Skip to main content

தமிழ்ப்பெண்களின் ரத்தத்தை உறிஞ்சும் டிராக்குலாக்கள்

கடந்த மாதம் 3 நாள் விடுமுறையைக்கழிக்க மலேசிய திரங்கானு மாநிலக்கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள லாங் தெங்ஙா

தீவுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம். முதல் நாள் நள்ளிரவு சுங்கைப்பட்டாணியிருந்து புறப்பட்டோம். நள்ளிரவு கார் பயணத்தில் எனக்கு

மிகுந்த ஒவ்வாமை உண்டு. தூக்க நேரத்தில் விடிய விடிய கார் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கும்போது ஒவ்வாமை

கூடுதலாகிவிடும்.அதிலும் கைக்குழந்தைளோடு பயணத்தை மேற்கொள்வது மனதை கலங்கடித்துவிடும். என் ஊர் சுங்கைப்பட்டாணி, மலாயா தீபகற்பத்தின் மேற்கு

கடற்கரையில் அமைந்துள்ளது.திரங்காணு நேரெதிர் முனையில் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ளது. குறுக்குவெட்டாக பயணிக்கத்தோதுவாக

மலைத்தொடர்களை ஊடுறுத்துச்செல்லும் அழகிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஏழு மணி நேரப்பயணம். நடுவே நீண்ட தூரத்துக்கு அடர்ந்த ரம்மியமான காடுகள்.

காடுகளை இருப்பிடமாகக்கொண்ட பலவகை மிருகங்களையும் பார்த்துக்கொண்டே பயணிக்கும் பீதி கலந்த இன்ப அதிர்ச்சிகளோடு பயணிக்கும்

அனுபவத்தை சொல்லில் அடக்க முடியாது. ஒருமுறை ஊட்டியிலிருந்து பெங்களூருக்குப்பயணம் மேற்கொள்ளும்போதும் இதுபோன்ற அனுபவம் உண்டானது.

காடுகளைக்கடந்து செல்லும்போது யானைகளையும், புலி சிங்க வகைகளையும் பார்த்துக்கொண்டே செல்வது நம் இருதயத்துடிப்பை இரட்டிப்பாக்கும் தருணங்களாகும்.

இந்தக்காட்டில்தான் கர்நாடகத்தின் எம்.ஜி.ஆர் ,நடிகர் ராஜ்குமாரை நம்ம காட்டின் நாயகன் சந்தனக்கடத்தல் வீரப்பன் (tamil nad robin hood) கடத்திக்கொண்டுபோய்

வைத்திருந்து இரு மாநிலஅரசாங்கத்தின் கண்களில்விளக்கெண்ணெய்யை ஊற்றி விரல்களால் விளையாடியது நம் நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும்.

ஊட்டி வனம் தரும் பிரம்மிக்களுக்கு ஈடாக இல்லையென்றாலும், தெரங்காணு காடுகளை லேசாக எடைபோட்டுவிடமுடியாது.

யானைகள் ஜாக்கிரதை என்ற பெயர்ப்பலகை சாலை ஓரங்களில் நம்மை எச்சரித்தவாறு நின்று முறைக்கும். அவ்வப்போது சாலை இரு மருங்கிலும்

சில யானைகள் சாலையை ஜாக்கிரதையாகக் கடப்பதைப்பார்க்கமுடியும். சில யானைகள் சாலை விதிமுறையை இன்னும் சரியாகப்படிக்கவில்லை என்பதை அவை

கடந்துபோகும் லட்சனத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம். விட்டால் நம்ம சாலைபோக்குவரத்து இலாகா அதிகாரிகள் அவற்றிடமும் தும்பிக்கையூட்டு வாங்கி விடுவார்கள்.

சாலை விதிமுறையைச் சரியாகக் கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்பேரில். ஏனென்றால் இவர்கள் நரிக்கூட்டங்கள். இனம் இனதோடுதானே சேரும்,

பாம்பின் கால் பாம்பறியுமல்லவா?

