Skip to main content

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்




கோ.புண்ணியவான் (kopunniavan.blogspot.com)



மலேசியாவில் நாடகக்ககலை எழுபதுகளிலேயே முடக்கம் காண ஆரம்பித்து இன்றைக்கு அருதியாக இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்து ஒருவர் மட்டுமே மீதமும் காணாமற்போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் எஸ்.டி. பாலா. அவருடைய இருவர் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் மரபார்ந்த நாடக அரங்க அமைப்பை, ஒப்பனையை, மிகை நடிப்பை எஸ்.டி பாலா தன் நவீன நாடகத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே மரபான நாடகக்கலை மலேசியாவில் தழைக்கவில்லை. இருப்பினும் தனி ஒருவனாக இருந்து நாடகக்ககலையை முன்னெடுத்துச்செல்லும் பாலா மலேசியாவின் நவீன நாடகக்கலைக்கான நல்ல அடையாளம். இங்கே தெருக்கூத்து போன்ற விளிம்பு நிலைக்கலைஞர்க்கான, ரசிகர்க்கான நிகழ்த்துக்கலை எந்நாளும் இருந்தததில்லை. அந்தக்காலத்தில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரப்பர்த்தோட்டத் தீமிதி விழாக்களின் போது விடிய விடிய கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வட்டாரத்துக்குக் ஒரு நாடகக்குழு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆண்களே பெண்வேடமணிந்து பெண்பாத்திர இழப்பைச் சரி செய்திருக்கிறார்கள். இது நம் சமூகக்கட்டமைப்பில் பாலினப்புரிதலின் பின்னடைவின் ஒரு நல்ல உதாரணம். மேடை அமைப்புக்கான நாடக செட்டுகளை அவர்கள் வைத்திருந்திருக்கிறார்கள். பெரும் பணச்செலவில் தமிழ் நாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட திரை, அணிகலன், ஒப்பனை உபரிகள் இதில் அடங்கும். இவற்றைக்கொண்டு இயங்கிய மேடை அமைப்பு தீமிதி விழாவினை வண்ணக்கலவையால் மெருகேற்றியிருக்கிறது. எனக்கு அப்போதே கூத்து அரங்கேற்றம் நடந்துவிடக்கூடாதா என்ற ஆவல் கூடிக்கொண்டிருக்கும். என் பால்ய வயதில் , கூத்து நடக்கும் முன்னர் நான் மேடை அமைப்பை வியப்போடு அன்னாந்து அவதானித்த வண்ணமிருந்திருக்கிறேன். சினிமா அறிமுகமாகி திறந்த வெளியில் திரையிடப்பட்டு தோட்ட மக்களின் ரசனை மெல்ல மெல்ல மாற்றப்பட்டு, பின்னர் அறிவியல் முன்னேற்றத்தின் வீடியோ கருவியின் ஆக்கிரமிப்பு நாடகக்கலையின் ரத்தத்தை டிராகுலா அவதாரம் பூண்டு உறிஞ்சிவிட்டடிருந்தது. அடுத்தடுத்த தலைமுறைக்குக் கையளிப்பதற்கான மரபுத்தொடர்ச்சியை முறியடிக்கும் நவீன கருவிகள் நிகழ்த்துக்கலையை மெல்லச் சாகடித்தது.

