Skip to main content

(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)

அன்புள்ள ஜெயமோகன்,



உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவாலோடு நாகர்கோயிலுக்கு வந்துவிடுவார் போலிருக்கிறது.



இங்கே படைப்பிலக்கியம் தேங்கிப்போனதற்குச் சில விஷயங்களை நான் சொல்ல வேண்டும். மலாயாப் பல்கலைக்கழகதுக்கு(-இங்கே மட்டும்தான் தமிழ் பல காலமாக ஒரு பாடமாக போதிக்கப்பட்டு வருகிறது- )தமிழகத்திலிருந்து தமிழ் இலக்கணம் இலக்கியம் போதிக்கத் தருவிக்கப்பட்டு வந்தார்கள். அவர்களில் மிக முக்கியமானவர் இரா.தண்டாயுதம். இவரின் குருவான மு.வரதராசனயும்., ஆதர்ஸ எழுத்தாளரான அகிலனையும், ந. பார்த்தசாரதியையும் இங்கே அறிமுகப்படுத்தினார். தற்கால இலக்கியத்தைப் போதிக்கும் பாடத்திட்டத்துக்கு இவர்களின் நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். பல்கலைக்கழகம் , இடைநிலைக்கல்வி பாடத்திட்டத்தில் இன்றைக்கும் இவர்கள் நூல்கள்தான் போதிக்கப்பட்டு வருகிறது. இதனை அடியொற்றி வந்தவர்கள் எப்படிப்பட்ட இலக்கியம் படைப்பார்கள் என்று யூகித்துக்கொள்ளுங்கள். மு.வா , ந.பா , அகிலன், நூல்கள் இன்னமும் இங்குள்ள புத்தகக்கடையில் கிடைக்கும். ஜெயமோகன், சுந்தர ராமசாமி, மௌனி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், மனுஷ்யபுத்திரன், சேரன் போன்றவர்களை இவர்கள் அறிந்திருக்கவில்லை. நான் உங்களிடம் உங்களை மலேசிய வாசகர்கள் பலர் அறிந்திருக்கவில்லை என்றும் கூறினேன். புரிந்துகொண்ட நீங்கள் ஒரு புன் சிரிப்பை உதிர்த்தீர்கள். இங்குள்ள பெண் வாசகர்கள் பலர் ரமணிச்சந்திரனை விடமாட்டார்கள் போலிருக்கிறது. எனவே இங்கேயும் ரமணிச்சந்திர பாணி எழுத்தாளர்கள் உருவாகி எழுதி வருகிறார்கள். இந்த வகை எழுத்து இங்கே செல்லுபடியாவதை தவிர்க்க வெகு காலமாகும். இரா.தண்டாயுதத்தின் இதே கொள்கையைத் தொடர்ந்து காப்பாற்றியவர் இன்னொரு தமிழகப்பேராசிரியர் நா.வி. ஜெயராமன். இவர்களின் போதனையால் இங்கே மு.வாவும், நா.பாவும், அகிலனும் நிரந்தர ‘குடியுரிமை’ பெற்றுவிட்டார்கள். மு.வா விலிருந்து move ஆகாத நிலை இங்கே உருவாகிவிட்டது. இவர்களுக்கு முன்னால் கு. அழகிரிசாமி தமிழ் நேசன் இல்க்கிய ஆசிரியராகப் பணியாற்றக்கொண்டு வரப்பட்டார். அவரின் சேவை நல்ல இலக்கியவாதிகளைப் பிறப்பித்தது. அவர்களில் பலர் இன்றில்லை.



இங்கே தமிழகத் தீவிர எழுத்தாளர்கள் நூல்கள் கிடைப்பது அரிது. நான் தமிழகம் வரும்போதெல்லாம் தேடித் தேடி நூல்கள் வாங்கி வருவேன். தமிழகத்துக்கு போக முடியாதவர்கள் இங்கே கிடைக்கும் நூல்களை நம்பியே இலக்கியம் படைக்கிறார்கள். அப்படிக்கிடைக்கும் நூல்களின் விலையோ தமிழ் நாட்டைவிட மும்மடங்கு அதிகம். நீங்களே சிந்தித்துப்பாருங்கள் அதிக விலை கொடுத்து நூல்களை வாங்குவதை விட அதே தரத்திலான சீரியல் நாடகத்தைப் பார்க்கலாமே என்று முடிவெடுக்கிறார்கள். சீரியலும் படப்பிலக்கியத்துக்கான சரக்கை தந்துதவுகிறது.



சினிமாவைக்களமாகக்கொண்டு புகழ்பெற்ற வைரமுத்துவின் பாதிப்பு இங்கே மிக அதிகம். அவர் மலேசியாவின் செல்லப்பிள்ளை. ஆஸ்ட்ரோ வானவில், எழுத்தாளர் சங்கம் அவரைப் பலமுறை கள்ளிக்காட்டு இதிகாசத்துக்கும், கருவாச்சி காவியத்துக்கும், மலேசிய நாவல் போட்டிக்கும் இங்கே சிவப்புக்கம்பள விரிப்பை நல்கி அவரின் நூலை வெளியிட்டு லட்சக்கணக்கை கொடுத்து அனுப்பியது. அவரின் சினிமாப்பாடல்கள் ஒரு தேசிய கீத அந்தஸ்தைப்பெற்றது. மேத்தா கண்ணீர்ப்பூக்களால் ஆராதிக்கப்ப்ட்டு பின்னர் மறக்கப்பட்டார். இருவரும் மலேசியக் கவிதை பாணிக்கு வழிவகுத்தவர்கள்.



தீவிர இலக்கியத்தை முன்னெடுத்துச்செல்லும் இயக்கங்கள் இங்கே மிக மிகக்குறைவு என்று சொல்லிவிடலாம். நீங்கள் இங்கே வந்து பேசியபோது உங்களிடம் விடுக்கப்பட வினாக்களிலிருந்து இலக்கியப் பின்னடைவை நீங்கள் உணர்ந்திருக்கலாம். உங்கள் பதில்கள் அதிர்ச்சி வைத்தியமாகவே அர்த்தப் படுத்திக்கொண்டார்கள். வடக்கில் சுவாமி பிரம்மாந்தா ஆசிரமத்தில் நாங்கள் நடத்தும் நவீன இலக்கியச் சிந்தனைக் களமும், கோலாலம்பூரில் வல்லினம் குழு மட்டுமே தீவிர இலக்கிய வளர்ப்பில் ஈடுபடுகிறது. இந்தக் குழுமத்திலிருந்து வருபவர்கள் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்கள். ஆனால் நம்பிக்கை தரக்கூடியவர்கள். நீங்கள் சொல்வது போல சுயம்புவாக தீவிர வாசகத்தில் ஈடுபடுபவர்கள், இணையத்தில் நல்ல எழுத்தாளர்களைத் தேர்வு செய்து வாசிப்பவர்களும் இவர்கள்தான். இவர்களை நம்பலாம். உங்களை போன்றவர்களுடனான தொடர்பு புதிய வெளிச்சத்துக்குக் கொண்டு செல்லும். நன்றி.

( இக்கட்டுரையை உங்கள் தளத்தில் பிரசுரிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.)



கோ.புண்ணியவான்.

நவீன இலக்கியச் சிந்தனைக் களம்.







Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...