இந்த
மனப் பேயை
என்ன செய்யலாம்
ஒரு எதிரியையாய்
முரண்படுகிறது
மனைவியாய்
பிடுங்குகிறது
வாலியாய்
ஏழு ஆள் பலம்கொண்டு
ஏதிர்க்கிறது
ஆதிக்கச்சக்தியென
அடிமைத்தளைகொண்டு
கீழ்பணியச் செய்கிறது
தழும்புகளை
வருடியவாறே முயற்சியிலிருந்து
சற்றும் மனம் தளராத
விக்ரமாதித்தனாய்
வேதாளத்தோடு
மல்லுக்கு நிற்கிறது
உண்மைகளை
உள்ளிழுத்தவாறே
உலக வங்கியென மலையாய் நிமிர்கிறது
வட்டிக்காரனாய்
சேகரமான
பழைய பாக்கியை
கேட்டுத்தொலைக்கிறது
கடவுளாய்
சாம்பலாய்
பீனிக்ஸ் பறவையாய்
காணாமற்போகாமல்
குறுக்கே நடந்து நடந்து
மிரட்டுகிறது
கிள்ளி எரியலாமென்றால்
குழந்தையாய் அலருகிறது
புதைத்து கதையை முடித்துவிடலாமென்றல்
கமுக்கமாய் இருந்து
வேராய் கிளைபிடிக்கிறது
உருவமென்றிருந்தால்
கழுத்தை நெறித்து
கொன்று தொலைக்கலாம்
அருவமாய்
அசரீரியாய்
உயிர்பிடுங்கியாய்
உடனிருந்தே
கொன்றுகொண்டே இருக்க்கிறது.
கோ.புண்ணியவான்.
1 comment:
ungal valaip paguthikku vanthen.manasu pinnik kondathu.
thodarnthu varuven
-Sebastian
Post a Comment