Saturday, April 2, 2011

8. பனிப்பொழிவில் 10 நாட்கள்

 சாலையோர டபா (உணவுக்கடை)


 செங்கோட்டை


மார்பல் வேலைபாடுகள் கைகளால் செதுக்கப்பட்டவை


 தாஜ்மஹால்தொடர் 8
அதிகாரத்துவமும் அடிமைத்தனமும்

 டில்லியைக் கடக்கையில்  முக்கிய சாலையோரத்தில் தலைவர்கள் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தச் சிலைகள் தரும் செய்தி படிமமாகி மனதை வருத்தியது. ஆமாம் , விடுதலைப் போராட்டத்துக்கான வியர்வையும் ரத்தமும் சிந்திய காட்சி சிலைகளாக எழுந்து நின்றுகொண்டிருந்தது.
   பேசிக்கொண்டே போகையில் வெள்ளிக்கிழமை அக்ராவில் இருக்கும் காதல் சின்னமான பளிங்கு மாளிகை , தாஜ்மஹால் வெள்ளிக்கிழமை அடைப்பு என்ற செய்திதான் அது. நாங்கள் வெள்ளிக்கிழமை ஜெய்ப்பூரில் இருப்போம். அப்படியானால் தாஜ் மஹாலைக் காண்பது கனவாகவே கலைந்துவிடும் என்ற பயம் மருமகனுக்கு. நான் 2002ல் தாஜ்மஹாலைப் பார்த்துவிட்டேன். எனவே எனக்கு அது பெரிய விஷயமாகப் படவில்லை.
  நான் தாஜ் மஹாலைப் பார்த்தே ஆகவெண்டும். அதற்காகத்தான் முக்கியமாக வந்தேன். நீங்கள் உடனே திசையை மாற்றுங்கள் என்றார். டில்லியைக் கடந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் மெய்ன் சாலைக்கு நுழைந்தாயிற்று. அக்ராவை அடைய  மூன்று மணி நேரமாகும். இடையில் கிருஷ்ணர் அவதரித்த இடமான மதுராவையும் பார்க்கவேண்டும் என்று மனைவி சொன்னாள். மதுராவின் கிருஷ்ணன் கோயிலை இரவு எட்டு மணிக்கு அடைத்துவிடுவார்கள். எட்டு மணிக்குள் போய்ச்சேர்ந்தாக வேண்டும். மீண்டும் இந்தப் பாதையில் வருவதென்றால் நெடு நேரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நேரம் ஓடிக்கொண்டிருந்தது.
  தோமஸ் ஜெய்ப்பூர் பாதையை விட்டு அக்ராவுக்கு இருக்கும் உத்தர பிரதேசத்துக்குத் திருப்பினார். உத்த பிரதேசம் என்று சொன்னவுடன் உங்களுக்கு தாஜ் மஹாலைத்தவிர்த்து இன்னொரு நினைவு வந்திருக்கவேண்டும். வருகிறதா?
உத்தர பிரதேச முதல்வர் ஒரு பெண். தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வந்த தலித் பெண்மணி,
அரசியலில் இரும்புப் பெண்மணியாக பரிமளிப்பவர். உத்திர பிரதேசத்தை மூன்று தவனைக்கு மேலும் கலக்கிக்கொண்டிருப்பவர். ஆம் மாயாவதி.   சாலையில் போக்குவரத்து நெரிசலைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இரவு எட்டு மணிக்குள் மதுராவை அடைய முடியுமா என்ற சந்தேகம் வந்தது. இருப்பினும் எங்கேயும் நில்லாமல் மதுராவை எட்டு மணிக்குள் அடைந்து விட்டோம். உள்ளூர்க் காரர்கள் என்று பொய் சொல்லி டிக்கட் எடுத்து தெய்வ சந்நதிக்கு நுழைய வேண்டியதாயிற்று. வெளி நாட்டவர்க்குப்  பத்து மடங்கு அதிகமாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நல்ல வேலையாய் நமக்கு இந்திய ஜாடை. உள்ளூர் கட்டணத்திலேயே ஊரைச் சுற்றிப்பார்த்துவிடலாம்!
