Skip to main content

நிகரற்றவன்

கோ.புண்ணியவான்.



எந்தப்பைத்தியக்காரனாவது நூல் வெளியீட்டுக்கு இருநூத்து எண்பது மைல் பயணம் செய்வானா? நான் போனானே! சரியாத்தான் இருக்கு! எழுத்தாளனப்பத்தி சமூக மதிப்பீடு.

அரை மணிநேரம் நூலைப்பத்திப்பேச்ணும்னு மெனக்கட்டு போன் செய்து நான் ஒத்துக்கொண்டு , நூலையும் அனுப்பிவச்சிபிறகு, அழைப்பும் வந்து சேர்ந்திருந்தது. அக்கறையெடுத்து சீரா செய்யப்பட்ட அழைப்பு. அவன் கல்யாணத்துக்குக்கூட அப்படி அமஞ்சிருக்காது! மத்த வேலையெல்லாம் கெடப்பில போட்டுட்டு போவத்தான வேணும். பின்ன மைக் கொடுக்கப்போறாங்க இல்ல! போவாம ?

பேசனவன் பெரிய எழுத்தாளனுமில்ல. அப்பப்ப பத்திரிகையில கவிதைய ‘பாத்த’ ஞாபகம். ஆம பாத்ததுதான். என் கதயவே ‘பாத்தேன் சார்னுதான’ சொல்றாங்க. பாக்கிற அளவுக்குதான் இருக்குன்னா வேற என்னாதன் செய்ய முடியும்? ‘படிச்சேன் சார் ...... அந்த சுப்பையா கேரக்டர என்னமா பின்னி எடுத்திருக்கீங்க? சொன்னீங்களே ஒரு உவமை -அவன் பாக்கெட்டுல இருந்து எடுத்த சிகெரெட்டு பழசாகி முனையில நெளிஞ்சி குஷ்ட்டரோகம் பிடிச்சவன் நடு விரல் மாறி இருந்திச்சின்னு..... லேசுல மறக்கிற உவமையா அது? முடிவு சார்..... உங்க முடிவு மனசிலயே நிக்கிது சார். அந்தப் பதினாறு வயசுப்பொண்ண கோலிப்பண்ண தவுக்கே பாத்த பார்வ எச்சில் தடவி ஒட்டப்பட்ட ஸ்டாம்பு மாதிரி, அவன் பார்வ அவ மேலயே பச்சின்னு ஒட்டிக்கிச்சுன்னு எழுதினீங்களே...... எவன் சார் எழுத முடியும் அப்படி? அப்படினெல்லாம் யாரும் சொல்றதில்லே. துப்புக்கெட்டு போய் நாமலே நெனச்சிக்க வேண்டியதுதான்! சக படைப்பாளி வாயிலேர்ந்துகூட ஒத்த வார்த்த வரதில்லே. இவன் என்னா நம்மல விட பெரிய இவனான்னு ,சகல எழுத்தாளருக்கு ஒரு ஈகோ இருக்கும் போல. நம்மல வச்சிதான சக எழுத்தாளன எட போட முடியும்?

நூல் வெளியீட்டுக்கு கூப்பிட்டவன் பேராவது மனசிலியே நிக்குது. ‘நிகரற்றவன்’. அப்படி போடு! நல்ல வேலயா ‘தன்னிகரற்றவன்’னு வச்சுக்காம போயிட்டான். அவனுக்குத் தெரியும்போல இப்படி பேரு வச்சிக்கிட்டு இன்னொரு சுப்பன் வருவான்னு. அப்புறம் ஈடற்றவன்னு இன்னொரு குப்பன் வருவான். மத்தவன் பேர் வச்சிக்க இவன் எடம் விட்டதே ஒரு பெருந்தன்மைதான!

தெலுக் இந்தானுக்கு கெளம்பும்போதே மனைவி சொன்னாள். “இவ்ளோ தூரம் செலவு பண்ணிக்கிட்டு அவசியம் போவனுமா”ன்னு.

“அதெல்லாம் அவன் பாத்துக்குவான், நூல் வெளியீட்ல பணம் வருமில்ல”!

“ ம்.. வரும் வரும்.....அவனுக்கு வரும், நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு போவீங்க, அப்புறம் திரும்பி வந்து எங்கிட்டதான ஆதங்கத்த கொட்டுவீங்க. இது என்னா புதுசா? எப்பியும் நடக்கிறதுதான். போவ முடிவெடுத்திட்டீங்கல்ல...... ......தூரப்பயணம் போம்போது இதெல்லாம் சொல்லக்கூடாதுன்னு பாக்குறேன்.”

