Skip to main content

கலகக்காரன்






கோ.புண்ணியவான்







தனித்து அடையாளங்காணக் கூடியவராக இருந்தார் மாரிமுத்து. அவருக்குப் புனைப்பெயர் ஏதும் இல்லாதது வியப்பாகத்தான் இருந்தது. புனைப்பெயரிடுவதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. வெளிப்படையாக இல்லையென்றாலும் அன்னாரின் விசித்திர சுபாவத்துக்குள் புனைப்பெயருக்கான அடையாளத்தை உள்ளிருத்திக்கொண்டதாகவும் இருக்கலாம். “ தோ வந்துட்டான்யா” என்று உதட்டைப்பிதுக்கி ‘வரவேற்பதிலிருந்தே’ அவரைப்பற்றிய அங்கீகாரம் ஊரறிந்த ரகசியம். ஒரு நாற்பது வருடத்துக்கு மேலாகியும் இன்னும் மறையாத பாத்திரமாக , எனக்குத் தெரியாமலேயே எனக்குள்ளிருந்து தன் பாத்திரத்தைத் தானே மெருகேற்றி வார்த்துக்கொண்டிருப்பதன் ரகசியம்தான் எனக்குப்புரியவில்லை. இப்படிப்பட்ட மனிதரை மனதிலிருந்து எப்படி வெளியேற்றுவது ? என் போன்ற படைப்பாளிகளுக்கு வடிகால் உண்டு. படைப்பு வடிகால் இல்லாதவர்கதான் பாவம். ஆனாலும், எழுதித் தொலைத்துவிட்டால் நாற்பது வருடகால குடியிருப்பை வாபஸ் வாங்கிக்கொண்டு முழுமையாக வெளியேறிவிடுவாரா என்று உறுதியாய் சொல்லிவிடவும் முடியவில்லை. ‘அழுதுத்தீர்க்கத்தான் என் கதையைச் சொன்னேன், இப்ப மனசு லேசாயிடுச்சு ’ என்று சொன்ன-குறிப்பாகப்பெண்களைக் கடந்து வந்திருக்கிறேன். எழுதித் தீர்ப்பதிலும் அழுதுத்தீர்ப்பதிலும் பாத்திரங்களை மனதிலிருந்து தூக்கி எரிந்து விட முடியுமா என்பதில் எனக்கு இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கிறது.



கலக்கக்காரன் என்றே அவரை அறிமுகப்பத்துகிறேன்.

கலக்கக்காரர்களை நான் எப்போதுமே இரண்டு விதமாகப் பிரித்துப்பார்க்கிறேன்.

முதல் பிரிவினர் சுயத்துக்காக கலகம் செய்து லாபம் தேடிக்கொள்பவர். இரண்டாவது பிரிவினர் பொதுநலத்துக்காகக் கலக்கக்காரனாக தன்னை அழித்துக்கொள்பவர். முதல் தரப்பினர் ‘நாடகக்காரர்கள்’. இரண்டாவது தரப்பினர் நிஜ மனிதர்கள்.

நிஜ மனிதர்கள் நாற்பது ஆண்டு காலம் நிற்கமாட்டர்கள். நாடக்கக்காரர்கள் விடாப்பிடி உடும்பாய்ப் பற்றிக்கொண்டு தங்கி விடுவார்கள்.

நான் மாரிமுத்துவை மதல் தரப்பினர் பட்டியலில் சேர்க்கிறேன். உங்களுக்கும் சுவாரஸ்யமாகப் பொழுது கழியவேண்டுமே.

