Skip to main content

புதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.

(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி)



`கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன்.




1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை? அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும்.



மலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்கமான மாயையில் எழுதித்தொடர்ந்தேன்.( அப்படிப்பட்ட மாயை நிறைந்த சுய ஊக்கம் ஒருவகையில் நம்மை வளர்த்தும் விட்டிருக்கிறது) நான் வளர்ந்த காலத்தில் புதுக்கவிதைக்கு நயனம் இதழ் ராஜ பாட்டையை அமைத்துக்கொடுத்தது. புதிய படைப்பாளர்களை ஊக்குவித்த நயனம் அவர்கள் சற்று தரமான கவிதையைப்படைக்கும்போது ஒரு தனிப்பக்கத்தையே ஒதுக்கிக்கொடுத்து வாசகர்களைக்கவரும் வண்ணம் கலை நேர்த்தியோடு கவிதையைப்பிரசுரித்து கவிஞனைத்தட்டிக்கொடுத்து ஊக்குவித்தது. தொடக்ககாலம் தொட்டு தொடர்ந்து அதன் ஆசிரியராக இருக்கும் ராஜகுமாரன் இன்றைக்கும் அந்த உற்சாகப்படலத்தைக் கைவிடவில்லை. இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் கவிஞர்கள் அனைவருமே நயனம் என்ற குருகுலத்திலிருந்து தேரி வந்தவர்கள்தான். அதில் நானும் ஒருவன் என்பதில் பெருமையடைகிறேன். அப்படி நயனத்தில் வந்த பல கவிதைகளில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய ஒரு சில கவிதைகள் என்னை அடையாளப்படுத்தின. தொகுப்பு நூல்களில் பதிவாகின. ஆய்வரங்கங்களில் பேசப்பட்டன. பல்கலைக்கழக பாடத்தில் படிக்கப்பட்டன. எனக்கது மிகப்பெரிய கிரியா ஊக்கியாக தூக்கிவிட்டது. நானும் கவிதை எழுதலாம் போலிருக்கிறதே என்ற தன்னம்பிக்கையை எனக்களித்தது.

சில உண்மைகள் என்ற தலைப்பில் 80களில் நயனத்தில் வெளியான கவிதை அதற்கு ஒரு சான்று.



கொடுமை

ஹிட்லர்

இடி அமின்

காபுல்

இத்யாதி இத்யாதி...



பெருமை

ஆர்ம்ஸ்ட்றோங்

சி.வி ராமன்

இத்யாதி... இத்யாதி.....



வறுமை

இதியோப்பியா

சூடான்

சுப்பிரமணியம்

சுப்பையா

முனியாண்டி

இத்யாதி...இத்யாதி..



ஆரம்பக்காலக் கவிதைகளில் இன்னொன்று



அடுத்த வாரிசுகள்



அம்மாவுக்கு

மங்கு துடைக்கப்போனவந்தான்

அவளுக்கு அப்புறம்

அதே நிரைக்கு

பிரட்டில் ஆஜரானான்



அப்பாவுக்கு

சம்சு வாஙகப்போனவந்தான்

சம்சுவின் அடுத்த

வம்ச விருத்திக்கு

ஆளானான்



அண்ணனுக்கு

உதிரிப்பழம் பொறுக்கப்

போனவந்தான்

அப்படித்தான்

அவனும் சிதறிப்போனான்.



சித்தியாவானில் நடந்த புதுக்கவிதை கருத்தரங்க நூலின் டாக்டர். சண்முகசிவா மேற்காணும் கவிதையைச் சிலாகித்து எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது.

இப்படிச்சில கவிதைகள் என்னை அடையாளம் காட்டின. அவை பின்னாளில் இன்றைக்கிருக்கும் எனக்கான இடத்தைப் பிடித்துக்கொடுக்க அடித்தலம் அமைத்தது.



2. மலேசியாவில் புதுக்கவிதை புரட்சி ஏற்பட்டபோது தங்களின் கவிதைப்புனைவு எவ்வித மாற்றத்தைக்கண்டது ? தாங்கள் புதுக்கவிதை துறைக்கு ஆற்றிய பங்களிப்பைப் பகிர்ந்து கொள்ளவும்.