நானும் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கிறதில்ல போயும் போயும் இவகிட்ட சொல்றனே. எத்தன தடவ பட்டாலும் எனக்கு புத்தி வரப்போறதில்லே. சுக துக்கங்கள் வேற யாருகிட்டதான் பகிர்ந்துக்கிறது? அதுக்குன்னு சம்பளம் கொடுத்து ஆள வச்சிக்கவா முடியும்? பெட்றோல் செலவு - போற நேரம் பாத்து அதயும் ஏத்திட்டானுங்க. அப்புறம் டோல் செலவு, சாப்பாடு செலவு..... போயிட்டு வந்தவொடனே காருக்குத் தேய்மானச்செலவுன்னு கமுக்கமா இருந்து வக்கிற செலவ எண்ணிப்பாத்தா, இந்த மாசம் பட்ஜெட்ல விழப்போறது பெரிய துண்டாதான் இருக்கும். அப்புறம்தான் இருக்கு எனக்கு ஆப்பு! வெட்டிக்கு போய் செலவு பண்ணுவீங்க, வீட்டுக்கு ஏதாவது செலவுக்குக்கேட்டா எகுறுவீங்க? ப்ச்சே ..எரநூறு முன்னூறு பேரு முன்னுக்கு மைக்கில பேசப்போறோமில்ல.......?! அதுக்கு ஈடாகுமா இந்தச்செலவு?

வீட்லேர்ந்து கெளம்பும்போது மணி பன்னெண்டரை. அஞ்சி மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பம். ரெண்டு மணி நேரம் பிடிக்கும்னு நிகரற்றவன் சொன்னான். புது எடம். முன்ன பின்ன போவாத எடம். எதுக்கும் நேரத்தோட கெளம்பிடுவோமுன்னுதான், கொஞ்ச சீக்கிரமா பயணத்த தொவங்கியாச்சு. சாப்பிடும்போது கொதிக்க கொதிக்க இருந்திச்சு சோறு. மீனு பொறிஞ்சிக்கிட்டு இருந்துச்சி..... என் அவசரத்தபாத்து நல்லா பொறியறதுக்கு முன்னயே தட்டுல கொண்டாந்து போட்டுட்டா. தட்டிலும் மீன் பொறிந்துகொண்டிருந்தது. எஞ்சிய எண்ணெய்க்கொப்புளம் வெடித்து கடுகாய்க் குமுறி சிதறிக்கொண்டிருந்தது.

“ஆற விட்டு சாப்பிட்டு பொறுமையா போனா என்னா ? ஒங்க நிகழ்ச்சியென்னா சொன்ன டயத்துக்கு தொடங்குற மாறி, சுடு தண்ணிய கால் ஊத்திக்கிட்டு குதி குதின்னு குதிக்கிறீங்க? அங்க போனா மந்திரி வரல, மொத நூல் வாங்கிறவ வர்லேன்னு சொல்லி நேரத்த கடத்திடுவானுங்க. இதெல்லாம் நான் சொல்லித்தான் தெரியணுமா?” ன்னு ஆசிர்வதித்து அனுப்பிவத்தாள் மகராசி.

சும்மா சொல்லக்கூடாது. தெலுக் இந்தான் டோல் சாவடிய போய் சேர்ரதுக்கே ரெண்டு மணி நேரம் முடிஞ்சிடுச்சு. சாவடின்னு ஏன் பேர் வச்சான்னு இப்போதான் புரியுது. டோல் கட்டணமே சாவடிதான்லே!

நிகரற்றவனுக்கு டோல தாண்டிட்டேன்னே போன் பண்ணேன். “சார் நான் இன்னும் மண்டபத்துலதான் இருக்கேன். நீங்க பொறுமையா வாங்க. எங்கெயாவது நின்னு டீ சாப்பிட்டு ஓய்வெடுத்துட்டு வாங்க. சீக்கிரம் வந்து என்னா பண்ணப்போறீங்க?” ன்னு எனக்கு முதல் எச்சரிக்க கொடுத்தான்.