மாரிமுத்துவைப்பற்றி ஒரு மலிகைக்கடைக்காரர் சொன்ன ஒரே ஒரு வாக்கியம் அவர் பாத்திரத்துக்குச் சாலப்பொருந்தும். “ஙாம்” என்று மலாய் மொழியில் ஒரு வார்த்தைச் சொல்வார்கள். ஙாம் என்றால் சரியாகப் பொருந்தும் என்று பொருள். அப்படி அவருக்குச் சரியாக பொருந்திய வாக்கியம்தான் கடைக்காரர் சொன்னது. கல்லாவில் உட்கார்ந்து கொண்டே உதிர்த்த வாய்மொழி மாரிமுத்துவின் பாத்திரத்துக்கான சரியான பொருள் கொண்டதாக என் உள்மனம் சுவீகரித்துக்கொண்டது. இந்த மலிகைக்கடையை உருவாக்கி நிர்வகிப்பதற்கு அவர் எத்தனைச் சிரமங்களைக் கடந்து வந்திருப்பார்! எத்தனை பேரிடம் யோசனை கேட்டிருப்பார்! அதில் எத்தனை பேர் எதிர்மறையாகப்பேசி அவரைப் பின்னடைய வைத்திருப்பார்கள். எங்கெல்லாம் பணத்துக்கு அலைந்திருப்பார். அதில் எத்தனை பேர் வைத்துக்கொண்டே கைவிரித்திருப்பார்கள். கடைசியில் கடையை நிறுவியவுடன் காசு பார்க்கமுடியுமா அல்லது இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுவோமா என்று குழம்பிக் கலங்கிபோயிருப்பார். தொடக்கத்தில் எல்லா வேலையும் -வெஙகாயம் உரிப்பது முதற்கொண்டு, லாரியிலிருந்து மூட்டை சுமந்து கடையில் போடும் வரை அவரேதான் செய்திருப்பார். இப்போது கடை நம்பிக்கையை நோக்கி நகர்ந்துவுடன்ந்துணைக்கு ஆளையும் வைத்துக்கொண்டு, ‘அக்கடா’ என்று கல்லாவில் உட்கார அவர் கடந்து வந்த கஷ்ட நஷ்ட அனுபவங்களாலான வாக்கியம்தானே மாரிமுத்துவைப்பற்றி சிலாகித்துச் சொன்னது! வாழ்கையில் போராடி ஜெயித்த கடைக்காரருக்கு முற்றிலும் முரணான ஒரு கதாப்பாத்திரத்தை அவதானிக்கும்போது வந்த வெளிப்படையான் வியாக்கியானம்தான் இது.

‘இந்த அம்பது வருஷமா ஒரு மனுஷன் தான் நகத்துல அழுக்குப்படாம வாழ்றாருன்னா அது மாரிமுத்தால மட்டும்தான்யா சாத்தியம்,’ என்பதுதான் அவரைப்பற்றி கடைக்காரர் சொன்ன ஒற்றை வாக்கியம்.

மனுஷன் ஸ்திரி போட்ட மடிப்புக்கலையாத உடையோடுதான் பிரசன்னமாவர். ஆங்கிலம் நுனி நாக்கில் அடாவடித்தனம் பண்ணும். ஆனால் ஒரு ஊரறியா ரகசியம் என்னவென்றால் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் மனிதருக்கு ஆங்கிலத்தை வாசிக்கவோ எழுதவோ வராது. ஆதி வாசிகளுக்குப் பேசத்தெரியும் எழுதப்படிக்கத்தெரியாது என்ற போர்முலாவை இங்கேயும் நாம் வைத்துப்பார்த்தால் இந்த முரண் பெரிய சந்தேகத்தை எழுப்பாது. பேச்சாங்கிலம் அவருக்குப் பெரிய பலம். ஆங்கில மிடுக்கால் அவர் பலவற்றை ஜெயிக்க முடிந்திருக்கிறது. நகத்தில் அழுக்குச்சேராமல் வாழ்வதற்கு அவருக்குப் பக்கபலமாய் இருந்தது, அவரிடமிருந்த உருட்டல் மிரட்டலும், உடை மிடுக்கும், தமிழர்கள் அடிமையாகிப்போன ஆங்கில மொழியும்தான்.

‘ நகத்துல அழுக்குப்படாம வாழ்றதுங்கிறது , நின்ன எடுத்தலிருந்தே நிமிராம, குனியாம , வேர்க்காம , பேச்சுத்திறத்தலியே பணம் சம்பாதிச்சிறதுன்னு அர்த்தம்,’ என்று அவரே அதற்குப் பொருள் சொல்வார்.

நான் அதை நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

எங்கள் ஊரில் ஒரு சிறு குன்றின் மேல் கோயில் கட்டி முருகரை பிரதிஷ்டை செய்து வைத்திருந்தார்கள். குன்று இயல்பாகத் தோன்றியதாகத் தெரியவில்லை. முருகனுக்கு குன்றுதான் ஙாம்மாகும் என்பதால் உருவாக்கியிருக்கலாம் என்ற எண்ணமே தோன்றும். கல் பாறைகள் ஏதும் கிடையாது. வெறும் செம்மண்ணால் ஆன குன்று மட்டுமே. கோயில் வளாகத்தை மட்டுமே கொள்ளும் சிறு பகுதி. படியேறிதான் நேர்த்திக்கடன் செலுத்தவேண்டுமென்பதான் மரபான சிந்தனைக்கு மக்கள் ஈர்க்கப்பட்டதால் எழுப்பப்பட்ட கோயில் என்று குத்துமதிப்பாய்ச் சொல்லலாம். இதற்குக் கள ஆய்வெல்லம் வேண்டாமென்றுதான் நினைக்கிறேன்.

இந்தக்கோயிலில்தான் அன்னார் அடிக்கடி தன் கைவரிசையைக்காட்டுவார். அவர் கூட்டத்துக்கு வந்தாலே வம்பும் கூட நிழல்ப்போல பின் தொடருமோ!

ஒருமுறை , கோயில் கூட்டத்தில் ஒரு சவ வாகனம் செய்யலாம். கையில் இழுத்துப்போகுமளவுக்கு கைவண்டி செய்துகொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். அநேகமானோர் அதற்கு வழி மொழியவில்லை.ஆதைப்பற்றியெல்லாம் அவருக்குக் கவலியில்லை.

வாகனம் வாங்கினால் புதியதான ஒரு வேனாக இருக்கவேண்டுமே ஒழிய இழுத்துக்கொண்டு போகுமளவுக்குக் கேவலமாக இருக்க வேண்டாமென்றும், இப்போதைக்கு வேன் வாங்கும் அளவுக்கு கஜானா கனமாக இல்லையென்ற படியால் அன்னாரின் பிரரேபனை செல்லுபடியாகாமல் தள்ளுபடியாயிற்று.

மனிதர் சும்மா இருந்துவிடவில்லை கோயில் கூட்டத்திலேயே நானே அம்மாதிரி வாகனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என சவால்விட்டு விட்டு எழுந்து போய்விட்டார்.

ஒரே மாதத்தில் சவ கைவண்டி தயார். அவரின் நல்ல நேரம் அந்த நேரம் பார்த்து அவர் தரப்பிலேயே ஒரு ஆள் குலோஸ். அன்னாரின் வண்டிதான் சவ ஊர்வலத்துக்குப் பயன் படுத்தப் பட்டது. என் அனுபவத்தில் பாடை கட்டி சுடுகாடு வரி தூக்கிக்கொண்டு போனதைப் பார்த்திருக்கிறேன். கைவண்டியில் பிணத்ததை இழுத்துக்கொண்டு போன சம்பவத்தை அப்போதுதான் முதல் முதலாகப்பார்க்கிறேன். கோயில்காரர்கள் ஒன்றுமே பேசமுடியவில்லை. மனிதர் விட்ட சவாலில் ஜெயித்துக்காட்டிவிட்டரே என்று மட்டும் பேசிக்கொண்டார்கள். இவர் மரணத்துக்கு முன் வேன் வாங்குமளவுக்கு கைவண்டியைக்கொண்டு பணம் சேர்த்துவிடுவார் என்றும் பேச்சு அடிபட்டது. அவர் இழுவை சவ வாகனத்தில் பயணமானாரா அல்லது சவம் சுமந்த வருமானத்தில் வேன் சவ வாகனத்தில் போய்ச்சேர்ந்தாரா என்றெல்லாம் எனக்குத்தெரியாது.

ஆனால் அவருடனான நேரடி சந்திப்பும் மோதலும் அவரைப்பற்றிய கடைக்காரரின் வியாக்கியானம் சரியானதாகவே மெய்ப்பித்தது.



என் வகுப்பில் அன்னாருடைய பையன் படித்துவந்தான். படிப்பில் நடுத்தரக்கும் கீழான மாணவன்தான். பாடத்தில் கவனம் செலுத்தாமல் படிக்கும் மாணவர்களை உசுப்பிக்கொண்டே இருப்பது அவன் பொழுதுபோக்கு. ஒரு முறை மாதச்சோதனை நடந்து கொண்டிருந்தது. சோதனை நேரத்தில் தன் பக்கத்து இருக்கை மாணவனிடம் எதையோ கேட்கப்போய் அவன் மறுத்து இருவருக்குமிடையே சலசலப்பு ஏற்பட்டிருந்தது. சோதனையில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் பிற மாணவருக்கு தொந்தரவாக இருக்குமே என்றெண்ணி அவர்களை நெருங்கி விசாரித்தேன். விசாரணையின் போது பையனிடமிருந்து சரியான ஒத்துழைப்பு வரவில்லை. மாறாக ஏறுக்குமாறாக பேச ஆரம்பித்தான். சோதனை நடக்கும் நேரத்தில் அவனுக்கு எனக்கும் வாக்குவாதம் முற்றிக்கொண்டிருந்தது. வினாக்களுக்குப் பதில் தெரியாத மாணவர்வகளுக்கும் பொழுதுபோகவேண்டுமல்லவா?



மாணவர்களில் கவனம் எங்கள் பக்கம் திரும்பிக்கொண்டிருந்தது எனக்குக் கடுப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தது. அவன் ஏதோ ஒன்று கடுமையாய்ச் சொல்ல என் வலது கை தன்னிச்சையாய் அவன் இடது கண்ணத்தில் பாய , புறங்கை வலதிலும் பாய்ந்திருந்தது.தேம்.ஜி.ஆர் மாதிரி ஏழெட்டு பேரை வீழ்த்த முடியவில்லை என்றாலும் , ஒரே வீச்சில் இரண்டு அறைகள் என் தகுதிக்குப் போதுமானதே. அப்போதே அவன் கடவாய்ப்பல்லிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது.

சற்று நேரத்தில் கசிவு நின்றுவிடும். அதற்கு முதலுதவி தேவையில்லை என்றே என் அனுபவ அனுமானம்.

பள்ளி முடிந்து நான் வீட்டில் மதிய உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். சோற்றில் கல் பற்களில் தட்டுப்படும்போதே இன்றைக்கு ஏதோவொன்று ஏடகூடமாய் நடக்கப்போகின்றது என்று நான் யூகித்திருக்கவேண்டும்.

எங்கள் வீடு தெருவிலிருந்து இறங்கும் சிறு பள்ளத்தில் அமைந்திருந்தது. மழைக்காலத்தில மழைநீர் தாராளமாய் எங்கள் வீட்டுக்கு அழையா விருந்தாளியாய் நுழைந்துவிடும்.

அன்றைக்கு மழை இல்லை இடியும் மின்னலுமாய் வாசலுக்கு நேராய் தெருவில் யோரோ ஒருத்தியின் வம்புக்குரல் சேறு கல்ந்த மழை நீராய் , எங்கள் வீட்டுக்குள் இறங்கி வந்து கொண்டிருந்தது. காலையில காக்காய் ஏதும் கத்தியதா, விருந்தாளி வந்திருக்காப்பல என்று சொல்லிக்கொண்டே எச்சில் கையோடு வெளியே வந்தேன். விருந்தாளி வரவில்லை ‘காக்கையே வந்து நின்று கரைந்து கொண்டிருந்தது.

அறை வாங்கிய பையனின் அம்மா.

“எம்மகன எப்படி அடிக்கப்போச்சு. பல் ஆடிப்போற அளவுக்கு அடிச்சிட்டியே, நீயெல்லாம் ஒரு வாத்தியாரா?” அடிப்பவரெல்லாம் வாத்தியாராய் இருக்க முடியாதென்றால் பள்ளிக்கூடங்களையெல்லாம் இழுத்து மூடிவிட வேண்டியதுதான்.

“ஏங்க வீட்டுக்கு வெளிய இருந்து அநாகரீகமா சத்தம் போடுறீங்க உள்ள வாங்க நடந்தது என்னான்னு சொல்றேன்”

“ ஓ நீ அடிச்சது அநாகரீகமில்ல நான் நாயத்த கேக்க வந்தது மட்டும் அநாகரீகமா?”

“வெளிய இருந்து சத்தம் போட்டா உங்களுக்கு எப்படி நாயம் தெரியும். வீட்டுக்குள்ள வாங்க.” அண்டை வீட்டுக்காரப் பெண்கள் சிலர் பள்ளி விட்டு வந்த பிள்ளைகளை கவனிப்பதற்குப் பதிலாக வெளியே எட்டிப்பார்க்க ஆரம்பித்தனர்.

“ ஏங்க இப்படி ஆளக்கூட்டரீங்க, உள்ள வாங்க இல்லாட்டி தலைமை ஆசியருக்கிட்ட போய் புகார் கொடுங்க,” என்று சொல்லிவிட்டு நான் மீண்டும் சாப்பிட உட்கார்ந்து விட்டேன். மனைவியிடம் சண்டை போட்டாலுமே சாப்பாட்டின் மேல் கோபப்படாதவன் நான். ஆசிரியாராய் மட்டும் இல்லாமலிருந்திருந்தால் நானும் தெருவுக்குப்போய் சண்டைச் சேவலாக அவதாரமெடுத்திருப்பேன்.

எவ்ளோ நேரம் கரையப்போவுது ? தொண்ட காய்ஞ்சதும் தண்ணி குடிக்கப்போயிடும்தானே!

மறுநாள் காலை பள்ளிக்குப்போனவுடன் கச்சேரி ஆரம்பமாகிவிட்டிருந்தது தெரிந்தது. மனைவியை இங்கே அனுப்பிவிட்டு கணவர் தலைமை ஆசிரியரைப் பார்க்கப் போய்விட்டார் போலும்.

தலைமை ஆசிரியர் காலையிலேயே என்னை அவர் அலுவலகத்துக்கு வரச்சொல்லி ஆள்விட்டு அனுப்பியிருந்தார். அவர் கொஞ்சம் பயந்த சுபாவம் கொண்டவர்.

“மாரிமுத்து பையனை அறைஞ்சிருக்கீங்க. அவர் போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணபோறதா சொல்றாரு,”

“ என் மேல தப்பில்ல . நான் போலிஸ¤க்கு பயப்படவேண்டியதுமில்லை. நான்தான் ஜவாப்தாரி. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று ஆறுதல் சொன்னேன்.

“ நீங்க அவரோடு சமாதானமா போயிடுங்க. வம்பெல்லாம் வேண்டாம். போலிஸ் வரை சென்றால் பள்ளியின் பெயர் கெட்டுப்போகும்.”

“ சமாதானம்னா எப்படி?” என்றேன்.

“ கடைக்குக் கொண்டுபோய் சாப்பிட்டுக்கொண்டே நடந்தவற்றுக்காக நீங்கள் வருந்துவதாக ஒரு வார்த்தை சொல்லிட்டு கைகுலுக்கீங்க, அதுபோதும். அவரைப் போலிஸ் போவதிலிருந்து தடுத்துவிடலாம்.”