ஆரம்பத்தில் மரபுக்கவிதயின்பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். நான் வளர்ந்த காலம் என் படைப்புச்சூழல் என் நண்பர்கள் அனைவருமே மரபு சார்ந்து வந்தவர்கள். என் இலக்கிய வளர்ச்சிக்கு அவர்களின் நிழல் எனக்குத்தேவைப்பட்டது. அவர்களோடு இருந்த காலக்கட்டத்தில் சில மரபுக் கவிதைகளைப் படைத்திருக்கிறேன். எண்சீர், அறுசீர், சந்தம் என் எளிமையான பாவினம் எனக்குக்கை கொடுத்தது. ஆனால் மடை உடைத்த வெள்ளமென குறுக்கே பாய்ந்த புதுக்கவிதையின் தோற்றம், உணர்ச்சிப்பெருக்கு என்னை மடை மாற்றம் செய்தது. என் உணர்ச்சி வேகத்துக்கும் என்னிடம் அப்போதிருந்த குறைந்தபட்ச சொற் கூட்டதுக்கும் - இருக்கின்ற சொற்களை மூலதனமாக வைத்து என் உணர்ச்சியைக் கொட்டுவதற்கும் புதுக்கவிதை என்ற சொல் வீச்சு பெருந்துணையாக களம் அமைத்துக்கொடுத்தது. என்னை ஒரு படைப்பாளனாக வாசகர் மத்தியில் பேசவைத்தது. ஆரம்ப காலம் தொட்டே நான் ஒரு பற்றாளனாக புதுக்கவிதைப் படைப்புசூழலைப்பின் தொடர்ந்தேன். நான் கூலிமில் வசித்து வந்த காலத்தில் சுங்கைப்பட்டாணியில் மிகச் சீரிய எழுத்துக்கூட்டமொன்று நவீன/தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்க முனைந்து கொண்டிருந்தது. கூலிமுக்கும் சுங்கைப்பட்டாணிக்கும் வெகு தூரமில்லை. ஒரு மணி நேரப்பேருந்து பயணத்தில் அடைந்துவிடலாம். ஆனால் அதற்கான பொருளாதார வசதி எனக்கு வாய்க்கவில்லை. எனவே எட்டி இருந்தே பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தேன். எம் ஏ இலஞ்செல்வன், துரை முனியாண்டி, சீ. முத்துசாமி, கனலன், போன்றோர் சுங்கைப்பட்டாணியில் நவீன இலக்கியத்தை அப்போது முன்னெடுத்துச்சென்றனர். முதல் புதுக்கவிதை மாநாடு சுங்கைப்பட்டாணியில் நடந்தது. பைரோஜி நாராயணன் எம்.துரைராஜ் போன்றவர்களின் ஆசியோடு. இரண்டாவது மாநாடு கூலிமில் நடந்தபோது இளஞ்செல்வனோடு சேர்ந்துகொண்டு பணியாற்றினேன். இளஞ்செல்வன் அப்போது கூலிமுக்கு வேலை மாற்றலாகி வந்திருந்தார். கண்ணீர்ப்பூக்களின் சூட்டோடு மு. மேத்தா கூலிம் மாநாட்டில் கலந்து கொண்டார். மலேசியாவில் புதுக்கவிதையின் வளர்ச்சிக்காக ஆதிகுமணன் அழைப்பின் பேரில் மேத்தா மலேசியா வந்திருந்தபோது அவரைக்கையோடு கூலிமுக்கு அழைத்துவருவதில் என் பணி முக்கியமானது. மாநாட்டின் போது புதுக்கவிதை வாசிப்பு அங்கத்தை நான் அறிமுகப்படுத்தினேன். கவியரங்கம் போலல்லாமல் கவிதையை உணர்ச்சிபொங்க நடிப்போடு படைக்கும் அங்கத்தை (deklamasi sajak- கல்லூரியில் படித்த காலத்தின் பாதிப்பு அதனை முன்னெடுத்துச்செல்ல் உதவியது) அறிமுகப்படுத்தினேன். அது பேராதரவைப்பெற்றது.

தொடர்ந்து சித்தியவானில் நவீன இலக்கியச்சிந்தனை புதுக்கவிதை மாநாட்டை நிறைவேற்றியது. கோ.முனியாண்டி அதனை முன்னெடுத்துச் சென்றார். (அக்கருத்தரங்கம் நடத்திய புதுக்கவிதைப் போட்டியில் என்னுடைய கவிதையும் சிறந்த ஆறேழு கவிதைகளில் ஒன்றாகத்தேர்வு பெற்றது).

அதன் நீட்சியாக மலேசிய எழுத்தாளர் சங்கம் புதுக்கவிதையை வளர்த்தெடுக்க நாடு தழுவிய அளவில் புதுக்கவிஞன் வாழுமிடத்துக்கெல்லாம் சென்று கருத்தரங்குகள் நடத்தின. நானும் பலமுறை மூன்று மாத ஆய்வுகளைப்படைத்து வந்திருக்கிறேன். பல புதிய கவிஞர்கள் ஆர்வத்தோடு எழுத வந்தார்கள். இங்கே படைப்புச்சூழல் , வாசிப்புப் பழக்கம் இல்லாத காரணத்தால் நன்றாக வருவார்கள் என் எதிர்பார்க்கப்பட்டவர்கள் பலர் களத்திலிருந்து காணாமற்போனார்கள். இது ஒரு பெரிய சோகம். ஆனால் அவற்றையெல்லாம் கடந்து சிலர் தொடர்ந்து நன்றாகவே எழுதி வருவது உற்சாகமளிக்கிறது. உள்ளூர்ப்பல்கலைக்கழகங்கள். தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் என புதுக்கவிதை சார்ந்த என் ஆய்வுகளை ஆர்வத்தோடு படைத்திருக்கிறேன். புதுக்கவிதைப் போட்டிகளுக்கு நீதிபதியாகவும் பணியாற்றி இருக்கிறேன். இன்றும் ஆய்வுகளைத் தொடர்கிறேன். காத்திரமான ஒரு தேடலுக்கான வெளியை ஆய்வுகள் பெற்றுத்தருகின்றன. தொடர்ந்து கவிதையும் எழுதி வருகிறேன்.

கூலிமில் ஏழெட்டு எழுத்தாளர்கள் தீவிர வாசகர்கள் கூடி மாதமொருமுறை நவீன இலக்கியக்களம் என்ற பேரில் `கவிதை கதை நாவல் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடலை நடத்தி வருகிறோம். பாலமுருகன், மணிஜெகதீஸ், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, நாவல் ஆய்வாளர் குமாரசாமி, விரிவுரைஞர் தமிழ் மாறன் ஆகியோர் இக்குழுமத்தில் இயங்குகிறார்கள்.

மொழியின் வளர்ச்சிக்காக தமிழ் நாட்டிலிருந்து வரும் இலக்கியப்பேச்சாளர்களைச் சுங்கைப்பட்டாணிக்கு அழைத்துவந்து பேச வைத்திருக்கிறேன்.

ஒரு சில கல்லூரிகளிலும் , பள்ளி ஆசிரியர்களிடையேயும் புதுக்கவிதைப்பற்றிய பட்டறையும் நடத்தியிருக்கிறேன்.





3. மு.கருணாநிதி பாராட்டிப் பேசியதாகக் குறிப்பிடப்படும் அவன் நட்ட மரங்கள் கவிதை சமூகத்தில் உங்களுக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தியது என் நினைக்கிறீர்களா அல்லது அந்தக்கவிதையை மட்டும் முன்வைத்து தங்களின் ஒட்டுமொத்த கவிதை வெளியைச் சுருக்கி மதிப்பிடப்படுவதாகக்கருதுகிறீர்களா?