எனக்கு நாடக்கத்துக்குமான தொடர்பு என் எழாவது வயதிலேயே தொடங்கியிருந்தது. என் தோட்டத்துக்கு வேட்டி கட்டி வெள்ளையுடுத்திய ஒருவர் குடியேறி இருந்தார். எங்கிருந்து வந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. வயது ஓடியிருந்தது. குடும்ப உறவற்ற தனி ஆளாகக்காட்சி தந்தார். உழைப்பு, உழைப்பின் களைப்பைத் தீர்க்கவும் வெள்ளைக்காரன் வழிகாட்டிய –மத்தியான உல்லாசத்துக்கான குடிப் போக்கு வியாபித்திருந்த தோட்ட மக்களின் ஒரு பகுதியினரை நாடகம் எழுத்து போன்ற கலைகளில் திசைதிருப்பிய மனிதராக இருந்தார் அவர். முதலில் டியூசன் சொல்லிக்கொடுத்து மாலையில் தானே எழுதிய நாடகத்துக்கான கலைஞரைத் தேர்வு செய்து இரவில் ஒத்திகை நடத்தி வந்தார். படிப்பில் அக்கறையற்ற மனிதக்கூட்டத்தை, நாடகம் என்ற நிகழ்த்துக்கலையின் வழி தன் கருத்துகளை ஊடாடச் செய்த அவரின் முயற்சியை இன்றைக்கும் நினைத்துப்பார்க்க வைக்கிறது. தீமிதி விழாக்காலங்களில் கோயில் கமிட்டி வெளியிலிருந்து நாடகக்குழுவை வரவழைத்து அதற்கான செலவை ஈடுகட்ட முடியாமல் விழி பிதுங்கி நின்ற கையறு தருணத்தில், உள்ளூரிலேயே நாடாகத்தைத் தயார் செய்து சொற்ப செலவில் அதனை அரங்கேற்ற முடியும் என வெள்ளையுடுத்திய மனிதரின் செயல்பாடு தோட்டக்கமிட்டிக்கு மாற்றுச்செய்கையாகக் கைகொடுத்துத்தூக்கியது. அந்த வருடம் உள்ளூர் கலைஞர்களால் நடிக்கப்பட்ட நாடகம் விழா இரவில் அரங்கேறியபோது அதற்கான வரவேற்பு அலாதியாக இருந்தது. தன் கணவர், தன் மகன், தன் காதலன், தன் சொந்தம், தன் நண்பன் நாடகத்தில் நடிப்பதைப்பார்க்க தோட்ட மக்களின் ஆர்வம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள். (தோட்ட மக்கள் அனைவருமே ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தர்கள். அவர்கள் குடிருப்புப்பகுதிகள் ஒன்றையொன்று ஒட்டிய வரிசை வீடுகளாக இருப்பதால் அந்¢யோன்யம் மாறாத மனிதக்கூட்டமாக இருப்பார்கள்.



தீமிதி விழா கலைகட்டுவதே நாடக அரங்கேறும் இரவுதான். அன்று ஒப்பனை போட்டு நடித்துக்கொண்டிருக்கும்போது பார்வையாளருக்கு நடிகர்களை அடையாளம் காண முடியவில்லை. குரல் ஒலித்து இன்னார் என்று தெரியவர “அது நம்ம பீச்சாங்கை முனியாண்டிதான” எங்கிருந்தோ ஒலிக்கும் குரலில் கரகோஷம் கோயில் மண்டபத் தூண்களை அதிரவைக்கும். நாடக முடிவில் நடிகர்களான தன் நணபனுக்கும் தன் கணவருக்கும் பண மாலையும் வடை மாலையும், முறுக்கு மாலையும் சாற்றி, கைதட்டி ஆரவாரித்தது தோட்ட மக்களின் உடல் உழைப்பைச் சுரண்டப்பட்ட களைப்பைச் ஒரு சில கணமேனும் மறக்கச்செய்திருக்கிறது.

என் நாடக அனுபவம் ஏழு வயதோடு முடிந்துவிட்டது என்று எண்ணியிருந்த வேளையில் , என் ஐம்பத்தொன்பதாவது வயதில் அது தன் நீட்சியாக என்னைத் ’தடுத்தாட்கொண்டு’ வியாபகம் கண்டிருந்தது எனக்கே வியப்பை அளித்த ஒரு விஷயம். பட்டர்வர்த்தில் ஒரு வணிக நிறுவனத்தை நிறுவி போராடிக்கொண்டிருந்த வேளையில் கலைக்கே தன்னை அற்பணித்த நண்பர் முத்தமிழ் செல்வன் கு.அ. இளங்கோவன் என் கடைக்கு வந்து பேச்சு வாக்கில் தான் ஏற்பாடு செய்யப்போகும் நாடகத்தைப்பற்றி சொன்னார்.

