Skip to main content

ஆக்டோப்பஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் (புதிய கவிதைத்தொடர்)




1. மறந்து விடுவதும் மன்னித்து விடுவதும் மனிதத்தன்மையா?



இலக்கிய வாசிப்புத் தளத்தில் மலேசிய வாசகர்கள் கவிதைத்துறையை விட்டு விலகிச்செல்வதாக எனக்குப்படுகிறது. இன்றைய நவீன கவிதைகள் இறுக்கமாகவும் இருண்மைப்போக்கையும் கடைபிடிப்பதால் வாசகர்களில் விலகலைத் தவிர்க்கமுடிவதில்லை.. பிடிக்காத உறவினரை, நண்பரைச் , சக மனிதரை நாம்ட எதேச்சையாகப் பார்த்தவுடன் பார்க்காதமாதிரியான பாவனையில், அவர் பார்வையே பிடிக்காமல் ஒதுங்கி நடந்து விடுவது போலவே கவிதை ஏட்டையும் விரல்களால் தள்ளிக் கடந்து போய்விடுகிறோம். படித்தாலும் புரியாது , வாசித்த மகிழ்வும் உண்டாகாது என்ற சுயகரிசனத்தில் நாம் அதனை நெருங்க மறுக்கிறோம். இது இலக்கியத்துக்கு உண்டாகிக்கொண்டிருக்கும் மிகப்பெரிய பின்னடைவு.

ஆனால் பல நல்ல கவிதைகளுக்குள் நம்மை வசீகரிக்கும் அம்சங்கள் நிறைய இருக்கும். நம்மை சுத்திகரித்து புனிதப்படுத்தும் முயற்சிகள் தென்படும். நம் ஆன்மாவை அலைக்கழிக்கும் ஆழமான செய்திகள் கிடைக்கும். நம் வாழ்வனுபவ சித்திரங்களைக்கூட கவிதையினூடே காணலாம். நம்மைப்பற்றிச் சொல்வது போலவும், நாம் அறிந்த மனிதரின் ரகசியங்களை வெளிப்படுத்துவது போலவும் சில சமயம் நம்மை காந்தமென ஈர்த்துக்கொள்ளும். கவிஞன் புனைந்த கவிதை கவிஞனின் அனுபவ முத்திரைகள் மட்டுமல்ல , அது வாசிப்பவனின் அனுபவத்தினைச் சுவீகரித்துக்கொள்ளும் தன்மைகளையும் கொண்டிருக்கும். நல்ல கவிதைகள் நம் அக விழிகளை அகலத்திறக்கவைக்கவும் செய்யும். சுருக்கமாகச் சொன்னால் கவிதைகள் மந்திரச்சொற்களால் ஆனவை. வாசகன் அதனைத்திறக்கும் மந்திரக்கோலைத் தன்வசம் வைத்திருக்கவேண்டும். நான் சொல்வது கவிதையை ஆழமாக தரிசிக்கும் ஆளுமை வாசகனுக்கு வேண்டுமென்பதே. இது இடைவிடாத வாசிப்புப் பயிற்சியினால் மட்டுமே கைக்கூடும்.



இன்றைய கவிதை தரிசனத்துக்கு வருவோம்.



மனிதர்கள் மறதிகாளாலும் நெய்யப்பட்டவர்கள். மறதியினால்தான் நாம் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதனால் பல துர்ச்சம்பவங்களை நாம் மறந்துவிடுகிறோம். மறந்து போனவை அருதியாய் மறைந்துவிடுவதில்லை. அவை நூலறுந்த பட்டமென நம் மூளையில் எங்கோ ஒர் இடத்தில் மிதந்துகொண்டுதான் இருக்கின்றன. ஏனெனில் அவை புதைக்குழிகள் போன்றவை. நாம் தோண்டுவதற்குப் பயந்து வேறொன்றில் நுழைகிறோம். நாம் இயல்பாகவே மகிழ்ச்சியான தருணங்களயே மனம் நாடிப்போகும். அப்போது சோகங்கள் தாமாகவே விடைபெற்றுக்கொள்கின்றன. இப்படிப்பட்ட இயற்கையின் ஏற்பாடுகளால் நம் சோகங்கள் தற்காலிகமாக நம்மை இம்சித்துவிட்டு புறப்பட்டுவிடுகின்றன. ஆனால் பல சமயங்களில் வருந்த வேண்டுவதற்கு வருந்தாமல், செய்ய வேண்டியதைச் செய்யாமல் பலவற்றை வேண்டுமென்றே மறந்துவிடுகிறோம். நமக்கு இதனால் ஆகப்போதென்ன என்ற அறியாமை இருள் நம்மை அப்படிச்சிந்திக்க வைக்கிறது . அவை நினைவுக்குள் எட்டிப்பார்த்து எறும்பு போல ஊர்ந்தாலும் அவற்றின் துன்புறுத்தலிலிருந்து விடைபெறுவதற்கு வேறொன்றைச்செய்ய முனைகிறோம். நாம் சுயநல வாதிகள். பொதுமைப்பண்பு நம்மிடமிருப்பது அருகிக்கொண்டே போகிறது. பேராசைக்குப்பிறந்த சுயனலமிகள் நாம். சுயநல வாதிகளை அடையாளப்படுத்தும் தமிழச்சி தங்க பாண்டியனின் கவிதை. நம்மில் பலரின் அனுபவமாக உரக்க ஒலிக்கிறது . நமக்குள் இருக்கும் சுயநலம். பொதுநலத்தை தின்று ஏப்பமிடும் குணக்கேடு. அதனை அவர் இப்படிப்பகிர்ந்து கொள்கிறார்.