“இல்லாப்பா , மண்டபத்துக்கு பாத சொன்னீன்னா பாத்து வருவேன்”

“சார் புதுசா வரீங்க கொஞ்ச சிக்கலா இருக்கும். நான் போய் குளிச்சிட்டு போன் பண்றேன் . அது வரைக்கும் எங்காவது கடையில ஒக்காந்து டீ சாப்பிடுக்கிட்டு ஓய்வெடுத்துக்குங்க?” மறுபடியும் மறுபடியும் சொல்றானே, தேநீர் பலகாரம் இல்லியோ? என்னத்த சாப்புர்ரது ? வீட்ல சாப்பிட்டது இன்னும் செரிக்கல. ஒக்காந்துக்கிட்டெ வந்தா! சரி, எழுதி வச்சத இன்னோரு தடவ மீள்பார்வ செஞ்சிடுவோம். கவிதையில சரக்கு இருக்கோ இல்லியோ. இவன் மாதிரி கவித விமர்சனம் பண்ண வேற ஒருத்தன் பொறந்து வரனம்ணு சொல்லணும். மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். காலரை லேசாக நிமிர்த்திக்கொண்டேன். என் பேர் அழைத்தவுடன் உண்டாகப்போகும் சிலிர்ப்பு மண்டைக்குள் குளிர்ந்து ஓடியது.

குறிப்பயெல்லாம் மீண்டும் பொரட்டி பாத்தேன். பொரட்டி என்ன செய்ய! கவிதைய பத்திப்பேச ஒரு மண்ணுமில்ல!

“சமூகமே எழுந்திடு

சப்பாணியாக இருக்காதே

சீனனைப்பார்

சுரணையாய் இருந்திடு”. பள்ளி எழுச்சி பாடுறதா நெனச்சி பல்லி எழுச்சி பாடிருக்கான். சும்மா இருந்த சங்க ஊதி....... எவனோ புக்கு போடுன்னு உசுப்பி வீட்டுட்டிருக்கான். நம்ம கவித எஸ்ஸஸா இருக்குன்னு அவனே நெனச்சுக்குவான் போலருக்கு. எஸ் எஸ் ன்னா ‘ஷோக் செண்டிரி’ ன்னு பொருத்திப்பாக்கலாம். எழுத வர்ரவனெல்லாம் சமுகத்துக்கு புத்தி சொல்லவே வரான். எவன் திருந்தனா. மொதல்ல எழுதறவன திருத்தனும். புத்தி சொல்லாதடான்னு புத்தி சொல்லனும்!

நாம பேச்சுல தான் சமாளிக்கணும். எதுகையையும் மோனையையும் ஏத்தி எறக்கி சுதி சேத்து கவிதைக்கு உயிர் கொடுத்திடலாம் விடு! புதுசா எழுதுறான். பையன் பின் வாங்கிட கூடாதுன்னா, ஊக்குவித்தே ஆகணும். மதிச்சு பேச கூப்பிட்டிருக்கான்ல!

கடையிலியே அரை மணி நேரம் ஓடிபோச்சு. ஒரு டீய வச்சிக்கிட்டு எவ்ளோ நேரம் ஈ ஓட்றது?

“ நிகரற்றவன் நாந்தான் பேசுறேன். குளிச்சிட்டீங்களா?”

“ சொல்லுங்க சார்.”

“ மண்டபத்துக்கு பாதை சொன்னீங்கன்னா......”

“ சார் நீங்க இன்னும் முக்கால் மணி நேரம் பயணம் செய்யணும்?”

போச்சி பெட்ரோல் ஊத்தியாகனும் போல இருக்கே.

“நீங்க மொத டிரபிக் லைட்லேர்ந்து சோத்துக்கை பக்கம் திரும்பி நேர வாங்க வளைவு நெறைய இருக்கும். மேய்ன் ரோட்லியே வாங்க. ஒரு முப்பது கிலோ மீட்டருக்கு எங்கியும் நொழைஞ்சிடாதீங்க. பாதைய விட்டா பெரிய சிக்கலாயிடும். ஒரு பெரிய மஸ்ஜிட் வரும் அங்க வந்தவொடனே எனக்கு போன் பண்ணுங்க.”

எங்கெங்கியோ பாதைய தவறவிட்டு போன் பண்ணி போன் பண்ணி, கேட்டு, எடுக்கக்கூடாத எடத்துல யு டெர்ன் எடுத்து, எம லாரிகளுக்குத்தப்பி ,ஹேய் மௌ மத்திக்கான்னு பாட்ட வாங்கிக்கிட்டு, பாடாவதி ஊர கண்டு பிடிச்சு, வந்து சேரதுக்குள்ள பெட்ரோலுக்கும் போன் பில்லுக்கும் கொஞ்சம் கூடுதலவே அழுதாச்சி. பராவால்ல பேசப்போறோம்ல!