அப்போதே என் பால்ய நாடக நினைவில் மூழ்கித் திளைத்து காணாமற்போய்க்கொண்டிந்தேன். ஏழு வயது அனுபவ நீட்சி நண்பர் அரங்கேற்றப்போகும் நாடகத்திலும் நடிக்க ஆர்வம், ஊதப்பட்ட விறகு அடுப்பின் தீயென மூண்டுகொண்டிருந்தது. எஸ்.பி.எம் இலக்கியப்பாடத்திட்டத்தில் ஒரு பகுதியான “காவிய நாயகி” நாடகம் அதுவென அவர் சொன்னபோது நான் வாய்விட்டே கேட்டுவிட்டேன், எனக்கு ஏதாவது பாத்திரம் கிடைக்குமாவென. எஸ்.பி. எம் சோதனையில் சொற்ப தமிழ் மாணவர்களே தமிழ் இலக்கியத்தை எடுத்து வருவதால் அந்தப்பாடம் சோதனையிலிருந்து நீக்கிவிடும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இந்த நாடகம் வழி அந்த எண்ணிக்கைச்சரிவை மீட்டெடுக்கும் முயற்சியில் பினாங்கு இடைநிலைப்பள்ளி தமிழாசிரியர் கழக ஏற்பாட்டுக்கு நம்மால் ஆன உதவியைச்செய்யலாமே என்பதால் அதில் ஈடுபட முனைந்தேன். இந்நாடகத்தை அப்பாடத்தை எடுக்கும் மாணவர்க்காக அரங்கேற்றப்போவதாகவும் அதனை ஒளிப்பதிவு செய்து மலேசியா முழுவதுமான மாணவர்களைச் சென்றடைய செய்யப்பொவாதான கூடுதல் செய்தி என்னை நாடக ஈடுபாட்டில் தீவிரமடையச்செய்திருந்தது. என் விருப்பத்தைத் தெரிவித்தவுடன்.....

“ ஓ இருக்கே நடிக்கிறீங்களா?” என்றார்.

“செய்யலாம்” என்றேன், “சின்ன பாத்திரமா கொடுங்க” என்றேன். வசனங்களை மனனம் செய்வதில் நான் எதிர்நோக்கப்போகும் சிரமத்தை நினைத்தபடியே.

மறுநாளே எனக்கான வசனக்கட்டை கடையில் போட்டுவிட்டுப்போனார். கட்டுக்குள் இருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை என்னை நோக்கி நகர்ந்துவரும் புழுக்கூட்டமென அச்சுறுத்தியவண்ணமிருந்தது.

கட்டைப்பார்த்ததும் எனக்குள் படபடப்பு வியாபிக்கத்தொடங்கியது. திறந்து பார்க்குமுன்னரே இதனை எப்படி மனனம் செய்யப்போகிறேன் என்ற பயம் ஒலிந்துகொள்ளும் ஒரு பூனையின் சுபாவத்தை ஒத்திருந்தது. எனக்கு தரப்பட்ட பாத்திரம் காளிங்கராயன் என்ற வில்லன் வேடம். நாடகத்தின் முதன்மை மந்திரியாக இருந்துகொண்டு சூழ்ச்சி செய்து ஆட்சியைக்கவிழ்க்கும் ஆர்ப்பாட்டமான பாத்திரம்.

நாடக ஒத்திகை இன்னின்ன நாளில் இந்து சங்கக் கட்டத்தில் நடைபெறும் என்றும் குறிப்பிட்டிருந்தது. முதல் ஒத்திகைக்கு முன்னரே நாடகத்தை மனப்பாடம் செய்து விடவேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். நடிப்பில், குரல் அமைப்பில், பாவனையில், ஒரு நடிகர் பேசி முடித்ததும் சரியான இடைவெளிகொடுத்து அல்லது உடனடியாக (timing) எதிர்வினையாற்ற வேண்டிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கு நாடக வசனத்தை முன்னரே மனனம் செய்துவைத்துக்கொள்வது உத்தமம் என எண்ணத்தோன்றியது. மனனப் பிரச்னை மனதளவில் ஊதிப்பெருகி அச்சுறுத்திக்கொண்டிருந்தததால் பின்வாங்கிவிடலாமா என்றுகூட ஒரு கணம் தோன்றியது.

நடிக்கிறேன் என்று உறுதியளித்த பின்னர் பின்வாங்குவது சரியல்ல என்று மறுயோசனை தோன்றவும், என் யோசனை எல்லைக்குள் வேறெதுவும் நுழைந்து குழப்புவதற்கு முன், நாடக நடிப்புக்கு என்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்டேன்.

செபெரங் ஜயாவின் பேரங்காடிக்குச்சென்று பனாசோனிக் ஒலிப்பதிவுக் கருவியொன்றை 150 ரிங்கிட் கொடுத்து வாங்கிக்கொண்டேன். ஐந்து அங்குல பதிவு நாடா போட்ட குட்டிகள் மாதிரி ஒரு அங்குல வடிவிலான மூன்று பதிவு நாடாவையும் வாங்கி வைத்துக்கொண்டேன். சின்னஞ்சிறு பதிவு நாடாவே பல்லாயிரம் வார்த்தைகளை பதிவு செய்துகொள்ளும் திறன் கொண்டிருக்கும்போது நம் மூளைக்கு என்ன வந்தது? ஒலிப்பதிவு கருவியை வாங்கிக்கொண்ட உடனேயே எனக்குள்ளிருந்த மனனப் பிரம்மை, கல்லை எடுக்கக்கண்ட நாயைப்போல மெல்ல பின்வாங்கிக்கொள்ளத் துவங்கியது. ஒவ்வொரு நாள் இரவு தூங்கப்போகுமுன்னர் படுத்துக்கொண்டே நான் என் குரலில் பதிவு செய்துகொண்ட வசனத்தை உறங்கும் வரை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே என் மூளைக்குள் பதிவு செய்துகொள்வதுதான் எனது திட்டம்.

ஆனால் எனக்குத்துணையாக இருக்கும் சக நடிகரின் வசனத்தை யாரைப்பேசவைத்து எடுப்பது என்று புலப்படவில்லை. ஒத்திகையின்போதே பதிவு செய்துகொள்ளலாமென்று முயற்சி செய்து பார்த்தும் சரிபட்டு வரவில்லை. மண்டபத்தில் எதிரொலி பதிவை பழுதாக்கியது.

வேறு வழியில்லாமல், சக நடிகரின் வசனத்தையும் என் குரலிலேயே பதிவு செய்து கொண்டேன். அதனைபோட்டு கேட்ட பின்னர் இதில் என் வசனம் எதுவென்ற குழப்பமே மிஞ்சியது தொடக்கத்தில். கொஞ்சம் பழக்கமாகிப்போனதால் பின்னர் அந்தக்குளறுபடி தொடரவில்லை. நாடக அரங்கேற்ற நாள் வரை முழுமையாக மனனம் செய்ய முடியாத நிலை.

ஒத்திகையின்போது என் சக நடிகர்கள் எல்லாருமே நடிப்பு அனுபவத்தைக்கொண்டிருந்தவர்களாக இருந்தார்கள். பால்ய வயது அனுபவம் இவர்களோடு ஈடுகொடுக்க முடியாது என்பதை உணர்த்திக்கொண்டிருந்தது. முதல் நாள் இரவு நான் மனப்பாடம் செய்த வசனத்தில் இடை இடையே மறந்துபோயிருந்தேன். இரவு செவிமடுத்து பின்னர் இன்னொருமுறை ஓடவிட்டு ஒலிக்கும் வசனத்தோடு ஒத்திகைப்பார்த்தும் மூளைக்குள் பதிவாக மறுத்திருந்தது. ஒத்திகையின் போது வசனம் மனனமாகததால் பிற நடிகர்களுக்கு இடையூறுகள் தருவதாகப்பட்டது.

நாடக அரங்கேற்றத்தின் அன்று படபடப்பு கூடியிருந்தது. மதியம் இரண்டு மணிக்குள் அரங்கத்தில் நடிகர்கள் இருந்தாக வேண்டும். பல நடிகர்களுக்கு ஒப்பனை செய்யவிருப்பதால் கால தாமதத்தைத் தவிர்க்கும்படியான கட்டளை. வீட்டிலிருந்து புறப்பட்டு அரை மணி நேரத்துக்குள் பாதையைத்தவரவிட்டு திரும்பும்போது மோட்டார் சைக்கிலில் வந்த இரு மாலாய்க்காரப்பெண்களை இடித்துத் தள்ளிவிட்டிருந்தேன். இருவருமே பள்ளி மாணவிகள். அந்த இடம் ஒரு மலாய்க்கார கிராமம். எனக்கு அப்போதே வியர்க்கத்துவங்கியது. கிராமத்திலிருந்து உடற்காயமின்றி தப்பி வருவது அவ்வளவு எளிதானதல்ல. அடிவாங்கிய பலரின் கதைகள் நினைவுக்கு வந்து கொண்டிருந்தது.

என் நல்ல நேரம் விபத்துக்குள்ளான மாணவர்களின் அப்பா ஒரு முன்னால் காவலதிகாரி. ரொம்ப பொறுமைசாலி. சுற்றி நின்ற மலாய்க்காரர் சிலர் கூச்சலெழுப்பியும் உசுப்பப்படாதவராக இருந்தார். அவர்களை மருத்துவ மனையில் சேர்த்து 300 ரிங்கிட்டை அழுதுவிட்டு நாடக அரங்கத்துக்குப் புறப்படும்போது மணி 4.30.

அப்போது ஒப்பனையாளர் எல்லா நடிகரின் ஒப்பனையை முடித்துவிட்டு எனக்காகக்காத்திருந்தார். ஒப்பனையிலிருந்த நடிகர்களை இன்னாரென்று அடையாளம் தெரியவில்லை. ஒப்பனைக்கலைஞரைப் பார்த்துபோது மரபார்ந்த நாடகக்கலையின் ஆகக்கடைசி மீதமாக மீந்திருப்பதான தோற்றத்தை உடையவராக இருந்தார் . ஒப்பனை பொருளைப்பாதுகாப்பாக வைத்திருந்த டிரங்குப்பெட்டி அவரைப்போலவே காரை பெயர்ந்து பழுப்பேறிக்கிடந்தது.

ஒப்பனை முடிந்ததும் எனக்கே என் முகம் வேறாகப்பட்டது. காளிங்கராயராகவே மாறியிருந்தேன். என் கையில் ஒரு ஊன்றுகோல். மனனமாகாத வசனத்தை எப்படி ஒப்புவிப்பது என்ற கவலை ஊன்றுகோலைப்பார்த்ததும் மெல்லக்கலைய ஆரம்பித்தது. கைப்பிடிக்குக்கீழ் மன்னமாகாத வாக்கியத்தின் முதல் வார்த்தையை பேனாவால் எழுதி ஒட்டிக்கொண்டேன். எழுத்தை வாசிக்கக் கண்ணாடியின் உதவி வேண்டும். எனவே எனக்கு வசதியாக கருப்பு மைகொண்டு சற்று பெரிய எழுத்தில் எழுதிக்கொண்டேன்.

என் நடிப்பின் போது அரங்கத்துக்கு வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது 1000த்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நாடகத்தைப்பார்க்க உட்கார்ந்திருந்தார்கள்.வற்றி வரண்டுபோன ஆறு பெரு வெள்ளம் கண்டு திணறுவதுபோல, வரட்சி கண்டிருந்த நாடகக்கலை மீட்சி பெற்றுவிட்டதுபோன்ற மகிழ்ச்சி கரைபுரண்டது.

எத்தனையோ ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் கிடந்த ஜீன்ஸ் (திரை) முக்குச்சுவரை முட்டி மோதும் சகித்துக்கொள்ளமுடியாத நெடியைக்கிளப்பிக்கொண்டிருந்தது.

என் பாத்திரத்தை வசனப்பிசகின்றி நடித்து முடித்திருந்தேன்.

நாடக முடிந்து இளைப்பறிக்கொண்டிருந்த போது க. உதயகுமார் அதே மேசையில் ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தார். என்னை ஏன் அவர் கண்டுகொள்ளவில்லை என்று குழம்பிக்கொண்டிருந்தேன். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோதே நானும் குறுக்கிட்டு என் கருத்தைச்சொன்னபோதுதான் உதயகுமார் “ஓ நீங்களா?” “அடையாளமே தெரில!” என்றார். அதோடு நின்றிருந்தால் பரவாயில்லை.

“சார் நீங்க உங்க கைப்பிடியைப் பார்த்து வசனம் பேசினது நல்லா தெரிஞ்சிடுச்சு சார்” என்றார். மூன்று நாட்களாக சோப்பு கொண்டு கழுவியும் மறையாத முக ஒப்பனையைப்போல உதயகுமாரின் வெள்ளந்தியான வார்த்தைகள் நினைவை சற்று வெட்கமுறச் செய்துகொண்டிருந்தது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...