என் எழுத்து வாழ்க்கையில் என்னைப்புரட்டிப்போட்ட கவிதை இது. இக்கவிதை தமிழ் அறியாத தமிழர்களைச் சென்றடைந்தது என்பது அதனினும் வியப்பு. இதன் வியாபகம் இன்றும் நீண்டுகொண்டே போகிறது என்பது கவிதைக்கான மிகப்பெரிய அங்கீகாரமாக அமைகிறது.. கவிதை தன் பிடிக்குள் கிட்டாதது என் எண்ணி எட்டி நின்றவர்களைச் சுண்டி இழுத்தது. இக்கவிதையைப்பற்றிப் பேசும்போது ஒரு வகையில் எனக்குப் பெருமையாகவும் பெருமளவில் எனக்குப் பின்னடைவையும் கொண்டு வருவதாகக் கருதுகிறேன். இந்த ஒரு கவிதை மட்டுமே என்னைப்பற்றிப் பேசக்கூடிய பிம்பத்தை என் மேல் ஏற்றிவிட்டுச் சென்றுவிட்டது. பிற படைப்புகளை இக்கவிதை இருட்டடிப்பு செய்துவிட்டது. இது போன்ற சங்கடத்தை இலக்கிய வாதிகள் கடந்து வந்துவிட முடியாது போலும். கலாப்பிரியா எழுதிய நீ அழகாயில்லாததால் என் தங்கையானாய் என்ற கவிதை அவருடைய மற்ற படைப்புகளில் முன்னணி வகிப்பதுபோல. இதற்கு முகாந்திரமான காரணம் கலைஞர் வாயால் இக்கவிதைக்கு வாழ்த்துக்கூறியதுதான். உள்ளபடியே இக்கவிதையை அன்றைய மயில் மாத இதழ், புதிய ஆளாயிருக்கிறானே என்று சந்தேகப்பட்டு ஒரு ஓரத்தில் பிரசுரித்தது. நமக்குள்ள சாபக்கேடு என்னவென்றால் பல எடிட்டர்களுக்கு நல்ல இலக்கியத்தை அடையாளம் காணமுடியாத பலவீனம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமைக்குத்தான் இவன் நட்ட மரங்கள் கவிதையும் ஆளானது. அது தீண்டத்தகாத ஒன்றாகவே காலத்தை கடந்து கொண்டிருந்தது. வீ. செல்வராஜ் என்ற எழுத்தாளர் பேராசிரியர் தண்டாயுதம் பேரில் ஒவ்வொரு ஆண்டும் மலேசியா சிறந்த இலக்கியப் படைப்பை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அந்தத் தருணத்தில் மு. அன்புச்செல்வனும் அவருக்கு உதவியாக இருந்தபோது இக்கவிதையை கண்டெடுத்து அவரிடம் பரிந்துரைத்திருக்கிறார். பிறகு அது நூலில் பதிவானது. அணிந்துரை பெறுவதற்காக கலைஞரிடம் அனுப்பியபோது இக்கவிதையை அவர் வெகுவாகப்பாராட்டியிருந்தார் . அதற்குப்பிறகே அது தனக்கான அடையாளத்தோடு சிறகு விரித்துப் பறந்துகொண்டிருக்கிறது. கலைஞரின் பார்வைக்கு அது சென்றடையாமலிருந்திருந்தால் அதுவும் பத்தோடு பதினொன்றாக மூழ்கிப்போயிருக்கலாம். அச்சம்பவம் என்னை மோதிரக்கையால் தட்டிக்கொடுக்கப்பட்ட உணர்வு மேலோங்கச் செய்தது.

அக்கவிதையின் தாக்கத்தை வைத்தே என் பிற கவிதைகளையும் பார்க்கிறார்கள். அதற்கு ஈடான கவிதை இன்னும் நீங்கள் எழுதவில்லை என்று என் முகத்துக்கு நேராக சொல்லியும் இருக்கிறார்கள். ஒரு முறை ஒரு காதல் கவிதையை எழுதியதைப்படித்தவர் என்னைச் சந்தித்தபோது அப்படியெல்லாம் எழுதிய நீங்கள் காதல் கவிதை எழுதலாமா எனக்கேட்டார். இக்கவிதை ஒன்றைத்தான் உருப்படியாய் எழுதியிருக்கிறீகள் என்று போகிற போக்கில் ஒரு கவிஞர் விமர்சித்து விட்டுப்போனார். அவரிடம் பேசுவதற்கு முன் அவர் லிப்டிலிருந்து வெளியேறி மறைந்துவிட்டார். இவர்கள் கூறிய கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது நீங்கள் சொல்வதுபோல அந்தக் கவிதையை வைத்தே என் ஒட்டுமொத்த படைப்பை எடைபோடுகிறார்கள் எனத்தோன்றுகிறது.

எனக்கு விநோதமான இன்னொரு அனுபவத்தை இக்கவிதை பெற்றுக்கொடுத்தது. நேரடியாக பலர் இக்கவிதையை வைத்தே என் அடையாளத்தை நிர்ணயித்தாலும் என்னைப் பினாங்கு பெர்ரியில் சந்தித்த ஒரு வாசகரின் நெகிழ்வை இங்கே நினைவு கூறவேண்டும். நான் பெர்ரிக்குள் காரை நிறுத்திவிட்டு கடலைகளை ரசிப்பது வழக்கம். என் மனம் அலைகளின் மேல் நீந்திக்கொண்டிருந்தபோது ஒருவரின் பார்வை என் கவனத்தைக் கலைத்துக்கொண்டே இருந்தது. என்னை ஏன் இவர் பார்வை கழலாமல் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என் யோசித்தவண்ணமிருந்தேன். சற்று நேரத்துக்குப்பிறகு என்னை நெருங்கி வந்தார். ஒரு புன்சிரிப்பற்ற முகத்தோடு நீங்கள் கோ.புண்ணியவான்தானே என்றார். நான் யாரிடமும் கடன் பாக்கி வைத்தவனல்ல. இவர் ஏன் என்னை விசாரிக்கவேண்டும் என்று யோசித்தவண்ணமிருந்தேன். என் கையைப்பிடித்து குலுக்கி இவன் நட்ட மரங்கள் கவிதையை என்னிடமே ஒப்புவித்து நீங்கள் தானே அதனை எழுதியது என்றார். எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. ஆமாம் என்றேன். எப்பேற்பட்ட கவிதை அது. அதை எழுதயவரை நேரில் சந்திக்க வேண்டுமென்று என் நீண்ட நாள் ஆசை. அது இன்றைக்கு நிறைவேறியது. இன்றைக்கு நடக்கும் ஹின்ட்றாப் போராட்டத்துக்கும் இக்கவிதைக்கும் எவ்வளவு தொடர்பு இருக்கிறது பாருங்கள் என்றார். உங்களோடு நான் பேசணும் பெர்ரியவிட்டு இறங்கியதும் ஆனந்த பவனுக்குப்போகலாம் என்றார். போய்டாதீங்க அங்க வந்திடுங்க நான் காத்திருப்பேன் என்றார். நான் மெய் சிலிர்த்துபோனேன். எனக்கு எண்ணற்ற பரிசுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த மனிதரின் வெள்ளந்தியான பாராட்டுக்கு அதெல்லாம் ஈடாகாது.

