Skip to main content

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்

கோ.புண்ணியவான், மலேசியா

Ko.punniavan@gmail.com



என் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது.

எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனமற்ற வீடு போலல்லாமல் இது எந்நேரமும் அல்லோலபட்டுப்போயிருக்கும். சும்மா விளையாடுவதில்லை. துட்டை பந்தயத்தில் வைக்கும்போதுதானே சூடு உண்டாகும். அங்கு வருபவர்கள் சாப்பிட கொரிக்க ஏதாவது வாங்கி வருவார்கள். அவர்களின் பொழுது ஜோராகக் கழிகிறது என்பதை பிரதிதினமும் தவறாமல் வருவதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம். எனவே அந்த வீடு ஜீவன் நிறைந்த வீடாகவே இருந்துவந்தது.

வீட்டுச்சொந்தக்காரிக்கு அறுபது வயதிருக்கும். நல்ல பாரியான உடல். இரண்டு மகன்கள். இரண்டு பெண்கள் கட்டிக்கொடுக்கப்பட்டு பினாங்கில் வாழ்கிறார்கள். ஒருவன் படித்து ஒரு அலுவலகத்தில் நிர்வாகியாக இருக்கிறான். இன்னொருவன் ஊமை. அவ்வளவாக காது கேட்காது. ஆண்கள் இருவரும் ஒரே வீட்டில் தாயோடு இருக்கிறார்கள். வாய்ப் பேச்சிழந்தவனிடம் அருகில போய் , சைகையில்தான் பேசவேண்டும். தாய்க்காரி மாஜோங்கில் தன்னை மறந்திருப்பதால் ஊமை மகனுக்கும் இவளுக்கும் உணவுப்பிரச்னையில் சண்டை வந்துவிடும். காச் மூச்சென்று கொஞ்ச நேரம் சத்தம் கேட்கும் பின்னர் அடங்கி மீண்டும் மாஜோங் ஓசை வர ஆரம்பித்துவிடும்.

காலை வேலையில் அவள் தன் மகன் வாங்கிக்கொடுத்த சிறிய காரில் உல்லாசமாய் நண்பர் வீட்டுக்கோ கதைக்கவோ போய்வருவாள். அவள் அந்த வாழ்க்கை அனுபவித்து வாழ்பவளாக இருந்தாள்.

இந்த ஓசையிலேயே நகர்ந்த வீடு ஒருநாள் நிசப்தமாகிவிட்டது. விசாரித்ததில் தாய்காரிக்கு மாரடைப்பு வந்து மருத்துவ மனையில் சேர்த்துவிட்டதாக் தகவல் கிடைத்தது. பக்க வாதம் வந்து வாய்ப்பேசமுடியாமல், யாரையும் அடையாளம் காணமுடியாத நிலைக்குள்ளாகியிருந்தாள்.

கலகலவென்ற ஓசையுடன் இயங்கிய வீடும் சலனமற்றுக்கிடக்கத் துவங்கியிருந்தது.. ஆள் நடமாட்டம் இருந்துகொண்டே இயங்கிய வீடு இடது பக்க அண்டை வீடுபோல இருண்டே கிடந்தது. அவளை ஒருமுறை மருத்துவ மனையில் போய் பார்த்து வந்தேன். என்னை அடையாளம் தெரியவில்லை.

பினாங்கிலும் பிசியோதெரப்ப்¢ முடித்துவிட்டு மூன்று மாதம் கழித்து அவள் வீடு திரும்பியிருந்தாள். இப்போது தன்னால் பேசமுடிகிறதென்றும், கைகளை அசைக்கமுடிகிறதென்றும் சிறிதளவு உற்சாகத்தோடு பேசினாள். சக்கரம் மாதிரி ஓடியாடி செயல்பட்டவளுக்கு நகர்வதற்கு உண்மையிலேயே இரு சக்கரம் தேவைப்பட்டிருந்தது. நடந்த கால்கள் கார் பிராக்கையும் எக்சிலரேட்டையும் பயன்படுத்திய கால்கள், இப்போது வதங்கிய கீரையைபோல துவண்டு கிடந்தது. சிறகடித்து வானாளாவி பறந்துகொண்டிருந்த அவள் வாழ்வு , சன்னல் வழியாக தெரியும் உலகமென குறுகிப்போயிருந்தது அவளுக்கு. என் வீட்டுச்சன்னல் வழியாக சில சமயம் அவளை எதேச்சையாக நேருக்கு நேர் சந்தித்துவிட்டாள் ஏதாவது பேச ஆரம்பித்துவிடுவாள். பேச்சுத்துணையற்று தவிக்கும் நாட்களை அவள் நரகமாகியிருக்கக்கூடும். “செக்கு (சார்) நான் இப்பத்தான் கண் ஆப்பிரேசன் போயிட்டு வந்தேன். இடது கண். இப்போ எதையும் பாக்க முடியல. கொஞ்ச நாள்ள நல்லா பாக்கலாம்னு டாக்டர் சொன்னார்,” என மெல்லிய அழுகுரலோடு பேச்சைத்துவங்குவாள். தன் நோயை பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் மனம் ஆசுவாசப்படக்கூடும். அவள் பேச்சுத்துணைக்கு ஏங்கிகிறாள் என்பதை சன்னலோரம் தோன்றும் என்னிடமே பேச முயற்சிக்கிறாள் என்பதிலிருந்து உணர்ந்துகொள்ளும்போது மனம் துணுக்குறும். தீனியைப் போடும்போது பறந்து பூமிக்கு இறங்கும் புறாக்கூட்டம் போல வந்த மாஹ்ஜோங் மனிதக்கூட்டம் எங்கே போனது? நோயில் வீழ்ந்தபொது வந்து பார்த்துவிட்டுப்போன பிள்ளைகள் உறவினர் கூட இப்போதெல்லாம் வருவதில்லை என்று குறைபட்டுக்கொண்டாள். அப்போது அவள் முகம் மேலும் சோர்ந்து சரிந்து போயிருக்கும்.

மாஜோங் ஓசையெழுப்பிக்கொண்டிருந்த வீட்டிலிருந்து இப்போதெல்லாம் அடிக்கடி புதிதாய் விஷில் சத்தம் வந்து கொண்டிருந்தது. கலகலத்துப்போயிருந்த வீடு ஏன் இப்போது கூர்மையான ஒற்றை ஒலியை எழுப்புகிறது. ஏன் என்று விசாரித்ததில் அவள் அழைக்கும் போதெல்லாம் மகனுக்கு கேட்பதில்லை. பலமுறை வீட்டின் வேறொரு மூலையில் இருக்கும் மகனை நான் போய் சைகை காட்டி சொல்லி அழைக்க வேண்டியதாயிற்று.

தன் ஊமை மகன்தான் அவளுக்குச்சேவை செய்யவேண்டும். தன் பக்கத்தில் இல்லாத வேளையில் அவனை அழைக்க விஷிலை வாங்கிக்கொடுத்திருந்தான் அண்ணன்காரன். வீட்டில் யாரும் இல்லாத வேலையில் விஷில் சப்தம் கேட்டுக்கொண்டேதான் இருக்கும். சில சமயம் விஷில் சப்தத்தில் தொல்லை கொடுப்பதாக உணரும் மகன் குரலும் சற்று உக்கிரமாக ஒலிக்கத்தொடங்கிவிடும்

அவனுக்கான பிரத்தியேக அழைப்பு ஒலி அது. ஆனால் எங்களுக்கு அந்த ஒலி எழுப்பப்படும் போதெல்லாம் மரணத்துக்கான எச்சரிக்கை ஒலியாகவே கேட்கிறது. என் மனைவிக்கு இனிப்பு நீர் வியாதி உண்டு. சாப்பிடும் நேரத்தில் விரீலென்று ஓசை காது மடல்களை உரசும்போது , உணவில் கட்டுப்பாடு வேண்டும் என்ற நிதானம் பிறந்துவிடுகிறது அவளுக்கு. இப்போதெல்லாம் தன் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரக்ஞை வளர்ந்துவிட்டிருந்தது. நீரிழிவு நோய்க்கு உணவுக்கட்டுப்பாடு வேண்டும் என்று வேதம் மாதிரி டாக்டர்களும் நானும் ஓதியும் காதில் வாங்கிக்கொள்ளாதவளுக்கு, இந்த விஷில் ஒலி தேர்ந்த பாடமாக அமைந்துவிட்டிருந்தது. எனக்கும் நீரிழிவு உண்டு. அவளின் விஷல் ஒலியில் மேலும் கவனமாக வாழ்க்கையை நகர்த்தவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. காலை உணவு நேரத்தில், மதிய உணவின் போதும் , இரவிலும் இந்த கூர்மையான ஒலி போர் நேரத்தில் ஒலிக்கும் அபாய சங்கைப்போல எங்களை எச்சரித்துக்கொண்டே இருக்கிறது.

தனித்துவிடப்பட்ட இந்த அபலையின் நிலையைப்பிரதிபலிப்பதுபோல இருக்கிறது இக்கவிதை.

எனக்கு யாருமில்லை

நான் கூட

இவ்வளவு பெரிய வீட்டில்

எனக்கு இடமில்லை

இவ்வளவு பெரிய நகரத்தில்

அறிந்த முகம் ஏதுமில்லை

அறிந்த முகம்கூட

மேற்பூச்சுக்கலைய

அந்நியமாக உருக்காட்டி மறைகிறது

என்னுருவங்கலைய

எவ்வளவு காலம்

கடந்து செல்ல வேண்டும்

என்ற நினைவுவர

“சற்றே நகர்”

என்று ஒரு குரல் கூறும்.

நகுலன்

http://kopunniavan.blogspot.com

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...