மே 18 , 2010



அன்றும் எழுந்தோம்

பல் துலக்கி உடை திருத்தி ,மிதமாய்

அலங்கரித்தோம்

கோடைகாலச் சிறப்புத்தள்ளுபடியையும்,

இலவசங்களையும், மின் தட்டுப்பாட்டையும்

அளவான புன்னகையுடன்

பாதி திறந்த கதவிடுக்கில்

பக்கத்தௌ வீட்டாருடன் பகிர்ந்துகொண்டோம்.

வேலைக்காரிக்கு பால் அதிகம் சேர்த்துக்

கொடுத்துவிட்டோமோ

என்ற கவலையுடன் அலுவலகம்

போனோம்

இந்த வருஷமும் உத்தியோக உயர்வு இல்லை

எனும் சலிப்புடன் வீடு திரும்பினோம்.

வாசலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த

வாகன ஓட்டுனரிடம் வாக்கு வாதித்தோம்

பால்கனியிலிருந்தே குப்பையை

கீழே கொட்டிவிட்டு

‘இந்து நாளிதழுக்கு ‘ஆசிரியரின்

கவனத்திற்கு’

என அடிக்கோடிட்டு கடிதம் எழுதினோம்.

நுழைவுத் தேர்வுக்குத் தயாரித்துக்

கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு

‘சுடோகு’ மூளையைச் சுறுசுறுப்பாக்குகிறது

என்று உற்சாகமூட்டினோம்.

‘பங்காளிச் சண்டை’முடிந்தபின்

பங்குச்சந்தை எப்படி இருக்குமென

தொலைபேசியில் விவாதித்தோம்

தொலைகாட்சியில்

அதிபர்களுக்கிடையேயான அரசாங்க

சந்திப்புகளை

அரை வினாடி பார்த்துவிட்டு

‘சூப்பர் மாம்’ போட்டிகளுக்குத்

தாவினோம்.

அமர்ந்த இடத்திலிருந்தே

‘மறதி’ என்ற ரிமோட் பட்டனைத்

தட்டினோம்

முள்ளி வாய்க்காலை மறந்து

அன்றும்

புணர்ந்து அலுத்துப்போனோம்.



தமிழச்சி தங்க பாண்டியன்.

பிரதி தினமும் செய்ததையே வாடிக்கையாகச் செய்து வருகிறோம். சிறப்புத்தள்ளுபடி இல்லையென்று வருத்தப்படுகிறோம் . பதவி உயர்வு கிடக்கவில்லையே என் வருந்துகிறோம். உறவுகளோடு தேவையற்று சமர் புரிந்துவிட்டு பங்குச்சந்தை நிலவரங்களைப் பகிர்ந்து கொள்கிறோம் தொலைகாட்சியில் செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு நமக்கு எந்த வகையிலும் நன்மையைத் தராத துக்கடா நிகழ்ழ்சிகளுக்குத் தாவுகிறோம். இவற்றையெல்லாம் தன்னலத்துக்காக, புலனின்பத்துக்காக அனுபவித்துவிட்டு வேண்டுமென்றே ஈழமண்ணில் நேர்ந்த படுகொலையைப் பற்றிப்பேசுவதுமில்லை, அவர்கள் மறுவாழ்வுக்கு நம்மாலானதைச் செய்ததுமில்லை.

