Skip to main content

தமிழ்க்கல்வியின் அடிமடியில் கைவைக்கும் அரசின் புதிய திருத்தம் கோ.புண்ணியவான்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தமிழ்க்கல்வி மிகுந்த சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. அதன் நீட்சியாக இன்றைக்கும் வேறொரு வடிவமெடித்து தமிழ்க்கல்வியின் நிலைப்பாட்டை அச்சுருத்தி வருகிறது. மலேசியக் கல்விச்சான்றிதழ் (spm) சோதனையில் 2010 முதல் 10 பாடங்கள் மட்டுமே எடுக்கமுடியும் என அரசாங்கத்தின் அதிரடி முடிவில் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய இரு பாடங்களின் மேலான மாணவர்களின் ஆர்வம் சிதைவுறும் கட்டத்தை அடைந்ததுள்ளது எப்போதுமே தமிழ் மொழி தமிழ் கற்ற பலருக்குச் சோறுபோடும் மொழியாக இருந்தது கிடையாது.( தாய் மொழியை அப்படிப் பார்ப்பதால்தான் அதன் சிதைவுக்கும் அழிவுக்கும் நாமே காரணமாகி விடுகிறோம்) மலேசியாவில் மட்டுமல்ல , சிங்கப்பூர், தமிழர்களையே கொன்று குவித்த சிரி லங்கா, ஏன் தமிழ்நாடும் அதே நிலையைத்தான் எதிர்நோக்குகிறது. தமிழ் மொழி செம்மொழி தகுதியை அடைந்த பின்னரும் தமிழகத்திலும் அதன் தலயெழுத்தை மாற்றமுடியாது இருப்பதானது தமிழுக்கே இருக்கும் தனித்த பெருமை.



மலேசிக் கல்விச் சான்றிதழ் சோதனையில் கூடிய பட்சம் 10 பாடங்கள் மட்டுமே எடுக்க முடியும் என்ற அரசின் அறிவிப்பையொட்டி, 12 பாடங்களாக உயர்த்த வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அரசு 12 ஆக உயர்த்தியது. மேல் முறையீட்டுக்குப் பிறகு வந்த இரண்டாவது அறிவிப்பு தமிழ்க்கல்வியின் வயிற்றில் பாலை வார்த்தாலும் கூடவே நஞ்சையும் கலந்திருக்கிறது என்பதுதான் இந்த மாற்றத்தினால் நேர்ந்த பாதிப்பு. 12 பாடங்களாக எண்ணிக்கையில் மட்டுமே உயர்த்தியிருக்கிறதே தவிர அதனை மீண்டும் செயற்கை பிராணவாயு கொண்டே ஜீவிக்கவேண்டிய மீண்டுமொரு சோதனயான கட்டத்துக்கு ஆளாகியிருகிறது நம் தாய்மொழி. அரசு நிர்ணயித்த 10 பாடங்களின் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், கோரிக்கைக்குப்பிறகு கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்பட்ட இரண்டு பாடங்கள் மதிப்பீட்டுக்கு உதவாது என்று அறிவித்து நம் போராட்டத்தை வேறு கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. மலேசியாவில் தமிழ் மொழிக்காகப் போராடுவது அனுமனின் வாலென தொடர்கதையாகவே இருந்துவருகிறது.



சோதனையின் முடிவுகளையே முன்னீடாக வைத்து நகர்த்தப்படும் கல்விக்கொள்கைக்குத் தமிழ் மொழிப்பாடமும் தமிழ் இலக்கியப் பாடமும் புறந்தள்ளப்பட்டுள்ளதானது அதன் உயிர் இயக்கத்துக்குப் பெரிதும் முரணான ஒன்று என்றே கருதுகிறார்கள் தமிழர்கள். பெற்றோரின், மாணவர்களின், ஆசிரியர்களின் மனப்போக்கு சோதனைகளின் முடிவுகளை நோக்கியே முடுக்கப்பட்டுள்ளது என்பது இன்றைய கல்விகொள்கையின் சாபக்கேடு. முக்கியத்துவம் அளிக்கப்படாத இரண்டு பாடத்தையும் சோதனையில் எடுக்கப் பெருவாரியான மாணவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள் என்பது உறுதி. ஏனெனில் இது சோறு போடாத மொழியாக உறுதிப்படுத்தப்பட்டதே காரணம்.



மலேசியாவில் தமிழ் மொழி மிகச் சிறுபான்மைத் தமிழருக்குச் சோறு போட்டுத்தான் வந்திருக்கிறது. இன்றைக்கு மலேசியாவில் இயங்கும் 532 தமிழ்ப்பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும் , இடை நிலைப்பள்ளியில் தமிழ் மொழியை ஒரு பாடமாகப்போதிக்கும் ஆசிரியர்களுக்கும், தமிழ் மொழியை ஒரு பாடமாகப்போதிக்கும் ஒரு சில ஆசிரியர் பயிற்சி கால்லூரி விரிவுரைஞர்களுக்கும், ஐந்தாறு பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் தமிழ் சோறுமட்டும் போடவில்லை பந்தி போஜனமே கொடுத்து வருகிறது. இது சோறுபோடும் மொழி என்று அரசு கருதினாலுமே போதும்.



சமூகம் உரத்த குரல் கொடுத்தததும் மேற்கொண்டு இரண்டு பாடங்களை கொடுத்து, அதற்கு முக்கியத்துவத்தைக் கொடுக்கத்தவறியதானது பறவையின் இரண்டு சிறகையும் நீக்கிவிட்ட அவல நிலைக்கு ஒப்புவமை கூறலாம்.



பேருக்குத்தான் தமிழ் சார்ந்த இரண்டு பாடங்கள் சேர்க்கப்ட்டுள்ளது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர, நாளடைவில் அதனால் வரப்போகும் பாதிப்பு பாரிய அளவில் தமிழ் மொழி சார்ந்த வாழ்வாதாரத்தையும், அதன் தொன்மையான கலாச்சார மேதமையையும் அழித்தொழித்துவிடும் வித்துக்களைக்கொண்டது.



ம.க.சா கல்வியில்தான் (இங்கிருந்துதான் தொழிற் கல்வி வாய்ப்பையும், பல்கலைக்கழகம் நுழைவதற்கான வாயிலையும், மற்றும் மேற்கல்விக்குமான வழித்தடத்திற்குக் கடந்து செல்ல முடியும்) மாணவர்களின் மிக முக்கியமான கல்வியை மேற்கொள்ளும் பருவத்தில் தமிழ் சார்ந்த இரு பாடங்களின் முக்கியத்துவத்தை நீக்கியதானது அதன் அடி மடியில் கை வைத்த கதையாக முடிந்துவிடும்.



ம.க.சா சோதனையிலேயே தமிழுக்கான மதிப்பெண்கள் கணக்கிடப்படவில்லையே நான் ஏன் தமிழ் எடுக்க வேண்டும்? அதற்குப்பதில் தொழில் வாய்ப்பை நல்கும் பாடத்தை எடுத்துப்பயன் பெறலாமே என்ற எண்ணம் உதிக்கும். இப்படிப்பட்ட எண்ணம் தமிழ்க்கல்விக்கு மிக பயங்கரமான பின்விளைவை பிரதிபலிகக்கூடியது.



தமிழ் மொழியில் அடிப்படைக்கல்வியாகப் பயில இன்றைக்கு 532 ஆரம்பப்பள்ளிகள் நாட்டில் உள்ளன. 50 ஆண்டு காலக்கட்டத்தில் இதன் எண்ணிக்கை 800 லிருந்து குறைந்து இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது என்பதே ஒரு சோகச்செய்தி. அரை நூற்றாண்டு கால எல்லைக்குள் மூன்றில் ஒரு பங்கு தமிப்பள்ளியை நாம் இழந்ததற்கான காரணம் பற்பல உண்டு.



1. சிறு சிறு ரப்பர்தோட்டங்கள் சீனர்களுக்குச் சொந்தமாக இருந்து வந்தன. விரைவுப் பணக்காரர்காளாக ஆவதற்கும், தொழில் துறையில் தங்கள் பணவேட்டையாடலைத் தொடரவும் இந்தச்சீனத் தவுக்கேகள் (முதலாளிகள்) தங்களுக்குச் சொந்தமான ரப்பர்த் தோட்டங்களைத் துண்டு போட்டு விற்று பெரிய ஆதாயத்தை அடைந்தனர்.( உலகச்சந்தையில் ரப்பரின் விலை வீழ்ச்சியின் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்) இதனால் ஆயிரமாயிரம் தமிழர்கள் தாங்கள் நம்பி வாழ்ந்த ரப்பர் தோட்ட கூலி வேலையையும் இழக்க நேரிட்டது. மூட்டை முடிச்சுகளைக்கட்டிகொண்டு வேறு வாழவிடத்தை நோக்கிப் பயணமானார்கள். இதன் காரணத்தாலும் பல தோட்டத்தமிழ்ப்பள்ளிகள் மூடு விழா கண்டன என்பது தமிழுக்கு உண்டான சோகச்செய்திகளில் ஒன்று.







2. நாடு தொழில்துறையில் மேம்பாடு கண்டுவரும் நிலையில் புறநகர்ப்பகுதிகளில் இயங்கிவந்த தமிழ்ப்பள்ளிகள் தொழிற்பேட்டை மேம்பாட்டுத்திட்டங்களுக்கு வழிவிட வேண்டியதாயிற்று. தொழில் பேட்டைகள் அதிகரிக்க அதிகரிக்க ரப்பர் செம்பனைத்தோட்டங்களில் வேலை செய்யத் தமிழர்கள் தொழிற்பேட்டைகளுக்குத் தொழில் மாற்றம் காணத்துவங்கி பெரும்பான்மையான தமிழர்கள் பட்டணப்புறங்களுக்கும் புறநகர்ப்பகுதிக்கும் இடம்பெயர்ந்தனர். ரப்பர் செம்பனைத்தோட்டக் கூலிவேலைக்கும் ஆபத்து எற்பட்டுவிட்ட நிலையில், தோட்ட மக்கள் குடி பெயரத்துவங்கினர். தோட்டப்புறங்களில் இயங்கிவந்த தமிழ்ப்பள்ளிகளும் மாணவர்களின்றி மூடப்படும் நிலையையும் எதிர்கொண்டது.



3. பல்லின மக்கள் வாழும் மாலேசியாவின் கொள்கை தேசிய நீரோட்டத்துடன் இணைத்து இன ஒற்றுமையை நிலைநாட்ட தேசியக்கல்விக்கே முக்கியத்துவம் அளிக்கின்றது. இதன் அடிப்படையில் மலாய்ப்பள்ளி செல்லக்குழந்தையாக அரசால் கருதப்படுகிறது. மலாய் மொழி வேலை வாய்ப்புக்கும், உயர் கல்விக்கூடங்களில் நுழைவதற்கான கடவுச்சீட்டாகவும் ஆக்கப்பட்டதால், தமிழ் மொழி தமிழ்க்கல்வி மேல் தமிழர்கள் நம்பிக்கை இழந்தனர். பெரும்பான்மையான தமிழர்கள் தம் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மலாய்ப்பள்ளிகளுக்கே அனுப்புகின்றனர். மொழிமீதான இந்தபுறக்கணிப்பு தமிழ்ப்பள்ளிகளை வலுவிழக்கச்செய்தன.



4. அவ்வப்போது பாடத்திட்டத்தில் பல்வேறு மற்றங்களைக் கொண்டு வரும் பட்சத்தில் கடை மொழியாகக்கருதப்படும் தமிழ் மொழியின்மேல் கைவைத்துவிடுகிறார்கள். ஆரம்ப காலம் தொட்டு தமிழ் தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் மலாய் மொழி தவிர்த்து மற்ற பாடங்கள் தமிழிலேயே போதிக்கபட்டு வந்தன. ஏழாணடுக்கு முன்னர் இருந்துதான் கணிதமும் அறிவியலும் எல்லா ஆரம்பப்பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் போதிக்கபடவேண்டுமென அரசு புதிய திட்டத்தைப் பல எதிர்ப்புகளூக்கு இடையே அமலாக்கம் செய்தது. ஆங்கிலத்தில் போதிக்கபடும் இரண்டு முக்கிய பாடங்களிலும் மலாய்ப்பள்ளிகளிலும்தான் போதிக்கிறார்களே தம் பிள்ளைகள் அங்கே படித்தால் நல்லது என் பல பெற்றோருக்கு எண்ணம் தோன்றியபோது பிள்ளைகளை மலாய்ப்பள்ளில் பதிய ஆரம்பித்தனர்.



5. மலாய்ப் பள்ளிக்கூடங்கள் தமிழ் பள்ளிக்கூடங்கள் போலல்லாமல் எல்லா வசதிகளையும் கொண்டது. இவை அரசாங்கத்தின் முழு உதவி பெற்ற பள்ளிகளாக இருப்பதால் (கட்டட வசதி முதற்கொண்டு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட பள்ளிகளாக இருக்கிறன்றன). மலாய்க்காரர்கள் வாக்கு வங்கியாகத் திகழ்வதால் அரசின் கவனம் அவர்கள் பக்கமே திரும்புவது நிதர்சனமானது. தமிழ்ப்பள்ளிகளில் பல, இன்னமும் பலகைப்பள்ளிகளாகவும், சொந்தக்கட்டட வசதியின்றி தோட்டப்புற கோயில்களிலும் இயங்கி வரும் பள்ளிகளாகவும் இருக்கின்றன. வசதியான பள்ளிக்குத்தானே பெற்றோர்களின் கவனம் திரும்பும். ஆகவே மலாய்ப்பள்ளிகளில் 60 விகிதம் தமிழ்க்குழந்தைகள் படிக்கின்றனர். ஏழையின் பிள்ளைகள் நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிலரின் பிள்ளைகள் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர். (தமிழ்ப்பள்ளியைத் தீண்டத்தகாத இடமாகக்கருதுவதால் மேல்தட்டும் நடுத்தர வர்க்கமும் இதனைத் தள்ளிவைத்தே பார்க்கிறது) தமிழர்களில் 40 சதவிகிதம் மட்டுமே தமிழ்ப்பள்ளியில் படிக்கிறார்கள் என்பது நம் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவின்மையைப் புலப்படுத்துகிறது.



இவ்வாறான கரணத்தால் தமிழ் மொழியின் நிலை பின்னடைவை எட்டி வருகிறது.



இது போதாதென்று இன்றைக்கு இருக்கும் 40 விகித மாணவர்களில் எண்ணிக்கையயையும் இந்த இரண்டு முக்கியமற்ற பாடங்கள் ஈர்க்காது. இந்தப்புதிய அமலாக்கத்தால் என்னென்ன பாதிப்பெல்லாம் உண்டாகும் என்பதுதான் தமிழ் மொழி, தமிழ்க்கல்வி பற்றாளர்களின் கவலை.



ம.க.சா சோதனையின் தமிழ் மொழியின் நிலை நம்பிக்கையற்ற பிம்பத்தை உண்டாக்குவதால் மாணவர்கள் தமிழ் பள்ளியில் குறைய ஆரம்பித்து பின்னர் மூடும் நிலைக்குத்தள்ளப்பட்டு விடும். நாட்டில் தமிழ் மொழி தழைக்காது.( தமிழ் மொழி சார்ந்த கல்விக்கூடங்கள் செயலிழந்துபோகும். ஆசிரியர் பயிற்சிகல்லூரிகள், பலகலைக்கழக தமிழ்ப்பிரிவு என அதன் அழிவுப்பட்டியல் நீளும். நாட்டில் மொழி சார்ந்த கலை பண்பாடும் வேரறுத்துக்கொள்ளும். மலேசியாவும் மொரிசியஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா போன்றே தமிழைத் தாரைவார்த்த நாடாகிவிடும். தமிழர்கள் இருப்பார்கள் பெயரளவில்- தமிழ் இருக்காது. இந்தப் பாவமெல்லாம் 2000த்தாம் ஆண்டில் வாழ்ந்த தமிழர்களைத்தான் சேரும். சரித்திரம் அதனைப் பத்திரமாக பாதுகாத்து வைத்துக்கொள்ளும் (கொல்லும்).

Comments

Se.Gunalan said…
vanakkam ! ilakkia kaddurai vhendugirom
ko.punniavan said…
உங்களின் தொடர் வருகைக்கு நன்றி. உங்களின் கோரிக்கையை அவ்வப்போது நிறைவேற்றுவோம்.நவீன இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதல்களைப் பதிவு செய்வோம். தொடர்ந்து வருகை தரவும். நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த