“ நீஙக சொல்றத பாத்தா, நான் மன்னிப்பு கேக்கணும்னு சொல்றீங்களா?”

“ நீங்க புரிஞ்சிக்கிட்டா சரி”

“ தப்பு செஞ்சவன் அவன் சார், நான் போயி மன்னிப்பு கேட்ட நான் தப்பு செஞ்சதால்ல ஆயிடும்?”

“ அதெல்லாம் பாத்தா முடியாது. பள்ளிக்கு கெட்ட பேர் வர்ரதுக்கு முன்ன நீங்க ஏதாவது செய்தாகனும்.”

“ என்ன சார் இது ? ஒரு மாணவன நல்வழிப்படுத்த நான் அடிச்சது தப்புன்னா, பள்ளியில எப்படி சார் ஒழுக்கத்த நெல நாட்ட முடியும் ?”

“ எல்லா பெற்றோரும் ஒரே மாதிரி இல்ல , சிலரின் பிடிவாதங்கள நாம்தான் தளர்த்தணும். நாமதான சைக்கொலோகி படிச்சிருக்கோம். எதுக்கு ? அப்ளை பண்ணத்தானே?”

“ அவருதான் இப்போ நம்ம மேல சைக்கோலோஜிய பயன் படுத்துறாரு. நாம அதுக்கு அடிமையாகக்கூடாது. அப்புறம் தண்டிக்கப்பட்ட மாணவரோட அப்பன்லாம் போலிஸ¤க்குப்போறேன்னு பயமுறுத்துவான். எல்லாத்துக்கு மசியப்போறீங்களா?

“ தோ பாருப்பா நான் சொல்றத சொல்லிட்டேன். அப்புறம் நீங்களாச்சு அவராச்சு.” அவர் விருட்டென எழுந்து போய்விட்டார். அவர் அலுவலகத்தில் நான் மட்டுமே இருப்பது அந்நியமான உணர்வுக்குத்தள்ளியது. அவருடைய நாற்காலி காலியாக ஆடுவதெ ன்னவோ நான் அவரின் சொல்லுக்கு மதிக்காத என் வார்த்தைகளை எதிரொலிப்பதாகப் பட்டது. அறை முழுதும் நானும் அவரும் வாதிட்ட சொற்கள் மிதந்து கொண்டிருப்பதாக உணர்ந்தேன். அவ்வறையை விட்டு நான் உடனே கிளம்பிவிட்டேன். நான்தான் முதலில் கிளம்பியிருக்கவேண்டும். அவர் போனதானது மனதை கீறிக்கொண்டிருந்தது.



முதல் நாள் ஏதும் நடக்கவில்லை. மாரிமுத்து போலிஸ¤க்கும் போகவில்லை. ஆனால் அவரைத் தலைமை ஆசிரியர் அறையில் பார்த்ததாக தகவல் கிட்டியது. எதற்காக மனிதர் அலைகிறார்? போலிசுக்குப் போகவேண்டியதுதானே? ஏன் இந்த புலி வருகிறது பாய்ச்சலெல்லாம்?

மறுநாள் பள்ளிவிடும் நேரம் முடியும் வேலை. துணைத்தலைமை ஆசிரியர் வரச்சொல்லியிருந்தார். நல்ல மனிதர். தலைமை ஆசிரியரைப்போலவே மென்மையான சுபாவம் கொண்டவர்.எனக்கு அவரை ரொம்பப்பிடிக்கும்.

“நீங்க ஒரு விஷயத்த புரிஞ்சிக்கணும். அவரப் பொறுத்தவரைக்கும் அவர் மகன் மேல தப்பில்லன்னு வாதாடுறாரு. எந்த அப்பன் தான் புள்ளய விட்டுக்கொடுப்பாங்க? அவர் டாக்டர பாத்து மெடிக்கல் செட்டிபிக்கேட் வாங்கிக்கிட்டு போலிஸ் போகப்போறேன்னு சொல்றாரு. பையனோட ஒரு கடவாய்ப்பல் ஆடிப்போய் பிடுங்கிட்டாங்களாம். நாம சட்டம் என்னா சொல்லுது? பிரம்பால உள்ளங்கையில மட்டுமே அடிக்கணும்னு சொல்லுது. அதுவும் அவன் தான் செஞ்சது தப்புன்னு ஒத்துக்கிட்ட பிறகு!”

“ சார் அவன் பல்ல பிடுங்கியாச்சுன்னு யார் சொன்னது?”

“ மாரிமுத்துதான்”

“ அதுல எவ்ளோ உண்மை சார் இருக்கு?”

“ அதுக்காக நாம என்னா அவன் வாயத்தொறந்தா பாக்கமுடியும்”

“ அது உணண்மையில்லன்னு நான் நெனைக்கிறேன். அந்த அளவுக்கு நான் அடிக்கல. அவர் மெரட்டுறாருன்னு புரியுது. நாம் நலிய நலிய அவர் வலிமையா ஆயிட்டதா நான் நெனைக்கிறேன்.”

“ எனக்கும் புரியுது நீங்க ஒன்னு புரிஞ்சிக்கணும். மொதல்ல தலைமை ஆசிரியர. அவர் இவ்ளோ தூரம் இத வளர விட்டிருக்கக்கூடாது. எடம் கொடுத்தாச்சு அதான். நாம் புரிஞ்சிக்கிட்டு பைல(file) குலோஸ் பண்ணிடுவோம்.”

“ புரியல”

“ அதான் நான் சொன்னனே நீங்க புரிஞ்சிக்கணும்னும்”

“ இதுவும்புரியல. இப்பத்தான் மேலும் கொழப்பமா இருக்கு”

“ அவர் என்னா சொன்னருன்னு...... தான் மகன கிளினிக் கூட்டிட்டுப் போனாராம். செர்ஜரி செலவு, மருந்து செலவு, பல் கட்டுற , டிராஸ்போட் செலவுன்னு ஒரு பட்டியலே கொடுத்திருக்காரு. அவர் போலிஸ் போறதா இருந்தா இங்க வந்து நமக்கு பாவ்லால்லாம் காட்டிக்கிடிருக்க மாட்டாரு”

“ நான் என்ன புரிஞ்சிக்கினம்னு நீங்க நெனைக்கிறீங்க”

“ அவர் பில்ல செட்டல் பண்ணுங்க. கேஸ் குலோஸ்”

“ என்ன சார் இது , நான் குத்தத்த ஒத்துக்கிட்டதால்ல ஆயிடும்?”

“ நாம் அடுத்த முறை கவனமா இருக்கணும்னு உண்டான் ஒரு சந்தர்ப்பம்னு இத எடுத்துக்குவ்வோம். காச தூக்கி எரிஞ்சிடுங்க. விணா எதுக்கு பிரஷ்ஷர்லாம்? ஹெச்செமுக்கு எனக்கு, உங்களுக்கும். பிலீஸ் செட்டல் இட். அதுக்குதான் மனுஷன் கிடந்து அலையுறாரு.”

மாரிமுத்துவின் பிழைப்பு அரசியலில் நானும் ஒரு பலிகடாவாகப்போகிறேன் என்ற என் கையறு நிலையை உணர்ந்ததும் என் இயலாமை உள்ளிறங்கி பெரும் பாரமாகக் கனத்தது. அவர் அழுக்குப்படாமல் வாழ்ந்ததற்கான அடையாளமாக நானும் உடந்தையாக இருக்கிறேன் என்பதில் நினைக்கும்போது, எனக்குள் இருந்த கலகக்காரன் வலிமை இழந்துகொண்டிருந்தான்.





















Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...