  மதுராவை நன்றாகச் சீரமைத்திருக்கிறார்கள். புனித ஸ்தலமாயிற்றே - நிறைய பக்தர்கள். அதே போல கோயில் நிறைய காவல் அதிகாரிகள். பக்கத்திலேயே பள்ளிவாசல். தீவிரவாதிகளின் ஊடுருவல் அதிகம். பாபர் மசூதி இடிப்பு வழக்குத் தீர்ப்பு வந்த நேரம் வேறு. எனவே படு ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். கேமராவையோ , கைப்பேசியையோ உள்ளே கொண்டு போக முடியாது. பல சமயம் கேமரா தொலைபேசி உள்ளே இருக்கும் நினைவு மென்பொருள் ‘வன்பொருளாக’ செயல்பட்டிருக்கிறது.
  கிருஷ்ணர் பிறந்த இடத்தை பார்த்து வணங்கிவிட்டு வெளியே வர நேரமாயிற்று. முன்பு போலல்லாமல் பக்தர்கள் ஓய்வெடுக்க நடமாட விசாலமான இடம் உண்டு. பக்தர்கள் கிருஷ்ணரின் லீலைகள் கொண்ட கலைக்கூடத்தையும் காண வசதி செய்து தந்திருக்கிறார்கள்.
  கோயிலை விட்டு வெளியேறியவுடன் நேரடி விற்பனை செய்பவர்களிடமிருந்து தப்பிக்க முடியவில்லை. அதிக விலையில் சொல்லி நாம் கேட்கும் விலைக்கு இறங்கி வருகிறார்கள். அதுவரை நம்மால் காருக்குள் ஏறிவிட முடியாது. காரின் கதவுக்கிடையில் நின்று கொண்டு பேரம் பேசுகிறார்கள்.
  ஒரு பத்து வயதுப் பையன் காரில் ஏறிய மருமகனிடம் கண்ணாடியைத் தட்டி ஒரு புத்தகத்தைக் கொடுத்தான்.அதை எப்படியோ கையில் கொடுத்துவிட்டான். விலையைக்கேட்டார்.  ஐந்து ரூபாய் கூட பெறாத புத்தககம். ஐம்பது ரூபாய் என்றான். வேண்டாம் நீயே வைத்துக்கொள் என்றார். அவன் இந்தியிலும் , இவர் ஆங்கிலத்திலும் விவாதித்துக்கொண்டிருந்தனர். இரண்டு மொழியும் சைகையில் புரிந்துகொள்ளப்பட்டது.
  இவர் வேண்டாம் என்று புத்தகத்தை அவனிடன் நீட்டினார்.
   அப்போது ரயில் வருவதாக இருந்ததால் கார் நிற்கவேண்டியதாயிற்று. எங்கள் வண்டிதான்  முதலில் நின்றுகொண்டிருந்தது.. பின்னால் வண்டிகள் சேர்ந்துகொண்டிருந்தன.
   பையன் எட்டி போய் நின்றுவிட்டு புத்தகத்தை வாங்க மறுத்தான்.
   பையனிடம் புத்தகத்தைக்கொடுத்துவிட வேண்டும் என்று மருமகனும், இவரை எப்படியாவது வாங்க வைத்துவிடவேண்டுமென்று பையனும் போராடும் காட்சி  சுவாரஸ்யமாக இருந்தது.
   புத்தகத்தை காசு கொடுக்காமல் எடுத்துக்கொண்டு போய்விடக்கூடாது என்ற கரிசனத்தில் 10 ரூபாயை எடுத்து நீட்டினார். பையன் வாங்குவதாக இல்லை. எட்டியே நின்றான். ரயில் போய்விட்டால் தொல்லை. பின்னால் கார்கள் வரிசைப்பிடித்து நிற்கின்றன.
   பையனின் கையாளும் தந்திரத்தைக் கண்டு இன்னொரு பத்து ரூபாயை சேர்த்து அழைத்தார். பையன் வருவதாக இல்லை.
   எந்த நேரத்திலும் ரயில் கடந்து கதவு திறக்கப்பட்டுவிடும். பையனிடம் பணம் கொடுக்காமல் எப்படிப்போவது? இன்னொரு பத்து ரூபாயை எடுத்து நீட்டினார். பையன் முடியாது என்று சைகை காட்டி எட்டியே நின்றான். என்ன மனோவியல் பாருங்கள். “நீயே இலவசமா எடுத்துக்கொ” என்பது போன்ற ஏளனச் சைகை வேறு!
