Skip to main content

7, பனிப்பொழிவில் 10 நாட்கள்











சண்டிகார் கைவினைக் காட்சியகத்தில், பொற்கோயில் புனித நீராடல், ஒரு சுவையான உணவு வகை.



     தூசு படிந்த நகரத்தில் தூய்மையான புனிதத் தலம்
     அது கார் விற்கப்படும் சந்தையாம். கார் விற்பவர்கள் வாங்குபவர்கள் கூடும் இடம்- ஞாயிற்றுக்கிழமைகளில் இது நடக்குமாம். அவர்களுக்கிடையே பேரம் நடக்கிறது. கார் விற்பனையாளரிடமே நேரடியாகப் பேரம் பேசி காரின் நிலை பரிசோதித்து வாங்கிக்கொள்ளலாம். செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளருக்கோ, இடைத்தரகருக்கோ  அங்கே இடமில்லை. பத்தாயிரம் வெள்ளிக்கு அடித்து வாங்கிய  செக்கண் ஹாண்ட் காரை விற்பனையாளர்கள் இருபதாயிரம் வெள்ளிக்கு விற்று கார் சொந்தக்காரரின் வயிற்றில் அடிக்கும் பழக்கம் இங்கு போல அங்கு இல்லை. நேரடி விற்பனை. கார் சொந்தக்காரர் பெரிய நஷ்டத்தில் விற்கும் நிலை இங்கே ஏற்படாது.
கார் சந்தை நம் நாட்டிலும் இருந்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. செக்கண் ஹாண்ட் கார் விற்பனையாளர்கள் சும்மா விடமாட்டார்கள்!
  
      சுத்தம் கிலோவுக்கு என்ன விலை என்று கேட்கும்  டில்லியைப் போலவோ சென்னையைப் போலவோ சண்டிகார் இல்லை. பட்டணம் மிக நேர்த்தியாக இருந்தது. குப்பை கூலங்கள் இல்லை. சாலை விதிகள் கறாராகக் கடைபிடிப்பது தெரிந்தது. அகன்ற சாலை. போக்குவரத்து நெரிசல் இல்லை. திட்டமிட்டு பட்டணத்தை நிறுவியிருப்பது அதன் அமைப்பில் தெளிவானது. தூசு துப்பட்டி இல்லை. நம்ம ஊருக்கு வந்தது போன்ற பிரம்மையிருந்தது.

        சண்டிகாரை விட்டு அம்ரிஸ்டார் பயணமானோம். அது ஐந்தாறு மணிநேரப் பயணம். அம்ரிஸ்டார் மிகப் பிரசித்தி பெற்ற ஊர். அங்கேதான் தங்கக் கோயில் இருக்கிறது. புனிதத்தையும் ரத்தத்தையும் குழைத்த சரிதிரத்தைக் கொண்ட  கோயில். அதைபார்க்க வேண்டுமென்றே பயண நேரத்தை பெரிது படுத்தாமல் இருந்தோம்.
      அன்று இரவுதான் அம்ரிஸ்டாரை அடைந்தோம். விடுதியில் தங்கிவிட்டு அம்ரிஸ்டார் முகத்தில் விழித்தத்ததும்தான் தெரிந்தது -அது சண்டிகாரின் நேர்த்திக்கு நேர் முரண் என்று. சென்னையை விட மனித நெரிசல் அதிகம் . தூசு பனி மூட்டத்தை முந்திக்கொண்டு வியாபித்திருந்தது. தைப்பூசத்திருவிழாவில் கூட இந்த நெரிசல் இல்லை. கார்களும், ஓட்டோவும், சைக்கிலும், ரிக்ஷாவும் , மாடுகளும் ,மனிதர்களும் ஒரு ஆறடி அகலமுள்ள சந்தில் நீ முந்தி நான்  முந்தி முண்டியடிப்பதைப் பார்க்கச் சகிக்கவில்லை.. இத்தனைக்கும் அன்று திங்கட் கிழமைதான்.
ஏதோ ஒரு கடையில் அவசரமாய் பசியாறிவிட்டு தங்கக்கோயிலுக்குக் கிளம்பினோம்.
     தங்கக்கோயிலுக்கு நுழையும் வளைவில் “ இங்கதான் சுட்டுக்கிட்டும் வெட்டிக்கிட்டும் செத்தாணுங்க, “ என்று அவலமாய் ஆரம்பித்தார் தோமஸ். கோவிலின் வளாகத்தை அடையுமுன்னே அபசமாய் ஆரம்பித்த தோமஸின் வார்த்தைக்குள் உண்மை இருக்கத்தான் செய்தது.
   
