இன்று 17.2.2011 வியாழக்கிழமை கோல கிட்டில் இடை நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு சிறுகதைப் பட்டறையை நடத்தி முடித்தேன் . மதிய 12.00 மணிக்குத் தொடங்கி 2.00 மணிவரை நடந்தது. அவர்கள் எனக்குக் கொடுத்த நேரம் போதுமானதாகவே இருந்தது. ஒரு சிறுகதைகான கூறுகளையும், கட்டமைப்பையும், செய்நேர்த்தியையும் சொல்ல நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார் - முனைப்போடு செயல்பட்ட ஆசிரியை திருமதி கமலா. தமிழ் மொழி பாடக்குழுத் தலைவர் குமாரி மலர்க்கொடி, குமாரி ராஜேஸ்வரி, திருமதி பாரதி, ஜஸ்பிர் கோர் ஆகியோர் இறுதிவரை மாணவர்களுடன் அமர்ந்திருந்தனர்.
நான்கைந்து நாட்களுக்கு முன்பிருந்தே என்னைத்தொடர்பு கொண்டு மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் சிறுகதைக் கலையைப்பற்றிச் சொல்லித்தரவேண்டும் என்று அறிவுறுத்தி வந்தார். புரியும்படி என்ற வார்த்தையின் பொருளை நான் உள்வாங்கிக்கொண்டேனா என்பதில் அவர் கவனம் மையமிட்டிருந்தது. அவர் காட்டிய அக்கறை என்னை ஊக்குவித்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே பட்டறையின் செய்பொருள் என்னிடம் இருந்தமையால் இலகுவாக அதை என்னால் நடத்த முடிந்தது.
கெடா மாநிலத்தில் தமிழ் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் கொண்ட இடைநிலைப்பள்ளி கோல கெட்டில் இடைநிலைப்பள்ளி. அந்தப் பள்ளிக்குப் போவதில் எனக்கு சற்று மிகுதியாகவே ஆர்வம் இருந்தது. நான் ஆசிரியர் பயிற்சிக்குப் போகுமுன்பே இதே பள்ளியில் ஒராண்டு காலம் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றியதே அப்பள்ளிக்குச் செல்வதற்கான ஈர்ப்பைக் இரட்டிப்பாக்கிக் கொண்டிருந்தது. அங்குப் போதித்த நாட்களின் நினைவலைகளில் நான் நெகிழ்ந்திருந்தேன்.
சுமார் நூற்றைம்பது மாணவர்கள் மண்டபத்துக்குள் வந்து சேர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே மாணவர்களிடம் இரு சிறுகதைளை வாசிக்கக் கொடுத்தேன். அதில் ஒன்று ருஷ்ய எழுத்தாளர் லியோ டோல்ஸ்டாயின் கதை. பலர் ஆர்வத்தோடு வாசிக்க ஆரம்பித்தனர். தலைமை ஆசிரியர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைப்பதற்கு வந்துவிட்டதால் சிலரால் வாசித்து முடிக்க முடியவில்லை. அன்றைக்குத்தான் வாழ்க்கையின் முதல் சிறுகதையை வாசித்தவர்களும் இருந்தார்கள். சோதனையை நோக்கியே நம் மாணவர்கள் ‘தள்ளப்படுவதால்’ கலை சார்ந்த கல்வியும் ,அனுபவமும் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாகிப் போய்விட்டது. நல்ல வேளையாக அப்பள்ளியின் தமிழ்ப்பாடக்குழு தலைவர் குமாரி மலர்க்கொடி போன்றவர்கள் எழுத்துக்கலையை முன்னெடுக்கிறார்கள்.
முதலில் இறை வாழ்த்துப்பாடல் தொடங்கியது. அது இறை வழிபாடு என்று தெரிந்தும் அப்பள்ளியின் துணைத் தலைமை ஆசிரியர் திருமதி சாடியா இப்ராஹிம் இருக்கையை விட்டு எழவில்லை. திருமதி கமலா ஆசிரியை அவரிடம் சொல்லி எழுந்து நிற்கச் செய்தார். இது கொஞ்சம் துணிச்சலான செயல்தான். இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து சமயப் பண்பாடு ‘ஒவ்வாமையை’ உண்டாக்கும். மலேசியாவில் மற்ற சமயக் கல்விக்கு போதிய இடம் தராத கல்விக்கொள்கையும் ஊடகங்களும் செய்துவரும் அருஞ்செயலால் வந்த வினை இது. இது மலேசியாவில் நடக்கும் வழக்கமான ஒன்று. அந்த அறையில் துணைத்தலைமை ஆசிரியரைத்தவிர மற்றெல்லாரும் தமிழர்களாக் இருந்ததால் வேறு வழியின்றி அவர் எழவேண்டியதாயிற்று. திருமதி கமலாவை இதற்காகப் பாராட்டாமல் இருக்க முடியாது. பல பள்ளிகளில் அவர்கள் டோவா சொல்லும்போது மற்ற இன மாணவர்களும் அதனைப் பின்பற்றவேண்டும் என்ற கட்டாயத்தை நிறுவுகிறார்கள். ஒருமுறை திருக்குர்ரானை எடுத்ததற்கு ,அந்தப் புனித நூலை முஸ்லிம் அல்லாதவர்கள் தொடக்கூடாது என்று என்னை எச்சரித்தனர். ஏன் இந்த முரண்? அவரவர் நம்பிக்கையைப் பின்பற்ற அந்தந்த சமயத்தாருக்கு வாய்ப்பளித்தால் இன மத சமத்துவம் மேலோங்குமல்லாவா?
நான் சிறுகதை எப்படி அமையவேண்டும் என்பது பற்றி உரையாற்றினேன்.
1. சிறுகதை என்றால் என்ன?
2. அதன் வடிவமைதி
3. அழகியல் கூறு.
4. உவமை நயம்
5. செய்பொருள்
6. முடிவு
7. தலைப்பு
போன்ற மரபார்ந்து கூறுகளை விளக்கிச் சொன்னேன். மாணவர்கள் கூர்ந்து கவனித்தார்கள். என் உரையில் எல்லா கூறுகளுக்கும் கதைகளை எடுத்துக்காட்டுக்குச் சொன்னதால் மாணவர்களின் கவனம் பிசகவில்லை. ஆர்வத்தோடு பின் தொடர்ந்தார்கள். சில கதைகளின் முடிவைச்சொல்லும்போது கைத்தட்டி மகிழ்ந்தார்கள்.
என் பேச்சு முடிந்து நிறைய மாணவர்கள் சிறுகதைத் தொடர்பான வினாக்களை எழுப்பினர். பேச்சு மொழியில் எழுதலாமா? பிற மொழியைக் கலக்கலாமா? முடிவில் கண்டிப்பாய் திருப்பம் வேண்டுமா? போன்ற வினாக்கள் எதிர்பார்த்ததுதான். மாணவர்கள் சிறுகதை சார்ந்த வினாக்களைச் சோதனையிலும் எதிர்நோக்குவதால், அவர்கள் மதிப்பெண்கள் பாதிப்புராத வண்ணம், என் விளக்கங்கள் அமைந்தன. வாசிக்கும் பழக்கம் இலக்கிய ஈடுபாட்டுக்கு அவசியம் என்பதை எடுத்துச் சொன்னேன். நாம் எதிர்நோக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை போதாமையையும் , கற்பனை வரட்சியையும் போக்குவதற்கு வாசிப்பு நல்ல நிவாரணி என்பதைப் புரியவைத்தேன். புத்தகங்கள் கிடைக்காதவர்கள் இணையத்தை நாடச்சொன்னேன்.
பட்டறையின் இறுதியில் ஒரு கருப்பொருளைக்கொடுத்து , அதற்கான கருவையும் கொடுத்து தொடக்கத்தை மட்டும் எழுதச்செய்தேன். பல மாணவர்கள் ஒரு சிறுகதைக்கானத் தொடக்க வரிகளைச் சரியாகவே புரிந்துகொண்டு எழுதித்தந்தனர். அவர்களில் சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசளித்துவிட்டு விடை பெற்றேன். ஒரு முழு கதையை எழுதச்செய்ய நேரமில்லை.
அடுத்த முறை நாடகம் எழுதும் கூறுகளையும் போதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
Comments
நாம் நம் கலை சார்ந்த விஷயங்களில் பின்தங்கி இருக்கிறோம் .நாம்தான் முன்னோடியாக இருந்து இலக்கிய ஆல்ளுமைகளை உருவாக்கவேண்டும். பள்ளியின் ஏட்டுக்கல்வி மட்டும் போதாது.
மிகச் சிறந்த முயற்சி!
சிறுகதை எழுதுவதன் முறைகளை காணொளியாக எங்களுக்கும் தந்திருக்கலாம்.
உங்களின் தீராத இலக்கிய ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.