கார விட்டு எறங்கும்போது கால நீட்ட முடியல. விறகுக்கட்ட மாதிரி வெறச்சுக்கிச்சு. சுதாரிக்கிறதுக்கு கொஞ்ச நேரமாச்சு. பின் இடுப்பில பிரசவத்துக்கு ஈடான வலி. படைப்பாளிதானே வலி இருக்கத்தானே செய்யும்!

வெளியில பெரிய கூட்டம் . யாரோ முக்கிய பிரமுகருக்கான தடபுடல், உடல் மொழி கலந்து பரபரப்பு மேலிட்டிருந்தது. அவென் அவென் காதுவலிக்கு கையில ஒத்தடம் கொடுக்கிற மாதிரி கைப்பேசில விடாம பேசிக்கிட்டே இருந்தானுங்க!

கார் கண்ணாடியில மொகத்த பாத்தேன். பௌடர் கலைந்து வியர்வையின் பிசுபிசுப்பு. கைக்குட்டைய எடுத்து ஒற்றி ஒற்றி பிசுபிசுப்பை நீக்க முயன்றேன். முற்றாக நீங்கவில்லை. வீட்டிலிருந்து கிளம்பும்போது இருந்த மினு மினுப்பு சேரவில்லை. முடி காற்றின் அசைவில் கலைந்திருந்தது. நடு மண்டையிலிருந்து ஒதுங்கிய முடி ‘ஒளிவட்டத்தை’ பரைசாற்றிக்கொண்டிருந்தது. சனியன் பிடிச்ச முடி எங்கனா நிகழ்ச்சிக்கு போனும்னாதான் மொரண்டு பண்ணும். சீவிப்பார்த்தேன். வணங்காமுடி!

என்ன பாத்ததும் போன் பேசிக்கிட்டே இடது கையை நீட்டிக்குலுக்கி “உள்ளார போய் ஒக்காருங்க சார்” ன்னு சைகை காட்டினான் நிகரற்றவன். நேரம் டா நேரம்! இன்னிக்கி நீதான நிகழ்ச்சி நாயகன்!

மண்டபத்தில் ஏற்கனவே போடப்பட்ட நாற்காலிகள் நிறைந்துவிட்டிருந்தன. முன்னால் முதல் வரிசையில் மட்டும் சொகுசு இருக்கைகள் காலியாக இருந்தன. அதில் போய் உட்காரலாமா ? வேற எடந்தான் இல்லியே. ஒக்காந்தாச்சு. என்னைப் புத்தகமும் கையுமா பாத்த ஒருத்தர் சலாம் போட்டார். பெருமையாக வாங்கிக்கொண்டேன்.

நிகழ்ச்சி தொடங்கும் நேரம் நெருங்கி விட்டிருந்தது. “யாருக்கு காத்திருக்காங்க?” சலாமிட்டவரைக்கேட்டேன். நூலாசிரியருக்கு வேண்டப்பட்டவரா இருக்கலாம். ரெண்டாவது வரசையாச்சே. துணை அமைச்சர் டத்தோ சிவன் வராரு.

”நிகழ்ச்சி நிரலில் அவர் பேர் இல்லியே?”

“ உம்மதான் சார். இங்க அரசியல் கூட்டத்துக்கு வந்திருக்காரு. கட்சி தேர்தல் நேரமில்லையா? இங்கியும் வரச்சொல்லி கேட்டோம் வரேண்டாரு. ராத்திரிதான் கூட்டமாம்.”

நிகழ்ச்சி ஆரம்பிக்க முக்கால் மணிநேரம் கடந்துவிட்டது. நிகரற்றவன் மறுபடியும் என்னைத்திரும்பிக்கூட பார்க்க வரவில்லை. யார் யாருக்கிட்டேயோ பேசிக்கொண்டே மந்திரிக்காக வாசலிலேயே கதியாய்க் கிடந்தான்.

திடீரென பரபரப்பு கூடியது. தேசிய கீதம் பாடுரப்ப எழுஞ்சி நிக்கிற மாதிரி எல்லாரும் எழுஞ்சி நிக்க ஆரம்பிச்சாங்க. மந்திரி வந்திட்டாப்பில. பரி வாரம் பட்டாளமெல்லாம் புடை சூழ சிரித்த முகத்தோடு டத்தோ சிவன் பிரசன்னமானார். பேப்பர்ல பாத்ததுதான். மொத மொதலா கெடச்ச நேரடி தரிசனம். எல்லாரும் கையை நீட்டி, பல்லைக்காட்டி தரிசனம் பெற்று விமோசனமடைந்தனர்.