     தங்கக்கோயிலைப்பற்றி பேச்சு எழும்போதெல்லாம் அங்கு உண்டான ரத்தக்களரி முந்திரிக்கொட்டை  மாதிரி மேலெழுந்து தெரியும். அந்த இடத்தை மிதித்த உடனேயே கசிந்து காய்ந்து கருப்பாகி மண்ணோடு மண்ணாகிவிட்ட ரத்தம் என் முகத்தில் அறைவது போலிருந்தது. மனித ரத்தம்.  எத்தனை போராளிகள், எத்தனைப் பொது மக்கள், எத்தனை ராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கும் கத்தி வெட்டுக்கும் பலியாகியிருப்பார்கள்.
    என்ன நடந்தது ? என்று கேட்கிறீர்கள்.
    இந்தியர்கள் தேசப்பற்று மிக்கவர்கள். மாநிலப்பற்று மிக்கவர்கள் . தங்கள் மொழி, தங்கள் கலாச்சாரம் தங்கள் நிலப்பகுதி என்றால் விட்டுக்கொடுக்கும் பழக்கம் இல்லாதவர்கள்.
   பஞ்சாம் மாநிலத்தைத் தனி நாடாய் பிரகடனப் படுத்த மத்திய அரசிடம் நாட்டு ச்ய்தந்தரத்துக்கு முன்னாலேயே கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அதற்குச்செவி சாய்க்கவில்லை. ஒவ்வொரு புதிய  பிரதமர் ஆட்சிக்கு வருபோதெல்லாம் இந்த கோரிக்கை விடப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது இக்கோரிக்கை விஸ்வரூபமெடுத்தது . பஞ்சாப்பை தனி நாடாக அடைந்தே தீருவோம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு ஒரு தீவிரவாத கும்பல் களத்தில் குதித்தது. அந்தத் தீவிரவாதக் கும்பலுக்கு அம்ரிஸ்டாரில் இருக்கும் தங்கக் கோயில் புகலிடம் கொடுத்து அவர்கள் போராட்டத்தை ஆதரித்தது. இது நடந்தது 1982 ஜூன் மாதத்தில். இது பெரிய சவாலாக மத்திய அரசு எதிர் நோக்கவேண்ட்யிருந்தது. இந்திரா அதற்கு இணங்கவில்லை. கேட்பவர்க்கெல்லாம் தனி நாடு கொடுத்தால் இந்திய துணை கண்டம் பல பிளவுகளாத் துண்டு பட்டு விடும். இந்தியாதான் மிகப்பெரிய ஜனனாயக நாடு என்ற பெருமையை இழந்துவிடும்.  பாக்கிஸ்தானுக்கு தனி நாடு கொடுத்து விட்டு இன்றைக்கு பெரிய தலவலியை உண்டாக்கிக்கொண்டது இந்தியா. பாகிஸ்தானுக்கு தனி நாடு கொடுத்துவிடாலாம் என்ற பிடிவாதத்தில் நின்றவர் காந்தி. இது அவருடைய மிகப்பெரிய தவறுகளில் ஒன்று. அதே நிலை மீண்டும் நிகழக்கூடாது என்பதே இந்திரா காந்தி பிடிவாதத்தின் நோக்கம்.
ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது.
தங்கக்கோயில் சிக் மக்களில் புனித குருதுவாரா ( தாய்க்கோயில்). அது போராட்டக்காரர்களுக்குப் புகலிடம் கொடுத்தது பெரிய தவறு.
அந்தப்போராட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர இந்திரா வேறு வழியற்று இந்திய ராணுவத்தை அனுப்பினார். 6.ஜூலை 1982ல் ராணுவம் வேறு வழியற்று அக்கும்பலுக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் செய்தது.
போராட்டவாதிகள் இந்திய ராணுவத்துக்கு அஞ்சவில்லை. நேருக்கு நேர் எதிர்த்து நின்றது. முடிவு கோயில் வளாகத்தில் ரத்தக் களரி. எத்தனையோ போராட்ட வாதிகளும், அவர்கள் ஆதரவாளர்களும் ராணுவத்துக்குப் பலியாகினர். இந்திய சரித்திரத்தில் இன்னொரு கருப்பு அத்தியாயம் அன்று பதிவானது.
கோயிலுக்குள்ளேயே ராணுவ அட்டகாசத்தை நிகழ்த்தியதன் முக்கிய நபராக இருந்த பிரதமர் இந்திரா தன் அலுவலகத்திலேயே தன் பாதுகாவலர் இருவரால் 31.10 1984 ல் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்ட இருவருமே சிக் இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்திராவுக்கு நீண்ட காலமாக உண்மை மெய்க்காப்பாளர்களாக இருந்தவர்கள் இவர்கள். அவர்களை மூளைச் சலவை செய்து பிரதமரையே குறி வைத்துக் கொன்ற ரகசியத்திட்டம் இந்திய உளவுத்துறைக்கு கடைசி வரை தெரியாமலேயே பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