எனவே இந்தக்கவிதை இரண்டு விதமான அபிப்பிராயத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒன்று இது எனக்கான அடையாளத்தை இறுக்கமாக நிறுவியதும்

இரண்டாவது என் பிற கவிதைகளின் தாக்கத்தை மறுக்கும் சக்தியை அது, தனக்குள்ளேயே பிரவாகித்துக்கொண்டிருப்பதும் தான்.

இருப்பினும் இப்போது அக்கவிதை எனக்குச் சொந்தமில்லை. அது பொதுச்சொத்தாகி வெகு நாட்களாகிவிட்டது.





4. கவிதைத்துறையில் தாங்கள் பெற்ற பரிசுகளையும் குறிப்பிடுங்கள். அந்தப்பரிசுகள் உங்களை எந்த அளவுக்கு வளப்படுத்தியது? அல்லது வெறும் ஊக்கமாக மட்டும் தேங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?



இலக்கியப்போட்டிகள் என்னை ஊக்குவித்தன. இங்கே தீவிர இலக்கியத்தை வளர்த்தெடுக்கும் முயற்சி மிகக்குறைவு. எழுத்தாளர்கள் கூடி விவாதிக்கும் ஒழுங்கமைவு இங்கே இல்லை. விமர்சனப்பார்வையோடு அணுகும் பண்பாடு அருதியாக இல்லை. அதனால் படப்பாளன் தனது அங்கீகாரத்துக்காக களம் தேடி அலையவேண்டியுள்ளது. படைப்பின் தரத்தை எடை போடுவதற்கு மலேசியாவில் போட்டிகள் களம் அமைத்துக்கொடுப்பதாக நான் கருதுகிறேன். ஒரு சில போட்டிகளில் உள்ளரசியல் முடிவை நிர்ணயித்தாலும், சில போட்டிகள் நியாயமான முறையில் நடக்கின்றன. மலாயாப் பல்கலைக்கழக பேரவைப்போட்டிகள், எழுத்தாளர் சங்க மாதாந்திர தேர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம். நியாய முறை கறாராகக் கடைபிடிக்கப்படுவதால் பல தேர்ந்த எழுத்தாளர்களுக்குப் பரிசு கிடைக்காமல் போன தருணங்களும் உண்டு. ம. ப. பேரவைப்போட்டியில் எம் ஏ இளஞ்செல்வனின் சிறுகதைக்குப் பரிசு கிடைக்காமல் போனதை என்னிடம் கூறி குறைபட்டுக்கொண்டார். பலர் எப்படி மீண்டும் மீண்டும் ஓரிருவரே வாங்கலாம் என்று என்னிடமே கேட்டிருக்கிறார்கள். இப்படிக்கேட்டவர்களில் பெரும்பாலும் பெண்கள். அவர்கள் மீண்டும் அதே போட்டிக்கு எழுதி பரிசும் வாங்கியிருக்கிறார்கள். கதைகள் வாசிக்கப்பட்டு நீதிபதிகளின் விவாதத்துக்குப்பிறகு பரிக்குரிய கதைகள் தேர்ந்தெடுக்கப்படும்போது, பெரிய பெரிய பிரபலங்களெல்லாம் ஒரு பொருட்டல்ல என்பதே நியாயத்துக்கான கட்டியமாகிறது. நான் போட்டிக்கு எழுதுவது அங்கீகாரத்துக்கு. என் படைப்புத்திறனை ஊக்குவிப்பதற்கு. சமூக அவலங்களைக்கொண்டு சேர்ப்பதற்கு. நூலாக்கம் பெறும் முயற்சியை ஊக்குவிப்பதற்கு. சிரமப்பட்டு போட்டியை நடத்துபவர்களுக்குத் தார்மீக ஆதரவு தருவதற்கு. பரிசு இரண்டாம் பட்சம் தான். எத்தனையோ முறை பரிசு பெறாமலும் போயிருக்கிறேன். அப்போதெல்லாம் நீதிபதிகளின் மேல் நான் சீறிப்பாய்ந்தது கிடையாது. 2009ல் ம. ப. பேரவை சிறுகதைப்போட்டியில் அது ஏற்கனவே என் மறதி காரணமாக ம. ஓசையில் பிரசுரமான காரணத்தால் எனக்குக்கிடைத்த முதல் பரிசான ம.ரி.2000 யை நான் பெற்றுக்கொள்ளவில்லை. சிலர் பல போட்டிகளுக்கு எழுதி பரிசுகளையும் வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு கைகளையும் மனத்தையும் டெட்டோல் போட்டு கழுவ முயற்சிப்பதுபோன்ற பாவனையில் ஈடுபடுவது எவ்வளவு பரிகசிப்புக்குரியது! போட்டிகளுக்கு எழுதாத எழுத்தாளர் இருந்தால் சொல்லுங்கள் அவர்களை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற முயற்சி செய்யலாம்.