நான் அவர்களை குற்றம் சொல்வதாக எண்ணவேண்டாம்.

சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாட்டில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறதே!

அந்த அடர்ந்த காட்டில் காட்டுப்பன்றிகள், கவரிமானகள், முள்ளம்பன்றிகள், பறவை இனங்கள், புலி இனத்தைச்சேர்ந்த சிலவகை மிருகங்களையும் காணலாம்.

அவை சாவகாசமாய் சுற்றித்திரியும். நாமும் சாவகாசமாய் இறங்கிப்போய் நின்று பார்த்துவிட்டுப்போகலாம் என்று நினைக்காதீர்கள்.

அப்புறம் பார்த்துவிட்டு ஒரே அடியாய் போய்விடுவீர்கள்.அழகை எட்டி இருந்து ரசிப்பதுதான் புத்திசாலித்தனம்.(திருமணத்துக்குப்பின் உண்டான ஞானம்)

விடிய விடிய பயணம் செய்து மணி அதிகாலை மணி 5.30 க்கு படகுத்துறையைப்போய்ச்சேர்ந்தோம். காலை 9.00 மணிக்குத்தான் படகு வரும்.5.30

மணிக்குப்போய்ச்சேர்ந்த எங்கள் நிலையைப்பற்றிச்சிந்தித்துப் பாருங்கள். அது ஒரு கடற்கரை கிராமம்.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. இரண்டே இரண்டு

கடைகள்தான் இருந்தன.

இரண்டுமே திறக்கப்படவில்லை. கொசுவின் சர்வாதிகார ராஜ்யம் ஆரம்பமாகிவிட்டிருந்தது. காரில் கால் நீட்டித்தூங்கமுடியவில்லை. கடையின் ஐந்தடியில்

சாய்வு நாற்காலி ஒன்று இருந்தது அதில் போய் துங்கலாம் என்று சாய்ந்தால், விருந்தினர் வந்திருக்கிறார் என்ற விருந்தோம்பல் மனமோ, இலகிய மனம்

என்பதே இல்லை கொசுக்களுக்கு .ஊறுகாய் அளவுக்குக்கூட .விருந்தோம்பலை விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கும் மனம்தான்

அதனிடம் உண்டு. வேறு வழியில்லாமல் காலாற கடற்கரையோரம் நடக்கலாம் என்றால் செத்த மீன்களின் நாற்றம் நடக்கவிடாமல் செய்தது.

எங்களின் விடுமுறை கொண்டாட்டம் விடிய விடிய இப்படியே கழிந்தது. விடுமுறை இப்படியா கழியவேண்டும்?

மணி 9.00க்குள் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுப்பயணிகள் கூடிவிட்டனர்.வெளிநாட்டினர் பலர் அதில் அடங்குவர். குறிப்பாக மேலை நாட்டினர்.

சூரிய வெப்பத்தில் உடலை காயவைப்பதே அவர்களின் முகாந்திரமான பயன நோக்கமாகும்.நம் பெண்கள் அப்படியில்லை. கொஞ்சம் வெயிலென்றாலும்

குடையை விரித்து விடுகிறார்கள்.

வெளுப்பதற்கு எதுவும் மிஞ்சாத போதும்.

உடல் நலத்தைப்பேணும் அவர்கள் எங்கே, கருப்பாய் பிறப்பதற்கே கடுந்தவம் செய்திடவேண்டும் என்று கருதாத நாம் எங்கே?

சரி பயணக்கட்டுரைக்கு வருவோம்.

காலையிலேயே ஏறத்தாழ ஏழெட்டு படகுகள் பயணிகளை ஏற்ற துறைமுகத்துக்கு வந்திருந்தன.தெரங்கானு கடற்கறையை ஒட்ட்டிய பல்வேறு தீவுகளுக்கு

பயணிகளை ஏற்றிச்செல்ல அவை முகாமிட்டிருந்தன.தீவுகளில் அமைந்திருக்கும் உல்லாசவிடுதிகளுக்கு சொந்தமான படகுகள் அவை.

இணைய வசதிவழி ஏற்கனவே பதிவு செய்திருந்ததால் எந்தப்படகில் ஏறவேண்டுமென்பதில் குழப்பம் இருக்காது.

ஏறக்குறைய 40 நிமிட ஓட்டத்தில் படகு தீவை அடைந்துவிட்டது.

எங்களை வரவேற்க ஒரு தமிழ்ப்பெண் அக்கரையில் காத்திருப்பது வியப்பான ஒன்றாகவே இருந்தது.

ஒரு தனித்த தீவில் , தீபகற்ப நிலப்பகுதிக்கு அப்பால், 20 கிலோமீட்டர் தள்ளி, ஒரு இளம் தமிழ்ப்பெண்ணின் காத்திருப்பு மற்றவர்க்கு அதிர்ச்சியாக

இல்லையென்றாலும் எங்களுக்கு இருந்தது.

வீட்டுக்குள்ளே பெண்ணைப்பூட்டி வைப்போம் என்ற

விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்

என்ற புரட்சி வரிகள்தான் நினைவுக்கு வந்தது அப்போது.

போகப்போகத்தான் தெரிந்தது பிற இன முதலாளிகளிடம் வன்முறைக்கு ஆளான அவர்களின் நிலை.

கறையை அடைந்தவுடன் விடுதியின் லோப்பிக்கு அழைத்துச்சென்று வரவேற்பு குளிர்பானம் கொடுத்தனர். அது குளிர்பானமாக இல்லை.

கலரை சீனி போட்டு கொடுத்த மாதிரிதான் இருந்தது.அப்போதுதான் இன்னோரு தமிழ்ப்பெண்ணையும்

அங்கே பணிக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்தது.

இருவரும் ஏறத்தாழ ஒரே மாதிரி உருவ அமைப்பைக்கொண்டிருந்தனர்.அந்தத் தனித்த தீவில் டிரகுலா ஒன்று அவர்களின் ரத்தத்தைத் தவணை முறையில் உறிஞ்சி

வருவதுபோலப்பட்டது. டிராகுலா என்று நான் சொல்வதற்கான புதிருக்கு பின்னர் பதில் தருகிறேன்.

எங்களை அந்தப்பெண்களில் ஒருவர் நாங்கள் தங்கும் விடுதி அறைக்கு அழைத்துச்சென்றார். எங்களின் ஒவ்வொருவரின் பயணப்பையையும் மாறி மாறி

அவர்தான் அறைக்குக்கொண்டுவந்து சேர்த்தார். ஒவ்வொருநாளும் அந்தப்பெணகள்தான் house keeping செய்து வந்தனர்.அந்த விடுதியில்

சுமார் 100 அறைகள் இருக்கும். 50 அறைகளில் பயணிகள் தங்கி இருந்தனர். இந்த 50 அறைக்கும் இவர்கள்தான் பிரதி தினமும் house keeping செய்யவேண்டும்.

அன்று மதிய உணவுக்குப்பின் snorkelling போவதற்கான பொருட்களை கிடங்கிலிருந்து எடுத்துக்கொடுத்தனர்.அங்கு அத்தனை பேருக்கும் அவர்கள்தான்

ஏற்பாடு செய்து அனுப்பவேண்டும். கடலாடிவிட்டுத்திரும்பி வந்ததும் அவர்கள்தான் திரும்பப் பெற்று முறையாக அடுக்கிவைக்க

வெண்டும்.மதிய உணவுக்கு போனபோது அவர்கள் இருவரும்தான் உணவு வகைகளை பறிமாறிக்கொண்டிருந்தனர். நல்ல வேலையாக சமயற்காரன் இருந்தான்.

அவன் ஒரு இந்தோனேசியபணியாள் என்பதை அவனிடம் பேசும்போது தெரிந்தது.

தட்டுக்களையும் அவர்கள்தான் மீண்டும் கழுவி வைக்கவேண்டும்.இடையில் பியர், மினரல் ஓட்டர் சிகிரெட் போன்ற விற்பனையிலும் கடைச்சிப்பந்தியாகவும்

அவதாரம் எடுத்திருந்தனர். அந்த விடுதியில் சமயற்காரனைத்தவிர வேறு பணியாட்களை நாங்கள் பார்க்கவில்லை.கணக்கரோ, மேல் அதிகாரியோ,உரிமையாளரோ

அங்கே இல்லை.எல்லா பிரச்சினைகளையும் இவர்களே தீர்க்கவேண்டும். மேலதிகாரி கோலலம்பூரில் காலாட்டிகொண்டு இருக்கிறார்போலும். தீர்க்கமுடியாத

பிரச்சினை எழுந்தால்மட்டுமே தொலைப்பேசி வழி தொடர்பு கொள்கிறார்கள். பின்னர் வந்து ஏதாவது சாக்குப்போக்கு சொல்கிறார்கள்.

நாங்கள் அங்குத் தங்கிய மூன்று தினங்களில் இவர்கள் படும் அவஸ்தையைப் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம்.

அதிகாலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்களோ

தெரியாது.அவர்கள் படுக்கும் நேரம் அநேகமாக பின்னிரவு 1.00 மணிக்கு மேல்தான்.ஐரோப்பியர்கள் உல்லாசமாய் பீர் அருந்துவது பின்னிரவுவரை நீடிக்கும்.

இப்படியாக சகல வேலையும் அவர்கள்தான் செய்ய வேண்டும். விடுதியில் போதிய வசதிகள் இல்லை. உணவு குறிப்பிட்ட அளவே பரிமாறப்படும்.முந்திக்கொணடவர்

சற்று மிகுதியாக எடுத்துக்கொண்டால் கடைசியாக வருபவ்ர்களுக்கு உணவு எஞ்சாது. உணவு கேட்பவர்களிடம் முடிந்துவிட்டது என்று பதில் சொல்லிவிட்டு

வாங்கிக்கட்டிகொள்வதும் இந்த இரு பெண்களும்தான். ஒரு சமயம் அதே தீவில் இரவு நேரத்தில் காட்டு வழியாக குழந்தைகளோடு கைப்பேசி வெளிச்சத்தில் வேறொரு

விடுதிக்கு நடந்து சென்று சாப்பிட்டுவிட்டுத்திரும்பிய அனுபவம் எங்களுக்கு மட்டுமல்ல வேறு பல பயணிகளுக்கும் உண்டானது.அது மட்டுமல்ல இணையவழி அவர்கள் விளப்பரப்படுத்திய வசதிகளில் பாதிகூட அங்கில்லை.இரண்டு முறை பயணிகளை snockelling அழைத்துச்செல்லவேண்டும்.அதில் ஒன்று பயணி களைக்கவரும் இடமான corals'சும் அதிசய வண்ணங்களைக்கொண்ட மீன்கள் வாழும் கடற்பகுதியான ,மலேசியாவின் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான இடமான marine park. அங்கு எங்களை அழைத்துச்செல்லவில்லை.மாறாக விடுதிக்கு மிக அருகில் உள்ள கடற்கரை ஓரத்திற்கு கொண்டு சென்று காட்டிவிட்டுத்திரும்ப அழைத்துவந்துவிட்டனர்.முறையான பதில் சொல்ல விடுதி பணியாளர்கள் அங்கில்லை. இந்தப்பெண்கள் எங்களுக்குத்தெரியாது என்று கைவிரித்து பயணிகளிடம் அவ்வப்போது வாங்கிக்கட்டிகொண்டிருந்தனர் அவ்விரு பெண்களும்

அவர்களிடம் பேசியபோது சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றோம். அந்தப்பெண்கள் வேலைக்கு வந்து மூன்று மாதம் ஆகிறது என்றும்,

இதுநாள் வரை சம்பளம் தரப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.ஏன் என்று விசாரித்தபோது விடுதி பணி பயிற்சிக்காக ஒரு கல்லூரியில்

படித்துக்கொண்டிருப்பதாகவும், இங்கே pracktical லுக்கு வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.பணியிடைப்பயிற்சிக்கு வந்தவர்களிடம் இவ்வளவு

வேலையையும் ஒப்படைத்துவிட்டு வங்கிக்கணக்கை வலிமையயாக்கும் முதலாளித்துவ தந்திரம் ஜனநாயக நாடுகளில் காலுன்றி ஆழவேர்பிடித்து

வலுவாகிக்கொண்டே இருக்கிறது. வருமானத்தின் மேல் மட்டும் கவனம் செலுத்தும் இவர்கள் நுகர்வோருக்கு நேரடியாக நின்று பதில் சொல்லாமல் இந்தப்பெண்களின்

பாவாடைக்குப்பின்னல் ஒளிந்துகொண்டு நிர்வாகம் செய்வது மிகுந்த பேடித்தனம் வாய்ந்தது.அது தமிழ்ப்பெண்களுக்கெதிரான கொத்தடிமைக்கலாச்சாரத்தைக்

கட்டவிழ்த்தவாறு இயங்கிய வண்ணமிருக்கிறக்கிறார்கள்.

இந்தத்துறையில் மட்டுமல்ல, தனியார் மருத்துவ மனைகளில், பேரங்காடிகளில், விற்பனை மையங்களில், சீனர்கள் முதலாளிகளாக இருக்கும்

தொழிற்பேட்டைகளிலும் அதிக நேரம் வேலை வாங்கப்பட்டு குறைந்த ஊதியம் பெறும் பெண்கள் தமிழ்ப்பெண்களாகவே இருக்கிறார்கள். சீனப்பெண்களை

குறைந்த சம்பளம் வாங்கும் கொத்தடிமை வேலைகளைச்செய்யமாட்டார்கள்.

நான் விடுமறையைக்கழிக்கச்சென்ற இடத்தில் வேலை செய்யும் தமிழ்ப்பெண்களிடம் உங்களுக்கு அலவன்ஸாவது கொடுப்பார்களா என்று கேட்டதற்கு

"தெரியாது, கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை" என்று சொன்னார்கள். பயிற்சிக்கு வந்தவர்களாகவே இருக்கட்டும், ஒரு விடுதியின் 90 விகிதம் வேலையை

அடிமையைப்போல செய்த , தன் முதலாளிக்குப்பெருத்த வருமானத்தைத் தேடித்தந்தவர்களுக்கு நன்றிக்கடனாக ஒரு கனிசமான தொகையை தருவார்களா

என்பது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது.'கொடுக்காவிட்டால் பரவாயில்லை 'என்ற மனோபாவத்தைக்கொண்டிருக்கும் இந்தப்பெண்களின் வாயில்லாத்தனத்தை

மூலதனமாகவைத்து இவர்களை தொடர்ந்து ஏமாற்றும் போக்கு அரங்கேறிவிடும் ஆபத்து உண்டு. கடந்த மூன்று மாதமாக சம்பளம் தராதவர்கள் பயிற்சி முடிந்த பிறகு

தருவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? பயிற்சிக்கு வந்தவர்கள் தானே, இவர்களுக்குத் தந்தால் என்ன தராவிட்டால் என்ன? பயிற்சி முடிந்ததும்

போய்விடுபவர்கள்தானே, இனி அவர்கள் நமக்குத் தேவைப்படமாட்டார்கள், என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கக்கூடும். முடிந்தமட்டும் ரத்தத்தை

உறிஞ்சிவிட்டு கைகழுவிக்கொள்வது முதலாளித்துவத்தின் வன்கொடுமைகளில் ஒன்று.