       கோயிலுக்குள் நடக்கக்கூடாத சம்பவங்கள் நினைவுகளில் நீங்க மறுதலித்தது. ஒரு பாறையை நீண்ட தூரம் சுமந்து வருவதுபோல மனம் பழைய இயல்புக்குத் திருமப முரண்டு பண்ணியது. மனிதன் இயல்பாகவே மல்லிகை இதழ்களைப் போல மென்மையான மனம் படைத்தவன். இது போன்ற கொடுமைகளை மனம் ஏற்காது. குற்றங்களற்ற மனிதர்களையே மனம் தரிசிக்கும். தன்னைச் சுற்றியுள்ள உலகம் புனிதமாக இருக்கவேண்டுமென்பதே மனித மனத்தின் இயல்பான குணம்.  ஆனால் ஆசையும் சூழ்நிலையும் அவனை மனம் பிறழ வைத்துவிடுகிறது. உணர்சச்¢வயப்படுதல் அவன் அறிவை சூன்யமாக்கிவிடுகிறது.
    இந்த நினைவுகளோடு நடந்து செல்லும்போது குருதுவாராவின் கோபுரம் தெரிந்தது. காலை இளவெயிலின் கதிரொளியில் தங்கக்கோபுரம் தகதகத்துக்கொண்டிருந்தது. சூரியனைத் தொட முயற்சிக்கும் இன்னொரு நெருப்புப் பந்தம் போல கோபுரம் காட்சியளித்தது.
    கோயில் வளாகத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. காலணியை கழற்றிக்கொடுத்த போது அவற்றைக்கையில் வாங்கும்போதே நம்மைக் கைகூப்பி வணங்குகிறார்கள். கட்டணம் ஏதுமில்லை. அதனை ஒரு சேவையாகவே செய்கிறார்கள். கோயில் வாசலை அடைந்தவுடன் கால்களைக் கழுவிக்கொண்டோம். ஆண் பெண்  பேதமில்லாமல் எல்லாரும் தலைமுடி தெரியாதவாறு மூடிக்கொள்ள மஞ்சல் துண்டு தருகிறார்கள். கோயில் வளாகத்தில் இருக்கும் நேரங்களில் அது நீங்காமல் பார்த்துக்கொள்ளவேஎண்டும். தன்னிச்சையாக அது விழுந்துவிட்டால்கூட அங்கே இருக்கும் பாதுகாவலர்கள் நம்மிடம் அதனை அணிந்துகொள்ளச்சொல்கிறார்கள். கங்கை நதி கோயிலைக் கடந்து செல்கிறது. அதன் தூய்மை நம்மை ஈர்க்கிறது.  தமிழ் நாட்டு கோயில் குளங்கள் மாதிரி இல்லாமல் இங்கே இல்லை. தெளிந்த நீர். இன்னொரு தஙகக் கோபுர பிம்பம் நீரில் நெளிகிறது.
    பழனி கோயில் கோபுரமும் தங்கம்தான். ஆனால் இங்கே கோயில் கோபுரம் மட்டுமல்ல முழு கோயிலுமே தங்கத்தால் ஆனது. தங்க முலாம் அல்ல ! எல்லாருக்கும் புனித நீர் வழங்குகிறார்கள். மதிய உணவும் வழங்கப்படுகிறது. கோயில் சந்நிதானத்துக்குள் நுழைவதற்கு அவகாசம் போதவில்லை. ஒரு நகராத நீண்ட வரிசையைப் பார்க்கும்போது எங்களின் பயணத்திட்டத்துக்கு சரிவராது போலிருந்தது.
கோயிலை விட்டு வெளியேறி டில்லிக்குப் பயணமானோம்.
மீண்டும் ஆறேழு மணி நேரப் பயணம். ஒரு நாள் டில்லியில் தங்கிவிட்டு ஜைய்ப்பூர் போவதாக இருந்தோம்.
   ஒரு முக்கியமான இடத்தை நீங்கள் பார்க்கவேண்டுமென்றார் தோமஸ்.