கவிதைக்கு இரண்டு முறை மட்டுமே பரிசுகள் பெற்றிருக்கிறேன். வானவில் நடத்திய சிவாஜி கணேசன் கவிதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றேன். இக்கவிதை பலமுறை தொலைக்காட்சியில் என் குரலிலேயே ஒலிபரப்பானது. எனக்கான பிரபலத்தைத் தேடிக்கொடுத்தது. அக்கவிதை என்னை நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் கொண்டு சேர்த்தது. இதை வெறும் உணர்ச்சிவயபடுத்தக்கூடிய ஒன்றாகக் கருதியிருந்தால் நான் என்றோ எழுதுவதை நிறுத்தியிருப்பேன். கவிதையும் எழுத்தும் என்னோடு இருப்பவை. பரிசுகளால் மட்டும் நான் வளர்க்கப்படவில்லை. தேர்ந்த இலக்கியப் படைப்பே என்னை கொண்டு செலுத்துகிறது. இவன் நட்ட மரங்கள் எந்தப்பரிசும் பெறவில்லை. ஆனால் அதன் சிந்தனை, சமூகப்பின்னடைவின் கண்ணாடியாக , நமக்கு அரசு ரீதியாக மறுக்கப்பட்ட நியாயங்களைப் பறை சாற்றும் அங்கத்தக்குரலாக ஒலிக்கிறது . ஒரு முறை வானொலியில் பேட்டி அளித்தபோது இடைவேளை நேரத்தில் அறிவிப்பாளர் நீங்கள் எழுதிய கவிதை பற்றிப்பேசுவோம் என்றார். நான் இக்கவிதையைச் சொன்னேன். வேண்டாம் இப்படிப்பட்ட கவிதைகளை வானொலியில் சொல்லாதீர்கள் என்று என்னைத் தடுத்தார். இதில் ஒலிக்கும் கலகக்குரல் தேச விரோதமானது என்றார்.

(என்னுடைய பல படைப்புகள் இதே ரீதியில் எழுதப்பட்டவை) அதன் காரணத்தால் அதன் தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்படி எண்ணற்ற படைப்புகள் வெகுஜனப்பத்திரிகையில் எந்த விதமான சன்மானமும் பெறாமலேயே எழுதித்தள்ளியிருக்கிறேன். ( பிறரும்தான்) தமிழ்ச்சூழலின் சாபக்கேடு இது. பரிசுகள் தட்டிக்கொடுத்தன அவ்வளவே.







5. தற்போது கவிதைக்குள் நவீனத்துவ பின்நவீனத்துவ பிரயோகிக்கப்பட்டு வருவதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுடைய கவிதை நடையுங்கூட

முந்தைய புதுக்கவிதை வடிவத்ததிலிருந்து மாறுபட்டு வருவதாக உணர்கிறேன்.



பின்நவீனத்துவ கோட்பாடு குறித்து நிறைய வாசிக்கிறேன். தொடக்கத்தில் ஒன்றுமே புரியவில்லை. பின் நவீன கோட்பாடு புரிந்த அளவுக்கு பல பின் நவீன கதைகள் கவிதைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை . நிறைய வாசிக்க வாசிக்க அதன் உட்பொருளை புரிந்துகொண்டேன். கட்டுடைத்தலே அதன் முதன்மை நோக்கம். ஒரு படைப்பின் மரபார்ந்த வடிவ ரீதியையும் , உள்ளடக்கத்திலும் சமரசமற்ற மாற்றத்தைக்கொண்டு வருவது என்ற அளவில் என் புரிதல் இருக்கிறது. படைக்கின்ற எழுத்தாளன் அதன் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் தன் போக்குக்குக் கட்டமைக்கிறான். அவனுக்கான வடிவ உள்ளடக்க சுதந்திரத்தைச் சுயமாகக் கட்டமைத்துக்கொள்கிறான். ஆனால் இது இடத்துக்கு இடம் மொழிக்கு மொழி வெவ்வேறான கருத்தியலைக் கொண்டது. தமிழில் (மலேசியாவில்) பின் நவீனம் என்பது இன்னும் சரிவர இயங்கவில்லை. மலேசியாவில் நவீன இலக்கியமே நொண்டும்போது நாம் பின் நவீனம் பற்றிப் பேசுவதற்கான சூழல் வளரவில்லை. நவீன இலக்கியப் படைப்பிலேயே நாம் நிறைவாக செய்ய முனையவேண்டும். யதார்த்த கதையாடலை நாம் வாசகனிடம் கொண்டுபோச்சேர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். நமக்கான வாசகர்களின் பக்குவத்திற்கேற்ப கதையாடல் அமையவேண்டும்.காவர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த யதார்த்த கதை சொல்லலின் அடுத்தடுத்த பரிமாணத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியை மேற்கொள்ளலாம். அவர்கள் நம்முடைய வாடிக்கையாளர்கள் அல்லவா? நாம் பாலர் பள்ளியில் படிக்குபோதே ஆர்வக்கோளாரால் பல்கலைக்கழகத்துக்குத் தாவக்கூடாது.

எனக்குப்புதுக்கவிதைதான் தாய் வீடு. அதன் கருவறையில்தான் நான் வளர்ந்தேன்.எல்லா இலக்கிய வடிவங்களும் புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன. அதுபோலவே புதுக்கவிதை இன்றைக்கு நவீன வடிவத்துக்குத் தன்னை தோலுறித்துக்கொண்டது. சமூகப் பிரக்ஞையோடு பாடுவதை நிறுத்தி ஒரு படைபாளனின் உள்ளுணர்வுகளின் கச்சா பொருளாக நவீனக்கவிதைகள் வெளிவருகின்றன. முதலில் அதன் பாணியிலேயே நான் படைக்க முயற்சி செய்தேன். இரண்டொரு கவிதை நான் நினைத்ததுபோல வந்தது. பல கவிதைகளுக்கு என்னால் நவீன வடிவத்தில் எழுத முடியவில்ல. நான் அடிப்படையில் புதுக்கவிதைக்காரன். அதற்குள் ஊறிப்போனவன் நான். அதன் வடிவமே எனக்குப்பிடிக்கிறது. நவீனக்கவிதைகள் எழுத வராத காரணத்தால் எனக்கு அதன் மேல் விருப்பம் குறைந்து வருகிறது. ஒருமுறை நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒருவரை நவீனக்கவிதைகளை வாசிக்கிறீர்களா என்று ஆர்வதோடு வினவினேன், அவர் தனக்கு நவீனக்கவிதைகளின் மேல் விருப்பம் உண்டாவில்லை என்று சொன்னார். அவர் ஒரு புதுக்கவிதைப்பிரியர். அதன் போராட்ட நேரத்தில் மிகப்பெரிய ஆதரவைக் காட்டியவர். அவருக்கே கவிதையின் நவீனப்பரிமாணம் பிடிக்கவில்லை.

புதுக்கவிதைகள் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் , ஏராளமான வாசகர்களை தன் வசம் ஈர்த்தது. ஏனெனில் அதன் எளிமையும், சமூக அவலங்களை அங்கதத்தோடும் கோபத்தோடும் முன் வைக்கும் பாணியும், அதனை வாசகன் சுவீகரித்துக் கொண்டதும் சமூகத்தில் அதற்கான இடத்தை நிர்னயித்து தக்க வைத்துக்கொண்டது . இதன் காரணத்தால் பிற இலக்கிய வடிவங்களை விட புதுக்கவிதை நிறைய வாசகர்களைக் கவர்ந்தது. ஆனால் நவீனக் கவிதைகளின் இருண்மைப்போக்கு, படைப்பாளனின் சுய ஆழ்மன வெளிப்பாடு, வந்த வாசகனை விரட்டி அடித்து விட்டது. எனக்குத்தெரிந்த சில நல்ல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை நூலாக்கம் செய்து அதனை வெளியிடும் முயற்சியிலிருந்து பின்வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். சிலர் வெளியீடு செய்யும் முயற்சியைக் கைவிட்டு விட்டார்கள். நவீன கவிதைகள் வாசகர்களைப்போய்ச்சேரவில்லை என்பதற்கு இதைவிட வேறு ஆதாரத்தைச் சொல்லமுடியாது. நாம் எதிர்கொள்ளும் அவசர உலகத்தில் முதல் வாசிப்பிலேயே வாசகனை உள்ளிழுக்கும் எழுத்துத்தகுதியை நாம் கடைபிடிக்கவேண்டும். இது இன்றைக்கு நாம் எதிர்நோக்கும் வாசக வெறுமையை நிரப்பும்.



6. ஒரு தனிமனிதனின் நேரடியான அனுபவமும் கருப்பொருளும் கவிதைக்கென உருவாகியிருக்கும் புதிய மொழியையும் அதன் ஆன்மாவையும் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றிவிடும் என நினைக்கிறீர்களா?

ஒரு படைபாளனின் அனுபவப்பகிர்வே புனைவாக வெளிப்படுகிறது. நம் நினைவு கடந்த கால பாதிப்புக்களால் நெய்யப்பட்டது. இறந்த கால நினவுகளை மீட்டெடுக்கும் பிரதியாகவே கவிதைகள் நம்மை கருவியாக வைத்துத் தோன்றுகின்றன. எனவே கவிதை இழப்புகளின் பிரதி. சோகத்தின் வடு. கோபத்தின் வெளிப்பாடு. ஆற்றாமையின் வேறொரு உரு. ஒரு குறிப்பிட்ட படைப்பாளனின் அனைத்துப்படைப்பையும் சேகரித்து அவற்றை ஆய்வுக்குட்படுத்தும்போது அது அவனின் அந்தரங்க வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றமாகவே இருக்கும். தனி மனிதனின் நேரடி அனுபவமோ அல்லது வெகு அருகிலிருந்து பிறர் அனுபவத்தையோ ஆழமாக உள்வாங்கிக்கொண்டதாலோ உண்டான பாதிப்புதான் படைப்பாக மலர்கிறது. பிறர் அனுபவத்தை தரிசித்தபின் மலரும் படைப்புகளில் படைப்பாளனின் அனுபவமும் எப்படியும் உள்ளே நுழைந்துவிடும். அனுபங்களை எழுதும்போது அதற்குள் ஆழமாக பயணிக்கமுடியும். உள் மன உணர்வு அதனூடே வெளிப்படும். உள்ளுணர்வின் தாக்கத்தாலும் அழகியல் படைப்பின் தரத்தைக்கூட்டும். ஒவ்வொரு மனிதரின் அனுபவமும் வெவ்வேறானவை. அ. முதுலிங்கத்தின் அனுபவமும், ஜெயமோகனின் அனுபவமும் முற்றிலும் மாறுபட்டவை. அவர்களின் அறிவு சார்ந்த தேடல் சார்ந்த வாழ்வும் முற்றிலும் வித்தியாசமானவை. மலேசியாவில் வசிக்கும் கார்த்திகேசின் அனுபவமும் கனடாவின் வாழும் கவிஞர் சேரனின் அனுபவமும் முற்றிலும் வேறானவை. புலப்பெயர்ந்து வாழ்பர்களும், போரை தினம் தினம் பார்த்து காயங்களோடு வாழும் மனிதர்களின் அனுபவமும் வித்தியாசமானவை. எனவே ஒவ்வொரு தேர்ந்த படைப்பாளனின் எழுத்தும் நடையும் சொல்லும் விதமும் படிப்பைச் சலிப்பூட்டும் பிரதியாக மாற்றாது. ஒரு புனைவின் நம்பகத்தன்மை என்பது அனுபவ நீட்சியில் கிடைப்பது. அதுவே தேர்ந்த இலக்கியப்பிரதியாகவும் மலர்கிறது.

அறிவியல் புனைக்கதை , மர்மக்கதைகளில் நாம் படைபாளனின் அனுபவத்தை தேட முடியாது. அவை fiction வகைமையாகவே இருக்கும். இங்கே இவை நிறைய எழுதப்படாமைக்குக்காரணம் வாசக வரவேற்பு இல்லாமையே.



7. இலங்கை எழுத்தாளர் ஒருவர் தங்களைப்பற்றிக்குறிப்பிடுகையில் “ ‘கோ.புண்ணியவானின் எழுத்து சமூகத்துக்கு வெளியிலிருந்து அவற்றை ஆழமான மதிப்பீடுகளுடன் அவதானிக்கும் கூர்மையுடையது’ எனக்கூறினார். இந்தக்கருத்தை அல்லது அடையாளத்தைத் தாங்கள் படைத்த கவிதைகளின் வழி எப்படிப்புரிந்து கொள்கிறீர்கள்?



நம்முடைய படைப்பு எப்போதுமே சமூகப் பிரக்ஞையோடு வெளிப்படுபவை. எழுத வருபவர்கள் சமுகப்பின்னணியைத்தான் முன்வைக்கிறார்கள். அதில் அழகியல் கூறுகள் தூக்கலாக இல்லையென்றால் சமூகப் பிரச்னைகள் சரிவர வெளிப்படாது. என் படைப்புக்களைப்பொறுத்தவரை என் அக விழிப் பார்வைக்குட்பட்ட , என் சுய அனுபவப்பகிர்வாக , உள் மனப்போராட்டத்தை முன் வைக்க முயல்பவை. ஒரு எழுத்தாளரின் படைப்பையெல்லாம் தொகுத்து படித்துப்பார்த்தால் அது அவன் வாழ்க்கையின் அந்தரங்கத்தை வெளிக்கொணரும் குறுக்குவெட்டுதோற்றமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். என்னுடையதும் அப்படித்தான்.

என்னுடைய கோபம் பல சமயங்களில் காத்திரமான வார்த்தைகளாக சமூகத்தை நோக்கியே நகரும். அதிகார மையத்தை நோக்கியே என் கவிதைகள் வினாக்கனை தொடுக்கும். ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக என் கவிதை குரல் கொடுக்கும். என் கவிதையை வாசிப்பவர் புரிந்துகொள்ளவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருக்கிறேன். நான் தேர்ந்தெடுத்த சொற்களும் கருத்துளும் சொல்லும் முறையும் எளிமையானதாக இருக்கவேண்டுமென்பதில் கவனமாக இருப்பேன். அதனால்தான் இலங்கை எழுத்தாளர் அப்படிக் கூறி இருக்கிறார் எனக் கருதுகிறேன்.







8. இனி தொடர்ந்து கவிதைக்குள் நீங்கள் செய்யவிருக்கும் மாற்றங்கள் பற்றி அல்லது வளர்ச்சிப் படிநிலைகள் பற்றிச் சொல்லுங்கள்.



எழுத்துத்துறைக்கு வந்த நாளிலிருந்து இன்றக்கு ஒப்பிடும்போது குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு 3 சிறுகதைகள் 4/5 கவிதைகளையும் எழுதி வருகிறேன். என் உற்பத்தித்திறன் சற்று நலிவடைந்து வருவதான உணர்வு ஏற்படுகிறது. ஆனால் எழுதுவதை தொடங்கிய நாள்முதல் எக்காரணத்தைக்கொண்டும் நிறுத்தவில்லை. வாசிப்பதும் எழுதுவதுமான சிந்தனை தன்னிச்சையாக நடக்கிறது. என்னை யாரும் என் பேனாவைப்பிடுங்கி எழுதுவதை நிறுத்திவிடுங்கள் என்று சொன்னாலும் நான் எழுதிக்கொண்டுதானிருப்பேன். அது என் மூச்சைப்போன்று தன்னிச்சயான செயல்பாடு. படைப்பாளன் என்பவனைத் தனியொரு இயக்கமாவே செயல்படுகிறான். அதுபோல என் செயற்பாடுகள் எழுத்துக்கள் வடிவில் இயங்கிக்கொண்டே இருக்கும்.

தண்ணீர் எப்படிச் சமதளத்தைத் தேடிப்போகிறதோ அதுபோல , இலக்கிய வடிவங்கள் தானாகவே மாற்றப் பரிமாணங்களை தேடிப்போகும். எப்போது ஒரு வடிவத்தில் சொல்லப்படவேண்டிய உத்தியும் உட்பொருளும் சொல்லி சலிப்படைந்துவிடுகிறதோ அப்போது அது தனக்கான புது அவதாரம் எடுக்கும். படைப்பாளன் வெறும் கருவிதான். வடிவ மாற்றத்தின் கட்டளைக்கு அடி பணிபதே படைபாளனின் இயல்பான செயல்பாடாக அமைகிறது. நான் என்ன மாற்றத்தைக்கொண்டு வர முடியும்?



9. ஒரு கவிஞராக யாருடைய கவிதைகளைச் சிறந்த வாசிப்பிற்குரியதாக கருதுகிறீர்கள்? காரணம்.

முடிந்த வரை சிற்றிதழ்களில் வரும் கவிதைகளை படிக்கிறேன். இணைய தளத்தில் இயங்கும் சில மின்னிதழ்களின் கவிதைகள் உட்பட. மறு வாசிப்பிலும் புரியவில்லையென்றால் அதனிடமிருந்து தப்பித்து விடுகிறேன்- வாசிப்பதற்கு விஷயங்கள் மண்டிக்கிடப்பதால். இதனால் பல நல்ல கவிதைகளின் இயக்கத்தை நான் இழந்தும்கூட இருக்கலாம். மனுஷ்ய புத்திரன் , கல்யாண்ஜி, பெருந்தேவி, தமிழச்சி தங்க பாண்டியன், என் ஆரம்பகால idol கவிக்கோ அப்துல் ரகுமான் என பட்டியல் நீளும். புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள், ஈழக் கவிஞர்கள் படைப்புகள் நெஞ்சில் ஆழமான தழும்புகளை உண்டாக்கக்கூடியவை. மலேசியவின் ப.அ. சிவம் , ஜாசின் தேவராஜன், பச்சைபாலன், பாலமுருகன் , தினேஸ்வரி போன்றவர்கள் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் தருகிறார்கள்.



