே போய்ப் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு விருட்டென எழுந்து போய்விட்டாள்.

இரண்டு நாள் விடுமுறை கழித்துப் பள்ளிக்கு வரும்போது அவளின் உடையில் மாற்றம் இருந்தது.டிப்பாட்மெண்ட் போயிருக்கிறாள் போலும்.கடுமையாக பேசியிருக்கிறார்கள்.

அதிலிருந்து என்னிடம் சரியாகப்பேசுவதில்லை. பள்ளி வேலைகளில் ஒத்துழைப்பதில்லை.ஆசிரியர் கூட்டங்களில் அத்து மீறி எதிர்த்துப்பேசத்தொடங்கினாள்.என்னைப்பற்றி மட்டமாக பேசுவதும் அவ்வப்போது என் காதுக்கு எட்டியது.அவளுக்குத் தெரிந்த பெற்றோரிடத்தில் என்னைப்பற்றியும் என் நிர்வாக முறை பற்றியும் குறை சொல்ல ஆரம்பித்தாள்.இதனால் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தின்போதும் புதிதாக சலசலப்புக்கள் வர ஆரம்பித்தன. மேலிடத்தில் அவளைப்பற்றிப் போட்டுக் கொடுத்துவிட்டேன் என்று காற்றோடு செய்தி வந்து காதில் விழுந்தது.

அவளை வேறு பள்ளிக்கு மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை என்றானது.மாற்றலுக்குப் பிறகும் அவள் கொடுக்கும் தொல்லைக்கு அளவில்லாமல் போனது.என்னைப்பற்றி மேலிடத்துக்கு மொட்டை கடுதாசி போட ஆரம்பித்தாள். அதன் பாதிப்பையும் நான் அனுபவிக்க வேண்டியிருந்தது.மிகுந்த மன அழுத்ததையும் வேதனையையும் அடைய வேண்டி வந்தது.

சில ஆண்டுகளுக்குப்பிறகு நான் பள்ளி மாற்றலாகி சொந்த ஊருக்கே வந்து விட்டேன்.ஒருநாள் எதேச்சையாக லங்காவியில் பணி புரிந்த ஆசிரியரைச் சந்தித்தபோது தீபா முதல் பிரசவ சிக்களில் இறந்துபோனாள் என்று சொன்னார்.



3. இடைந்¢லைப்பள்ளிகள் என்றாலே பதின்ம வயது சேட்டைகள்,வீராஆவேசம், வரட்டுத்துணிச்சல்,எதிர்த்துப்பேசுதல்,கட்டொழுங்கு விதிகளை மீறுதல் போன்ற

‘ஆண்மைத்தனம்’ நிறைந்திருக்கும் இடம் என்று பொருள் கொள்ளலாம்.வயதுதான்..........காரணம்!

அங்கேதான் ஒரு மாணவனின் துணிச்சலை எதிர்கொள்ளவேண்டிய நிர்பந்தம் உண்டானது.

பள்ளியில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய கட்டொழுங்கில் ஒன்று தலைமுடியை இரண்டு அங்குளத்துக்குமேல் வளரவிடாமல் சீராக வைத்திருப்பது.ரவி என்ற மாணவனை அழைத்து முடியை வெட்டச்சொல்லி அறிவுருத்தி அனுப்பிவிட்டேன்.மறு நாள் அவனைப்பார்த்தபோது ஏமாற்றமாக இருந்தது.பள்ளிக்கூடச் சட்டதிட்டத்தைக் கடைபிடித்ததாகத் தெரியவில்லை. இப்படி இரண்டு முறை கூறியும்

அவன் என் எச்சரிக்கையை ஊதாசினப்படுத்தி கடுப்பை உண்டு பண்ணுபவனாக இருந்தான்.மூன்றாவது முறை அவனை கட்டொழுங்கு ஆசிரியர் முன்னால் நிறுத்தினேன்.கட்டொழுங்கு ஆசிரியர் என்ன கடுப்பில் இருந்தாரோ தெரியவில்லை.பையிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து அவன் முடியை

கன்னா பின்னாவென்று கத்தரிக்க ஆரம்பித்துவிட்டார்.ஆடு ஒன்று மிகுந்த பசியோடு மேய்ந்ததுபோலானது அவன் தலை.அவன் கோதி கோதி அழகு பார்த்த முடி கண நேரத்தில் மண்ணில் வீழ்ந்துகிடந்தது.அவன் மானமும் சேர்ந்தே மண்ணில் வீழ்ந்து போன ஆவேசம் அவன் முகத்தில் படர்ந்தது.அவன் எப்படி மற்ற மாணவர்கள் முகத்தில் விழிப்பான்.வகுப்புக்குப்போவான்? ஓய்வு நேரத்தில் எப்படி நடமாடுவான் என்றெல்லாம் சிந்தித்திருக்கக்கூடும்.அவன் முகம் உள்ளே பிரவாகம் கொண்ட ஆவேசத்தைப் பிரதிபலித்தது.

மறுநாள் சாயங்கால வேளையில் கடைத்தெருவில் அவனுடைய தந்தை என்னைப்பார்த்ததும் வேகமாக நடைபோட்டு என்னை நெருங்கியவர் M16 கணக்காய் பொறிந்து தள்ளினார்.விளக்கம் தர எனக்கு துக்குணூண்டு வாய்ப்பு கூடதரவில்லை.கடைசியாக முடிக்கும்போது சுட்டுவிரல் நீட்டி கடும் எச்சரிக்கையை வீசிவிட்டுப்போனார். அவரின் காட்டுக்கூச்சல் கடைத்தெரு மக்களின் கவனத்தைத் திருப்பியது.சிலர் நின்று வேடிக்கைப்பார்த்துவிட்டுச் சென்றனர்.கடைத்தெரு பக்கம் போவதை சில நாட்கள் தவிர்த்தேன்.

ஒரு வாரம் அவனைப் பள்ளிக்கூடத்தில் பார்க்கமுடியவில்லை.

இரண்டு வாரம் கழித்து அவன் ஊரில் காற்பந்து விளையாட்டுக்கு நான் நடுவராக போகவேண்டி இருந்தது.

நான் அவன் ஊர் விளையாட்டாளருக்கு எதிராக விஷில் ஊதும்போதெல்லாம் அவனிடமிருந்து மோசமான வார்த்தைகள் வந்தவண்ணம் இருந்தது.அவன் குரல் தணித்து ஒலித்து எனக்கு எரிச்சலை ஊட்டியது.கூட்டத்தோடு கத்தினால் அவன் என் மீது கொண்ட கோபத்தைக் காட்ட முடியாது என்பதற்காக அவன் வேண்டுமென்றே யாரும் கூச்சலிடாத நேரத்தில் வார்த்தைகளைக் கடுமையாக பயன்படுத்த ஆரம்பித்தான்.சில சமயங்களில் கெட்ட வார்த்தைகளின் பிரயோகமும் தங்கு தடையின்றி வீச ஆரம்பித்தான்.மைதானத்தைச்சுற்றி விளையாட்டை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவனின் வார்த்தைகளையும் உபரி பொழுதுபோக்காக அனுபவித்தனர். கெட்ட வார்த்தைகள் பிரயோகத்தின்போது அவர்கள் உரக்கச்சிரித்தனர்.என்னால் பாதி விளையாட்டுக்குமேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.விஷிலை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு நான் வெளியேறிவிட்டேன்.அந்த கூட்டமும்,மைதானமும் திடீரென எனக்குப்பிடிக்காமல் போனது.

ரவியை பல சமயம் பள்ளியில் எதிர்ப்பாராமல் சந்திக்கும்போதெல்லாம் அவனை நேரடியாகப்பார்ப்பதைத் தவிர்க்க முயன்றேன்.



இதுபற்றி கட்டொழுங்கு ஆசிரியரிடமும் தகவல் கொடுக்கவில்லை.அவர் எடுத்தேன் உடைத்தேன் என்று முடிவெடுப்பவர்.

ஒருமாத காலம் ஓடியிருக்கும்.ரவி சைக்கிலில் வீட்டுக்குத் திரும்பிகொண்டிருக்கும்போது மர லாரியில் மோதி அங்கேயே இறந்துபோனான் என்ற தகவல் கிடைத்தது.



இப்படி பல இறப்புகள் என்னை எதிர்கொண்டன.

என்னைப்பற்றி எழுத்தாளர் கார்மேகன் செய்த பத்திரிக்கை வழியான அவதூருக்குப்பிறகு அவர் ஹார்ட் அட்டேக்கில் இறந்துபோனார் என்ற செய்தி.....

நடராஜனின் பணமுடையை தீர்க்க நான் பணம் கொடுத்ததும்.அதனைத் திருப்பிகேட்டதற்கு “நான் உன்னிடம் பணம் வாங்கியதற்கு சாட்சி உண்டா என்று கேட்டு என் வாயை அடைத்ததும்.அதற்குபிறகு சில நாட்களில் அவர் டிங்கி காய்ச்சலால் இறந்துபோனதும்....

பள்ளியில் சத்துணவு டெண்டர் எடுத்த வீரசாமி மாணவர்களுக்கு பரிமாறிய உணவு அவருக்கு கொடுக்கும் பணத்துக்கு ஏற்ப இல்லாததால் ,பல முறை எச்சரித்த பிறகும் மாற்றமில்லாததல் அவரை நீக்கவேண்டி வந்ததும்.அதனால் “நீ உருப்படமாட்ட” என்ற அவரின் ஆவேச வார்த்தைக்கு ஆளாக வேண்டி இருந்ததும். எனக்குச் சாபமிட்ட அவர் பெயர் தெரியாத வியாதியில் விழுந்து குணப்படுத்த முடியாமலேயே ஒருநாள் கண்ணை மூடிவிட்டதும்............

இப்படியாக இன்னும் பல நேர்ந்தன.



4. இப்போது மீண்டும் ஒரு புதிய சம்பவம்.

நான் பணியிலிருந்து ஓய்வு பெற ஒன்றரை ஆண்டுகளே பாக்கி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றுபருக்குக் கூடுதல் போனஸ¤ம்,சிறப்புச்சான்றிதழும் வழங்குவது நடப்பில் இருக்கும் வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த போனஸ் கிடைக்காத ஆசிரியர்களிடையே அதிருப்திகள் நிலவுவது சகஜம்.இதனைத்தவிர்க்க முடிவதில்லை.இந்த ஆண்டு பிராண்ஸிஸ் எதிர்ப்பார்த்திருப்பார் போலும். என்னுடைய கணிப்பில் சதாசிவத்துக்குக் கொடுத்துவிட்டேன். சதாசிவத்துக்கும் பிரான்ஸிஸ¤க்கும்க்கும் ஏற்கனவே வாய்ப்பேச்சு முறிந்து போயிருந்தது. பழைய பகை.பிரான்ஸ்சின் மூர்க்கத்தைக்கிளற இது ஒன்று போதும்.கமுக்கமாய் குசு விட்டதுபோல ஒரு காரியத்தை செய்துவிட்டார்.

ஒரு நாள் காலை மணி ஏழறைக்கெல்லாம் லஞ்ச ஒழிப்பு ஊழல் அதிகாரிகள் என் அலுவலகத்துக்குள் நுழைந்து அலுவலக் பைல்களைச்சோதனைப் போடவேண்டுமென்று கறாராக நின்றார்கள்.

“ உங்கள் மேல் புகார் வந்திருக்கிறது. ஏழை மாணவர்களுக்கு வழங்கும் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் கிடைத்துள்ளது.நாங்கள் சோதிக்கவேண்டும்,” என்றார் அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிய லியாவ் என்பவர்.எனக்குப் பதற்றம் மேலிட ஆரம்பித்தது.முதுகுப்பக்கம் சிச்சிட்டு சட சடவென வியர்வை கொட்டி சட்டை ஒட்டிக்கொண்டது.முகத்தில் துளிர்த்தவற்றை கைகுட்டையால் ஒற்றிக்கொண்டிருந்தேன்.அவசரமாய் ஒன்னுக்குப்போகவேண்டும் போல இருந்தது.

நான் எந்த முறைகேடும் செய்யவில்லை. என் கோப்புகளை சோதித்த பிறகு அவர்களே தெரிந்து கொள்வார்கள். ஆனால் ஒரு பக்கம் விடிவதற்கு முன்பே அதிகாரிகள் அலுவலகத்துக்குள் நுழைந்தது அதிர்ச்சியையும் அவசியமற்ற பீதியையும் உண்டாக்கியது.இதனை எதிர்பார்த்திராத எனக்கு வெட்கம் மேலிட்டது.லஞ்ச ஊழல் அதிகாரிகள் தலைமை ஆசிரியரைச் சோதிக்க வந்தார்கள் என்ற தகவல் ஒன்று போதும். அதற்கு கண் காது, மூக்கு, வாயெல்லாம் வைத்து உருவம் கொடுத்துவிடும் நம் சமூகம்.சோதனை ரிப்போர்ட் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று வரலாம்.அந்த ஒற்றைக்காகித உண்மையை டமாரம் அடித்தா ஊருக்குச்சொல்ல சொல்லமுடியுமா?



லஞ்ச ஊழல் அதிகாரிகள் சில பைல்களை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்.


எனக்குள் புத்தம் புதிய மரண வாடை வீசத்தொடங்கியது
 
கோ.புண்ணியவான்
நன்றி யுகமாயினி

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...