    டில்லியில் உள்ள இந்தியா கேட்டில் காலையிலும் மாலையிலும் நடக்கும் ராணுவ அணிவகுப்பைவிட  உக்கிரமாக நடைபெறும் அணிவகுப்பை இங்கே பார்க்கலாம் என்றார். டில்லியில் நான் பார்த்திருக்கிறேன். அணிவகுப்பு சண்டை நடந்துவிடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கும். அதை விட ‘நெருப்பாக’ இருக்குமென்றால் எப்படி என்றேன். டில்லியில் இந்திய ராணூவத்தினரே பகிஸ்தான் ராணுவம் போலவும், இந்திய ராணுவம் போலவும் அணிவகுப்பார்கள். பஞ்சாபில் அப்படி இல்லை. பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லை உண்டு. இங்கே பாகிஸ்தான் ராணுவமும், இந்திய ராணுவமும் எதிர் எதிரே அணிவகுப்பர். அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளப்போகும் தருணம் கனிந்து விட்டது போன்ற அச்சம் உண்டாகும். அணிவகுப்பின் போது ஒருவருடைய கால் இன்னொருவர் முகத்தை  உரசிப்போகும். தடார் தடார் என்ற காலடி ஓசை பூமியை அதிரச்செய்யும். போர் உண்டாகி விடுமோ என்ற பயம் பார்ப்பவரை கதி கலங்கச்செய்யும் என்றார்.
   மாலையில் 5 மணிக்குத்தான் நிகழ்ச்சி. நாங்கள் காலையிலேயே தங்கக்கோயிலைப் பார்த்து முடித்துவிட்டதால், மாலை ஐந்து வரை என்ன செய்வது என்று தெரியவில்லை.
   பராவாயில்லை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாமென்று டில்லி பயணமானோம்.
   நெடுஞ்சாலை நம்  நாட்டைப்போல இல்லை யென்றாலும் தேவலாம்தான்.  இஸ்லாம் சமயமும், இந்து சமயமும்கூட பஞ்சாப்பில் பின்பற்றப்படுகிறது. கியாரா மூர்த்தி என்று சொல்லக்கூடிய ஈஸ்வர கோயில்களையும் , பள்ளிவாசல்களையும் சாலை ஓரங்களில் பார்க்க முடிந்தது.
   ஒரே ஒரு இடத்தில் மதிய உணவுக்கு நின்றோம். இந்த நெடுஞ்சாலையை ஒட்டிய உணவகங்களை அவர்கள் ‘டபா’ என்று அழைக்கிறார்கள். மற்ற இடத்தில் நாங்கள் பார்த்த டபாக்களைவிட இது சற்று வித்தியாசமாக இருந்தது. இந்த டபாவுக்குப் பெயர் ஜலந்தர். எல்லா வித வட நாட்டு உணவு வகை இங்கே கிடைக்கும். கூப்பன் வாங்கி பணம் செலுத்தி , உணவைப் பெற்றுக்கொண்டு நின்றவாறே சாப்பிடலாம். அமர்ந்தும் சாப்பிட போதிய வசதி உண்டு. தூய்மையாக இருக்கிறது. அறுசுவை உணவு வகை ஒன்றை சாப்பிட்டுப்பார்த்தேன். கலக்காமல் சாப்பிட்டால் ஒவ்வொரு சுவையையும் உணரமுடியும். கலக்காமல் சாப்பிட்டல்தான் அதைச்சாப்பிட முடியும். நறுவிசாக ஒவ்வொரு கரண்டியாக அள்ளிச் சாப்பிட்டால் அதன் சுவை அலாதியாக இருக்கும். நம்மூர் பணத்துக்கு மூன்று வெள்ளி வரும். மனைவி முதலில் வேண்டாமென்றாள். முதலில் கொஞ்சம் கொடுத்தச் சுவையுணரச் செய்தவுடன் எனக்கு மிச்சம் வைக்கவில்லை.