முன் நாற்காலிகள் நிரம்பியது. ஒரே ஒரு பிரமுகர் அல்லாடிக்கொண்டிருந்தார். என் நாற்காலிக்குப்பின்னால காதருகே அசைவு. “சார் உங்களுக்கு பின் வரிசையில நாக்காலி போட்டிருக்கு, இங்க வந்திடுங்க சார். மொத நூல் வாங்க வந்தவருக்கு எடமில்ல மன்னிக்கணும்”. முதல்ல நான் பாக்கும்போது பின்னால் இடமில்ல. என்ன காவு கொடுத்த மாதிரி, எனக்கு எடம் விட யாரையோ காவு கொடுத்திருக்காங்க!

மேடையின் சுவரை பதாகை அலங்கரித்திருந்தது. அமைச்சர் ஏதோ சமூக வேலையா மீட்டிங்பைல தூக்கிட்டு நடக்கிற மாதிரி போட்ட படத்துக்கு கீழ ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லைன்னு’ போட்டிருந்தது. கணணைக் கவரும் கலர். நம்ம எம். ஜி. ஆரு போய் சேந்துட்டாலும் எத்தன பேர பிழைக்க வைக்கறாரு. இடது கைப்பக்கம் முதல் நூல் வாங்குபவரின் கையெடுத்து கும்பிட்ட படம். அதற்குக் கீழேயும் ‘தடை சொல்லா கொடை நெஞ்சே! மடையுடைந்த வெள்ளமென நீ வந்தாய்”னு நீல வண்ணத்தில் எழுதியிருந்தது.. (வராம இருந்திருந்தா?). நிகரற்றவன் படமும் நிலா வட்டத்துக்குள் ஒரு புத்தகத்தை ஏந்தி போஸ் கொடுத்த படம். பதாகையில் படிச்சிக்கிட்டிருக்கிற மாதிரி உண்மையான வாழ்க்கியிலும் வாசிச்சிக்கிட்டிருந்திருந்தான்ன நல்ல கவிதையெயல்லாம் தந்திருப்பான்! (இவன் பதாகையில் மட்டும்தான் வாசிப்பானோ!) பரவால்ல, நாளைய நம்பிக்கை நட்சத்திரம்னு நம்ம சொல்லிடுவோம்ல -படத்த காட்டி!

அறிவிப்பாளருக்கு வெங்கலக்குரல். அந்த ஊரின் ஆஸ்தான அறிவிப்பாளர்போல. அடுக்கு மொழியில் அழகிய தமிழ் அருவியாகக்கொட்டியது. துணையமைச்சர் நனைந்து போகுமளவுக்கு ஒரே ‘குளிர் மழை’. முதல் நூல் பெறுனரைப்பற்றிய வாய்மொழிக்கு இன்னும் ஒரு ஆயிரம் கூட்டிக்கொடுத்துவிடுவார். வட்டார சட்ட மன்ற உறுப்பினருக்கு மாலையே தேவையில்லை சொல்மாலை பொழிந்துவிட்டார். மண்டபத்தில் குளிரூட்டிக்கு வேலையே இல்ல! அப்புறம் கட்சித்தலைவர். கிளைத்தலவர், சமுக இயக்கத்தலைவர்கள், செயலாளர்கள், கமிட்டி உருப்பினர்கள், சிறப்பு நூல் பெறுனர், திறப்பு நூல் பெறுனர், ஐம்பது வெள்ளி வரை கொடுத்து நூல் வாங்குவோர், என்று கூட்டத்தில் பாதி பெயரை வரவேற்புரையில் சொல்லிமுடிக்க இருபது நிமிடம் கழிந்து தொலைந்தது. என் பேர் சொல்ல நாதியில்லை! மனைவி சொல் மந்திரம் !ஆமாம் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டுதான் இருக்கவேண்டியதாயிற்று.!

முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவர் எண்ணிக்கை எட்டு. எல்லாரும் பேசுவார்களோ. வாசகர் வட்டத்தலைவர். எழுத்தாளர் இயக்கத்தலவர்.துணையமைச்சர். வாழ்த்திப்பேச வந்திருக்கும் பிரமுகர்கள். முதல் நூல் பெறுநர் உரை, சட்ட மன்ற உறுப்பினர் என எல்லரையும் மேடைக்கு அழைத்து மாலையிட்டு பேசவிட்டு விடிந்துவிடும். மே¨ட்யில சின்ன மலையாய் காட்சிதரும் மாலைக்குவியலே இதனைக்காட்டிக்கொடுத்துவிட்டது. வேறென்னா?எல்லாம் பிரதிபலன் தரும் முதலீடுதான்.

துணை அமைச்சரைப் பேச அழைத்ததும் கரகோஷம் காதைப்பிளந்தது.

பிரமுகர்கள் பெயர் அனைத்தும் அவருக்கு அத்துப்பிடி என்று தெரிந்தது. ஆளைப்பார்த்துப் பார்த்து பேர் சொல்லி சொரிந்துவிட்டார். சுகமாக இருந்திருக்கும். எல்லார் பேரையும் சொல்லியவர் நூல் நோட்டமிடுபவரை நோட்டமிடவில்லை. முதுகைக்காட்டிதான் வைத்திருந்தேன்.என்ன கொடும சார் இது?

“நான் இங்கொரு பிரச்சாரக் கூட்டத்துக்கு வந்தேன். தேர்தல் நேரம் எல்லாரையும் நான் பார்த்தாகனும். எல்லாரும் எனக்கும் வேணும். அதனால வந்தேன். தம்பி ..... பேரு என்னா சொன்னீங்க ? கூனிக்குறுகி கைகட்டி ‘நிகரற்றவன் சார்..’ என்றான். ம்..... நிகரற்றவன்....திக்கற்றவன். என்னா பேர் யா இது. நல்லாதான் இருக்கு......இன்னிக்கி காலையிலதான் அவரோட புக்கு வெளியிட என்ன கூப்பிட்டாரு..... என்னா புக்குப்பா அது.....? ‘நிலா முற்றம் டத்தோ....’ ம். நிலா முட்டும் கவித புக்குன்னு சொன்னாரு . முன்ன கவிதயெல்லாம் நான் படிச்சிருக்கேன். இப்போ நேரமில்ல. புக்கு கொடுத்தாரு படிக்கத்தான் நேரமில்ல. புக்கு அட்ட நால்லாருக்கு; கண்டிப்பா கவிதையும் நல்லாருக்கும். எல்லாரும் வாங்கி ஆதரவு தரணும். நம்ம ஆதரிக்கலன்னா, வேற யாரு ஆதரவு தருவா”. என்று கிளி ஜோஸ்யமெல்லாம் சொல்லிவிட்டு காரியத்தில் கண்ணானார் . இங்க கட்சி ஆதரவாளர் நெறையா பேரு வந்திருக்கீங்க நான் இந்த மொறையும் துணைத்தலைவருக்கு நிக்கிறேன். நீங்க இல்லேன்னா நா இல்ல. உங்களுக்ககத்தான் நா முக்கியமா இந்த ஊருக்கு வந்திருக்கேன். உங்க ஆதரவுதான் எனக்கு முக்கியம்.

என்ன கைவிட்றாதீங்க. நீங்க இல்லேன்ன நான் இல்ல. நான் இந்த நெலைக்கு வந்தத்துக்கே நீங்க போட்ட வாக்குதான். நீஙக எனக்கு ஆசிகூறனும். நன்றி”

சட்டமன்ற உறுப்பினர், கட்சித்தலைவர் தொடர்புக்குழுத்தலைவர், எல்லாரும் பேசினார்கள் , வாழ்த்தி -துணை அமைச்சரை. முதல் நூல் பெறுநர் சொன்ன வார்த்தைதான் உச்சம். நான் தமுலு படிக்கல. ஆனா தமுலுக்கு காசுகொடுக்க எப்பியும் தயாரா இருக்கேன். தமில் வாலனும். படிக்காத பாவம் கொடுத்தா தீருமோ என்னவோ!

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. வெளியே பார்த்தபோது ஓசையில்லாமல் இருள் விழுந்துவிட்டிருந்தது. யாரோ ஒருத்தன் என் பின்னால் வந்து குனிந்து, உள்ளங்கையில் ஒருபக்கம் தன் வாயைப் ஒரு ஓரமாய்ப் பொத்தியவாறே .....”சார், தயவு பண்ணி கொஞ்சம் வெளியில வாங்க சார்,” என்றான். நான் எழுந்தால் இருந்த இடமும் போய்விடும் பயத்தோடே அவனோடு போனேன்.