10. மலேசியக்கவிதை உலகம் இப்போது எப்படி இயங்கிக்கொண்டிருக்கிறது? ஒரு மூத்த எழுத்தாளராக இருக்கும் நீங்கள், கவிஞர்களின் கவிதைகளின் கவிதை மொழியும், வளர்ச்சியும், பாய்ச்சலும் எப்படி இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?



சிறுகதை, கட்டுரை, நாவல் வாசகர்களின் எண்ணிக்கையோடு கவிதை வாசகரின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது கவிதைக்கான வாசகர்கள் அருகிக்கொண்டே போகிறார்கள். அதற்கான காரணியை நான் மேலே சொல்லிவிட்டேன். வாசகர் இல்லாத கவிதை உலகம் எப்படி இருக்கும்? வாசகனைப்பெருக்க அவனின் முதல் வாசிப்பிலேயே புரிந்துகொள்ளும்படியான கவிதையை எழுதவேண்டும். நல்ல கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொண்டவன் கவிதைப் பற்றாளனாக மாறுவான். மெல்ல கவிதை எழுத முன் வருவான். நாமெல்லம் அப்படி வந்தவர்கள் தானே. இன்றைக்கும் நாம் வாசிக்ககாரணம் நம் எழுத்தில் முதிர்ச்சியைக் கொண்டு வரத்தானே. எனவே ஒருவனை முதலில் நல்ல வாசனாக்குவது படைப்பாளனின் முதற்கடமை. பின்னொரு நாளில் அவ்வாசகனே எழுத்தாளனாக முன்னேறுவான். இங்கே எழுத்தியக்கம் காத்திரமான செயல்பாடுக்கு மாறவேண்டும். அரசியல் சமூக கல்வி போன்ற துறைகைகளின் பிற்போக்குச் செயல்களை விமர்சித்து சமூகத்தின் முதுகெலும்பாக மாற்றும் எழுத்துச் செயற்பாடு தேவைப்படுகிறது



நல்ல கவிதைகளைப் படைப்பதில் எல்லாக் காலத்திலும் பத்து பதினைந்து பேர்தான் இருக்கிறார்கள். மலேசியாவில் கவிதை எழுத்தப்பட்ட நாள்முதல் இதே நிலைதான். அந்த எண்ணிக்கை ஏன் கூடவில்லை என சிந்திக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறோம்.



இங்கே ஏகலைவன்கள் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள். தமிழ்நாட்டோடு ஒப்பிடும்போது அங்கே உள்ள முன்னோடிகள் போன்று, அவர்கள் படைத்த நூல்களின் எண்ணிக்கை போன்று , தமிழ் கற்பிக்கும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை போன்று இங்கில்லை. மலேசியாவில் கல்வி பரப்பில் இலக்கியத்துக்குத் தமிழ்த்துறையினர் ஆற்ற வேண்டிய செயலூக்கத்துக்கு அரசு பாடத்திட்டம் தடையாக இருக்கிறது. கல்லூரிகளில் சிறுகதைக்கான நேரம் மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு மணி நேரம்தான் ஒதுக்கப்படுகிறதாம். கவிதைக்கும் இப்படித்தான் என எடுத்துக்கொள்ளலாம். கல்லூரிகளில் நூல்நிலையத்துக்கு ஒரு ஆண்டுக்கு ஐந்நூறு வெள்ளிக்குமேல் ஒதுக்குவதில்லை- அதனையும் போராடி வாங்க வேண்டியுள்ளது என்று ஒரு தமிழ்த்துறைத்தலைவர் சொல்லக்கேட்டேன். இந்நிலையில் அங்கிருந்து படைப்பாளர்கள் உருவாவது சிரமம். இப்போதிருக்கும் ஆசிரியர்களில் படைப்பாளர்களாக இருப்பவர்களும் பயிற்சிக்கல்லூரிகளின் உருவாக்கமல்ல. அவர்களும் சுய தேடலின் ஆக்கத்தில் வந்தவர்கள். அதனால்தான் கவிதைத்துறைக்குச் சுயம்புவாக நுழைந்து இயங்கிக்கொண்டிருப்பவர்களை ஏகலைவன்கள் என்றேன். இப்படி இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சிலர் தரமான கவிதைகளைப் படைக்கத்தவறவில்லை. அவர்களில் சிலரை மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இங்கே எழுத்தியக்கம் வளர்வதில் உங்களைப்போல எனக்கும் ஏக்கமுண்டு. அந்த ஏக்கத்தை நிறவேற்றும் வண்ணம் , கவிதை குறித்த அளவில் மௌனம் கவிதை இதழ் சரியான இலக்கை நோக்கிப் பயணிக்கிறது. நல்ல கவிஞர்களை அழைத்து கவிதை எழுத வைப்பதும், கவிதை குறித்த விமர்சனப் பார்வையை முன் வைப்பதும், ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்து செல்வதிலும் அதன் நோக்கம் வளர்ச்சிப் பாதையில் அரங்கேறி வருவதில் நமக்கு மனம் நிறைந்த திருப்தி. இலக்கிய சஞ்சிகைகள் விட்டுச்செல்லும் இதுபோன்ற வெற்றிடத்தை மௌனம் நிறைவு செய்கிறது.



படைப்பாளனுக்கான அங்கீகாரம் வாசகனிடமிருந்து வரவேண்டும். அப்படி ஏதும் இங்கே நடப்பதாகத்தெரியவில்லை. அப்படிப்பட்ட அங்கீகாரம் நல்ல எழுத்தை உருவாக்கும். இந்த அற்புதம் இங்கே நடக்குமா? இது படைப்பாளன் குற்றமா என்றுகூட சிந்திக்க வைக்கிறது.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...