நம் சுயநலத்துக்கு ஒரு அளவே இல்லை என்பதை தன் கவிதையின் கடைசியில் முத்திரையிட்டுவிட்டு முடிக்கிறார் கவிஞர். மறதி என்ற ரிமோட் பட்டனைத்தட்டிவிட்டு அன்றும் புணர்ந்து அலுத்துபோனோம் என்று தன் இறுதி வரியில் நாம் எப்படிப்பட்ட துரோகிகள், சுயநலமிகள் என்பதை அடயாளம் காட்டுகிறார் கவிஞர்.

ஆம் - மறப்போம் மன்னிப்போம் என்ற நம்முடைய கரிசன சித்தாந்தத்தில் நாம் மன்னிக்கப்பட்டவனை மிருகமாக்கிவிட்டதை மறந்தேவிடுகிறோம். நம் ஆறுதலுக்காக நாமே சொல்லிக்கொண்ட இச்சொற்றொடர், நம்முடைய இனத்துக்கே என்ன நேர்ந்தாலும் வாலாவிருக்கச்செயது விட்டதோ என்னவோ? முள்ளி வாய்க்கால் நம் இனத்தின் கொல்லி வாய்க்காலான இனப்படுகொலையை நாம் வசதிக்காகவே மறந்து போனோம்.





Comments

முனியாண்டி ராஜ்். said…
கவிதைகளைச் சுவைத்துணரும் தன்மை நம் சந்ததியினரிடையே குறைந்து வருவதற்கு வாசிப்புப் பழக்கத்தையும் ஒரு காரணமாக கூறலாமே! தமிழின் காவலார்களாய் விளங்கும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களில் எத்தனை பேர் தமிழ்ப்பத்திரிக்கைகளையும் இதழ்களையும் வாங்கிக் படிக்கின்றனர் என்பதை ஆய்வு அதிர்ச்சி மட்டுமே கிட்டும் என்பது என் எண்ணம். ஓசியில் கிடைத்தாலும் படிக்க மாட்டேன் என்னும் எண்ணம் கொண்ட ஆசிரியர்களும் நம்மிடையே உலா வருகின்றனர் என்பது என் கருத்து. இப்படி இருக்கையில் கவிதை இருக்கைகளில் அவர்களை அமரச் செய்வது எங்ஙனம் ? காதலிக்கும் மயக்கத்தில் அது சார்ந்த கவிதைகளை மட்டும் தேடிப் படித்து விட்டு, பின் ஓய்ந்து விடுவதையும் நான் பார்த்திருக்கிறேன்.
குறிப்பு :
தங்களுடைய இந்த ஆக்டோப்பஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் என்னும் பகுதியை மக்கள் ஓசையில் தொடர்ந்த படித்து வருகிறேன். மிகச் சிறப்பு. அதன் வரிசையில் என் கவிதையும் என்றாவது அரங்கேறும் என்ற ஒரு சிறிய பேராசையும் உண்டு.
ko.punniavan said…
தமிழ் தெரிந்த அனைவரும் கவிதையின்பால் ஈர்க்கப்படவேண்டும் என்பது படைப்பாளனின் மடத்தனமான பேராசையாகும். கவிதையை, படைப்பிலகியத்தினின்றும் தன்னைத் தனிமைப் படுத்திக்கொள்பவர்கள் மேல் எனக்கு அடங்காத பரிதாபம் உண்டு. அவர்கள் வாழ்வின் பரவசத்தை நுகராதவர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் குறிப்பாக சீரியல்களில் விழுந்துவிட்டவர்களை மீட்டுக்கொண்டுவர நினைப்பதே கவிதைக்கும், நல்ல படைபிலக்கியத்துக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும். அவர்களை அவர்கள் பாட்டுக்கே விட்டு விடுவது கவிதைக்கு நாம் செய்யும் புண்ணியமாகும். சிறுபான்மையினரே எப்போதும் புரட்சியைக் கொண்டு வந்தவர்கள். அவர்களே நமக்குத்தேவை.
Anonymous said…
அருமையான கவிதைக்கு தாங்கள் விளக்கமளித்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்..
ko.punniavan said…
வருகைக்கு நன்றி. குறைந்தது இருபது கட்டுரைகள் கவிதைக்கென்றே எழுதுகிறேன். உங்கள் வருகை என்னை கௌரவிக்கும். நன்றி.

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துக...