“சார் மன்னிக்கணும் இன்னும் ரெண்டு பேர் பேச வேண்டி இருக்கு நீங்க அஞ்சி நிமிஷம் பேசுங்க”.

“ எனக்கு அரை மணி நேரம் கொடுத்திருக்காரு, நிகரற்றவன்”

“ ஆமாம் சார் தெரியும். அவருதான் இதச் சொல்லச்சொன்னாரு!”

“ இது நூல் வெளியீடுய்யா ... நூல் அறிமுகம்தான்யா முக்கியம்!”

“ தெரியும் சார், பெரிய பெரிய ஆளுங்கல்லாம் வந்திருக்காங்க.. அவங்கெல்லாரையும் சும்மா அனுப்ப முடியல. துணையமச்சர் வந்திருக்காரு நான் ரெண்டு வார்த்த பேசணும்னு கேக்குராங்க”

“ தம்பி. இது அரசியல் கூட்டமில்ல, இலக்கியக்கூட்டம். (இவ்ளோ நேரம் நடக்கிறதெல்லாம் பாத்திட்டு இருந்திட்டு இத இலக்கியக்கூட்டம்னு என் வாயாலியே சொல்றேன் பாரு ? பாழாப்போன பழக்க தோசம்தான்) நீங்க புக்குக்குத்தானா முக்கியத்துவம் கொடுக்கணும். நீங்க நிகரற்றவன வரச்சொல்லுங்க, நான் அவருக்கிட்ட பேசிக்கிறேன்.”

“ சார் அவரு பீசியா இருக்காரு. அவருதான் உங்கள் அஞ்சி நிமிஷம் பேசுனாபோதும்னு சொல்லச் சொன்னாரு”

“ அஞ்சி நிமிஷம் நான் என்னாய்யா பேசுறது ? நான் படிச்சி தயாரிச்சிட்டு வந்திருக்கேன்.. எல்லாம்.....”

“ புரியுது சார். நீங்க எங்களயும் புரிஞ்சிக்குங்க, துணையமைச்சர் அடுத்த கூட்டத்துக்குப்போகனும்னு நிக்கிறாரு “

“நான் வேலயெல்லாம் விட்டுட்டு , மூன்ற மணி நேர பயணம் பண்ணி வந்திருக்கேன். இந்த அஞ்சி நிமிஷத்துக்காயா?”

‘ எடுத்துக்காட்டுக்கு ஒரு கவிதைய சொல்லுங்க சார் சரியாயிடும். நீங்க நேர எடுத்துக்கிட்டீங்கன்னா நூல் விக்கறது கெட்டுப்போயிடும்”

“இதென்ன பான சோறாய்யா? ஒரு பருக்கைய நசுக்கிப்பாத்துட்டு பதம்னு சொல்றதுக்கு? நீங்க மத்தவங்கள் பேச விட்டிருக்கக்கூடாது. அதனாலத்தான் நேரம் ஓடிப்போச்சு. எது முக்கியமோ அதுக்கு நேரம் கொடுதிருக்கணும். அரசியல் கூட்டத்துல இலக்கியம் பேசிட முடியுமாய்யா? இங்க வந்தா மட்டும் தாங்கு தாங்குன்னு தாங்கறீங்க இலக்கியம் உருப்படுமா?”

“ சார் சத்தம் போட்டுப் பேசாதீங்க. போய் ஒக்காருங்க ஒங்கல கூப்பிடப்போறாங்க.”

“ மூனு மணிநேரம் ஒக்காந்துக்கிட்டுதான்யா வந்தேன், இவ்ளோ நேரமா இங்கியும் கருங்கல்லு கணக்கா ஒக்காந்துக்கிட்டுதான்யா இருக்கேன்.” பிட்டத்தில் ஏறிய சூடும், இடுப்பு வலியும் சேர்ந்தே கோபத்தைக்கிளர்த்திறிது.

“ இல்ல சார் , அவரு வசூல் கொறஞ்சிடும்னு பயபடுறாரு.....”

“ இத நீங்க மொதல்லியே சிந்திச்சிருக்கணும்”

“சார் ஒங்கள பேச கூப்பிட்டாங்க”

“ நூல் விமர்சனம் செய்ய வந்திருக்கும் எழுத்தாளர் ரத்தினச்சுருக்கமாக தன் பார்வையைச் சொல்லுவார். எழுத்தாளர் நேரம் கருதி பேசக்கூடியவர் என்று உங்களுக்குத்தெரியும். தன் பேச்சை சுருக்கமாக வைத்துக்கொள்வார்” வச்சான் பாரு அருவால கலுத்துல!

கெளம்பும்போதே கெளளிமாறி எச்சரிச்சா! கேட்டனா. என் புத்திய எதால அடிகிறது ? நான் என்ன பேசுவது ? மூடே போச்சு! அறிவிப்பாளர் என்னை விட்டகலாமல் பிட்டத்துக்குப் பின்னாலேயே நின்றிருந்தார். நல்ல மெய்க்காவலன் ! இல்ல இல்ல மொய்க்காவலன் !என்ன பேசுறது? எப்படி பேசுறது? இறங்கி வந்தபோது நாற்காலியும் வேறொரு பிட்டத்தை தாங்கியிருந்தது.

முதல் நூல் வாங்குனரே பெரியதில் அஞ்சி கொடுத்தார். ஐந்னூறு நூறுன்னு நெறைய கொட்டிச்சி. துணையமைச்சர் பக்கத்திலேயே பல்லிளித்துக்கொண்டு நிகரற்று காட்சியளித்துக்கொண்டிருந்தான். மனைவி பணக்கட்டை பத்திரப்படுத்திக்கொண்டிருந்தாள்.

துணையமைச்சர் வெளியானதும் கூட்டம் கலையத்துவங்கியது.

நான் வெளியில் நின்றிருந்தேன். “என்னய்யா இது, நூல் வெளியீடுன்னு சொன்னாங்க. இங்க புத்தகமில்ல விக்கிறாங்கன்னு,” கலந்துபோகும் கூட்டத்திலிருந்து வெள்ளந்தியான பேச்சு கேட்டது.

நிகரற்றவன் எல்லாரையும் வழி அனுப்பிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் லாபக்கலை கலைகட்டியிருந்தது. நல்ல வியாபாரமில்ல!.

மனையிடமிருந்து போன் வந்திருந்தது. “என்ன கெளம்பிட்டீங்களா? பாத்து ஓட்டிட்டு வாங்க. மழை நேரமா இருக்கு.”

“வந்துகிட்டே இருக்கேன்.”

நின்னு நின்னு பார்த்தேன். நிகரற்றவன் கண்டுகொள்ளவில்லை. கடைசியில்

எல்லாரையும் வழியனுப்பிவிட்டு வந்தான். “கெளம்பிட்டீங்களா சார். ரொம்ப நன்றிங்க சார் . பாத்து போங்க நான் போன் பண்றேன்,” என்றான்.

மூத்திரப்பை தன்னைக்காலிசெய்ய நீண்ட நேரமாய்க் சமிக்ஞை பிறப்பித்துக்கொண்டிருந்தது. நான்தான் தட்டிக்கழித்துக்கொண்டே இருந்தேன். கழிவரையைத்தேடிப்போய் முக்கினால் லேசில் திறப்பு உண்டாகவில்லை. அடச்சிக்கிட்டு அதுவும் மல்லுக்கு நின்றது. முக்கி முக்கி, விக்கி விக்கி சொட்டியது.. பின்னர் அதுவே நொடிக்கொருதரம் பிரேக் போட்டுக்கொண்டு கடுத்து கடுத்து வெளியாக்க்¢க்கொண்டிருந்தது. உயிர் நிலையில் ஊசி குத்தியது.

சும்மா வீட்லியே இருந்திருந்தாலாவது சுகமா போயிருக்கும்!

Comments

Sebastian said…
சார், ரொம்பே காலத்துக்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்தேன் சார்.... இதெல்லாம் ஒரு பொலப்புன்னு வாழுரவனுங்க ரொம்பே பேரு இருக்கானுங்க சார்... விடுங்க சார்...

செபஸ்டியன்
சுங்கை பட்டாணி
ko.punniavan said…
வாசித்தமைக்கும் கருத்துரைத்தமைக்கும் நன்றி. இக்கதை மலேசிய நண்பனில் பிரசுரமானது. ஆனால் அதன் உயிர் நரம்பின் பலவற்றை நீக்கிவிட்டு.எனக்குப்படிக்கவே பிடிக்கவில்லை. பலர் இதனைப்படித்துவிட்டு வாய்விட்டுச் சிரித்ததாகச் சொன்னார்கள்.thangameen publication லும் இக்கதை வெளிவந்ததுள்ளது.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின