Skip to main content

நடிகர் நடிகையரைப்பற்றிய என்சைக்லோபிடியா.. ந்தா பிடியா

கிருத்திக் ரோபொஷனுக்கு எப்போது பிறந்தநாள் என்று தெரியுமா உங்களுக்கு?

அவருக்கு இப்போது என்ன வயதாகிறது? திருமணமாகிட்டதா? எத்தனைக் குழந்தைகள் என்ற விபரமாவது தெரியுமா இதெல்லாம் தெரியாதென்றால் பொது அறிவைப் புறக்கணித்த கிணற்றுத்தவளையாகிவிடுகிறீர்கள் நீங்கள்.

ரஜினிக்கு தன் மனைவியோடு பேசுகிறாரா? கமல் கௌதமியோடு குடும்பம் நடத்துகிறாரா? அல்லது ஒரே வீட்டில் சேர்ந்து நண்பர்களாக இருக்கிறார்கள் போன்ற முக்கியமான புதிர்களுக்கு விடை காணவேண்டுமா?

ஸரேயாவின் இடுப்புச்சுற்றளவு தெரியவேண்டுமா?

சாமிரா ரெட்டியின் ஸ்தனங்கள் என்ன சைஸ்?

அடுத்த திரைப்படத்துக்கு விஜய் எந்த நாயகியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்? ஏன் திரிஷாவை ஓரங்கட்டினார் போன்ற அதல பாதால வினாக்களுக்குப் பதில் வேண்டுமா? இதையெல்லாம் தெரியாமல் இருப்பது உங்களுக்கு வெட்கக்கேடான விஷயமாக படுகிறதா?

கவலையே வேண்டாம்!

இதற்கெல்லாம் விரல் நுணியில் விளக்கம் வைத்திருந்து தருவதற்கு நம் தனியார் வானொலி அறிவிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். சதா நடிகை நடிகர்களின் திருநாமங்களை உச்சரிப்பதிலும், சினிமா பற்றிய சமீபத்திய சரித்திரத்தைத் தெரிந்துகொள்வதிலும் அவர்கள் விமோசனம் பெறக்கூடும் போலும். பிறந்த பலனை அடைவதற்கு அவர்கள் எவ்வளவு நேரம் இணையத்தில் நீந்துகிறார்கள் தெரியமா? மூச்சுத்திணரும் வரை! முத்தெடுக்கவேண்டுமே!

நடிகர்கள் நம் நாட்டுக்கு வந்தால் ஓடிப்போய் பேட்டி எடுத்து ஒலிபரப்பி அவர்களின் அரிய கருத்துகளை மக்களுக்குப்பரப்புவதில் அவர்கள் தொண்டு அன்னைத்திரேசாவையும் ஜெயித்துவிடும். விக்ரம் சொன்னார் கந்தசாமி படத்தை சிறுவர்கள் பெரிதும் விரும்பினார்களாம்.(மியாவ் மியாவ் பூன.....)

ஒருமுறை வானொலியில் ‘துரு துரு திரு திரு’ என்ற திரைப்படத்தைப்பற்றி இரு அறிவிபாளர்கள் உரையாடிகொண்டிருந்தார்கள்.

“துரு துரு என்றால் சுட்டித்தனமாக இருப்பதைக்குறிக்கிறது? ஆனால் திரு திரு என்றால்தான் என்னவென்று புரியவில்லை “ என்றார் ஒருவர்.

“ ஆமாம் எனக்கும்தான். புரியாமல் எல்லாம் தமிழ் படத்துக்குப் பெயரிடுகிறார்கள்” என்றார் இன்னொருவர்.

இருவரும் திரு திரு என்ற சொல்லுக்கு பொருள் புரியாமல் திரு திரு என்று முழித்துக்கொண்டிருந்தனர். இருவருமே திரு அடைச்சொல் போட்டுகொள்ளவேண்டிய ஆண் அறிவிபாளர்கள்.

இவர்கள் திருநீறு அணிந்துகொண்டு திருத்தணி போன்ற திருத்தளங்களுக்குப்போய் திருமந்திரங்கள் ஓதவேண்டும். அல்லது திருமுருகன் ஆலயங்களுக்குச்சென்று வழிபட்டுத் தனக்குத் தமிழ்த்தாய் அருளவேண்டும் என்று வேண்டிக்கொள்ளவேண்டும்.

அல்லது திருகாணி கழண்டுபோகும் வரை காதைத் திருகித் தமிழ் சொல்லித்தரும் திருப்புலவர்களிடம் சென்று திருத்தமிழ் கற்கவேண்டும்.

திரு என்ற சொல்லுக்குப்பொருள் தெரியாமல் திருடன் மாதிரி திரு திரு என்று விழி பிதுங்குவதற்குப்பதில் திருமகளின் அருள்வேண்டி அவள் திருநாமத்தை திரும்பத் திரும்பச் சொல்லி திருவருளையாவது பெறவேண்டும்.

இவ்வளவும் நடக்குமா? வாசிக்காமல் அதிமுக்கியமான ஊடகத்துக்குப் பணிக்கு வரலாமா?

ஒருமுறை என்னை வானவில் பேட்டிக்கு அழைத்திருந்தார்கள் நான் படித்த நூலைப்பற்றிப்பேசவேண்டும் என்றார்கள். கடைசியாகப்படித்த உப பாண்டவம் நூலைப்பற்றிபேசுகிறேன் என்றேன். அதனை யார் எழுதியவர் என்று கேட்டார் ஒரு அறிவிப்பாளர். எஸ்.ராமகிருஷ்ணன் என்றேன்

“பாரதக்கதையா,” என்று கேட்டனர்.

“ஆமாம்,” என்றேன்.

“அதபத்திதான் சிலர் எழுதிட்டாங்களே,” என்றார்.

“இவர் வேறு ஒரு கோணத்திலிருந்து எழுதியிருக்கார்,” என்றேன்.

“கதை ஒன்றுதானே,” என்றனர்.

“ஆமாம் அதே கதைதான். ஆனால் இதில் இவரே ஒரு பாத்திரமாக வருகிறார்”. என்றேன்.

“அவர்கள் குழம்ப ஆரம்பித்தனர். ஒரு தொன்மக்கதையில் எழுத்தாளர் எப்படி பாத்திரமாக வரமுடியும் என்று அவர்களுடைய கண்கள் வினாகணையைத்தொடுத்தன. நவீன இலக்கியம் பற்றிய புரிதல் இல்லாதவரிடம் நான் எப்படிப்பேசப்போகிறேன் என்ற பயம் என்னைக்கவ்வ ஆரம்பித்திருந்தது. மு. வ பற்றி பேசியிருக்கலாமோ என்று மாற்று யோசனை தோன்றியது.

பேட்டிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள்தான் இருந்தன. எனக்கு முன்னர் ஒருவரைப் பேட்டி கண்டுகொண்டிருந்தனர்.

பின்னர் ஒரு இடைவேளை.

என்னிடம் ஒரு அறிவிப்பாளினி அணுகி, “ஐயா பஞ்சபாண்டவர்களின் பெயரைச்சொல்லுங்கள். துரியோதனன் அர்ச்சுணன்.....அப்புறம்....ம்...” என்று அவரே தொடங்கினார். ஏற்கனவே சொத்து சண்டை. இவர் ஏன் குடும்பத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறாரே?

இன்னொரு பாரதப்போருக்குக் இவர் காரணமாகிவிடுவாரோ என்று அஞ்ச ஆரம்பித்தேன்.

ஐவரின் பெயரையும் சொன்னேன். பேட்டி ஒருவகையாக முடிவுற்றது.

ஒருமுறை நாட்டின் பிரபல நாவலாசியர், சிறுகதை முன்னோடி, கூர்மையான பார்வைகொண்ட திறனாய்வாளர், பேராசிரியர் டாக்டர் காரத்திகேசுவை ஒரு வானொலிப்பேட்டிக்கு அழைத்திருக்கிறார்கள்.

அவரின் பேட்டியைப் பதிவுசெய்ய ஒரு அறிவிப்பாளரை நியமித்திருக்கிறார் அந்த வானொலியின் தலைவர்.

“பேட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் முதலில் உங்களைப்பற்றிச் சொல்லுங்கள் நான் கேள்வி கேட்க இலகுவாக இருக்கும்,” என்று கேட்டாராம் டாக்டர் கார்த்திகேசுவிடம்.

“என்னைப்பற்றி ஒன்றுமே தெரியாதா உங்களுக்கு?” என்று வியப்போடு வினவினாரம் டாக்டர்.

தெரியாது என்று ஒரு அப்புராணியாகத் தலையாட்டினாராம் அறிவிப்பாளர்.

மலேசியப்படைப்புலகில் 50 ஆண்டுகளாக, எல்லா நிலையிலும் வியாபித்திருப்பவர் அவர். அவர் எழுதிய ஐந்து நாவல்களில் ஒன்றாவது படித்திருக்கலாம். நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளில் ஒருசிலவற்றையாவது வாசித்திருக்கலாம். ஒரு அறிவிப்பாளர் கட்டாயம் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் இது. குறைந்தபட்சம் அவர் பேட்டிக்கு வருகிறார் என்ற தெரிந்த பின்னராவது அவருடைய படைப்பைத்தேடிப் படித்திருக்கலாம். ஒன்றுமே செய்யாமல் உங்களைப்பற்றி நீங்களே சொல்லுங்கள் என்று கேட்பது ஒரு எழுத்தாளனுக்கு எதிரான வன்முறையன்றி வேறென்ன?

மின் ஊடகம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது? பூமாலையைக் குரங்கின் கைகளில் கொடுத்தால் இதுதானே நடக்கும். குரங்கின் கைகளில் கொடுத்தது கண்டிப்பாகக் கழுதையாகத்தான் இருக்கும்போலும்!

குஷ்புவுக்கு

கோயில் கட்டுவதும்

திரிஷாவுக்குத்

திருத்தலம் கட்டப்போவதும் (திட்டமிடலில்)

ரஜினியின் பிலாய் வூட் கட்டவுட்டுக்கு

ரசிகர்கள்

பாலாபிஷேகம் செய்வதும்

ஊடகத்தினால் உண்டாகும்

ஊறன்றி வேறியேன் பராபரமே.



சினிமா பற்றித்துருவித் துருவித்தெரிந்துகொள்ளும் அறிப்பைப் பொது விஷயங்களில் தெரிந்துகொள்வதில் காட்டுவதில்லை நம் அறிவிப்பாளர்கள். முன்னேரே சரியில்லையென்றால் பின்னேராக இருக்கும் இளைஞர்கள் என்ன ஆவார்கள்? சகதியை மிதித்துக்கொண்டு சாணியில் இறங்கி சாக்கடையில் இறங்கித்தான் நடப்பார்கள்.

ko.punniavan@gmail.com

Comments

Ruthiran said…
well written..local tv/radio hosts are very much fame oriented nowdays...this disables them from realising the wealth of knowledge other than cinema...thats is why more importance are given to cinema artists...and these radio/tv hosts think they are more popular than those local poets/literature oriented writers, thus they are not takin any efforts to know about them or their writings prior to their interviews...
ko.punniavan said…
well said ruthiran.thank you.
Anonymous said…
இன்றைய இளையோரிடன் 'சினிமா சிந்தனை திறனுக்கு' வானொலிகளே முக்கியக் காரணமாய் இருக்கின்றன என்பதற்கு மறுப்பதற்கில்லை. சமுதாயச் சீரமைப்பில் தாங்கள் முக்கியப் பங்கு வகிப்பதை வானொலி அறிவிப்பாளர்கள் உரண வேண்டும். அதுவரை தமிழ் உணர்வாளர்கள் இத்தகைய அறிவிப்பாளர்களைப் புறக்கணிக்க வேண்டும். உள்நாட்டு எழுத்தாளர்களைப் பற்றி அவர்கள் பேச வேண்டும். அண்மையில், தங்களுக்குத் தெரிந்த மலேசிய எழுத்தாளர் ஒருவரைப் பற்றிக் கூறுங்கள் என என் படிவம் 5 மாணவர்களிடம் ஒரு கேள்வி கேட்டேன். ஒருவருக்குக் கூட தெரியாத நிலையில், ஒரு மாணவர் மட்டும் 'எழுத்தாளர்' என்றால் என்னவென்று கேட்டாரே பார்க்கலாம்.......
ko.punniavan said…
உங்கள் பதிவுக்கு நன்றி. பொது ஊடகங்கள் சினிமா சார்ந்த தகவல்களையும் நடிகைகளின் கைக்குட்டை அளவே ஆன ஆடைகளையும் அணிந்த படத்தைப்போடாமல் செய்திகள் போடுவதில்லை.மின் ஊடகங்கள் இன்னும் சற்று அதிகமாகச்சென்று அவர்களின் காம அசைவுகளையும் ஒலிபரப்பி சமுகச் சீர்கேடுகளுக்கு வித்திடுகின்றன. இந்த ஆட்டங்களைப்பார்த்து இன்புறுவதற்கே அவர்களுக்கு நேரம் போதாது.உங்களைப்போன்ற ஆசிரியர்கள்தான் அவர்களின் போக்கை மாற்றவேண்டும்.
MUNIANDY RAJ said…
மாமா, உங்கள் படைப்பு மிகச் சிறப்பு.. இதற்கு முந்தைய கருத்தை நான்தான் அனுப்பினேன். பெயர் போடவில்லை....சினிமா தாக்கங்களிடமிருந்து பிள்ளைகளை மீட்பது ஆசிரியர்களைவிட பொற்றோர்களிடமே அதிகம் உள்ளது என்கிறேன் நான்....ஆசிரியர்களிடம் சினிமாவைப் பற்றி மாணவர்கள் அதிகம் பேசுவதில்லை...சரிதானே
ko.punniavan said…
நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகத்தைத்தான் இன்றைக்குக்காணமுடிகிறது.மக்கள் தொலைக்காட்சி நிகழ்வுகள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதைக்கண்டு உய்யத்தான் மக்கள் இல்லை.தனியார் வானொலியின் நாலாந்தர அரசியல் தாக்கம் இன்னும் என்னென்னெ பாதிப்பைக்கொண்டு வருமோ தெரியாது.
ko.punniavan said…
நீங்கள் சொல்வது சரி. மின் ஊடகங்களின் நிகழ்ச்சிக்குத் தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட சமூகத்தைத்தான் இன்றைக்குக்காணமுடிகிறது.மக்கள் தொலைக்காட்சி நிகழ்வுகள் மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது. அதைக்கண்டு உய்யத்தான் மக்கள் இல்லை.தனியார் வானொலியின் நாலாந்தர அரசியல் தாக்கம் இன்னும் என்னென்னெ பாதிப்பைக்கொண்டு வருமோ தெரியாது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...