  உணவகத்தின் உள்புறம் ஒரு லாரியில் முகப்பைபோல வடிவமைத்துக் கட்டப்பட்டிருந்ததது. அங்கே ஓடும் பல லாரிகளின் முகப்பு பல வண்ணக் கலவையிலானது. சாலையில் ஓடும்போதே வண்ணரதம் ஓடுவதுபோல இருக்கும். லாரியின் முகப்பைப்போல வடிவமைக்கப்பட்டிருந்தது. சொந்தக்காரர் கொஞ்சம் ‘மாத்தி யோசிச்சிருக்கார்”- உண்மையிலேயே மாத்தி. (இங்க வானவில்ல யோசிச்சது மாதிரி இல்ல)  ஏன் இந்த வடிவம் என்று விசாரித்தத்தில் இது ஒரு லாரி ஓட்டுனரின் கற்பனையிலான வடிவம். அவர் இப்போது இந்த உணவகத்துக்குச் சொந்தக்காரர் என்பது தெரிய வந்தது. நான் பார்த்த டபாக்களிலேயே இங்கேதான் சுத்தம் கறாராகப் பேணப்பட்டிருந்தது.
          டில்லிக்கு வந்து சேர்ந்தபோது நள்ளிரவைத் தாண்டியிருந்தது . தங்குவதற்கு முன்னேற்பாடாக விடுதி புக் செய்யவில்லை. புக்க் செய்யும் விடுதிகள் இணயத்தில் விளம்பரப்படுத்திய்துபோல வசதிகள் செய்து தரப்படுவதில்லை. மூன்னமேயே ஏற்பாடு செய்துவிட்டு போச் சேர்ந்தவுடன் ஏமாற்றப்பட்ட அனுபவம் பல் உண்டு. எனவே போய்ப்பார்த்துக் கொள்ளலாமென்று வந்து விட்டோம். தோமஸ் என்னிடம் விட்டு விடுங்கள் நான் நல்ல விடுதியாகப் பேசித்தருகிறேன் என்று தொலைப்பேசி எடுத்தார். ஹிந்தியில் ஏதோ பேசினார். வாஙக பிரச்னை இல்லை என்றார்.
       போய்ச்சேர்ந்ததும் பெயர் பதிந்துவிட்டு அறைக்குள் நுழைந்தோம். புது விடுதி 1600 ருபாய். நம் பணத்துக்கு 125 ரிங்கிட்தான். அந்த விலைக்கு கிடைக்காது. டில்லி பட்டணத்தில் முக்கியமான இடம். முக்கிய கடைத்தெரு மிக அருகாமையில் இருந்தது. தமிழ் மக்கள் அதிகம் இருக்கும் இடம்.
       நான் மருமகனிடம் சொன்னேன். நாம் நாளை அக்ராவுக்குக் கிளம்பி , அங்கே இருந்து ஜெய்ப்பூருக்குப் போகிறோம. திரும்புவதற்கு மூன்று நாட்களாகிவிடும். இதே விடுதியைப்பேசி முடித்து விடுவோம். வரும்போது நிலைமை எப்படி இருக்குமோ தெரியாது என்றேன். அப்போதே இரண்டு நாளைக்கு புக் செய்து கொண்டோம். பின்னர் வில்லங்கம் இருக்கப்போவது தெரியாமல்.
      மறுநாள் டில்லியில் விலைப் பட்டியல் விசாரிக்கக் கிளம்பினோம். டில்லிக்கும் , அக்ரா ஜெய்ப்பூருக்கும் விலை வித்தியாசம் பார்க்கவே இந்த ஏற்பாடு. ஆனால் எனக்குத் தெரிந்த வரை தென்னாடோடு ஒப்பிடும் போது டில்லி விலை மலிவு. ஆக்ரா ஜெய்ப்பூர் போன்ற நகரங்களை விட இங்கே மலிவாகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு. டில்லி இந்தியாவின் தலைமைப் பட்டணம். இந்தியா முழுக்கவும் இருந்து இங்கேதான் பொருள் இறக்குமதியாகும். எனவே இங்கேயே ஷாப்பிங் முடித்துவிடலாமென்று சொல்லிவைத்தேன்.
      காலை உணவு முடித்துக்கொண்டு ஜெய்ப்பூர் பயணமானோம்.
  