  ரயில் கடந்து கேட் திறக்கப்பட்டு விட்டது! ஏழைப்பையனை எப்படி ஏமாற்றுவது. அவருக்கு மனம் வரவில்லை. பின்னால் ஹாரன் சத்தம் எழத்தொடங்கி விட்டது. வேறு வழியற்று ஐம்பது ருபாயை நீட்டினார். பையன் வாங்கிக்கொண்டான். இதற்குத்தான் இவ்வளவு உளவியல் சாகசங்கள். எங்கே கற்றுக்கொண்டான் இந்த விற்பனை தந்திரத்தை?...... வறுமையிலிருந்து !
    அப்போது காருக்குள் நாங்கள் சிரித்து மகிழ்ந்த நினைவு , இன்னமும் தேயாமல் இருக்கிறது.
    அதற்குப்பிறகு அக்ராவை நோக்கிப்புறப்பட்டோம்.
    அக்ராவை அடைந்தபோது நள்ளிரவு நேரம். விடுதி தேடி அலைய வேண்டியதாயிற்று. அகராவின் பிரசித்திபெற்ற இடங்களைப் பார்க்க வெளிநாட்டவர் வற்றாமல் வந்துகொண்டே இருப்பர். அதனால் எங்களுக்கு விடுதி கிடைக்கச்சிரமமாக இருந்தது. காலி அரைகள் கொண்ட விடுதிகள் எங்களுக்குச் சரிபட்டு வரவில்லை. களைப்பு மிகுதியோடு காரில் சுற்றிக்கொண்டே தேடினோம். இறுதியில் ஒரு விடுதி எங்கள் படஜட்டுக்குப் பொருத்தமாக அமைந்தது.
    ஆக்ரா உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலைக் கொண்ட ஊர். உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இந்தியா பக்கம் உலக மக்களை ஈர்க்கும் பிரமாண்டமான ‘வெள்ளைத் தாமரை.’
    முதல் முறை அதனைப் பார்க்க அதன் வளாகம் அடைந்தபோது எனக்கு உள்ளபடியே உடல் சிலிர்த்தது. கிரங்கிப்போய் நின்றுவிட்டேன். அப்போது நினைவு அதன் மேல் மட்டுமே படிந்து நின்றது. அது காதல் சின்னத்தால் வந்த உணர்வு அன்று. அதற்கு எதிர் மறையானது.
    தாஜ்மஹால் முகாலய வம்சத்தின் வநத ஷாஜஹான் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1631 ம் ஆண்டு தன் ஆசை மனைவிகளில் ஒருவரான மும்தாஜ் மஹால் தன்னுடைய பதினான்காவது குழந்தையை பெற்றெடுக்கும் போது மரணமுற்றார்.  ஷாஜஹான் போர்க்களத்தில் இருந்தபோது இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டே தாஜ் மஹால் கட்ட துவக்க வேலைகள் நடந்திருக்கின்றன. மனைவி மீது கொண்ட காதல் நினைவகமாக தாஜ் மஹால் திகழவேண்டுமென்ற ஷா ஜஹானின் எண்ணம். பெர்சியா நாட்டு கலை நுட்பத்தைக்கொண்ட இதன் சுவர் முகப்பு  நாப்பத்து மூன்று வகை விலை மதிப்பற்ற கற்களால் பதிக்கப்பட்டது. இந்த கற்களை இப்போது பார்க்க முடியாது. . இவை வெள்ளையர் ஆட்சியின் போது சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது என்பது இன்னொரு சோகக்கதை. சுவர் முழுக்க ஜெய்ப்பூரிலிருந்து கொண்டு வரப்பட்ட மார்பல் பளிங்கு கற்களால் ஆனது. ஆயிரமாயிரம் சோக வடுக்கள் காதல் சின்னம் என்ற மயக்கத்தில் மறைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் பேசலாம் இது பற்றி விலாவாரியாக.
                                                                                        கூடவே வருகிறீர்களா.....அல்லது பாதயைத்தவறவிட்டு விட்டீர்களா..

No comments: