Skip to main content

வாழ்வோடு கைகோர்த்து நடந்து வரும் வலிகள்

                               நேற்று என் மகனுக்கு பரிசம் செய்து முடித்திருந்தோம். சிங்கப்பூரிலிருந்து என் சம்பந்தி வீட்டாரின் மாமியார் வந்திருந்தார். அதாவது என் சம்பந்தி அம்மாளின் பெற்ற தாய் அவர். வயது எழுபத்தைந்தைத் தாண்டியவர். முதுமை காரணமாக, பரிசம்தானே...... திருமணத்துக்குபோகலாம் என்ற முடிவோடு இருந்தவர், இதன் சிந்தனையாகவே இரண்டு நாள் தூக்கம் கெட்டு, மனசு கேட்காமல் முடிவை மாற்றிக்கொண்டு பறந்து வந்து சேர்ந்திருந்தார்.முதுமை மனத்திடத்திடம் நிற்கமுடியவில்லை.


                               இன்று இரவு எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தபோது பேச்சுவாக்கில் அவரின் இளமை கால சோகங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழல் உண்டானது. இது திட்டமிட்ட ஒன்றல்ல. பழைய நினைவுகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கும்போலும். அது தன் காயங்களை ஆற்றிக்கொள்ளும் முடிவோடு புதியவர்கள் கிடைத்துவிட அவர்களோடு அந்நியோன்யம் கொள்ளும் புள்ளியில்

                            தன் சோக வடுக்களை தடவிக்கொண்டே பழைய கதைகளைப் பரிமாற களம் புகுந்துவிடுகிறது.

                           அவருக்கு இருபத்தைந்து வயது நடக்கும்போது இரண்டாவதாக ஒரு பெண் குழந்தைக்குத் தயாகிறாள். பிறந்த கணம் தொட்டே குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்து வளர்க்காதே என்று அறிவுறுத்திக்கொண்டே வருகிறார் கணவர். அதற்கான சரியான காரணத்தை முன்வைக்காத கணவரின் பேச்சை ஒரு பொருட்டாகக் கருதாமல் தொடர்ந்தார்போல தாய்ப்பாலைக் கொடுத்துகொண்டே வருகிறார். குழந்தைக்கு ஒவ்வொரு மாதம் வயது கூடும்போதும் தாய்ப்பால் பற்றிய அவரின் நினைவுறுத்தல் வலியுறுத்தலாகவே மாறுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாமல் ஒரு தாயால் இருக்க முடியுமா? அருந்தாமல் குழந்தையால்தான் இருக்கமுடியுமா? பால் வற்றிப்போனால் பரவாயில்லை. தாயே புட்டிப்பாலை அறிமுகப்படுத்திவிடுவாள்.

                              குழந்தைக்குப் பத்து பதினோரு மாத வயது ஆகும்போது கணவர் குழந்தை துணிமணிகள் காலணி போன்ற பொருட்களை வாங்கி ரகசியமாக சேமித்து வந்திருக்கிறார். அதனைக் குழந்தைக்கு உடுக்கக்கொடுப்பதில்லை. இதெல்லாம் எதற்கு வாங்கி வருகிறீர்கள் என பைகளைக்கண்டுபிடித்து கேட்கும் தாயிடம், பக்கத்து வீட்டுக்குழந்தைக்கு என்று ஏற்கமுடியாத என்னென்னவோ நம்பகத்தன்மையற்ற பதில்களைச் சொல்லி வந்திருக்கிறார். கணவரின் மற்ற இயல்பான போக்கை அவதானிக்கும்போது எந்த மாற்றமும் தென்படவில்லை. அவள் தன் சந்தேகத்தை அப்புறப்படுத்திக்கொண்டே வருகிறாள்.

                               ஒருநாள் தன் கணவரின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகிறார்கள். ஒரு மாதம் அவர்களோடு தங்கி விடுகிறார். அவர்களுக்கான விருந்தோம்பலும் முறையாக நடக்கிறது. எல்லாம் சரியாக எப்போதும்போல் இயல்பாகவே கழிகிறது பொழுது.

                               ஒருநாள் அவர்களுக்கு விடை கொடுக்கும் நேரம் வருகிறது. வழியனுப்பிவைக்க இருவரும் ரயில் நிலையத்துக்கு வருகிறார்கள்.ஜொகூரிலிருந்து ரயிலில் அவர்கள் இருப்பிடத்தை நோக்கி இரண்டொரு நிமிடத்தில் ரயில் புறப்படப்போகிறது. மூத்த பையனைக் காரில் விட்டு விட்டு ஒரு வயதாகும் தன் குழந்தையை கையில் ஏந்தியவாறு தம்பதி சகிதம் விடை கொடுக்க வருகிறார்கள். ரயில் எந்த நேரத்திலும் புறப்பட்டுவிடும். அந்த நேரம் பார்த்துக் குழந்தையை அவர்கள் கையில் கொடு கொஞ்சிவிட்டுக்கொடுத்து விடுவார்கள் என்று கணவன் அன்பாகச் சொல்கிறார். ரயில் புறப்படப்போகிறது இப்போது எப்படிக்கொடுப்பது என்று மறுக்கிறாள் தாய். இல்லை ஒரு முத்தம் கொடுத்துவிட்டு பின்னர் கொடுத்துவிட்டு ரயில் ஏறிவிடலாம். ஒரு மாதம் குழந்தையோடு இருந்துவிட்டார்கள். ஒரு கணம்தானே முத்தம் கொடுக்க. பாவம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் என்று கெஞ்சுகிறார் கணவர். தாய் சற்று பதட்டத்தோடும் தொடர்ந்து மறுதலிக்க மனமில்லாமல் குழந்தையைக் கொடுத்துவிடுகிறாள் தன் கணவனின் வேண்டுகோளுக்கிணங்கி! ரயில் மெதுவாக நகரத்தொடங்குகிறது. மூத்த பையன் காரில் கிடக்கிறான். மூத்தவனை யாராவது எடுத்துச்சென்று விடக்கூடும் என்ற பரிதவிப்பும் அவளின் பதட்டத்தை இரட்டிப்பாக்குகிறது. ரயில் வேகம் பிடிக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் குழந்தையைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள் உடனே ரயிலில் பாய்ந்து ஏறிவிடுகிறார்கள். தாய் கதறுகிறாள். பெற்ற குழந்தை கைவிட்டு நழுவிவிட்டதே எனத்துடிக்கிறாள். ஆற்றாமையில் அழுகிறாள். தப்பு செய்து விட்டதாக குமுறுகிறாள். அப்போது கணவன் நிதானமாகவே இருக்கிறார். தன் குழந்தை கைமாறிவிட்டதே என்ற பதட்டம் அவரிடம் இல்லை. மனைவியை தேற்றுகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புண்ணியமாப்போகட்டுமே என்று ஆறுதல் மொழி பேசுகிறார். அப்போதுதான் இது திட்டமிட்ட சதி, இந்தக்கூட்டுச்சதியில் கணவனுக்கும் உடந்தை உண்டு என்பது தெரிய வருகிறது. ஏமாற்றப்பட்டுவிட்டோமே எனத் தன் இயலாமையை எண்ணி குமைகிறாள். பதறித்தவிக்கிறாள். ரயில் கடந்து போய் சிறு புள்ளியாகி கடைசியில் ரயில் என்ற உருவம் அருவமாகிப்போகிறது. அவள் கண் முன்னாலேயே கையிலிருந்த குழந்தை ‘கடத்தப்பட்டுவிட்டது’. இனி கிடைக்காதோ என்ற ஏக்கம் மனதைப் பாறையென கனக்கச்செய்கிறது. காரில் பெரியவன் தனியாக இருக்கிறான். அவனை யாராவது தூக்கிச்சென்று விடப்போகிறார்கள், வா காருக்குப்போகலாம் எனக்கணவர் மனைவியின் தோள்களை வருடி ஞாபகப்படுத்துகிறார். எஞ்சியிருக்கும் ஒரு குழந்தையும் இதுபோன்ற சதியில் தவற விட்டுவிடக்கூடும் என்று அஞ்சியவள் ரயில் போன திசையைப்பார்த்துக்கொண்டே கணவரின் தோளில் சாய்ந்தவாறே காருக்குப்போகிறார். வேதனையில் உள்நெஞ்சில் ரத்தம் சொட்டுகிறது. நடந்தது எல்லாமே உறவினரோடு சேர்ந்து பேசிமுடிவெடுத்துவிட்ட முன்னேற்பாடு எனத்தெரியவரும்போது அவள் இவ்வளவு கவனக்குறைவாக நடந்துவிட்டதை எண்ணி எண்ணி பதைபதைக்கிறாள். ஏமாற்றப்பட்டு விட்டோமே என வெட்கி சிறுத்துப்போகிறாள்.

                                 கணவன் வேறு குழந்தைகள் பெற்றுகொள்ளலாம் . குழந்தை இல்லாதவர்கள் வளர்க்கட்டுமே. நீ ஒரு தியாகத்தைச் செய்ததாக இருக்கட்டுமே என் ஆசுவாசப்படுத்துகிறார். இப்படியாக வருடங்கள் கடந்து விடுகின்றன. காலம் காயங்களை ஆற்றிவிடும் என்கிறார்கள்.குழந்தையை இழந்த தாயின் மனப்புண் அவ்வளவு எளிதில் ஆறிவிடுமா என்ன? அதனைப் புரையோடச் செய்துவிடும் சாத்தியங்களோடு வாழ்க்கையை வலிகளோடு கடக்கவேண்டியுள்ளது.

                              பறிகொடுத்த மகளின் மகள் பரிசத்துகுத்தான் அவர் வந்திருந்தார். காலம் அவர்க¨ள் இணைத்துவிட்டதுதான். ஆனால் நிரந்தரமாக இல்லை. தாயோ சிங்கப்பூர் குடிமகள். மகளோ மலேசியப் பிரஜை. பிறப்புபத்திரத்தில் பெற்றோரின் பெயர் மாற்றப்பட்டுவிட்டதால் மகள் சிங்கப்பபூருக்குப் பயணியாகத்தன் போகமுடியும். நிரந்தரமாக தங்கும் நிலை முற்றிலும் கிடையாது. தனக்கென குடும்பம் உறவு தோன்றிவிட்டது. பன்னிரண்டு வயதுக்குப்பிறகு பெற்ற தாய் இவள்தான் என அறியும் பெண் வளர்த்தவளை விட்டுப்பிரியமுடியாமலும், பெற்றவளோடு மீண்டும் இணந்து வாழ முடியாத பரிதவிப்பைக் கண்ணிரால் மட்டுமே கழுவிக்கொள்ளமுடியும் போலும். பெற்ற தாய்க்கு அதைவிடப்பெரிய சுமை. எத்தனையோ முறை சிங்ப்பூருக்குத் தன்னைக்காணவரும் மகளை நீண்ட நாட்களுக்கு வைத்துக்கொள்ளும் வழியை விடாமல் குறுக்கே நிற்கும் சிங்கையின் குடிநுழைவு இலாகா சட்டத்தோடு வெற்றிபெறமுடியாத போராட்டத்தை சதா நடத்த வேண்டியிருக்கிறது. சில சமயம் ஜொகூரில் தெரிந்தவர் வீட்டில் தன் மகளை விட்டுவிட்டு சிங்கை குடிநுழைவு இலாகாவுக்கு நடையாய் நடந்து போராடியும் பார்த்திருக்கிறாள். ஒன்றும் நடக்கவில்லை. தன் மகளை ஒரு விருந்தினர் ஸ்தானத்தில் வைத்து பார்க்கக்கூடிய அவலம்தான் எப்போதும் நிகழ்ந்திருக்கிறது.

                                  இந்தப்பழைய நினைவுகளைப்பேசும்போது என் வீட்டு சோபாவில் பக்கம் பக்கம் அமர்ந்திருந்த தாயின் கண்களிலும் மகளின் கண்களிலும் கண்ணீர் ஊற்றெனக் கசிகிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நேரங்களில் இருவரையுமே இ¨ணைபிரியாமல் இருக்க வகை செய்துவிடுவாராம் கணவர். என் வீட்டில் இருக்கும்போதுகூட இருவர் கை விரல்களும் பிடி தளராமல்தான் இருந்தன. கவலையைக் கடந்துவிட்ட வாழ்க்கை என்று ஏதேனும் இருக்கிறதா? இல்லைதானே. ஆனால் சிலருக்கு கவலையே வாழ்க்கையாக அமைந்துவிடுவதுதான் மிகப்பெரிய் கொடுமை.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...