                                                             பயணம்  தொடரும்....

Comments

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போதே, டில்லிக்குப் போய் வந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எழுத்தாளர் கைகளில் மிளிரும் கட்டுரைகளின் பொலிவே பொலிவு. அதில் ஓடும் சிறுகதை எழுத்தாளருக்கான நடை படிக்க ஆவலை மென்மேலும் தூண்டுகிறது.
ko.punniavan said…
நன்றி, சுவாரஸ்யங்கள் இன்னும் உண்டு.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

கரகம்~ சிறுகதை

                                                  கரகம் போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின்போது சலசலப்புக் கூடியிருந்தது. “நம்ம கோயில் கூட்டத்துல சலசலப்பும் கூச்சலும் இல்லேன்னா அப்புறம் எதுக்கு கோயிலுன்னும் கூட்டமுன்னும். கூட்டத்துல மட்டுமா? கும்பாபிஷேகத்துலயும், தீமிதியிலயும் களேபரங்கல்லாம் இல்லேன்னா அது கோயிலே இல்லேன்னு ஆயிப்போச்சுல்லே! தீமிதியை முன்னிட்டுக் கூட்டம் கூடும்போது தொடங்கும் சூடு முடியும்வரை தணியறதில்லை” கூட்டத்தில் யாரோ ஒருவர் உரக்கச் சொல்லிக்கொண்டிருந்தார். பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியை இந்தமுறை கரகப்பூசாரியாய்க் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார். பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாகத் தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார், கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக் கேப்பார், வாக்கு சுத்தமான மனுஷன், சக்தியுள்ள ...