முதலாளி டிராக்குலாக்களின் இந்தப்போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

Comments

Popular posts from this blog

பயணக் கட்டுரை 12 : இருபதும் எழுபதும்

12. பத்தாவது ஆண்டு விஷ்ணுபுர இலக்கிய விழாவும் உரையாடலுக்கான அங்கமும்காலை 9 மணிக்கெல்லாம் ராஜஸ்தானி மண்டபம் கலைகட்டிவிட்டது. மளமளவென சுமார் 300க்கும் மேலானோரால் மண்டப இருக்கைகள் நிரப்பப்பட்டுவிட்டன. வாசலில் மூன்று இடங்களில் புத்தகங்கள் விறபனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நான் தேடிய பல நூல்கள் அங்கிருந்தன. நவீன எழுத்தாளர்களின் நூல்கள் நிறைய கிடந்தன. சிலவற்றை நேரம்  கிடைக்கும் போதெல்லாம் ஒரு சில பக்கங்களை வாசித்து வாசித்து வாங்கி வைத்துக்கொண்டேன். இப்போதே 10 கிலோவைத் தாண்டிவிட்டிருந்தது. சென்னையில் போய் வாங்கவேண்டுமென்ற திட்டத்தை  கைவிட்டேன். நான்கைந்து புத்தகங்களை மட்டும் கோவை விற்பனையாளர்கள் சென்னை கடைக்காரர் உங்களைத் தேடி வந்து கொடுப்பார் என்றார். அப்படியேதும் நடக்கவில்லை. நாங்கள் தான் போய் வாங்கினோம்.

ஜெயமோகனைப் பார்த்துப் புன்னகைத்தேன். என்னை யாரோவென்று பார்த்தார்.மீண்டும் காலை பசியாறலின்போது கை கொடுத்தேன் சரியாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முதல் நாள் கடைசி அங்கத்தில் கவிஞர்
ரவிசுப்பிரமணியத்தின் கலந்துரையாடல் முடிந்தவுடன் என்னை அவரை கௌரவிக்க அழைத்தார்கள். அதன் பின்னரே நான் வந்திருப்பதைக…

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான்.அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன்றோ…

நூல் விமர்சனம்: கோ.புண்ணியவானின் சமீபத்திய சிறுகதை நூலான 'எதிர்வினைகள்'

  அழியாமல் ஆடிக்கொண்டிருக்கும்  தடித்த வடுக்கள்

     பல தருணங்களில்  மனம் எதற்கெதற்கோ கடந்து தவியாய்த் தவிக்கும். கோ. புண்ணியவானின் மனமும் அப்படித் தவித்துதான் பல எதிர்வலைகளை எழுப்பியுள்ளது. சமுதாயத்தில் புரையோடியிருக்கும் புண்களைத்தான் எல்லா படைப்பாளனும் நமக்குக் காட்டிக்கொண்டிருப்பார்கள். இதைத்தான் இவரும் செய்திருக்கிறார். இருப்பினும் தன் எளிய நடையில் தன்னைப் பாதித்தப் பதிவுகளை மிக நேர்த்தியாக எதிர்வினைகளாக்கியிருப்பதுவே அவருக்குள்ள தனித்துவமாகும். இத்தொகுப்பின் தலைப்பும் எதிர்வினைகள் என்றிடப்பட்டிருப்பதுவும் சிறப்பு அம்சமும்கூட.
சாமிக்கண்ணு தூக்குபோட்டுக்கொள்வதும் அதனால் அவனுடைய மனைவி சாரதா அடையும் விடுதலையும்தான் கதையின் போக்கு. அவன் கொடுத்த ஆறாத் துயரங்களைக் கதையோட்டத்தினூடே அடுக்கிக்கொண்டே போகிறார். புறவாழ் மக்களின் எண்ணப் பகிர்வுகளும் புலம்பல்களும் சாவு வீட்டில் சிதறிக் கிடக்கின்றன. இதேப் போன்றுதான் ஆறுமுகம், ‘இறந்தவன் பற்றிய வாக்குமூலமும்’ கதையில் தூக்குமாட்டிக்கொள்கிறான். இருவர் பிழைப்பும் நாறிப்போனதுதான் என்று கதை சொல்கிறது. குடிக்காரக் கணவர்கள் குடும்பத்தில் மனைவியிடத்தில் …